https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, December 8, 2018

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்


       பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்
         (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)
                                -ஆர்.பட்டாபிராமன்
பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை.
பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.  அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.

பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோது பூரி ஜகந்நாதர் கோவிலில் அவர் அனுமதிக்கப்படவில்லை. கல்கத்தாவில் விருந்துக்கு அழைக்கப்பட்ட வீட்டில் வேலைக்காரர்களின் புறக்கணிப்புக்கு உள்ளாக நேர்ந்தது. ஷெர்வாணி, குர்தா, லுங்கி உடைகள் அணிவதில் ஆர்வமாக இருப்பார். மராத்தியர் என்ற பெருமிதம் அவரிடம் பொங்கும். புத்தகங்களுடன் அவர் வாழ்ந்து மறைந்தார்- போன்ற பல தகவல்கள் நிறைந்த அம்சங்களை மேற்கூறிய அம்பேத்கருடன் நின்ற தோழர்கள் பதிவிட்டுள்ளனர்..
தயா பவார் மராத்தியில் முதல் தலித் சுய வரலாற்றை எழுதிய்வர். கவிஞர். அவரின் பதிவிலிருந்து…
டாக்டர் அம்பேத்கர் எரிமலையைப் போல சமூகத்தை உலுக்கினார். ”மற்றவர்களின் அரண்மனை மீது விருப்பம் கொள்ளாதே. உனது குடில்களை கோட்டையாக்கு” என்பார். இங்கு அரண்மனையை காங்கிரஸின் குறியீடாகவும் ரிபப்ளிகன் கட்சியை குடிலாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம். அவரை காண்பதற்காக ஏராள இளைஞர்கள் பல மைல்கள் நடந்தும் மிதிவண்டியிலும் வருவர். நகர்புறங்களில் நமது ’மஹர்’ மக்களுக்கு நம்மால் ஏதாவது செய்ய முடிகிறது. கிராமப்புறங்களில் கொடும் அடக்குமுறைக்கு உள்ளாகும் அவர்களின் துயர் துடைக்க என்ன செய்வது எனசொல்லும் போதே கண்களில் நீர்  வழிவதை நாங்கள் கண்டிருக்கிறோம்.
டாக்டர் அம்பேத்கர் மறைவு என்ற செய்தி வந்த போது கதவில் சாய்ந்து கொண்டு விம்மி அழுதேன். நான் பணிபுரிந்த கால்நடை கல்லூரியில் விடுப்பு கேட்கவேண்டும். பணியில் அமர்ந்து 3 மாதங்களே ஆகியிருந்தன. அவரின் பூதவுடல் தில்லியிலிருந்து மும்பைக்கு எடுத்து செல்லப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் மறைவை சுட்டிக்காட்டி நான் விடுப்பு கோரியிருந்தேன். எனது உயரதிகாரி கோபமுற்றார். அவரோ பெரும் தேசியதலைவர். நீ அரசு ஊழியன். தனிப்பட்ட காரணங்களை தெரிவித்துவிட்டு விண்ணப்பம் கொடு என்றார். இருட்டு குகையிலிருந்த எங்களை மீட்ட எங்கள் குடும்ப உறுப்பினர் பாபாசாகேப் என்று கூறிவிட்டு அனுமதிக்கு காத்திராமல்  அவரை காண சென்று விட்டேன்.
திலகரை தவிர வேறு எந்த தலைவருக்கும் இறுதி ஊர்வலத்தில் இந்த அளவு  மக்கள் திரளவில்லை. ஆண்களும் பெண்களும் நெஞ்சிலே அடித்துக் கொண்டு அழுவதை கண்டேன்.
சாந்தாபாய் கிருஷ்ணாஜி காம்ப்ளே சோலப்பூரின் முதல் தலித் ஆசிரியப் பெண்மணி. பின்னர் கல்வி அதிகாரி அளவிற்கு உயர்ந்தவர். அவரும்  தன்வரலாறு ஒன்றை எழுதியிருக்கிறார். சாந்தாபாய் பதிவிலிருந்து….
பாபா சாகேப் மூக்நாயக் என்ற பத்திரிகையை ஆரம்பித்திருந்தார். தியந்தேவ் கோலப் என்பார் அப்பத்திரிகைக்குரிய நிதியை மோசடி செய்துவிட்டார். டாக்டர் அம்பேத்கருக்கும் எதிராக சென்றார். கோலப் வீட்டருகில் பாபாசாகேப் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது கதவை சாத்திக்கொண்டு உள்ளிருந்தார். கூட்ட முடிவில் திர்மரே மாஸ்டரை  அம்பேத்கார் அழைத்தார். மறுநாள் காலை பார்க்க சென்றபோது மலம் கழிக்க ஜக்கை தூக்கிக்கொண்டு மிகச் சாதாரணமாக வேட்டியை ஒரு கையால் உயர்த்திப்பிடித்துக்கொண்டு அவர் கண்ணில்பட்டதை பார்த்தோம். அவரது எளிமையை  எங்களால் பலமுறை காணமுடிந்துள்ளது.
மகர் கூட்டுகிற பெண் ஒருவரின் விண்ணப்பத்தை பாபசாகேப் காட்டுகிறார். பிராம்மணர் தெரு கூட்ட எனக்கு வாய்ப்பு வேண்டும். அங்கு ஏதாவது சாப்பிடக்கிடைக்கும் என அதில் எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்து பாபாசாகேப் நாம் நம்முடைய மக்கள் மேம்பாட்டிற்கு எவ்வளவு கடுமையாக போராடுகிறோம். இது எதைக்காட்டுகிறது என தனது கவலையையும் சினத்தையும் வெளிப்படுத்தினார். சாக்கடைக் கூட சுத்தமாகிவிடுமய்யா நாம் எப்போது என்கிற கோபம் அவரிடம் வெளிப்பட்டது (Even gutters will improve but not our society page 41 A TAD)
ஒருமுறை பாபாசாகேப் அவர்களை வரவேற்கும் முகத்தான் பெண்கள் ஆரத்தி விளக்குடன் அணிதிரண்டு நின்றனர்.  பெண் குழந்தை ஒன்று அம்பேத்கார் நீடூழி வாழ்க என முழக்கம் எழுப்பியது. குழந்தையே நான் ஏன் நீடூழி வாழவேண்டும். தீண்டப்படாதவர் என வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன் அவ்வளவுதான் என புகழ்பவர்களை நிதானப்படுத்தியதை பார்த்ததாக காம்ப்ளே பதிவு செல்கிறது. நன்கு கல்வி பயிலுங்கள்- செத்த மிருகங்களை இழுத்து வராதீர்கள்- உண்ணாதீர்கள் என கூட்டத்தில் அம்பேதகர் உரையாற்றினார்.
பேபி கொண்டிபா காம்ப்ளே மகர் இன மக்கள் பற்றியும் தன் சுயவரலாற்றையும் எழுதிய பெண்மணி. அவரது மராத்தி எழுத்துக்கள் The Prisions We Broke  என வந்துள்ளது. அவரின் பதிவிலிருந்து…
ஒருமுறை மகர் மக்கள் நிறந்த ஜேஜூரி பகுதிக்கு அம்பேத்கார் காரில் வந்து இறங்கினார். அவரது உடை கார் இவற்றைப்பார்த்து அரே நம்மவர் ஒருவர் இப்படியெல்லாம் ஆகி உயரமுடியுமா என பலர் ஆச்சர்யத்துடன் வியந்து பார்த்தனர். அம்பேத்கார் உரையாற்றினார். காலில் செருப்புகூட இல்லாமல் பல மைல் நடந்து தள்ளாத பெரியவர்களும் கம்பு ஊன்றி வந்துள்ளதை பார்க்கிறேன். உங்களது கடவுளோ பக்தியோ உங்களை ஏன் காப்பாற்ற தவறுகின்றது. நல்ல உடையோ உணவோ கூட கிடைப்பதில்லை. ஏன் இந்த நிலை.  தீர்க்க தவறும் கடவுளை நோக்கி இன்னும் ஏன் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நிலையை நீங்கள் உணருங்கள்.
உயர்தட்டார் எனக்கூறிக்கொள்பவர்கள் வீசும் குப்பைகளை அசுத்தங்களை சுத்தம் செய்கிறீர்கள். செத்த மாட்டை இழுத்துச் செல்கிறீர்கள். ஏன் இறைவன் உங்களைப் பார்த்து பாவப்பட்டு இரங்கவில்லை. மாற்றி யோசிக்கவேண்டிய நேரமிது. குழந்தைகளை கல்விகற்க செய்து அதன் விளைவுகளைப் பாருங்கள்.  மனிதர்களாகிய நாம் அப்படி வாழ எல்லாத் தகுதியும் உடையவர்கள் என்பதை படித்த உங்கள் குழந்தைகள் மற்றவருக்கு சொல்லித்தருவர் என்பதாக டாக்டர் அம்பேத்காரின் உரை அமைந்தது.
