1917 அக்டோபர் புரட்சியின் தாக்கம் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விடுதலைப் போராளிகளுக்கு அதற்கு முன்னர் இத்தாலியின் மாஜினி தாக்கம்தான் மிக அதிகமாக இருந்தது. லெனின் பெயர் இந்தியாவில் பரவத்தொடங்கியது. ருஷ்யாவில் உழைப்பவர் ஆட்சிக்கு வந்துவிட்டனர்- இனி அவர்கள் வாழ்வில் சுபிட்சம்தான்- போல்ஷ்விக்குகளின் தொழிலாளர்- விவசாயி- போர்வீரர் கூட்டு ஆயுதப்போர் முறை- சோவியத் ஆட்சிமுறை உலகம் முழுவதும் பேச்சுப்பொருளானது. இளைஞர்கள் சோவியத் குறித்து அறிந்து கொள்ளவும் , அம்முறையில் தங்கள் நாடுகளை மீட்கவும் உறுதிபூணலாயினர். மக்களிடம் அது குறித்து எழுதலாயினர். கவிஞர்கள் அம்முறையை கொண்டாடினர்.
இந்தியாவிற்கு வெளியில் அன்றைய புரட்சி குறித்த பெருங்கனவு கொண்டிருந்த இளைஞர்கள் மாஸ்கோ செல்வது , லெனினை பார்ப்பது என்பதில் போட்டியிட்டுக் கொண்டனர். எம் என் ராய், அபானி, விரேந்திரநாத் சட்டோ, எம் பி டி ஆச்சார்யா, செளகத் உஸ்மானி, செளமேந்திர தாகூர் என ஏராள இளைஞர்கள் தாங்கள்தான் இந்திய பிரதிநிதிகள் என மாஸ்கோவில் முகாமிட்டு தங்கள் அங்கீகாரத்திற்காக போரிட்டு வந்தனர்.
அவரவர் செல்வாக்கு திட்டுக்களை உருவாக்கும் பொருட்டு பத்திரிகைகளை நடத்தி, இந்தியாவிற்கு அவற்றை கடத்த முயற்சித்தனர். மார்க்சிசம் என்பதுடன் லெனினியம் என்ற பின்னொட்டு சேர்க்கப்பட்டு அதை அவரவர் புரிந்த மொழியில் கோட்பாட்டு செய்திகளாக இந்தியாவிற்கு அனுப்பினர். லெனின் தன் தோழர்களுடன் தங்களுக்கான மூன்றாம் அகிலத்தை அமைத்தார். அந்த அகிலத்தின் அங்கீகாரம் பெற்றவர்க்கு சற்று நிதி உதவி, தங்குமிடம் போன்ற சில பாதுகாப்புகள் கிடைத்தன. லெனினியம் உலக மீட்சிக்கான கோட்பாடு என்கிற நம்பிக்கை பரவத்தொடங்கியது.
இந்தியாவிற்குள் மார்க்ஸ் லெனின் நூல்கள், ராய் - சட்டோ போன்றவர் பத்திரிகைகள் இரகசியமாக வரத்துவங்கின. பிரிட்டிஷ் இங்கு யார் எவர் எங்கிருந்து அவருக்கு சமிக்ஞைகள் என்கிற மோப்பத்தை பிடிக்கலானது. நேரிடையாக சோவியத் என்றில்லாமல், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி வழியாக இளம் தோழர்கள் இந்தியத் தொடர்புகளுக்கு அனுப்பப்பட்டனர். பிலிப் ஸ்பிராட் போன்றவர் அப்படி வந்தவர்கள்தான்.
ராய் மற்றும் சோவியத் பிரிட்டிஷ் கட்சி எனும் இந்த தொடர்புகளின் வழியாக இங்கும் கல்கத்தா, பம்பாய், லாகூர், மதராஸ், கான்பூர் என ஆங்காங்கே விரல்விட்டு எண்ணக்கூடிய சில இளைஞர்கள் கம்யூனிஸ்ட்களாக தங்களை பிரகடனப்படுத்தினர். வேலைகளில் இறங்கினர். இப்படித்தான் டாங்கே, முசாபர், காட்டே , ஜோக்லேகர், பாகர்கட்டா போன்றவர்கள் உருவாகலாயினர். மூத்தவர் சிங்காரவேலரும் இப்படியான முன்வரிசையில் இருந்தார். இவர்கள் பத்திரிகை நடத்தலாயினர். கான்பூர் , மீரத் என சதி வழக்குகளில் சிக்கி போராடி தங்களை மீட்டுக்கொண்டனர். கான்பூர் வழக்கில் சிங்காரவேலர் விடுவிக்கப்பட்டதை, மிகப்பாதுகாப்பாக வெளிநாட்டில் இருந்த எம் என் ராய் விமர்சித்திருந்தார். புரட்சியாளர்கள் கொஞ்சம் பேர் ஆனாலும், ஒருவரை ஒருவர் விமர்சிப்பதில் தாராளமாகவே இருந்துள்ளனர்.
எம் என் ராய் முயற்சியால் அக் 1917ல் தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என ஒன்றை அமைத்தனர். அகிலம் அதை குழு ஒன்றாகவே பார்த்தது. ராய் இந்தியாவில் காங்கிரஸ் நடக்கும் போதெல்லாம் அறிக்கை அனுப்பி இளம் தோழர்களை ஈர்க்க முயன்றார்.
கான்பூர் வழக்கு, மிக முக்கிய கருதுகோள் நம்பிக்கை ஒன்றை சிற்சிலராக இருந்த கம்யூனிஸ்ட்களுக்கு தந்தது. கம்யூனிசம் மார்க்சியம் என்கிற கருத்தை வைத்திருப்பதே ஆட்சி துரோகமல்ல. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக சதி தான் தேசத் துரோகம் எனவழக்கு போனது. இந்த நம்பிக்கையை எடுத்துக்கொண்டு, கான்பூரில் செப்டம்பர் 1924 ல் 50 உறுப்பினர் பட்டியலுடன் சத்ய பக்தா என்கிற ராஜஸ்தான் சார்ந்த இளைஞர் ‘இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியை ‘ தொடங்கினார். சில்வியா பங்க்ரஸ்ட் போன்றவருடன் இவர் தொடர்பில் இருந்தார். சத்யா சோசலிச புத்தக கடை நடத்தினார். பகத்சிங் கான்பூரில் இருந்தபோது, சத்யாவிடம் ரூ 10 செலுத்தி ருஷ்ய புரட்சி குறித்த புத்தகத்தை வாங்கி சென்றுள்ளார்.
கான்பூரில் புகழ் வாய்ந்த போராளி கணேஷ் சங்கர் வித்யார்த்தி சத்ய பக்தா, பகத்சிங் போன்றவர்க்கு ஈர்ப்பாக இருந்தார். ஹஸ்ரத் மொகானி காங்கிரசில், கிலாபத்தில், இடது சிந்தனைகளில் செயல்பட்டு வந்தார். இஸ்லாமிய கம்யூனிசம் எனக்கூட அவர் பேசியவர்தான். கணேஷ், ஹஸ்ரத், ராதாமோகன் ஆகியவர்களின் ஒப்புதலுடன் , டிசம்பர் 1925ல் காங்கிரஸ் மாநாடு கூடும்போது , கம்யூனிஸ்ட் மாநாடும் நடத்தலாம் என்கிற அறிவிப்பை சத்யபக்தா வெளியிட்டார். கான்பூர் வழக்கு நேரத்தில் டாங்கே, முசாபரை சத்யபக்தா சந்தித்தார். காந்தியின் கதர் ஈர்ப்பும் எளிய வாழ்வும் அவருக்கு ஈர்ப்பை தந்தன.
