https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, May 29, 2022

மொழித்தூய்மை

 

                                மொழித்தூய்மை

மொழித்தூய்மை என்கிற புத்தகம் திருச்சி தேசியக் கல்லூரி தமிழாய்வுத்துறையால் கொணரப்பட்ட ஒன்று. 15 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. தேசியக் கருத்தரங்கம் நிமித்தம் வாசிக்கப்பட்டவை. பதிப்பாசிரியர் சித்ரா அவர்கள். ஆய்வுரைகளை வழங்கிய நன் முனைவர்கள் கோதண்டராமன், இராமமூர்த்தி, நரேந்திரன், மணவை முஸ்தபா, மா. நயினார், கார்த்திகேயன், திருமாறன், பூங்காவனம், மற்றும் உதயசூரியன்.



கோதண்டராமன் அவர்கள் தன் ஆய்வில் மொழித்தூய்மை மற்றும் மொழிப்பயன்பாடு பற்றிப் பேசுகிறார். ஒன்று உளவியல் சார்ந்தும் மற்றது சமூகம் சார்ந்தும் இயங்குவெளியைக் கொண்டவை. பிறமொழிச் சொற்களைத் தன்மொழியில் பயன்படுத்தும்போது அது சமுதாயத்தின் மனநிலையைப் பொறுத்து அமையும்.

மொழியிழப்பு என்பது குறித்து அவர் சொல்லும்போது பிறமொழித் தாக்கம் மொழியின் அமைப்பியல் கட்டமைப்பினைச் சிதைக்காதவரை அம்மொழி நிலைத்து நிற்க வல்லதே என்கிறார். தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி சிறுபான்மையினர்- ஆனால் அவர்கள் தமிழ்மொழியை அதிகம் சார்ந்தவர்களாக இருக்கவேண்டியிருக்கிறது. அவர்கள் சிதறிபோகாமல் ஒன்றுபட்டு நிற்கும்போது- உதாரணமாக மதுரை செளராஷ்ட்ரர் - தங்கள் மொழியை தக்கவைத்துக்கொள்ள முடிகிறது.

அதேபோல் மொழியின் தனித்தன்மையை எழுத்தியல், சொல்லியல், தொடரியல், தொடரனியல் ஆகிய நிலைகளில் அமைவதை அவர் சொல்கிறார். தமிழ் பொதுவாக பின்னொட்டு மரபைக் கொண்ட மொழி. ஆனாலும் அசைவம், அநாகரிகம், அசுத்தம், அவமரியாதை, அவநம்பிக்கை போன்ற முன்னொட்டு சொற்களும் நம் மரபை சிதைக்காதவரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

 மொழியின் தூய்மையைப் பொறுத்தவரை தமிழில் வடசொற்களின் பயன்பாட்டைத் தொல்காப்பியர் முற்றிலுமாகப் புறக்கணிக்கவில்லை என்கிறார். அவை தமிழ் எழுத்தியல் மரபிக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருப்பதையும் ஆராய்ச்சியாளர் சொல்கிறார். இதை ராஜாஜி அவர்களும் தன் கட்டுரை ஒன்றில் பேசியுள்ளார்.

 தமிழில் செவ்விய வழக்கு, பேச்சு வழக்கு எனும் இரட்டை வழக்குண்டு. திரிசொற்கள் மிகுதியாக இருப்பதைப் பார்த்தால் பழந்தமிழ் ஒரு குறிப்பிட்ட கிளைமொழியின் அடித்தளத்தைக் கொண்டதாகக் கருதமுடியாது. பல்வேறு கிளைமொழிகளின் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கலாம். பாரதியின்தேன் வந்து பாயுது- சக்தி பிறக்குது’ என்பதில் பாயுது, பிறக்குது பேச்சு வழக்கினதாகும் என்கிறார். சங்க இலக்கியத்திலும் இதைக் காணமுடியுமாம். எனவே பேச்சு வழக்கால் தூய்மை பாதிப்பில்லை.

 தமிழ்ச் சமுதாயத்தில் மொழி வெறும் பரிமாற்றக் கருவியல்ல- உணர்வுடன் கலந்த ஒன்று. எனவே தனித்தமிழ் இயக்கங்கள்  பங்கு முக்கியமானதாகிறது. மொழிக்கலப்பற்ற சொல்வளத்தை அவர்கள் காத்து நிற்கின்றனர். ஆனாலும் செய்தி பரிமாற்றம் எனில் பிறமொழிச் சொற்கள் பயன்பாடு வரலாம். அமைச்சு, அதிகாரம், ஆணை, ஊசி, காரணம், விஷம், நாள்- மதப் பெயர்கள், உயில் கைதி போன்ற சொற்கள் தமிழுக்குரியவையல்ல. அதேநேரத்தில் வேட்பாளர், அறிவிக்கை போன்ற தமிழ்ச் சொற்களை படைக்கும் ஆற்றல் தமிழுக்கு உள்ளது.

 ஆய்வாளர் இராமமூர்த்தி தனது ஆய்வில் சமூக மாற்றங்கள் மொழியில் பிரதிபலிக்கும் என்கிறார். சுத்தமானது என்பது கருத்தியல் நிலை. அதன் முதல் தகுதி அறியாமை. அதேபோல் அசுத்தமானதை சுத்தமாக்கலாம் எனும் நம்பிக்கை. இதுதான் பிராமணர் அதிகார நிலைக்கான காரணிகளாகவும் ஆயின. அதிகார சமுதாயம் தன்னை தக்க வைத்துக்கொள்ள சமயம், மொழியை கருவியாக்கிக்கொண்டது.

 அதேபோல் மரபார்ந்த மருத்துவ முறைகளைத் தீட்டுகளாகக் கருதும் நிலை ஏற்பட்டது. வேற்று சமூகம், வேற்று மொழி ஆதிக்கம் என்ற நிலையில் எதிர் விளவாக தூய்மைச் சிந்தனைகள் உருவாகும் என இவ்வாய்வாளர் சொல்கிறார். அது கருத்தியலிருந்து செயல்பாடாக மாறுகிறது.

 இந்தியாவில் வடமொழியின் கலப்பு பிற மொழிகளின் தனித்தன்மைக்கு எதிராக அமைந்தது.  மொழியின் பேச்சு மொழிக்கூறுகளை இழிவாகக் கருதும் போக்கு தூய்மையாக்கத்தின் தீவிரத்தை உணர்த்தும்.

தமிழ்ச் சமுதாய விழுமியங்கள் இறையியலை அடிப்படையாகக் கொண்டிருந்த காலத்தில் வடமொழி வழியாக புதிய சிந்தனைகள் புகுந்தன. தமிழகத்தில் மொழித்தூய்மைக்குரல் ஒலிக்க இரு காரணங்கள் வலுவானவை என்கிறார் இந்த ஆய்வாளர். ஒன்று நம்மவர் மொழி ஈடுபாடு, மற்றது தமிழின் இலக்கிய இலக்கண செழுமை. மொழி பெருமிதம் இங்குண்டு. உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு போன்ற உணர்ச்சி மிகு சொல்லாடல்கள் எழுந்ததைக் காணலாம்.

 வடமொழிச் சொற்களை நீக்குவது என்பதுதான் பிராமணர் ஆதிக்கச் சக்திக்கு எதிர்ப்பானது  என்கிறஅதிகாரப் போட்டி- பகிர்வுதான்’ தனித்தமிழ் இயக்க சமூக பின்புலம். அதேபோல் ஆங்கில கலப்பு குறித்த எதிர்ப்புணர்வும் வெளியானது. ஆங்கிலத்தைக் கலந்து பேசுபவன் முட்டாள், கலந்து எழுதுபவன் அயோக்கியன், மோகம் பிடித்தவன் காட்டுமிராண்டி எனப் பேசியதையும் கண்டோம்.

 எழுத்துமொழி கற்றவர் அதிகார வர்க்கமாகி பிறமொழி புகுத்தலைச் செய்கின்றனர். முன் நவீனத்துவக் காலகட்டத்தில் பிராமண பண்பாடு வடமொழி வழியாக என்றால், நவீனத்துவம் மேலைப் பண்பாட்டை ஆங்கிலமொழி வழியாக கொணர்ந்தது. இன்று உலகமய சூழலில் உற்பத்திக் கலாச்சாரம் மாறி நுகர்வு கலாச்சார விழுமியம் பெற்றுள்ள நிலை.

நவீன தொழில் நுட்ப உத்திகள் பிற பண்பாட்டை ஏற்று சகிக்கும் தன்மையை உருவாக்குகின்றன. சாதியப் படி நிலை வடமொழிப் பண்பாடு, பகுத்தறிவு சமத்துவ முன்னேற்றம் எனும் ஆங்கில பண்பாடாகி இன்று பொருளாதார மேம்பாடு ஒன்றே எனும் உலகப்பண்பாட்டிற்கு அழைத்துப் போயுள்ளதாக இந்த ஆய்வாளர் சொல்கிறார். எனவே இன்று மொழித்தூய்மை என்பதைவிட பண்பாட்டுத் தூய்மை பேசவேண்டியுள்ளது என்கிறார் இராமமூர்த்தி.

முஸ்தபா அவர்கள் தூயமொழி என ஏதுமில்லை. மொழிக்கலப்புறுவது தவிர்க்கவியலா ஒன்றேயாகும் - முடிந்தவரை குறைக்கப் பார்க்கலாம் என்கிறார். அதேநேரத்தில் கலப்பிலா தூய மூலச் சொற்களே ஓர் இனத்தின் உண்மையான பண்பாட்டை கலையை பழக்க வழக்க நாகரீகத்தை பறைசாற்றும் காலக்கண்ணாடி என்கிறார் முஸ்தபா. ஷவரம் என்பது சவரமானது- மழித்தல், சிரைத்தல், வழித்தல் எங்கே என்கிறார்.

 ஆங்கிலம் பிறவிக் கலப்புமொழியாகும். அதேபோல் இந்தியாவில் உருவான உருது பிறவிக் கலப்பு மொழியாகும். அங்கும் கூட தூய உருது இயக்கம் எழாமல் இல்லை.

 அறிவியல் தமிழ் எனில் அறிவியலுக்கே முதல்நிலை. மொழி இரண்டாம் நிலையாகிறது. பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி எனும்போது கிரந்த ஸ் வருகிறது. சம்ஸ்கிருத எழுத்துக்களின் துல்லியமான உச்சரிப்பு ஒலியை வெளிப்படுத்த எழுத்து தமிழில் இல்லை. எனவே கிரந்த எழுத்து வருகிறது. அதேபோல் தமிழ் தமிங்கிலம் ஆனதை முஸ்தபா பேசுகிறார். உலக மொழிகளில் அதிக வேர்ச் சொற்களையுடைய மொழி தமிழ். அதைக்கொண்டுதான் 50 ஆண்டுகளில் தங்கள் குழுவால் ஆறரை இலட்சம் கலைச் சொற்களை உருவாக்க முடிந்ததை முஸ்தபா சொல்கிறார். ஜீனோம்- உயிர்மம், குளோனிங் - படியாக்கம் என்றோம். தமிழ் அடிப்படையில் அறிவியல் மொழியாக அறிவியலைச் சொல்வதற்கான மொழியாக அமைந்திருப்பதைச் சொல்கிறார்.

 நயினார் அவர்களும் மொழித்தூய்மையின் அவசியத்தைப் பேசுகிறார். மொழி கலத்தல் தவிர்க்க முடியாத ஒன்று என்பதையும் ஏற்கிறார். கடன் சொற்கள் இல்லா மொழியில்லை.  Loan shift   வான ஊர்தி, Lone Transaltion  நீர் வீழ்ச்சி  என மாறுதல்  நடைபெற்றுள்ளன.

ஒரு துறையில் ஒரு மொழி சிறப்புற்றிருந்தால்  அதைக் கற்கும்போது அதன் சொற்கள் ஒருவர் மொழியுடன் கலந்து விடுகின்றன.. இதனால் கடன்பெறும் மொழியில் சிறிது  மாற்றம் ஏற்படும்.

கடவுளை என் மொழியில், இசையை என் மொழியில், ஆட்சி என் மொழியில், கல்வி என் மொழியில் எனக் கோருவது வடமொழிக்கு, தெலுங்கிற்கு, இந்திக்கு, ஆங்கிலத்திற்கு விரோதமாகி விடுமா என்கிற கேள்வி எழுகிறது. வைதீக சொற்களை மட்டுமல்ல வேளாள வைதீகச் சொற்களும் அவசியமா என்கிற கேள்வியும் இங்கு எழுந்தது என்கிறார் இவ்வாய்வாளர். தூய தனித்தமிழ் என சமூகத்திலிருந்து அந்நியமாதல் அவசியமா என்கிற கேள்வியும் இங்கு எழுந்துள்ளது. எனவே மொழித்தூய்மை என்பது 2000 ஆண்டுகளுக்கு முன் கொண்டு செல்லும் முயற்சியாகாமல் மொழியை எளிமைப்படுத்தும் எண்ணமாக எழவேண்டும் என்கிறார் ஆய்வாளர்.

 கார்த்திகேயன் தன் ஆய்வில் திருவாசகம், திருப்பள்ளியெழுச்சியில் கலந்துள்ள சொற்கள் சிலவற்றைத் தருகிறார். உதயம், சூரியன், ஆனந்தம், மது, கமலம், கீதம், நயனம், கருணை, பூமி .

 மொழியியல் உள்ளது உள்ளவாறு விவரிப்பதாகும். தரப்படுத்தலால் கல்விப் பயன்கள் ஏற்படும். பெருமை காரணமாக பெறப்படும் கடன் சொற்களைத் தடுக்கவே மொழித்தேசியம் - தூயமொழி இயக்கம் உருவாவதாக இந்த ஆய்வாளர் எடுத்துரைக்கிறார். ஆங்கிலம் கலந்து தமிழின் இசையோட்டம் புறக்கணிக்கப்படுவதாக இந்த ஆய்வாளர் சொல்கிறார்.

 திருமாறன் தன் ஆய்வில்தூய்மையம்’ என்பது மொழியை வளப்படுத்துவதற்குத் தன்மொழி வாயில்களைத் திறத்தலும் பிறமொழி வாயில்களை அடைத்தலும் என்கிறார். மேட்டிமை நோக்கு எண்ணத்தில் தமிழை புறக்கணிப்பதைப் பேசுகிறார். பல்வேறு மொழிகளில் தூய்மை இயக்கங்கள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்பதையும் திருமாறன் விளக்குகிறார்.

 13 - 18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பிறமொழியாளர் குடியேற்றம் ஏற்பட்டு கன்னடம், தெலுங்கு, இந்துஸ்தானி, அரபு, மாராத்தி மொழிகள் தமிழன்னையின் சிறப்பினைப் பகிர்ந்துகொண்ட காலம் என்கிறார் திருமாறன். 19 ஆம்நூற்றாண்டில் ஆங்கிலம் வந்தது. ஆட்சிமொழியாக கல்வி மொழியாக மாறியது. அன்னிபெசண்டோ ஆரிய சம்பத்து என்றார். 1856ல் கால்டுவெல் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தந்தார். தமிழர் இயக்கம் எழுந்தது என்கிறார் இவ்வாய்வாளர். சங்க இலக்கிய வெளியீடும் அதற்கு துணையானது. இன்றிமையா வேற்றுமொழிச் சொற்களை அதன் இயல்புக்கு பொருந்தினால் சேர்க்கலாம்- அதுதான் அழகானது. தமிழ் சொல் இருந்தால் அதை விடுத்தலாகாது என்கிறார் இந்த ஆய்வாளர்.

