Skip to main content

இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றை

 CPI (M) கட்சியின் ஹைதாராபாத் கட்சி காங்கிரஸ் 2002ல் நடந்தது. கல்கத்தாவிலிருந்து ‘இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றை ‘ முறைப்படுத்தி உருவாக்கிட கமிஷன் அமைத்தனர். அவர்கள் உழைப்பில் உருவான முதல் தொகுதி 2005 ல் வந்தது. தமிழில் ‘இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு - ஆரம்ப கால ஆண்டுகள் 1920-1933’ என 2006 ல் 396 பக்கங்களில் கொணர்ந்தனர்.

ஒன்றுபட்ட சிபிஅய்யில் 1958 அமிர்தசரஸ் காங்கிரசிலேயே அதிகாரி பொறுப்பில் வரலாறு எழுதும் பணி சொல்லப்பட்டது. 1963ல் கமிஷன் போடப்பட்டாலும், அப்போது உச்ச விவாத நிலை இருந்தது. பிளவிற்கு பின்னர்தான் தோழர் அதிகாரி போன்றவர்களின் அயரா உழைப்பில் 1971 துவங்கி வால்யூம்கள் வரலாயின.
சிபிஎம்மின் இந்த முதல் தொகுதியில் 10 அத்தியாயங்கள் கட்டப்பட்டிருக்கும். இந்தியாவிலும், வெளிநாடுகளில் வாழ்ந்த இந்திய புரட்சியாளர்களிடத்திலும் சோவியத் புரட்சியின் தாக்கம் விரிவாக் பேசப்பட்டிருக்கும். 1920 அக்டோபரில் எம் என் ராய் , ஆச்சார்யா உள்ளிட்ட 7 பேர்களால் அமைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து சொல்லப்பட்டிருக்கும். இக்கூட்டம் பற்றி நடவடிக்கை குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை ( பக் 93) என்பதும், தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை துர்க்கிஸ்தானில் பதிவு செய்ய முடிவு என்பதும் பதிவாகியிருக்கும்.
அக்காலத்தில் கம்யூனிஸ்ட் அகிலம் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு குழுவாக மட்டுமே அங்கீகரித்திருந்தது.. 1917-21 ஆண்டுகளில் ஸ்தாபன ரீதியான கம்யூனிஸ்ட் நடவடிக்கைகள் இந்தியாவில் சிறிய அளவில்கூட நடைபெற்றதாகத் தெரியவில்லை. (பக் 96)
தாஷ்கண்டில் கட்சி அமைக்கப்பட்டதை தொடர்ந்து பம்பாய், கல்கத்தா, சென்னை, லாகூர், கான்பூர் போன்ற பல இடங்களில் கம்யூனிஸ்ட் குழுக்கள் தோன்ற ஆரம்பித்தன ( பக் 97)
4வது அத்தியாயம் ‘கான்பூர் கம்யூனிஸ்ட் மாநாடு’ என்கிற தலைப்பிலானது. 40 பக்க அளவில் இதில் செய்திகளை தந்துள்ளனர். இந்நூலை முழுமையாக படிக்க முடியாதவர், இந்த 40 பக்க அத்தியாயத்தையாவது படித்துப்பார்க்கலாம்.
கான்பூர் சதி வழக்கு பின்னணியில் , அந்தப் பட்டியலில் இருந்து பின்னர் நீக்கப்பட்ட சத்ய பக்தா பற்றி இதில் சிறிய குறிப்பு கிடைக்கும். சிபிஅய் தொகுத்த வரலாற்று ஆவணத்திலும் சத்ய பக்தா குறித்து தோழர் அதிகாரி செய்திகளை தந்திருப்பார். சதி வழக்கு விசாரணையின் போது டாங்கே, முசாபருக்கு சிறு உதவிகளை சத்யா செய்தது, கான்பூரில் சோசலிச புத்தக நிலையம் அமைத்தது, பத்திரிகைகள் நடத்தியது ஓரளவிற்கு சொல்லப்பட்டிருக்கும்.
