oct 29 2024
டாங்கே 125
தோழர் டாங்கே அவர்களின் பிறந்த 125 ஆம் ஆண்டை இந்த அக்டோபர் 2024ல் நாம் கடந்துகொண்டிருக்கிறோம்.
அவரது பிறந்த நூற்றாண்டு நேரத்தில் பல பெருந்தலைவர்கள் அவர் குறித்து பல்வேறு காலங்களில் எழுதிய கட்டுரைகளை தொகுத்து Dange A Fruitful Life என்கிற நூலை கொணர்ந்தார்கள் . ஆங்கிலத்தில் 160 பக்க அளவில் வந்த நூல். தோழர் டாங்கே குறித்து வந்த நூல்கள் மிகக்குறைவுதான்.
இந்த நூலில் முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர் வெங்கட் ராமன், தோழர்கள் ரணதிவே, ராஜேஸ்வர ராவ், மொகித்சென், கே எல் மகேந்திரா, ரனேன் சென், கோபால் பானர்ஜி, சுரேன் பட்டா, கங்குலி, கெளதம் சட்டோ, பேனு தாகுர்தா, தாருண் சன்யால், ஜகதீஷ், அஜாய் தாஸ் குப்தா, திலிப் சக்கரவர்த்தி, சுப்ரதா பானர்ஜி, மிருண்மாய், பஞ்சனன், ரும்கி பாசு போன்ற பலர் டாங்கே குறித்து அவர்களின் மதிப்பீடுகளை தந்துள்ளனர்.
1964 கட்சி உடைவிற்குப் பின்னர், தோழர் ரணதிவே மிகக் கடுமையான டாங்கே, சிபிஅய் விமர்சகர்களில் ஒருவராக இருந்தார். ஆனால் 1959ல் டாங்கேயின் 60 ஆம் பிறந்த நாளையொட்டி அவர் நியுஏஜ் பத்திரிகையில் ( அக் 1959ல்) தோழர் ‘எஸ் ஏ டாங்கே ‘ என நீண்ட கட்டுரை ஒன்றை எழுதினார். அக்கட்டுரை இந்நூலில் இடம் பெற்றுள்ளது. டாங்கேவின் செயலாற்றலை, புலமையை, அமைப்பு தேர்ச்சியை, தொழிற்சங்க- கட்சிக்கான வழிகாட்டல்களை, பேச்சாற்றலால் கட்டிபோடும் திறனை தோழர் ரணதிவே மிகச் சிறப்பாக பாராட்டி பேசியிருப்பார். இப்படியெல்லாம் அன்பாக இருந்தவர்கள்தான் அரசியல் பார்வை வேறுபாட்டால், அமைப்பு பிரச்சனைகளை தீவிரமாக்கிக்கொண்டு தோழமைகளை தொலைத்தனர்.
1959 ல் கட்டுரையில் இளம் தோழர்களுக்கு டாங்கேவின் தியாகங்களை, தலைமைப்பண்பை அவர் அழகாக எடுத்துச் சொல்லியிருப்பார்.
டாங்கே 12 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்
1921லேயே இளம் 22 வயதில் தான் அறிந்த தெளிவில் காந்தி- லெனின் புத்தகம் எழுதியவர். 1922ல் சோசலிஸ்ட் இதழைக் கொணர்ந்தவர்.
கான்பூர், மீரத் என சதி வழக்குகளில் தண்டனை பெற்றாலும் ஆமாம் நாங்கள் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து சோசலிச முறைக்காக நிற்கிறோம் என அஞ்சாமல் சொன்னவர். பின்னர் அவரது வாதம் நூலானது.
சிறை வாழ்க்கையின் ஊடாகவே இந்திய வரலாற்றை தான் அறிந்த அளவில் வரலாற்று பொருள்முதல் வாத பார்வையில் எழுதி 1950 ல் பண்டைய இந்தியா கொணர்ந்தவர் ( கோபால் பானர்ஜி India From Primitive Communism to Slavery யை 1942-43 சிறைவாசத்திலேயே எழுதிவிட்டார். பின்னர் வெளியானது என்கிற தகவலை தந்திருக்கிறார். கோசாம்பி போன்றவர் இதை விமர்சித்தாலும், முக்கிய வரலாற்று நூலாக இந்நூல் இன்றும் பார்க்கப்படுகிறது)
இரண்டாம் உலகப்போர் தொடங்கியவுடன் , போர் வேண்டாம் எனக்கோரி , உலகிலேயே போருக்கு எதிரான தொழிலாளர்களின் முதல் வேலை நிறுத்தத்தை பம்பாயில் தலைமையேற்று நடத்தியவர்- அக் 2, 1939ல்- டாங்கே என தோழர் பி டி ஆர் இதில் பெருமை பொங்க எழுதியிருப்பார்.
