எம் என் ராய் பெரும் சாகச மனிதராக வாழ்க்கையை தொடங்கி, நிராசை மனிதராக இறுதிக்கால வாழ்வை கடத்தியவர்.
இந்திய கம்யூனிச இயக்கத்திற்கு விதை ஊன்றியவர் எனலாம். அதை அவருக்கு தெரிந்த வகையில் சற்று கரடுமுரடாகக் கூட செடியாக்க முயற்சித்த தோட்டக்காரர். தோட்டக்காரர் வேலை பறிபோனது. அவ்விதைக்கான செடிக்கான மரத்திற்கான உரிமை கோரல் ராய்க்கு இல்லாமல் போனது.
இளமையில் கல்கத்தா புரட்சிவாதி ஜதினால் ஈர்க்கப்பட்டு , அனுசீலன் சமிதி தொடர்பும் வந்தது. வங்கிகளை கொள்ளை அடிப்பது, ஆயுத கிடங்குகளை கொள்ளையிடுவது என்பது அக்கால புரட்சிகர இளைஞர்களின் methods ஆக இருந்தது. ராயும் அதில் கைதாகி விடுதலையானார். வெளிநாடு சென்று ஆயுதங்களை வாங்க முயற்சித்தனர். ராய் என்ற அந்த இளைஞனை சன்யாட் சென்னிடம் அனுப்பினர். சன்யாட் சென்னோ பணம் கைக்கு மாறாமல் ஆயுதம் கிடையாது என கைவிரித்தார்.
ராய் எப்படியோ தட்டுத்தடுமாறி அமெரிக்கா நியுயார்க் நுழைந்தார். அங்கு எவ்லின் என்கிற அயல்நாட்டு பெண் துணையால் மார்க்சிசம் அறியலானார். துணைவியும் ஆக்கிக்கொண்டார். நியுயார்க் நூலகத்தை நன்றாக பயன்படுத்திக்கொண்டார். அங்கிருந்து அவர் துரத்தப்பட்ட நிலையில் மெக்சிகோ சென்றார். மெக்சிகோ அவர் மீது பேரன்பை பொழிந்தது. வயதான அதிபருக்கு அறிவார்ந்த இளம் தோழனாக ராய் உரு உயர்ந்தது. அங்கு சோசலிஸ்ட் கட்சி ஒன்றை ஆரம்பித்து பொதுச்செயலராகி ஏராளம் ஸ்பானிஷ் மொழியில் எழுதலானார்.
லெனினுக்கு சில கட்டுரைகள் சென்றன. அந்தப் பையனை மாஸ்கோ வரவழைக்கும் ஏற்பாட்டை லெனின் விரும்பினார். அகிலத்தின் அமர்விற்கு வர வேண்டும் எனில் கம்யூனிஸ்ட் கட்சி லேபிள் வேண்டியிருந்த சூழலில் , சோவியத்திற்கு வெளியே மெக்சிகோவில் சோசலிஸ்ட் கட்சி பெயரை மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியாக்கி பொதுச்செயலர் ஆனார். சோவியத்திற்கு வெளியே முதல் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர் ராய். மெக்சிகோ அதிபரும் சாகசத்தால் வாழ்க்கையை தொலைக்காமல் பார்த்துக்கொள் என விடை கொடுத்தார்.
லெனின் காலனியம் அதன் போராளிகள் குறித்த ‘தீசிஸ்’ ஒன்றை எழுதினார். சாகசப் பிரியரான ராய் தன் ‘மாற்று தீசிசை’ தந்தார். லெனின் ராயை போட்டு துவம்சம் செய்யாமல் , பக்குவமாக அவர் தவறை உணர்த்த நினைத்தார். இந்தியாவில் காந்தி மற்றும் காங்கிரஸ் பெற்றுள்ள மக்கள் ஆதரவை குறைத்து மதிப்பிடாமல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றை அமைத்து , இணைந்து வேலை செய்வதே நலம் என்பது லெனின் அறிவுரை. சாகச எண்ணம் எதார்த்தம் உணராதே என்ன செய்வது. ஆனால் தாஷ்கண்டில் முஜாஹிர்களை பயன்படுத்தி அவர்களுக்கு போதித்து 1920அக்டோபரில் கட்சி ஒன்றை அபானி ஆச்சார்யா உதவியுடன் ராய் தொடங்கினார்.
