Skip to main content

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று குறிப்புகள்

 

‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று குறிப்புகள்’ என்கிற கச்சிதமான நூல் 1976 ல் தமிழில் கொணரப்பட்டது. இ.க.கவின் 50 ஆண்டுகளையொட்டி ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்த நூல். இந்திய இடதுசாரிகளின் எழுத்து கிடங்கில் இருக்கின்ற முக்கிய நூலாக இதைக் குறிப்பிடலாம்.  237 பக்க நூல்தான். சிலமணிநேரம் செலவு செய்யக்கூடிய எவரும் படித்துவிடமுடியும்.

1917 அக்டோபர் புரட்சி தாக்கம் தொடங்கி 1964 ல் இயக்கம் சிபிஅய்- சிபிஅய் எம் என  பிளவு நேர்ந்த காலம் வரையிலான வரலாறு , சிறு குறிப்புகளாக இந்நூலில் இடம் பெற்றுள்ளது.  இயக்க வரலாறு   அறிந்த மூத்தவர்கள் இந்நூலை பலமுறை படித்திருக்கக்கூடும். 

காலப்பகுப்பாக 1917-29, 1929-41, 1942-51, 1951-64 என்று வகைப்படுத்திக்கொண்டு சோவியத் தாக்கம், கோமிண்டர்ன், காங்கிரஸ் இயக்கம்- காந்தி, எம் என் ராய் உள்ளிட்ட வெளிநாடு வாழ் மூத்தவர் செயல்பாடுகள், நேரு சுபாஷ் உள்ளிட்ட காங் இடது பிரிவு, காங் சோசலிஸ்ட்கள், பிரிட்டிஷ் ஆட்சி அதிகார அடக்குமுறைகள், தொழிலாளர் விவசாயி போராட்டங்கள், மாணவர் பெண்கள் இயக்கங்கள், இப்டா மேடை என்கிற சூழல்களுடன் கட்சியின் ஊடாட்டம் பின்னப்பட்டு இவ்வரலாற்று பிரதி  குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன.

கட்சி அமைத்தல் சிந்தனைகள் -  ஆங்காங்கு குழுக்கள்  என்பதிலிருந்து  முழு நேர கட்சி உருவாதல் என்கிற பரிணாமம் சொல்லப்பட்டுள்ளதை வாசிப்பவர் உள்வாங்கமுடியும்.

வெளிநாட்டில் தாஷ்கண்டில் 1920 அக்டோபர் எழுவர் முயற்சி,  இந்திய நகரங்களில்  சோவியத் புரட்சி , மார்க்சிய  தாக்கத்தில் , வெளிநாடுகளிலிருந்து வந்து போனவர், தங்கி பணியாற்றியவர், தொடர்புகள், இரகசிய செயல்பாடு, தொழிலாளர்விவசாயி கட்சி அமைத்தல், 1925 டிசம்பரில் நேரிடையாக கம்யூனிஸ்ட் கட்சியை நாட்டிற்குள்ளாக அமைத்து நாட்டு மக்களுடன் செயல்படுதல் , அப்படி துணிச்சலாக முன்வந்த அன்றைய இளைஞர்கள், இன்று நூற்றாண்டைக் கண்ட மூத்தவர்களின் செயல்பாடுகள்- நேர்ந்த தவறான  புரிதல்கள், வளர்ந்த  சோவியத் பிரிட்டிஷ் சீன கட்சியின் இடித்துரைப்புகள் என  நகர்ந்த ஆரம்ப ஆண்டுகள்.

கோமிண்டர்ன் உடன் உறவென்ன, இணைப்பா, அறிவுரைகளை எந்த அளவில் எடுத்துகொள்வது- போடப்பட்ட கான்பூர் மீரத் சதி வழக்குகளை சந்தித்து மீளல், பிரதான காங்கிரசுடன் உறவென்ன- அது முதலாளித்துவ ஜனநாயகத்திற்காக நின்றால், நாட்டின் விடுதலையை சோசலிச சோவியத் என்பதாக மாற்றுவது எப்படி போன்ற பல கேள்விகள் - சரி என நினைத்த பதில்கள்- தவறாகிவிட்டதே- குறைகள் தெரிகிறதே என்கிற rectification என வரலாற்று கட்டங்கள் நகர்தல்.

