https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, May 1, 2022

இனம் திராவிட

 தமிழ்நாட்டு வரலாறு தொல்பழங்காலம் என்பதிலிருந்து... இனம் திராவிட குறித்து

( இந்த வரலாற்று ஆய்வு புத்தகம் அப்போது முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மதிப்புரையுடன் 1975ல் வெளியிடப்பட்ட ஒன்று)


தமிழகத்தின் இனமரபு வரலாறு மிகவும் சிக்கலானது; குழப்பம் மிக்கது. புத்தம் புதிய ஆராய்ச்சிகளால் பழைய கருத்துகள் எளிதில் பொருத்தமற்றுப் போய்விடுகின்றன. எனவே மிகவும் கருத்தோடும் விழிப்புணர்ச்சியோடும் இனமரபு  வரலாற்றை வரையவேண்டிய பொறுப்பு நம்மைச் சார்கிறது. இனமரபியல் ஆராய்ச்சி திட்டவட்டமானது அன்று. அதில் செய்யப்பெரும் முடிவுகள் நிலையற்றவை; எளிதில் மாறக்கூடியவை..தக்க அடிப்படைச் சான்றுகள் இல்லாத நிலையில் கொள்ளப்பட்ட முடிவுகள் பல இத்துறையில் மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளன. அவை காலப்போக்கில் மாற்றமுறலாம்.


’ரேஸ்’ என்னும் சொல்லிற்குரிய பல்வேறு பொருள்களுள் “ பொதுவான ஒரு மூதாதையரின் கால்வழியில் தோன்றிப் பொதுவான பண்புகளை மரபுவழியாகப் பெற்றுள்ள மக்கள் பகுதி” என்னும் பொருளே சிறப்புடையது. ரேஸ் எனும் சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல்லாக இனம் என்னும் சொல் கையாளப்படுகிறது. ஆயினும் இனத்தின் உண்மையான பொருள் மனித இனத்தில் உடலுறுப்புகளினுடைய அமைப்பைப் பொறுத்து அமைவதாகும். உயிரின மரபுரிமை மூலம் வழிவழியாகக் கொண்டுசெல்லக்கூடிய பொதுவான எளிதில் கண்டறியத்தக்க உடற்கூற்றுப் பண்புகளையுடைய மனிதர்களின் சேர்க்கையை இனம் என்று கூறுவதே அறிவியல் ஆராய்ச்சிக்குப் பொருந்திவரக்கூடிய கருத்தாகும்”


குரோபர் போன்றவர்கள் இனம் என்பதை சமூகப் பண்பாட்டுத்துறைக் கருத்தாகக் கொள்ளக்கூடாது- சமூக பண்பாட்டுத் துறையினர் அச்சொல்லை கையாளாமல் இருப்பது நல்லது- அது உயிரியல் ஆராய்ச்சிக்கு உகந்த கருத்தாகும் என்கிறார்.


உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்ததைப் போன்றே இந்தியாவிலும் கடந்த பல நூற்றாண்டுகளாக இனங்கள் பேரளவில் கலந்துள்ளன. எனவே மொழியையும் இனத்தையும் ஒன்றுபடுத்திக் காட்ட இயலாது என்ற கருத்தும் இருக்கிறது. இனம் என்பது மொழி என்னும் சொல்லிற்குரிய பொருளை உணர்த்தும் மாற்றுச்சொல் ஆகாது..இனத்திற்கும் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாகலாம். இதனால் மொழியே இனப் பண்புகளை விளக்குவது என்பது பொருந்தாது.


மனித இனம் முழுவதும் ஒன்றே- ஹோமோ சேபியன்ஸ் என்ற ஒரே உயிரினத்தின் பாற்பட்டவர்களே என்னும் கருத்தை ஏற்காதவர்கள் இல்லை.பண்பாட்டின் முன்னேற்றத்தை முடிவுசெய்யும் கூறாக இனம் அமையவில்லை என்பது உண்மையாகும்.


திராவிடர் பெரும்பாலும் குள்ளமான வடிவினர்; கரிய நிறத்தினர், தழைந்த கூந்தலும் சுருண்ட மயிரும் வாய்க்கப்பெற்றவர். கரிய விழியினர். நீண்ட தலையோட்டை உடையவர்..அடியிற் குழிந்த அகன்ற மூக்கினர். இந்திய மக்களின் பண்டைத்தொகுதியில் முதன்மையாய் இருந்த திராவிட இனத்தவர் பிற்காலத்தில் வந்து குடியேறிய ஆரியர், சித்தியர், மங்கோலியர் பிற இனத்தவரோடு பையப்பையப் கலப்புற நேர்ந்ததை வரலாறு எடுத்துரைக்கின்றது.


திராவிடர் எனும் சொல் வடமொழிச்சொல் என்பது கால்டுவெல் கருத்தாகும். இராகவைய்யங்கார் திராவிடம் தமிழாகாது என இக்கருத்தினை மறுத்துள்ளார். திரு இடம் என்பது திராவிடம் எனும் வடமொழி திரிபாக்கப்பட்டதை பூரணலிங்கம் சொல்கிறார். யஜூர் வேதம் த்ரமிளம் என்கிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் திராவிடம் என்ற சொல்லாட்சியைக் காண்பது அரிது. தேவாரத்தில் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்றுள்ளது.


தமிழ் என்னும் சொல்லுக்கு நேரான சொல்லாக வடமொழியில் திராவிட என்னும் சொல் வழங்கி வருகிறது. அதுவும் நேரடி திரிபன்று. கலிங்க மன்னன் கிமு 169ல் பிராகிருத மொழி கல்வெட்டில் அயலார் படையெடுப்பை தமிழக மன்னர்கள் எதிர்க்க அமைத்த கூட்டணி திரமிள தேச சங்காதம் என்பதாக இருக்கிறது. 8 ஆம் நூற்றாண்டு செப்பேடுகளில் திரமிளர் தமிளர் என்னும் சொல்லாட்சி வழக்குகள். கிபி 7 ஆம் நூற்றாண்டின் குமரிலபட்டர் ஆந்திர திரவிட பாஷா எனப் பயன்படுத்தியதில் திராவிட தமிழைக் குறிக்கிறது.


சாணக்கியர் அர்த்த சாத்திரத்தில் பாண்டியர் எனிம் சொல் வருகிறது. திராவிடர் இடம்பெறவில்லை. மனுதர்மத்தில் சாதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பட்டியலில் யவனர், சீனர், பஹ்லவர், பாரதர் என்பதுடன் திராவிடரும் குறிக்கப்பட்டுள்ளனர். திராவிடர் என்பது இடைச்செருகல் என்பது புலனாகலாம்.


வராகமிகிரர் பிரகத் சம்மிதை தென்மேற்கு இந்தியப்பகுதியை திரமிடம் என்கிறது.

 மேற்காட்டப்பேற்ற சான்றுகள் யாவும் திராவிடம் என்ர வழக்கு காலத்தால் மிகப் பிற்பட்டது என்பதைக் காட்டுவதுடன் திராவிடம் என்ற வடமொழிச்சொல் திரிந்தே தமிழ் சொல் தோன்றியது எனக் கூறும் கால்டுவெல் கருத்தின் பொருத்தமின்மையைப் புலப்படுத்துகின்றன.


தமிழ் என்பதே திராவிடம் எனத் திரிந்தது எனக்கூறலாம்


( மேற்கூறிய செய்திகள் தொல்பழங்காலம் புத்தகத்தில் பக் 51- 69களில் காணப்படுகின்றன. இப்புத்தகம் 420 பக்கங்களைக்கொண்டது)

No comments:

Post a Comment