ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம்
தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்-
8
8
’ஆர்யன் பாதை’ என்கிற ஆங்கில இதழ் 1938 செப்டம்பரில்
இந்திய சுயராஜ்யம் குறித்த சிறப்பிதழ் ஒன்றைக் கொணர்ந்தது. அதில் பிரடெரிக் ஷோட்ஸ், ஜி டி எச் கோல், ஜான் முர்ரே,
ஜெரால்ட் ஹேர்ட், ஜே டி பெர்ஸ்போர்ட், ஹூக் பாஸ்ஸெட், கிளாட் ஹோப்டன், டெலிசில் பர்ன்ஸ்,
அய்ரின் ரத்போர் ஆகிய அறிஞர்கள் அந்நூல் குறித்து தங்கள் பாராட்டுதல்களை, விமர்சனப்பார்வையை
வைத்திருந்தனர்.
மகாதேவ தேசாய் இவர்கள் கருத்துக்களையெல்லாம்
உள்வாங்கி தன் கட்டுரை ஒன்றையும் இதில் வழங்கியிருந்தார். காந்தி தன் செய்தியை தந்திருந்தார்.
முப்பதாண்டுகள் அனுபவத்தில் சந்தித்த சோதனைகள் தான் எழுதிய எதையும் மாற்றத் தேவையில்லை
என்பதையே தனக்கு உணர்த்துவதாக காந்தி அதில் சொல்லியிருப்பார். எனது மறைந்த நண்பன்
‘அனார்க்கிஸ்ட்’ சிந்தனையுடன் என்னை முட்டாள் என்றார்.
ஆனால் இதை வாசிக்கக்கூடியவர் சமநிலையுடன் வாசிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
பிரடெரிக், இந்த உலகை மாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் இந்நூலை படிக்க
வேண்டும் என்றார். இந்நூல் அரசியல் வெற்றியைப் பெறலாம். ஆனால் அதில் இன உணர்வு வெளிப்படுகிறதென்கிற
விமர்சனத்தையும் பிரடெரிக் வைத்தார்.
புகழ் வாய்ந்த பாபியன் சிந்தனையாளரான
கோல் அவர்கள் மிகவும் தொந்தரவு செய்திடும் பிரதி என்றார். காந்தி இயந்திரம் மற்றும்
மேலை நாகரிகம் பற்றி சொல்லக்கூடியதை முழுமையாக ஏற்க முடியாவிட்டாலும், நாமும் கொடுமைக்காரர்களாக
வளர்ந்துள்ளோம் என்பதை ஏற்க வேண்டும். நான் காந்தியர் அல்ல. காந்தியும் மேலை நாட்டுக்கு
தலைவராக முடியாமல் போகலாம். ஆனால் அவர் தியாகியாகிவிடுவார். நமது மேலை நாகரிகம் தவறு
என்றால் அழிந்து விடும். நாம் நம் வேர்களிலிருந்தே நம்மை மீட்டுக்கொள்ளவேண்டும் என்று
கோல் எழுதினார்.
டெலிசில் பர்ன்ஸ் காந்தி மனிதர்களிடையே
காணப்படும் இனம், மதம், பாலினம், அரசியல் எல்லாவற்றையும்விட, அவனின் சரி தவறு, நியாய
அநியாயம், நல்லவை தீயவை ஆகியனதான் அடிப்படையானவை எனச் சொல்லித்தருகிறார் என எழுதினார்.
மானுடத்தின் ஒரு பகுதி ஹிட்லர்போல மனித சித்ரவதைக் கூடங்களை கட்டினால், அங்கு பேச்சுவார்த்தை-
பிறர் மனதை ஏற்க வைத்தல் என்றெல்லாம் நின்று போய்விடுகிறது என எழுதினார். காந்தி குரோபோட்கின்
பரஸ்பர உதவி போல ஆன்ம பலம் என்கிற ஒன்றை சொல்கிறார். அவரது இயந்திரம் குறித்த பார்வையை
ஏற்க முடியவில்லை என அவர் விமர்சிப்பதைக் காண்கிறோம்.