ராய்க்கு லெனின் இருந்தவரை தொந்தரவுகள் இல்லை. இந்தியாவில் பம்பாய், சென்னை, லாகூர், கல்கத்தா, கான்பூர் என சில இளம் உத்வேகிகளை கண்டறிந்து தொடர்பு கொண்டார். அவர்கள் வழியாக காங்கிரசில் தனது கருத்துக்களை கொண்டுபோக முயற்சித்தார். இந்த குழுக்கள் பின்னர் 1925ல் கான்பூரில் கூடி கட்சியை உருவாக்கினர்.
சீனாவிற்கு அனுப்பட்ட ராய் அங்கு ஏற்கப்படாத மனிதரானார். ஸ்டாலின் பதவிக்கு வந்த சூழலில், ராய் செல்வாக்கு அகிலத்தில் பட்டுப்போகத் துவங்கியது. இங்கிலாந்து கட்சியின் கிளமெண்ட் பாமிதத் சகோதரர்கள், ராய்க்கு புதிய போட்டியாளர்களாகி, அகிலம் - அவர்கள் வழியில் இந்தியாவில் கட்சி என்ற நிலையும் உருவானது. கிளமெண்ட் தான் சிங்காரவேலர் பேத்தியை மணந்த பிலிப் ஸ்ப்ராட்டை இந்தியாவிற்கு அனுப்பியவர். ரஜினி பாமிதத் செல்வாக்கும் வளரத்தொடங்கியது.
பெர்லின் சென்ற ராய் அங்கு காட்ஸ்கி போன்றவர்களை சந்தித்தாலும், சோவியத்தில் புகாரின் போன்ற நண்பர்களாலும் தனக்கு உதவ முடியாது என்பதை அறிந்தார். இந்தியா போக உதவுமாறு பெர்லின் தோழர்களை வேண்டினார். பெர்லின் தோழர்கள் மாஸ்கோவிலிருந்து வெளியேறியது நல்லது, இல்லையெனில் ஸ்டாலின் ராஜாங்கத்தால் சுடப்பட்டு நீ இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். அதே நேரம் இந்தியா சென்றால் பிரிட்டிஷ் உன்னை சிறையில் வாட்டும். இந்தியாவில் உனக்கான செல்வாக்கும் இருக்காது என்கிற எதார்த்தம் உணர்த்தினர். சாகசம் எதையாவது பொருட்படுத்துமா- முஸ்லீம் பெயரில் இந்தியா வந்த ராய் சில மாதங்களில் கண்டறியப்பட்டு சிறை வைக்கப்பட்டார். அம்பேத்கர் தனது ராய் சந்திப்பிற்கு பின்னர், இவர் நிச்சயம் முஸ்லீமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்ததாக தெரிவித்தார்.
பொதுவாக சற்று சுகமான வாழ்க்கைக்கு பழகியிருந்த ராய் , அவதி நிறைந்த சிறைத்துன்பங்களை சந்தித்தார். ஏராளம் படித்தார். எழுதினார். பின்னர் அவை நூல்களாயின. சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் காந்தி நேருவுடன் பழகலானார். நேருவிற்கு சாகச மனிதர்களை, அதுவும் ராய் போன்ற அறிவு சுரங்கத்தை பிடித்துப்போனது. அலகாபாத் வீட்டில் தங்க வைத்தார். காந்திக்கு ஒருவர் எவ்வளவு டன் சாகசம் செய்தார் அல்லது புரட்சி பேசுகிறார் என்பது பொருட்டல்ல. அவர் என்ன செய்கிறார், அது உவப்பானதா என்பது மட்டுமே அளவுகோல்.
காங்கிரசில் பணியாற்ற கொள்கைகளை பரப்ப இதழ் - அதற்கு நிதி வேண்டும் என ராய் வேண்டுகோளை காந்தி ஏற்கவில்லை. இந்தியா முழுக்க போய் மக்களை பார்த்துவிட்டு வா, பின்னர் நிதி தானாக கிடைக்கும் என்றார் காந்தி. ராம்கர் மாநாட்டிலும் காங்கிரஸ் தலைமைக்கு போட்டியிட்டு மோசமான தோல்வியை ராய் தழுவினார்.
