ராஜாஜி வாசிப்பு
ராஜாஜி மொழிப்பயிற்சி பற்றி கொஞ்சம் சிலாகித்து பேசுபவராக இருந்தார். ராஜாஜிக்கு மொழியில் எழுத்து நடையைவிட பேச்சு நடைப் பயிற்சி அவசியமாகப் பட்டது. கொஞ்சம் கவனித்து ஆலோசித்துப் பேசுகிற பேச்சே எழுத்தாகவேண்டும் என்பார். பேச்சு நடையில் கொச்சைப் பதங்கள் வேண்டாம் என்பது அவரது ஆலோசனை. மொழிகள் ’வடிவு’ இரகசியம் கொண்டவை. சில மொழி வடிவில் உயிர் தோன்றும். அழகும் அழுத்தமும் வேகமும் உயிரும் தமிழ் வடிவில் உண்டு என்பார். இலக்கியமோ சித்திரமோ உள்ளதை உள்ளதுபோல் வரைந்துவிடுவதல்ல. கொஞ்சம் சாமர்த்தியம் வேண்டும்.
உயிருடன் தாண்டவமாடும் எழுத்தில் பயமிருக்காது. உண்மைக்குக் குறைவுமிருக்காது. அதன் உயிரே அதற்கு காவலும் காப்பும். சம்பாஷணை சீர் திருத்தம் செய்ய அவர் சில முன்மொழிவுகளையும் தந்தார். அதில் மூன்று அம்சங்களாக அவர் சொன்னவை:
அனாவசியமாக ஆங்கிலம் கலக்காமல் பேசுதல் - கொச்சை விலக்கி சரியாக உச்சரிக்க பழகுதல்- மெய்ப்பாடு சமிக்ஞைகள் ஒழித்து மொழிவழி மனோவேகத்தை வெளிப்படுத்தல்.
தமிழ்ப்பேசுவதிலும், படிப்பதிலும் எழுதுவதிலும் தன்னையறியாமல் தமிழனுக்கு உண்டாகும் உள்ளுவப்புதான் தமிழன் அழகுக்குப் பிரமாணம். போற்றப்படாமற்போனால் நாளாவட்டத்தில் எந்தப் பாஷையும் அழகு குன்றி, சொல்வளம் குன்றி, லாகவமும் குன்றியதாகத் தோன்றும்..
ஆங்கிலமொழி
அதிகம் பயன்படுத்துகிறோம். மொழிப்பிச்சை இல்லாவிட்டால் வாழ்க்கை சாத்தியமில்லை என்று முடிவு கட்டிவிட்டது
போல் நடந்துகொள்கிறோம். ஆங்கிலத்தின் நரம்புக் கட்டும் லாகவமும் பொருட்செறிவும்
தமிழில் கிடையாது என்று தமிழை மறந்தவர்
எண்ணுகிறார்கள். எல்லாக் கலைகளுக்கும் போதிய
மொழிச்செல்வம் நம் தாயண்டை உள்ளது;
தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்து உலகத்தையே அளக்கலாம். அந்தந்த சாஸ்திரம் படித்தவர்கள்
அந்தந்த சாஸ்திரத்துக்கு வேண்டிய சொற்களை விஷய
நுட்பமறிந்து அமைக்க முடியும். இதை ராஜாஜி தன் எழுத்தில் பரிட்சித்து பார்த்தவர்.
23 வடமொழி எழுத்துக்கள் மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனும் திராவிட பாஷைகளில் 23 குறிகளுடன் வழங்குவதைக் காண்கிறோம். ஆனால் தமிழில் க, ச, ட, த, ப எனும் 5 எழுத்துக்களாலேயே வழங்கப்படுகின்றன. இது குறையா எனக்கேட்டு இல்லை என தமிழ் எழுத்துக்கள் எனும் கட்டுரையில் நீளமாக ராஜாஜி விவாதித்துள்ளார்.