மில்டன் முர்ரே இந்தப் புத்தகம்
மகத்தானது என்பதை ஏற்றாலும், இயந்திரம் பற்றிய காந்தியின் கருத்தை ஏற்கவில்லை. சத்தியாகிரகத்திற்கான
ஆன்ம பலம் பெறமுடியுமானால் இயந்திரங்களை கட்டுப்படுத்த பலமிருக்காதா என அவர் விமர்சித்தார்.
நவீன உலகின் கிறிஸ்துவ ஆசான் காந்தி என ஏற்கலாம் என்றார் முர்ரே.
பெரஸ்போர்ட் காந்தி ஆங்கிலேயரை வெறுக்கவில்லை.
புரட்சி என்றும் பேசவில்லை என்றார். இயந்திரம் என்கிற தவறான கடவுள் ஏன் என்றார் காந்தி
என்றார்.
ஹூக் மிக முக்கிய கையேடு இந்த நூல்
என்றார். பெரும் புரட்சிவாதியாக அவர் காந்தியைக் கண்டார். தீவிரமாக நாம் சிந்தித்தால்,
சில கால அனுபவத்தில் அவர் சொல்வது தான் சரியோ என நாம் வரவேண்டியிருக்கும் என்றார்.
கிளாட் எழுதும்போது இங்கிலாந்து
தான் புதிய நாகரிகத்தின் விடிவெள்ளி எனக் கருதலாம். காந்திக்கோ இங்கிலாந்தின் நிலை
பரிதாபமானதாகத் தெரிகிறது என்றார். செயல்களுக்கு அவரவரர் பொறுப்பேற்க வேண்டும் என்பதை காந்தி வற்புறுத்துகிறார்.
சாக்குபோக்கு வேண்டாம் எனச் சொல்லித்தருகிறார் என்கிறார் கிளாட்.
ஜெரால் ஹேர்ட் இந்நூலை ரூசோவின்
சமுதாய ஒப்பந்தம் மார்க்சின் காபிடலுக்கு இணையானதென்றார். ரத்போர் காந்தி பேசும் சாத்விக
எதிர்ப்பு நடைமுறையில் அவ்வளவு சுலப ஒன்றல்ல என்றார்.
விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும்
வகையில் மகாதேவ தேசாய் கட்டுரை அமைந்ததைக் காண்கிறோம். காந்தி அவசர அவசரமாக எழுதியதால்
சற்று நடையில் தீவிரம் இருக்கலாம். அவர் தன் அடிப்படை கருத்துக்களை சரி என இன்றும்
கருதினாலும், தொடர்ந்து தவறான புரிதல்களை களைந்திட வளப்படுத்திக்கொண்டேயிருக்கிறார்.
2009ல் ஹிந்த் ஸ்வராஜ் நூற்றாண்டு
தருணத்தில் மூன்று நூல்கள் வந்தன. அந்தோணி பரேலின் முன்னுரையுடன், சிபி ஜோசப் எடிட்
செய்த காந்தி பீஸ் பவுண்டேஷன் சார்பிலான கட்டுரைத்தொகுப்பு, தேசிய காந்தி அருங்காட்சியகம்
கொணர்ந்த ஹிந்த் ஸ்வராஜ் பற்றி தொடர்ந்து காந்தி பேசிய தொகுப்பு என்கிற மூன்றும் குறிப்பிடத்தகுந்தவை.
2022ல் ராஜிவ் பர்கவா எடிட் செய்து கொணர்ந்த கட்டுரைத்தொகுப்பு மிக ஆழமான ஒன்று.
அந்தோணி பரேல் தனது முன்னுரையில்
ஹிந்த் ஸ்வராஜ் உருவான சூழல் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிற தாக்கம் குறித்து விரிவாக
பேசியிருக்கிறார். இன்றும் தொடர்ந்து குறிப்புதவிக்கான முன்னுரையாக அதை பாவிக்கலாம்.
சிபி ஜோசப் தொகுப்பில் சந்திரசேகர் தர்மாதிகாரி, ரேணு, ராம்தாஸ் பட்கல்,
சதீஷ் ஜெயின், ஆனந்த் லோகானி, லூயிஸ் காம்பனா, அந்தோணி டிராகோ, விஜயன், கெளல், கோல்கே.
