Hind Swaraj
ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம்
தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 1
காந்தியடிகள் தன் நாற்பதாவது வயதில்
1909 ஆம் ஆண்டில் எழுதிய நூல் இந்திய சுயராஜ்யம் எனப்படுகிற ஹிந்த் ஸ்வராஜ். காந்தியடிகளின் வாழ்நாள் சிந்தனையின் வேராக இந்நூல்
பார்க்கப்படுகிறது. காந்திய சிந்தனைகளுக்கான விதை நெல், நாற்றங்கால், தோற்றுவாய் என்று பலவாறு இந்நூல் பேசப்பட்டுள்ளது.
காந்தியால் தன் தாய்மொழி குஜராத்தியில்
எழுதப்பட்டு, அவராலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூலாக இது கருதப்படுகிறது.
அவரது சுதந்திர சிந்தனையின் வெளிப்பாடாக, நம்பிக்கை முன்மொழிவுகளாக, தனித்த அரசியல்
கோட்பாட்டிற்குரிய ஒன்றாகவும் இந்நூல் ஆய்வாளர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த சிறு
நூலில் இடம் பெற்றுள்ள அவரின் கருத்துக்கள்
’உடோபியா’வல்ல, சோதிக்க தகுந்தவையே என்கிற பார்வை காந்தியிடம் மட்டுமின்றி , அவரின்
ஆய்வாளர் பலரிடத்திலும் இருப்பதைக் காணமுடிகிறது.
பிரிட்டிஷாரின் ஆட்சிக்கால இந்திய
மனிதர்களிடம் அவர்களுக்கான பண்டைய நினைவு கிடங்கு ஒன்று இருப்பதை சுட்டிக்காட்டி, அதை
மீட்டுக்கொள்வதை விடுத்து, தன்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் முறை ஒன்றிடமே மோகித்து
கிடப்பதேன் என்கிற கேள்வியை இந்நூல் எழுப்பியது. நவீன நாகரிகம் எனும் நோயிலிருந்து
விடுபடுவீர் என்கிற அறிவுரையை, தன் சொந்த சோதனைகள் வழி காந்தி தந்திருந்தார். நூல்வழி
தான் பேசியவற்றை வாழ்நாள் முழுதும் அவர் சோதித்து கொண்டவராக இருந்தார்.
உரையாடல்களில் எப்போதும் நம்பிக்கைக்கொண்ட
காந்தி, இந்நூலை வாசகர்- பத்திரிகை ஆசிரியர் என்கிற விவாத வழியே அமைத்துக்கொண்டார்.
பண்டைய இந்திய முறையான குரு- சிஷ்யன் என்கிற பாங்கில் அமைத்துக்கொள்ளவில்லை. நவீன உலகம்
தந்த பத்திரிகை என்பதை அவர் பயன்படுத்தவே செய்தார். இந்நூல் எந்த வறட்டுத்தன பிடிவாதத்தையும்
கொண்டதல்ல. காந்தி தன் வாழ்க்கையில் கண்டடைந்த, உணர்ந்தவைகளின் பிரதிபலிப்புகளாக அந்நூலை
1909ல் எழுதியிருந்தார். சர்ச்சைக்குரிய கருத்துக்கள், ஏற்கமுடியாது என ஒருவர் எண்ணக்கூடிய கருத்துக்கள் இடம் பெற்றிருக்கலாம்.
அவர் தொடர் உரையாடல்களுக்கும், அவற்றின் விரிவுகளுக்கும் இடமளித்தே நூலை எழுதியுள்ளார்.
வாசிக்கும் காலந்தோறும் புதிய அர்த்தங்களுக்கும் விரிவுகளுக்கும் இடமளிக்கின்ற நூலாக
படிப்பவர் உணரமுடியும்.
19 ஆம் நூற்றாண்டு எழுத்துக்கள்
கேள்வி பதில் என்கிற வகையில்- ”கடேசிசம்’ வகையில் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடியும்.
கிறிஸ்துவ ஞாயிறு உபதேசங்கள் இவ்வகையில் நடந்துள்ளன. மார்க்சின் உற்றத்தோழர் எங்கெல்ஸ்
கூட இந்த கடேசிசம் முறையில்தான் (catechism)
The Principles of Communism நூலை யாத்திருப்பார்.
காந்தியும் இம்முறையை எடுத்துக்கொண்டு உரையாடலை பெருக்கியிருப்பார்.
Comments
Post a Comment