https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, November 1, 2022

சசிதரூரின் அம்பேத்கர்

 

சசிதரூரின் அம்பேத்கர்

சசி தரூர் Ambedkar A Life என்கிற ஆக்கத்தை சமீபத்தில் தந்துள்ளார். ரூபா வெளியீட்டாளர்கள் சார்ந்த அலெப் கம்பெனி கொணர்ந்துள்ள புத்தகம்.



சசி 225 பக்கங்களில் இந்த புத்தகத்தை இரு பிரிவுகளாக பிரித்துக்கொண்டு உரையாடியுள்ளார். முதல்புத்தகம் எனும் பிரிவு வாழ்க்கை எனப் பெயரிடப்பட்டு 5 அத்தியாயங்களை வைத்துக்கொண்டு நகர்கிறது.

 இரண்டாவது பகுதி மரபு எனும் அவர் விட்டுச்சென்றுள்ளலீகசியை பேசுகிறது. நன்றாக வாழப்பட்ட வாழ்க்கை எனும் 6 வது அத்தியாயமாக சசி இதனை வைத்துள்ளார். இப்பகுதி விரிவான உரையாடலாக கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில்தான் சசியால் அம்பேத்கர் விவாதிக்கப்பட்டுள்ளார். முதல் பகுதி பெரும்பாலும் பலர் அறிந்த வாழ்க்கை குறிப்பு சிதறல்களாக செல்கிறது.

அம்பேத்கர் ஆரம்பவாழ்வின் கூறுகள், அவர் கல்வியில் உயரம் செல்வது,  பிரிட்டிஷாருடன் தன் மக்களுக்கான கோரிக்கைகளை வைப்பதில் அவர் பெற்ற தெளிவு, இதனால் காந்தி- காங்கிரசுடனான கசப்பு மற்றும் உறவு- வைஸ்ராய் கவுன்சில் பொறுப்பு, அரசமைப்பு சட்டம் உருவாக்கும் பொறுப்பு, விடுதலை இந்தியாவின் சட்ட அமைச்சர், நேருவுடன் புரிதலும்- அதிருப்தியடைந்து விலகலும் போன்றவற்றை சசி தொட்டுக்காட்டியுள்ளார்.

Acknowledgement பகுதி  சசியின் உரிமை கோரலைச் சொல்கிறது. Extensive amount of research and reading, writing a short, accessible and yet sufficiently through biography என்ற சசியின்  உணர்வு எனக்கு ஏனோ படித்தவுடன் முதல் வாசிப்பில் ஏற்படவில்லை. ஆனால் கிடைப்பவற்றை வைத்துக்கொண்டு மிக சுருக்கமாக எழுதப்பட்டுள்ள வாழ்க்கை வரலாறு என புரிந்துகொண்டால் அதை ஏற்கமுடியும்.

சசி இந்த புத்தகத்தை கீழ்கண்ட  உண்மை உணர்த்தும் பாராட்டு வார்த்தைகளுடன் முடித்துள்ளார்.

In a fractured and divided Hindu society he gave Dalits a sense of collective pride and individual self respect. In doing so, he transformed the lives of yet unborn, heaving an ancient civilisation into the modern era through the force of his intellect and the power of his pen. சசி தரூரின் இந்த வந்தடைதல் பொதுவாக எவராலும் ஏற்கத்தகுந்த அம்சமாகவேயிருக்கும்.

அம்பேத்கர் தனது 6 வயதிலேயே தாயாரை இழந்தவர். அந்த தாய் 14 குழந்தைகளை பெற்றவர். மூன்று ஆண்குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளுமான பலராம், ஆனந்த ராவ், பீம், மஞ்சுளா, துளசி ஆகிய ஐவர் அந்த தாய்க்கு எஞ்சினர். இந்தச் செய்தி சசியிடம் கிடைக்கிறது. ஆனால் காலவோட்டத்தில் இவர்களுக்கும் அம்பேத்கருக்குமான உறவுகள் குறித்த எந்தவிதமான விரிவான செய்திகளும் கிடைக்கவில்லை.

கெலூஸ்கர் எனும் மராத்தி சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதியின் அறிமுகம் அம்பேத்கருக்கு இரு நன்மைகளை செய்தது. ஒன்று படிக்க புத்தகங்கள் கிடைத்தன. அதில் ஒன்று புத்தரின் வாழ்க்கை. மற்றொரு நன்மை பரோடா மன்னர் அறிமுகம். அதன் வழி கல்வி ஊக்கத்தொகை மாதம் ரூ 25.

