https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, January 1, 2022

வரலாற்றில் செளரி செளரா (நூற்றாண்டின் நினைவாக)

 

                               வரலாற்றில் செளரி செளரா

(நூற்றாண்டின் நினைவாக)

செளரி செளரா குறித்த பொறி ஒன்று உள்ளுள் கிளைத்தபோது அதன் நூற்றாண்டு என்ற செய்தியும் இணைந்துகொண்டது. ஏன் அந்நிகழ்வு தொடர்ந்து சில வரிகளுடன் மட்டும்  பொதுப்புத்தியில் கடந்துபோக செய்யப்பட்டுள்ளது என்ற கேள்வியும் எழுந்தது.

மக்கள் ஊர்வலம் சென்றனர். போலீஸ் அத்துமீறி சுட்டனர். ஆத்திரமூட்டல்களுக்கு இரையான திரளான கூட்டம் போலீஸ் நிலையத்தை எரித்து அவர்களையும் தீக்கிரையாக்கியது. காந்தி போராட்டத்தை நிறுத்தினார். விமர்சனம் எழுந்தது. காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. பிரிட்டிஷ் தாக்குதல் தொடர்ந்து காந்தி சிறைவைக்கப்பட்டார். காந்தி அந்நிகழ்வை கிரைம் எனக் கண்டித்து எழுதினார். ஒத்துழையாமை நின்றது. இப்படித்தான் செளரி செளரா பலராலும் எழுதப்பட்டு வரலாற்று பக்கங்களில் கேள்விகளை எழுப்பிக்கொள்ளாமல் கடந்து போயுள்ளது.

செளரி செளராவில் எரியுண்ட போலீசார் எவர்- என்ன பின்னணி- எவர் போராட்டத்தில் தலைமை தாங்கினர்- வழக்கு ஏதாவது இருந்ததா- என்ன தீர்ப்பு- மரணதண்டனை பெற்றவர்கள் தியாகிகளா- தேசபக்த போராளிகள் எனக் கருதப்பட்டு எவராவது கொண்டாடப்பட்டனரா- இல்லை கிரிமினல்களா – எவர் அவர்? எரிந்தவர் குடும்பங்கள் என்னவாயின அவர்கள் இந்தியர்களா- எம்மதத்தினர் என பல்வேறு கேள்விகளுடன் கிடைக்கின்ற தரவுகளை பார்க்க முனைந்தேன். கிட்டிய சிலவற்றை பகிர்ந்துகொண்டுள்ளேன். எல்லா கேள்விகளுக்கும்- இன்னும் எழ வேண்டிய கேள்விகளுக்கும் பதில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழில் இது குறித்த நன்முயற்சி என சொல்லிக்கொள்ளலாம்.

இறுதிப்பகுதியில் பல்வேறு ஆளுமைகள்- வரலாற்று அறிஞர்கள் செளரி செளரா குறித்து என்ன பதிவைத் தந்துள்ளனர் என தனியாக தந்துள்ளேன். திரு வி க மனிதவாழ்வும் காந்தியடிகளும், தமிழ்நாட்டில் காந்தியில், மகாத்மா நூல்வரிசை அகிம்சா தர்மத்தில், வின்செண்ட் ஸ்மித்தின் ஆக்ஸ்போர்ட் இந்திய வரலாற்றில், மஜூம்தாரின் இந்திய சிறப்பு வரலாற்றில், சோவியத் அறிஞர்களின் இந்திய வரலாற்றில், பிபின் சந்திராவின் நவீன இந்தியாவில், பிபின் மற்றும் நால்வர் எழுதிய இந்திய சுதந்திர போராட்டத்தில், இ எம் எஸ் எழுதிய இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில், வி பி மேனன் எழுதிய ட்ரான்ஸ்பர் ஆப் பவர் இன் இந்தியாவில், ஆர்.பி மசானியின் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆக்கத்தில், எம் என் ராய் எழுதிய கட்டுரையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவண நூல்தொகை 1923-25லிருந்து என தனித்தனியாக பதிவுகளைத் தந்துள்ளேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆவணம் செளரி செளராவிற்கான அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை கையில் வைத்துக்கொண்டு பேசிய ஆவணமாக இருப்பதால் அதில் மற்றவர்களை விட கூடுதல் தகவல்கள் இருப்பதை பார்த்ததில் வரலாற்றின் குறையை அவர்கள் போக்கிவிட்டனர் என்கிற மகிழ்ச்சி இருந்தது.  பிபின் உட்பட ஐவர் எழுதிய சுதந்திர போராட்டம் குறித்த மிக முக்கிய புத்தகத்தில் காந்தி செய்தது தவறா- எழுந்த விமர்சனங்கள் சரியா என்பதைக் குறித்த  நீண்ட விவாதத்தை முன்வைத்துள்ளது. நீண்ட ஆங்கிலத் தொடர் வாக்கியங்களாக அவை அமைந்துவிட்டன. ஆனாலும் ஆவணம் என்கிற வகையில் படிப்போர்க்கு பயனளிக்கும்.

செளரி செளரா காலம் குறித்து ஏராள செய்திகள் ஆங்காங்கே இருக்கலாம். தூக்கில் தொங்கவிடப்பட்ட அந்த குடும்பங்கள் என்னவாயின- கிராமத்தில் அக்குடும்பங்கள் எப்படிப்பட்ட உளவியல் ஆதரவை- அல்லது தாக்குதலை எதிர்கொண்டன. அந்தக் குடும்பத்தின் வாரிசுகள் எவருக்காவது ஏதாவது பெருமித உணர்விருக்கிறதா- அல்லது குற்றவுணர்விருக்கிறதா  என்று எதுவும் எனக்கு தெரியவில்லை. எரிந்து போன  காவலர் குடும்பங்கள்  என்னவாயின- விடுதலை இந்தியா அவர்களை எப்படி பார்த்தது- அந்தக் குடும்ப வாரிசுகளுக்கு இன்னும்  இந்நிகழ்வை நினைத்தால் துயரம் இருக்கிறதா- குற்றவுணர்வு இருக்கிறதா எதுவும் தெரியவில்லை. இப்படி மிக முக்கியமான சம்பவம் வரலாற்றின் நினைவுகளில் ஓர் ஓரம் கூட கிடைக்கப்பெறாமல் மெளனமாக விடுதலை இந்தியாவில் என் போன்ற தலைமுறைகளால் கடந்து  செல்லப்பட்டுள்ளது. இப்படி இன்னும் எத்தனையோ மனிதர்கள் நம் நினைவு குகைக்கு அப்பால்… புதையுண்டவர்களாக…

டிசம்பர் 26, 2021

வெளியீட்டை வாசிக்க இணைப்பை சொடுக்கவும்

https://ia801503.us.archive.org/18/items/booklet-chauri/booklet%20chauri.pdf

2 comments: