பட்ஜெட்டும் மாநில ஒதுக்கீடும்
பட்ஜெட் குறித்து பல ஆவணங்களை இண்டியாபட்ஜெட் இணையத்தில் தேடுபவர்களால் பார்க்கமுடியும். நிதி அமைச்சர் பட்ஜெட் உரை 90 நிமிடம் என்பதில் கொண்டுவரமுடியாத ஏராள விவரங்கள் அந்த ஆவணங்களில் காணப்படும்.
வழக்கம்போல் பட்ஜெட் குறித்து ஆளுங்கட்சிக்காரார்கள் கொண்டாடுவதும், எதிர்கட்சியினர் விமர்சிப்பதும் இம்முறையும் நடந்து வருகிறது. அமிர்தம் என ஆள்வோரும், நாற்காலி காப்பாற்ற மட்டுமே என எதிர்கட்சி கேலியும் பார்த்து வருகிறோம். இந்த ஆவணங்கள் பல நூறு பக்கங்கள் கொண்டவை. பலரது உழைப்பால் தயாரிக்கப்பட்டவை. புள்ளி விவரங்களின் நேர்மை குறித்து நாம் சொல்லவேண்டும் என்றால் , வேறு நம்பிக்கையான மாற்று விவரங்கள் கிடைத்தால் மட்டுமே சாத்தியமாகும்.
ஊடகங்களில் மேலெழுந்த விவாதமும், சில ஆங்கில ஊடகங்களில் நிபுணத்துவர்களின் எதிரும் புதிருமான விவாதங்களும் காணக்கிடைக்கின்றன. நேற்று தமிழ் டிவி ஒன்றில் பலர் விவாதத்தில் ஒப்பேற்றிக்கொண்டிருந்தனர். தற்குறிகள் என திட்டிக்கொண்டனர். கட்சி சார்ந்து நின்று பேசினர். நெறியாளர் பட்ஜெட்டே இல்லாமல் இருந்தால் கூட தமிழகத்திற்கு கிடைக்கவேண்டியதை எவராலும் தட்டிப்பறிக்க முடியாது என்ற மேதாவிலாசத்தைக் காட்டினார். பட்ஜெட் இல்லாமல் அந்த நிதியாண்டிற்கு அலோகேஷன் சாத்தியமில்லை என்கிற பாலபாடம் விவாதத்தில் இல்லாமல் போனதை பார்க்க முடிந்தது.
எனக்கு எந்த பொருளாதார அறிவும் இல்லை என்பதை நான் உணர்ந்திருந்தாலும், ஆவணங்களைப் பார்க்காமல் அதை கண்டுகொள்ளாமல் பேசக்கூடாது என்கிற குறைந்தபட்ச நெறி உண்டு. ஒவ்வொரு ஆவணமும் பார்க்க புரிந்துகொள்ள நிறைய நேரம் உழைப்பு தேவை என்கிற அறிதலும், எதார்த்த உணர்தலும் உண்டு. என் போன்ற பாமரர்கள், ஊதிய வகைப்பட்ட மத்தியதர வர்க்கம் , பொதுப்புத்தி எதிர்பார்ப்பு போல் வரி, பென்ஷன் அலோகேஷன் என்பதை பார்த்து சற்று பெருமூச்சு விடும்.
மாநிலவாரியாக ஒதுக்கீடுகள் குறித்த சர்ச்சை இம்முறை முழுமையான அரசியலாகியுள்ளது. ஆளும் பாஜக தனக்கு ஆதரவாக, திரு மோடியின் வரலாற்று பெருவிருப்பமான நேருவை மிஞ்சும் ஆட்சிக்காலம் என்கிற subjective desireக்கு உதவிய ஆந்திர அரசு, பீகார் அரசுக்கான சாய்வு பட்ஜெட்டை போடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள பட்ஜெட் என்கிற ’நச்’ விமர்சனத்தின் கடும் தொனியை சந்திக்க வேண்டியதானது.
பொதுவான சாதக பாதக விஷயங்கள் பற்றி ஏராள விவாதங்கள் நடந்து வருகின்றன. கூறுவதைக் கூறல் வேண்டாம் எனத்தோன்றியது. அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அம்சம் குறித்து இந்த இடுகையில் சொல்லத்தோன்றியது.
அந்த அம்சம் Receipt Budget 2024-25 JUly 2024 MOF Budget Division - annex 4 Statement showing State wise Distribution of Net proceed of Union Taxes and Duties for BE 2024-25
இந்த ஸ்டேட்மெண்ட் பக் 29/109 ல் காணக்கிடைக்கும். இத்துடன் இணைப்பு 4 ஏ, 4 பி என்பனவற்றையும் பக் 30, 31 சேர்த்து பார்ப்பது நலம்.