1912ல் அம்பேத்கர் துணைவியார் தனது 16 ஆம் வயதில் யஸ்வந்த் ஆண்மகவை பெறுகிறார். அம்பேத்கருக்கு அப்போது வயது 21. 1913ல் அம்பேத்கர் தன் உயர்கல்விக்காக அமெரிக்கா செல்கிறார். தமையன் அனந்தராவின் உழைப்பு வருவாயில் அம்பேத்கர் குடும்ப பராமரிப்பும் நேர்கிறது. அமெரிக்காவிலிருந்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்  வாழ்க்கை முடிவடையாமல் அம்பேத்கர் திரும்ப நேர்கிறது.

அவருக்கான அறிவுக் கதவுகள் பலரின் தொடர்பால் அகல திறக்கின்றன. செலிகன், ஷாட்வெல், ஜேம்ஸ் ராபின்சன், ஜான் துவே என சிலரைக் குறிப்பிடலாம். ஜான் துவே மீது அவர் தனி ஈர்ப்புடன் இருந்தார் என்பதை அறிவோம். அம்பேத்கர் வாசிப்பு உலகில் ரஸ்ஸல், வெல்ஸ், எட்மண்ட் பர்க், மில் என முக்கிய அறிஞர்கள் நுழைந்தனர்.

அமெரிக்க வாழ்க்கையில் அவருக்கு அறைத்தோழனாக கிடைத்தவர் பார்சி நண்பர் நவல் பாதெனா. இவர் அம்பேத்கரின் இறுதிக்காலம்வரை அவருக்கு பலநேரங்களில் உதவக்கூடிய நண்பனாக சசி தரூர் காட்டியுள்ளார். இவர்கள் தோழமை சில பத்தாண்டுகளாவது இருந்திருக்கவேண்டும். இவர்கள் மத்தியில் உறவு எப்படியிருந்தது என்பதை பற்றி விரிவு ஏதும் அம்பேத்கர் ஆய்வில் கிடைக்கிறதா? சசியால் நவல் பாதெனா பெயர் அறிமுகம் கிடைத்துள்ளது என்பது நல்ல அம்சம்.

அதேபோல் அம்பேத்கர்- ரமாபாய் உறவுகள் குறித்த தனித்த ஆய்வுகள் வளரவேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. சில வலி உணரும் கடிதங்களை சசி எடுத்து தந்துள்ளார். அம்பேத்கரின் இரண்டாவது துணைவியாரான சவீதா எழுதிய புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இந்த நவம்பர் 2022ல் வரவுள்ளது. அதில் சில செய்திகளை நாம் தெரிந்துகொள்ளமுடியும்.

அம்பேத்கர்  எழுதிய புத்தகங்கள் குறித்து சசி சொல்பவை பொதுவாக அறியப்பட்ட தகவல்களாக இருக்கின்றன. அவருடைய தனிப்பட்ட, அமைப்பு வழிப்பட்ட, பிரிட்டிஷார் உடனான விவாதங்களும் அவர் குறித்து படிப்பவர்கள் அறிந்த செய்திகளாகவே இருக்கும்.

1930-35 என்கிற அத்தியாயத்தில் கம்யூனல் அவார்ட் எனும் பிரிட்டிஷ் தந்த இரட்டை வாக்குரிமை- காந்தி உண்ணா நோன்பு, உடன்பாடு ஆகியவற்றை மிகச் சுருக்கமாகவே சசி தந்துள்ளார்.

ஆகஸ்ட் 1932ல் அறிவிக்கப்பட்ட கம்யூனல் அவார்ட்  அப்போது பிரதமராக இருந்த ராம்சே மாக்டொனால்டால் அறிவிக்கப்பட்டது. அவர் பெயரிலும் அது அழைக்கப்படுகிறது.

சசி இந்த புத்தகத்தில் பக் 61ல் இவ்வாறு எழுதியுள்ளார்

While the conference was in progress, a general election unseated Ramsay Macdonald, bringing the Conservatives under Stanley Baldwin to power...The new PM then took it upon himself in 1932 to announce  a Communal award on behalf of his Govt to govern future political representation of the various Indian communities.