 பூங்காவனம் அவர்களும் நம் சொற்கள் எங்கே போயின என ஆய்கிறார். மேகம் வந்து முகில், எழில், களம், கார், மால் போன்றவையும், சன்னல் வந்து சாளரம், பலகணி, வளிவாய், காற்றுவளியும் போனது. மத்தியானம் வந்து உருமம், உச்சிவேளை, நண்பகல் போனதையும் சொல்கிறார். வாரிசு என்பதால் எச்சம், கான்முறை, கால்வழி, மரபு போனது. தமிழின் தாய்மைப் பண்பும் தலைமைப் பண்பும் அறியப்படாமை, அறியப்பட்டபோதும் ஏற்கப்படாமை எனும் இரு நிலைகளை அவர் எடுத்துரைக்கிறார்.

மொழித்தூய்மை என்பது எண்ணத்தூய்மையையும் செயல்தூய்மையையும் உள்ளடக்கிய செப்பநிலையின் வெளிப்பாடு என்கிறார் பூங்காவனம்.  பெருஞ்சித்திரனார் தூய்மை நிலை குறித்து உதயசூரியன் அவர்கள் செய்துள்ள ஆய்வும் இந்த கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

160 பக்கங்களில் சிறந்த ஆய்வுகளைக் கொண்டிருக்கும் இந்த புத்தகம்  மொழியறிவில்லாத எனக்கு ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது.

29-5-2022

Wednesday, May 25, 2022

புதுமைப்பித்தனின் ஸ்டாலின்

 

                     புதுமைப்பித்தனின் ஸ்டாலின்

‘ஸ்டாலினுக்குத் தெரியும் என்கிற முற்றுப்பெறா கட்டுரை இலக்கியம் ஒன்றை ஐந்திணை 1991ல் வெளியிட்டது. புதுமைப்பித்தன்  இரண்டாம் உலகப்போர் காலத்தில் இதை எழுதியிருக்கலாம்  கப்சிப் தர்பார்- ஹிட்லர் ஆட்சி, ஃபாஸிஸ்ட் ஜடாமுனி முசோலினி பற்றியும் அவர் இதற்கு முன்னர் எழுதியிருந்தார்.




எப்படி பல அரிய விஷயங்களை அறிந்து எழுதினார் புபி என வியந்து  முன்னுரையை கண.இராமநாதன் தந்திருப்பார். அணிந்துரையில் டாக்டர் . ரத்னம் அவர்கள் ஹிட்லர்- முசோலினியை சமாளிக்க ஸ்டாலின் மேற்கொண்ட ஆயத்தங்கள், மக்களை தயார்படுத்திய விதத்தை புபி சொல்வதாக எழுதியுள்ளார். எழுதப்பட்ட சூட்டோடு இந்த படைப்பு வெளிவராததை இழப்பு என்பார் ரத்னம். திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் காலத்தை கணக்கிட்டதாக மார்தட்டும் நம்மால் நம்மிடம் வாழ்ந்து மறைந்த புகழ்வாய்ந்த எழுத்தாளர் நூல் எழுதப்பட்ட ஆண்டினை அறிய முடியாமை குறித்தும் ஊகம் செய்யவேண்டிய நிலை குறித்தும் கவலையை ரத்னம் பகிர்ந்துகொள்கிறார்.

 புபி எழுதியஸ்டாலினுக்குத் தெரியும் என்பது 90 பக்கங்களில் 13 அத்தியாயங்களாக நமக்கு தரப்பட்டுள்ளது. அக்டோபர் புரட்சிக்குப்பின்னரான லெனின் கால- ஸ்டாலின் கால முதல் 25 ஆண்டுகளின் சுருக்கமான வரலாறாக இதை பாவிக்கமுடியும். அவருக்கேயான மொழியாளுமையில் கிண்டல் கேலி எகத்தாளம் முடிந்தவரை அவருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இருப்பதை படிப்பவர் உணரலாம். சோவியத் ஆர்வலர்கள் படிக்க வேண்டிய நூல் எனலாம்.

சோவியத் என்பதைஸோவியத் ராஜாங்கம் என புபி எழுதுகிறார். உருவான நாளிலிருந்து அது சண்டையே போடவேண்டியுள்ளது. லெனின்கிராட் தோப்புகளில் துப்பாக்கி சகிதம் கவாத்துப் பழகுதல் சாதாரண காட்சி. ஸோவியத் யூனியனுடைய அரசியல் ஐக்கியம் உள்வைரம் பாய்ந்து ஹிட்லரின் அசுர முயற்சிக்கு எல்லாம் ஜவாப் சொல்லி வருகிறது.

