https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, October 28, 2021

இன்றைய காந்திகள் - பாலசுப்ரமணியம் முத்துசாமி

 

               இன்றைய காந்திகள் - பாலசுப்ரமணியம் முத்துசாமி

பழகிய தோழர்களால் பாலா என அழைக்கப்பெறும் பாலசுப்ரமணியம் முத்துசாமி அவர்களின் இன்றைய காந்திகள் சமீப ஆண்டுகளில் தமிழகத்தில் பேசப்பட்ட புத்தகம். அதன் திறனாய்வுகளை மட்டுமே பார்த்த எனக்கு அப்புத்தகத்தை படிக்கும் நல்வாய்ப்பு இப்போதுதான் கிட்டியது. கவிஞர் யுகபாரதி உபயம்.





தமிழக பொதுவெளியில் அதிகம் பேசப்படாத உணரப்படாத பல ஆளுமைகளை சுருக்கமாக அவர்களின் செயல்களின் வழியே ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார்.  வர்கீஸ், அருணாராய் சிறிய வட்டாரத்திலாவது பேசுபொருளாக இருந்திருப்பர். அரவிந்த் கண் மருத்துவமனை பலரிடம் போய் சேர்ந்திருக்கும். ஆனாலும் அதன் துவக்க நாயகர் பற்றிய செய்திகளை பொதுபுத்தி உள்வாங்கியிருக்காது. இவர்களைத்தவிர லஷ்மி சந்த் ஜெயின், பங்கர் ராய், ராஜேந்திர சிங், அபய்- ராணி பங்க், சோனம் வாங்ச்சுக், அர்விந்த் குப்தா பேசப்பட்டுள்ளனர். இலா பட் அவர்களை தொழிற்சங்க தோழர்கள் சற்று அறிந்திருக்கலாம். கட்டுரைகளை படிப்பவர்கள் இந்த செயலூக்க நல்மாதிரி மனிதர்களை மேலும் தேடிச்செல்லும் வகையில் அவர்கள் குறித்த அறிமுகத்தை ஆசிரியர்  பாலசுப்ரமணியம் முத்துசாமி தந்துள்ளார்.

சத்தியம் தோற்பதில்லை- இந்த காந்திய வார்த்தைகளை நான் எப்பவும் நம்புகிறேன். நோக்கத்தில் உண்மை குடியிருக்கும் எச்செயலும், எச்சொல்லும் நிச்சயம் நிறைவேறும்என்கிற கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் அனுபவம் தோய்ந்த குரலுடன் புத்தகம் விரிகிறது.

இப்புத்தகத்தை அழகுற பதிப்ப்பித்துள்ள தன்னறம் நூல்வெளி இவ்வாறு மிகச் சரியாக குறித்துள்ளனர்.

“ இக்கட்டுரைகள் காந்திய வழியில் பயணப்பட்டு, தங்கள் செயலிலக்கு தாண்டியும் நம்பிக்கையோடு நகர்கிற சாட்சி மனிதர்களின் தொகுப்பாக நிறைந்துள்ளது…. எளிய வாசிப்பின் வழி, நம்முள் பெருங்கனவை உருவாக்கும் எழுத்து நடை இப்புத்தகத்தை மனதுக்கு மேலும் அண்மைப்படுத்துகிறது. தரவுகளைத்தாண்டி அனைத்து வார்த்தையிலும் ஒரு மானுட அரவணப்பை உணரமுடிகிறது…எதன் வழி இம்மானுடம் ஆற்றுப்படவேண்டும் என்பதை நாம் மறுபரிசீலனை செய்தே ஆகவேண்டும்” தன்னறம் தோழர் எழுதிய இந்த சரடு நூல் நீள நம்மை அழைத்துச் செல்வதை வாசிக்கும்போது உணரமுடியும்.

இன்றைய ’அருஞ்சொல் சமஸ்’ தனது அரவணைப்பாக படைப்பூக்கத்தில் வாழ்கிறது காந்தியம் என்கிற எளிய அறிமுகத்தை தந்துள்ளார்.