1930 களின் இறுதி துவங்கி வெளித்தெரியும் வகையிலான legalised party -  ஜோஷி  தலைமையிலான செயல்பாடுகள், தடை - குவிட் இந்தியா காலம்- தடை நீங்கல்- நேரிட்ட தவறான அணுகுமுறைகள், விடுதலையா வெறும் அதிகார மாற்றமா என்கிற கேள்விகள், பாகிஸ்தான் முஸ்லிம் தனி தேசிய இனம் என்கிற அதிகாரி தீசிஸ், இல்லை தவறாக புரிந்து கொண்டோம் என்கிற மறுபார்வைகள் என இக்காலம் நகர்வதைக் காணலாம்.

ரணதிவே கால இடது அதி சூத்திர கல்கத்தா 1948 மாநாடு, சரி செய்து சீனப்பாதை என்கிற சிறு கால ராஜேஸ்வரராவ் சோதனை, பின்னர் அஜாய்கோஷ்  வரவு- தொடர் செயல்பாட்டுக்காலம்- தேர்தல் பங்கேற்பு வெற்றி தோல்விகள், கேரளா இ எம் எஸ் ஆட்சி சோதனை- கலைப்பு, நேரு குறித்த விமர்சன மற்றும் நேரிய பார்வைகள், சீனா தொடுத்தப் போர், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் விவாதம், உலக கம்யூனிஸ்ட் இயக்க மாறுபாடுகள் போன்ற சூழலில் கட்சிக்குள் பெரும் ஓயா விவாதங்கள்- சி பி எம் உருவாதல், அவரவர் தனித்துக்கூடி  தங்களுக்கான திட்டங்களை வரைதல் என்பதுவரை இந்நூல் செல்வதை  உணரமுடியும்.

இந்நூலை பெரும் கட்சி அறிஞர்களாக பார்க்கப்பட்ட தோழர்கள் அதிகாரி, மொகித்சென், பருக்கி, சின் மோகன், அவ்தார் சிங் போன்ற பலர் காலம் பிரித்துகொண்டு எழுதியுள்ளனர்.

மேலே சொன்னவை மிக மிக சிறிய அறிமுகமே. இந்நூலின் ஆசிரியர்களும் இந்த 50 ஆண்டு குறிப்புகள் முழு வரலாறல்ல என்றே தெரிவித்துள்ளனர்.  

வால்யூம்களாக  ‘டாக்குமெண்ட்ஸ்’ தொகுப்புகள் இக்காலத்திற்கு வந்துள்ளன. தோழர்கள் அதிகாரி , எம் பி ராவ் , மொகித் சென் போன்றோர் பெரும் உழைப்பில் அந்த தொகை நூல்கள் வந்தன. அவற்றை திருவிக கல்லூரி நூலகத்தில் பேரா ராமசாமி உதவியால் அப்போது வாங்கி வைக்க முடிந்தது.

Archives என்கிற இணைய தளத்தை ஏனோ மூடிவிட்டார்கள். அதில் சில வால்யூம்கள் கிடைத்தன. ஆய்வு மனமும் கூடுதல் வேட்கையும் கொண்டவர் அவ்வால்யூம்களை தேடி தெரிந்துகொள்ள முயற்சிக்கலாம். 

60 ஆண்டுகள் போது சில பிரசுரங்கள், கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் வந்தன. 80 ஆம் ஆண்டில் தமிழில் தோழர் பரதன் எழுதியதும், தேவ பேரின்பன் எழுதியதும் வந்தன.

