சில நூல்களும், கருத்துக்களும் காலவரையறைகளில் காணாமல் போகாது, ஒளித்துணையாய் மனித வாழ்க்கையில் வந்துகொண்டிருக்கும். தமிழில் திருக்குறளை அப்படி நாம் கொண்டாடமுடியும்.
Political Track என்கிற வரிசையில் ரூசோவின் சமுதாய ஒப்பந்தம், மார்க்ஸ் எங்கெல்சின் கம்யூனிஸ்ட் மானிபெஸ்ட்டோ, காந்தியின் ஹிந்த் சுயராஜ் போன்ற ஆக்கங்களை நாம் சொல்லலாம். அப்படி சொற்செட்டுடன் மிக ஆழமாக மனித வாழ்வின் துயரங்களை நீக்க துணிச்சலான மாற்றுகளை , காலத்தை விஞ்சி தீர்க்கமாக வைப்பவைகளாக இந்நூல்கள் இருக்கும். இவைகளை இணைத்து படிக்க முடிந்தால் சிறப்போ சிறப்புதான். அவைகளின் சிந்தனைத் திறன் உயர்தரமானவை.
இங்கு நான் கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ வாசித்தலை சொல்ல விழைகிறேன். கட்சிகளில் மானிபெஸ்டோ குறித்து கொஞ்சம் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும். கேள்வி ஞானம் , சில முக்கிய மேற்கோள்களை நம்பிக்கை அடிப்படையில் வெளிப்படுத்துதல் என்கிற பழக்கம் இருக்கும். அங்கு பலர் ஒருமுறையாவது வாசித்திருப்பர். வாசிக்காத மார்க்சியர் எவராவது இருந்தால் அவசியம் வாசித்தல் நலம். வாழ்வு குறித்த புரிதலை கூடுதலாக பெற மானிபெஸ்டோ உதவும். நூலை உள் நுழைந்து முழுமையாக வாசிக்க வேண்டும்.
மானிபெஸ்டோவின் 25 ஆண்டுகள் துவங்கி மார்க்ஸ் எங்கெல்ஸ் வெவ்வேறு மொழி பதிப்புகளுக்கு முன்னுரை எழுதியிருந்தனர். மார்க்ஸ் மறைந்த பின்னர் எங்கெல்ஸ் இருந்தவரை அவர் புதிய மொழி, அல்லது வருகிற புதிய பதிப்புகளுக்கு முன்னுரை எழுதியிருந்தார். ஆரம்ப வாசகர்களை முன்னுரையை விட்டுவிட்டு நூல் இயல்களுக்கு நேரடியாக சென்றுவிடுங்கள் எனச் சொல்லும் வழக்கம் உண்டு. முதல் முறைக்கு மேல் அந்நூலை அடிக்கடி வாசிக்கச் செல்பவர்கள் அனைத்து முன்னுரைகளையும் படிப்பது உகந்தது. அவை எழுதப்பட்ட ஆவணத்தின் சாரத்தை, சற்று மேலும் ஒளி படவேண்டிய inadequacy யை குறிப்பிட்டு பேசும். 1848 ல் வந்த வரலாற்று ஆவணம் என்பதால், தாங்கள் மாற்ற விரும்பவில்லை என 25 ஆண்டுகள் கழித்த பதிப்பொன்றில் மார்க்ஸ் எங்கெல்ஸ் சொல்லியிருப்பர்.
அவ்வப்போது நம்மிடம் ஏற்பட்டு வரும் political influence , ideological influence , life experiences in movements அடிப்படையில் நம் வாசிப்பும் இந்நூலுடன் சேர்ந்து செல்லும். மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவரும் 1848 லிருந்து அவர்கள் இருந்த காலம்வரை முதலாளித்துவ தொழில்மயமாதல்- மற்றும் தொழிலாளர் இயக்க வரலாற்றுடன் மானிபெஸ்டோ வரலாறும் பயணிப்பதாக முன்னுரைகளில் சொல்லியிருப்பர்.
