புதிய மின் நூல் இணைப்பில்
ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம்
தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்
அக்டோபர் 2, 2024 காந்தி ஜெயந்தி நிகழ்வுகளில் ஒன்றாக ‘ இந்திய சுயராஜ்யம்’ குறித்த உரை ஒன்றை வழங்க காந்தி கல்வி நிலைய நண்பர்கள் வாய்ப்பு தந்தனர். பலவேறு காந்திய அமைப்புகள் உடன் நின்றன.
காந்திய அன்பர் திரு மோகன் அவர்கள் தலைமையில் அவ்வுரை நிகழ்த்தப்பட்டது. திரு சரவணன் அவர்கள் (திரு அண்ணாமலை உள்ளிட்ட பெரியோர்களை கலந்துபேசி) இப்பணியை எனக்கு இட்டிருந்தார். முன்னரே ‘ஹிந்த் ஸ்வராஜ்’ படித்த நேரங்களில் சிறு கட்டுரைகள் எழுதியிருந்தது நினைவில் இருந்தாலும், விரிவான மீள் வாசிப்பு ஒன்றை செய்து பார்க்கவேண்டிய அவசியத்தை நான் உணர்ந்தேன்.
‘இந்திய சுயராஜ்யம்’ தமிழ் பிரதிகளில் பரலி நெல்லையப்பர், வேங்கடராஜுலு, டாக்டர் ஜீவானந்தன் மூவரின் மொழிபெயர்ப்பையும் முன்னர் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் இணையத்தில் கிடைத்த ஆங்கிலப் பிரதியையும் வாசிக்க முடிந்தது. மூலப்பிரதியை வாசித்தால் மட்டும் போதாது என்கிற தொந்தரவு ஏற்பட்ட நேரத்தில் அந்தோணி பரேல் உதவியிருந்தார். சிபி ஜோசப் தொகுப்பையும் பாதியளவில் அப்போது படித்த நினைவு.
இந்த அக்டோபர் 2 2024க்கான கூடுதல் முயற்சி, உழைப்பு , மேலதிக புரிதல் வேண்டும் என்ற உந்துதல் என்னை சிபி ஜோசப் தொகுப்பை முழுமையாக வாசிக்க வைத்தது. தொடர்ந்த தேடுதல் ராஜிவ் பார்கவாவிடமும், காந்தி அருங்காட்சியக நூலுக்கும் அழைத்துச் சென்றன.
ரயில்வே குறித்த காந்தியின் கருத்துக்கு ஆதரவாக மார்க்சியர் எவராது பேசினரா எனப் பார்த்தபோது, இர்பான் ஹபீப் ’வரலாறு குறித்த கட்டுரைகள்’ என்கிற நூலின் சம்பந்தப்பட்ட அத்தியாயங்களை பார்த்துக்கொண்டேன்.
அறிஞர் ஒருவர் ரூசோவுடனும் மார்க்ஸ் உடனும் ஒப்பீட்டு ’ஹிந்த் ஸ்வராஜ்’ பற்றி எழுதியிருந்தார். ரூசோவின் சமுதாய ஒப்பந்தம் சுருக்கத்தையும், மார்க்சின் மானிபெஸ்டோவையும் நினைவு படுத்திக்கொண்டேன், மானிபெஸ்டோவின் முதல் அத்தியாயமான ’பூர்ஷ்வாக்களும் பாட்டாளிகளும்’ என்பதில் மார்க்ஸ் எழுதிய சிலவரிகளை அப்படியே காந்தி சந்திப்பதை என்னால் உணரமுடிந்தது. மார்க்ஸ் முதலாளித்துவ கோரக்கொடுமைகளை சொல்லிவிட்டு, அதன் முற்போக்கு அம்சங்களையும் சொல்லிச் செல்வார். காந்தி அதனை முற்போக்கு என ஏற்காமல் அங்கு விலகி நிற்பார்.
சுயராஜ்யம் குறித்து காந்தி காலத்தவர் எனத்தேடிப்போனதில் வினோபாவின் சுயராஜ்ய சாஸ்திரம், சிங்காரவேலரின் சுயராஜ்யம் யாருக்கு, திரேந்திர மஜூம்தாரின் இதென்ன சுயராஜ்யம் , ஜெயப்பிரகாஷ் நாரயணின் மக்கள் சுயராஜ்யம், பெரியாரின் இது தொடர்பான குடிஅரசின் சில கட்டுரைகளை திரும்பவும் வாசித்துக்கொண்டேன்.
’ஹிந்த் ஸ்வராஜ்’ குறித்து இணையவழி கட்டுரைகள் பெரும்பாலும் மூலப்பிரதியின் குரலை அழுத்தமாக சொல்லக்கூடியனவாக இருப்பதையும் கொஞ்சம் தேடலில் பார்க்கமுடிந்தது.
ஹிந்த் ஸ்வராஜ் பிரதியை எவரும் எளிதாக படித்துவிடமுடியும். அதற்கான ’background essay’ மாதிரி ஒன்றை எழுதவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அப்படித்தருவது பிரதிக்கு சென்று வருவோர்க்கு சற்று உதவிகரமாக இருக்கும் என நினைத்தேன். அக்டோபர் 2 நிகழ்வில் பேசிய அறம் இதழாசிரியர் சாவித்திரி கண்ணன் அவர்களும், சுருக்கமான கட்டுரை ஒன்று எழுதப்பட்டால் நன்று என்கிற கருத்தை அங்கு வெளியிட்டிருந்தார்.
வாசிப்பின் வழியாகவும், அக்டோபர் 2 உரையில் சொல்லப்பட்ட அம்சங்கள் சிலவற்றையும் இணைத்து இச்சிறு நூலை தந்துள்ளேன். ’ஹிந்த் ஸ்வராஜ் தோற்றுவாயும் உள்ளடக்கக்கூறுகளும்’ எனத் தலைப்பிட்டுள்ளேன். தலைப்பு சாயல் லெனினிடமிருந்து பெற்ற ஒன்று.
இந்த சிறு நூலுடன் இணைப்பாக 2022, 2016ல் எழுதிய இரு சிறு கட்டுரைகளையும் தொடர்புள்ள பதிவுகள் என்கிற வகையில் இணைத்துள்ளேன்.
ஹிந்த் ஸ்வராஜை படிக்க அல்லது படித்திருந்தால் மேலும் கூடுதல் புரிதலுடன் காந்தியை அணுக இந்த சிறு பிரசுரம் உதவினால் நற்பேறு. உரை வழங்க வாய்ப்பளித்த காந்தி கல்வி நிலைய முன்னோடிகள் திரு அண்ணாமலை, திரு மோகன், திருமதி பிரேமா,திரு சரவணன் உள்ளிட்டவர்க்கு என் நன்றி. அன்று நிகழ்வில் பங்கேற்ற பெரும் ஆளுமைகள் அனைவருக்கும் என் வணக்கமும் அன்பும்.
8-10-2024 - ஆர். பட்டாபிராமன்
இணைப்பில் மின் நூல்:
https://ia902905.us.archive.org/4/items/hind-swaraj-leaflet/Hind%20Swaraj%20leaflet.pdf
Comments
Post a Comment