 எந்த ஒரு கட்டத்திலும் ஸோவியத் ராஜாங்கமானது தன்னைப் பாதுகாத்துக்கொள்வதே முதன்மையான காரியம் என்று கருதி சமூக முன்னேற்றத்திற்கு பிரதான காரியம் என்று எதையும் ஒத்திப்போட்டது கிடையாது. யுத்தம் பல சமூக உத்தாரண செர்வீஸ்களின் வேலைகளுக்குத் தடங்கல் விளைவிப்பதுதான் இயற்கை. ஸோவியத் சர்க்கார் ஜீவனோபாய சவுகரியங்களைப் பெருக்கவும், கல்வியை வளர்க்கவும், புரட்சித் தத்துவத்தை போதிக்கவும் முற்பட்டது. கலையிலும் கல்வியிலும் ஸோவியத் அக்கறை அதிகமாகி வருகிறதே ஒழியக் குறைந்ததில்லை.

ஸோவியத் மக்களுக்குச் சுயமாக சிந்தனை செய்வதற்கும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளை நிர்த்தூளியாக்கும் வெட்டிக்கனவுகளை அவர்கள் விரும்பவில்லை. அரசியல் போதனையில் தர்க்கம் பிரதான ஸ்தானம் வகிக்கிறது. சுயமாகக் காரியம் நடத்திக்கொள்ள ரஷ்யருக்குத் தெம்பு கொடுப்பது இதுதான். ஸோவியத் ராஜாங்கம் என்ற கருத்துக்குள், அதன் மக்கள், ராணுவம், கைத்தொழில், தேசம் யாவும் பின்னிக் கிடக்கின்றன.. நேற்று டிராக்டர் ஓட்டுகிறவன்தான் இன்று டாங்கியந்திரத்தை ஓட்டுகிறான்.

இவற்றை அவர் முதல் அத்தியாய சாரமாக எடுத்துக்கொள்ளலாம். இரண்டாவதில் 1923ல் மாஸ்கோ ஸெவர்னி ஸ்டேஷன் சூழல் சேறும் சகதியும் குப்பையுமாக- காலில் செருப்பில்லா குழந்தைகள்கோப்பேக்கி எனும் தம்படிக்கு கத்தும் காட்சியை அவர் சொல்வார்.  எப்போது ரயில் வரும், வந்தால் பிளாட்பாரம்- டிக்கட் கொடுக்குமிடம் என்னவாகும் என்கிற ரணகளத்தை அவர் சொல்வார். அதேநேரத்தில் என் பி புதிய பொருளாதாரம் பேசுவோர் கூடும் இடத்தின் சூழலையும் – ’ஒயின்பாட்டு தமாஷ் என விவரிப்பார்.  என் பி யில் பணக்காரராகுங்கள் என லெனின் வெளியிட்ட பிரகடனம்- சிலர் தரகர்களாக தங்கள் அந்தஸ்தை கூட்டிக்கொண்டதைச் சொல்வார். என் பி அகன்ற பிறகுதான் ரஷ்யா அபிவிருத்து தடையில்லாமல் வளர்ந்தது என்பது புபியின் கருத்து.

 மூன்றாம் அத்தியாயம் லெனின் காலமான 1924 ஜனவரிக்கு பின்னரான தலைமைப் போட்டி பற்றியும் பேசுகிறது. இராணுவ பலத்தை வளர்த்து சர்வாதிகார அபேதவாத பொருளாதரக் கட்டுக்கோப்பை வகுக்கும் அம்சத்தை புபி இதில் பேசுகிறார். 1926 ’டிராட்ஸ்கி, காமினேவ், ஜீனீவீவ் கோஷ்டி பற்றியும் டிராட்ஸ்கி பேசிய மார்க்ஸீயம் பற்றியும் புபி எழுதுகிறார். தற்காலிகமேனும் முதலாளித்துவத்திற்குபிடியரிசி போட்டுவிடக்கூடாது என டிராட்ஸ்கியின் பிடிவாதம்  அவர் சாதுர்யமற்றவர் என புபிக்கான புரிதலைத் தருகிறது.

1929ல் டிராட்ஸ்கி செஞ்சதுக்கத்தில் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவர் ரஷ்யாவில் பேசிய கடைசி பேச்சது. காமினேவ், ஜீனோவீவும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டனர்.பொதுவுடைமைக் கட்சியின் கட்டுப்பாட்டு வெற்றிக்கு இதை உதாரணமாக புபி காட்டுகிறார். டிராட்ஸ்கியுடன் விலகியவர் சொற்பம்.

ஸ்டாலின் கட்டுப்பாட்டில் என் பி ரத்தாகி யந்திரத்தொழில், சர்க்கார் பண்ணைகள்ஸோவோகோஜி, கூட்டுப்பண்ணைகள்கோல்கோஜி எனத் தீர்மானித்த்தை சோவியத்தின் ருஷ்ய சொற்களுடன் புபி குறிப்பிடுவதைப் பார்க்கும்போது நிகழ்வுகளை அவர் எவ்வளவு உற்று நோக்கியுள்ளார் என அறிகிறோம். அய்ந்தாண்டு திட்டம் மூலம் பிறர் கைநாடா பொருளாதாரம் நோக்கி  பூர்ண சுயேட்சை தேசமாக மாற்ற ஸ்டாலின்  நம்பி செயல்பட்டதை புபி பதிவு செய்கிறார். 7 மணி வேலை, விடுமுறை, இலவச வைத்யம், குழந்தை வளர்ப்பு ஸ்தாபனம் போன்றவை தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை தந்தன என்கிறார் புபி.