இந்தியாவில் கான்பூரில் 1925ல் first communist conference நடந்தேற, சிறையிலிருந்தே செய்ய முடிந்தவைகளை டாங்கே செய்தார் ( என்ன என்ன எனச் சொல்லவில்லை) என்கிற செய்தியையும் தோழர் ரணதிவே எழுதியுள்ளார்.
1943-1959 இந்த 16 ஆண்டுகளில் AITUC யை அவர் தலைவராகவோ, பொதுச்செயலராகவோ இருந்து தொழிலாளர் மத்தியில் வீச்சாக கொண்டு சென்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1938 பம்பாய் தொழிற்தகராறு மசோதா எதிர்த்து 90 ஆயிரம் தொழிலாளரின் போராட்டத்தை அவர் நடத்தினார்.
பிரிட்டிஷ் அவரை மார்ச் 1940ல் இந்திய பாதுகாப்பு விதிகள் சட்டத்தில் உள்ளே தள்ளியது. டியோலி கேம்ப்பில் அடைக்கப்பட்டார்.
1925ல் அமைப்பு மாநாட்டை தொடங்கிய கட்சியால் 1943ல்தான் அதன் முதல் கட்சிக் காங்கிரசை நடத்தும் சூழல் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்தது. அந்த காங்கிரஸ் தலைமைக் குழுவில் டாங்கே இருந்தார்.
1945 உலகத்தொழிற்சங்க சம்மேளன துவக்க நிகழ்வில் டாங்கே பங்கேற்று அதன் துணைத்தலைவரானார்.
டாங்கே மிகச் சிறந்த நாடாளுமன்ற அனுபவத்தை பெற்றவராக பின் நாட்களில் மிளிர்ந்தார். ஆனால் அரசியல் அமைப்பு சட்ட உருவாக்க
அசெம்பிளிக்கு போகமுடியாமல் பிரிட்டிஷ் ஆட்சி செய்த தகவலை இந்நூல் தருகிறது. அதற்கு செல்ல முடிந்த ஒரே கட்சி பிரதிநிதி சோம்நாத் லாகிரிதான். அவராலும் நீடிக்க வாய்ப்பில்லாமல் போனது வேறு கதை.
1957 கேரளா அனுபவம் சொல்லிவிட்டு, 1959ல் பார்த்த கணக்கின்படி 41 தொழிற்சங்க AITUC தலைவர்கள் சட்டமன்ற- நாடாளுமன்றத்திலோ செல்ல டாங்கேவின் பெரும் பங்கு இந்நூலில் பேசப்பட்டுள்ளது.
கோபால் பானர்ஜி ‘டாங்கே அற்புத வாழ்வு’ என விரிவான பதிவொன்றை செய்துள்ளார். நாடாளுமன்ற பங்களிப்பு, தொழிற்சங்க பங்களிப்பு, வரலாறு- மராத்தி இலக்கியம், கட்சி கொள்கை நிலைப்பாடுகள் என அவரின் பெரும் பாத்திரத்தை பேசியிருப்பார்.
கட்சியில் வேறுபாடுகள் உச்சம் சென்றபோது , உடைவை தடுக்க அஜாய் மறைவிற்கு பின்னர் டாங்கே சேர்மன், இ எம் எஸ் பொதுச் செயலர் என்கிற சமரசம் எட்டப்பட்டது. டாங்கேவிற்காக சேர்மன் போஸ்ட்டா என்கிற விமர்சனமும் வந்தது. டாங்கே வின் சில punch களை வெம்மை பதங்களை எதிர்நிலை எடுக்கும் தோழர்கள் தாங்க முடியா நிலை என்பதும் பேசப்பட்டது. கட்சி உடைவை தடுக்க முடியாமல் போனது. டாங்கேவை ஆக உயர் தலைவர் எனப் பார்த்தவர்களே அவரை கடுமையாக விமர்சிக்கலாயினர்.
