Skip to main content

ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம் தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 7

 

ஹிந்த்  ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம்

தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்- 7

7

இந்திய சுயராஜ்யத்தில் காந்தியின் முன்மொழிவுகளாக கீழ்கண்டவற்றை நாம் எடுத்துக்கொள்ளலாம். பிரதியை வாசிப்பவர் இதனை உணரமுடியும்.

1.   வெறுப்பிற்கு பதில் அன்பு நெறி- பலாத்காரத்திற்கு பதில் தன்னலத் தியாகம்- மிருக சக்திக்கு பதில் ஆன்ம சக்தி

2.   சாத்வீக எதிர்ப்பு இந்தியாவிற்கு மட்டுமன்றி மனித குலத்திற்கே அவசியமான வழியாகும்

3.   ஆள்பவர்கள் செய்வதில் உடன்பாடின்மை இருக்கும் நிலையில் சாத்வீக எதிர்ப்பு ஒருவரின் கடமையாகிறது

4.   மேற்கிலிருந்து இந்தியா பெற்று வருகிற நவநாகரிகத்தை இந்தியா கைவிடுமாயின் அதற்கு நன்மையே உண்டாகும்

5.   நான் சொல்லும் சுயராஜ்யத்தை அடைய இந்தியா இன்னும் பக்குவமாகவில்லை. ஆனால் அது எனது சித்தாந்தம். அதற்கு தனிப்பட்ட ஒருவனாக ஆயினேன் என்றாலும் பாடுபட்டே வருவேன்

6.   உயர்வான நாகரிகம் என்பது புதியவகை மருத்துவம் நீதிஸ்தலம், ரயில்வே, இயந்திரத் தொழிலில் இல்லை. ஒழுக்கத்தை இம்மியும் இவைகள் உயர்த்தவில்லை. தீமைகளாகவே இருக்கின்றன. உயர்வான நாகரிகம் எளிமையிலும் தியாகத்திலுமே இருக்கிறது

7.   நான் முன்வைத்துள்ள திட்டத்தில் அகிம்சை மட்டுமே (1921ல் சொன்னது) நிறைவேற்றப்பட்டு வரும் அம்சமாக இருந்துவருகிறது. முழுமையாக இந்தியா அதனை ஏற்குமெனில் சுயராஜ்யம் கிட்டும்

8.    ஹிந்த் ஸ்வராஜில் நான் சொன்னதை முழுமையாக நிறைவேற்றினால் தீங்கு என ஏதும் நேராது

9.   நாம் எந்த ஏணியின் உதவியைக்கொண்டு மேலே போயிருக்கிறோமோ அந்த ஏணியை உதறித்தள்ளுவது புத்திசாலித்தனமானதல்ல. மரம் ஒரு நாளில் வளர்ந்து விடுவதில்லை. காங்கிரஸ் விதையை போல் உள் அமர்ந்து தன் வேலையை செய்து வருகிறது. நாம் வெளித்தெரியும் மரத்தைக் காண்கிறோம்.

10. முன்னோர்கள் சொன்னதை எல்லாம் ஏற்க வேண்டியதல்ல. மனசாட்சிப்படி நாம் நடந்துகொள்ளலாம். ஆனால் அவர்கள் வேலையை அலட்சியப்படுத்தி சொல்லக்கூடாது.

11. நமக்கு மாறுபட்டவர்கள் தேச விரோதிகள் என்று சொல்வது கெட்ட குணம். இன்னொருவர் எண்ணம் என்பதாலேயே அது கெடுதலானது எனச் சொல்லக்கூடாது

12. நீதியை விரும்புகின்ற நாம் மற்றவர்களிடம் நீதியுடன் நடக்கவேண்டும்

13. பிரச்சனையின் தீர்விற்கு மனுக்கள் மட்டும் போதாது. ஆதரவான மக்கள் பலம் என்கிற திரட்சியும் வேண்டும்

14. திருப்தி கொண்டவர்களை தூண்டுவது கடினமானது. அதிருப்தியும் அமைதியின்மையும் எந்த சீர்திருத்தம் கொணர்வதற்கும் தேவைப்படுகிற சூழல்கள்

15. சுயராஜ்யம் என்பதை ஆங்கிலேயரை வெளியேற்றுவது என நினைக்கிறோம். ஆங்கிலேயர் இல்லா ஆங்கிலேயர் முறைகள்- புலியில்லா புலியின் குணத்தை வைத்துக்கொள்ள விழைகிறோம். அதே முறைகள்- நிருவாக முறைகள்- நிறுவனங்கள் என்றால் அது  இங்கிலிஸ்தானா அல்லது ஹிந்துஸ்தானா?