 கார்ல் மார்க்ஸ் சித்தாந்தத்துக்குக் காரணகாரியத் தர்க்க லோகாயதம் என்று சொல்லுவார்கள். இந்த தர்க்க பந்தாவுக்குள் உலகவியவகாரங்கள் சகலவற்றையுமே அடைப்பதில்தான் பொதுவுடைமைவாதியின் முக்தி அமைந்துகிடக்கிறது. மார்க்சிய வைதிகப் பிச்சுவான டிராட்ஸ்கிக்கு ஸ்டாலின் அதே பந்தாவில் பதில் தந்தார் என புபி மொழி செல்கிறது.

 எதிர்ப்பு, தாமசகுணம் எதிர்த்து ஸ்டாலினும் தலைமைக்காரியாலயமும் பொதுவுடைமைக் கட்சி நிபுணர் கோஷ்டியும் ஏவ, பட்டாளங்கள் மாதிரி நின்று தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். லெனின் தன் காலத்தில் நகரம்- நாட்டுப்புற வேறுபாடுகள் அகல எண்ணினார்.  குலாக்குகளுக்கு அடித்தள ஆட்டம்- ஏழைகள் கூட்டுப்பண்ணை மூலம் ஸ்திர நிலையில் என்றார் ஸ்டாலின்.

 நான்காம் அத்தியாயத்தில் நாஜிகளின் வளர்ச்சி பற்றி புபி பேசுகிறார்.  ஸ்டாலின் சோவியத்தின் வளங்களை மேம்படுத்தி தொழில் முன்னேற்றம் உருவாக்கியதைக் குறிப்பிடுகிறார். அடுத்த 5 ஆம் அத்தியாயத்தில் 1941ல் ஆகஸ்ட் மாதம் நாட்களில் 4 லஷம்  ஜெர்மானிய ஜனக்கூட்டம் அநாதைகளாக  வால்கா நோக்கி என பெரு நிகழ்வொன்றை சொல்கிறார். அவர்களை ஸோவியத் சட்டம் ஸைபீரியாவிற்கு  அனுப்பிவிட்டது. அந்த ஜெர்மானியர் 18 ஆம் நூற்றாண்டு சரித்திரத்தை புபி பேசுகிறார். புபியின் தேர்ந்த  வரலாற்று ஆர்வம் நமக்கு தெரியவருகிறது. காதரின் ராணிதான் இவர்களுக்கு நிலம் கொடுத்து வால்கா பகுதிகளில் அமர்த்தியதாக புபி எழுதுகிறார். இவர்கள் பெரியமிராசுகளாயினர். வால்கா ஜெர்மானியர் ஜார் அரசர் காலத்தில் கவுரவிக்கப்பட்ட கதிகள். போல்ஷிவிக் ஆட்சி அவர்களை தனிமைப்படுத்தியது என்கிறார் புபி. இந்த ஸமார பிராந்தியம் உக்ரேன் கரிசல் பகுதி செழிப்பானதை புபி விவரிக்கிறார்.

ரஷ்யக் குடியானவனும் தொழிலாளியும் அதிகாரத்துக்குப் பணியும் குணம் உள்ள பிராணிகள்தான். அந்தக் காலத்தில் ஜார் மன்னனை பரமபிதாவுக்கு அடுத்த சித்தப்பா மாதிரி பாவித்தார்கள்.. அவர்களை ஸ்டாலினைத் தந்தையாகவும் தலைவராகவும் பாவிக்கும்படி செய்விக்க பிரசாரம் செய்யப்பட்டது. ஸ்டாலின் வணக்கம் பழக்கத்துக்கு வந்தது.

அடுத்த அத்தியாயங்களில் 1927-1938ல் இராணுவ யந்திரங்களுக்கான என்ஜினியர்கள் ஆற்றிய அசுரவேலையைப் பற்றி சொல்கிறார். ஸோவியத் இவர்களுக்கு விஷேச வசதி அளித்தது. இதில் ஜெர்மன் ஒத்துழைப்பும் இருந்தது. ஆனால் ஹிட்லர் வந்தவுடன் தன் இஞ்ஜினியர்களை திரும்ப பெற்றார். ஒப்பந்தமும் செய்துகொண்டார் என்பதை சுருக்கமாக விளக்கிச் செல்கிறார் புபி.

ஹிட்லருக்கு உக்ரேன், மத்திய பால்டிக் பற்றித்தெரிந்த அளவு, மாஸ்கோவின் கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு தெரியாது. ஊகிக்கத்தான் முடிந்தது. அமெரிக்கர்களுக்கு கொஞ்சம் தெரியும். அபேதவாதம் ஸ்தாபிக்க லெனின், ஸ்டாலினுடன் அமெரிக்க மோட்டார் முதலாளி போர்டையும் சொல்லவேண்டும். தன் முறைதான் உற்பத்திக்கு சரி என அவர் ஸ்டாலினை ஏற்கவைத்துவிட்டார். கோர்க்கி யூரல் வாகன உற்பத்தி, செலியா பின்ஸ்க் டிராக்டர் தொழிற்சாலை போர்டின் ஞாபக சின்னங்கள் என்றார் புபி. கிளீவ்லாந்த் ஆஸ்டின் கம்பெனிதான் கோர்க்கி தொழிலுக்கு பிளான் கொடுத்தது. அதேபோல் மிக்சிகன் டிட்ரா சல்பர்ட்கான் கம்பெனிதான் டிராக்டர்க்கு பிளான் கொடுத்தது. சிகாகோ வ்ரெயின் தான் சோவியத் குய்ட்னெஸ்க் உலோகத்தொழிலுக்கு பிளான் கொடுத்தது. எண்ணெய்க் கிணறுகளுக்கு ஆல்கோ பிராக்ட்ஸ் உதவியது. இதேபோல் அமெரிக்க கம்பெனிகள் எங்கெல்லாம் ஒத்தாசை செய்தன என சிறிய அளவில் புபி விவரிக்கிறார். பிரிட்டனுடன் சோவியத் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தங்கள்- பி எஸ் சைக்கிள்கூட அங்கிருந்து சென்றதைச் சொல்கிறார்.

