குமரப்பா வாசிப்பு
காந்தி மார்க்ஸ் நேரு அம்பேத்கர் வாசிப்பு போல் விரிவான கிடங்குகள் இல்லாவிட்டாலும், குமரப்பா வாசிப்பிற்கும் பலமணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. குமரப்பாவிற்கான collected works என்பதெல்லாம் இல்லை. அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்கள், கட்டுரைகளின் தொகுப்புகள், அவர் குறித்து சிலர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் என சில நமக்குக் கிடைக்கும்.
தஞ்சை நகர்ப்புறத்தில் பிறந்து சென்னை , லண்டன், நியுயார்க் எனப் பார்த்து படித்து டாக்டர் பட்ட ஆய்வுகளை முடித்துக்கொண்டு பம்பாய் நகரத்திற்கு , மற்ற எவரையும் போல ஆடிட்டராக சம்பாதிக்க வந்தவர் தான் ஜே சி குமரப்பா. பெருங்குடும்பம். வெளிநாடுகளில் கல்வி பெற்ற குடும்பத்தினர். குழந்தையாக இருந்ததிலிருந்து பிறர் மீதான கரிசனம் குறித்து சொல்லிக்கொடுத்த புரோட்டஸ்டண்ட் குடும்பம்.
இந்திய வறுமை, பிரிட்டிஷ் சுரண்டல் கொடுமை குறித்த theoretical பின்புலத்துடன் 1929 காந்தி சந்திப்பு அவரை முழுநேர கிராம ஊழியனாக்கியது. 1960 ஜன 30 இறக்கும்வரை கிராம வாழ்வு அதன் உன்னத முன்னேற்றம் என்கிற கனவிற்கான வாழ்நாள் உழைப்பை அந்த மனிதர் தந்தார். அதற்காக பேசினார். எழுதினார். சிறை அனுபவித்தார். நேருவுடன் சண்டையிட்டார். சக காந்தியர்களுடன் கோபமாக விவாதித்தார். தனிப்பட்ட egoவோ , அவர்களது அதிகார நாற்காலி குறித்த பொறாமையோ அவரிடம் இல்லை.
காந்தியுடன் வாழ்ந்த காலத்தின்மதிப்புகள், கடைசி மனிதனின் கண்ணியம் என்பதற்கான போராட்டங்களே அவரை உலுக்கி அலைக்கழித்தது. கிராமத் தொழில் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான மைல்களுக்கு செல்ல வைத்தது. இந்திய மண்ணிலிருந்து பட்டினி வறுமை வேலையின்மை சமூக அவலங்களை விரட்ட முடியும் என தன் எழுத்துக்கள் வழி அவர் சொல்லிவந்தார்.
பணப்பொருளாதாரத்தின் கோரங்களையும் அதன் சமூகக் கேடுகளையும் விரிவாக விவாதித்த குமரப்பா, அப்படியே ரூபாய் இருக்க வேண்டுமெனில், அதன் மதிப்பை ஏழை உழைப்பாளர் கையில்தான் ஒருவரால் காணமுடியும் என்றவர். நம் ஒவ்வொருவருக்குமான முக்கிய கேள்வி ஒன்றை அவர் எழுப்பினார். என் கையில் கூடுதலாக வரப்போகும் ரூபாயில் நான் செய்யப்போவதென்ன என்கிற மனசாட்சி முன் நிறுத்தப்பட்ட கேள்வியது.
இந்திய கிராமத்தொழில்களை அழித்திடாதவகையில் எந்திரவகை பெருந்தொழில்கள் என அவர் பேசியது எடுபடாமல் போனது. சக தோழர்களிடம் அவர் நொந்து போனார். தன்னால் முடிந்த வேலைகளை மகன்வாடி, செல்டோ, கல்லுப்பட்டியில் செய்து பார்த்தார்.
காந்தி மறைவிற்குப் பின்னர் காந்தியுடன் வாழ்ந்த பல தோழர்கள் பல்வேறு வழிகளில் பயணித்தனர். அவரவர் காந்தியை முன் நிறுத்தியோ, அல்லது நிறுத்தாமலோ தங்களுக்கான ‘ஸ்கூல்களை ‘ வைத்துக்கொண்டார். அவர்கள் ‘அனைவருக்குமான வேலை- அகிம்சை வழி முறை’ என்பதில் சந்திக்காமல் இல்லை. ஆனாலும் தனித் திசை பயணங்களை மேற்கொண்டனர். ஒருவர் மீது மற்றவர்க்கு விமர்சனங்கள் எழத்துவங்கின.
அரசாங்க அதிகார வழி , லோகியா மொழியில் government Gandhians, சென்ற நேரு படேலுக்கு பெருமளவு புகழ் கூடியது. நேருவிற்கு நாடு முழுக்க ஏன் உலக அளவிலும் செல்வாக்கு படர்ந்தது. அரசாங்கத்துடன் உரசல் இல்லாமல் தன் வேலையைச் செய்வதா,மோதிக்கொண்டு கெடுத்துக்கொள்வதா என்கிற குழப்பமும் காந்தியர்களிடம் ஏற்பட்டது. பிரிட்டிஷ் அரசில்லையே, நமது அரசுதானே, நாம் பார்த்து பழகிய தோழர்களின் அரசாங்கம் தானே- விமர்சனங்களில் வெம்மை ஏன் என்கிற கேள்விகள் அவர்களிடம் இருந்தது. அப்படியிருக்க முடியாது. அதிகாரம் குறித்த நமது கேள்விகள், அவர்கள் திட்ட செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் வெள்ளையா பழுப்பா என்றெல்லாம் பார்த்து செய்யக்கூடியதல்ல எனக் கருதினார் குமரப்பா. வழக்கம்போல் harsh ஆன விமர்சனங்கள் அவரிடம் வெளிப்பட்டன.
