கலைந்த கனவு
முன்னர் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் இருந்த சோவியத் ( சோசலிச கட்டுமான சோதனை அல்லது அவ்வாறு சொல்லப்பட்ட ஒன்று) வீழ்ந்தது உலக முழுதும் கம்யூனிஸ்ட்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய கம்யூனிஸ்ட்கள் உட்பட பலரும் தங்களுக்குள் விவாதித்து , சோசலிச கட்டுமான மாடல் ஒன்றின் தோல்வி என சற்று ஆறுதல் அடைந்து தங்களை மீட்டுக்கொள்ள முயற்சித்தனர். சோவியத் சோசலிச மாடல் குறித்த இடுகை அல்ல இங்கு நான் எழுத வருவது.
ஸ்டாலின் மறைவு அவர் ஆட்சிக்காலம் மீதான புகார்கள் , குருசேவ் அதிபர் கால சூழலில் அப்பட்ஜெட்டை சுப்ரீம் சோவியத்தில் , அவர்களின் நிதி அமைச்சர் அக் 27, 1959ல் வைத்துள்ளார். நம்ம இந்தியா பட்ஜெட் போலத்தான் அங்கும் எங்கிருந்து வருவாய் எவ்வளவு பெற உத்தேசம் ( சென்ற ஆண்டில் 1959ல் பெற்றது எவ்வளவு), எதில் எவ்வளவு செலவு ஒதுக்கீடுகள் என கணக்கு சொல்லியுள்ளனர்.
எங்களது பட்ஜெட் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ முறையிலிருந்து எப்படி மாறுபட்ட சோசலிச கட்டுமான மக்கள் பட்ஜெட் என்கிற அரசியல் பீடிகைகள் , கோரல்கள் இருந்தது. அமெரிக்காவை விட இரு மடங்கு பெரிய பட்ஜெட் எனவும் சொல்லியுள்ளனர். ரூபிள்களில் கணக்கு சொல்லப்பட்டுள்ளது. அப்போது 4 ரூபிள் ஒரு டாலர் என இருந்துள்ளது.
எனக்கு இணையத்தில் கிடைத்த ஆவணம் , அமெரிக்க CIA உளவுத்துறை அவர்கள் நாட்டின் பார்வைக்கு அனுப்பி வைத்த ஆவணம். கம்யூனிஸ்ட் ஆவணங்களை , கம்யூனிஸ்ட்களைவிட ( இந்தியாவையும் சேர்த்துதான்) அமெரிக்க உளவு கிடங்கு இரகசியம் என்ற குறிப்புகளுடன் அவ்வப்போது சேகரித்து வைத்து, பின்னர் declassify செய்து வெளியிடுகின்றனர்.
இனி சோவியத் போட்ட 65 ஆண்டுகளுக்கு முன்னரான அந்த பட்ஜெட்டிலிருந்து .. கொஞ்சம் போரிங் கணக்கு, கொஞ்சம் சுவாரஸ்யமான தகவல்கள்
1959ல் 707.86 பில்லியன் ரூபிள் பட்ஜெட்டை 1960ல் 744.8 பில்லியன் ரூபிளாக உயர்த்தி போட்டுள்ளனர். கணக்கு என்றால் பாரதிக்கு மட்டுமல்ல பலருக்கும் பிணக்கு என்பதால், குறைவான கணக்கை சொல்கிறேன்.
விவசாயம் அதன் தொடர்பான வேலைகள் என்பதை விட, தொழில்கள்- கட்டுமான வேலைகள் என்பதற்கு 5 மடங்கு கூடுதலாக ஒதுக்கியுள்ளனர்.
அற்புதமான விஷயம் என்ன எனில் கல்வி சம்பந்தமான ஒதுக்கீடு. தொழில் ஒதுக்கீட்டில் 2/ 3 கல்விக்கு எனப் பார்க்கும் போது , இந்தியா எங்கே, அவர்கள் அன்று எங்கே என யோசிக்கத் தோன்றுகிறது.
பாதுகாப்பிற்கு ( கடுமையான Cold War காலம்) 96. 1 பில்லியன் ரூபிள் ஒதுக்கீடு என்றால், கல்விக்கு அதைவிட கூடுதலான 102 பில்லியன் ரூபிள் ஒதுக்கீடு, அவர்களின் மேலான சமூக தாகத்தை சுட்டுகிறது.
மருத்துவத்திற்கு கல்வி ஒதுக்கீட்டில் பாதி கூட இல்லை என்பதையும் பார்க்க முடிகிறது. கல்வி மருத்துவம் அல்லாத பிற சமூக நலன்கள் என 97.9 பில்லியன் ரூபிள்கள் ஒதுக்கியுள்ளனர்.
அப்போது அவ்வளவு ஆடம்பர நிர்வாக செலவு இல்லை போலும். 11 பில்லியன் ரூபிள் எனக் காட்டியுள்ளனர்.