“ நண்பர் பாலா தன்னுடைய எழுத்துப்பணியை சரியான இடத்திலிருந்தே தொடங்கியிருக்கிறார். நூற்றுக்கணக்கான கதவுகள் சடசடவென அடைபடுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கதவுகள் திறக்கப்படுவதுமான காலகட்டத்தில், பத்து கட்டுரைகளின் வழி இந்தப்புத்தகத்தில் பத்து உலகங்களைத் திறந்து காட்டுகிறார்; பாலா திறக்கும் கதவுகளின் வழி கசியும் ஒளியை நாம் காந்தியம் என்று மொழிபெயர்க்கிறோம். ஆனால் அது சாமான்யர்களுடமிருந்து வெளிப்படும் ஒளிதான்”

’போற்றப்படாத இதிகாசம்’ வர்கீஸ் குரியனின் பிரகாசத்தை வெளிக்கொணரும் கட்டுரை. ஆசிரியருக்கு அவருடனான நேரடி அனுபவம் – தன் சொந்த அனுபவ ஒளியில் கூடுதல் புரிதலை தருகிறது. ஆசிரியர் குஜராத் ஆனந்த் நகரின் ஊரக மேலாண்மைகழகமான் இர்மாவின் மாணாக்கர் என்பதால் அருகிருந்து வர்கீசை- அவரது செயல்திறனை உள்வாங்கமுடிந்துள்ளது. படேல், சாஸ்திரி ஆகியோர் துணையுடன் அமுல் கூட்டுறவு சொசைட்டி எனும் அற்புதத்தை கூட்டுழைப்பில் தனி ’சிரத்தை’யில் வர்கீஸ் உருவாக்கி வளர்த்த கதையைத்தான் இக்கட்டுரை மிக பொறுப்புடன் இந்திய தொழில்மாதிரியாக முன்வைக்கிறது. வர்கீசின் பெரும்பங்களிப்பை பத்ம விபூஷனும், மாக்சசே விருதும் பேசிக்கொண்டாலும் பாரத ரத்னாவும், நோபல் பரிசும் பாராமுகம் காட்டியது பெரும் சரித்திரச் சோகம் என ஆசிரியர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார். குரியனின் பங்களிப்பு உலகைக் காத்தது என்கிற உரிமைப்பாரட்டல் ஏதுமில்லை. ஆனால் பலகோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்கிற நிஜத்தை இக்கட்டுரை தரிசிக்க வைக்கும்.

பங்கர் ராய்- அருணா ராய் தம்பதியர்கள். இருவர் குறித்தும் தனிக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பங்கர் ராய் ராஜஸ்தான், அஜ்மீர் மாவட்ட டிலோனியா Bare foot collegeயை உலகறிய செய்தவர். நீர்மேலாண்மை, சுகாதாரம், சக்தி போன்றவற்றிற்கான வாழ்க்கை செயல்முறை கல்விகூடமது. பங்கர் டூன் பெரும்படிப்பு மாணவர் – ஜெயபிரகாஷ் நாரயண் ஏற்படுத்திய உளத்தூண்டல்- தானே கிணறு தோண்டி உழைப்பிற்கு முன்னுதாரணமாக நின்று கிராம மக்களை அய்க்கியப்படுத்தியவர்- தங்கள் சொந்த தேவைகளுக்கு அவர்களே நிபுணர்கள் என்பதை செயலில் உணரவைத்தவர் என அடுக்கிக்கொண்டே போகலாம். ராஜஸ்தானில் கிராமம் தன் சொந்த முயற்சியால் நீராதாரம் சாதாரண விஷயமல்ல. சூரியஒளி விளக்குகள் திட்டம் பல நாடுகளும் விழையும் திட்டமானதிலும் பங்கர் ராய் பங்கு சிறப்பாக வெளிக்கொணரப்பட்டுள்ளது.

அருணாராய் என்றால் அய் ஏ எஸ் என்பதும் தகவல் உரிமைச் சட்டம் என்பதும் சட்டென நினைவிற்கு வந்துவிடும். இந்த சட்ட உருவாக்கம் கருக்கொண்ட தேவ்துங்க்ரி குடில், வளர்ந்து வசப்பட்ட சூழலை அருணா மற்றும் அவர் சக தோழர்களின்  அரும்பயணத்தை இக்கட்டுரையில் பார்க்கலாம். குறைந்தபட்சக் கூலிக்கான பெரும்போராட்டங்களை ஆசிரியர் அறியத்தருகிறார். மக்கட்குரல் கேட்பு எனும் பழக்கம் உருவான பின்னணியை அறிகிறோம்.