சிபிஎம் தன் வால்யூம்களை 1964யைக் கடந்தும் கொணர்ந்தனர். சிபிஎம் எல்,  சோசலிஸ்ட்கள், அரசு உளவுத்துறையினர் என பலர் அவர்களுக்கு கிடைத்தவற்றை தொகுத்துள்ளனர்.  தனி நபர்களாக எம் என் ராய், எம் பி டி ஆச்சார்யா, செளமேந்திர தாகூர் , முசாபர் அகமது, பிலிப்ஸ்பிராட்  போன்றோர் எழுதியவையும் இருக்கின்றன. ஆங்கில புத்தகங்கள் சிலவும் வந்துள்ளன.

மேலே சொன்ன நூலை முதல் 50 ஆண்டுகள் என்கிற காலப்பகுதிக்கான நூலாக கொள்ளலாம். அதில் சில முக்கிய புள்ளிகளை உய்த்துணரலாம்.

-1920 அக்டோபரா அல்லது 1925 டிசம்பரா என்பதில் புரிதல்- ஏன் அப்படி என்கிற விளக்கம்

 ⁃ கருத்துக்களை வழிகாட்டலை எங்கிருந்து வேண்டுமானாலும் ( சோவியத், பிரிட்டன் கம்யூனிஸ்ட்களிடம்) பெறவேண்டிய சூழல் இருந்தாலும், இங்கு இந்தியாவில் இருந்துகொண்டு வெகுஜனங்களிடம் வேலை என்கிற எதார்த்தம் உணர்தல்

 ⁃ ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப்போரில் - சோசலிச அரசு என்கிற ஒரே தாவலா அல்லது இரு கட்ட நகர்வா - விடுதலை அரசியல் ஜனநாயகம் , அடுத்த சோசலிச நகர்தல் குறித்த  புரிதல்

 ⁃ ஏகாதிபத்திய எதிர்ப்பில் சுயேட்சையான முன் முயற்சிகள் தேவை என்றாலும், பரந்த காங்கிரஸ், இன்னும் உதிரிகளுடன் சேர்ந்து செல்லவேண்டிய அவசியம் உணர்தல்

 ⁃ காங்கிரசின் போதாமை குறித்த விமர்சனங்களுடன், தங்கள் போதாமைகளையும் அவ்வப்போது உணர்தல்

 ⁃ 1947 ஆகஸ்ட் வெறும் அதிகார மாற்றம் என்பதிலிருந்து  சுதந்திர இந்தியா - விடுதலை இந்தியா என்கிற புரிதல்

 ⁃ தேர்தல் பூர்ஷ்வா முறை என்பதாக உணரப்பட்டாலும், தேர்தலில் நாடாளுமன்ற  சட்டமன்றங்களில் பங்கேற்றல்

 ⁃ பல கட்சி ஆட்சி முறை இந்திய சூழலை ஏற்றல், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதை விடுதல், அமைதி வழி வாய்ப்புகளை ஏற்றல்

 ⁃ தேசிய சுயநிர்ணய உரிமை என்பதை ‘கட்டாயமாக பிரிந்து செல்தல்’ என புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை, மொழிவழி மாநிலங்கள் அதன் அதிகாரங்களை விரிவுபடுத்தல் 

 ⁃ காங்கிரசிற்கு மாற்று எனப்பேசும்போது , காங்கிரசை நம்பி செல்கின்ற ஜனநாயக சக்திகளிடமும் நம்பிக்கையை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்தல்

 ⁃ இந்திய நிலைமைகள் பற்றிய புரிதலை, பிற நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளைவிட , இந்திய கம்யூனிஸ்ட்கள் சரியாக சொல்ல முடியும்- அதற்கான சுயேட்சையான ஞானம் இருப்பதை அறிவித்தல் 

போன்ற சில அம்சங்களை பட்டியலிட முடியும். இந்நூல் ஒவ்வொரு பகுப்பாய்வு காலத்திற்குமான சில முக்கிய  கொள்கை அறிக்கை டாக்குமெண்ட்கள் குறித்தும், அவற்றில் இருந்த சில தவறான புரிதல்கள் பற்றியும் ஆங்காங்கே சொல்லிச் செல்லும்.

இதுவரை வாசிக்காதவர்  வாசித்து பார்க்கலாம்.

21-10-2024


Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா