Skip to main content

New E book from Pattabiraman

 


New E book from Pattabiraman





புதிய மின் புத்தகம் கீழ்கண்ட முன்னீடு மற்றும் 38 உள்ளடக்கத்துடன்.. நேரமுள்ளோர் இணைப்பை பார்க்கவும்


திராவிட- திராவிடர் இயக்கம்

வாசிப்பு வழி குறிப்புகள்

முன்னீடு

திராவிட இயக்கம் குறித்து பல ஆய்வுகள் வந்துள்ளன. இன்னும் விரிவான ஆய்வுகள் தேவையும்படுகின்றன. நூற்றாண்டைக் கண்ட பிராமணர் அல்லாத இயக்கம்- நீதிக்கட்சி- சுயமரியாதை இயக்கம்- திராவிடர் கழகம்- திமுக- அதிமுக இன்னும் பிரிவுகள் எல்லாமே மிக விரிவான ஆய்வுபரப்பை நோக்கி நிற்கின்றன. முற்றிலும் சாய்வுகள் இல்லா முழு ஆய்வு என எதையும் சொல்ல முடியாதென்றாலும், மறைப்புகளை கொண்டிருக்காத, எல்லாவற்றையும் உள்ளடக்கிக்கொண்ட- ஆவணங்கள், பேச்சு, மாநாட்டு நடவடிக்கைகள், கடிதப் போக்குவரத்துகள், விமர்சனங்கள்- விவாதங்கள் என பெருவெளி ஆய்வாக அவை செல்ல வேண்டியுள்ளது.

திராவிடர் இயக்க சாதனைகள்- பலம் பலவீனங்கள், அதன் உயர்வான பண்புகள்- நெறி சார் வீழ்ச்சிகள் என அனைத்தையும் பேசக்கூடிய ஆய்வுகள் அதிகமாக வரவேண்டும். 50 ஆண்டுகால ஆட்சி என்பது பெரும் சாதனைக்குரிய- அதேநேரத்தில் பலவீன நோய்கள் பற்றக்கூடிய காலமும் கூட. அசோகரையும் அக்பரையும் பேசி வரலாற்றை மூடாமல், சமகால அரசியலின் பெரும் வரலாற்றுப் பரப்பை குறித்த ஒளிவு மறைவற்ற , அச்சமற்ற விவாதங்கள் பெருக வேண்டிய அவசியம் இருக்கிறது.

இங்கு இந்நூலில் 38 இயல்களில்  பல்வேறு ஆய்வாளர்களிம் ஆய்வுகள் என் பார்வையில், நான் உணர்ந்த வகையில் எடுத்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே ஆய்வாளர்களுடன் என் வாசிப்பின்  உணர்வு வெளிப்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. பெரியார் வாழ்க்கை குறித்த சில கோணங்கள் தரப்பட்டுள்ளன. திராவிட இயக்கம் குறித்த சில முக்கிய ஆய்வாளர்களின் கருத்துக்களை ஓரளவிற்கு உள்வாங்கி சொல்ல முயன்றுள்ளேன்.

ஆய்வுகளை துணையாக கொண்டு  பேசும்  நிலையில் தமிழ் பொது புத்தி இல்லை. 50 ஆண்டுகால ஆட்சி என்கிற பெருமித சோதனை தன்னை ஒரே மாடல் என முன்னிறுத்திக்கொள்ளும் தன்மையை எடுத்துள்ளது. அதன் மீதான புகழ்பாடல்களால்  தமிழக அரசியல் நிரம்பி வழிகிற நிலையைத்தான் இன்று உணரமுடிகிறது.

சோவியத் அமெரிக்க கால கெடுபிடி யுத்தம் கொடுத்த சமாதான சகவாழ்வு என்கிற படிப்பினை இரு நாடுகளின் இணக்கத்திற்கே தேவையாக இருந்தது என்பதை எடுத்துக்கொள்ளாத அரசியல் இங்கு  ஒரே நாட்டில் மத்திய மாநில அரசாங்க உறவுகளில் நெருக்கடியாக்கப்படுகிறது. அரசாங்க உறவுகளில் கோட்பாட்டு இச ராஜதந்திரம் (ideological diplomacy) அவசியமா என்கிற கேள்வியை  அமெரிக்க சோவியத் உறவுகள் கேட்டுக்கொண்டன என்ற படிப்பினையும் இங்கு கணக்கில் கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.

II

1975ல் கலைஞர் அவர்கள் காலத்தில் வந்த ஆய்வின் பார்வையையும் இன்றுள்ள இனப்பேச்சாளர்கள் கணக்கில் கொண்டதாக உணரமுடியவில்லை. அவ்வாய்வு இந்தப் பார்வையை முன்வைக்கிறது.

“ தமிழகத்தின் இனமரபு வரலாறு மிகவும் சிக்கலானது; குழப்பம் மிக்கது. புத்தம் புதிய ஆராய்ச்சிகளால் பழைய கருத்துகள் எளிதில் பொருத்தமற்றுப் போய்விடுகின்றன. எனவே மிகவும் கருத்தோடும் விழிப்புணர்ச்சியோடும் இனமரபு  வரலாற்றை வரையவேண்டிய பொறுப்பு நம்மைச் சார்கிறது. இனமரபியல் ஆராய்ச்சி திட்டவட்டமானது அன்று. அதில் செய்யப்பெரும் முடிவுகள் நிலையற்றவை; எளிதில் மாறக்கூடியவை..தக்க அடிப்படைச் சான்றுகள் இல்லாத நிலையில் கொள்ளப்பட்ட முடிவுகள் பல இத்துறையில் மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளன. அவை காலப்போக்கில் மாற்றமுறலாம்”

இன்று நாம்  பொது புத்தியில் புரிந்தது மாதிரி வைத்திருக்கும் அம்சங்கள்  ஆரியர்- திராவிடர் வரலாற்று வெளிச்சத்தில் சரியானவையா என்ற கேள்வி - ராகுல்ஜி அவர்களின் ரிக் வேதகால ஆரியர்  படிக்கும்போது வரலாம். வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர்  அது இன வழியானதல்ல, மொழி சார்ந்தது- இனம் எனப் பேசுவது அரசியலுக்கு உதவலாம் என்று சொல்வதைப் பார்க்கிறோம்.

சூத்திரர் ஆர்யரே- பின்னர் கீழ் இறக்கப்பட்டனர் என்கிற முடிவை அம்பேத்கர்  ’சூத்திரர் யார்’ என்கிற ஆய்வில்  எட்டியிருப்பார். அப்போது சூத்திரர் திராவிட இனத்தார் என்கிற கோட்பாடு என்னவாகும் என்கிற கேள்வி எழுகிறது. பெரியாரும் அம்பேத்கரும் மாறுபடுகிற மிக முக்கிய புள்ளி இது என்பது ஆய்வுலகில் பொருட்படுத்தப்படாத ஒன்றாக இருக்கிறது. பெரியார் இதைப் படித்தாரா, என்ன எதிர்வினையாற்றினார் என்பதும் எனக்கு தெரியவில்லை. இப்படிப்பட்ட இடைவெளிகளை நிரப்பும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அம்பேத்கர் மேலும் இதில் ‘ஆர்ய இனம் என்பதே ஓர் அனுமானந்தானே தவிர வேறொன்றுமில்லை. …வேதங்கள் ஆர்யன் என்ற இனம் ஒன்று உண்டு என்பதையே அறியா . ஆர்யர்கள் இந்தியா மீது படையெடுத்த எவ்வித தடயமும் இல்லை” என்கிறார். இது திராவிட இயக்கத்திற்கு ஏற்புடைய ஆய்வுதானா என்கிற விவாதம் இங்கில்லை.