ராஜேந்திர சிங்கை ’தண்ணீர் காந்தி’ என பாலசுப்ரமணியம் அறியத்தருகிறார். தருண் பாரத் சங் என்கிற இளைஞர் செயல் களம் வழியாக வறட்சிப்பகுதிகளில் நடந்த குளம் வெட்டுதல்- பயிர்  விளைவிக்கும் பூமிகளாக மாறிய அற்புத நிகழ்வுகள் இக்கட்டுரைகளில் காணக்கிடைக்கின்றன.

அபய்பங்- ராணிபங் தம்பதியினர். தங்கள் தோழர்களுடன் சக மக்களுடன் உருவாக்கிய ஆரோக்கிய ஸ்வராஜ்யம் தான் இக்கட்டுரையின் சாரம். மலேரியா, குழந்தை இறப்பு, குடி இவற்றை எதிர்த்து தாங்கள் கிராமத்தில் அமைத்த மாத்ந்தேஷ்வரி மருத்துவமனை மூலம் நடந்த ஊக்கம் தந்த மாற்றங்களை இந்த கட்டுரை நமக்கு சொல்கிறது. அறிவியலின் துணையால் சொந்த மக்களின் முன்முயற்சியால் குறைந்த செலவில் மனிதர்கள் விடுதலைசாலையில் பயணிக்க இயலும் என்பதை பேசும் கட்டுரை.

லடாக்கின் சோனம் வாங்ச்சு தான் கண்டறிந்த மக்களின் கல்வி,, சூரிய ஒளியை பயன்படுத்தல், பனிஸ்தூபி எனும் புதியவழியில் நீராதாரம் மேம்படுத்திய சோதனைகளை இக்கட்டுரை பேசுகிறது.

அரவிந்த் கண் மருத்துவமனையின் உருவாக்கத்திற்காக நின்ற டாக்டர் வெங்கிடசாமி அவர் தம் உழைப்பு, அதன் சேவைகள் விரிவாக இப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளன. Spiritual consciousness then no exploitation என்கிற டாக்டரின் உள்ளுணர்வு இக்கட்டுரையில் நமக்கு கொடுக்கப்படுகிறது.

அர்விந்த்குப்தா எனக்கு அவர் இணையதளம் வழியாக ஏராளம் தந்தவர். பலருக்கும் தந்திருப்பார். குழந்தைகள் உலகில் அவரின் அனுபவத்தை இக்கட்டுரை நமக்குத்தரும். கல்வியின் நோக்கம் பற்றிப்பேசும். ஊரககுழந்தைகளை விரட்டாத வெருட்டாத கல்விக்காக அர்விந்த் குப்தாவின் போராட்டங்களை அறிகிறோம்.

லஷ்மி ஜெயின் இன்றைய NDTV சீனிவாச ஜெயினின் தந்தையார். சுதந்திர போராட்ட வீரர்- பத்திரிகையாளர். விடுதலைக்காலத்தில்- பிரிவினை அகதிகள் பிரச்சனையில் சுசேதா கிருபளானி, கமலாதேவி வழிகாட்டலில் உடன் நின்று அவர்கள் வாழ்க்கையை அவர்களது சொந்த முயற்சிகளால் முன்னேற்றியவர். அவரைப்பற்றிய கட்டுரையும்  இடம் பெற்றுள்ள புத்தகம்.

பாலசுப்பிரமணியம் முத்துசாமி அவர்கள் தன் சொந்த நிர்வாக அனுபவ வெளிச்சத்தில்  அறம் சார்ந்த நிர்வாகத்தை- மக்கள் நிர்வாக இயலை காந்திய வழிப்பட்டு நிற்கும் ஆளுமைகளை தமிழர்கள் அறிதல் முறைக்கு நெருக்கமாக கொணரும் வழியில் சிறப்பாக செயல்பட்டு வருவது பெருமைக்குரிய அம்சம். சிறக்கட்டும் அவரது எழுத்துக்கள்.