சத்ய பக்தாதான் கான்பூரில் காங்கிரஸ் மாநாடு நடந்த நேரத்தில் , கம்யூனிஸ்ட்களின் மாநாட்டை நடத்த அழைப்பை அனுப்பியவர். அவரது செயல்பாடுகள் குறித்து இந்த அத்தியாயம் கொஞ்சம் பேசியிருக்கும். ஹஸ்ரத் மொகானியுடன் இணைந்து டிசம்பர் 26-28, 1925ல், சிங்காரவேலர் தலைமையில் 500 பேர் பங்கேற்ற மாநாட்டை நடத்த சத்ய பக்தா எடுத்த முயற்சிகள் சொல்லப்பட்டிருக்கும். தேசியம் - சர்வதேசியம் , அகிலத்துடன் இணைப்பு பிரச்சனையில் கருத்து வேறுபாடுகள், எம் என் ராய் சத்ய பக்தா குறித்து செய்த விமர்சனங்கள் என கொஞ்சம் செய்திகள் இதில் இருக்கும்.
சக்லத்வாலா தலைமை தாங்க வரமுடியாமல் போனதால், சிங்காரவேலர் தலைமை ஏற்றார். ஹஸ்ரத் மொகானி வரவேற்பு உரை முன்னரே தயாரித்து அளிக்கப்படவில்லை . சுயராஜ்யம், பின்னர் சோவியத் முறையில் கட்டுமானம் என அவர் பேசினார். சத்ய பக்தா போல ஹஸ்ரத் மொகானியும் சுயேட்சைத்தன்மையை வலியுறுத்தினார்- ‘ நமது கட்சி கலப்படமற்றவகையில் இந்தியத் தன்மையுடன் அமைந்திருக்கும். தற்போதைக்கு நடவடிக்கைகள் இந்திய நாட்டின் வரம்புக்குள்ளேயே அமைந்திருக்கும் என அவர் பேசினார்.
“தலைவர் சிங்காரவேலுச் செட்டியாரும் இதே கருத்தை எதிரொலித்தார். ‘ இந்திய கம்யூனிசம் போல்ஷ்விசமல்ல. போல்ஷ்விசம் இந்தியாவுக்குத் தேவைப்படாது..நாம் உலகக் கம்யூனிஸ்ட்களுடன் சேர்ந்து நிற்கிறோம். ஆனால் போல்ஷ்விசத்துடன் அல்ல’ ( பக் 163)
சத்யபக்தா பாணி கம்யூனிசத்துக்கு மாநாட்டில் ஆதரவு கிடைக்கவில்லை ( பக் 163)
மாநாடு முடிவதற்கு முன்பாகவே சத்ய பக்தா வெளியேறிவிட்டதாக முசாபர் அகமது தன் வரலாற்றில் தெரிவித்துள்ளார். தன் ஏடுகளையெல்லாம் கதர் பையில் போட்டுக்கொண்டு பக்தா வெளியேறிவிட்டார். ( பக் 165)
இந்தியாவில் உள்ள எந்தவொரு வகுப்புவாத அமைப்பிலும் உறுப்பினராக உள்ள ஒருவர் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினராக அனுமதிக்கப்பட மாட்டார் என்கிற விதியை ஏற்றது முக்கியமானதாக பின் நாட்களில் இர்பான் ஹபீப் புகழ்ந்து சொன்னது , சொல்லப்பட்டிருக்கிறது.
1926, 1927 நடவடிக்கைகள் இந்த் அத்தியாயத்தில் சற்று சொல்லப்பட்டிருக்கும். 1927 ல் இந்தியா வந்த சக்லத்வாலாவை மாநாட்டிற்கு வர காட்டே அழைத்திருந்தார். சக்லத்வாலா மறுத்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. காரணம் அகிலத்துடன் இணைக்கப்படாமை என்பதை முசாபர் சுட்டிக்காட்டி ராய்க்கு கடிதம் ஜனவரி 19, 1927ல் எழுதியதும், காட்டேவும் பாகர்ஹட்டாவும் சக்லத் நிலைப்பாட்டை கண்டனம் செய்ததும் சொல்லப்பட்டுள்ளது ( பக் 181) . இந்த விவரத்தை அதிகாரி தொகுத்த வால்யூமிலிருந்து எடுத்துக்கொண்டுள்ளனர்.