கில்பர்ட் முடிவுகள் பல , தமிழக பொது புத்தியில் உறைந்து கிடக்கும் எண்ணங்கள் பலவற்றை கேள்விக்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கும். இன்று நமக்குக் கிட்டியுள்ள வடிவில் இருக்கும் வேதம் உருவான காலத்தில் சமஸ்கிருத மொழி பேசிய மக்களில் கணிசமானவர் திராவிட இனத்தவராக இருந்தனர் என்கிறார் கில்பர்ட். பிராமண சாதியில் உச்சநிலை உயர்வோ, சாதி வேறுபாடோ கூட ஆரிய மரபு எனக்கூறிட ஆதாரமில்லை என்கிறார் மாக்ஸ் முல்லர். பின் சாதிமுறை ஆரிய வழக்கமென இல்லாவிட்டால், அது திராவிட வழக்கமா என்ற கேள்வி எழுகிறது. இப்படி கில்பர்ட் ஆய்வில் சற்று சிக்கல் வாய்ந்த கேள்விகள் எழ வாய்ப்புள்ளன. வட இந்தியாவைவிடத் தென் இந்தியாவிலேயே சாதி முறைமை வலுப்பெற்றதாகவும் பெருக்கமுடையதாகவும், சமூக வாழ்வில் மிகப்பெரும் பங்குடையதாகவும் இருக்கிறது என்கிற கில்பர்ட் ஆய்வை பொருட்படுத்தாமல் செல்ல முடியுமா எனத் தெரியவில்லை.

இந்திய நாகரிகம் வேதகாலத்திற்கு முற்பட்ட ஒன்று. இந்து மதத்தின் இன்றிமையாத பண்பாட்டுக் கூறுகள் மொகஞ்சதாரோ திராவிடர்களிடமிருந்து பெறப்பட்டவை. சிவனும் காளியும் லிங்க வழிபாடும் இந்து மதத்தின் பிற கூறுபாடுகளும் ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியாவில் நிலைகொண்டிருந்தவையாகும் எனப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் சொல்லிச்சென்றுள்ளார்.

சாமி சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் பெரியார் நூலில் பாரதிதாசன் பெயர் இடம் பெற்றுள்ளது. அண்ணாவின் பெயர் ஏன் இடம் பெறவில்லை எனத் தெரிந்துகொள்ள முடியவில்லை. நெதுசு எழுதிய நூலில் ,பெரியார் நீதி கட்சியின் தலைவராவதற்கு முன்னர் நீதிக்கட்சியினர் குடியேற்ற நாட்டு அந்தஸ்து எனப் பேசிவந்தனர். பெரியார் வந்தபின் முழு தன்னாட்சி- திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கம் உருப்பெற்றது என எழுதியிருப்பதைக் காண்கிறோம்

பெரியார் குறித்து வரும் வரலாற்று குறிப்புகளில் உரிய ஆவணத்தை இணைத்து  பேசாமல் செல்கிற குறையிருப்பதாகத் தோன்றுகிறது. வழக்குகள் எனப் பேசும்போது பின் இணைப்பாகவாவது அதன் முழு விவரத்தைத் தருவது , சைமன் கமிஷன் என்றால் கொடுத்த குறிப்பு என்ன என்பது போன்று எதுவும் பொதுவாக தரப்படாமல் இருப்பதையே பார்க்கிறோம். . முழுமையான திரட்டப்பட்ட முழு ஆவணங்களுடன், (50 ஆண்டுகள் திமுக, அதிமுக ஆட்சிகள் இருந்தும்) அவரது வாழ்க்கை வரலாறு முழுமையாக தொகுக்கப்படாதது ஏனோ?. அப்படி ஒன்று முழு ஆதாரங்களை மட்டுமே வைத்து, அவற்றை வெளிப்படுத்தி, அரசியல் செளகரியங்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் எழுதப்படவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. .

காந்தி என்றால் அவரது விமர்சகர்கள் எல்லோரையும் சமமாக வைத்து பார்க்கிறது சிந்தனை உலகு.  மார்க்ஸ் குறித்தும் ஆதரவாக எவ்வளவு ஆய்வுகள் உண்டோ, அவ்வளவு விமர்சன ஆய்வுகளும் உண்டு. இந்த அளவு ஆய்வுப் பரப்பை கொண்ட அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் அவர்களது கொள்கைகளை இயக்க செயல்பாடுகளை, tactics களை விதந்தோதும் ஆய்வுகள் அளவிற்கு, அவர்கள் குறித்த விமர்சன ஆய்வுப்புள்ளிகள் இன்னும் வரவில்லை. அவர்களை absolute என -விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் , போதாமை ஏதும் இல்லாதவர்கள் , முழு நிறை ஆளுமைகள் என முடிவெடுத்துவிட்டால் , அங்கு எதிர்பார்க்க ஏதும் இல்லை. அவர்களின் வாழ்க்கை தொடர்ச்சிகள் ஆங்காங்கே  அறுபட்டது போன்ற உணர்வே என் வாசிப்பில் கிடைக்கிறது