2
வசந்த் மூன் தன் அளவில் நாடறியப்பட்டவர். அம்பேத்கரின் நூல்தொகைகளை தொகுத்தவர். 1956 புத்தமத மாறும் நிகழ்வில் நாக்பூரில் பங்கேற்றவர். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு எழுதியவர். அவரின் பதிவிலிருந்து சில பகுதிகள்….
பீமா எல்பின்ஸ்டன் கல்லூரிக்கு ஜனவரி 3 1905ல் சேர்கிறார். சேக்ஸ்பியரின் கிங் லியர் போலவே ஒயிஸ் கேர்ல் என்பதை எழுதி அவர் அரங்கேற்றினார்.  விடியற்காலை 2 மணிக்கே எழுந்து பாடங்களை படிப்பார். மாலையில் கிரிக்கெட் விளையாடுவார். பல மாணவர்கள் பணக்கார குடும்பம் சார்ந்தவர்கள். பீமாவோ குடும்ப நகைகளை அடமானம் வைத்து கற்க அனுப்பப்பட்டவர்.
பீமா ஆங்கிலம் மற்றும் பெர்சியனில் தேர்ச்சியுடன் இருந்தார். கணிதத்தில் பலவீனம் இருந்தது. பேராசிரியர் இரானி, முல்லர் ஆகியோர் அன்புடன் இருந்தனர். முல்லர் பீமாவிற்கு சட்டைகளைக்கூட தருவார். தேர்வில் 884க்கு பீமா 282 வாங்கியிருந்தார். 1910ல் அவர் மதிப்பெண்  ஆங்கிலம்- 200க்கு 69, மராத்தி 52, கணிதம் 60, பொருளாதாரம் 42 எனப்பெற்றார். அவர் 1912ல் பட்டப்படிப்பை முடிக்கும்போது 750க்கு 282 வாங்கியிருந்தார்.
அமெரிக்காவில் தங்கியிருந்த அம்பேத்கர் 1916ல் பெரோஷா மேத்தா மறைவையும் அவருக்கு சிலை வைக்கும் செய்தியையும் அறிந்தார். உடன் பம்பாய் கிரானிக்கிளுக்கு கடிதம் எழுதினார். சிலைக்கு பதிலாக நினைவு நூலகம் வைத்தால் பயனளிக்குமே என்றார். சமூகம் பயன்படுத்திக்கொண்டு வளர நூலகம் உதவிபுரியும் என குறிப்பிட்டிருந்தார்.
அம்பேத்கர் பேராசிரியராக இருந்தபோது கல்லூரியில் மாணவர் விடைத்தாள்கள் திருத்தம் பற்றி ராமச்சந்திர பனவுதா கேட்டார்  மிகப்பொறுப்புடன் பாபாசாகேப் அதற்கு பதில் தந்தார்.  நான் 50 சதம் உள்ளடக்கத்திற்கும் மீதி 50 சதம் வெளிப்படுத்தும் முறைக்கும் என வைத்துக்கொள்வேன்.  தகுதியான மாணவர்களுக்கு 60 சதத்திற்கு மேல் கொடுத்துவிடுவேன். ஒருமுறை 150க்கு 144 கூட நான் கொடுக்கும் அளவு நேர்த்தியாக விடை இருந்தது. இதைப்பார்த்து மூத்த கண்காணிப்பாளர் வேறு சிலரிடமும் அப்பேப்பரை தந்தார். சிலர் கூடுதலாகவும், சிலர் குறைவாகவும் மதிப்பிட்டிருந்தனர். இறுதியில் நான் மதிப்பிட்ட 144 என்பதே ஏற்கப்பட்டது என அம்பேத்கர் தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட மாணவர் என்பதால் நான் மார்க்கில் உதவிசெய்வேன் என வந்தால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்கிற நிகழ்ச்சிகளையும் அம்பேத்கர் குறிப்பிட்டார்.
வறுமையிலும் செம்மை என்பதை சொல்லும் பதிவும் இருக்கிறது. அம்பேத்கருக்கு அவரது 17ஆம் வயதில் 1908ல் திருமணம் நடந்தது. அவர் இங்கிலாந்து செல்ல நேர்ந்தபோது, இருக்கின்ற பணத்தை துணைவியார் ரமாபாய் அவர்களிடம் கொடுத்து சென்றார். பணம் தீர்ந்த நிலையில் ரமாபாய் சகோதரர் சங்கரராவ், சகோதரி கெளரிபாய் தினக்கூலிக்கு சென்று எட்டணா சம்பாதித்து வந்து குடும்பம் நடக்கவேண்டியிருந்தது.
குடும்ப சூழலை விளக்கி லண்டனில் இருந்த அம்பேத்கருக்கு துணைவியார் கடிதம் எழுதினார். நானும் உணவின்றி படுக்கச்செல்லும் சூழலில்தான் இருக்கிறேன். இருப்பதில் கொஞ்சம் அனுப்புகிறேன். உன்னிடம் இருக்கும் நகையை விற்றுக்கொள், நான் திரும்பி வந்தவுடன் வாங்கித் தருகிறேன் என அம்பேத்கர் பதில் எழுதுகிறார். அதே நேரத்தில் மகன் யஷ்வந்த் படிப்பை பார்த்துக்கொள் எனவும் தெரிவிக்கிறார்.சில சமூகத் தொண்டர்கள் செய்ய வந்த உதவியை சுயமரியாதை காரணமாக ரமாபாய் மறுத்துவிட்டார் எனவும் நாம் அறியமுடிகிறது.
1926ல் பிராம்மணரல்லாத பாக்தே, ஜாவல்கர் போன்றவர்கள் திலகரை தாக்கி எழுதியதாக பிராம்மணர் சிலர் வழக்கு தொடுத்தனர். அம்பேத்கார் பிராம்மணர் அல்லாதவர் பக்கம் நின்று அவர்களை பாதுகாத்தார். 1933ல் எம் என் ராய் தன்னை மறைத்துக்கொண்டு மகமது என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருந்தார். அம்பேத்கர் அவர்களையும் அதே பெயரில் சந்தித்தார். சந்திப்பு முடிந்தவுடன் இவர் பெங்காலி இந்துவாகவே இருக்கமுடியும், இஸ்லாமியராக இருக்கமுடியாது என்பதை கண்டுகொண்டு பிரதான் என உடன் இருந்தவரிடம்  தெரிவித்தார். அதே ஆண்டில்தான் அவர் ஹீரோ  வழிபாடுகளை விட்டொழிப்போம் என்கிற விழிப்புணர்வை தந்துகொண்டிருந்தார்.
பாலியல் பிரச்சனைகளை கற்பிப்பது என்கிற வகையில் ஆர் டி கார்வே சமஜ்ஸ்வஸ்தயா என்கிற இதழை நடத்தி வந்தார். அவர் ஆபாசமாக எழுதிவிட்டார் என வழக்கு ஒன்று வந்தது. அம்பேத்கார் வழக்காடி அவரின் பாலியல் கல்விக்கு ஆதரவாக நின்று அவரை பாதுகாத்தார். அதே போல் 1938 டிசம்பரில் பம்பாய் சட்டமன்றத்தில் குடும்பக் கட்டுபாடு பில் ஒன்றை பி ஜே ரோஹம் மூலம் அம்பேத்கார் கொணர முயற்சித்தார். பில் தோற்றது. ஆனாலும் பிள்ளைப்பேறு கட்டுப்பாடு என்பதை புனிதம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு சமூக பிரச்சனை என்கிற விவாதம் எழவைத்தார் பாபாசாகேப்.
ரமாபாய் அவர்கள் 1935 மே 26 அன்று காலமானார். இளம் வயதிலேயே சுமைகளையும் பொறுப்புகளையும் தாங்கி திறம்பட குடும்ப பணிகளை செய்தவர் ரமாபாய். தியாக சித்தம் கொண்டவராக விளங்கியவர். வருகின்றவர்களை உபசரிப்பது, தினம் 12 தலித் குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்வது போன்றவறறை மனம் உவந்து செய்தவர். வெளியே சில கிரிமினல் பேர்வழிகளின் தாக்குதல்களை சமாளித்தவர்
நான் இந்துவாக பிறந்திருக்கலாம், ஆனால் அப்படி சாகப்போவதில்லை என அம்பேத்கார் அக் 13, 1935ல் பகிரங்கமாக அறிவித்தார். தலித்கள் முஸ்லீம்களாக மதம் மாறினால்   5 கோடிவரை செலவழிக்க தயார் என்று ஹைதாராபாத் நிஜாம்  சொல்லியிருந்தார். பிஷப்கள் அம்பேத்கருடன் தொடர்புகொண்டனர். காந்தியடிகள் குறித்து எழுதிய ஸ்டான்லி ஜோன்ஸ் கூட அம்பேத்கரை சந்தித்தார். கிறிஸ்துவர்கள் சாதிமுறையை ஒழித்துவிடவில்லையே என  அம்பேத்கர் பதில்சொல்லி அனுப்பிவிட்டார். அம்பேத்கரின் வெளியிடப்படாத கட்டுரையான Christianizing the untouchables and condition of converts என்ற கட்டுரையில் அம்பேத்கர் இதனை விளக்கியிருந்ததாக வசந்த் மூன் சொல்கிறார்.