வலதுசாரிகளின் கை ஓங்கவிடாமல் காங்கிரசுடன் unity and struggle என்பதை அவர் ஜனசங்கம் உள்ளிட்ட ஜேபி போராட்டக் காலத்தில் எடுத்துரைத்தார். இந்திரா அவர்களின் எமர்ஜென்சி ஆதரவு, ஜனதா வெற்றி, பதிந்தா மாநாடு நிகழ்வுகளுக்கு பின்னர் , டாங்கேவின் செயல்பாட்டை highly individualistic என கட்சி பார்த்ததால் அவர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
கட்சியை அமைத்து , போராடி சிறையில் வாடி , மக்களிடம் செல்வாக்கு பெற்று, உலக கம்யூனிஸ்ட் இயக்க தத்துவார்த்த போராட்டத்தில் முன் நின்றவரானாலும், அரசியல்வேறுபாடு என வரும்போது அவர் நீக்கப்படும் நிலை உருவானது. 60 ஆண்டுகள் தான் கட்டிய கட்சியிலிருந்து அவர் வாழ்க்கை துண்டிக்கப்பட வேண்டிய நிலை உருவானது. பின்னர் AICP- UCPI என அவர் பயணப்பட்டார். UCPI இதழாக வந்து கொண்டிருந்த New Thinking Communist ல் மொகித், ஆர் வி எழுதிய டாங்கே குறித்த கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
அரசாங்கம் அரசியல் மாற்றுக் கருத்து கொண்டவர்களை தண்டிக்கும்போது , நம்மால் ‘அரசியல் பழிவாங்கல்’ என உரக்க சொல்லிவிட முடிகிறது. ஆனால் கட்சி அமைப்புகளில் மாற்று அரசியல் சிந்தனைகளுடன் ஒருவர் நீண்ட பயணம் செய்ய முடிவதில்லை. அங்கு அரசியல் மாற்று எனில் ஒன்று உடைவு அல்லது கட்சி விட்டு வெளியேற்றப்படுதல் என்கிற ஸ்தாபன வடிவ நடவடிக்கைகளே பதிலாக கிடைக்கும். அரசியல் பிரச்சனைகளுக்கு ஸ்தாபன வழி தீர்வு என்பது ‘அரசியல் பழிவாங்கலாக’ அங்கு பார்க்கப்படுவதில்லை. ஒழுங்கு பிரச்சனை- நடவடிக்கை என பார்க்கப்படுகிறது.
டாங்கேவின் சிந்தனைகளை ஒருவர் ஏற்கலாம்- நிராகரிக்கலாம். இந்திய கம்யூனிச இயக்கத்தின் உயர் தலைவர்களுள் ஒருவராக, விடுதலை இந்தியா வளர்ச்சி குறித்த மிக நிதான பார்வை கொண்டவராக, சாதி மத மொழி பிரச்சனை உள்ள நாடு ஒன்றில் சமூகத்தில் அவை விடுதலைக்குப்பின்னர் ‘பெறப்பட்ட நாட்டின் ஒற்றுமைக்கு’ ஊறு விளைவிக்கா அரசியல் திசை குறித்து அவர் பேசி வந்தார். வலது சாரி அபாயத்திற்கு நாடு எப்பொழுது வேண்டுமானாலும் பீடிக்கப்படலாம் என்பதை அவர் வாழ்ந்த 1991 வரை நினைவூட்டிக்கொண்டே இருந்தவர் தோழர் டாங்கே. என்னை ‘ஏழை’ என சொல்லாதே ‘உழைப்பவன்’ என என் வர்க்கப் பெயரைச் சொல்லி அழை என கம்பீரமாக பேசியவர் தோழர் டாங்கே.
டாங்கே 20க்கும் மேற்பட்ட நூல்களை, ஏராள கட்டுரைகளை, சொற்பொழிவுகளை செய்தவர். ஓரளவிற்கு அவர் பெண் ரோசா தேஷ்பாண்டே தொகுத்தார். அவர் இன்னும் வரலாற்றாய்வாளர் பார்வைக்கு செல்லாமல் இருப்பது, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு கூட நட்டம்தான்.
வாய்ப்பு இருந்தால் வேறு கட்டுரையாளர்கள் டாங்கே குறித்து பேசியிருப்பதை பார்க்கலாம்
29-10-2024
அக் 30 2024 டாங்கே 125 - இடுகை 2
டாங்கே நூற்றாண்டின்போது வந்த ‘டாங்கே பயன்நிறை வாழ்வு’ Dange A Fruitful Life நூலை அறிமுகப்படுத்தி இடுகை செய்திருந்தேன். அந்நூலில் சாராம்சமாக உள்ள வேறு அம்சங்களை சுருக்கமாக இங்கே தர முயல்கிறேன்.