சிபி, பிரதான், எடியன் ஆகியோர்களின் 13 கட்டுரைகள்
’ஹிந்த் ஸ்வராஜ்’ குறித்து பல்வேறு கோணங்களில் பேசுவதைப் பார்க்கலாம்.
ராஜிவ் பர்கவா தொகுப்பு சமீபத்தில்
வந்த ஒன்று. இதில் அந்தோணி பரேல், ருடோல்ப், அஜாய் ஸ்காரியா, பில்கிராமி, நந்த கிஷோர்,
சதீஷ் ஜெயின், ராஜ்மோகன் காந்தி, பிரெட் டெல்மாயிர், உதய் மேத்தா, ஜெர்மி வெபர்,
போவெண்டுரா, மாயாராம், ஜோசப், ஹெக்டே,
லூசி , சுதிர், சுக்ருத் போன்றவர்களின் 19 கட்டுரைகள் நான்கு பெரும் பிரிவுகளில் இடம்
பெற்றுள்ளன, சாம்ராஜ்யம், நவீனம்- காலனிய மனம்- சுயம் செதுக்கல் , அரசியல்- வன்முறை
போன்ற அம்சங்களை அக்கட்டுரைகள் விவாதிப்பதைக் காணலாம்.
காந்தி அருங்காட்சியக தொகுப்பில்
78 இடங்களில் 1910-1947 வரை காந்தி ஹிந்த் ஸ்வராஜ் குறித்து என்ன தெரிவித்தார் என்பதைக்
காணலாம். இந்த தொகுப்பிலும், பரேல் முன்னுரை தொகுப்பிலும் இயந்திரங்கள் குறித்து அவர்
எப்படியெல்லாம் விளக்கம் கொடுத்து வந்தார் என்கிற வளர்திசை சிந்தனையைக் காண்கிறோம்.
அதேபோல் 1921லேயே அவர் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்காக மக்களும் காங்கிரஸ் தலைமையும் நிற்பதை
உணர்ந்து, அகிம்சையை மட்டும் தொடர்ந்து வற்புறுத்துவராக நடந்துகொண்டார். தன்னளவில்
ஹிந்த் ஸ்வராஜில் பேசிய அனைத்திற்குமான சுய சோதனைகளை அவர் விடாமல் இருந்தார்.
இலட்சியம் என்பது அடைவதில் இல்லை.
அதற்கான இடைவிடாத நேர்மையான சரியான வழிமுறைகளில் நாம் செய்யும் செயல் ஈடுபாடே மிக முக்கியம்
எனப் பேசினார் காந்தி. இலட்சியம் என்பது நாம் நெருங்க நெருங்க அது தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கும்.
எட்டியது எதுவும் இலட்சியமாக தொடராது என்கிற சிந்தனை தெறிப்பை அவர் நல்கினார்.
நெறியை விட்டுவிடாதே- வன்முறையை
நாடாதே என்பதை அழுத்தமாக சொல்லி வந்தார். அவர் மகன்லாலுக்கு 1910 ஏப்ரல் 2ல் எழுதிய
கடிதத்தில் அறிவுறுத்தியது நம் எல்லோருக்கமான ஒன்றே. இந்தியாவை விடுவிக்க வேண்டும்
என்கிற பெரும் பாரத்தை மண்டையில் ஏற்றிக்கொள்ளாதே. உன்னை விடுவித்துக்கொண்டு தேறப்பார்-
அப்படி ஒவ்வொருவர் உய்வதும், தேர்ச்சியும்
இந்தியாவை தேறவைக்கும் உயர்த்தும் என்றார்.
காந்தியின் வரிகளிலேயே அவர் சாரமாக
நேருவிடம் 1945ல் கடிதம் மூலம் சொன்னதைப் பார்ப்போம்
The sum and substance of what
I want to say is that the individual
person should have control over the things
that area necessary for the sustenance of life. If he cannot have such
control the individual cannot survive. My ideal village still exists only in my
dreams and imagination.