பொற்கோயில் பொறுப்பாளர்களும் அம்பேத்கரை தொடர்புகொண்டனர். என் கவனத்தில் சீக்கியர் மதம் இருக்கிறது என அம்பேத்கர் பதில் தந்தார். அவர் சீக்கியர் மாநாடு ஒன்றிலும் பங்கேற்றார். ஜூன் 10, 1936ல் சிலோன் புத்த துறவி லோக்நாத் புத்தமதத்தில் இணையுமாறு வேண்டுகோள் கொடுக்கிறார். அப்போதே அம்பேத்கர் தனது வேண்டுகோளை ஏற்றிருந்தால் பர்மா வெளியேறி இருக்காது என்கிற கருத்து லோக்நாத் அவர்களுக்கு இருந்தது.
சுத்திகரண் இயக்க ஆதரவாளர் விநாயக் மகராஜ் மசுரேக்கருடன் அம்பேத்கர் நடத்திய விவாதத்தில் மதம் மாறாமல் இருக்க வேண்டுமெனில் சில நிபந்தனைகளை  பரிசீலித்து முடிவெடுக்கவேண்டும் என்றார். இந்து மகாசபா இரு தீர்மானங்களை நிறைவேற்றவேண்டும். பிறப்பின் அடிப்படையில் சாதி கூடாது, ஒரே வர்ணம்தான் என்பனவே அவை. அப்போது அம்பேத்கரை எதிர்த்து இந்துமதத்தை உயர்த்திப்பிடித்து வந்தவர் கே கே சாகத். அவரும் தலித் பகுதியிலிருந்தே வந்தவர். அவரை சங்கராச்சாரியாராக அமர்த்துவதை ஏற்பீர்களா என்பதும் அம்பேதகரின் மற்றொரு கேள்வி. என்ன விடை கிடைத்திருக்கும் என்பதை அனைவரும் ஊகித்துக்கொள்ளமுடியும். அப்படிசெய்தால் மதமாற்றம் செய்யவேண்டுமா எனக்கூட யோசிக்கலாம் என்றார் அம்பேத்கர்.
ஜூன்5 1952ல் அமெரிக்கா கொலம்பியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுக்க அம்பேத்கரை அழைத்து இருந்தது. முன்னதாக பம்பாய் கிரிக்கெட் மைதானத்தில் அம்பேத்கர் கெளரவிப்பு விருந்து நடந்தது. அமெரிக்கா சென்று தேசத்திற்கு எதிரான  கருத்துக்களை பேசிவிடுவேன் என எவரும் அஞ்சவேண்டாம். வட்டமேஜையில்கூட எனது தேசபக்தி காந்தியை விஞ்சி 200 மைல் முன்னதாகவே இருந்தது என்றார் அம்பேத்கர்.
நாக்பூர் நகருக்கு 1953ல் அம்பேத்கார் வருகைப்புரிந்து மெளண்ட் ஹோட்டலில் துணவியாருடன் தங்கியிருந்தார். வசந்த்மூன் போன்ற இளைஞர்கள் தாங்கள் நடத்திய பத்திரிகையை காட்டினர். முதலில் புத்திசம் ஏற்றவர்கள் பிராம்மணர்கள்- பின்னால் அதை அவர்கள் corrupt செய்துவிட்டனர் என விவாதம் சென்றது.
புத்தமதத்திற்கு மாறினால் நமது கிராம மக்கள் காலம்காலமாக செய்துவரும் சடங்குகளில் , திருமணமுறைகளிலும் மாற்றம் வேண்டுமா என அம்பேதகர் அவர்களிடம் கேட்டபோது, சில அவசியமான சடங்குகள் தொடரவேண்டியிருக்கலாம். மறுபிறப்பை எப்படி சொல்வது என மூன் கேட்க, தான் அணையாமல் மெழுகுவர்த்தி மற்ற மெழுகுவர்த்தியை ஏற்ற உதவுவது போல புரிந்துகொள்ளலாம் என்றார் அம்பேத்கர்.  உட்சாதி பிரச்சனைகள் இல்லாமல் இயக்கம் கட்ட முயற்சிக்கவேண்டும் என  அம்பேதகர் அறிவுறுத்தினார்.
பகவான் தாஸ் பாபசாகேப் அம்பேத்கரிடம் ஆய்வு உதவியாளராக சேர்ந்தவர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஏர்போர்ஸ் ராணுவ சேவையில் ரடார் இயக்கப் பணியாற்றியவர், அவரின் பதிவை பார்ப்போம்.
அம்பேத்கர் வீட்டில் இருந்தால் அதிகநேரம் நூலகத்தில் செலவழிப்பார். வந்திருந்தவர்களுடன் விவாதித்து முடித்துவிட்டால் படிப்பில் கவனம் செலுத்த துவங்கிவிடுவார். சில புத்தகங்களை கையில் அடுக்கிக்கொண்டு வராந்தாவில் வந்தமர்ந்து படிப்பார். ஒருமுறை சார்லஸ் டார்வினை படித்துக்கொண்டிருந்தபோது வலிமையானது மட்டும் பிழைக்கும் என்பதை ஏற்கமுடியவில்லை என்றார். பகவான் தாஸ் அதற்காக டார்வின் எழுதவில்லையே என சொன்னபோது கேட்டுவிட்டு அமைதியானார். என்ன  MA Anthropology  முடித்துவிட்டாயா எனக்கேட்டார். என்னிடம் கூட ஏராள டிகிரி பட்டங்கள் இருக்கிறது. அறிவை பயன்படுத்தாவிட்டால் பட்டங்களால் என்ன பயன் என்றார்.
துப்புரவு பணியாளர்கள் என்ற பகுதியினர் பற்றிய உரையாடல் வந்தபோது முஸ்லீம்கள் வந்தபின்னர்  ஏற்படுத்தப்பட்ட பகுதி என அம்பேத்கர் தன் கருத்தை வெளிப்படுத்தினார். புத்த பிரதிகளில் குறிப்பு இருக்கிறது, ஹீவான் சுவாங் பேசுகிறாரே என பகவன் தாஸ் குறிப்பிட்டார். அப்படியா நான் பார்க்கவேண்டுமே என அம்பேத்கர் ஆர்வம் காட்டினார். கழிப்பறைகள் சுத்தம் பற்றிய குறிப்புகளையும், பாஹியான் சண்டாளர் என பயன்படுத்தியுள்ளதையும் பகவன் தாஸ் எடுத்துக்காட்டினார். அருமை , பாராட்டுகள் என்றார் அம்பேத்கர். இது பற்றி புத்தகம் எழுதுங்கள், நானே முகவுரை எழுதி தருகிறேன் என உற்சாகப்படுத்தினார்.
முல்க்ராஜ் ஆனந்த் ஆங்கில நாவலாசிரியர், எழுத்தாளர். அவரின் புகழ்வாய்ந்த  முதல் நாவல் untouchable . பாபாசாகேப் அவர்களுடன் மே 1950ல் முல்க்ராஜ் நடத்திய உரையாடலில் அம்பேத்கர் முன்வைத்த கருத்துக்களின் சுருக்கம் கீழே சொல்லப்படுகிறது.
நமஸ்கார் என்பதை விடுத்து புத்த வணக்கமான ஓம் மணி பத்மாய எனப்படும் விழிப்படைவோம் என்கிற விளித்தலையே அம்பேத்கர் செய்தார். நமஸ்கார் என்பது  கீழ்ப்படிதல் நிலையையே உணர்த்துகிறது என்றார். நமது அரசியல் அமைப்பு சட்டம் மதசார்பற்ற செக்யூலர் சோசலிஸ்ட் ஜனநாயக இலட்சியத்தை முன்மொழிகிறது. நிலம் அரசிற்கு சொந்தம் என்றாகி பயன்படுத்தும் உரிமை மட்டும் இருந்தால் அங்கு சுரண்டல் நிலவாது. பல தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு குத்தகை உரிமைக்கூட இல்லாத நிலைதான் இருக்கிறது.
வேலையை அடிப்படை உரிமையாக்க முடியாதா எனக்கேட்டதற்கு நான் அரசியல் சட்ட உருவாக்க உறுப்பினர்களில் ஒருவன் என்கிற லிமிட்டேஷன் இருக்கிறது என்றார். அப்போது நீங்கள் சிங்கங்கள் மத்தியில் இருந்த ஆடுதானா என்கிற பதில் கேள்வி வந்தபோது,  நான் கர்ஜித்துதான் வருகிறேன் என பொறுமையாக பதிலைத் தந்தார். மகாத்மா காந்தி பற்றி உரையாடல் திரும்பியபோது, அவர் அரிஜனங்களுக்காக நிற்கிறார் என எடுத்துக்கொண்டாலும் வர்ணாஸ்ரம தர்மம் என்றே பேசிவருகிறார் என்றார் அம்பேத்கர். ஹரி என விளித்தால் அது புகழ், பாராட்டு என நினைத்துக்கொள்கிறார். நிலைமைகள் மாறவில்லையே என்றார் அம்பேதகர்.