தோழர் ராஜேஸ்வர ராவ், டாங்கேவின் 75 ஆம் ஆண்டில் பார்ட்டி லைப் இதழில் (7-10- 1974 ) Great Qualities of Com S A Dange என்கிற சிறு கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன் சாராம்சம்
கட்சியை தாண்டி இந்தியாவிலும், உலகின் பகுதிகளிலும் பெரும் அறிவுஜீவியாக டாங்கே பார்க்கப்படுவது பெருமிதமான ஒன்று
1930களில் நான் நுழையும்போதே பெரும் ஈர்ப்பாளராக அவர் இருந்தார்.
டாங்கே தான் கூறப்போகும் கருத்துக்கள் தன்னை அமைப்பிற்குள் மைனாரிட்டி ஆக்கிவிடும் என ஒரு போதும் கவலைப்பட்டதில்லை. சரி என உணர்ந்த ஒன்றிற்காக விடாமல் போராடுவார்.
1962 சீன ஆக்ரமிப்பின் போது , கட்சிக்கு நெருக்கடி உருவானது. கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி பலவீனப்படுத்த நினைத்தார்கள். டாங்கேவின் வழிகாட்டல், செயல் திட்டங்களால் கட்சி பல அவதூறுகளிலிருந்து காப்பாற்றப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்குதலிலிருந்து தற்காக்கும் போரை அவர் செய்தார். பூர்ஷ்வா அரசா - சோசலிச அரசா எதன் பக்கம் என்ற கேள்வியை இலாவகமாக அவர் கையாண்டு சோசலிச அரசே ஆனாலும் ஆக்ரமிப்பை ஏற்க முடியாதென்ற பாதையைக்காட்டி , இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தையே மீட்டார். சோவியத் கட்சி இந்தியா எனும் நண்பனா- சீனா எனும் சகோதரனா என தடுமாறியபோது, டாங்கேவின் விவாதத்திறனால் , சீனா ஆக்ரமிப்பு சரியல்ல என சோவியத் ஏற்று இந்தியா பக்கம் நிற்கலானது குறித்து , தோழர் சி ஆர் மட்டுமல்ல , நூலில் மொகித் உள்ளிட்ட மற்றவரும் விளக்கியுள்ளனர்.
இங்கு தோழர் சி ஆர் டாங்கே எழுதிய Neither Revisionism Nor Dogmatism Our Guide என்கிற விவாதத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்து அறிந்தவர்க்கு தெரியும்- டாங்கே போல ‘ரிவிசனிஸ்ட் ‘ என்கிற அவ முத்திரையை தாங்கியவர் வேறு எவருமல்லர் என்று.
கல்கத்தா சார்ந்த ரனேன் சென் இயக்கத்தின் மூத்தவரில் ஒருவர். டாங்கேவிடம் கொள்ளத்தகுந்த தள்ளத்தகுந்த அம்சங்கள் குறித்து அசை போட்டுள்ளார்.
1924 கான்பூர் சதி வழக்கில் பிரதான குற்றவாளியாக பிறருடன் டாங்கே முதலாக வைக்கப்பட்டிருந்தார். 1928 மீரத் சதியில் முசாபர் அகமது தலையாய குற்றவாளி யாகவும் மற்றும் டாங்கே உள்ளிட்ட 30 பேர்கள் மீது வழக்கு.
ரனேன் கருத்துப்படி ( சோவியத் குட்ஸ்போன் கருத்தில்) அஜாய் சாகாமல் இருந்திருந்தால், உடைவு தடுக்கப்பட்டிருக்கலாம் என்கிற ஊகம் நூலில் சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில் தோழர்கள் நம்பூதிரி, பாசு, ராமமூர்த்தி மூவரும் அஜாயுடன் மிகத்தோழமையாக இருந்தவர்கள்.
1964ல் பெரும் உடைவு என்றால் , பதிந்தாவிற்கு பின்னர் சிறு உடைவு ஏற்பட்டது. புதிய கட்சியிலும் மொகித் உடன் டாங்கே புதல்வி வேறுபட்டுப்போனதும் நடந்தது என்கிறார் சென்
தோழர் மொகித்சென் டாங்கே நூற்றாண்டு என்கிற சிறு கட்டுரையை அக் 15 1998 நியு திங்கிங் கம்யூனிஸ்ட் இதழில் எழுதியிருந்தார். மொகித் தரும் முக்கிய செய்தி, 1942 குவிட் இந்தியா போராட்டம் வரவேண்டாம், வந்துவிட்டால் கட்சி கலந்துகொள்வது நல்லது என்கிற கருத்தை டாங்கே தெரிவித்தார். இங்கு மொகித் எழுதியிருப்பது- “ஒருவேளை அன்று டாங்கே கருத்து ஏற்கப்பட்டு குவிட் இந்தியாவிற்கு எதிராக நிற்காமல் போயிருந்தால், கட்சி ‘இமேஜ் ‘ கூடியிருக்கலாம். துரோகப்பட்டம் ஒட்டப்பட்டிருக்க முடியாது.”
சோசலிஸ்ட்கள் அன்று பெரும் வீரர்களாக அந்த இடத்தை எடுத்துக்கொண்டதை வரலாறு குறித்துக்கொண்டது.
மொகித் எழுதுகிறார்- டாங்கே எப்போதும் சர்வதேசியம் என்பதற்காக இந்திய தனித்த தேசக்கட்சித்தன்மை என்பதை விட்டுவிடக்கூடாது என சொல்லி வந்தார். ஆனால் அவரது நிலைப்பாடு பல நேரங்களில் ஏற்கப்படாமல் போனது. மொகித் டாங்கேவின் பன்மொழி அறிவு குறித்தும் எழுதியுள்ளார். தாய்மொழி மராத்தி தவிர ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், உருது, பெங்காலி போன்றவற்றை அவர் அறிந்திருந்தார்.
டாங்கே சிறை வாழ்க்கை 12 ஆண்டுகள், 16 ஆண்டுகள், 18 ஆண்டுகள் என பலவாறு இந்நூலில் அவரவர் தெரிந்துகொண்டபடி சொல்லப்பட்டுள்ளது. எத்தனை ஆண்டுகள் என சமீபத்தில் வாழ்ந்தவர் வரலாற்றைக் கூட சரியாக சொல்ல முடியாத குறையை இந்நூல் காட்டுகிறது. 18 ஆண்டுகள் என்றால் - எக்காலம் எவ்வளவு ஆண்டுகள் என்கிற விவரத்தை வழங்க வேண்டிய பொறுப்பை கட்டுரையாளர்கள் எடுத்துக்கொள்ளாமல் போனது ஏனோ?
குடியரசுத் தலைவராக இருந்த ஆர் வெங்கட் ராமன், மராட்டிய அரசாங்கம் ஏற்பாடு செய்த வாழ்வில் பங்கேற்று தொழிலாளர் இயக்க பீஷ்ம பிதாமகன் பட்டத்தை அவருக்கு வழங்கினார். டாங்கேவின் பெருந்தொண்டை அவர் புகழ்ந்து பேசினார். 1946ல் பம்பாய் எம் எல் ஏ வாக இருந்து , 1957 நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளை குறிப்பிட்டார். நேருவிடம் டாங்கேவிற்கு இருந்த நல்லுறவை, தோழமையை ஆர் வி சுட்டிக்காட்டினார்.
நிலப்பிரபுத்துவம் என்பதை சட்ட வழியில் ஒழிக்க நேருவின் முயற்சியை பாராட்டுகிறேன். அதே போல் முதலாளித்துவ ஒழிப்பிற்கும் அவர் முயற்சி எடுக்கவேண்டும் என நேருவிடம் நேருக்கு நேர் டாங்கே சொன்னதை ஆர் வி நினைவு கூர்ந்தார்.
தோழர் கே எல் மகேந்திரா சில முக்கிய செய்திகளை சொல்கிறார். மகேந்திரா மட்டுமல்ல வேறு சிலரும் டாங்கேவின் ஆரம்ப திலகர் தொடர்பை சொல்கின்றனர். தனது சக தோழர்களிடம் “அந்த திலகரால் கெட்டுப்போனவன்ப்பா நான் “ என டாங்கே சொல்வாராம். திலகர் தான் கல்லூரி மாணவரான டாங்கேவை பம்பாய் பஞ்சாலை உள்ளிட்ட தொழிலாளர்களிடம் வேலை செய் என்றவர். அதை வாக்காக எடுத்துக்கொண்டு திலகரின் சீடராக தொடங்கியவர் மார்கஸ் லெனின் சீடராக அவர் மாறிப்போனதை நூலில் பலர் குறிப்பிடுகின்றனர்.