16. நாடாளுமன்றம் எப்படியிருக்கிறது? சுயநலமிகளின் கூடாரமாக இருக்கிறது. விலை உயர்ந்த பொம்மையது. பேச்சுக்கடையாக இருக்கிறது. பிரதமர் என்பதாலேயே அவர் உயர்ந்த தேசாபிமானியாவதில்லை. அவர் கட்சி நலன்,  என்கிற கட்சி அபிமானியாகவே செயல்படுகிறார்.  அங்கு உறுப்பினர்கள் நேர்மைக்கும் மனசாட்சிக்கும் முன்னுரிமை தருவதைவிட கட்சிக்கும் சுய நலத்திற்கும் முன்னுரிமைத் தருகிறார்கள். மக்கள் எப்படியோ அப்படித்தான் அவர்களுக்கான நாடாளுமன்றமும் அமைகிறது.

17. பத்திரிகைகள் எப்படி இருக்கின்றன? மக்களின் குரலை அவர்களின் தேவையை அறிந்து அச்சமின்றி சொல்கின்றனவா? அவை கட்சிகளின் ஊதுகுழலாக இருக்கின்றன. ஒருவரை ஒரு பத்திரிகை சிறப்பாக பேசினால் வேறொன்று இகழ்ந்து பேசுவதைக் காண்கிறோம். கட்சி பேச்சாளர்களிடம் மயங்கி செல்லும் மக்களை மீட்க பத்திரிகைகள் உதவுகின்றனவா?

18. தங்களுக்கு எதிராக தங்களை விமர்சித்து விவாதிக்கக்கூடியவர்கள் இருக்கிறார்களா? கனவை உண்மையென நம்பி ஒருவித மயக்க நிலையில் மக்கள் ஆழ்த்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்

19. உடலைப் பேணுதல்- செளகரியம்- இன்பம் என்பதே இலட்சியமானால் என்னவாகும்? பணத்தாசை , ஆடம்பர வாழ்க்கை என்கிற நோய் பீடித்தால் என்னவாகும்?  டாக்டர், வழக்கு என்கிற ஜீவனை அரிக்கக்கூடிய நாகரிக மோகத்தில் கட்டுண்டுள்ளோம்

20. இந்தியா வருந்ததக்க நிலையில் இருக்கிறது. நினைத்தால் கண்ணீர் வருகிறது. நவநாகரிகத்தால் நசுக்கப்பட்டு வருகிறோம். இந்த நவநாகரிகம் என்கிற வியாதி அப்படி ஒன்றும் போக்க முடியாத வியாதியல்ல.

21. இந்தியா மதவிரோதி நாடாகி வருகிறது. கடவுளிலிருந்து விலகி செல்கிறோம். நமது பேராசையை பேரவாவை கட்டுப்படுத்தவே மதங்கள் சொல்கின்றன. மதம் என்கிற பெயரில் நம்மை ஏமாற்றுவோர் மோசமானவர்கள். அந்த மோசடிகள் ஏற்கத் தகுந்ததல்ல. அதே நேரத்தில் மத விஷயங்களில் நம்மை ஏமாற்றுபவர்களைவிட, உலக விவகாரங்களில் நம்மை ஏமாற்றுவோர் இன்னும் மோசமானமார்கள்.

22. மத மூடநம்பிக்கைகள் வேண்டாம். அவை களையப்படவேண்டும். மதத்தை அவமதித்து அதை ஒழிக்க முடியாது. மதித்து நடந்துதான் ஒழிக்க வேண்டும்.

23. இந்தியா ஒரே தேசிய இனமாக இருந்துள்ளது. வாழ்க்கைத் தன்மை ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது. இயற்கை நிலபரப்பும் அதற்கு உதவியாக இருக்கிறது. அயலார் வருவதால் தேசியம் பாழ்படாது.

24. மனிதர்கள் எத்தனையோ அத்தனை மதங்கள் இருக்கலாம். தேசிய உணர்ச்சி என்பது மத கோட்பாடுகளில் தலையிடுவது என்பதல்ல.

25. இந்தியாவில் இந்துக்கள் மாத்திரமே இருக்க வேண்டும் என்று இந்துக்கள் நம்பினால் அவர்கள் கனவுலக வாசிகளே

26. இந்து முஸ்லீம் இடையே வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அது உடன் பிறந்த பகை என ஏதும் இருக்க முடியாது. நமது வளர்ச்சிக்கு நாம் பின்பற்றாத மதத்தினருடன் சண்டையிட வேண்டியதில்லை.