U R ராவ் மகாத்மா காந்தியின் நூல்தொகுப்பிற்கு துணையாக நின்றவர். அவர் அம்பேத்கரின் புத்தக பதிப்பிற்கும் பணியாற்றியவர். தாக்கர் அண்ட் கோ புகழ்வாய்ந்த புத்தக நிறுவனம். காந்திஜி மீது பற்றுக்கொண்ட ராவ் அதில்  பணியாற்றிக் கொண்டிருந்தபோது அம்பேத்கர் அவர்களை அடிக்கடி சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்பு பெற்றார். அவர் பதிவிலிருந்து ..
தாக்கர் அண்ட் கோ நிறுவனத்திற்கு தன் புத்தகங்களை பதிப்பிக்கவும், பல புதிய வெளியீடுகளை பெறவும் அம்பேத்கர் வருவார்.  Thoughts on Pakistan  போதுதான் ராவ் அம்பேத்கருடன் நெருங்க வாய்ப்பு கிட்டியது. பதிப்பாளர் உரையில் கூடுதலாக ஏதும் சொல்லிவிடக்கூடாது, வாசகர்கள் புரிந்து  கொண்டாடவேண்டும் என்பது ராவின் நிலைப்பாடு. அம்பேத்கர் விஷயத்தில் இப்படி கறார் தன்மை தேவையா என நிறுவன பொறுப்பாளர்கள் தயங்கினர்.
பதிப்பாளர் குறிப்பை அம்பேதகர் பார்த்தார். ராவ் எழுதியதா என வினவினார். ராவ் அவர்களை பாபாசாகேப் தன் கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டு ஏற இறங்க பார்த்தார். ராவ் தன்னிலை விளக்கம் அளித்தார். நிறுவனம் என்ற வகையில் தனது பிராண்ட்களின் பெருமிதம் வெளியிலிருந்து வரவேண்டும் என நீங்கள் சொல்வதும் சரிதான் என்றார் அம்பேத்கர்.
அடுத்த புத்தகம் காந்தியும் காங்கிரசும் என்ன செய்துவிட்டார்கள் 1945 ஜூலையில் தயாரானது. ராவ் தனக்கு அப்புத்தகத்தில் பல விஷயங்கள் உவப்பாக இல்லை என்றார் .அப்புத்தக வேலையில் ஈடுபட்டிருந்தபோது, என்மீது பெரும் விமர்சனம் வரலாம் என அம்பேத்கர் கூறினார்.. நான் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும், வெளிநாட்டினர் பார்வைக்காகவும்தான் இப்புத்தகத்தை எழுதியிருக்கிறேன் என்றார். ராஜாஜியின் மறுப்பு புத்தகம் வந்ததையும் ராவ் பதிவு செய்கிறார்.
தாக்கர் நிறுவனத்தில் பார்வைக்கு வைக்கப்பட்ட புத்தக அலமாரியில் மகாத்மா பற்றிய புத்தகமும் இருந்தது. அதைப்பார்வையிட்டுக்கொண்டே வந்த பாபாசாகேப் அந்த கிழவர் பற்றி இன்னும் எவ்வளவு புத்தகங்கள் எழுதுவார்கள் என வினவினார். அவர் படியேறிவந்த இரைப்புடன் இருந்தார். அப்போது ராவ் டாக்டரிடம் இன்னும் ஒரு புத்தகம் கூட தேவைப்படலாம், அதை டாக்டரே எழுதலாம் என்றார். யார் படிப்பார்கள் என அம்பேத்கர் வினவினார். கண்டிப்பாக பதிப்பாளர் என்ற வகையில் நாங்கள் படிப்போமே என்றார் ராவ். இருவரும் சிரித்து மகிழ்ந்தனர்.
ராவ் அவர்களிடம் வேறொருமுறை அம்பேத்கர் கேள்வி ஒன்றை எழுப்பினார். காந்திஜி என்ன மகாத்மாவா என்று. அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள் என்றார் ராவ். ராவ் எழுதிய கட்டுரைகள் குறித்துதான் அம்பேத்கர் உரையாடலை துவங்கினார் என ராவ் புரிந்துகொண்டு, நான் மிகச் சிறிய மனிதன் என்றார். பெரிய மனிதர்கள் அவரை மகாத்மா என்றே சொல்கிறார்கள் என்றார். யார் அந்த பெரிய மனிதர்கள் என்றார் அம்பேத்கர். டாக்டர் ராதாகிருஷ்ணன் தொகுப்பை தாங்கள் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன் என்றார் ராவ்.
 என்னைப்பொறுத்தவரை காந்தி அவர்கள் ஹம்பக்என ஒளிவு மறைவு ஏதுமின்றி அம்பேத்கர் பதில் தந்தார். ராவ் அவர்கள் ஒருவகையில் நாம் எல்லோருமே ஹம்பக் தான் என விவாதத்தை நீட்டினார். அம்பேத்கர் சிரித்துக்கொண்டே  அருகில் இருந்த நிறுவன பொறுப்பாளர்களிடம் ராவ் நம் எல்லோரையும் ஹம்பக் என்கிறார் என்றார். மிக முக்கியமான விவாதங்களில் கூட தன் கருத்துக்களை வெளிப்படையாக, அதே நேரத்தில் தனிப்பட்ட உறவுகளில் கவனத்துடன் அம்பேத்கர் வெளிப்படுத்தியதை நம்மால் அறியமுடிகிறது. அம்பேத்கர் மனதின் ஆழத்தில் காந்திஜி குறித்து மரியாதை இருந்ததை தான் உணர்ந்ததாகவும் ராவ் பதிவு செல்கிறது.
புத்தரும் தம்மமும் கொணரும்போது பாபாசாகேப் பெரும் உழைப்பை நல்கிகொண்டிருந்தார். நாள்தோறும் வந்து ஆர்வம் மேலிட புத்தக வளர்ச்சியை பார்வையிடுவார். புத்தகம் எழுதியதால் வரும் பணம் எதையும் பெறாமல், மீண்டும்  புத்தகங்களையே வாங்கிக்கொண்டு போய்விடுவார். வாங்கும் புத்தகங்களைப் படிக்க எப்படி முடிகிறது எனக்கேட்டபோது அவர் விளக்கம் அளித்தார். சில புத்தகங்கள்தான் ஆழமாக படிப்பதற்கு உகந்தவை.சிலவற்றில் நம்க்கு தேவையானதை மட்டும் படித்துக்கொண்டால் போதும். படிப்பதில்  Discerment and Discrimination  பழக்கம் வேண்டுமென்பதை அவர் கற்றுக்கொடுத்தார்.
தெலால் என்கிற புகழ்வாய்ந்த கல்வியாளர் மறைவிற்குப்பின்னர் அவரது நூலகத்தின் அரிய புத்தகங்களை யாரிடம் கொடுப்பது என்கிற கேள்வி வந்தபோது, அக்குடும்பத்தாரிடம் அம்பேத்கர் பெயர் நினைவூட்டப்பட்டது. அம்பேத்கரிடம் விலைக்கு எடுத்துக்கொள்ளமுடியுமா எனக்கேட்டனர். என்ன விலை என்றார் அம்பேத்கர். அவர்கள் சொன்ன விலையைக்கேட்டு நான் என்ன மில்லியனரா, என்று சொல்லி அவர் ஒருவிலை நிர்ணயித்தார்.  ட்ரக் லோடு நிறைய புத்தகங்களை சித்தார்த் கல்லூரிக்கு வாங்கி அனுப்பினார் பாபாசாகேப்.
வின்சென்ட் ஷீன்  அமெரிக்க பத்திரிகையாளர். காந்திஜி, நேரு குறித்து புத்தகங்கள் எழுதியவர். அவர் 1950ல் புத்தமதம் குறித்து கூடுதலாக அறிய அம்பேத்கருடன் உரையாட வந்தார். ஷீனின் இந்திய காதல் குறித்து அம்பேத்கர் அவரிடம் கேலி பேசுவார்.  எங்கள் பிராம்மண அரசாங்கம் பற்றி புகழ்ந்து பேசும் நீங்கள், அவர்களை அமெரிக்காவிற்கு அழைத்து போய் பாருங்களேன் என்றார். ஷீன் எங்கள் நாட்டிலும் பிராம்மணர்கள் போல் உள்ளவர் இருக்கின்றனர் என பதிலை தந்தார். அதேபோல் காந்திஜி பற்றி உரையாடும்போதும், அவரின் பெருமையைக்கொண்டாடும் நீங்கள் அவரை அமெரிக்காவிற்கு அழைத்துப்போய் பராமரித்திருக்கலாம் என நகைச்சுவையாக சொல்வார். அம்பேத்கர் மறைந்தபோது, இவ்வளவு அறிவுத்திறன், கூர்மைகொண்ட இந்தியர் இனி யார் என ஷீன் எழுதினார்.