இந்நூலில் கூட அண்ணாவை லெனினுடன் ஒப்பிட்டார் பெரியார் என்பது பேசப்பட்டுள்ளது. திமுக தனது கொள்கை கோட்பாடுகளில் அண்ணாவை முன்வைத்து துவங்கப்பட்டது. 1949-67 கால திக பெரியார் மற்றும் திக தலைவர்களின் எழுத்துக்கள், திமுக அண்ணா மற்றும் அதன் தலைவர்கள் எழுத்துக்கள் மூடப்பட்டு கடந்து போகப்படுகிறது. அதேபோல் பெரியார் காலத்தில் அவருடன் உறவாடி நல் தோழர்களாகி வேறுபட்டு  போன சிங்காரவேலர், ஜீவா, அண்ணா, பாரதிதாசன், கி ஆ பெ, குத்தூசி என பலரின் வேறுபட்ட நிலைப்பாடுகள் ஏன்  எங்கு எதனால் , பெரியார் எதிர்வினைகள் என்ன என்பன போதுமான விவாதப் பொருளாகவில்லை. நூற்றாண்டு கால இந்திய மார்க்சியம், காங்கிரஸ் இயக்கம், ஆர் எஸ் எஸ் என்பது போலவே நீதிக் கட்சி-சுயமரியாதை இயக்கம்- திக - திமுக இன்னும் பிற என்கிற நூற்றாண்டு மரபு இருக்கிறது. இந்த தொடர்ச்சிக்குள் நடந்த விவாதங்கள் மாறுபாடுகளை அறிதல் புரிதலை மேம்படுத்தும்.

பாகிஸ்தான் ஏற்பட்டு அதில் திராவிட நாடும் சேர்க்கப்பட்டுவிட்டாலும் சரி எப்படியாவது ஆரிய அட்டூழியம் திராவிட நாட்டை விட்டு முதலில் அகலவேண்டும்...என்ற கருத்தைக்கூட பெரியார் வெளியிட்டிருந்தார்.

அம்பேத்கர் தன் ’எக்சம்பளரி’ தன்மையை புத்தமதம் தழுவுதல் மூலம் தானே முன் உதாரணமாக நின்றார். பிறருக்கு பேசும் ஒன்றில் தான் உதாரணமாக நிற்றல் என்பதில்- மதமாற்ற  கருத்தில் பெரியார் அப்படி நிற்கவில்லை. இதை பெரியாரிடம் மதமாற்ற ஆலோசனையில் பார்க்கமுடியவில்லை. பிறருக்கான உபதேசமாகவே பெரியாரின் மதமாற்ற அறிவுரை நிற்கிறது. இந்து மதத்திலிருந்து வெளியேறிவிட்டால் இவ்வளவு சுதந்திரமாக தன்னால் விமர்சிக்கமுடியாது என்பதில் பெரியார் தற்காப்பை தேடவேண்டியிருந்தது.

பெரியார் மற்றவர்களுக்காக பேசியவற்றில் தான் சொன்னபடி நடக்க முடியாமல் போன  அம்சங்கள் குறித்த உரையாடல் தொகுக்கப்பட்டு ஏதேனும் இருக்கிறதா எனத்தெரியவில்லை. தான் சொன்னபடி தானே நடப்பதில்லை என்பதை அறநெறி பிறழ்வாக பார்க்கும் பார்வை காந்தியிடம் தொழிற்பட்டதைப்போல creed ஆக  பெரியாரிடம் இருந்ததை உணரமுடியவில்லை.