 அத்தியாயம் 8ல் சோவியத்தின் எண்ணெய்வளம் மேம்படுத்தப்பட்டதை புபி விவரிப்பார். இதற்கு ஹிட்லர் மனப்போக்கும் ஒரு காரணம். எண்ணெய் கிணறுகள் தெற்கு யூரல்ஸில் நிறுவப்பட்டதையும், வனாந்திரத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பெருங்குழாய்கள் நிர்மாணம் பற்றியும் புபி விளக்கிச் சொல்கிறார்.  அத்தியாயம் 9ல் யுத்த நிலைமைகள் தொழிற்சாலைகளை மறைவிற்கு எடுத்துப் போய் காப்பாற்ற வேண்டி அவர்கள் தொடர்ச்சியாக 6 வாரங்கள் அல்லலுற்றதைச் சொல்கிறார்.

முதலாளித்துவ சர்க்காராக இருந்தால் தொழிற்சாலைகளை அக்ஞாதவாசம் செய்விப்பது லகுவான காரியமல்ல. பலவித முட்டுக்கட்டைகள் எழும். நிலச் சொந்தக்காரர்கள் ஒத்துழைக்கவேண்டும். ஆனால் ஸோவியத் சர்க்கார் பொருளாதாரத் தன்மை மாறுபட்டதாயிருப்பதினால் கிடைக்கும் சவுகரியம் ஒருபுறமிருக்க, தொழிற்சாலைகள் இடம் பெயருவதில் அங்குள்ள துரிதத்துவத்துக்கு ஒப்புவமையே கிடையாது என இரு முறைகளையும் புபி ஒப்பீடு செய்து பேசுகிறார்.

இந்த இடப்பெயர்வுகளைபச்சைக்குதிரை வியவகாரம் என்கிறார் புபி. இடம் பெயர்க்க முடியாதவைகளை ரஷ்யர்கள் அழித்துவிடுவதாகவும் அவரின் பதிவு சொல்கிறது. இம்மாதிரி இடப்பெயர்வில் தொழிலாளர்களும் உடன் செல்வர். போகும் வழியில் விமானத்தாக்குதல் ஏற்பட்டு சேதாரங்களும் நடந்தது குறித்து பிராவ்டா எழுதியதை புபி சுட்டிக்காட்டுகிறார்.

  அத்தியாயம் 10ல் ஜெர்மன் தனது விமானப்படை தாக்குதல் மூலம் சோவியத் போக்குவரத்தை ஒடித்துவிடும் எனக் கருதியதைக் குறிப்பிடுகிறார். ரஷ்யா பிரதான பாதைகள் அப்போது முழுமையாக வெளிநாட்டு மூலதனத்தால் போடப்பட்டவை. ஆசிய ரஷ்யா பகுதி தண்ணீரில்லா வனாந்தரம். அங்கு புதுவகை ரயில் இன்ஜின்களைவெலிக்ஸ் ஜெர்ஜின்ஸ்கிமூலம் நீராவி- தண்ணீர் மாற்றி இயக்கியதை - அறிவியல்- தொழில்நுட்ப மேம்பாட்டை வியந்து சொல்கிறார். மாமிசம்- இதர உணவுப்பொருட்கள் கெடாமல் இராணுவத்தினருக்கு கிடைக்க வண்டி ஓடும்போது ரிப்ரிஜெரேட்டர் ஆக மாறிக்கொள்ளும் மேம்பாட்டை சொல்கிறார்.

குற்றவாளிகள் என நிறுத்தப்பட்டவர்களை - ராஸ்தா, கால்வாய் போக்குவரத்து வேலைகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.. வசதியற்ற இடங்களுக்கு செல்ல விமான சர்வீஸ்தான் என்கிறார்.

 அத்தியாயம் 11ல் உக்ரன் பற்றிய பேச்சைத் தருகிறார் புபி. அது தனித்துவம் வாய்ந்த குடியாட்சி. புல்லுருவி கிடைக்கலாம் என ஹிட்லர் நினைத்தார். ஸ்கோரோபாட்கி எனும் நிலச்சுவான் தலைவரை அவர் பொட்டுக்கட்டி வைத்திருந்தார். ஆனால் உக்ரேன் ஒருமித்து எழுந்து நின்றது. யூத எதிர்ப்பு எடுக்கும் எனிலும் அது வெறியாகிவிடவில்லை.