பேரா ஷெலிகர் பம்பாயில் வழக்கறிஞராக இருந்தவர். அவர் ஒரு நிகழ்வை விவரிக்கிறார். மாதுங்கா பள்ளிக்கூடம் ஒன்றிற்கு பாபாசாகேப் வர இசைவு தெரிவித்திருந்தார். கோட் சூட்டுடன் அவர் வருவார் என பொறுப்பாளர்கள் காத்திருந்தனர். அவர் லுங்கி, மேல் பைஜாமா சட்டையுடன் வந்தார். அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மாணவர்களில் நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த குழந்தைகளை பிச்சைக்காரர்கள் போல் நடத்தக்கூடாது. தன்மானமிக்க இந்தியர்களாக வளர்க்கவேண்டும். அதற்குரிய சூழல்தான் பள்ளிகளில் நிலவவேண்டும் என்றார்.
தான் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர் என்கிற எண்ணம் ஏதுமின்றி பல நேரங்களில் கைநிறைய புத்தகங்களை அடுக்கிக்கொண்டு டிராம் வண்டியிலிருந்து அவர் இறங்கிப்போவதை பலர் பார்த்திருக்கக்கூடும் என ஷெலிகர் பதிவு செல்கிறது.
3
ஜோகிந்தர் நாத் மண்டல் செட்யூல்ட் பெடெரேஷனில் பாபாசாகேப் உடன் செயல்பட்டவர். பாகிஸ்தானில் சட்ட அமைச்சராக இருந்தவர். அவர் பாபாசாகேப் குறித்த சில அனுபவங்களை சொல்லியிருக்கிறார். அரசியல் அசெம்பிளிக்கு நுழைந்திட அய்ரோப்பிய உறுப்பினர்களின் உதவி கேட்டு கல்கத்தா வந்த அம்பேத்கருக்கு ஏமாற்றம் மிஞ்சியது. சோர்வுற்ற பாபசாகேப் தன் முயற்சியை கைவிடப்போவதாக அறிவித்தார். காங்கிரசின் எதிர்ப்பையும் மீறி நாங்கள் அவரை தேர்ந்தெடுக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம் என்பது அதில் முக்கிய பதிவு.
மீனாம்பாள் சிவராஜ் அம்பேத்கர் இயக்க முக்கிய பெண் தலைவர். SCF பெண்களின் முதல் மாநாட்டை தலைமைதாங்கி நடத்தியவர். அம்பேத்கரின் சகோதரி என பொதுவாக கருதப்படுபவர். அவரின் பதிவை பார்க்கலாம்.
சென்னை ராயப்பேட்டையில் AICF மாநாடு 1944ல் நடந்தது. தன் கணவர் சிவராஜ் அமெரிக்கா செல்லவேண்டும். இரண்டாம் உலகப்போர் சமயம் என்பதால் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். எந்த உத்தரவாதமும் தரமுடியாது அனுப்பட்டுமா என அம்பேத்கர் மிக பொறுப்புடனும் கவலையுடனும் கேட்டார். தாங்கள் நல்ல காரியத்திற்காகவே அனுப்புகிறீர்கள் என்கிற பதிலை மீனா தந்தார்கள். உங்கள் தைரியத்தை மெச்சுகிறேன் என்றார் அம்பேத்கர்.
டி ஜி ஜாதவ் 1935ல் அம்பேத்கருடன் இணைந்து பம்பாய் அசெம்பிளிக்கு சென்றவர். தேர்தலில் வென்றதாலேயே லட்சியத்தை அடைந்ததாக கருதக்கூடாது என்றார் அம்பேத்கர். ஜாதவை சட்டம் படிக்க சொன்னார். யாரிடமும் கைநீட்டாமல் வாழவேண்டும் என்றார். நமது வருவாயில் 10 சதம் அளவிற்காவது புத்தகங்களுக்கு செலவிடவேண்டுமென்றார். லண்டன் செல்லநேர்ந்தபோது 1946 அக்டோபரில் ஜாதவிற்கு கடிதம் எழுதினார் அம்பேத்கர். இந்தியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களின் உணர்வுநிலை போதாமை, அறியாமை பெரிதாக இருக்கிறது. அவர்கள் தெளிவின்றி இருக்கிறார்கள். காபினட் மிஷன் செட்யூல்ட் இனத்தவர் பற்றிய  குறிப்புகளை அச்சிடுவது மிகக்கடினமாக இருக்கிறது. செலவும் அதிகமாவதால் அங்கு அனுப்புகிறேன். லண்டனில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளேன் என அம்பேத்கர் தகவல் தருகிறார். உள்ளூர் நெருக்கடிகளுக்குள் சிக்காமல் தனது எழுத்துக்கள் காலத்தில் வெளியாகவேண்டும் என்கிற  அவரது தவிப்பை நாம் உணரமுடியும்.
ஜின்னா அவர்கள் ஜோகேந்திரநாத்தை இணைத்துக்கொண்டது தந்திரமானது என்றாலும் நாம் ஆதரிக்கவேண்டும் என்றார் அம்பேத்கர். நாம் காங்கிரஸ், லீக் இருவரையும் எதிர்க்கவேண்டிய நிலையிலேயே இருக்கிறோம். காந்திக்கு அதிர்ச்சியைத் தரவேண்டும். அவரது அணுகுமுறையில் எந்த மாற்றமும் தென்படவில்லை எனவும் அம்பேத்கர் குறிப்பிட்டிருந்தார்.
கர்த்தார் சிங் போலோனியஸ் சிவில் சர்வீஸ் அதிகாரியாக உயர் பதவி வகித்தவர். அவர் சில முக்கிய தகவல்களை தருகிறார். அம்பேத்கர் வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினராக மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தபோது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். தெருவில் வயதான ஒருவர் கிழிந்த ஆடையுடன் நடுங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று அம்பேத்கர் உபசரித்தார். அவர் சிகிட்சைக்கு ஏற்பாடு செய்தார்.
 அவர் தங்கியிருந்த பங்களாவிற்கு தினமும் பல கடைநிலை ஊழியர்கள், எளியநிலையில் இருப்பவர்கள் வந்து செல்வர். அவர்களின் குறைகேட்டு சரி செய்ய முயற்சி மேற்கொள்வார் அம்பேத்கர். வீட்டின் பெயர்  House of Justice  என்பதற்கேற்ப அங்கு நியாயம் பிறக்கும் என பலர் வந்ததை போலோனியஸ் சொல்கிறார். அவர் அவ்வீட்டை காலி செய்யநேர்ந்தபோது அங்கு பணியாற்றியவர் அனைவருக்கும் மாற்று இடங்களில் பணிகிடைத்ததா என உறுதி செய்வதில் கவனம் எடுத்துக்கொண்ட செய்தியையும் போலோனியஸ் குறிப்பிடுகிறார்.
அம்பேத்கரிடம் இருந்த புத்தகங்களின்  எண்ணிக்கை அளவிற்கு வேறு எந்த தனிநபரும் பெற்று இருக்கமுடியாது . மூன்று புத்தகங்கள் Life of Tolstoy, LesMiserables by Hugo, Far from the madding crowd by Hardy   ஆகியன தன்னை அழவைத்துவிட்ட்ன என அம்பேத்கர் குறிப்பிட்டதாக போலோனியஸ் தகவல் தருகிறார். விடியற்காலையா, நள்ளிரவா என்பதெல்லாம் பொருட்படுத்தாமல் எந்த நேரமும் படிக்க உகந்த நேரங்களாக அவர் வைத்துக்கொண்டார். நல்ல பேச்சு அல்லது எழுத்து என்பது குண்டுவீச்சு போல் அமையவேண்டும் என்பார் அம்பேத்கர்.
அம்பேத்கர் தனது நாயுடன் மிகவும் பிரியமாக நடந்துகொள்வார். நல்ல உடை விரும்புவார். கண்ணுக்கு நேர்த்தி தரும் படங்களை பார்வையிடும்போது மகிழ்வார். அவரது படங்களின் தேர்வுகள் அவரது அழகியல் உணர்வுகளை நமக்கு வெளிப்படுத்தும் என்கிறார் போலோனியஸ். உடையில் தேசியம் தெரியவேண்டாமா என்ற விவாதம் வந்தபோது நமது மூதாதையர் அணிந்த ஒன்றா எனக்கேட்டு ஆதாம் ஏவாள் ஏதும் அணியவில்லையே என கேலியாக பதில் தந்தார் அம்பேத்கர். அதேபோல் அடிக்கடி நிலையில்லாமல் கட்சி மாறுபவர்கள் மீது கடும் விமர்சனம் அவரிடம் இருக்கும். நமது எதிரிகளுடன் மோத நமக்கு பலம் இருக்கிறது. ஆனால் துரோகிகளை என்ன செய்வது என்பார்.