மானிபெஸ்டோ அளவில் சின்னஞ்சிறு நூல்தான். மார்க்சிய பதங்களில் கொஞ்சம் பயிற்சி கொண்ட எவரும் 2 மணி நேரத்திற்குள் படித்துவிடக்கூடிய நூல்தான். ஆனால் அது பேசும் கருத்துக்கள் மிக ஆழமானவை. முழுமையாக தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளாமல் படிப்பவர்களுடன் பெரும் உரையாடல் திறப்புகளை மானிபெஸ்டோ செய்திடும். படித்துவிட்டு ஏற்க முடியவில்லை என விமர்சனம் கூட செய்யலாம். ஆனால் படிக்காமல் அது குறித்த ஓரிரு மேற்கோள்களை வைத்துக்கொண்டு புகழ்வது அல்லது இகழ்வது என்கிற ஏமாற்று குறித்து அவரவர்தான் யோசிக்க வேண்டும்.
மானிபெஸ்டோவை ஆங்கில வாசிப்பு பயிற்சி இருக்கும் மார்க்சியர் அல்லாதவர்களும் ஓரிரு முறை வாசித்தல் நலம். இலக்கிய வாசிப்பாளர்கள் கூட வாசிக்கலாம்.
பூர்ஷ்வா குறித்த விமர்சனம் என்கிற வாசிப்பாக, தொழிலாளி வர்க்கம்தான் விடுவிக்கும் என்கிற நம்பிக்கை வாசிப்பாக பலமுறை செய்ததுண்டு. மானிட உறவுகள் வெறும் பண உறவுகளாக சீரழிந்து கிடக்கின்ற நெறியற்ற வாழ்க்கைமுறை என்கிற வாசிப்பில் , மானிபெஸ்டோ காந்தி சந்திப்பு புள்ளிகளைக் கூட நாம் பெறமுடியும்.
இப்பூமி அனைவருக்கும் வாழ்க்கைக்கான ஆதாரங்களை தரக்கூடியதாக இருக்கிறது. ஆனால் சிலரின் பேராசையால் பெரும் துன்ப பூமியாகிறது என்கிற புரிதலை மானிபெஸ்டோ தரும். மீட்சியாளன் தொழிலாளி வர்க்கமா, அவன் தான் புரட்சிகர மனித கூட்டமா வர்க்கமா என்கிற புள்ளி விவாதங்களை பெருக்கலாம். ஆனால் நமக்கு greedy ஏன் என்கிற புள்ளியில் மானிபெஸ்டோவை காந்தி சந்திக்கிறார். வன்முறை வழியில் மாற்றம் எனும் போது அவர் விலகுகிறார்.
மானிபெஸ்டோவின் சில வரிகள் குறிப்பாக அதன் முதல் இரு இயல்கள் முதலாளித்துவம்- தொழிலாளர் இயக்கம் எனப் பேசுகிறவற்றில் வாழ்வை நவீன எந்திர வாழ்க்கை எப்படி சீரழித்துள்ளது என்கிற சித்திரம் , காந்தியின் ஹிந்த் சுயராஜ்ஜில் சொல்லப்பட்டுள்ள சித்திரமாகவும் இருக்கும். மார்க்ஸ் எங்கெல்ஸ் முன்வைக்கும் radical agenda பலவற்றை நாடுகள் welfare அரசுகளாக சோதிக்காமல் இல்லை. தொழில்கள் அரசுமயம், இலவச கல்வி, மருத்துவம், progressive taxation போன்ற சோதனைகள் நடத்தப்படாமல் இல்லை. ஆனால் பெருந்தொழில் என்கிற முதலாளித்துவ சோதனையை private property என்பதிலிருந்து State property என்கிற Property legality மாற்றம் என்பதாக அவை நடத்தப்பட்டன.
சோசலிசமும் பெருந்தொழிலும் ஒத்துப்போகுமா என்கிற புள்ளி விரிவாக பேசப்படாமல் போனது. காந்தி அதை சோதிக்க நினைத்தார். விடுதலைக்கு பின்னரான காலத்தில், நேருவின் ஆட்சி தொடர்ந்து இன்றுவரை , அச்சோதனை பக்கம் இந்தியா போக முடியாமல் போனது சோகமான ஒன்றுதான். Greedy குணம் ‘பத்தலை இன்னும் இன்னும் ‘ என்கிற ஓட்டம் முதலில் தன் மனசாட்சியைத்தான் மூடிவைக்கும். அதை புறக்கணிப்பதில்தான் தன் சுகத்தை அதனால் காணமுடியும். இப்படி ஒரு வாசிப்பை கூட மானிபெஸ்டோ தருகிறது. இது ஏதோ முதலாளிகளிடம் மட்டுமே உள்ள குணம் அல்ல. நம் எல்லோரிடமும் பற்றியுள்ள போக்கு.