வடமொழிச் சொற்களை தமிழில் கொள்ளும்போது சமஸ்கிருத உச்சரிப்பு வேண்டாம்- அது தமிழ் முறையாகாது என்கிறார். ’வர்ஷம்’ வேண்டாம் வருஷம் எனச் சொல். ’மாஸம்’ வேண்டாம். மாதம் எனச் சொல் என்கிறார். தமிழில் உயிரெழுத்துக்களும், மெல்லின இடையின எழுத்துக்களும் குறைவின்றி இருக்கின்றன. வல்லின எழுத்துக்கள் மேற்கண்டவாறு சில விதிகளுக்குட்பட்டு மாறுபாடு இல்லாமல் இடத்தை அனுசரித்து உச்சரிக்கப்படுவதால் மேற்சொன்ன குறை உண்மையில் குறையாகாது என அக்கட்டுரையில் ராஜாஜி எடுத்து வைப்பதைக் காணலாம்.
தமிழில்கலந்துகொள்ளும் தன்மைகொண்ட சமஸ்கிருத மொழியை காரணமின்றி வெறுத்தல் கூடாது; தனித்தமிழ் வெறியும், வடமொழி மோகமும் தமிழ்ப்பணிக்குத் தடைகளாகும் என்பது அவரது கருத்து.
தமிழில் அரபி மொழி சேர்ந்துள்ளதை அவர் குறிப்பிடுகிறார். மிராசுகள் வழி அவை வழங்குவதையும் சொல்கிறார். வசூல், ஜப்தி, அசல், பாக்கி, மகசூல், ரசீது, தாவா, மிராசு, ஜமீன், பசலி, மாமூல் போன்றவை அரபி அல்லது பார்சி என்கிறார். ஜல்தி அரபி, ஜரி ( சரிகை) பார்சி, உருமாலை பார்சி, ருமால் பார்சி திரிபு( கைக்குட்டை). குல்லாய் கூட பார்சி தான். காப்பி தரம் என்பதெல்லாம் அரபி. மேஜை என்பது பார்சி.
அதேபோல் பேஷ் பேஷ் என்கிறார்களே அது பார்சி. வகையறா என்பது சுத்த பார்சி என்கிறார். தயார் தயார் என்கிறோமே அது அரபி. ஜாஸ்தி, கம்மி, குஸ்தி, நாசூக், தராசு எல்லாம் பார்சி. ஜாஸ்தி முகலாய நிலத்தீர்வை ஜமாபந்தியுடன் வந்திருக்கலாம் என்றார் ராஜாஜி. சுமார் என்கிறோமே அந்த சுமார் அரபி. பதில் என்பதும் நல்ல அரபி தான்.
அரபியில் ஜினுசு- பட்டு ஜினுசு, கம்பளி ஜினுசு என்பார். அதுதான் நமது தினுசு. தங்க முலாம் என்கிறோமே அதில் முலாம் அரபி. அரபியில் கிடதாஸ்- காகிதமானது. அது பார்சி. அலாதியானவன் என்கிறோம். அந்த அலாதி அரபி. வாபஸ் பார்சி.
நம் பேச்சில் ஆசாமி என்போம். அதுவும் அரபி- பார்சி. இனாம், சிபார்சு, பைசல் எல்லாம் அரபி அல்லது பார்சி மூலம் என்கிறார் ராஜாஜி.
ராஜாஜி
இப்படித்தான் தன் கருத்தை முடிக்கிறார்:
எந்த மொழியானாலும் சரிதான்; வழக்கத்தில் வந்து, தமிழ் வடிவம்
பெற்று, அனைவரும் பொருள் அறிந்த வார்த்தையாக
இருந்தால் அதைப் பொருந்திய இடத்தில்
உபயோகிப்பதில் யாதொரு பிசகுமில்லை.
கதையை
வரலாறு ஆக்கும் ஆபத்து குறித்து ராஜாஜி பேசியிருக்கிறார்.