இப்படி சசி எழுதியிருப்பது ஸ்டான்லி பால்ட்வின் அந்த அவார்டை அறிவித்தார் என்பது போன்ற புரிதலை தருகிறது.

1931-35 காலத்தில் ராம்சே பிரதமர் பதவியில் கூட்டணி ஆட்சி மூலம் இருந்தார் என்பதும், அப்போது கன்சர்வேடிவ் கட்சியின் ஸ்டான்லி மிக்க அதிகாரம்கொண்டவராக விளங்கினார் என்ற செய்தியும் விக்கிபீடியா நமக்குத் தரும். ஆனால் ராம்சே பதவி இழந்தார். கன்சர்வேடிவ் கட்சியினர் ஸ்டான்லி தலைமையில் திரும்பினர் என்றும், புதிய பிரதமர் அவார்ட் அறிவித்தார் எனவும் சசி பேசுகிறார்.

ராம்சே உடல்நிலை பாதிப்பில் இருந்தார் என்றும், அப்போது பிரதமர் அலுவல்களை பால்ட்வின் கவனித்தார் என்ற செய்தியும் இருக்கிறது. காந்தியடிகள் இந்த அவார்ட் தொடர்பாக ராம்சே அவர்களுக்குத்தான் கடிதம் எழுதியதைப் பார்க்கிறோம். அதேபோல் சாமுவேல் ஹோர் செயலருக்கு எழுதியதையும் காண்கிறோம்  . ராம்சே  அறிவித்ததை ஏன் சசி தெளிவாக சொல்லாமல் சென்றார் எனப் புரியவில்லை.

பம்பாய் தாதரில் இந்து காலனி பகுதியில் தானே டிசைன் செய்து வீடு ஒன்றை அம்பேத்கர் கட்டினார். அதன் மாடி தளத்தை தனக்கான 50 ஆயிரம் புத்தகங்களை வைக்க கட்டினார் என சசி சொல்கிறார்.  புத்தகம் எண்ணிக்கையில் மாறுபட்ட விவரங்கள் கிடைக்கின்றன. சசி 50 ஆயிரம் என சொல்லியிருக்கிறார்.

அம்பேத்கர் தனது துணைவியார் ரமாபாய் அவர்களுடன் தந்தைக்கு செய்த சிரார்த்த சடங்கில் பிராமணர்களுக்கு  சாப்பாடு போடுவதைவிட தன் பகுதி சார்ந்த மாணவர்களுக்கு கறி மீன் உணவை வழங்கினார் என்ற செய்தியை சசி தந்துள்ளார்.

புகழ் வாய்ந்த திலிப்குமார் அம்பேத்கரை சந்திக்க விருப்பம் தெரிவித்தல், அம்பேத்கருடன் சந்தித்த நிகழ்வு, சினிமா குறித்த அம்பேத்கரின் விமர்சனப்பார்வை , திலிப் இடை மறித்தல் சசியால் சொல்லப்பட்டுள்ளது. அம்பேத்கர் என் தந்தையைப் போன்றவர். அவர் கருத்துக்களில் உடன்படுகிறேன் என திலிப் தெரிவித்திருந்தாலும் திலிப்- அம்பேத்கர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த நண்பர்கள், அம்பேத்கர் நடந்துகொண்டது குறித்து சொல்லிவிட்டு திலிப் நன்கொடை தருவதற்கும் வந்தார் என்றனர். அதற்கு அம்பேத்கர் I do not want donations from actors, industrialists or businessmen என தன் அறம் சார்ந்த பதிலை தந்துள்ளதையும் சசி எழுதியுள்ளார்.

அம்பேத்கர் 1942 ஜூலையில் வைஸ்ராய் கவுன்சிலில் சேர்க்கப்பட்டார். ஆகஸ்ட் 1942 குவிட் இந்தியா இயக்கத்தை அவர் ஆதரிக்கவில்லை. வானொலி உரையில் நாஜிகளை முறியடிக்கவேண்டிய அவசியம் குறித்தும், யுத்தத்தின் அவசியம் குறித்தும் அம்பேத்கர் உரையாற்றினார். வைஸ்ராய் கவுன்சிலில் அம்பேத்கர் பிற உறுப்பினர்கள், வைஸ்ராய்- அம்பேத்கர் உறவு என்பதெல்லாம் விரிவான ஆய்வு வெளியை எட்டவேண்டியுள்ளது