சோகன்லால் சாஸ்திரி அம்பேத்கருடன் 25 ஆண்டுகள் தொடர்பில் இருந்தவர். அவர் அம்பேத்கர் பற்றிய சில நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் மகர் பகுதியிலிருந்து முதல் பாரிஸ்டர் ஆன அம்பேத்கருக்கு பம்பாயில் சட்டத்தொழிலில் ஈடுபடுவது கொடுங்கனவாக முதலில் இருந்தது. நீதிமன்றம் பிராம்மணர், பனியாக்களால் நிரம்பிவழிந்த காலமது. எந்த சொலிசிட்டரும் அவரை ஜூனியராக ஏற்க தயங்கிய காலமும் கூட..

 அம்பேத்கர் வர்த்தக கல்லூரி ஒன்றில் ரூ 150 சம்பளத்திற்கு ஆசிரியப்பணியை மேற்கொண்டார். பல எதிர்ப்புகளை கடந்தே அதுவும் கிடைக்கப்பெற்றது. துணைவியார் ரமாபாய் அவர்களிடம் ரூ 50யை குடும்ப செலவிற்கு தருவார். அவர் பொறுப்புடன் 11/2 ரூபாய் முடிச்சுகளாக 30 போட்டுக்கொண்டு அன்றாட செலவை அதற்குள் செய்துகொள்வார். ரூ 5 எதிர்பாராத செலவிற்கு என ஒதுக்கி வைப்பார். எவ்வளவு நெருக்கடி எனினும் இன்று பட்ஜெட் முடிந்தது என அடுத்த முடிச்சை எடுத்துவிடாமல் குடும்பம் நடத்தினார். பாரிஸ்டர் துணைவியார் என்ற எண்ணமின்றி சாணி வராட்டிகளை கூடைநிறைய சுமந்துவருவார். அக்கம்பக்கத்து கேலிகளை அவர் பொருட்படுத்தவேமாட்டார் என சாஸ்திரி பதிவு சொல்கிறது.
அம்பேத்கர் மகாராஷ்டிர பற்றுக்கொண்டவர். ஞானேஸ்வரின் கீதைப்பற்றிப் பேசுவார். துளசிதாசரைவிட சிறந்தவர் என்பார். திலகர் போல் துன்பப்பட்ட அரசியல் தலைவர்  எவரும் இல்லை என்பார். அவரின் சிறைக்கொடுமைப் பற்றி எங்களிடம் எடுத்து சொல்வார். காங்கிரசில் கோவிந்த் வல்லப் பந்த் பெரும் அறிஞர் என்பது அம்பேத்கரின் மதிப்பீடு என சாஸ்திரி குறிப்பிடுகிறார்.
சட்ட அமைச்சராக அவர் இருந்தபோது பெரும் அரசு கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்று நேரம் ஏன் வீணடிக்கவேண்டும் என நினைப்பார். ஒயின் கூத்துகள் என்பார். புகைகூட பிடிக்க அவர் விரும்பமாட்டார். ஒருமுறை பான் கொடுத்தபோது மென்றுவிட்டு உடன் துப்பிவிட்டார். அவர் எளிய உணவுவகைகளையே விரும்பினார். மூன்று மீன் துண்டுகள், கொஞ்சம்  சாதம்- சப்பாத்தி தயிர் போதும் என்பார்.
எம் ஓ மதாய் நேருவிற்கு தனி உதவியாளராக இருந்தவர். அம்பேத்கர் மட்டும் தனது கசப்புகளை சற்று குறைத்துக்கொண்டு பணியாற்றினால் பெரும் தலைவர் அவர்தான் என மதாய் கருதி அதை அம்பேத்கர் நண்பரிடம் சொல்லியிருந்தார். மதாய் சொன்னதை அறிந்த அம்பேத்கர் மாலை தேநீர் உரையாடலுக்கு அவரை அழைத்தார். மதாய் வந்தவுடன் நேரிடையாக சுற்றி வளைக்காமல் அப்போ என்னிடம் குறை இருக்கு என்கிறீர்கள் என வினவினார். ஏற்கிறேன் என்றார்.
நமது அரசியல் அமைப்பு சட்டம் பேப்பரில் தீண்டாமையை ஒழித்திருக்கும், நடைமுறையில் அது இருக்கும் என அம்பேத்கர் விளக்கி சொன்னார். நூறாண்டுகளுக்கு அந்த வைரஸ் நீடிக்கலாம் என கொடுமை குறித்த மதிப்பீட்டை முன்வைத்தார். அமெரிக்காவில் நீக்ரோ முன்னேற்றம் எவ்வளவு மெதுவாக நகர்கிறது என்பது பற்றிப்பேசினார்.
இந்துக்களுக்கு வேதம் தேவை என்றபோது வியாசர் தேவைப்பட்டது. காவியம் தேவைப்பட்டபோது வால்மீகி, இப்போது அரசியல் சட்டம் தேவை என்கிறபோது அம்பேத்கர் என ஒருசேர தனது கோபம்- வருத்தத்தை மதாயிடம் பதிவுசெய்தார். மலையாளிகளான நீங்கள் இந்த நாட்டிற்கு சங்கரரை பிறப்பித்து பெரும் தீங்கு விளவித்துவிட்டீர்கள். அவர் பாதயாத்திரை செய்து  தர்க்கம் மூலம் புத்தமதத்தை விரட்டிவிட்டார் என்றார் அம்பேத்கர். இந்தியா பிறப்பித்த உன்னத ஆன்மா புத்தர்தான் என்றார். அடுத்து நாம் காந்தியை சொல்லக்கூடாது விவேகானந்தரை குறிப்பிடலாம் என்றார். காந்திதான் நேருவிடம் தங்களை அமைச்சரைவையில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றார் என மதாய் தெரிவித்தார். அது எனக்கு செய்திதான் என்றார் அம்பேத்கர்.
நாம்தியோ நிம்கடே பெரும் அறிஞர். விவசாய வல்லுனர். அம்பேத்கருக்கு பின்னர் அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் சிறுவராக இருந்தபோது நெகிழ்ந்த காட்சி ஒன்றை சொல்கிறார். அம்பேத்கர் நாக்பூர் ஓட்டல் அறையிலிருந்து வெளிவந்தபோது ஏழைப்பெண்கள் சிலர் அவருக்கு மாலை அணிவித்து தங்கள் துயரங்களை ஏழ்மையை தெரிவித்தனர். மாலைக்கு எப்படி ஏற்பாடு செய்தனர் என அம்பேத்கர் அறியவிரும்பினார். காட்டு சுள்ளிகளை சற்று அதிகம் பொறுக்கி விற்று மாலை வாங்கி அப்பெண்கள் வந்ததை அறிந்து மனம் கலங்கினார். சிறு வயதிலேயே தன் தாயாரை இழந்த அவர் அப்பெண்களிடம் என் அம்மா இருந்திருந்தால் இப்ப்டித்தான் அன்பு காட்டியிருந்திருக்கமுடியும் என்றார். உங்கள் குழந்தைகள் முன்னேற என்னால் முடிந்தவற்றை  செய்வேன் என அப்பெண்களிடம் உறுதி கூறினார். எனக்கு எத்தனையோ வாசனைப்பூக்களின் மாலைகள் சூடப்பட்டிருக்கலாம். ஆனால் நீங்கள் சூட்டியது எனது இதயத்தை தொட்டு நிற்கின்றன என்றார்.
மற்ற அமைச்சர்கள் பங்களாக்கள் போல்தான் வெளிப்பார்வைக்கு அம்பேத்கர் பங்களாவும் தெரியும். ஆனால் உள்ளே செல்பவர்கள் பெரும்பாலும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளான மிகச் சாதாரண மக்களாகவே இருந்தனர் என நிம்கடே சொல்கிறார். ஒருமுறை அவரது நூலகம் பற்றிய உரையாடல் நிம்கடேவுடன் நடந்தது. உலகின் உன்னத நூலகம் என சொல்லலாம் அல்லவா எனக்கேட்டபோது அது எனக்கு தெரியாது என அடக்கமாக அம்பேத்கர் பதில் தந்தார். ஏறக்குறைய 30000 புத்தகங்கள் அவரது நூலகத்தில் இருந்திருக்கும். எனக்கு ரிலாக்சேசன் என்பதே ஒரு புத்தகத்தை மூடிவைத்துவிட்டு மற்றொரு புத்தகத்தை படிப்பதுதான் என்பார். அவருடன் எந்த பொருள் குறித்தும் உரையாடமுடியும். அத்ற்குரிய விஷய ஞானத்துடன் இருப்பார் என்கிறார் நிம்காடே..