மகேந்திரா எழுதுகிறார்- சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தில் அவரால் தொழிலாளரை கொணர முடிந்தது. ரெட் யூனியன் அனுபவம் - மீண்டும் ஏ அய் டி யூ சி யில் சேர்ந்து பணியாற்றுவது என வந்தபோது, கம்யூனிஸ்ட் அல்லாத என் எம் ஜோஷி உள்ளிட்ட தலைவர்களுக்கும் நம்பிக்கை ஒன்றை டாங்கே ஏற்படுத்த நினைத்தார். ஒற்றுமைக்கான மருந்தாக அது அமைந்தது. அரசியல் தீர்மானங்களை 75 சத ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்ற முடியாது என்கிற நிலைப்பாடுதான் அது.
மகேந்திரா டாங்கேவிற்கு 18 ஆண்டுகள் சிறை வாழ்க்கை என எழுதியுள்ளார். டாங்கே கட்சிக்கு ஒவ்வாத, மார்க்சியப்படி சரிதானா என கேள்விக்கு உள்ளாகக்கூடியவற்றையும் பேசியுள்ளார் என மகேந்திரா பதிவு செய்கிறார்.
ரின் கப்பற்படை புரட்சி ஆதரவு அப்பீல் நகலை எழுதியது டாங்கே தான் என இந்நூல் தெரிவிக்கிறது.
மகேந்திரா அடுத்து தெரிவிப்பது டாங்கேவின் புகழ் வாய்ந்த two pillar policy- save the industry save the workers. இது குறித்தும் கம்யூனிஸ்ட்கள் மத்தியில் விவாதம் நடந்துள்ளது. எதற்கு பூர்ஷ்வாக்களின் ( பொதுத்துறை குறித்து தான் டாங்கே இம்முழக்கம் தந்தார்) லாப வேட்டைக்கு நம் காப்பு என்று கூட விவாதம் போனது. ஆனால் டாங்கேவின் முழக்கம் அனைவராலும் பின்னர் ஏற்கப்பட்டது. இந்திராவை அவர் புரட்சிகர ஜனநாயகவாதி என சொல்லியிருந்தார்.
முத்தரப்பு மாநாடுகளில் எல்லா தரப்பும் டாங்கே பேசுவதை கூர்மையாக கவனிக்கும் பழக்கம் இருந்ததை இந்நூல் பேசுகிறது.
பாசுதேவ் கங்குலி 1981ல் நிரந்தரமாக டாங்கே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதை சொல்லிவிட்டு, 1930ல் கூட அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செய்தியை தருகிறார்.
1930ல் மீரத் வழக்கில் உள்ளே இருந்த கட்சித் தோழர்கள் , காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தை விமர்சித்தனர். டாங்கே நேர்மறையாக அதை பார்க்க வேண்டும், பங்கேற்க வேண்டும் என்றாராம். வேறுபாடு ஏற்பட்டு அவர் தனியாகவும் , மற்றவர் இணைந்து கூட்டாகவும் தங்கள் defence யை செய்து கொண்டனர். இத்தருணத்தில் அவர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். 1935ல் அவர் மிகுந்த மரியாதையுடன் கட்சியில் வரவேற்கப்பட்டார் என்ற செய்தியை இந்நூல் தருகிறது. கங்குலி எழுதுகிறார்
The CPI leadership gave him punishment several times thro open scolding. During his various parts of his life he had to hear abuse like revisionists.
கங்குலி டாங்கே 16 ஆண்டுகள் சிறை வாழ்க்கை எனச் சொல்லி, இவரும் breakup கொடுக்காமல் செல்கிறார். பல்கேரிய சோசலிஸ்ட் அரசாங்கம் உயரிய டிமிட் ராவ் விருதையும், சோவியத் உயரிய லெனின் விருதையும் டாங்கேவிற்கு தந்தன.
பின் நாட்களில் சிபிஎம் பெரும் முன்னோடியான முசாபர் , டாங்கேவுடன் தோழமையாக இருந்த காலத்தில் 1921ல் காந்தி லெனின் எழுத 22 வயது இளைஞனுக்கு guts வேண்டும் என பாராட்டி சொன்னதை கங்குலி சொல்கிறார்.
