தமிழக அரசியலின் எதிர்காலம் -ஆர்.பட்டாபிராமன் தமிழக அரசியல் கடந்த சில பத்தாண்டுகளில் தான் பார்த்து நகர்ந்த ஆளுமைகளை இழந்துள்ளது. புதிய ஆளுமைக்காக காத்துக்கிடக்கிறது. புதிய ஆளுமை யார் என்பதற்கான சோதனை ஓட்டங்கள் துவங்கியுள்ளன. திரு கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா என்கிற திராவிட இயக்கம் சார்ந்த ஆளுமைகள் 50 ஆண்டுகளில் அண்ணாவால் துவங்கப்பட்ட தேர்தல்அரசியல்- ஆட்சி அதிகாரம் என்கிற பயணத்தை நிகழ்த்தியுள்ளனர். தனது பெரும் உழைப்பால் பெரியார்- அண்ணாவிடம் தொண்டாற்றி, மொழி, இனப்பற்று சமூகநீதி மற்றும் திராவிடக் கொள்கைகள் வழியே தன்னை ஆளுமையாக உயர்த்திக் கொண்டவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். சினிமா சிநேகமும், வசனகர்த்தா தொழிலும் உதவின. எம் ஜி ஆர் முழுமையாக சினிமா பின்னணியில், அண்ணாவின் அன்பில், கலைஞரின் நட்பில் அரசியலுக்கு நுழைந்தவர். கலைஞரின் எதிர்ப்பில் புதிய அரசியல் இயக்கம் கண்டு கோடானுகோடி ஏழைகளின் மனதில் இடம் பிடித்தவர். திராவிட இயக்க கொள்கைகளின் தீவிரத்தை தணித்துக்கொண்டு மத்திய அரசுடன் ஒத்துழைப்பு என்கிற நடைமுறை அரசியலை கையாண்டு பெரும் ஆளுமையாக உருவெடுத்தவர்.