பிரிட்டிஷார் ஒருமுறை தங்கள் கமிஷன் சார்ந்த அறிக்கை ஒன்றை தவறவிட்டு எங்கும் கண்டுபிடிக்கமுடியாமல் போனபோது அம்பேத்கரை கேளுங்கள் அவரால் உதவமுடியும் என தெரிவிக்கப்பட்டது. அந்த அறிக்கையை தன் நூலகத்திலிருந்து பயன்படுத்திவிட்டு உடன் ஒப்ப்டைக்கவேண்டும் என்ற நிபந்தனையிட்டு அவர் நல்கினார். அதேபோல் அம்பேத்கருக்கு ஒரு அறிக்கை உடனடியாக ரெபரனஸ்க்கு தேவைப்பட்டது. அவரது நூலகத்தில் இல்லை. அமெரிக்க கொலம்பியா  மாணவரை அழைத்து தேட சொன்னார். அங்கு எப்பகுதியில் என்ன கேட்டலாக் தலைப்பில் இருக்கும் என சரியான இடம் சுட்டி, புத்தக அளவு கலர் உட்பட தெரிவித்து கண்டுபிடிக்க வைத்தார். புத்தகம் குறித்த பெரும் விழிப்புணர்வு மற்றும் தேடல்  மிகுந்தவராக இருந்தார் அம்பேத்கர்.
அம்பேத்கர் அமைச்சராக இருந்தபோது அவருக்கு கொடுக்கப்படும் உபசரிப்பு அலவன்ஸ் ரூ 500க்கும் புத்தகங்கள் வாங்க சொல்வார். அனைவருக்கும்  குடிக்க தண்ணீர் உபசரிப்பாக இருக்கும். பாபாசாகிப் அவர்களிடம் எவரும் புத்தகங்களை கடனாக பெற்று செல்லமுடியாது. நூலகத்தில் அமர்ந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவழிக்க அனுமதிப்பார். பிரஸ் கிளிப்பிங் கூட எடுக்கமுடியாது. ஆண்டுவாரியாக அவை தொகுக்கப்பட்டிருக்கும்.

அரசியல் சட்ட வரைவுக்காலத்தில் அவர் உறங்கினாரா என்பது கூட சந்தேகமே. இரவு முழுக்க படித்து குறிப்பு எடுத்துக்கொண்டு இருப்பார். அமெரிக்க பத்திரிகையாளர்கள் எப்போது நேரம் ஒதுக்கமுடியும் எனக்கேட்டனர். நேரு, காந்தியின் உதவியாளர்கள் அவர்கள் ஓய்வில் என சொல்லிவிட்டனர் என அவர்கள் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் லக்கி தலைவர்கள், என் மக்கள் உறங்கிக்கொண்டிருக்கும்போது நான் விழித்துதானே இருக்கவேண்டும்- நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்றார் அம்பேத்கர்.
நாம்தியோ பதிவில் அம்பேத்கர் கண்ணீர் மல்க தன் நினைவுகளை பகிர்ந்துகொண்ட காட்சி விவரிக்கப்படுகிறது. பொதுவாக வறுமை, வெளிநாடு போய் சட்டப்படிப்பு முடித்துவந்தும் சாதிக்கொடுமை காரணமாக வழக்குரைஞர் பணியில் சங்கடங்கள், குழந்தை இறந்தபோது அதை அடக்கம் செய்யும் அளவிற்கு கூட உடலில் தெம்பு இன்மை, துணைவியார் ரமாபாய் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மேற்கொண்ட பிரம்மசரிய வாழ்க்கை என பல தொடர் துயரங்களை அம்பேத்கர் பகிர்ந்துகொண்டார்.
1953ஆம் ஆண்டில் அம்பேத்கர் நோய்வாய்ப்பட்டிருந்தார். நிம்கடே பார்க்கச் சென்றபோது உடல் தகித்துக்கொண்டிருந்தது. பலவீனமாக காணப்பட்ட அவர் என்னால் கவனமாக பணியாற்ற முடியவில்லை என்றார். இனி நான் ஆலோசனை சொல்பவனாக மட்டும் மாறிவிடுவேனோ என கவலையை பகிர்ந்துகொண்டார். ஊதியம் மாதம் ரூ 240 வருகிறது. கடன் பொறுப்போ 22 லட்சம் அளவிற்கு இருக்கிறது. சித்தார்த் கல்லூரி, மிலிந்த் கல்லூரி, தேர்தல் செலவுகள் என பெரும் சுமை கூடிவிட்டது. அவ்வளவு சுமைகளுடன் இருந்தபோதும் அவர் தன்மானத்தை கைவிட்டதில்லை. எவரிடம் உதவி என போய் நின்றதில்லை. அவர் மகனுக்கு டெல்லி வீட்டுவாரியத்தில் வேலை என பேச்சுவந்தபோது, நான் அமைச்சர் என்பதால் சலுகையா என கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.
புத்தர் பற்றிப் பேசும்போதெல்லாம் பெருமிதம் பொங்க பேசுவார். அவர் பெரும் விஞ்ஞானி என்பார். கிடைத்த டேட்டாக்களைக்கொண்டு மட்டுமே முடிவிற்கு வருவார். உலகம் அப்போது தோன்றியது- இத்தனை நாட்களில் வளர்ந்தது என ஏதும் அவர் சொல்லவில்லை. ஆன்மா, கடவுள் என புத்தர் கவலைப்பட்டதில்லை. அறிவியலுக்கு எதிரானவர் புத்தர் என நிருபிக்க ஏதும் இல்லை என அம்பேத்கர் விளக்கி சொல்வார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடவுள் உங்கள் ஆன்மாவை காக்கட்டும் என சொன்னதைக் கேட்டவுடன் இரண்டிலும் எனக்கு நம்பிக்கையில்லை என்பதை நீர் அறியவேண்டும் என்றார்.
இளைஞர்கள் திருமண அழிப்பிதழை அவரிடம் கொடுக்கவரும்போது, மணமாகி குழந்தை பெறுவதை ஏதோ ட்ராபி விளையாட்டுப் போல் நினைத்து நின்றுவிடக்கூடாது. பிறக்கும் குழந்தை கல்விமானாக வளர்க்கப்படவேண்டும் என அறிவுரை நல்குவார். தன் பெயரை வைப்பவர்களிடம் பெயரில் என்ன இருக்கிறது. லஷ்மி எனப் பெயர்வைத்து அவள் பாத்திரம் கழுவி பிழைக்கிறாள். சிவாஜி என பீடிக்கட்டிற்கு பெயரை வைக்கிறார்கள். சுபாஷ் போஸ் என பெயர் உள்ளவர் சலூன் வைத்துள்ளார். ஆகவே பெயரை பெரிதாக நினைக்கவேண்டாம். செயல்தான் முக்கியம் என்பார்.
புத்தமதத்திற்கு மாறும் நேரத்தில் தன்னால் இரு சரணங்களையே சொல்ல இயலும். புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி என்றார். மூன்றாவதான சங்கம் சரணம் கச்சாமி  என்பதை தவிர்க்கவிரும்புகிறேன் என்றார். மகாபோதி அமைப்பின் செயலர்  வலசிம்ஹா அனுப்பப்பட்டு அம்பேதகருடன் உரையாடி அவரை சம்மதிக்க வைக்க வேண்டியதாயிற்று,
ஆகஸ்ட் 1956ல் ஒருமுறை அம்பேத்கரை சந்தித்த்போது அவர் சோகத்துடன் காணப்பட்டார். விவரம் கேட்டபோது புத்தகங்கள் வாங்கிக்கொண்டு திரும்பியபோது மழையின் காரணமாக கார் கோளாறுக்குள்ளாகி பெரும் பள்ளத்தில் சிக்கிவிட்ட சாலை விபத்து பற்றி கூறினார். இந்துவாக என் மரணம் நேர்ந்துவிடக்கூடாது என்பதே என் கவலை என்றார். உடனடியாக புத்தமதம் மாறியாக வேண்டும் என்றார்.
 நிம்கடே டிசம்பர் 6 அன்று அம்பேத்கர் புத்தகம் ஒன்றை வாங்கச் சென்றபோது கடைக்காரர் நீங்கள் கேட்ட புத்தகம் எழுதிய ஆசிரியர் இறந்துவிட்டார் என சொல்கிறார். பெரும் அழுகையுடன் சைக்கிளை எடுத்துக்கொண்டு அம்பேத்கர்  இருப்பிடத்திற்கு தான் விரைந்ததாக நாம்தியோ சொல்கிறார். அம்பேத்கரின் உடல் சந்தனபேழையில் வைக்கப்பட்டு பம்பாய் எடுத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
சங்கரானந்த் சாஸ்திரி பாபாசாகேப் அவர்களுடன் 20 ஆண்டுகளுக்கும் மேல் நெருக்கமாக பழகியவர். சிவில் சப்ளை துறையில் இருந்தவர். அம்பேத்கரின் Annihilation of Caste யை கொணர்ந்தவர். அம்பேத்கரின் நினைவுகள் என்ற புத்தகத்தை எழுதியவர். அவர் சில குறிப்புகளைத் தருகிறார்.