மாநாடும் டிசம்பர் 26 , 1925ல் திட்டமிட்டப்படி கூடியது. தேசியமா சர்வதேசியமா, அகிலத்துடன் உறவென்ன, இரகசிய வழிகளா, legalised open வழிகளா, உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இந்திய படை பிரிவு கட்சியா அல்லது இந்தியாவிற்கான சுயேட்சையான கட்சியா என்பதெல்லாம் விவாதங்களாயின. அவரவர் அந்த இளம் வயதில் கற்றுக்கொண்ட தேர்ச்சிக்கேற்ப நிலைப்பாட்டை எடுத்தனர்.
சக்லத்வாலா வருவதில் இரு சிக்கல் ஏற்பட்டது. தலையாய சிக்கல் அகிலம் ஒப்பு கொடுக்காத மாநாட்டிற்கு வரமுடியுமா- இரண்டாவது நடைமுறை சிக்கல் , போக்குவரத்து செலவிற்கு நிதி கொடுக்க முடியுமா? அவர் வருவதில்லை என முடிவானது. சத்யபக்தா சிங்காரவேலர் தலைமையேற்க வேண்டுகோள் கொடுத்தார். சத்யபக்தா , சிங்காரவேலர் , ஹஸ்ரத் ஆகியோர் போல்ஷ்விசமல்ல என்கிற கருத்துடன் இருந்தனர். முசாபர், காட்டே, பாகர்ஹட்டா போன்றவர் சர்வதேசிய அடையாளம் என்கிற communist party of India என்கிற நிலையை வற்புறுத்தினர். சத்யபக்தா வெளியேறும் சூழல் உருவானது. 1985 வரை வாழ்ந்த அவர் இந்தியில் நூறு நூல்களை எழுதியுள்ளார். சத்யபக்தா எளிய வாழ்க்கை வாழந்தவர். தலித் குடும்பத்தில் பிறந்து தெரு சுத்தம் செய்து வந்த பெண்ணை மணமுடித்து, பின்னர் இந்து கம்யூனிசம் எனப் பேசி மடம் ஒன்றில் தங்கி மறைந்தார்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் என்பதில் போல்ஷ்விக் தாக்கம் என்பது நிழல்போலவே சிலகாலம் உள்ளடங்கி, சில காலம் நீள உயரமாக இருந்து வந்தது. அகிலம் மற்றும் அதன் முடிவுகள் இயக்க நிலைப்பாடுகளில் அலைக்கழிப்பை உருவாக்கின. காந்தி, காங்கிரஸ் இயக்கம் , தேசிய இனம், இரகசிய UG வழிகள், ஆயுதபுரட்சி பார்வைகள், அமைப்பு முறைகள் , பிரிட்டிஷ் ஆட்சி, பெற்றது விடுதலையா எனும் சந்தேகப்பார்வை போன்ற பலவற்றில் அகிலத்தின் தாக்கம் பிரச்சனை தொடர்ந்தது. அகிலத் தொடர்பில் இல்லாதவர் ஓடுகாலிகளாயினர். எம் என் ராய் இப்படியானார்.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் விடுதலைக்கு பின்னரும் கூட சோவியத் ஸ்டாலினிடம் சென்று அறிவுரை பெறவேண்டிய நிலையில் , உள் விவாத சூழலால் இருந்ததைக் காணமுடியும். இயக்கம் சர்வதேசியம் என்பதை கைவிடாமலேயே , தங்களின் சுயத்தை வீரியமாக கண்டறியத் தொடங்கியது. இந்திய விடுதலைபோர், காந்தி, நேரு ஆட்சி குறித்து, நாடாளுமன்ற சட்ட மன்ற தேர்தல் பங்கேற்பு போன்ற பல அம்சங்களில் விவாத வழிகளில் சுயேட்சையான நிலைப்பாடுகளை கட்சியால் எடுக்க இயலும் என்கிற திசையிலான பயணம் மெதுவாக , உறுதியாக நடக்கலானது.
