https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, December 31, 2017

The Future of Tamil Nadu Politics

                 தமிழக அரசியலின் எதிர்காலம்
         -ஆர்.பட்டாபிராமன்
தமிழக அரசியல் கடந்த  சில பத்தாண்டுகளில் தான் பார்த்து நகர்ந்த ஆளுமைகளை இழந்துள்ளது. புதிய ஆளுமைக்காக காத்துக்கிடக்கிறது. புதிய ஆளுமை யார் என்பதற்கான சோதனை ஓட்டங்கள் துவங்கியுள்ளன.
திரு கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா என்கிற திராவிட இயக்கம் சார்ந்த ஆளுமைகள் 50 ஆண்டுகளில்  அண்ணாவால் துவங்கப்பட்ட தேர்தல்அரசியல்- ஆட்சி அதிகாரம் என்கிற பயணத்தை நிகழ்த்தியுள்ளனர். தனது பெரும் உழைப்பால் பெரியார்- அண்ணாவிடம் தொண்டாற்றி, மொழி, இனப்பற்று சமூகநீதி மற்றும் திராவிடக் கொள்கைகள் வழியே தன்னை ஆளுமையாக உயர்த்திக் கொண்டவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். சினிமா சிநேகமும், வசனகர்த்தா தொழிலும் உதவின.
எம் ஜி ஆர் முழுமையாக சினிமா பின்னணியில், அண்ணாவின் அன்பில், கலைஞரின் நட்பில் அரசியலுக்கு நுழைந்தவர். கலைஞரின் எதிர்ப்பில் புதிய  அரசியல் இயக்கம் கண்டு கோடானுகோடி ஏழைகளின் மனதில் இடம் பிடித்தவர்.  திராவிட இயக்க கொள்கைகளின் தீவிரத்தை தணித்துக்கொண்டு மத்திய அரசுடன் ஒத்துழைப்பு என்கிற நடைமுறை அரசியலை கையாண்டு பெரும் ஆளுமையாக  உருவெடுத்தவர்.
திராவிடஇயக்க பின்னணி என ஏதுமற்று, சினிமா பின்னணியுடன், எம் ஜி ஆர் ஆசியில் அரசியலுக்கு வந்தவர் ஜெயலலிதா அம்மையார். எதையும் விரைந்து கற்கும் திறனும், சூழலை ஆய்ந்து காய்களை நகர்த்தும் ஆற்றலும் வாய்க்கப்பெற்றவராக அவர் விளங்கினார். எம் ஜி ஆரின் அரசியல்வாரிசு எனும் போட்டியில் திருமதி ஜானகியை நிறுத்தியவர்களுடன் போராடி தன்னை நிறுவிக்கொண்டவர். தேர்தல் வெற்றிகளை தொடர்ந்து கோடானுகோடி மக்களின் அன்பை,  ஆதரவை பெற்று ஆளுமையாக உயர்ந்தவர். திராவிட இயக்க பாரம்பரியத்தில் புதிய முன்னெடுப்புகளை நடத்திக்காட்டவேண்டிய நிர்பந்தம் ஏதும் அவருக்கு இருக்கவில்லை. அவ்வப்போது எதிர்ப்படும் நிகழ்வுகளுக்கு முகம் கொடுத்து பெற்றவைகளை தக்கவைத்தால் போதும் என்கிற நிலையை அவர் சாதுர்யமாக  கையாண்டார். இந்த 50 ஆண்டுகளில் இவர்கள் பல முரண்பட்ட நிலைகளை எடுத்தாலும் தங்கள் இயக்கத்தில் ஒப்பற்ற ஒரே தலைவர் என்கிற உயர்நிலையிலிருந்து வீழவில்லை. தேர்தல் தோல்விகள்கூட தலைமை பொறுப்பிற்கு நெருக்கடிகளை தந்துவிடவில்லை.
இந்த ஆளுமைகள் இல்லாத சூழலில் இன்று ஆட்சி பொறுப்பில் உள்ள தலைவர்கள் இயக்கத்தில் அடிமட்ட தொண்டர்களாக இருந்து தங்களின் விசுவாச அரசியல் காரணமாக பல்வேறு மட்டங்களுக்கு தலைமையால் உயர்த்தப்பட்டவர்கள். மாவட்டச் செயலர்களாக, அமைச்சர்களாக, முதலமைச்சராகக்கூட உயர்த்தப்பட்டவர்கள். தங்களுக்கென தனித்திறமையை உணரவேண்டிய, வளர்த்துக்கொள்ள அவசியமற்ற சூழலில்  அவர்கள் இருந்தார்கள். தாய்க்கோழியின் அரவணைப்பு குஞ்சுகள் போன்ற நிலையில் அவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் திறமைகள் விசுவாசம் என்கிற எல்கைக்குள் வெளித்தெரிய வேண்டியவையாக இருந்தன.