27. பசுவை நாம் மதிக்கலாம். பசுவை பாதுகாக்க முஸ்லீமை கொல்வது சரியில்லை. ஒருவர் தன் உயிரை வேண்டுமானால் மாய்த்துக்கொள்ளலாம். சகோதரர் ஒருவர் உயிரை எடுக்கக்கூடாது. இதுவே நமது தர்மம். ஒவ்வொரு இந்துவிற்கும் அகிம்சை மீது நம்பிக்கை இருக்கிறது எனச் சொல்ல முடியுமா?

28. மனிதர்கள் பிடிவாதக்காரர்களானால் நிலைமைகள் சங்கடமாகும். நான் உயர்ந்தவன் என்கிற அகம்பாவம் தீர்க்காது. நான் பணிந்தால் மற்றவரும் பணிவர். பணிந்து போவதில் தவறு ஒன்றும் இல்லை

29. ஒவ்வொருவரும் தங்களுடைய மத தத்துவத்தை நன்கு அறிந்து, போலி போதகர்களுக்கு இடம் கொடுக்காமல் இருந்தால் சண்டை சச்சரவு இருக்காது.

30. சமாதானமாக வாழ இந்து முஸ்லீம் முடிவெடுத்துவிட்டால் மூன்றாமவரான ஆங்கிலேயர் தலையீடு தேவைப்படாது.

31. எல்லோருடைய சரித்திரத்தையும்  எழுதுவதாக ஆங்கிலேயர் பாசாங்கு செய்கிறார்கள். அவை நம்மை மயக்குகின்றன. அறியாமையால் அதற்கு பணிகிறோம்.

32. வக்கீல், நீதிபதி, டாக்டர்  எல்லாம் தெய்வப்பிறவிகள் என்கிற பாவனை எதற்கு? ஏன் ஆடம்பரம்? தொழிலாளியைவிட எந்த வகையில் இவர்கள் நல்லதைச் செய்கிறார்கள். ஏழைத் தொழிலாளிவிட இவர்களுக்கு இவ்வளவு கட்டணம் ஏன்? அவர்களே அதை முடிவு செய்யும் உரிமையையும் அவர்கள் வைத்திருக்கின்றனர்.

33. இந்தியா உருவாக்கியிருந்த நாகரிகம் இணையற்றது. அனுபவ சோதனைகளில் சரியானவற்றை மாற்ற வேண்டியதில்லை. இங்கு வந்து திணிப்பதையெல்லாம் இந்தியா ஏற்றதில்லை. அதுவே அதன் அழகு.

34. மனிதனுக்கு கடமையின் மார்க்கத்தைக் காட்டும் ஒழுக்கமுறையே நாகரிகம். கடமையும் ஒழுக்கமும் ஒன்றுக்கொன்று பொருத்தமானவை. குஜராத்தியில் நாகரிகம் என்பதற்கு நன்னடத்தை எனப்பொருள்.

35. பணக்காரன் என்றால் எப்போதும் ஆனந்தமாகவும் , ஏழை என்றால் எப்போதும் துக்கமாகவும் இருப்பார்கள் என நினைக்க வேண்டாம். மகிழ்ச்சி என்பது மனநிலை சார்ந்தது.

36. நல்லது நத்தையைப்போல் தான் நகரும். நல்லது செய்பவர் பரபரப்பாக இருக்கவேண்டியதில்லை. தீமைக்கு இறக்கை உண்டு. மக்களிடம் நன்மை தோன்றும்படி செய்திட  நாட்கள் பிடிக்கும்.

37. கை கால்களை சரியாக உபயோகிப்பதில்தான் ஆனந்தம் இருக்கிறது. இந்தியாவில் நவநாகரிகம் எட்டாத பகுதிகள் உண்டு. நம்மை பார்த்து அவர்கள் சிரிக்கக்கூடும். நாம் எவர் பெயரால் இவ்வளவு பேசுகிறோமோ அவர்களை அறியோம். அவர்களுக்கும் நம்மை தெரியாது. அவர்கள் நம்மை அறியார்.