சக்லத்வாலாவும் சமாதானம் செய்யும் வகையில் காட்டேவிற்கு ஜன 18 , 1927ல் , சரியான முறையில் அங்கீகரிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி உதயமாகும் எனில் , உதவத் தயார் என்கிற பொருளில் எழுதினார் . இதற்கு முன்னரே ஜன 16-18 செயற்குழுவில் முசாபர், பாகர்ஹட்டா, நிம்ப்கர், கிருஷ்ணசாமி அய்யங்கார், சம்சுதின் கலந்துகொண்டு சக்லத்வாலாவின் பத்திரிகை செய்தியை கண்டித்து தீர்மானம் போட்டனர் ( பக் 183)
1925 டிசம்பர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்கு சென்னையிலிருந்து சிங்காரவேலர், கிருஷ்ணசாமி அய்யங்கார், காமேஸ்வர் ராவ் கலந்துகொண்டுள்ளனர்.
அம்மாநாட்டில் கலந்து கொண்ட , தொடர்பில் இருந்த இளைஞர்கள் பலர் பின் நாட்களில் பெரும் தலைவர்களாக மாறினர். முசாபர், காட்டே, சிங்காரவேலர், ஒரு வகையில் அப்போது சிறையில் இருந்த டாங்கே என குறிப்பிடலாம். சென்னை மாகாணத்திற்கு provincial கமிட்டி பொறுப்பாக்கப்பட்ட கிருஷ்ணசாமி குறித்து செய்திகள் தென்படவில்லை. அவர் ராஜாஜி உறவுக்காரர் என எப்போதோ பார்த்த செய்தி நினைவில். கிருஷ்ணசாமி காமேஸ்வர் எல்லாம் பின் நாட்களில் என்ன ஆனார்கள் என என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை.
அழைப்பு விடுத்த சத்ய பக்தா அப்போது 28 வயது இளைஞர். கலந்துகொண்ட பலரும் இளம் வயதினர் தான். சிங்காரவேலருக்குதான் வயது 65. உளவுத்துறை அவர் வயது 1927 ல் 51 என செய்தி அனுப்பியது. சத்யா பக்தா 1985 வரை வாழ்ந்துள்ளார். 1924 ல் அவர் கான்பூரில் உ பி யை மய்யமாக வைத்து 50 பேர்களுடன் Indian Communist Party நடத்தி வந்தார். அந்த அமைப்பு பெயரில்தான் , 1925 டிசம்பர் மாநாட்டிற்கு அழைப்பும் விடுத்தார். சிபிஅய் என்கிற பெயர் மாற்றத்தை ஏற்றார். மேற்கூறிய நூலில் பக் 385 ல் எழுதப்பட்டிருப்பது( வாழ்க்கை வரலாற்று சிறு குறிப்புகளில்)
“மாநாட்டைவிட்டு வெளியேறிய இவர் அரசியல் அரங்கத்திலிருந்தே முழுமையாக காணாமல் போய்விட்டார் “
சத்ய பக்தா 1925- 1985 வரை என்ன செய்தார்- இந்து கம்யூனிஸ்ட் என அவர் பற்றி சில செய்திகள் வந்தன. இந்தியில் அவர் எழுதியவை இருப்பதான தகவல் உள்ளன. சில கட்டுரைகள் அவர் பற்றி இருக்கின்றன. உளவுத்துறை சார்பில் கயே, பெட்ரி எழுதிய நூல்களில் சத்ய பக்தா குறித்து சில செய்திகள் கிடைக்கின்றன.