இந்திய விடுதலை, அரசியல் அமைப்பு சட்டம் குறித்து நேர்மறையான பார்வைகள் உருவானது. மகாத்மா குறித்த மதிப்பீடுகளை ஹிரன், இ எம் எஸ், டாங்கே, சர்தேசாய் போன்றவர்கள் செய்யலாயினர். நேரு குறித்து அஜாய், டாங்கே , இ எம் எஸ் போன்றவர் செய்தனர். சுபாஷ், அம்பேத்கர் குறித்தும் நேர்மறையான மதிப்பீடுகளுக்கு வந்தனர்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு, உள்நாட்டில் பொதுத்துறை சார்ந்த கட்டுமானங்கள், கலப்பு பொருளாதாரம் என்றாலும் ஏகபோக எதிர்ப்பு, நிலபிரபுத்துவ ஜமீன் முறை நீக்கி உழவர் நில உரிமை, தொழிலாளர் பாதுகாப்பு, பாலின சமத்துவம் என்கிற சில அடிப்படைகளுடன், சாதிய கொடுமைகளுக்கு எதிரான சகோதரத்துவ உணர்வுள்ள சமூக முறை , மத்திய மாநில உறவுகளில் பொருளாதார அரசியல் ஜனநாயக கண்ணியம் , பஞ்சாயத்து மேம்பாடு போன்ற அனுபவங்களின் வழி சிந்தனை தெளிவை கம்யூனிஸ்ட் இயக்கம் சுயேட்சையாக பெறலானது. கேரளாவில் தேர்தல் வழியில் மக்களின் ஒப்புதலுடன் ஆயுதம் ஏந்தாமல் ஆட்சிக்கு வரமுடியும் என்கிற சோதனை 1957 ல் இ எம் எஸ் ஆட்சி வழி நடந்தேறியது. உலகமும் அதை முதல் வரலாறாக எடுத்துக்கொண்டது. தேர்தல், பலகட்சி ஆட்சி முறை என்கிற ஒப்புதலுக்கு முழுமையாக இயக்கம் நுழைந்தது.
இன்று அதற்கு சீனா உள்ளிட்ட எவரும் மாஸ்டர் அல்ல. தன் சொந்த கூடலில் ஏற்படும் புரிதல்களில் எடுக்கும் முடிவுகளில் நிற்கும் இயக்கமாகிவுள்ளது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முழக்கத்தை 1958லேயே அது நிறுத்திக்கொண்டுவிட்டது. உலகத்தொழிலாளர்களே ஒன்று படுவீர் என்கிற முழக்கம் , உலக உழைப்பவர்கள் மீதான அதன் கரிசனம் என்கிற நேரிய பார்வையுடன் தொழிற்படுகிறது. இன்று அதன் சர்வதேசியம் என்பது , அழைக்கப்படுவோரின் மாநாடுகளுக்கு செல்வது- அவர்கள் பார்வையை புரிந்து கொள்வது என்பதுதான். வெளியிலிருந்து எந்த கட்டளையையும் சுமந்து வரக்கூடிய சர்வதேசியமல்ல அது. அவரவர் நாடு குறித்த புரிதலுடன் உலகப்பார்வை- மேல் கீழ் இல்லாத சமத்துவ அந்தஸ்து என்பது தான். நடைமுறையில் - போரற்ற உலக மக்களின் அமைதிக்கும் , அழகான உழைப்பு வாழ்விற்கும் உகந்த வெளிநாட்டுக்கொள்கையின் விரிவாக சர்வதேசியம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இப்போதெல்லாம் இரகசிய வழிகள் என்பதில்லை. சட்டபூர்வ , அரசியல் அமைப்பு சட்ட எல்லைக்குள் என்பது ஏற்கப்பட்டுள்ளது. உழைப்போர் உயர்வு என்கிற பாதை பிடிமானம் தொடர்கிறது. Voice of labouring class என்கிற பேரடையாளம் அதன் அடிப்படை. பல்வேறு இசங்களின் அதிகார இழுவை என்கிற போராட்டங்களில் இயக்கம் சிக்காமல் இல்லை. பல கட்சிகளில் இருப்பது போல் aspirational aspects என்பதும் உருவாகாமல் இல்லை. வர்க்கம் சாதி பாலினம் மத வேறுபாடுகள் , பண சொத்து செல்வாக்கு என்கிற பெரும் சிலந்தி வலைகளின் நாடொன்றில் அரசியல் பயணம் அவ்வளவு எளிதானதல்ல. கோடானு கோடி உழைப்பாளர் இன்னும் ஓரவாழ்வில் என்பதால் , அவர்களின் குரலாக ஓட வேண்டியே இருக்கும். அவர்களும் அதை உணரும் தருணம் வரலாம் என்கிற நம்பிக்கை தான் நாளைகள்.