இன்று ஆட்சி பொறுப்பை நேரடியாக எடுக்கவேண்டிய சூழலில் கூட்டுத்தலைமை- ஜனநாயக விவாதம்- சரிகட்டல்கள்- முடிவுகள் என்கிற புதிய பாதையில் அவர்கள் செல்லவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.  அவர்களில் எவரையும் தனித்து பிம்பமாக உயர்த்த யாரும் தயாரில்லை. ஆட்சியை தக்கவைக்க மத்திய அரசின் தலைமைக்கு முன் அளவற்ற பணிவையும், விட்டுக்கொடுத்தல்களையும் செய்யவேண்டியுள்ளது. திராவிட இயக்கத்தின் எந்த முகத்தையும் வெளிப்படுத்திக் கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
திரு தினகரனின் ஆர்.கே நகர் வெற்றி பெரிதும் பேசப்படும் ஒன்றாகியுள்ளது. தமிழகம் ஆர்.கே நகரல்ல என்கிற எதார்த்த குரல்களும் எழாமல் இல்லை. ஜெயலலிதா அம்மையாரின் தோழி, நெருக்கமான துணை என்கிற சசிகலா அம்மையார் பிம்பத்திற்கு இணையாக மன்னார்குடி மாபியா என்கிற எதிர் விமர்சனமும் வலிமையாகவே தமிழகத்தில் உலா வருகிறது.
திரு கமலஹாசன் கல்லூரி போகாமல் இருக்கலாம். சினிமா பின்னணி என்றாலும் படித்தவர், கற்க பெரும் விருப்பமாக இருப்பவர் என்கிற பார்வையை அவர் மத்தியதட்டு மக்களிடம் ஏற்படுத்தியுள்ளார். அவருடன் மத்தியவர்க்க உயர்தட்டு பிம்பம் நிழலாக கூடவே வருகிறது. கவித்துவமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு  வெகுஜன உரையாடலுக்கான வெளியை அவரே மூடிவிடுகிறார். பெரியாரியம், இனப்பற்று, சமத்துவம் என்கிற கொள்கைகளில் புதிதாக உணர்த்தும் அளவிற்கு அவரது உரையாடல் வலுவாக இல்லை.
நாம் தமிழர் சீமானின் ஆவேசம் இளைஞர்களை கவ்வி பிடிக்கலாம். கவனித்து பொருட்படுத்தவேண்டிய நியாயக்குரல் என்கிற தர்க்க அரசியல் முயற்சியில் அவர் ஓரளவிற்கு வெற்றி பெறத்துவங்கியுள்ளார். ஆனால் நாம் இந்துக்கள், நாம் இஸ்லாமியர்,  நாம் தமிழர் என்று சொல்லும்போதெல்லாம் ஒன்றுபடுத்தலின் அடையாள வலிமை மட்டுமின்றி, விலக்கி வைத்தலின் உக்கிரமும் தொழிற்படுகிறது. பன்முகத்தனமை வாய்ந்த நம் சமூகத்தில் இப்படிப்பட்ட குரல்கள் ஜனநாயக வெளியை நாளடைவில் அடைத்துவிடும்.
திரு ரஜினிகாந்திற்கு மக்கள்திரளை ஈர்க்கும் வசீகரம் இருக்கலாம். ஆன்மீகவாதி, அமைதியானவர், நிதானமும் பக்குவமும் வாய்க்கப்பெற்றவர், அளந்து குறைவாக பேசக்கூடியவர், வெற்றி என்று அனுமானித்தால் மட்டுமே செயலில் இறங்கக்கூடியவர் என்கிற ஒளிவட்டம் அவர்மீது சுற்றப்படுகிறது. ஆனால் அவர் தன் பன்ச் டயலாக் மூலம் துணுக்கு அரசியலைத்தான் இதுவரை வெளிப்படுத்தியுள்ளார். குடும்பம் என்கிற நிறுவனத்தை அவர் உயர்த்திப் பிடிப்பது பெண்களின் ஆதரவை பெற உதவலாம். அவரது பின்புலமாக இருந்து யார் இயக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். மக்கள் எளிதில் நெருங்க முடிந்த ஜனநாயக முகத்தை கொண்டவராக அவர் இருப்பாரா என்பதும் சோதிக்கப்படக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.