1943ல் சிறையில்  காந்தியடிகள் 21 நாட்கள் பட்டினிப்போராட்டம், சில வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகிடும் சூழலை உருவாக்கியது. அம்பேத்கர் இம்முறை காந்தியின் உண்ணவிரதம் குறித்த நிர்ப்பந்தம் எதற்கும் ஆளாகாமல் உறுப்பினர் பதவியில் தொடர்ந்தார் என்பதை சசி சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பு சட்ட அசெம்பிளி துவக்கத்தில் அம்பேத்கரையும் பிரசாத் உரையாற்ற அழைத்தார். ஒருவரை ஒருவர் நாம் போரிடும் குழுவாக இருப்பதை நிறுத்திவிட்டு ஒன்றாக செயல்படவேண்டிய அவசியத்தை வெளிப்படுத்தி அம்பேத்கர் உரையாற்றினார். அசெம்பிளியில் அரசிலமைப்பு  டிராப்ட் கமிட்டியின் தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டார்.

மகாத்மா காந்தி கோட்சேவால் சுடப்பட்டு ஜனவரி 30, 1948ல் மறைந்தபோது அம்பேத்கர் அமைதியாக இருந்தார். உலகம் முழுவதிலிருந்தும் அஞ்சலி செய்திகள் ஏராளம் குவிந்த நிலையில் தனது செய்தியும் அதில் இருக்கட்டும் என அம்பேத்கர் அஞ்சலி செய்தி என ஏதும் வழங்கவில்லை என்பதை சசி இவ்வாறு எழுதியுள்ளார்.

Ambedkar remained uncharacteristically silent ..Ambedkar chose not to add his voice to them . He did not publicly utter a word on the monumental national tragedy of the Mahatma’s killing . அதேநேரத்தில் காந்தியின் இறுதி ஊர்வலத்தில் முழுமையாக செல்ல அவர் உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் அவர் சிறிது நேரம் பங்கேற்று சென்றுள்ளதையும் சசி சொல்லியிருக்கிறார்.

அம்பேத்கர் காந்தியிடம் மாறுபட்டு விமர்சனம் வைத்த அம்சங்களை இரண்டாவது பகுதியில் சசி ஓரளவு தொட்டுக்காட்டியுள்ளார். சில இடங்களில் அம்பேத்கருடன் தான் நிற்பதாகவும் சசி எழுதியுள்ளார்.

மூஞ்சே அம்பேத்கர் உடன்பாடு- சாவர்க்கரின் அம்பேத்கருக்கான அழைப்பு- அம்பேத்கர் சந்திக்க இயலாமையை வெளிப்படுத்தல்- பாரதிய தொழிற்சங்க உயர் தலைவராக இருந்த தெங்காடி போன்றவர் அம்பேத்கருக்கு தேர்தல் ஏஜெண்ட்டாக இருந்த உரிமை கோரல், காந்தி கொலையில் சாவர்க்கருக்கு பங்கில்லை என அம்பேத்கர் சாவர்க்கர் வக்கீலிடம் சொன்னதாக பொதுவெளியில் அத்வானி தெரிவித்தது போன்றவை சசியின் ஆராய்ச்சிக்குள் பெரிதாக வராததைக் காண்கிறேன். பாஜக அம்பேத்கரை உள்ளிழுக்கும் முயற்சி சூழலில் அவருக்கும் வலதுசாரி தலைவர்களுக்குமான உறவுகள் என்ன, அவர் காந்தியிடத்தில் காட்டிய அளவிற்கான கசப்பானதாக அது இருந்ததா என்ற ஆய்வை சசி நூலில் என்னால் பெறமுடியவில்லை. இந்து மதம் குறித்த அவரது தீவிர விமர்சன வகைப்பட்ட ஆய்வு ஓரளவிற்கு சொல்லப்பட்டுள்ளது.

இந்து கோடு பில் உள்ளிட்ட பிரச்னைகளில் நேரு காபினட்டில்  வருத்தம் உருவாகி அம்பேத்கர் செப்டம்பர் 27, 1951ல் விலகுகிறார். நேரு அவர் விலகியதற்கு வருத்தத்தை தெரிவித்தும் அம்பேத்கர் சேவையை பாராட்டி நன்றி தெரிவித்தும் பதில் எழுதினார். ’Copy of resignation speech’ யை முன்கூட்டி அனுப்புமாறும் நேரு கேட்டிருந்தார். அம்பேத்கரும் தனது அக்டோபர் 4, 1951 கடிதத்தில்  assured him ( Nehru) that, should he have the time to prepare a text, he would share it with the PM, adding that he had been granted permission any way to speak on 11th October ..