ஸோவியத் யூனியன் என்பதுகுடுகுடுப்பைக்காரன்சட்டைஎன்பது ஹிட்லர் கருத்து. ’ரோடினா என்றால் ஸோவியத் தந்தையர் நாடு எனப்பெயர். லெனின் பயன்படுத்தியதில்லை எனச் சொல்லும் புபி இப்போது அவர் இருந்தால் தேசியமனப்பான்மையின் அவசியத்தை அங்கீகரித்திருப்பார் என்கிறார். லெனின் ரஷ்யாவில் உள்ள சகல வர்க்க, ஜாதிய வேறுபாடு உடைய மக்கள் யாவரும் சம உரிமை உள்ளவர் என்பதை அங்கீகரித்தார். ஜார் ரஷ்யாவை பல ஜாதிய மக்களின் சிறைக்கோட்டம் என்பார்கள். லெனின் பிரகடனம் அந்த சிறைச்சாலையின் பூட்டைத் திறந்த சாவி என பெருமையாக புபி எழுதுகிறார்.

 ஸோவியத் யூனியன் 11 தேசியக் குடியாட்சிகள் செய்துகொண்ட இஷ்டபூர்வ பெடரல் ஏற்பாடு. பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையுண்டு என்பதை எடுத்துச் சொல்கிறார்.

 சீனாவில் நடந்த கதைபோலத்தான் ரஷ்யாவிலும் ஜார் அரசர்கள் மங்கோலிய தார்த்தாரிய வம்சங்களை கிழக்கு நோக்கி ஒதுக்கி நிறுத்தினர். ஆசியா ரஷ்யா பற்றிய சுருக்கமான பின்னணியை புபி இதில் விளக்குவார். முசல்மான் நாகரிகப்பகுதிகள் பற்றியும் சொல்வார். முல்லாக்களின் பழமையாதிக்கத்தினின்று ஜனங்களை மீட்டு காலுன்ற வைத்தது ஸோவியத் சர்க்கார் என புபி எழுதுவதைக் காணலாம்.

 ஜப்பானியர்களை ஸ்டாலின் எதிர்கொண்ட விஷயத்தையும் புபி பேசுகிறார். எந்த இடத்தில் ஜப்பான் இராணுப டிவிஷன்கள் பாடம் கற்றன என்று கூட சொல்கிறார். ஜப்பானியர்களுக்கு ஸ்டாலின் தந்த நல்ல ராஜீய போதனை என இதை புபி குறிப்பிட்டார்.

 1933லேயே சம்பாவனைக் கொடுத்து ஜனங்களை கீழ்த்திசையில் ஸோவியத் சர்க்கார் குடியமர்த்தியதை சலுகைகள் தந்ததை புபி விவரிக்கிறார். ஸோல்சரைத் தொடர்ந்து விஞ்ஞானியும் சென்றனர். மின் திட்டங்கள் வந்தன. சாகுபடி பெருகியது. ஆஸ்திரேலிய, கனடிய அமெரிக்க கோதுமைகள் வந்திறங்கின. சாகுபடி விஸ்தீரணம் அதிகமாக்கப்பட்டது. சோவியத் பிரஜைகளின் கடும் உழைப்பை இப்படி பல்வேறு உதாரணங்கள் மூலம் புபி சொல்கிறார். ஜப்பானை எதிர்கொள்ள ரஷ்யா தயாரானது என்கிறார் புபி.

 இறுதி அத்தியாயத்தில் ஜார்க்கால யூதர் நிலைமைகள்  சேரி வாழ்க்கைப் போல. சோவியத் அவர்களுக்கு சமத்தன்மை தந்ததை புபி சொல்கிறார். பாலஸ்தீனத்தில் யூத ராஜ்யம் ஸ்தாபிப்பது ஏகாதிபத்தியத்திற்கு அணுசரணையாகும் என் ஸோவியத் கருதியது. எமிஸ் எனும் யூத தினசரி வர மாஸ்கோ அனுமதித்தது. ’பிரோபிட்ஜான் என ஒன்றை புபி சொல்கிறார். யூதர்களுக்கு சம அந்தஸ்து தர எடுத்த முயற்சியாம் அது. யூதர் இப்போது ஜப்பானை எதிர்க்க தயாராகிவிட்டனர் என்கிறார் புபி. புபி இந்த நூலை இப்படி முடிக்கிறார். யூதர்களின் உழைப்புதான் இன்றுவரை கீழ்க்கோடி செங்கொடி சைனியத்தின் மூலதனமாக ஆகிவிட்டிருக்கிறது.

இந்நூலை இன்னும் எப்படியெல்லாம் எழுத புபி நினைததாரோ தெரியவில்லை. அவரிடம் நல்ல மேம்பட்ட வரலாற்றுணர்வும்- வளரவேண்டிய வரலாற்றை போற்றும் பாங்கும் இருந்துள்ளதைக் காண்கிறோம். அன்று நிலவிய மக்கள் பேச்சு வழக்கில் அற்புத வரலாற்றை எழுத தமிழ் இடங்கொடுக்கும் என்பதை புபி எனும் இலக்கிய மேதமை நமக்கு காட்டியிருக்கிறார். சோவியத் ஆர்வலர்கள் படிக்க வேண்டிய நூல்

25-5-2022