28-10-2021


Friday, October 22, 2021

யுகபாரதியின் நல்லார் ஒருவர் உளரேல்

 

          யுகபாரதியின் நல்லார் ஒருவர் உளரேல்

யுகபாரதியை சினிமா பாடலாசிரியராக  தமிழகம்  அனுபவித்து கொண்டாடும். அவரின் இலக்கிய தேர்ச்சியும், இசைத்தேடலும் அவருடன் நெருங்கிய அன்றாட உரையாடல்களைக் கொண்டவர்களுக்கு புரிந்ததாக இருக்கும்.  வாழ்க்கை வசதிக்கான வாகனம்  சினிமா என்றால் அவரின் எழுத்துக்கள்- கருத்து தெறிப்புகள் அவரின் ஆன்ம வசதிக்கான பெரும் பிரயத்தனங்கள். 




அவரின் மனப்பத்தாயத்தை மட்டுமே நான் அறிந்தவனாக இருந்தபோது அவர் நான் கிறுக்கும்  கட்டுரைகளை இணையவழி பார்த்து என்னிடம் அன்புபாரட்டத்துவங்கினார். பேசுவதை பாராட்டி சொல்லத்துவங்கினார்.  நானோ 65யை கடந்து போய்க்கொண்டிருப்பவன். யுகபாரதி இப்போதுதான் 40யைக் கடந்துள்ளார். வாழ்க்கையின் உயர்படிகளை மெதுவாக நிதானமாக ஏறிக்கொண்டிருக்கிறார். அதற்காக அவர் சந்தித்த வாழ்க்கைச் சோதனைகள் ஏராளம் என அறியமுடிகிறது. எவ்வளவு உயரம் சென்றாலும் தன் மக்களின் பூமிப்பந்தில் அவர்களுடன் சேர்ந்திசை செய்வதில் கவனமாக இருக்கிறார்.

அரசியல் பின்னணி குடும்பமாக இருந்தாலும் தமிழக வளர்ச்சிப்பாதையில் சந்திக்க நேரும் அனைத்து அரசியல் கருத்தாக்கப் புள்ளிகளுடன் அவர் எவ்வாறு கோலம் உருவாக்கலாம் என்பதை அறிந்தவராக இருப்பதை என்னால் அவருடன் உரையாட நேர்ந்தபோது ஊகிக்கமுடிந்தது.  அரசியல் வெளியில் மார்க்சியராக, காந்தியம் அறிந்தவராக, அம்பேத்கரிஸ்டாக, பெரியாரிஸ்டாக, தமிழ்த்தேசியம் அறிந்தவராக அவர் அனைத்து சட்டகத்திலும் இருக்கிறார். ஆனால் எந்த சட்டகத்திலும் தன்னை முற்றிலுமாக பொதித்துக்கொண்டும் இல்லை.

 தமிழகம் யுகபாரதியை கவிஞராக ஆரத்தழுவிக்கொண்டதுபோல எழுத்தாளராகவும் அவரை அதிகம் எடுத்துக்கொண்டு செல்லவேண்டிய அவசியத்தை அவரின்நல்லார் ஒருவர்தொகுப்பு எனக்கு சொல்லியது.  அவரின் நம்பிக்கை பொய்க்காமல் அவரின் எழுத்துக்கள் வாழ்வாங்கு வாழட்டும். 

மீட்பவர்களுக்கு மழையும் வெயிலும் வெவ்வேறல்ல என  15 நல் ஆளுமைகள் குறித்து யுகபாரதி இத்தொகுப்பில் கட்டுரைகள் தந்துள்ளார்.

தோழர் நல்லகண்ணு யுகபாரதிக்கு தோழமையின் தூயசொல்லாகப்பட்டுள்ளார். அவருடன் இளைஞனாக அருகமர்ந்து நடத்திய பல ஆண்டுகளின் பரிச்சயமொழியை இக்கட்டுரையில் நாம் வாசிக்கலாம். இப்படித்தான் இடதுசாரிகளின் குணமேம்பாட்டை யுகபாரதி தருகிறார் .

எதையும் கொள்கை அடிப்படையில் அணுகிப்பார்ப்பவர்கள். தனிநபர் சாகசங்களையோ தற்குறித்தன வாக்குறுதிகளை வழங்கியோ தங்களை உயர்த்திக்கொள்ள அவர்கள் உத்தேசிப்பதில்லை. மக்கள் மத்தியில் செல்வாக்கைப்பெற கற்பனைப் பிம்பங்களைக் காட்டவோ கட்டியமைக்கவோ எண்ணுவதில்லைஅவர்களுக்கு அதிகாரம் தள்ளிப்போகலாம் பதவிக்கு லாயக்கற்றவர்கள் என விமர்சிக்கப்படலாம் ஆனாலும் இலட்சிய வாழ்வின் இலட்சணங்கள் பெற்றவர்கள் இடதுசாரிகள்- அதன் ஒற்றை உதாரணம் தோழர் நல்லகண்ணு என்கிற எழுத்தோவியத்தை யுகபாரதி தருகிறார்.