அவர் தனித்துவிடப்படவேண்டிய நிலை உருவானது. பழகியவர்கள் தள்ளிப்போகினர். உடல்நலம் பாதிக்கப்பட்டபோது , மரியாதை கருதி வந்து விசாரித்து செல்பவர்களாயினர். அவரது சிந்தனைகளை எடுத்து தொடர்ந்து விவாதித்து சமூகத்திடம் கொண்டு செல்லக்கூடிய வலிமையான institutional ஏற்பாடுகள் இல்லாமல் போயின. ஆங்காங்கே திட்டுதிட்டாக அவர் குறித்து பேசக்கூடிய செயல் வீரர்களுடன் அவர் சுருங்க வைக்கப்பட்டார்.
முதலாளித்துவம் சாதிய பின்புலம் கொண்ட நிலபிரபுத்துவம் என்பதற்கு மாற்றாக மார்க்சிய விமர்சனம் என்பதே வழியாக இருந்த காலத்தில் , சோவியத் சீனா மாற்று குறித்த சோசலிச கட்டுமான அனுபவங்களையும் எடுத்துகொண்டு காந்திய பொருளாதார கட்டுமானம் என்கிற புதிய உத்தியை குமரப்பா முன்வைத்தார். முதலாளித்துவம் குறித்த non Marxist critique என்பதில் குமரப்பா மற்றும் அவரது சகோதரர் பரதன் குமரப்பாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. குமரப்பாகாந்தியத்தையும் கம்யூனிசத்தையும் குழப்புகிறார்- கம்யூனிஸ்ட் போல் பேசி எழுதிவருகிறார் என்கிற விமர்சனம் அவர் மீது வந்தது
தமிழக அரசோ மத்திய அரசாங்கமோ அவர் நினைவு குறித்த செய்திகளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற சிந்தனை கூட இல்லா obscure மனிதராக்கப்பட்டார் ( பொது வெளியில்) குமரப்பா.
அவரது வாழ்க்கை குறித்த செய்திகளில் இடைவெளிகள் இருக்கின்றன. அவர் குடும்பத்தாருடன் எப்படி உறவை வைத்திருந்தார். குடும்பத்தார், சக தோழர்களுடன் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தாரா, அவருக்கு திருமணம் குறித்து எத்தகைய எண்ணம் இருந்தது, எந்தப் பெண்ணாவது அவர் மனதிற்கு நெருக்கமாக இருந்தாரா- அம்ரித் குறித்து என்ன நினைத்தார் போன்ற தனி மனித வாழ்க்கை குறித்த இடைவெளிகள் தென்படுகின்றன. லண்டன் அமெரிக்க வாழ்க்கைக்காலம் எப்படியிருந்தது..காந்தியும் அவரும் சந்தோஷித்த கடித்துக்கொண்ட தருணங்கள் எவை என்கிற கேள்விகளும் எனக்குள் ..
ஆகஸ்ட் 28, 2024 அன்று காந்தி கல்வி நிலையத்தில் குமரப்பா குறித்து அறிமுகப்படுத்தும் உரை ஒன்றிற்கு வாய்ப்பு தந்தார்கள். கொஞ்சம் உழைப்பை கொடுத்து தயாரிக்கப்பட்ட உரைதான். சைத்ரா ரெட்கர் நூல் ஆய்வு நூலாக இருந்ததால் எடுத்துக்கொண்டேன். பெரும் theoretical exercise கொண்ட முதல் இயலை சற்று தவிர்த்தே என் உரையைக் கட்டிக்கொண்டேன். அந்நூலில் எனக்குத் தென்பட்ட இடைவெளிகளுக்காக வேத் கோவிந்தன் web of freedom, ஊட்டி நண்பர்கள் வெளியிட்ட back to basics, Mark Lindley வின் Gandhi’s economist ( இணைய வழியில்) , குமரப்பா சகோதரி எழுதிய கட்டுரை ( ராமச்சந்திரன் தொகுப்பு) ஆகியவற்றை துணைக்கு வைத்துக்கொண்டேன். அன்று இணையவழி வந்து கேட்டவர்களுக்கும் , காந்தி கல்வி நிலையத்தார்க்கும் என் நன்றி. அவ்வுரை இணையத்தில் போடப்பட்டிருக்கிறது. வாய்ப்புள்ளவர் கேட்கலாம். எளிமையான ஆழமான மானுட நேயமிக்க மனிதரைப் பற்றி , முடிந்தவரை எளிமையாக அதே நேரத்தில் making of Kumarappa என்கிற விரிந்த நோக்கில் அமைக்கப்பட்ட உரையது.
உரையில் பெருந்தவறு ஒன்றை செய்துள்ளேன். அவர் மறைந்த 75 ஆண்டுகள் என தவறாக குறிப்பிட்டுள்ளேன். அதற்கு பொது வெளியில் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
குமரப்பா என்கிறவர்க்கு தமிழர் என்கிற அடையாளமோ , காந்தியர் என்கிற அடையாளமோ என்ன தரப்பட்டாலும், கிராம ராஜ்ய - கிராம உத்யோக கண்ணியம் குறித்த பெருங்கனவுக்காரர் என்கிற அடையாளம் என் வாசிப்பு வழி பெறமுடிந்தது. அவரின் கனவு அவ்வளவுதானா.. திட்டு சோதனைகளின் திவலைகள் மட்டும்தானா.. காலம் சொல்லட்டும்…
30-8-2024
Comments
Post a Comment