இந்திய கம்யூனிஸ்ட்கள் அகிலத்தின் பார்வைப்படி ராயை ஓடுகாலியாக பார்த்தனர். ராயிஸ்ட்கள் எனச் சிலர் சேர்ந்து தொழிற்சங்கத்தில் சவாலாயினர். ராடிகல் டெமாக்ரடிக் பார்ட்டி உருவானது. இந்தியாவில் ஆங்காங்கே சில அறிவு ஜீவிகள் ராயிடம் செல்லலாயினர். மனிபென் கரா, கார்னிக் , தார்க்குண்டே போன்ற புகழ் வாய்ந்தவர்கள் ராயால் ஈர்க்கப்பட்டனர். மனிபென் கரா பம்பாய் துப்புரவு தொழிலாளர்களின் மாபெரும் வீராங்கனை ஆனார்.
இரண்டாம் உலகப்போர் காலம் , குவிட் இந்தியா போது அகிலத்தின் பார்வை தன் மேல் படாதா என்கிற எதிர்பார்ப்பு ராய்க்கு இருந்தது. ஆனால் கிடைக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் , ராய் தொழிற்சங்க வேலைக்கு பணம் தருகிறதா என்ற கேள்வி மத்திய சட்ட மன்றத்தில் வந்தது. வைஸ்ராய் கவுன்சில் லேபர் உறுப்பினராக டாக்டர் அம்பேத்கர் தன் பதிலில் ஆமாம் தரப்படுகிறது என பதில் அளித்தார். எவ்வளவு என்ற கேள்விக்கு ரூ 13000 என்றார்.
விடுதலைக்கு பின்னர் ராய் beyond communism , new orientation , party less democracy , radical humanism, moral politics என்று பேசலானார். எல்லின் என்கிற தன் அடுத்த துணைவியாருடன் டேராடூன் வாழ்க்கை, விபத்து, இருதயக் கோளாறு - ஜனவரி 25, 1954 ல் மரணம் என அவர் வாழ்க்கை அடங்கியது.
இந்தியா வந்தபோது அவரை சிங்காரவேலர் அனுசரனையாக பார்த்துள்ளார் என்ற செய்தியை ம பொ சி மூலம் அறியமுடிகிறது. சிங்காரவேலர் வயதான காலத்திலும் ராயை அழைத்துவர ரயில் நிலையம் சென்றுள்ளார். வீட்டில் தங்கவைத்து உரையாடியுள்ளார். வேறு தலைவர்கள் பொதுவாக அவரிடம் முகம் கொடுத்த செய்தியை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.
ராய் ஏராள நூல்களை எழுதியுள்ளார். அவரின் செலக்டட் தொகுதிகள் கூட சில இணையத்தில் கிடைக்கிறது. ராய் குறித்தும் அவரிடம் நேசம் கொண்ட சிலர் எழுதியுள்ளனர். வி பி கார்னிக் எழுதிய ராயின் ‘பொலிடிகல் பயாகிரபி ‘ பெரிய நூல். அதிகம் குறிப்பிடப்படுகிற நூலும் கூட. அதை சுருக்கமாக நேஷனல் புக் டிரஸ்ட் கொணர்ந்துள்ளனர். தமிழிலும் கிடைக்கிறது. சுகந்த தாஸ் 120 பக்கங்களில் அடர்த்தியாக ராய் அவரது சிந்தனைகளை அறிமுகப்படுத்தி ஆங்கிலத்தில் எழுதிய நூலும் நல்ல நூல். ராய் எழுத்துக்களை கல்கத்தா தோழர்கள் தொகுதிகளாக்கினர்.
ராய் எனும் சாகசக்காரனின் உச்சமும் வீழ்ச்சியும் வாழ்க்கை எவ்வளவு பெரிய leveller என்பதை எனக்கு உணர்த்தியது.
15- 11-2024
Comments
Post a Comment