https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, July 3, 2021

நினைவுச் சுழல்

 

நினைவுச் சுழல்

பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் மெல்ல மெல்ல  எனக்கு பழங்கதையாகி வருகிறது. பழைய தீவிரம் மனதில் நிழலாடுகிறது. தீவிரம் என்றால் அப்படி பேய்த்தீவிரம் தொழிற்பட்ட காலம் இருந்தது.  1970களின் இறுதியில்தான் இந்த தீவிரம் பற்றத்துவங்கியது. 1980-2005 எனும் 25 ஆண்டுகளில் அதன் உச்சம் சென்றது. பின்னர் மெதுவாக இறக்கம் காண ஆரம்பித்தது.

சாதாரண அலுவலக பணியில் ஒரு சிற்றூரில் இருந்துகொண்டு அது சாத்தியமானதாகவும் அமைந்தது. அப்படியொரு தீவிரம். எதையும் வாங்கிவிடுவது- படிப்பது என்கிற அசுர மனசு. இடது பத்திரிகைகள் எனில் வாய்ப்புள்ள அனைத்தையும் வாங்கிய காலமது. இடது மட்டுமல்ல வேறு பத்திரிகைகளும் வலது கூட வாங்கிப்படித்தக் காலம்.

 CPI – New Age, Party Life, Information Bulletin, social science Probings ( very few issues), ஜனசக்தி, தாமரை

CPIM – PD, Marxist, Social Scientist ( few Issues),  தீக்கதிர், செம்மலர், மார்க்சிஸ்ட், உழவன் உரிமை, student Struggle ( சிறு பையனாக மகன் தீக்கதிரை எடுத்துக் கொடுக்கும்போது ’சுடுதுப்பா’ என satire செய்தது…)

CPIML- Liberation, தீப்பொறி, சமரன் ( சில இதழ்கள்)

Suci- Proletarian Era

UCPI- New Thinking Communist,  ஜீவாமுழக்கம்

RSS- Organiser ( பாலு என்கிற இந்து முன்னணி நண்பர் கொண்டுவந்து போடுவார்)

International Journals Like  Monthly review, New Left review ( some Issues)

Mainstream, Janata Weekly, Frontier weekly , manushi, Link ( some issues) Periyar Era, Yojana, திட்டம்,  சிந்தனையாளன், உண்மை, காலச்சுவடு, சதங்கை போன்ற ஏராள பத்திரிகைகள்  வீட்டிற்கு வந்தன. அவ்வப்போது ரகுபதி, சிவகுருநாதன் போன்ரவர்கள் தரும் இதழ்கள். தனிநபர் வீடே நூலக வரவு போல் இருந்தது.



தொழிற்சங்கத் தீவிர செயல்பாட்டால்  AITUC, CITU,HMS, BMS, Telecom, Bank, EB, Teachers, Insurance, Railways, Motor  என அனைத்து தொழிற்சங்கப் பத்திரிகைளும் வந்தன. ’போஸ்ட்மேன்’ தோழர்கள் வராத நாள் இல்லை என்ற காட்சியிருந்தது. பெயரும் ஊரும் போட்டால் போதும்- எதுவும் வீடு தேடி வந்துவிடும் என்கிற அளவிற்கு அறிமுகம் இருந்தது. மேலே சொல்லப்பட்ட சில பத்திரிகைகளில் எழுதும் வாய்ப்பும் கிட்டின.

இந்த வாசிப்புகள் எந்த மேடைக்கு சென்றாலும் ஒருவித நம்பிக்கையை தந்தன. அனைவரும் பேசி முடித்தாலும் சொல்ல ஏதோ இருக்கும் என்கிற இரகசியத்தை தந்துகொண்டேயிருந்தன.

எனது இயக்கம் மட்டுமே- எனது தலைவர் மட்டுமே என்பதிலிருந்து பல இயக்கங்களை உள்வாங்க சொல்லித்தந்தன. தோழமையை கற்றுக்கொடுத்தன. பிறருடன் நிற்கச் செய்தன. அதே நேரத்தில் இப்படியொரு இயக்கத்திலிருந்து இவர் போன்றவர்கள் என பிறர் எண்ணத்தில் சொந்த இயக்கத்திற்கு பெருமையையும் சேர்த்தன.

எத்துறை மேடையிலும் அத்துறையின் சிறந்தவர்களுக்கு இணையாக செய்திகளை சொல்வதற்கான பயிற்சியை கொடுத்தன.

தோழர் ஞானையா போன்றவர்களுடன் விவாதிக்க பெரும்பாலும் மன்திலி ரிவ்யூ, பிராண்டியர், மெயின்ஸ்ட்ரீம், ஜனதா பயன்பட்டன. பல்லாண்டுகள் வந்த  பத்திரிகைகளை ஆண்டு இறுதியில் வகைப்படுத்த தீனன் என்ற டெலிகாம் தோழர்  பேருதவியாக இருந்தார். அனைத்தையும் அற்புதமாக பைண்ட் செய்து தருவார். அடக்கச் செலவைத்தவிர ஏதும் வாங்க மாட்டார். கேட்டால் எங்களுக்கு உழைக்கும் உங்களுக்கு செய்வதற்கு பணம் எதற்கு என்பார்.

ஒருமுறை தோழர் ரகுபதியின் அறையிலும், மற்றொரு முறை சிபிஐ எம் மாவட்ட அலுவலகத்திலும் CPI- CPIM- CPIML திட்டங்கள் குறித்த பெரும் விவாதத்தை மேற்கொண்டோம். மூன்றுதரப்பிலும் தோழர்கள் பங்கேற்றனர். உள்ளூர் சார்ந்த வகையில் வெங்கட்ராமன் அன்று சிபிஅய் எம், சிபிஅய்யில்பேரா ராமசாமி, நான் பங்கேற்றது நினைவில் இருக்கிறது. கடுமையான உச்சி பிளக்கும் விவாதங்கள்…

பேரா ராமசாமியுடன் சேர்ந்து துவங்கி பிறகு பேரா பழ கெளதமன் பொறுப்பில் சமூக சிந்தனையாளர் இயக்கம் நடந்தது. ஏங்கெல்ஸ் மறைவு நூற்றாண்டு சொற்பொழிவிற்கு மரியாதைக்குரிய பேரா அ. மார்க்ஸ் அழைக்கப்பட்டிருந்தார். சிறப்பான உரையை அவர் நல்கியபோதும் அவரிடம் சற்று கசப்புண்டாக்கும் வகையில் நான் நடந்துகொண்டது குறித்து தற்போது தலைகுனிகிறேன். பிராண்டியர் முகவரியை எனக்கு தந்துதவியர் தோழர் பேரா அ. மார்க்ஸ்.

கார்ல் மார்க்ஸ் சார்ந்த எழுத்துக்கள் படித்தபோது பெரும்பாலான நேரம் தெருவிலும், பயணத்திலுமான காலமாக இருந்தது. ஆனாலும் இப்பத்திரிகைகளை எங்கு போனாலும் கையில் வைத்துக்கொண்டு படிக்க முயன்றது நினைவில் நிற்கிறது.

இப்போதும் மார்க்ஸ் எழுத்துக்களுடன் பேசிக்கொள்ளாமல் இல்லை. காந்தி அதிகமாக எடுத்துக்கொள்கிறார். அம்பேத்கர் அவ்வப்போது வந்து செல்கிறார். ஆனால் எனது பத்திரிகை வாசிப்புகள் ?