இராமாயணம்
போன்ற காவியம் ஒன்றை வடக்கு தெற்கு யுத்தமான வரலாறாக ஆக்கி சித்தரிப்பது துக்கமானது
என்கிறார் ராஜாஜி. கவிஞர்களின் கற்பனை மேன்மையில் உருவான கதையைச் அப்படியே சரித்திரமாக்கி
பகைமையுண்டாக்குவது துக்க சம்பாதிப்புத்தான் என்கிறார். கற்பனையையெல்லாம் சரிதமாக்கிக்கொள்வதன்
மதியீனம் என அவர் விமர்சனம் செல்கிறது.
” நம் நாட்டைப்பற்றிச் சரியான சரித்திரமில்லையாயின்
இல்லை என்று ஒப்புக்கொள்வதே நலம். கற்பனைகளை சரித்திரமாக்கி தூஷிப்பது வேண்டாம். இந்த
ஆரிய திராவிடக் குலவேற்றுமை சண்டைகளும் அப்படியே உண்மையாயின் பல்லாயிர வருஷங்களுக்கு
முன் நடந்த சம்பவங்களை இப்போது கிளப்பி சமூக ஒற்றுமையை தடைப்படச் செய்வானேன்? துவேஷ
மனப்பான்மை சாதி ஒற்றுமைக்கும் தடையாகும்.”
மகாபாரத
கதையில் சகுனியும் காந்தாரி தகப்பனாரும் பஞ்சாப் அதற்கும் மேற்கே ஏதோ தேச அரசர்கள்
எனக்கொண்டு இன்றுபோய் பஞ்சாப் மக்களுடன் சண்டையிடமுடியுமா? என ராஜாஜி வினவுவார்.
ராஜாஜி எழுதுகிறார் “ வடக்கே போனால் என்னை திராவிடன்
என்கிறார்கள். என் பாஷை சுத்த திராவிட பாஷை. ஆரிய பாஷையை என்னால் பேசமுடியாது. எவ்வளவோ
கலப்புகள் உண்டாயிருக்க, கலப்புகளை நாம் கோருவதாயிருக்க, மறுபடி பிரிக்கப் பார்ப்பது
மடமையன்றோ? இப்போதும் சண்டையிடலாம். ஆனால் அது ஆரியன் திராவிடன் என்று வேண்டாம். தற்காலத்தில்
நாம் கொண்டிருக்கும் குணாதியசங்களைப் பற்றிச் சண்டையிடலாம். அதற்கு விமோசனமுண்டு”
நமது சாதிப்பிரிவினைகள் அரசியல் சுதந்திரத்திற்கு
மட்டுமல்ல கதை கட்டுரைகளில் தாராளமாக கற்பனை செய்து எழுதவுங் கூடத் தடைகளாய் நிற்கின்றன
என்பதை விளக்க ’முத்துமாலை’
பத்திரிகை ஆசிரியர் கஷ்டங்கள் என்கிற சுவையான கட்டுரையில் ராஜாஜி விளக்கியிருந்தார்.
’தேனீ’ என்கிற
அற்புத கட்டுரை ஒன்றை ராஜாஜி படிப்போர் வியக்கும் வண்ணம் எழுதியுள்ளார். தேனீக்களின்
இயல்பு, அதன் இனப்பெருக்கம், அவற்றின் நடமாட்டம், செயல்பாடுகள், தேன் அடையின் தன்மை,
தேன் எடுக்கும் இலாவகம் என எல்லாவற்றையும்
நயம்பட தேனீ குடும்ப பெயர் வைத்து விளக்கியிருப்பார். தேனீச் சமூகத்திலும் வேலைப்பிரிவினை
உண்டு என அதில் சொல்லியிருப்பார்.
தேனீ
வளர்ப்பதும், ஜந்துக்களுடன் கூடி வாழ்ந்து அன்பும் அறிவும் பெருக்கிக் கொள்வது படிப்புகளுக்குள்
பெரிய படிப்பு என்பார் ராஜாஜி.
உணவு சாஸ்திரம் எனும் கட்டுரை ஒன்றில் தைத்ரீய உபநிஷத்
பாடல் ஒன்றை மேற்கோள் காட்டுவார். அதன் பொருள் ஜீவன்கள் அனைத்தும் உணவிலிருந்து உண்டாகின்றன.
