ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம்
தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்-
5
5
காந்தி இந்நூலில் ’ரீடர்’ என எவரையெல்லாம்
மனதில் வைத்து எழுதினார் என்பதை முன்னரே சுட்டிக்காட்டியுள்ளேன். அந்தோணி பரேலுக்கு
4 முக்கிய ஆளுமைகள் இந்த வாசக அடையாளங்களாக இருக்கும் எனத் தோன்றியுள்ளது. சாவர்க்கர்,
விரேந்திரநாத் சட்டோ, ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, டாக்டர் பிரஞ்சீவன் மேத்தா என்கிற நால்வரை
பரேல் உருவகப்படுத்துகிறார்.
1940வரை காந்தி எவருக்காக எழுதினேன்
என எவர் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. 1940 பிப்ரவரி 21 அன்றுதான் தன் நண்பர்
டாக்டர் பிரஞ்சீவன் மேத்தாவிற்காகத்தான் எழுதியதாக காந்தி சேவா சங்க கூட்டத்தில் சொல்கிறார். காந்தி
லண்டனில் இருந்த 1909ன் மாதங்களில் இருவரும் இரவு 11 மணிக்கு மேல் அமர்ந்து பல்வேறு
அம்சங்களை விவாதித்த செய்தியை டாக்டர் மேத்தா பற்றி எழுதிய மெக்ரோத்ரா சொல்கிறார்.
காந்தி 1940 பிப்ரவரியில் பேசும்போது,
நாங்கள் இருவரும் நடத்திய உரையாடல் அப்படியே என்னால் எழுதப்பட்டுள்ளது. அந்த நண்பரும்
மனம் மாற்றம் பெற்றார் என்கிறார். விவாத காலத்தில் மேத்தா காந்தியை நட்புரிமையுடன்
விமர்சித்தவர். ஆரம்பத்தில் காந்தி ’வாசகர்’ எனப் பொதுப்படத்தான் பேசியுள்ளார். வன்முறை
வழியை நாடும், ஆங்கில கல்வி பின்புலம் கொண்ட,
இயந்திர தொழில் சூழல் உற்பத்தி- நாடாளுமன்றம் நவீன நாகரிகம் ஏற்கும் மத்தியதர
வர்க்கம், வெளிநாட்டு வாழ் புரட்சியாளர்கள் என்பதாகவே நாம் உணர்ந்த்தப்படுகிறோம்.
1940ல் அவர் மேத்தா என்கிற பெயரை வாசகரின் அடையாளமாக தருவதைக் காண்கிறோம்.
ஏன் எழுதினார்- எது அவரை அவசரமாக
உந்தி தள்ளியது என்கிற கேள்வியை காந்தியே எழுப்பிக்கொண்டு பதிலும் தந்துள்ளார். எனது
இதயத்தை இனியும் திறக்காமல் இருக்க முடியாது என்கிற அவதியை அவர் உணர்ந்தார். வன்முறை
கொலைவழி கூடாது என்பதை கொண்டு செல்லவேண்டிய அதிஅவசரம் அவரை உந்தித் தள்ளியுள்ளது. இந்திய
சுயராஜ்யத்திற்கான தீர்வு வன்முறை வழி அமைவது பெரும் தீங்காக அமையும் எனக் கருதினார்.
காலனியம் என்கிற கொடுமையைவிட நவீனநாகரிகத்தின் கொடுமை அதிகமாக இருக்கும் என அவர் ஊகித்தார்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக இந்தியா
தனக்கான தனித்த வழி போராட்டமான சாத்வீக எதிர்ப்பு- சத்தியாகிரகம் அவசியம் என அவர் முன்வைக்க
விழைந்தார்.
இந்தியாவிற்கென நீண்ட மரபான நினைவு
கிடங்கு இருக்கிறது. அதன் அழகே ’கட்டுபாடுள்ள எளிமை, போதும் என்கிற நிறைவுகொண்ட தானே
முன்வந்து மேற்கொள்ளும் வறுமை, அவசர வேகம்
தவிர்த்த நிதானகதி நடவடிக்கைகள்’ என்பதை சொல்ல அவர் விழைந்தார். அவரது இந்த நூல் ஒவ்வொரு
இந்தியனின் , ஏன் இன்னும் ஒவ்வொரு மனிதனின் சுய ஒழுக்க நன்னெறிக்கான மேடை என நாம் உணரமுடியும்.
தடம் புரளும் மானுடத்தை, அதன் உன்னத மானுட நேயத்தை சுட்டிக்காட்டி மீட்கும் படைப்பாக
உணரலாம்.
லெனின் காலனியம் என்பதை முதலாளித்துவ
பேராசை என விளக்க முனைந்தால் காந்தியோ காலனியத்தை நவீன நாகரிகத்தின் பேராசையாக காட்டுகிறார்.
Comments
Post a Comment