ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம்
தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்-
4
4
லண்டனிலிருந்து தென்னாப்பிரிக்கா
திரும்பிட ’கில்டோனின் காசில்’ கப்பலில் ஏறியதிலிருந்தே தன் கடுமையான வேலையை அவர் மேற்கொண்டார். நவம்பர் 13- 22, 1909 ஆகிய
10 நாட்களில் கப்பலில் கிடைத்த காகிதங்களில் 271 பக்கங்களில் அவர் ’ஹிந்த் சுயராஜ்யா’
வை குஜராத்தி மொழியில் எழுதினார். நவ 22 அன்று நூலை முடித்து அதற்கு முன்னுரை எழுதியுள்ளார்.
வலது கை வலித்தபோதெல்லாம் இடது கையால் எழுதியுள்ளார். எவ்வளவு பக்கங்கள் இடது கையால்
எழுதினார் என்பதில் மாறுபட்ட எண்ணிக்கைகள் சொல்லப்பட்டு வருகின்றன.
நன்கு மனதில் ஊறப்போட்ட சிந்தனை
என்பதால் மிகவும் கவனமான சொற்கள் வருவதில் கஷ்டம் ஏதுமில்லாமல் போனது. மிகக் குறைந்த
இடங்களிலேயே அவர் திருத்தியுள்ளார் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
தென்னாப்பிரிக்கா வந்தவுடன் பீனிக்ஸ்
ஆசிரம அச்சகத்திலேயே இந்தியன் ஒபீனியன் இதழில் 1909 டிசம்பர் 11, டிசம்பர் 18ல் இந்திய
சுயராஜ்யம் வெளியிடப்படுகிறது. 1910 ஜனவரியில் குஜராத்தி நூலாக வெளிவந்து இந்தியாவிற்கு
அனுப்பப்படுகிறது.
கல்லன்பக்கிற்கு கப்பலில் இருக்கும்போதே
இந்நூல் பற்றி நவ 25, 1909 அன்று காந்தி முதலில் தெரியப்படுத்துகிறார். அங்கும் கூட
நூலின் தலைப்பை சொல்லாமல், பின் குறிப்பில் ஒரு நூலை சுயமாக எழுதியிருக்கும் செய்தியை
பரிமாறிக்கொள்கிறார்.
கல்லன்பக் வேண்டுகோளை ஏற்று , இருவருக்கும்
கிடைக்கும் நேரங்களில் காந்தி ஆங்கிலத்தில் சொல்லச் சொல்ல கல்லன்பக் எழுதுகிறார். அப்பிரதியை தென்னாப்பிரிக்கா
ஆங்கில நண்பர் சிலருக்கு அனுப்பி அவர்களின் கருத்துக்களை காந்தி கேட்கிறார்.
காலம் செய்யும் வினைகள் விநோதமானதாக
அமையும். பம்பாயில் உளவுத்துறையினர் கையில் குஜராத்தி நூல் சிக்கியது. காந்தி எதையும்
இரகசியமாக , ஒளிவு மறைவாக செய்யவில்லை. உளவு அமைப்பினர் குஜராத்தி மொழி அறிந்த ஒருவரிடம்
மார்ச் 10, 1910ல் கொடுத்து அதன் ஆங்கில குறிப்பைக் கேட்கின்றனர். 21 பக்க குறிப்பு
கொடுக்கப்படுகிறது. ஆசிரியர் வன்முறையையோ கலகத்தையோ தூண்டவில்லை. ஆனால் பிரிட்டிஷ்
அரசாங்கம் எதிர்த்த போராட்ட அறைகூவல் என்கிற ஆபத்து அதில் இருக்கிறது என்கிற பொருளில்
அக்குறிப்பு எழுதப்பட்டிருந்தது. எம் கே காந்தி பெயரில் வந்த பப்ளிகேஷன்ஸ் என்ன என்ன
என்பதைப் பார்த்து அவற்றை எல்லாம் இந்திய சுயராஜ்யம் என்பதுடன் தடைப் படுத்தினர். சாக்ரடிஸ்
குறித்த பிளாட்டோவின் நூல், கமல் அடாதுர்க் உரை, ரஸ்கின் நூல் என 4 வெளியீடுகளும் மார்ச்
24, 1910ல் தடை செய்யப்பட்டன. காங்கிரஸ் ஆட்சி அமைத்த பின்னர்தான் 1938 டிசம்பர்
21ல் அதிகாரபூர்வமாக தடை நீக்கப்படுகிறது.
நமது வெளியீடுகள் தடைக்கு உள்ளாக்கப்பட
இருக்கின்றன என்ற செய்தி அறிந்த காந்தி அது குறித்து இந்திய ஒபீனியனில் எழுதிவிட்டு,
அதன் ஆங்கில நூல் வரவிருக்கிறது. அது தனியாக 6 பென்ஸ் விலையில் வரலாம் எனத்தெரிவிக்கிறார்.