சாக்ரடீசு, புத்தர், திருவள்ளுவர், ஏசு, நபி, காந்தி போல காலத்தின் எல்லையாக அமர்ந்துவிட்டவர் பெரியார். அவர்கள் செய்த அருஞ்செயல்களைவிட ஒருபடி  மேலாகவே செய்தார் பெரியார். அவர்கள் நன்மைகளை செய்தார்கள்; பரப்பினார்கள். ஆனால் பெரியார் தீமைகளையே எதிர்த்துப் போரிட்டார். விதைகளைத் தூவுகிறவர்களைவிட, மண்டிக்கிடக்கும் களைகளை அகற்றுபவனுக்கும், முட்களை வெட்டியெறிபவனுக்கும், கற்களைப் பொறுக்கி அப்புறப்படுத்துபவனுக்குத்தான் வேலைகள் மிகுதி. முயற்சிகள் மிகுதி. உடலுழைப்பு ஏராளம் எனப் பாவலேறு  பெருஞ்சித்திரனார் எழுதியிருப்பார். தமிழ்  என வரும்போது அவரைப்பற்றிய  கடுமையான விமர்சனங்களையும் அவர் வைத்திருப்பார்.

இந்நூல் முழுமையாக என் வாசிப்பு குறிப்புகள் எனலாம். அதேநேரத்தில் ஆங்காங்கே என் மனதில் தோன்றியவைகளை சொல்லக்கூடிய நூலும் ஆகும். ஏராள விவரங்களை, இந்நூலை பொறுமையாக வாசிப்பவர் பெறக்கூடும். இந்நூல் பதில் தேடவேண்டிய ஏராள கேள்விகளையும் கொண்டதாக  அமைந்துள்ளது. நான் வாசித்து சாரம்சமாக கொடுத்திருக்கும் குறிப்புகள், ஊடாக எழுப்பியிருக்கும் கேள்விகள் அல்லது அபிப்பிராயங்கள் எவருக்காவது பயனளிக்கும் எனில் இந்நூல் அதன் பிறப்பின் நோக்கத்தை அடையும்.

22-10-2024                             ஆர். பட்டாபிராமன்


 

 

திராவிட- திராவிடர் இயக்கம்

வாசிப்பு வழி  சில குறிப்புகள்

உள்ளே

1. திராவிட இயக்கமும் அதன் மரபும்

2. திராவிட ஆய்வு – பேரா சிவத்தம்பி

3. திராவிடர் பூர்வீகம் குறித்து

4. ரிக் வேதகால ஆரியர்கள்

5. சூத்திரர் வரலாறு

6. இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்புகள்

7. ஹார்ட்கிரேவின் திராவிட இயக்கம்

8. ஆரியருக்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு

9. தமிழர் வரலாறும் பண்பாடும்

10. திராவிட இயக்கம் பற்றி பேரா க. அன்பழகன்

11. ’வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்’ நாவலர் நெடுஞ்செழியன்

12. தமிழர் தலைவர் பெரியார்  - சாமி சிதம்பரனார்

13. நெ து சுவின் புரட்சியாளர் பெரியார்

14. பெரியார்- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

15. The Political Carreer of E V Ramasami Naicker

16. பெரியார் அரசியல் வரலாறு

17. என்றும் தமிழர் தலைவர்’- இந்து குழுமம்

18. பெரியாரின் அரசியல் நாத்திகம்

19. வ.ரா வாசகத்தில் ராஜாஜியும் பெரியாரும்

20. பெண் ஏன் அடிமையானாள்

21. ஈரோட்டுப் பாதை சரியா - ப. ஜீவானந்தம்

22. திராவிட மாயை-  சுப்பு

23. பெதிக் லாரன்சும் பெரியாரும்

24. DMK in Power by Philip Spratt

25. எண்ணித் துணிக கருமம்

26. Ethinicity and Populist Mobilisation- Political Parties, Citizens and Democracy in South India

27. என் அண்ணா- வைகோ

28. காந்தி- ஆர்.கே சண்முகம் செட்டியார்

29. தி மு கழக வரலாறு (1916-1960)

30. பெரியார்- அம்பேத்கர் நட்புறவு ஒரு வரலாறு

31. பாவேந்தம் மடல் இலக்கியம்

32. Interpreting The Dravidian Movement

33. திராவிட அரசியலின் எதிர்காலம்

34. தமிழக அரசியலின் எதிர்காலம்

35. ஆட்சிமொழி குறித்து அண்ணாவின் உரையிலிருந்து

36. ஜெய்பீம் திரைப்படம்

37. முகநூல் இடுகைகள் சில

38.பிராமணர் அல்லாதார்  பிரதிநிதித்துவம் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றம்


இணைப்பில் மின் புத்தகம்

https://archive.org/details/dravida-e-book

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...