1951 மாஸ்கோ ஸ்டாலின் சந்திப்பை அவசியமாக்கிய ஆவணமாக 3P இருந்தது என்கிறார் கங்குலி. இதை விரிவாக ஜகதீஷ் குப்தாவும் எழுதியுள்ளார். மூன்று பி என்பது அஜாய்கோஷ்- புருசோத்தம், டாங்கே- பிராபாகர், காட்டே- பிரகாஷ் . புருசோத்தம் பிராபகர் பிரகாஷ் என்கிற பி எழுத்து புனை பெயரில் Note on the Present Situation in Our Party என்று செப்டம்பர் 30 1950ல் எழுதப்பட்டதுதான் 3பி ஆவணம். 1948 ரணதிவே அதிதீவிரம், ராஜேஸ்வரராவ் சீனப்பாதை சூழலில் மாற்றாக வந்த ஆவணம். 1951 ஸ்டாலின் சந்திப்பிற்கு இரு பக்கத்திலும் இருந்து 4 தோழர்கள் அஜாய் , டாங்கே , சி ஆர் , பசவபுன்னையா சென்று உரையாடி விளக்கம் பெற்று வந்தனர். ஸ்டாலின் சுஸ்லோவ் வழிகாட்டலையும் கணக்கில் கொண்டு வந்ததுதான் பின்னரான 1951 திட்டம்.
கங்குலி சொல்வது the three Ps document created the foundation of the new programmes. Dange evolved line of unity and struggle.
பஞ்சனன் சட்டோ நினைவு கூர்கிறார். எனக்கு முன்னர் காங்கிரஸ்- ஜனசங்கம் என்கிற தேர்வு மட்டுமே இருந்தால் நான் காங்கிரசை தேர்ந்தெடுக்கவே சொல்வேன் என 1971ல் டாங்கே பேசினார். இதே கேள்வியை எங்களிடம் தோழர் ஓ பி குப்தா அரசியல் உரையாடல் போது வைத்தார். என் தொகுதியில் காங்கிரசும் ஜனசங்கமும் போட்டியிடுகிறது. நான் காங்கிரசிற்கே வாக்களிக்க வேண்டும். No Congress என்பதை எப்படி அங்கு அமுல்படுத்த முடியும் என குப்தா கேட்டார்.
தாருண் சன்யாலும் , கெளதம் சட்டோவும் டாங்கேவின் இலக்கிய அறிவை, கலை உணர்வை பேசுகின்றனர். தாகூர் சரத் சந்திரர் படிக்க அவர் பெங்காலி கற்றுக்கொண்டாராம்.
கெளதம் தரக்கூடிய வேறு செய்தி- எம் என் ராய் லெனினை கலந்து பேசி மூன்றாம் அகில 4 வது மாநாட்டிற்கு சுபாஷ், டாங்கே, சிரஞ்சன் ( சி ஆர் தாஸ் மகன்) , சசீந்திர நாத் சன்யால் ( இவரது பேரன் சன்யால் மிக முக்கிய வலது சாரி அறிஞர் இப்போது) , உபேந்திர பானர்ஜி அழைத்திருந்தார். எவரும் போக முடியவில்லை. லெனின் டாங்கேவின் காந்தி லெனின் , சோசலிஸ்ட் பத்திரிகைகளை அறிந்திருந்தார் என்கிற செய்தியையும் இந்நூல் தருகிறது. சுபாஷ் தனது indian struggle நூலில் டாங்கே குறித்து எழுதியுள்ள செய்தியை கெளதம் தருகிறார்.
AIBEA பிரபாத்கர் பர்வானா, NFPTE குப்தா ஞானையா , எல் ஐ சி நாச்னே போன்றவர்களுக்கு அவ்வப்போது ஆலோசனை சொல்லி உற்சாகப்படுத்தியவராக டாங்கே இருந்துள்ளார். வங்கி இயக்க தோழர்களுக்கு துணையாக டாங்கே இருந்தது பற்றி ஜகதீஷ் சொல்கிறார். டாங்கேவின் கட்டுரையான computer or man eater எல் அய் சியில் போராட்டம் தீவிரமாக உதவியது. இன்று அவர் இருந்தால் இதை எப்படி மீளாய்வு செய்திருப்பாரோ?
1962ல் அஜாய் மறைந்தவுடன் அடுத்த பொதுச் செயலர் டாங்கே என்ற கருத்து பலமாக வந்தது. பின்னால் சிபிஎம் தொடங்கிய தோழர்கள் எதிர்ப்பை கணக்கில் கொண்டு இ எம் எஸ் பொதுச் செயலர், டாங்கே சேர்மன் ( புதிய பதவி) என்கிற சமரசம் கட்சி உடைவை அப்போது தற்காலிகமாக தடுத்தது. பொறுப்பேற்ற இருவரும் கல்கத்தா தோழர்களை சந்திக்க வந்தனர். டாங்கே கெளரவக்குறைவாக கல்கத்தாவில் நடத்தப்பட்டார் என்கிற செய்தியை ஜகதீஷ் தருகிறார்.