38. மனிதன் தன் கை கால்களை கொண்டுசெலுத்தும் அளவிற்குத்தான் தன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்திக்கொள்ள இயற்கை அவனைப் படைத்துள்ளது. இயங்கும் ஆசைக்கு வரம்பிருக்கிறது. என்னைச் சுற்றியிருப்பவர்க்கு மட்டுமே சேவை செய்யக்கூடிய அளவிற்கு நான் ஆக்கப்பட்டிருக்கிறேன். என் அகந்தையின் காரணமாக என் உடலைக்கொண்டு இப்பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சேவை செய்யவேண்டும் என்று பாசாங்கு செய்கிறேன். இவ்வாறு அசாத்தியமானதை செய்துவிட முயலுவதால் மனிதன் தோல்வி அடைகிறான்.

39. இந்திய நாகரிகத்தின் தன்மை ஒழுக்கத்தை உயர்த்துவதேயாகும். நவநாகரிகம் நம்மிடம் ஒழுக்கக்கேட்டை சேர்க்கிறது. நம்மிடம் குறைகள் உண்டு. ஆனால் அவை புராதன நாகரிகம் எனச் சொல்லப்படமுடியாதவை. குறைகளை நீக்க முயற்சிப்போம்.

40. எல்லா நாகரிகங்களும் சோதனையில் தான் இருக்கின்றன. நம்மைப் பொறுத்தவரை நோயின் காரணத்தை நீக்கிவிட்டோமெனில் நோயை நீக்கிவிடலாம்.

41. நாம் மோசமானவர்களாக இருந்தால் அனைவரும் அப்படியே என்கிறோம். நம் அளவுகோலைக்கொண்டு பிரபஞ்சத்தை அளக்கப் பார்க்கிறோம்.

42. நம்மை நாமே ஆளத்தெரிந்துகொள்வதுதான் சுயராஜ்யம். அது கனவல்ல. ஆயுள் உள்ளவரை ஒவ்வொருவரும் தனக்குத்தானே அனுபவிக்கும் சுயராஜ்யமது. ஆனால் அதற்கு பாடுபடவேண்டும்

43. நாம் நம் வீட்டை  சரியாக வைத்துக்கொண்டால், அதில் வசிக்க தகுதியுள்ளவர் மட்டுமே தங்குவர், மற்றவர் போய்விடுவர்.

44. இதுவரை சரித்திரத்தில் நிகழாத ஒன்று எப்பொழுதுமே ஏற்படாது என நம்புவது மனித கண்ணியத்தில்  ஏற்படுத்தும் அவநம்பிக்கை. நாம் சரியானது என நினைப்பதை  செய்யவேண்டியது நமது பொறுப்பு.

45. இந்தியச் சமூகம் ஆயுதங்களை மேற்கொள்ளக்கூடாது. அப்படி கொள்ளாமல் இருப்பது நல்லது. படுகொலைகள் மூலம் விடுதலை என்பது சாத்தியமில்லை. பிறரைக் கொல்ல நினைப்பதில் வீரமில்லை, கோழைத்தனமது. கொலையின் மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர்களால் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாது.

46. மக்கள் பலத்தின் ஆதரவைப்பெறாத முறையீடு பயனற்றது. சமமானவர்களிடத்தில் முறையீடு என்பது கண்ணியத்தின் சின்னம். ஆனால் அடிமையின் முறையீடு அப்படியானதல்ல.

47. லட்சியத்திற்கும் அதை அடைய முயற்சிக்கும் வழிமுறைக்கும் சம்பந்தமில்லை என நினைப்பது தவறு. ஆயுத பலத்தைவிட அன்பு மற்றும் அனுதாபத்தின் சக்தி பெரிது. மிருகபலத்தில் தீமைதான் உண்டு.

48. அகந்தை சரீரத்தின் வேர் எனில் அன்பு மதத்தின் வேர். அனுதாபத்தை நாம் ஒருபோதும் கைவிட்டு விடக்கூடாது

49. யுத்தம்தான் சரித்திரம் எனில் சரித்திரமில்லா நாடு ஆனந்தமயமானது. மன்னர்கள் போர் என்பதில் ஆத்ம பலம், சாத்வீக எதிர்ப்பை காணமுடியாது. யுத்தம் இருந்தும் உலகம் தொடர்ந்து  இருப்பதற்குக் காரணம் அதன் அன்பின் சக்திதான். யுத்தங்களுக்கு இடையே பதிவுபெறாத அந்த அமைதிக்காலம்தான் உண்மையான மக்கள் வரலாறு.