சரி எப்படி அவர்கள் வருவாய் ஈட்டினர் என்பதை அந்த பட்ஜெட் சற்று காட்டுகிறது. அவர்கள் பயன்படுத்திய சில பதங்கள்
Turnover tax, taxes on people, profit, social security receipts, organisational income tax,misc என்கிற இனங்கள் வழியாக 1959ல் சொல்லப்பட்ட 723.3 பில்லியன் ரூபிளை , உயர்த்தி 772.1 பில்லியன் ரூபிள் பெற மதிப்பீடுகளை வைத்துள்ளனர்.
1960க்கான 744.8 பில்லியன் ரூபிள் செலவிற்கான வருவாயாக 772.1 பில்லியன் ரூபிள் என அவர்கள் துண்டு விழாத, உபரி மிஞ்சும் பட்ஜெட்டை போட்டுள்ளனர்.
தொழில்கள் அரசுடைமை, நில புலன்கள் கொஞ்சம் தனியாரிடம், கூட்டுறவு நிறுவனங்கள், டாக்டர் இன் ஜினியர் போன்ற professionals என பல்வேறு நிலைக்கேற்ப progressive taxation வைத்திருந்தனர்.
மக்கள் மீதான வரி என்பதில் bachelor tax என ஒன்றை போட்டு வசூலித்துள்ளனர். மூன்று பிள்ளைகளுக்கு மேல் பராமரிக்கும் பெரிய குடும்பங்களுக்கு வரி விலக்கு slabs வைத்தனர். Single woman with child or children என்றால் அவருக்கு வரி விலக்கு கொடுத்துள்ளனர்.
குருசேவ் ஆட்சிக்கு வந்தவுடன் ஏன் income tax - abolish it என வற்புறுத்தியுள்ளார். அதை ஏற்று கால இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாக நீக்க அங்குள்ள அதிகார வர்க்கம் ஏற்று சட்டமும் இயற்றியது.
1957 வருமான வரி முறையில் அப்போது மாதம் 370 ரூபிள் ( இந்திய ரூ டாலருக்கு 23 என்றிருந்தது. ரூபிள் டாலருக்கு 4 என்றிருந்தது) வரை எந்த வரியும் கிடையாது. ஆனால் அன்று சோவியத்தில் பொருட்கள் மீது வரி அதிகம் என்ற உணர்வு இருந்தது. இதை 450 ரூபிள்வரை வருமான வரி விலக்கு என்றனர்.
இந்தியாவில் அப்போது எப்படி இருந்தது என உடன் தேடி கொடுக்க முடியவில்லை. 1974-75ல் சவான் போட்ட பட்ஜெட்டில் ரூ 6000 வரை வரியில்லை எனச் சொன்னது கண்ணில் பட்டது.
சோவியத்தில் professional க்கு வருவாய் பொறுத்து progressive tax rates 2.5 % to 43 % வரை வரி போட்டுள்ளனர். இந்தியா விடுதலையின் போது ஜான் மத்தாய் போட்ட பட்ஜெட்டில் அதிகபட்ச வரி 97 சதம் இருந்ததாக தகவல் பார்த்தேன்.
சோவியத்தில் 1960ல் உழைப்பவர், ஆளும் மந்திரிகள் பிரமுகர்கள் என எவரானாலும் மாதம் 5000 ரூபிளுக்கு மேல் எனில் 12 சத வரி போட்டுள்ளனர். இவையெல்லாம் பார்க்கும்போது, ஏற்ற இறக்கமான வருவதுடன் அங்கு மக்கள் இருந்துள்ளனர் என்பதையும் நாம் உணரலாம்.
நிலவரி ஏக்கர் எவ்வளவு வைத்துள்ளனர் என்பதைப் பொறுத்து progresses taxation முறையை கடைப்பிடித்துள்ளனர்.
87 பக்க ஆவண இறுதியில் அதன் மாநிலங்களாக இருந்தவைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு என்பதையும் காட்டியுள்ளனர். ஏற்ற இறக்கமான தேவைக்கேற்ப என அதில் கணக்கு தெரிகிறது.
மிகப்பெரிய சமூக நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்த சமூகத்தை அவர்கள் அப்போது கனவுடன் கட்ட முனைந்துள்ளார்கள் என்பதை இந்த 1960 பட்ஜெட் எனக்கு காட்டியது. சமூக நலத் திட்டங்கள் என்பதில்தான், நாங்கள் different type என்கிற மாற்று முகத்தை அவர்கள் காட்டியுள்ளனர். மற்றபடி உற்பத்தி, உபரி, மான்யம், வரி போடுதல் என்பதில் எல்லாம் மேற்குலகிலிருந்து பெரிய மாறுதல் தென்படவில்லை. அரசு உடைமை, விநியோகம், சமுக திட்டங்களுக்கு முன்னுரிமை என்பதில் அவர்கள் அப்போது மிக உயர்ந்து நின்றதாகவே உணர்கிறேன்.
சோவியத் குறித்து பேசப்பட்ட பல குறைகள் மீது விவாதம் இன்றும் இல்லாமல் இல்லை என்பதையும் மனங்கொண்டு, அன்றைய அவர்களின் மக்கள் பட்ஜெட்டை புரிந்துகொள்ளலாம்.
29-7-2024
சிறப்பு தோழர். Socialism Betrayed என்ற நூலை தற்போது தமிழில் மொழி பெயர்த்து வருகிறேன்.
ReplyDelete