சுயராஜ்யம் என்பது தன்னைக் கட்டுதல்
என அவர் சொல்லித் தந்தார். காந்திக்கு முன்னரும் பின்னரும் சுயராஜ்யம் குறித்து பலர்
பேசியே இருந்தனர். அனைவரும் ஆட்சி மாற்றம்- பிரிட்டிஷ் அதிகாரம் எவர் கையில் என்கிற
சிந்தனைகளையே வெளிப்படுத்துபவராக இருந்தனர். காந்தி எவர் கையில் ஆட்சி என்பதைவிட, தனிநபர்
என்கிற அந்த சிறு அலகின் நேர்த்தியே- அதன் கடமைக்கான விழிப்பே, அதன் ஒழுக்க நெறிப்
பாதையே சுயராஜ்ய திறப்பென்றார். அவர் இன்னும் நமக்காக அவரின் சுயராஜ்ய கதவைத் திறந்தே
வைத்திருக்கிறார்.
21ஆம் நூற்றாண்டின் பிரச்சனைகளையும்
ஹிந்த் ஸ்வராஜ் வெளிச்சத்தில் பார்க்க இயலும் என அறிஞர் பலரும் பேசுவதைப் பார்க்கமுடியும்.
பேராசை எனும் கொடிய நோயிலிருந்து உலகோரை - நம்மை மீட்கும் பிரதியது. உழைப்பவர் மீதான்
அலட்சியம், சுரண்டி கொழுக்கும் பணம் சொத்து பேராசை, மனித உறவுகளை சுயநலம் சார்ந்த பண
உறவுகளாக்குதல், பெண் – தலித் மற்றும் அதிகாரமற்றோர் மீதான வன்முறை, போலிசாமியார்கள்,
மதமோதல், கடவுளை வைத்து வியாபாரம், பொருளாதாரத்தில் பெரும் ஏற்றத்தாழ்வான முறைகள்,
வேலையின்மை, ஒழுக்க சிதறல்- வீழ்ச்சி, போர்களின் அழிவுகள் போன்ற ஏராள பிரச்சனைகளுக்கு
பெருந்தொழில் நவீன முதலாளித்துவ வாழ்க்கை முறையிடம் நியாயம் கிட்டவில்லை. இதை அனைவரும் உணர்ந்தாலும் அப்பாதையை கைவிட நாம் தயாராக
இல்லா சூழல்தான் நிலவுகிறது. ’ஹிந்த ஸ்வராஜில்’ காந்தி எச்சரித்ததை நாம் செய்த அலட்சியத்தின்
விளைவுகள் இவை என்ற உணர்வும் நம்மிடம் அறவேயில்லை. அதிகாரத்தில் என் பங்கு என்ன , எனக்கான
இடம் என்ன என்கிற வெறித்தன ஓட்டத்தில் மோதிக்கொள்கிறோம்.
நாம் எந்த கட்சி ஆட்சி என்கிற பெரும்
சத்தமான பேச்சுக்களில், சன்னமான காந்தியின் குரலை தவற விட்டுக்கொண்டிருக்கிறோம். ஹிந்த்
ஸ்வராஜ் வாசிப்பில் அந்தக் குரல் தோழமையுடன் நம் மத்தியில் உரையாட எப்போதும் தயாரக
இருப்பதை உணரலாம். எவர் எப்படியானாலும் நாம் இப்படித்தான், அதுவே இந்தியா உய்ய உதவும்
சாலை என்கிற பெரும் விழிப்பை ’ஹிந்த் ஸ்வராஜ்’ கொடுக்கத் தயாரக இருக்கிறது. நம் ஒவ்வொருவரையும்
எதிர்பார்த்து நூற்றாண்டைக் கடந்தும் பொறுமையுடன் நிற்கிறது.
பின் குறிப்பு:
காந்தி கல்வி நிலையத்தில் அக்டோபர் 2 2024 காந்தி ஜெயந்தி அன்று
இந்திய சுயராஜ்யம் பற்றி ஆற்றிய உரையின் காணொளி இணைப்பு
https://www.youtube.com/watch?v=sWE77G4oeis
Comments
Post a Comment