சுப்ரத பானர்ஜி சுவையான தகவலைத் தருகிறார். 1946ல் கட்சியில் சேர்ந்த போது , அலுவலகத்தில் ஜோஷி, ரணதிவே, டாங்கே இருந்தனர். ஜோஷியுடன் பழக்கம் , நெருக்கம் ஏற்பட்டது. கட்சியில் குழு இருப்பது தெரியாது. ரணதிவே 1948ல் ஜோஷி கோஷ்டி என அவரை நீக்கிவிட்டாராம். என்ன ஏது எனத் தெரியாத போதே நீக்கம் என பானர்ஜி சொல்கிறார். நாசிக் சிறையில் டாங்கேவிற்கு அடுத்த செல் பானர்ஜிக்கு. செல் கமிட்டி உருவாக்கப்பட்டு செயலராக்கப்படுகிறார் இளம் பானர்ஜி. அப்போது டாங்கே தைரியத்தை கொடுத்தாராம். Only one who does not do anything makes no mistakes என்கிற நம்பிக்கை கொடுத்தாராம்.
தலைமறைவு கட்சியோ சிறை அதிகாரியுடன் மோதலை செய்க என அறிவுரை செய்தது. டாங்கே சரியல்ல என்பாராம்.
கட்சி தோழர்களுக்கு மார்க்ஸின் காபிடலை அத்தியாயம் அத்தியாயமாக சிறையில் டாங்கே விளக்கி சொன்னதாக பானர்ஜி எழுதியுள்ளார்.
கட்சி லைன் பற்றி சில தோழர்கள் சிறையில் கேள்வி எழுப்பும்போது டாங்கே அமைதி காத்தாராம். வற்புறுத்திய போது பானர்ஜியிடம் அவர் தெரிவித்தாராம். நான் என் கருத்தை சிறையிலிருந்து சொன்னால் , கட்சி உடையலாம். தேவையில்லை என்றாராம். மே வ இதழ் ஒன்றில் ரவிந்திரநாத் தாகூரை கம்யூனிஸ்ட் தோழர் ரீஆக்ஷனரி என்று விமர்சித்ததைப் பார்த்து பானர்ஜி சிறையில் பொங்கியுள்ளார். பதில் எழுத வேண்டும் என்றார். அப்படியானால் நீ உன் கருத்தை பார்ட்டிக்கு எழுது என டாங்கே வழிகாட்டினாராம். சிறையில் தாகூரின் ஆக்கம் குறித்து டாங்கே தோழர்களுக்கு எடுத்துச் சொன்னாராம்.
பானர்ஜியை அவரது துணைவியார் கைக்குழந்தையுடன் சிறைச்சாலையில் பார்க்க வந்தபோது , டாங்கே துணவியார் உஷா தாய் உதவினார் என்பதையும் சொல்கிறார் பானர்ஜி. சிறையில் போலீஸ் துப்பாக்கி சூடு நடந்த போது அனைத்து தோழர்களின் காப்பை உறுதி செய்து பின்னர்தான் டாங்கேவும் பானர்ஜியும் செல் நுழைந்தனர். இரண்டு குண்டுகள் தாக்குதலிலிருந்து தப்பித்தார் நாசிக் சிறையில் டாங்கே என பானர்ஜி எழுதுகிறார். நீங்கள் இவ்வளவு ரிஸ்க் ஏன் எடுத்தீர்கள் எனக் கேட்டபோது டாங்கே சொன்னாராம்
I was trying to find out whether I had really become a coward and comfort living . பெரிய உள் சோதனையை டாங்கே செய்திருப்பதை, அவரது சொல்லும் செயலும் காட்டுகின்றன.
பம்பாயின் தொழிலாளிவர்க்கமும் கல்கத்தாவின் மத்தியதரவர்க்கமும் சேர்ந்துவிட்டால் இந்தியாவில் புரட்சி நடக்கும் பானர்ஜி என நம்பிக்கையை டாங்கே தெரிவித்தாராம்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் இரண்டறக் கலந்தவராக டாங்கே நல் வாழ்வு நடத்தி மே 22 1991ல் மறைந்தார். அவரை ஓரளவிற்கு இந்நூல் வழி அறிமுகம் செய்திட டாங்கேவின் 125ல் முயற்சி செய்துள்ளேன்.
30-10-2024
Comments
Post a Comment