50. துன்பங்களை ஏற்றுக்கொண்டு அதன் மூலம் உரிமைகளைப் பெறுவதே சாத்வீக எதிர்ப்பாகும். மற்றவர்களின் தியாகத்தைவிட தானே தியாகம் செய்துகொள்வது உயர்வானது.

51. சில சட்டங்களை நாம் ஏற்கமுடியாது என்பதற்காக அவர்களின் மண்டைகளை உடைக்கவேண்டாம். நாம் அச்சட்டங்களுக்கு பணிவதில்லை. அதனால் வரும் துன்பங்களை ஏற்பது, தண்டனைகளைத் தாங்குவது என்பதே சாத்வீக எதிர்ப்பாகும்.

52. சாத்வீக எதிர்ப்பாளன் கடவுளுக்கு மட்டுமே அஞ்சக்கூடியவன். வேறு யாருக்கும் அவன் அஞ்சுவதில்லை. கோழையால் எதையும் மீறமுடியாது.

53. பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படுதல் என்பது கூட ஒருவகை மூடநம்பிக்கைத்தான். பெரும்பான்மை தவறாக கூட இருக்கலாம். சிறுபான்மை சரியாகக்கூட இருக்கலாம். பல சீர்திருத்தங்கள் சிறுபான்மையினரின் முயற்சியால் தான் உருவாகின.

54. விவசாயிகள் வாளினால் ஒடுக்கப்படமுடியாதவர்கள். அவர்களுக்கு வாளை உருவவும் தெரியாது. சாவுக்கு அஞ்சாதவனை எது பயமுறுத்தும்?

55. கற்புநெறி, எளிமை, சத்தியம், அஞ்சாமை இவை நான்கும் சாத்வீக எதிர்ப்பாளரின் குணங்கள். மனவலிமையில்லாவிடில் ஆன்ம பலமிருக்காது

56. கல்வி என்பது எழுத்தறிவா? ஆங்கிலம் மற்றும் அறிவியலா? படிப்பை நாம் பிரமாதப்படுத்த வேண்டியதில்லை. சேவைக்கு படிப்பு நல்ல கருவியாக இருந்தால் நல்லது. தாய்மொழியில் கற்பது அவசியம். ஆங்கிலத்தில் சிறந்தவற்றை உதவக்கூடியதை எடுத்துக்கொள்ளலாம். அனைத்திற்கும் மேலாக கல்வி என்பது ஒழுக்கத்தை வளர்ப்பதுதான்.

57. இயந்திரங்கள்தான் மேலை நாகரிகத்தின் சாட்சியாக வருகின்றன. நம் மக்களுக்கு பொருத்தமான இயந்திரங்களா அவை என சிந்தித்தல் வேண்டும். அவை ஒழுக்கக்கேடுகளுக்கும் பணத்தாசைக்குமான கருவிகளாக இருக்கின்றன. இங்கு நம் மக்களை அந்நியப்படுத்தாத, அவர்களின் கிராமத் தொழிலை சீரழிக்காத, சுரண்டலுக்கு உட்படுத்தாத இயந்திரங்கள் இருக்கவே செய்கின்றன. நவீன நாகரிக மோகத்தில் சிக்க வேண்டாம்.

58. பேச்சைவிட செயலே சிறந்தது. என்ன எண்ணுகிறோமோ அதைக்கூறி, அதன் விளைவுகளை சமாளிக்க வேண்டியது நம் கடமை. துன்பப்படாமல் உயர்வு வருவதில்லை.

59. ஒரு காரியத்தை மற்றவர்களும் செய்தால்தான் நாமும் செய்வோம் என்பது சோம்பேறித்தன சாக்குப்போக்கு. நாம் சரியென அறிந்ததையே செய்யவேண்டும். மற்றவர்க்கு சரியெனப்படும்போது அதை அவர்கள் செய்வார்கள். ஒன்று ருசியானது என நான் நினைத்தால், மற்றவர் ருசி பார்க்கும்வரை நான் காத்திருப்பதில்லை

60. அவரவர் அவரவர் கடமையை செய்யட்டும். நான் என் கடமையை செய்கிறபோது பிறர்க்கும் சேவை செய்கிறேன். உண்மையான சுயராஜ்யம் சிலர் கையில் குவியும் அதிகாரத்தில் இல்லை. அந்த அதிகாரத்தை எதிர்க்க மக்கள் பெறும் சக்தியில்தான் இருக்கிறது. உண்மையான சுயராஜ்யம் என்பது தன்னை அடக்கி ஆள்வதுதான். தன்னடக்கமாக இருப்பதுதான்.

 

 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...