கட்டுரை நெடுக அவர்களின் பழக்கம்-உரையாடல், விமர்சனத்தை நியாயமற்றதாக வந்தபோதும் ஆர் என் கே எதிர்கொண்ட பக்குவம், அவரின் விரிந்த வாசிப்பனுவம், எளிய மக்களுடம் நிற்கும் போராட்ட வாழ்க்கை பேசப்படுகிறது. தனது திருமணத்திற்கு மட்டுமே திருமதி ரஞ்சிதம் அம்மாளுடன் ஆர்.என்.கே வந்த உணர்வை பூரித்து யுகபாரதி உள்ளம் தூயதோழமை பாராட்டுகிறது.

பெரியாரின் பெருந்தொண்டன் சுவரெழுத்து சுப்பையா பற்றிய பெருமித கட்டுரை ’வெளுக்கவைத்த கருப்பெழுத்து’. அவர் வாழ்வின் சாயலை தொண்டின் மேன்மையை பேசும் கதை- கட்டுரை. தயாராயிருங்கள் காம்ரேட் நாளையோ நாளை மறுநாளோ புரட்சி வந்துவிடும் என உயிர்ப்பு நம்பிக்கைகளால் உலகம் சூன்யம் கவ்வாமல் நகர்வதை சொல்லிய யுகபாரதி உலக வரலாறு தங்களை உருவாக்கியவர்களை உண்மையாக குறித்துக் கொள்ளாமல் செல்லும் அலட்சியத்தையும் விசனப்பட்டு சொல்கிறார். அப்படி உழைத்து குறிக்கப்படாமல் நினைவு கூறல்கூட இல்லாமல் போனவருள் ஒருவர் சுப்பையா.

தனது ஓவிய ஆசையிலிருந்து காட்சிகளை நகர்த்தி சுப்பையாவிடம் நாம் அழைத்துச் செல்லப்படுகிறோம். சுயமரியாதை எனும் அறிவாயுத நெருப்பை சுவர் எழுத்துக்கள் மூலம் கண்பார்வை மங்கிய காலத்திலும் ஒயாமல் செய்து பட்டமோ பதவியோ நோக்காது எழுதிய எழுத்துக்களுக்கு கீழ் தன் பெயரைக்கூட பொருத்திக்கொள்ளாத தன்னையே பொதுச்சொத்தாக மட்டுமே கருதிக்கொண்ட சுப்பையா யுகபாரதியின் மனபீடத்தில் மட்டுமல்லாமல் வாசிக்கும் நம்மிடத்திலும் உயரே நிற்பார்.

’குழலான மூங்கில்’ அற்புதமான கலைஞர் தம்பி ராமையா பற்றிய சொற்சித்திரம். இமான், யுகபாரதி, தம்பிராமையா அனைவரும் தங்களுக்குள் உறைந்து வெளிப்படும் திறமை அங்கீகாரத்திற்காக போராடிக்கொண்டிருந்த காலமும், மைனா- கும்கி திரைப்பட அனுபவம் பற்றிய கட்டுரையிது. இக்கட்டுரையின் நாயகன் தம்பி ராமையா அவர்கள்.

 ஒரு படைப்பாளன்  காதுகளைத் திறந்து வைக்கத்துணியும் அந்தக் கணத்திலிருந்துவெற்றியின் வாசல் அவனுக்கு திறந்து கொள்கிறது என்கிற அற்புத யுகபாரதியின் தெறிப்பு இக்கட்டுரையில் நமக்கு கிடைக்கிறது. படைப்பாளிக்கு மட்டுமல்ல ஒருவர் பண்படவேண்டுமெனில் அத்துணிவு அவருக்கு கூடவேண்டும். மலையாள திலகன், நெடுமுடி போன்ற கவனப்படுத்தல்களுடன் ராமையா பார்க்கப்படவேண்டியவர் என்பதை யுகபாரதி தன் விருப்பாக மட்டுமே சொல்லாமல் அனுபவ அலசலாகவும் முன்வைக்கிறார்.. ராமையாவிற்கு பாத்திரங்களின் தேர்வும் அவசியம் எனச் சொல்ல யுகபாரதி தவறவில்லை.