எங்கெல்ஸ் ஒரு முன்னுரையில் முக்கியமான ஒன்றை விளக்கியிருப்பார். சோசலிச திட்டம் கொண்ட மானிபெஸ்டோவை ஏன் ‘சோசலிஸ்ட் மானிபெஸ்டோ ‘என அழைக்காமல் கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ என்று அழைத்தோம் என்பது அது. சோசலிசம் என்பது அப்போது மத்தியதர வர்க்க இயக்கமாக உணரப்பட்டிருந்தது. தொழிலாளர் இயக்கத்தை நாங்கள் முன் வைத்ததால் கம்யூனிஸ்ட் எனப் பயன்படுத்தியுள்ளோம் என விளக்கம் தந்தார் எங்கெல்ஸ். வேறு ஒரு முன்னுரையில் அவர் சோசலிசம் பூர்ஷ்வா இயக்கம் என மாற்றிச் சொல்லியிருப்பார். இரண்டே ஆண்டு இடைவெளிகளில் எங்கெல்சை மாற்றி பேசவைத்த அனுபவம் என்ன என எனக்குத் தெரியவில்லை. நேரு பேசிய ஆவடி சோசலிசம் கூட பூர்ஷ்வா சோசலிசமாக சோவியத் யூடினும் இங்கு கம்யூனிஸ்ட்களும் பார்த்ததுண்டு என்கிற ஒன்றை இணைத்துப் பார்த்துக்கொள்கிறேன். மானிபெஸ்டோ முன்வைத்த radical agenda சிலவற்றை நேரு நிகழ்த்திப் பார்த்தார் என்கிற புரிதலும் தேவைப்படுகிறது.
முன்பெல்லாம் மிக மலிவான விலைக்கு கிடைத்த மானிபெஸ்டோ இப்பாதெல்லாம் ரூ 150, ரூ 200 என்கிற விலையில் அமேசானில் கிடைக்கிறது. கம்யூனிஸ்ட்கள் பலரின் வீட்டில் பழைய பிரதிகள் இருக்கலாம். என் பிரதிகளை வழக்கம்போல் தமிழ் ஆங்கிலம் இரண்டையும் தவறவிட்டேன். எங்கெல்ஸ் கூட மூல ஜெர்மன் பிரதியை தொலைத்துவிட்டதாக எழுதியிருப்பார். மார்க்ஸ் மறைந்த பின்னர் மேம்பட்ட மொழிபெயர்ப்பாக சாமுவேல் மோர் கொணர்ந்த ஆங்கில பதிப்பைத்தான் எங்கெல்ஸ் பாராட்டி சொல்வார். அவர் மேற்பார்வையில் அம்மொழிபெயர்ப்பு வந்தது. அதுதான் நமக்கு கிடைத்து வருகிறது.
என் சி பி எச் நிறுவனத்தார் தோழர் எஸ் வி ராஜதுரை விளக்கத்துடன் விரிவான பதிப்பு ஒன்றை கொணர்ந்துள்ளனர். அவர் சாமுவேல் மோர் மற்றும் ஹால் டிராப்பர் மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டு தமிழ் மொழியாக்கத்துடன் பெரிய வேலை உழைப்பை தந்துள்ளார். தீவிர வாசிப்பாளர்கள் ஆய்வு கண்களுடன் அந்நூலை வாசிப்பதும் நலம்.
மானிபெஸ்டோ குறித்து அதன் 25 , 50, 75,100,125, 150 மற்றும் 175 ஆண்டுகளில் காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்களுடன் ஏராளம் எழுதப்பட்டுள்ளது. காலத்துடன் பயணித்து வரும் நூலாக கருத்து பெட்டகமாக மானிபெஸ்டோ இருப்பதைக் காண்கிறோம். மனித அறிவு தான் சேமித்த கிடங்குகளிலிருந்து எவரோ ஒரு தீர்க்கதரிசி வழியாக அவ்வப்போது உச்சம் தொடுகிறது. அனைவரின் நல்வாழ்விற்கான ஏக விழைவை அது வெளிப்படுத்துகிறது. அப்படி ஒரு பெரும் புற மாற்றத்திற்கான அக விழிப்பாக மானிபெஸ்டோவும் வாழ்கிறது.
வாசித்து பார்க்க வேண்டிய நூல்
16-9-2024
Comments
Post a Comment