ஜீவன்களின் உயிரைத் தாங்குவது உணவேயாகும். ஜீவன்கள் முடிவில் உணவாகவே முடியும்”
இதை அறிவியல்ரீதியாக ராஜாஜி விளக்கிச் சொல்வார்.
தாவரங்களின் உணவு துவங்கி மனித உணவுவரை தொட்டுக்காட்டுவார். யாக்கையின் வேலைக்கு ஆதிமூலமாயினும்
அதைத் தாவரத்தின் வழியாகவும் தாவரங்கள் தின்ற பிராணிகளின் வழியாகவும் மனிதன் அடைகிறான்
என்பார்.
யந்திரத்திற்கு
கரி போல் மனித யாக்கைக்கு உணவு. ஆனால் யாக்கை வளரவேண்டும். உடல் மராமத்தும் நடக்கவேண்டும்.
கரியோ யந்திரத்தை வளரச் செய்யாது. எனவே மனிதன் வினைச் சக்தி தரும் உணவை எரிபொருள் உணவாகவும்,
யாக்கைப் பொருள் தரும் ’ஊண்
உணவா’கவும் பார்க்கவேண்டும். எரிபொருள் உணவு:
சர்க்கரை, தானிய மாவு என்றால், ஊண் உணவுப் பொருட்கள் மாமிசம், முட்டைக்கரு, பால் எனலாம்.
உண்ட உணவு உடலின் வேலைக்குப் பயன்படுகிறது.
தொழில்செய்து
வாழும் மனிதனுக்கு மூவாயிரம் கனலிகலாவது உணவு வேண்டும். ஒரு கனலி நான்கு தேக்கரண்டி
தண்ணீரைக் கொதிக்கச் செய்யும் உஷ்ணமாகும். ஒரு ராத்தல் சர்க்கரியில் 1600 கனலி உஷ்ண
சக்தி. கலோரியைத்தான் சொல்கிறார்.
மனிதன் உடல் மராமத்து என அதில் அவர் விளக்குவார்
ரத்தத்தில் உள்ள ’செந்தாதுக்கள்’ கெட்டுப்போனால் மற்றவர்
உடலிலிருந்து ரத்தம் எடுத்துப் புகுத்தி பயன் பெறலாம். ஆனால் பிறர் கை, காலை வெட்டி
ஒருவர் உடலில் பிணைக்க முடியாது. உடல் வளர்ச்சிக்கும் யாக்கை மராமத்துக்கும் பயன்படும்
உணவுக்கு பிசினப் பொருள் என்று பெயர். முட்டை வெண்கருவில் , மாமிசத்தில், பாற்கட்டியில்
பிசினப்பொருள் என அதைப் பற்றி ராஜாஜி பேசுகிறார்.
யந்திரம்
சும்மா இருந்தால் கரி போடமாட்டாம். ஆனால் மனிதன் வேலையில்லாவிட்டாலும் உணவு வேண்டும்.
அதேபோல் உடலிற்கு ஊக்குப் பொருள்கள் தேவை எனச் சொல்வார். அதாவது ஏ பி சி டி இ எனும்
வைட்டமின்களைத்தான் இப்படி ராஜாஜி விளக்குகிறார். எந்தபொருளில் எந்த ஊக்குப்பொருள்வகை
உள்ளது என எடுத்துக்காட்டுகளை அவர் தருவார். எந்த எந்த நோய்களை தடுக்கும் ஆற்றல் அவற்றிற்கு
எனவும் சொல்வார்.
ராஜாஜி இக்கட்டுரைகளில் நமக்கு ஏராள சொற்களை கனலி-செந்தாது- ஊக்கு பொருள் என தந்து போவதைக் காணலாம்.
(மேற்கண்ட அவரது கருத்துக்கள் ராஜாஜி கட்டுரைகள் பாரதி பதிப்பகம் 1953 மூன்றாம் பதிப்பில் காணக்கிடைக்கின்றன)
Comments
Post a Comment