பெரியார்தாசன் பேச்சசரங்கின் பிதாமகன். பெரியாரே பெரியவர் என ஏற்றாலும் மார்க்ஸ் அம்பேத்கர் நபிகள் என அவரது பயணத்திசைகளில் மைல்கற்கள் உண்டு. புத்தரும் தம்மமும் எவர்தான் மறப்பர். எம் ஜி ஆர் அழைத்தும் பணம் கொடுத்தாலும் தனக்கு சரியில்லை என நினைத்ததை வெளிப்ப்டையாக பேசியவர்  பெரியார்தாசன் என யுகபாரதி தருகிறார். ஏற்றுக்கொண்ட ஒன்றிற்கு விசுவாசமாக இருப்பது ஒருவகையென்றால் அதுவாகவே மாறிவிடும் இயல்புதான் பெரியார்தாசனுடையது என்கிற புரிதலை யுகபாரதி தன் அனுபவ அடிப்படையில் வெளிக்கொணர்கிறார்.

திராவிடச் சந்நியாசி சின்னக்குத்தூசி குறித்த அற்புத விவரிப்பு. இளைஞர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் அவருடனான அனுபவங்கள் யுகபாரதி வழியே நமக்கு கிடைக்கின்றன. திருவாரூராயிற்றே.. அரசியல் களத்தில்திராவிட இயக்கப்பார்வையை முன்வைத்து களமாடியவர். கலைஞரே ஆனாலும் அங்கு சுயமரியாதைக்கு ஊறு என்றால் தள்ளிப்போகத் தெரிந்தவர். பிறரிடம் பழகும் கலையை, விமர்சனப்பாங்கை அவரிடம் கற்கவேண்டும் என யுகபாரதி தனது கட்டுரையில் உரையாடுகிறார்.

இக்கட்டுரை யுகபாரதியின் புத்தகத்தை  படிக்க சிறு தூண்டுதலாக அமையவேண்டுமே தவிர ஆர்வமிகுதியால் அவரின் புத்தகமாகவே ஆகிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையுணர்வு வந்துவிட்டது. தொடர்ந்து பேசினால் விரியுமே என்கிற அச்சம்தான்.

சுந்தர புத்தன் எனக்கு பத்திரிகைகளை அனுப்பிய நினைவு இருக்கிறது. தேனுகா பெயரை 1980களில் வங்கித்தலைவர் ரகுபதி அடிக்கடி சொல்வார். கும்பகோணம் போய்வந்தால் அவர் வந்தார் என்பார். அவ்வளவு அருகாமையில் இருந்தும் ரகு சொல்ல அறிந்தும் நான் பழகிக்கொள்ளாமல் போன ஆளுமைகளில் அவரும் ஒருவர்.. யுகபாரதி தேனுகாவுடனான நெருக்கத்தை பகிர்ந்துள்ளார். இன்னும் இவ்வாறு தமிழன்பன், ஐங்கரதாசன், வீர சந்தானம், நாகூர் சலீம், மக்கள் ஊழியர் முதல்வர் ஓமந்தூரார் என பல ஆளுமைகளை யுகபாரதி விவரித்துள்ளார்.

எந்த ஒருசெயலும் நமக்குச் சில அடிப்படைகளையும் அனுபவங்களையும் தருகின்றன. அவற்றை அடுத்தவர்க்கு கடத்துவதே இலக்கியத்தின் அறம் . அறமும் அன்பும் நம்மை ஈரப்பதத்துடன் இயங்கவைக்கிறது எனப் பேசும் யுகபாரதி அப்படிப்பட்ட எழுத்துக்களையே நல்லார் ஒருவர் உளரேல் மூலம் நமக்கு தந்துள்ளார். அவரே அந்த ஒருவர் உளரேலில் இருப்பவர்தான். காலத்தின் மீட்பராக வரலாறு யுகபாரதியையும் வாசித்துக்கொள்ளும். அவரை வாசிப்போம்.

22-10-2021