இந்த நூற்றாண்டில் இயக்க வாழ்விற்காக தம்மை தொலைத்துக்கொண்டவர் பலர். ஏராள தியாகங்கள்,சொல்லொணாத் துயர்கள், வழக்குகள், இழப்புகள் என நீண்ட பாதையின் விளக்குத் தூண்களாக பலர். அவர்கள் சிந்தித்த பாதையில் சறுக்கல்கள் இருந்திருக்கலாம். தவறு செய்துவிட்டோமே என விழும்போதெல்லாம் , சரி செய்து எழுந்திருந்திருக்க முயற்சித்துள்ளனர். எப்போதும் எல்லா காலத்திலும் சரி என எந்த
அமைப்பாலும் உரிமை கொண்டாட முடியாது. அது over claim ஆகவே அமையும். இதன் பொருள் ஓர் அமைப்பு அதன் தவறுகளை, வீழ்ச்சிகளை நியாயப்படுத்திக்கொள்ளலாம் என்பதல்ல. போதா புரிதல்கள் இருப்பது ஒன்றும் அவமானகரமானதல்ல. அனுபவங்கள் வழி செழுமைக்கான சாலையில் பயணம் என்பது வாய்த்தால் பயனளிக்கலாம்.
ஆரம்பத்திலிருந்தே, சுய அனுபவத்தில் காந்தியின் கரங்களை பற்றியோ, அல்லது ஜோஷி தொடங்கி வைத்த உரையாடல்களை பல்வேறு தளங்களில் 1948 ஜனவரிவரை அவருடன் உடன் அமர்ந்து நடத்தி பயணித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என எனக்குத் தோன்றுகிறது. காந்தி அம்பேத்கர் உரையாடல்தான் இந்நாட்டின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் வாழ்வில் சற்று கண்ணியமான இடம் பெற விதையானது என எனக்குத் தோன்றும். நேருவின் ஆட்சியின் போதும், காந்தி படுகொலை நடவாமல் போயிருந்தால், இந்நாட்டின் கிராமங்கள் சற்றாவது கூடுதலாக கவனிக்கப்பட்டிருக்கலாம் எனக்கூட தோன்றுகிறது. ஆனால் வாழ்க்கை ifs buts படி போகாதே.
வாழ்க்கை வெறும் சூத்திரங்களின் பாதையுமல்ல. முன்னோர் சிந்தித்தவையுடன் உலகம் நின்றுவிடப்போவதும் இல்லை. ஒவ்வொரு கணமும் பழையதாகவும் புதியதாகவும் இருக்கிறது. கைக்கு எட்டும் வேலைகள் நிம்மதியைத் தருகின்றன. கோட்பாட்டு வேலைகள் நம்பிக்கை , நிராசை சலிப்பு போன்ற கலவையான உணர்வுகளை தரலாம். தினம் விடிகிறது. நாளை மற்றுமொரு நாளாக இருக்கலாம். அல்லது புதிய அர்த்தப் பொலிவாகவும் அமையலாம். மானுட ஓட்டம் தொடர்கிறதே…
8-11-2024
Comments
Post a Comment