ஆனால் அம்பேத்கர் அந்த அக்டோபர் 11 அன்று பேச எழுந்ததும், அவையின் துணை சபாநாயகர் பேச அனுமதி மறுத்தார். விதிகளின்படி உரையை முன்கூட்டியே கொடுக்கவில்லை என்பது சொல்லப்பட்டது. அப்படி உரையை அவர் தந்தால் மாலை 6 மணிக்கு பேசமுடியும் எனவும் சொல்லப்பட்டது. அவையில் முன்கூட்டிய தணிக்கையா என்ற எதிர்ப்புக் குரல்கள் வந்தன.

Dy Speaker  replied that he was simply trying to ensure that the statement  Dr Ambedkar would deliver contained nothing that was  irrelevant and libelous . At this , a furious Ambedkar stormed out of the house and refused to speak on such terms. From the next day he sat on the opposition benches  என சசி தரூர் பதிவு செல்கிறது.அம்பேத்கர் பொருத்தமில்லாமலும் அவதூறாகவும் எதுவும் பேசிவிடக்கூடாது என்பதற்கான காப்பாக நேரு காலத்தில் அவர்கள் தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்திக்கொண்டதை பார்க்கிறோம். அம்பேத்கர் அவதூறாக பேசினால் அவருக்கு பொருத்தமான பதிலை அரசாங்கத் தரப்பு தரமுடியும் என்கிற நம்பிக்கையின்மையையும் இதன் பொருளாக எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது.

மொழி பிரச்னையில்  மாநில மொழிகளை அலுவல் மொழியாக ஆங்காங்கு ஆக்குவதை நேர்மறையாக அம்பேத்கர் பார்க்கவில்லை. அவை provincial nationalities உருவாக வழிவகுத்துவிடும் என்ற எச்சரிக்கையை தந்தார். ஆங்கிலம் தொடர்வது நடைமுறைக்கு சரியாக இருக்கும் என்றும் கருதினார். வடக்கு தெற்கின் வளர்ச்சி வித்தியாசங்களை அம்பேத்கர் பேசினார். தெற்கு முற்போக்கானது- வடக்கோ பழமைத்தன்மையானது. கல்வியில் தெற்கு வளர்ந்த ஒன்று. வடக்கு பின்னடைந்த ஒன்று. தெற்கு நவீன கலாச்சாரம் கொண்டது. வடக்கோ பண்டைய கலாச்சாரத்தைக்கொண்டது.

திருவனந்தபுரம் கோயில்களை பார்த்துவிட்டு அவர் உதிர்த்த வார்த்தைகளை சசி தந்துள்ளார். O what a waste of wealth and food. இஸ்லாம் Closed Corporation என்ற கருத்து அம்பேத்கரிடம் இருந்ததை சசி சுட்டிக்காடுகிறார். புத்த மதத்திற்கு மாறும்போது எந்த Material gainக்காகவும் அல்ல  spiritual attitude காரணமாக என்றார்.- Hindu religion does not appeal to my conscience என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

அம்பேத்கருக்கு நீண்ட வாழ்க்கை என்பதைவிட புகழ் சிறக்க வாழ்க்கை என்பதில் நம்பிக்கையிருந்தது. அவரால் நீண்ட ஆயுளுடன் வாழமுடியாமல் போனது. ஆனால் மறைந்த அம்பேத்கர் மிகப் பெருமிதமான உருவுடன் இந்தியாவில் வளர்ந்துகொண்டேயிருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.

சசி தரூர் அம்பேத்கர் புத்தகமும் இந்த உணர்வை நமக்கு வாசிக்கும்போது ஏற்படுத்தும்..

1-11-2022

 

2 comments:

  1. தங்களது இந்த மொழிபெயர்ப்பு அருமை. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. ஆங்கில நூலைப் படித்து அதன் சாரத்தை சசியின் எழுத்துகளில் விட்டுப் போனவை, அழுத்தமின்மை பற்றியும் மிகச்சிறந்த ஆய்வாக இருக்கும் உங்களுடைய எழுத்துகள்... சிறப்பு தோழர் பட்டாபி...

    ReplyDelete