கார்ப்பரேஷன் வரி, வருமான வரி, மத்திய ஜி எஸ் டி, கஸ்டம்ஸ், எக்சைஸ், சேவை வரி, பிற வரிகள் என 7 அம்சங்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எப்படி 2024-25க்கு பிரித்து தரப்போகிறோம் - மொத்தமாக எவ்வளவு பெறுவர் என்பதை இதில் பட்ஜெட் பட்டியலிட்டிருக்கும்.
மாநிலவாரியாக ஆந்திரா துவங்கி மே வ ஈறாக 28 மாநிலங்களுக்கு ஷேர் சதம் ( 15 வது நிதிக்கமிஷன் படி) காட்டப்பட்டிருக்கும். 28 மாநில சத வீதங்களைச் சேர்த்தால் 100 வரும். இந்த சதப்படி மொத்தம் எதிர்பார்க்கப்படும் வரி வகை வருவாயான 124721.28 கோடி 28 மாநிலங்களுக்கும் இனவாரியாக பிரித்துக்கொடுக்கப்படும். எந்த அரசு வந்தாலும் இதை செய்திருப்பார்கள் என்பது உண்மை. பட்ஜெட்டே இல்லாமல் முடியும் என்கிற வாயடிகள் சரியா?
இந்த பங்குவாரி சதப்படி உ பிக்கு 17.939 சத பங்கு கிடைக்கும். தமிழ்நாட்டிற்கு 4.079 கிடைக்கும். மேவ 7.523, மபி 7.850, ராஜஸ்தான் 6.026, மகராஷ்ட்ரா 6.317, பீகார் 10.058, ஆந்திரா 4.047, கேரளா 1.925 என இந்த 28 மாநிலங்கள் ஷேர் பெறுகின்றன.
தமிழ்நாட்டிற்கு மொத்த கார்ப்பரேட் வரி 3744512.33 கோடியில் 15276.36 கோடியும், வருமான வரி 431330.15 கோடியில் 17593.96 கோடியும், மத்திய ஜி எஸ் டி 372606 கோடியில் 15198.63 கோடியும், கஸ்டம்ஸில் மொத்தம் 55064.38 கோடியில் 2246.08 கோடியும், எக்சைஸில் 11606.77 கோடியில் 473.44 கோடியும், சேவை வரி 41 கோடியில் 1.67 கோடியும், பிற வரிகள் மொத்தம் 2050 கோடியில் 83.62 கோடியுமாக , ஆக தமிழ்நாட்டின் பங்காக 50873.76 கோடியை பிரித்து தரமுடியும் என பட்ஜெட்டில் காட்டியுள்ளனர். இதை கால விரயமில்லாமல் பெறுவதற்கும் போராட்டம் தேவைப்படும். அதாவது மத்திய அரசு பெறும் tax duty 12லட்சத்து 47 ஆயிரம் கோடி என உத்தேசமாகக் கொண்டால் தமிழ்நாடு அதில் 50873 கோடியை பெறுகிறது எனக்கொள்ளலாம்.
உபி இந்த வகையினங்களில் எல்லாவற்றிலும் 17.939 சதம் பெற்று தனக்கான பங்காக 2 லட்சத்து 23 ஆயிரத்து737 கோடியையும், பீகார் தனக்கான 10.058 ஷேரில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 444 கோடியையும், ஆந்திரா 4.047க்கான 50474.64 கோடியைப் பெறுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் தங்கள் நிதிக்கமிஷன் பகிர்ந்தளித்த பங்கு வீத சதப்படி தங்களுக்கான பட்ஜெட் நிதியை பெறுகின்றன.
சென்ற 2023-24ல் மொத்தம் 11லட்சத்து 4 ஆயிரத்து 493 கோடியை பிரித்து காட்டியிருப்பார்கள். அதன்படி தமிழ்நாட்டிற்கு காட்டியது 45 ஆயிரத்து 52 கோடியாக இருக்கும். 2022-23 actual என அடுத்து காட்டியிருப்பார்கள். மொத்த actual 9 லட்சத்து 48 ஆயிரத்து 405.82 கோடியில் தமிழ்நாடு 38 ஆயிரத்து 685.47 கோடியை பெற்றது. இந்த 23-24க்கான ஆக்சுவல் அடுத்த பட்ஜெட்டில் கிடைக்கும். 24-25க்கான ஒதுக்கீட்டில் உண்மையில் கிடைக்கப்பெறும் ஆக்சுவல் 2026-27ல் கிடைக்கும்.
அடுத்து
மான்யம் என்பது முக்கியமாக பேசக்கூடிய ஒன்று. Expenditure profile statement 7 என்பதில் ஸ்கீம்படியான மொத்த மான்யம் எவ்வளவு எனக் காட்டியிருப்பார்கள்.