நாம் சக்லத்வாலாவை அழைக்க வேண்டும் என்றால் நமக்கு மாநாட்டு செலவிற்கு ரூ 3000 தாண்டி தேவை என அவர் தோழர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார். துணைக்கு நிற்பார் என நினைத்த மொகானி கிலாபத் மாநாட்டிற்கு ( அதுவும் இன்னும் பல குழு இயக்கங்களின் மாநாடும் கான்பூரில் அப்போது நடந்தன) வேலையில் கவனமாகிவிட்டார். அக்கம் பக்கத்து விவசாயிகள் உழைப்பாளரை 500 பேரை திரட்டி காங்கிரஸ் பந்தலில் செலவில்லாமல் செய்ய நினைத்த சத்ய பக்தாவிற்கு அனுமதி கிடைக்காமல் ஏமாற்றமே கிடைத்தது. முசாபருக்கு கூட அவர் ரூ 30 முன்பணம் அனுப்பியே கான்பூர் மாநாட்டிற்கு அழைத்திருந்தார். அகிலத்திடம் , வெளிநாட்டு இயக்கங்களிடம் பணம் பெறலாமே என வந்த ஆலோசனைகளை சத்ய பக்தா நிராகரித்துள்ளார். அது கட்சிக்கும் தோழர்களுக்கும் அவப்பெயரை உருவாக்கும் எனச் சொல்லியுள்ளார். இரகசிய செயல்பாடா வெளிப்படையா என்பதில் நிலைமைக்கேற்ப என அவர் இலகுவாக பேசியிருக்கிறார்.
கான்பூர் மாநாட்டில் ஒத்த நிலைப்பாட்டை party with national restriction , போல்ஷ்விசமல்ல , தலைமையகம் ஏன் பம்பாய்க்கு மாற்றவேண்டும் போன்றவற்றில் - சத்ய பக்தாவுடன் ஹஸ்ரத் மொகானி, சிங்காரவேலரும் சேர்ந்தே எடுத்தனர்.
1926ல் கல்கத்தாவில் கூடிய தோழர்கள் சத்ய பக்தாவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என முடிவெடுத்தனர். சிங்காரவேலருக்கு தன் வறுமை நிலையை சொல்லி இனி கான்பூரில் இருந்து பணி செய்ய முடியுமா , தெரியவில்லை என 1926 ல் சத்ய பக்தா கடிதம் எழுதிய செய்தி கிடைக்கிறது. எம் என் ராய் மொகானி, சிங்காரவேலர், சத்ய பக்தா மூவர் குறித்தும் விமர்சித்து எழுதலானார். முதலாளித்துவ எதிர்ப்பு, விவசாயி தொழிலாளர் அணி என்பது குறித்து அவர் கட்டுரைகள் எழுதினார். புகழ் வாய்ந்த வகுப்புவாத கலவரத்தில் உயிரை கொடுத்த கணேஷ் சங்கர் வித்யார்த்தி சத்யாவிற்கு துணையாக நின்ற செய்தியும் உள்ளது. அவர் பகத் சிங்கிற்கும் உதவியவர். டாங்கேவின் சோசலிஸ்ட் இதழுக்கு நிருபராக சத்ய பக்தா இருந்துள்ளார்
தொடங்கிய கட்சியில் வேறுபாடு ஏற்பட்டு இரு பிரிவாகி விட்டீர்களே எனக் கேட்டவர்களிடம், இல்லை ஒரே கட்சி தான்- two wings ours national, theirs international என சத்ய பக்தா பதில் சொன்ன செய்தியை பெட்ரி தருகிறார். சில மாதங்கள் மட்டும் தனித்து உபியில் ராதாமோகன் ஹஸ்ரத் துணையுடன் கட்சி நடத்திவிட்டு அவர் சோர்ந்ததாக தெரிகிறது.
1924 செப் சத்ய பக்தா ஆரம்பித்த Indian Communist Party - காலத்தில் quarterly report என சேர்ந்த உறுப்பினர் பெயர்கள் எண்ணிக்கை, வசூலித்த பணம், ஆன செலவு என எழுத்துபூர்வமாக உறுப்பினர்களுக்கு, பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ளார். இப்படி சில செய்திகளை அவர் குறித்து பார்க்க முடிந்தது.
பெரிய இயக்கத்தின் வரலாற்றின் துவக்கத்திற்கு கால்கோள் நட்ட சத்ய பக்தா , வரலாற்றிலிருந்து தன்னை வெளியேற்றிக்கொண்ட அல்லது வெளியேற்றப்பட்ட சோகமும் நடந்தேறியது. சத்தியத்தின் பக்தன் என்கிற புனைப்பெயர் சூட்டிக்கொண்ட அம்மனிதரின் கதை குறித்து அறிய கொஞ்சமாவது இந்தி மொழி அறிவு வேண்டும்.என்னிடம் அது இல்லை.
6-11-2024

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...