பட்ஜெட் செலவு முகம்
பட்ஜெட் ஆவணங்கள் உருவாக்கத்தில் நூற்றுக்கணக்கானவர் பெரும் உழைப்பை நல்க வேண்டியிருக்கிறது. எந்த அரசாங்கம் இருந்தாலும் அவர்கள் செய்ய வேண்டிய அடிப்படை வேலைகளை அவர்கள் செய்துரவேண்டியிருக்கும். பட்ஜெட்டில் அரசியல் கணக்கு இருக்கிற கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் இருக்கவே செய்யும். இம்முறையும் அது வெளிப்படாமல் இல்லை. ஆனால் பட்ஜெட் முற்றிலுமான அரசியல் மட்டுமல்ல. அதில் நிறைய கணக்கு இருக்கிறது. பல மணி நேர விவாதங்கள் - வர்க்க இழுப்புகள்- அறிவுஜீவிகளின் மனச் சாய்வுகள் , வாக்கு வங்கி கணக்கு என பல அம்சங்கள் ஊடும் பாவுமாக இருக்கும். பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை என்பதானாலும், ஆஹா இனி ஏழை எவருமில்லை அமிர்த காலம் என பேசுபவரிடமும் விவாதிக்க ஏதும் இருக்காது. பட்ஜெட் ஆவணங்களை படிப்பதற்கு பொறுமை வேண்டும். கீழ்கண்ட ஓரிரு பக்கங்களே போரிங்-சோர்வு தரும் என நாம் நினைக்கலாம். சம்பளம் வாங்கினாலும் கூட இந்த போரிங் வேலையைத் தான் நூற்றுக் கணக்கானவர் பல மாதங்கள் உட்கார்ந்து தயாரிக்கிறார்கள். அவர்கள் உழைப்பும் உழைப்புத்தான். வெளித்தெரியும் முகம் மட்டுமே நமக்கு தெரியலாம். உள்ளே பலரின் dead labour இருக்கிறது என்ற புரிதலுடன் பார்க்க வேண்டியுள்ளது.
இதற்கு முன்பு செய்திருந்த இடுகையில் குறிப்பிட்ட சில அம்சங்களை- குறிப்பாக மாநிலங்கள் tax dutyல் பெறுகிற பங்கை சுட்டிக்காட்டியிருந்தேன். மான்ய வெட்டு, பென்சன் ஒதுக்கீடு, பாதுகாப்பு ஒதுக்கீடு, சமூக நலத் திட்டங்களின் போதாமை, ஆட்சியாளரின் அரசியல் நிர்ப்பந்த பீகார் ஆந்திரா சாய்வு போன்றவற்றை சுட்டிக்காட்டியிருந்தேன். அத்துடன் இந்த இடுகையும் இணைத்து ஆர்வமுள்ளவர் வாசிக்கலாம். போரிங் தான். பல கோடி மனிதர்களின் வாழ்க்கைக்கான ஒதுக்கிடுகள் இவை. என் போன்ற பென்சனருக்கான ஒதுக்கீடும் தான்.
இங்கு பேசுவது மிக முக்கிய Expenditure Profile என்கிற 298 pages ஆவணம். இந்த ஆவணத்தில் 5 பகுதிகள் இருக்கும். பொதுவானவை, மாநிலங்கள், நிறுவனங்கள், வெளிப்பகுதி, ரயில்வே என்கிற பிரிவுகளாக அமைந்திருக்கும். இதில் தான் மத்திய அரசின் செலவு முகம் expenditure profile நமக்கு கிட்டும். ஆர்வம் இருப்பவர் படித்துப் பார்க்கலாம். 298 பக்க ஆவணத்தில் நான் முக்கியமாக கருதிய அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கும். சுவாரஸ்யமான விவரங்களும் உள்ளே கிடைக்காமல் இல்லை. கல்வி, பொது மருத்துவம், ஊரக வளர்ச்சி, சாலை, குடிநீர் சுகாதாரம் இவைகளுக்கான ஒதுக்கீட்டை வைத்து நாம் ஓர் அரசாங்கத்தின் ’நல அரசு தன்மையை’ பெறமுடியும். ஆனால் சமீபத்திய பட்ஜெட்களில் welfare neutral state என்கிற காட்சியையே நாம் கண்டு வருகிறோம் . இனி இந்த ஆவணம் குறித்து...
முதலில் செலவு அறிக்கை ஒன்று காணப்படும். இதில் 2022-23ல் உண்மையாக ஆன செலவு நமக்கு தெரிய வரும். மத்திய அரசிற்கு உண்மையான செலவாக 26 லட்சத்து 19 ஆயிரத்து 26.92 கோடி வருவாய் பகுதியிலும், மூலதனப்பகுதி செலவாக 6 லட்சத்து 46ஆயிரத்து135.71 கோடியும் காட்டியிருப்பர். அதாவது செலவு 32லட்சத்து 65ஆயிரம் கோடிக்கு மேல். மொத்தமாக பட்ஜெட் வழி செலவாக 41 லட்சத்து 93 ஆயிரத்திற்கு மேல் எனக் காட்டுகின்றனர்.
இந்த பட்ஜெட்டில் 2024-25ல் 48 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மேல் செலவு ஆகலாம் என மதிப்பிட்டுள்ளனர். பொதுத்துறை ரீசோர்சஸ் சேர்த்தால் 51 லட்சத்து 89 ஆயிரத்துக்கு மேல் என்கின்றனர். எவ்வளவு பெரிய பட்ஜெட் பாருங்கள்..
இம்முறை மாநிலங்களுக்கான கிராண்ட்ஸ் என்பதை 23-24 விட சற்று கூட்டியுள்ளனர். சென்ற ஆண்டில் 59 லட்சம் கோடி என்பது 64லட்சம் கோடியாகியுள்ளது. கடன் வட்டிக்கான ஒதுக்கீட்டிற்கு 1லட்சத்து 16 ஆயிரம் கோடிக்கு மேல் காட்டுகின்றனர். சிவில் சப்ளை பகுதிக்கு 137 கோடியிலிருந்து பல மடங்கு கூட்டி 9107 கோடியாக செலவு மதிப்பீட்டை செய்துள்ளனர். உழைப்பாளர் திறன் பகுதியில் 13 ஆயிரம் கோடி 22 அயிரம் கோடியாக உயர்த்தி தெரிவித்துள்ளனர்.
அடுத்து அவர்கள் ஒவ்வொரு அமைச்சர் துறைக்கும் எவ்வளவு செலவு என்கிற விவரத்தை காட்டியிருப்பார்கள். எங்களின் தொலைத்தொடர்புத்துறை டிமாண்ட் 13ல் வரும். 2022-23ல் செண்ட்ரல் ஸ்கீம்க்காக 55 ஆயிரம் கோடி செலவானதைச் சொல்கின்றனர். 2024-25ல் 88ஆயிரத்து 906 கோடிக்கான டிமாண்ட் காட்டுகின்றனர்.இதில் 83 ஆயிரம் கோடி கேபிடல் செலவிற்கு எனத் திட்டமிட்டுள்ளனர். இந்த எஸ்டிமேட் செலவானதா என்பதை நாம் 2026-27 பட்ஜெட்டில்தான் தெரிந்துகொள்ள முடியும்.
centrally sponsored schemes 75 இருக்கிறது. 22-23ல் இதற்கான செலவு 43 ல்ட்சத்து 7 ஆயிரம் கோடிக்கு மேல் என்றால், இம்முறை 24-24ல் 50 லட்சத்து 6000 கோடிக்கு மேல் என சற்று உயர்த்தியுள்ளனர்.
இதைத்தவிர சென்ட்ரல் செக்டார் ஸ்கீம்ஸ் என பல்வேறு அமைச்சகரங்களுக்கான திட்டங்கள் 676 தலைப்புகளில் இருக்கின்றன. இந்த அம்சத்தில் 2022-23க்கான செலவு 14லட்சத்து 45ஆயிரத்து 922 கோடியாகும். இப்போது 24-25ல் 15 லட்சத்து 16 ஆயிரத்து175 கோடியாக சொற்பமாக உயர்த்தி செலவு மதிப்பீட்டைக் காட்டுகின்றனர்.
இந்த அம்சத்தில் டெலிகாம் டிமாண்ட் 13 படியும் செலவு காட்டப்பட்டுள்ளது. பிற சென்ட்ரல் செலவுகள் என்பதில்தான் டெலிகாம் பொதுத்துறைகளுக்கு உதவி எனக் காட்டுகின்றனர் பக் 65/296ல் . 2022-23ல் அவர்கள் செய்த உதவி 46635 கோடி என்கின்றனர்.இம்முறை 88 அயிரத்து 264 கோடி உதவி எனச் சொல்கின்றனர். இதில் பி எஸ் என் எல் எவ்வளவு பெறும் என இதில் தனியாக சொல்லப்படவில்லை
இந்த other schemes என்பதில் 14 லட்சத்திற்கு மேல் 140 தலைப்புகளில் காட்டுகின்றனர்.
மான்யம் வெட்டு நடந்திருக்கிறது.2022-23ல் கிட்டத்தட்ட 58 லட்சம் கோடி என்பதை ஏறத்தாழ 43 லட்சம் கோடி எனக் குறைத்து 15 லட்சம் கோடி வெட்டை நிகழ்த்தியுள்ளனர். சென்ற ஆண்டே 40 லட்சம் கோடி அளவுதான் மான்யம் என வெட்டை காட்டியிருந்தனர்.
செட்யூல்ட் இனத்தவர் நலன் என்பதில் பல்வேறு அமைச்சகம் சார்ந்த 275 நல தலைப்புகளில் 22-23ல் செலவு செய்தது 1.33 லட்சம் கோடிக்கு மேல். இம்முறை 24-25ல் 1.65 லட்சத்திற்கு மேல் சற்று உயர்த்தியுள்ளனர்.
பட்டியல் பழங்குடியினர் நலன் பட்ஜெட்டில் 281 நல தலைப்புகளில் 2022-23ல் 9லட்சத்து 2176 கோடி செலவு செய்துள்ளனர். இம்முறை 2024-25ல் இதை 1.24 லட்சத்திற்கு மேல் என சற்று கூட்டியுள்ளனர்.
Gender Budget Statement 13 page 157/298ல் வருகிறது. 22-23ல் 2 ல்ட்சத்து 31 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளதாக சொல்கின்றனர். 24-25ல் இதை 3 ல்ட்சத்து 27 ஆயிரம் கோடியாக உயர்த்தி மதிப்பிட்டுள்ளனர்.
பட்ஜெட் புரவிசன் ஹெட் அக்கவுண்ட் என தனியாக ஸ்டேட்மெண்ட் 16 யை தருகின்றனர். ஒவ்வொரு ஹெட் வாரியான செலவு மதிப்பீடு இதில் கிடைக்கும். ஆர்வ அடிப்படையில் ஓரிரண்டை தருகிறேன். அனைத்து ஹெட்களுக்குமான 2022-23 செலவு 41 லட்சத்து 93 ஆயிரத்து 157 கோடி. 2024-25ல் 48 லட்சத்திற்கு மேல் காட்டுகின்றனர்.
குடியரசுத் தலைவர், துணைத்தலைவர், கவர்னர் போன்றவர் ஹெட் 2012. இதில் 2022-23க்கு 89.97 கோடி. 2024-25ல் 121. 19 கோடி என 32 கோடி உயர்த்தியுள்ளனர். அடுத்த ஆர்வம் கவுன்சில் ஆப் மினிஸ்டர்ஸ். அமைச்சரவை செலவு 954 கோடி 2022-23ல் என்றால் 24-25ல் 1148.93 கோடி எனக் காட்டுகின்றனர். சுமார் 200 கோடி உயர்வு. நீதி நிர்வாகம் என்பதில் இவை முறையே 891 கோடி, 2552 கோடி. 1700 கோடி இங்கு உயர்ந்ததை காணலாம். எலக்ஷன்ஸ் என ஹெட் 2015 காட்டுகின்றனர். அதில் இவை முறையே 3775 கோடி, 2724 கோடி எனக் காட்டியுள்ளனர். போலீஸ் ஹெட் 2055. அதில் 1லட்சம் கோடி , 1.27 லட்சம் கோடி எனக் காட்டுகின்றனர்.
என் போன்றவர்க்கான ஹெட் 2071 பென்சன் மற்றவை. இதில் டெலிகாமிற்கு மட்டும் 2022-23ல் 15530 கோடி செலவானது. இப்போது 17510 கோடி என மதிப்பிட்டுள்ளனர்.
மிக முக்கியமான பொதுக் கல்வி ஹெட் 2202. இதில் 2022-23 செலவு 33460 கோடி. 2023-24 திருத்தப்பட்டபோது 54719 கோடியாக்கிவிட்டு, 24-25ல் 39886 கோடி என குறைத்துள்ளனர். குறைந்தது 50 ஆயிரம் கோடியாவது இதில் ஒதுக்கியிருந்தால் நலம்.
பொது மருத்துவம் ஹெட் 2210. செலவு 22-23ல் 35657 கோடி. 24-25க்கு 40072 கோடி என்றே உயர்த்தியுள்ளனர். இங்கும் குறைந்தது 50 ஆயிரம் கோடி இருந்தால் நலம்.
குடிநீர் சுகாதாரம் ஹெட் 2215. இதில் 22-23க்கான செலவு 55785 கோடி. இதை 24-25ல் 64303 கோடியாக காட்டுகின்றனர். போதுமா.. குடிநீர் சுகாதார மேம்பாடு அனைத்து கிராமங்களுக்கும் என்றால் லட்சம் கோடி கூட போதாது. வீடு என்பதன் ஹெட் 2216. இதில் 11703 கோடிதான் என்பது பெறும் வீழ்ச்சி. 2022 விட 7000 கோடி வீழ்ச்சி.
ஊரக வளர்ச்சி என்பதற்கான ஒதுக்கீடு லட்சம் கோடியை தொடுவதில்லை. 89715 கோடியில் வைத்துள்ளனர்.
MPs Local area dev scheme ல் உயர்வைக் காண்கிறோம். 2022 -23 செலவு 2564 கோடி. இப்போது 3954 கோடி செலவு செய்ய சொல்கிறார்கள். பாசன வசதி வெள்ளத்தடுப்பிற்கு 10864 கோடி தான் ஒதுக்கியுள்ளனர். வெள்ள நிவாரணம் என தனியாக இதில் ஏதும் சொல்லப்படவில்லை. மாநிலங்கள் எவ்வளவு கோரினாலும் அவர்கள் ஒதுக்கியதைப் பார்த்தால் ஏதும் தேறாது போல் இருக்கிறது.
Grands in aid to State Govts என்பது ஹெட் 3601ல் காட்டுகின்றனர். இதற்கு 6லட்சத்து 66 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளனர்.
கடன்வழி மாநில பிராஜக்ட்ஸ் பற்றிய பெரிய பட்டியலை பக் 208/298ல் பார்க்கலாம். அதே போல் வெளிநாட்டிற்கு செய்யக்கூடிய உதவி பட்டியலை பக் 213/298ல் காணலாம்.
வாய்ப்புள்ளவர்கள் ஆவணத்தை படித்து பாருங்கள்..
27-7-2024
Comments
Post a Comment