 ஜி டி பிர்லாவின் சகோதரர் கிஷோர் பிர்லா அம்பேத்கர் இல்லத்திற்கு மார்ச் 31, 1950 அன்று வந்தார். முன்னதாக  மதராசில் பெரியார் தலைமையில் நடந்த பிராம்மணர் அல்லாதவர் கூட்டம் ஒன்றில் கீதையை அம்பேத்கர் விமர்சித்திருந்தார். கீதையை விமர்சித்து இந்து மக்களின் மனதை ஏன் புண்படுத்துகிறீர்கள் என பிர்லா வினவினார். கீதையை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு இந்துமதத்தை வலுப்படுத்த அம்பேத்கர் உதவ வேண்டும். தாழ்த்தப்பட்டோர் முன்னெற்றத்திற்கு 10 லட்சம்வரை நிதி உதவி செய்யத்தயார் என்றார் கிஷோர் பிர்லா.
நான் என்னை விற்றுக்கொள்ளமுடியாது. கீதை சமூகத்தை பிளவுபடுத்தி பேசுவதால் விமர்சிக்கவேண்டியுளளது, அது வெறுப்பு பிரதியாகவுள்ளதால் விமர்சிப்பதாக பதிலை தந்தார் அம்பேத்கர். அதேபோல் ராமர் கோயில் புத்தர்கோயில் கட்டியதையெல்லாம் பிர்லா பேசினார். தங்கள் தயாள சிந்தனைக்கு நன்றி என்றார் அம்பேத்கர். செட்யூல்ட் வகுப்பார் முன்னேற்றத்திற்கு தாங்கள் ஆற்றி வரும் பணிக்காகவும், அரசியல் அமைப்பு சட்ட பணிக்காகவும் என் நன்றியை தெரிவிக்கிறேன் என சொல்லி பிர்லா விடைபெற்றார்.
தேவி தயாள் அம்பேத்கரின் நூலகத்தை பராமரித்தவர். அன்றாட நடவடிக்கைகள் குறித்த டைரி குறிப்புகளை அவர் வைத்திருந்தார். அம்பேத்கர் இரவு வெகுநேரம் கண்விழித்து படித்துவிட்டு புத்தகங்கள் சூழவே உறங்கிவிடுவார். காலை தினசரிகள் சகிதம் அவரை எழுப்புவோம். சில இரவுகளில் 1 மணி, 2 மணிக்குக் கூட  தேவைப்படும் புத்தகம், குறிப்புகளை சொல்லி எடுத்துவா என்பார். 12 சதுர அடி படுக்கையறையில் பல ஸ்டூல்களில் புத்தகங்களாக வைத்திருப்பார். படுத்துக்கொண்டால் கூட புத்தகம் கையில் இருக்கும். மிகவும் லயித்து படிக்க ஆரம்பித்தால் கழிப்பறை செல்லும்போது கூட அவர் கையுடன் எடுத்து செல்வதை பார்க்கமுடியும். மறந்து அங்கே வைத்துவிட்டு வந்ததை நாங்கள் திரும்ப எடுத்து வருவோம். குளித்துவிட்டு காலை உணவிற்கு வரும்போதும் ஏதாவது ஒன்று கையில் எடுத்து வருவார்.
திருவிதாங்கூர் திவான் சர் சி பி ராமசாமி  அவரை பார்க்க வந்தார். அவர் வருகிறார் என செய்தி வந்தவுடன், திவான் சில ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய கோயில் நுழைவு உரிமை குறித்த பேப்பர் கட்டிங் ஒன்றை அம்பேத்கர் தேட சொன்னார். நினைவுப்படுத்திக்கொண்டு 12 ஆண்டுகளுக்கு முன்னரான செய்தி அது என்றார். 3 அங்குலம் கூட இல்லாத அந்த துண்டு செய்தியைக்கூட பத்திரப்படுத்தி வைத்திருந்த பொறுப்பு வியப்புக்குரிய ஒன்று,
 திடிரென தானே இன்று சமையல் செய்யப்போகிறேன் என்பார். அப்படி ஒருநாள்  செப்டம்பர் 1944ல் 7 வகை பதார்த்தங்களை செய்து வைத்தார். அன்று மீனாம்பாள் சிவராஜ் வந்தார். அவருக்கு உணவை பரிமாறி அம்பேத்கர் மகிழ்ந்தார். சமையல் வேலையில் இருந்தபோது உயர் அதிகாரிகள் அவரிடம் உத்தரவு கேட்டு வந்தனர். அவர் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிற்துறையை பெற்றிருந்த சமயம். அப்படி உயர் பொறுப்பில் இருந்தபோதும் தனக்கு சமையல் செய்து தந்ததை பெருமிதமாக மீனாம்பாள் நன்றி பாராட்டி சொன்னார்.
 பொதுவாக பொழுதுபோக்கு என்பதில் நாட்டமில்லாதவராக பாபசாகேப் இருந்தார்.  விருந்துகளை- கேளிக்கைகளை நேர விரயம் என தவிர்த்துவிடுவார். நண்பர்கள் மிகவும் வலியுறுத்தினால் உணவிற்காக எப்போதாவது செல்வார். பொதுவாக யாராவது உபசரிப்பு என பேசினால் வீட்டிலேயே வாங்கிவந்து உபசரித்துவிடுங்கள்- வெளியே நேரம் வீணடிக்கமுடியாது என சொல்லிவிடுவார். விடுப்பு எடுத்துக்கொண்டு ஊர் செல்வது, சினிமா பார்ப்பது என்பதெல்லாம் அவரிடம் இல்லாத பழக்கம்.
தன்னை எவராவது தனிப்பெரும் மேதை எனப் புகழ்ந்தால் உடனே அதை அங்கீகரிக்காமல் பதில் சொல்லி புரிய வைப்பார். கடுமையான, தொடர் உழைப்பு இருந்தால் சாதிக்க இயலும் என்பார்.  Intellectual singularity  எனபதை தான் ஏற்பதில்லை என்பார். மனித சக்திக்கு அப்பாற்பட்டது என நினைப்பது மாயை- சூப்பர் மானுடன் என்பதில் நம்பிக்கை இல்லை என தெளிவுபடுத்தி விடுவார்.
தேவிதயாள் தரும் விவரப்படி அம்பேத்கர் அவர்களிடம் 45000 புத்தகங்கள் இருந்திருக்கலாம். தான் சம்பாதித்த அனைத்தையும் புத்தகத்திற்காக செலவிட்டுவிட்டேன் என அம்பேத்கர் அடிக்கடி கூறுவார். புத்தகங்களை எப்படி வைப்பாரோ, அது அப்படியே இடம் மாறாமல், கலைக்கப்படாமல் இருக்க வேண்டும் என விரும்புவார். மாறியிருந்தால் அவர் கோபத்திற்கு இலக்காக நேரிடும். கடுமையான உடல்வலி என சொல்வார். ஓய்வு எடுக்கக்கூடாதா எனக்கேட்டால் புத்தகம் படிக்கத் தொடங்கிவிட்டால் வலி தெரியாது,  படிப்பதே வலிநிவாரணி  என்பார்.
நானக் சந்த் ரட்டு அம்பேத்கருக்கு செயலர் போல பணியாற்றியவர். அவரின் நினைவுகளை தொகுத்துக்கொடுத்தவர். அம்பேத்கரின் இல்லத்திற்கு அவர் தினமும் 25  கிமீ சைக்கிளில் வந்து வேண்டிய உதவிகளை செய்து திரும்புவார். சில நாட்களில் தனியாக அமைதியாக அமர்ந்து அம்பேத்கர் வயலின் வாசித்துக்கொண்டிருப்பார் என்பதை ரட்டு சொல்கிறார். தனது சுயசரிதை, மகாத்மா பூலே வரலாறு, இந்திய ராணுவ வரலாறு ஆகியவற்றை எழுதவேண்டும் என அம்பேத்கர் நினைத்திருந்தார் என ரட்டு குறிப்பிடுகிறார். ’வைட்டிங் பார் விசா’  என்கிற அம்பேத்கர் சுயசரிதை குறிப்புகள் பற்றியும் ரட்டே சொல்கிறார். அதையும் Attendant Details    புத்தகத்தில் இணைத்துள்ளனர்.
Ref
Ambedkar  The Attendant Details  Edited by Salim Yusufji

3 comments:

  1. சரளமான நடை, தங்களின் பிற எழுத்துக்களிலிருந்து வித்தியாசமாக உள்ளது. அம்பேத்கார் நடைமுறை அன்றாட வாழ்விலிருந்து சுவையான தகவல்கள். நிறைந்த உழைப்பு. நன்றி தோழர்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அருமையான பதிவு. இதை நான் பயன்படுத்திக் கொள்ளலாமா ஐயா?

    ReplyDelete