தேசிய கட்சிகளாக கருதப்படும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், பா ஜ க ஆகியவை தனித்து நின்று தங்கள் பலத்தை சோதிக்கக்கூட முடியாத எதார்த்த நிலைமை நீடிக்கிறது. திமுக தவிர தமிழகத்தில் உள்ள பிற கட்சிகள் பெரும் கட்சி ஒன்றுடன் துணை நிற்கும் அமைப்புகளாகவே தொடரும் சூழல் நிலவுகிறது. திரு ஸ்டாலின் தலைமையிலான தி மு க கலைஞர் ஏற்படுத்திய உச்சங்களை தொடுமா என்பதும் பொறுத்திருந்து பார்க்கவேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.
மக்கள் அடுத்து யாரை ஆட்சியில் அமரவைத்தாலும் தமிழக அரசியல் பயணிக்கவேண்டிய பாதை குறித்து பரந்த கருத்தொற்றுமை தேவைப்படுகிறது. தனித்தமிழ்நாடு நோக்கிய தமிழ்தேசியம் என்பது இன்றுள்ள சூழலில் இரத்தக்களறியின்றி பெரும்பான்மை மக்களுக்கு அமைதியை தருமா என்பது சிந்தனைக்குரிய ஒன்றாகும். மத்திய அரசுடன் சரணாகதியோ அல்லது நிரந்தர பகைமையோ தமிழக நலன்களுக்கு உதவாது. மத்திய அரசுடன் அரசியல் அமைப்பு சட்ட எல்கைக்குள் நின்று பிரச்சனைகளின் அடிப்படையில் உடன்படுதல், எதிர்குரல் கொடுத்து தங்கள் நிலையை வலியுறுத்தல் என்பது நடைபெறவேண்டும். மாநில அரசின் அதிகார விரிவுபடுத்தல், மாநில அரசிற்குள் அதிகார பரவல் என்பதற்கான தொடர் வினைகள் நடைபெறவேண்டும்.
தமிழக வரவு செலவு இனங்கள் குறித்து தொடர் விவாதங்கள் மூலம் கருத்தொற்றுமை உருவாக்கப்படவேண்டும். தமிழகத்தின் வருவாய் இனங்களில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள்-மாற்றுகள் பொது புத்தியில் உறையும் அளவிற்கு விவாதப்பொருளாக மாறவேண்டும். அதே போல் செலவினங்களில் முன்னுரிமை பட்டியல் என்பதும் வரையறுக்கப்படவேண்டும். குறிப்பாக விவசாயம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலைவாய்ப்புகள் குறித்து கருத்தொற்றுமையை ஆட்சிக்கு வருபவர்கள் உருவாக்கவேண்டும். மத்திய அரசின் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் போன்ற ஒன்றை தமிழக அடித்தட்டு 20 சத குடும்பங்களுக்கு தனியாக மாநில அரசு உருவாக்கிடவேண்டும். மத்திய அரசின் பணிகள், மாநில அரசின் வேலைத்திட்ட பணிகள் என்பவற்றை வரையறுத்து செய்திடவேண்டும்.
வருவாய் பெருக்கம், ஒதுக்கிய செலவினங்களை ஊழல் இன்றி உரிய மட்டத்தில் உரிய பயனாளிகளுக்கு செல்வதை கண்காணிக்க மாவட்ட ஆட்சித்தலைவர்- மக்கள் பிரதிநிதி தலைமையில் கண்காணிப்பு குழுக்களை அமைக்கவேண்டும். மாவட்டந்தோறும் இதற்கான காலாண்டு அறிக்கைகளை மக்கள் பார்வைக்கு முன்வைக்கவேண்டும்.

மாநிலத்தின் வளர்ச்சிக்குரிய கண்ணியமான உரையாடல் களமாக சட்டமன்றம்,  மற்றும் தமிழக அரசியலின் பொதுவெளியை மாற்றக்கூடிய ஆளுமைகளை தமிழகம் பெறட்டும்.

No comments:

Post a Comment