2022-23 ஆக்சுவல் மான்ய செலவு உணவு மான்யத்தில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 802.38 கோடி என்றால் 23-24ல் 197350 என எஸ்டிமேட் செய்து பின்னர் திருத்தி, 2024-25ல் 205250 என எஸ்டிமேட் காட்டியுள்ளனர். உரமான்யமும் வெட்டப்பட்டுள்ளது 2022-23ல் ஆக்சுவலாக 251339.36 கோடியை இப்போது 163999.80 என வெகுவாக வெட்டியுள்ளனர். பெட்ரோலிய மான்யத்தில் ஆக்சுவல் 22-23ல் 6817.37 கோடி எனில் இம்முறை 11925.01 கோடியாக உயர்த்திக் காட்டியுள்ளனர்.
சில ஸ்கீம்க்கான ஒதுக்கீடுகள் எனப்பார்த்தால்
முக்கியமான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பில் 2022-23 ஆக்சுவல் 90806 கோடி எனில் இம்முறை 86000 கோடியாக எஸ்டிமேட் காட்டியுள்ளனர். அதேபோல் ஆவாஸ் வீடு யோஜனா ஆக்சுவல் 22-23ல் 73615 கோடி எனில் இம்முறை 84671 கோடியாக்கியுள்ளனர். பிஎம் கிசானில் 60000 கோடியாக சற்று உயர்த்தியுள்ளனர் ( ஆக்சுவல் 58254கோடி 2022-23ல்). நேஷனல் ஹெல்த் மிஷன் 14 சதம் உயர்த்தப்பட்டுள்ளது. கிராம சாலைகள் திட்டத்தில் 11.8 சத உயர்வாக 19000 கோடி காட்டுகின்றனர். சில ஸ்கீம்களில் வெட்டு விழுந்துள்ளது.
மத்திய பென்சனர்கள் தங்களுக்கான ஹெட் 2071 யை பார்ப்பார்கள். இந்த தலையில் 2லட்சத்து 41ஆயிரத்து599.29 கோடி 2022-23ல் செலவாயுள்ளது. தற்போது 2 லட்சத்து 44 ஆயிரத்து 295.90 கோடி எனக் காட்டியுள்ளனர்.
பாதுகாப்பிற்கு 2லட்சத்து 89 ஆயிரத்து546.14 கோடி என உயர்த்தி வழங்கியுள்ளனர்.
உணவுப் பொருட்கள் உட்பட்ட பணவீக்கத்தை குறைக்க ஏதும் இல்லை என்கிற முக்கிய குற்றச் சாட்டை காங்கிரஸ் தலைவர்கள் வைத்துள்ளனர். சம்பள வர்க்கத்திற்கு ஏறும் கிராக்கிப்படி வைத்து அதை அவர்கள் உணர்வர். அந்த ஈடு இல்லா பிற உழைப்பாளர் அவதிக்குள்ளாவர்.
சோசியல் சர்வீசஸ் என்கிற ஹெட்களில்தான் கல்வி, விளையாட்டு, கலை, சுகாதாரம், மருத்துவம், வீட்டு வசதி, எஸ்சி எஸ்டி நலன்கள், ஊட்டசத்து போன்ற பல வருகின்றன. சமூக சேவை பகுதிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி என்பது போதுமா? குறைந்தது மொத்த செலவில் 10 சதம் அளவாவது இருந்தால் பயனாளிகளுக்கு உதவிகரமாக இருக்கலாம். அப்போது வெல்பேர் அரசாங்கம் என்கிற முகம் நமக்கு கிடைக்கலாம்.
மாநிலங்கள் தங்களுக்கு நிதிக்கமிஷன் படி பெறும் பங்கில் எவருக்கும் சர்ச்ச்சை இருக்காது. பிற கிராண்ட்ஸ், தனி ஸ்கீம் ஒதுக்கீடுகளில் வருத்தம் வரலாம். அவை பெரும்பாலும் அரசியல் தேவைகளைப் பொறுத்தே கவனம் பெறுகின்றன . கவனிக்கப்படுகின்றன.
பட்ஜெட்டில் ஒரு சிறிய பகுதி மட்டுமே இங்கு பேசப்பட்டுள்ளது. முழுமையாக படிக்க புரிய பலமணி நேரம் தேவைப்படும் அம்சமாகவே வழக்கம்போல் இப்பட்ஜெட்டும் இருக்கிறது. பட்ஜெட் பொருளாதாரமாக இருந்தாலும் அரசியல் பொறுத்தே அதன் சாதக பாதகங்கள் அமைகின்றன.
25-7-2024
Comments
Post a Comment