மார்ச் 20 1910 அன்றே ஆங்கில நூலை முன்னுரை எழுதி வெளியிடுகிறார். இந்தியன் ஹோம் ரூல்
என அது வெளியானது. 1914ல் குஜராத்தி பதிப்பு மீண்டும் வெளியாகிறது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக ராஜாஜி
குறிப்புடன் ஆங்கில நூல் 1919ல் வெளியாகிறது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பு பரலி சு நெல்லையப்பர்
அவர்களால் செய்யப்பட்டு மே 1921ல் கொணரப்படுகிறது. ராஜாஜி குறிப்புடன் வந்த ஆங்கில
நூல் ’ஹிந்த் ஸ்வராஜ் அல்லது இந்தியன் ஹோம் ரூல்’ என வந்தது. இதன் பின்னர் அந்த நூல்
1938ல் நவஜீவனால் கொணரப்பட்டு அதற்கு மகாதேவதேசாய் முன்னுரை எழுதுகிறார். இதன் திருந்திய
பதிப்பாக 1939ல் கொணரப்பட்டு, அப்பதிப்பே இன்றுவரை வெளி வந்துகொண்டிருப்பதைக் காண்கிறோம்.
1924ல் அமெரிக்காவில் ஹிந்த் ஸ்வராஜ்
ஜான் ஹோம்ஸ் மற்றும் ஹரிதாஸ் மஜூம்தார் முயற்சியால் ’ஸெர்மன் ஆன் தி ஸீ’ ( sermon
on the sea) என்று வெளியானது. அமெரிக்காவில்
காந்தியைக் கொண்டு சென்றவர்களில் இவர்கள் இருவருக்கும் முக்கிய பங்கிருக்கிறது. இருவரும்
காந்தி குறித்து நூல்கள் எழுதியுள்ளனர்.
இங்கிலாந்தில் ’ஹிந்த் ஸ்வராஜ்’
குறித்த விவாதத்திற்கு ’ஆர்யன் பாத்’ என்கிற இதழ் மேடை அமைத்துக்கொடுத்தது. 1938 செப்டம்பர்
சிறப்பிதழ் ஒன்றை சோபியா வாடியா ஆசிரியராக இருந்து பல்வேறு அறிஞர்களின் விவாதப் பொருளாக
’இந்திய சுயராஜ்யத்தை’ மாற்றினார்.
’இந்திய சுயராஜ்யம்’ 2009ல் நூற்றாண்டை
கண்டபோது அந்தோணி பரேல் கொணர்ந்த Hind Swaraj and Other writings வந்தது. வார்தாவில்
நவம்பர் 2009ல் அமர்ந்து இரு நாட்கள் கருத்தரங்கம் நடத்தி கட்டுரைகளைப் பெற்று Reflections
of Hind swaraj Edited by Sibi K Joseph, Bharath வந்தது. காந்தி அருங்காட்சியகம் சார்பில் Gandhi on Hind Swaraj and select Views of others by National Gandhi
Museum வந்தது. 1985ல் நாகேஸ்வர பிரசாத் Hind Swaraj A fresh look by Gandhi Peace
foundation சார்பில் கொணர்ந்துள்ளார். 2022ல்
ராஜிவ் பர்கவா ஆசிரியராக இருந்து பலர் கட்டுரைகளைத் தொகுத்து Politics Ethics and Self – rereading of Hind
Swaraj கொணர்ந்தார்.
தமிழில் மகாத்மா தொகுப்பு நூல் வால்யூம்
1ல் வேங்கடராஜு மொழிபெயர்ப்பில் இந்திய சுயராஜயம்
1957ல் வந்ததைக் காண்கிறோம். இன்றும் சிறந்த மொழிபெயர்ப்பாக இதை உணரமுடிகிறது. 2019ல்
காந்தியின் 150 ஆம் ஆண்டில் மறைந்த ஈரோடு டாக்டர் ஜீவானந்தன் அவர்களில் மொழிபெயர்ப்பில்
(சற்று சுதந்திரமான மொழிபெயர்ப்பாக) இந்திய சுயராஜ்யம் வந்தது. பரலி மொழிபெயர்ப்பும்
வேங்கடராஜு மொழிபெயர்ப்பும் இணையத்தில் கிடைக்கின்றன.
1909ல் சிறு நூலாக வெளிவந்து கடந்த நூறாண்டில் தொடர்ந்த விவாதப்பொருளாக ’இந்திய
சுயராஜ்யம்’ இருப்பதைக் காண்கிறோம்.
Comments
Post a Comment