ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம்
தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்-
3
3
லண்டன் படிப்புக்காலம் தொடங்கி,
தனது இந்திய குடும்பப் பின்னணியுடன், அவரது அறிவுசார் வளர்ச்சியின் பாதை மிக விரிவான
ஒன்றாகவே அமைந்ததை நாம் காணமுடியும். சைவ உணவு குறித்த அமைப்புகளில் பயிற்சி, தியோசிபிகல்
எழுத்துக்கள், புத்தர், கீதை, இந்திய உபநிடதங்கள், கிறிஸ்துவ இலக்கியங்கள்- மலைப் பிரசங்கம்,
குரான் வாசிப்பு இன்னும் பல்வேறு மதப்பிரதிகள் குறித்த அறிமுகம், இந்தியாவின் வைர வியாபார
குடும்பப் பின்னணியில் பெரும் இந்திய பண்டைய இலக்கிய சிந்தனையாளராக இருந்த ராய்சந்துடன்
உரையாடி அனேகானந்தவாதம்- விவாத பன்முகம் கற்றல் என அவரின் உள்வாங்கும் திறன் வலுவாக
போய்க்கொண்டிருந்த காலமது.
தாதாபாய், கோகலே போன்ற தலைவர்களுடன்
நெருக்கம், இந்திய ஒபீனியன் இதழில் தொடர்ந்து இந்தியா குறித்து எழுதுதல் என்பனவும்
நடந்துகொண்டிருந்தது. தனது சட்டப்படிப்பு வழி கற்றுக்கொண்டவையும் அவருக்கு எழுத்தை
கச்சிதமாக வடிவமைக்க உதவின. பிளாட்டோ வழியாக சாக்ரடிசை உணர்ந்து அவரை பெரும் சத்தியாகிரகி
என உருவகித்தது, ரஸ்கினை உள்வாங்கி கடையனுக்கு மோட்சம்- உழைப்பு வழி வாழ்வே சிறந்தது
என்கிற உழைப்பு கோட்பாடு- சமத்துவ சிந்தனைகள் அவரை பெருமளவு பற்றிக்கொண்டன. ரஸ்கின்
’அன் டு தி லாஸ்ட்’ நூலைத்தான் அவர் தன் உள்வாங்கலில் சர்வோதயா என நூலாக்கி தந்தார்.
ரஸ்கினிடமிருந்து அவர் 1904லேயே
மூன்று முக்கிய கோணங்களை எடுத்தாண்டார். தனிநபர் ஒருவரின் நன்மை அனைவரின் நன்மையில்
அடங்கியுள்ளது. வக்கீலின் உழைப்பும் முடிதிருத்துவர் உழைப்பும் சமமானதே. அவரவர் உழைப்புக்கேற்ற
ஊதியம் உரிமைகளை அவரவர்கள் பெறலாம். உழைத்து உண்பதே சிறந்தது. விவசாயமும் கைத்தொழிலும்
சிறப்பானவை என நாம் அவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
டால்ஸ்டாயிடமிருந்து அவர் 1905லேயே
கற்றுக்கொள்ளவேண்டியவை என்ன என இந்தியன் ஒபீனியலில் எழுதலானார். சொத்து மீதான மோகம்
நீக்குதல் என்பதை அவர் இந்திய இலக்கியங்களிலிருந்து குறிப்பாக உபநிடதத்திலிருந்து எடுத்துக்கொண்டாலும்,
டால்ஸ்டாய் எழுத்தில் செல்வத்திற்காக ஓடாதே என்பதை சரி பார்த்துக்கொண்டார். தீமை செய்தார்க்கும்
நன்மை என பைபிள் சொன்னதையும் , எவரிடமும் சண்டைக்காக நிற்காதே, உரிமையைவிட கடமையில்
கவனம் கொள், விவசாயம் உன்னதத் தொழில், ஆலைகள் சுரண்டல் கூடம், அன்பே வாழ்வின் ஆதாரம்
என சிலவற்றை அவர் டால்ஸ்டாயிடம் சரி பார்த்துக்கொண்டார்.
லண்டனில் இருந்தபோதுதான் செப்டம்பர்
1909ல் அவர் எட்வர்ட் கார்பண்டரின் புகழ் வாய்ந்த நூலான ’நாகரிகம் காரணங்களும் தீர்வும்’ என்கிற நூலை (civilisation its causes and
cure) அவர் படித்து முடித்தார். மேலை நவீன
நாகரிகம் மீதான அவரிடம் இருந்த பார்வையை இந்நூல் உறுதிப்படுத்தியது. அதேபோல மாக்ஸ்
நோர்டாவ் எழுதிய நாகரிகம் குறித்த நூல் ஒன்றையும் அவர் செரித்துக்கொண்டார்.
பரபரப்பான அதிவேக உலகின் தீங்குதனை
பேசக்கூடிய டைலர் அவர்களின் ’வேகத்தின் வழுவாதம்’ ( fallacy of speed ) என்பதும் அவர் உள் சென்றது. 1909 செப்டம்பர் 18ல்
எழுத்தாளர் செஸ்டர்டன் கட்டுரை ஒன்றும் அவரை தொந்தரவு செய்திருந்தது.
தோரோவை அறிவதற்கு முன்பாகவே அவர்
சத்தியாகிரக சோதனையை செய்திருந்தாலும், தோரோவின் வாசிப்பால் சிவில் ஒத்துழையாமையின்
சிறப்பை அவர் மேலும் கூர்தீட்டிக்கொண்டார். மாஜினியிடம் மனிதனின் கடமை என்பதின் அழுத்தத்தை
அவர் உணர்ந்தார்.
பிரிட்டிஷ் ஆட்சியின் கொள்ளை குறித்த
நவ்ரோஜியின் எழுத்துக்களும் , ஆர் சி தத்தின் பொருளாதார வரலாறும் அவர் கண்களை கலங்க
வைத்தன. இக்கொள்ளைக்கு தாமே முன்வந்து இந்தியர் தலைவணங்கி அனுமதிப்பதை பார்த்து அவர்
கவலைகொண்டார்.
இந்திய சுயராஜ்யம் நூல் இப்படியான
பல்வேறு அறிவார்ந்தவர்களின் படைப்புக்களை உள்வாங்கி காந்தி தன் மொழியில் வெளிப்படுத்திய
நூலாக அமைந்ததைக் காண்கிறோம். அந்நூல் இறுதியில் இணைப்பாக கொடுத்துள்ள நூல் பட்டியலில்
உள்ள 20 நூல்களில் இரண்டு மட்டுமே இந்தியர் நூல்கள், மீதி அனைத்துமே இயந்திரத்தொழில் நாகரிக உலகு குறித்த மேலைச் சிந்தனையாளர்கள் விமர்சனமே
என நம்மால் காணமுடியும். இந்தியாவின் பண்டை நாகரிகம் குறித்து விதந்து பேசியுள்ள சிறந்த
சிந்தனையாளர்களாக மாக்ஸ்முல்லர் , செய்மன் கே, விக்டர் கசின், ஷெலிகல் , துபாயிஸ்,
தாமஸ் மன்றோ, வெட்டர்பர்ன் போன்ற சிலரின் பெயரையும் அவர் தந்துள்ளதைக் காண்கிறோம்.
நூறு பக்க நூல் எழுத எவ்வளவு விரிவாக அவர் கற்றுள்ளார் என்கிற பிரமிப்பை ஒருவரால் உணரமுடியும்.
Comments
Post a Comment