https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, May 3, 2022

திராவிடர் பூர்வீகம்

 

திராவிடர் பூர்வீகம் குறித்து  தொல்பழங்காலம் புத்தகத்திலிருந்து

( தமிழ்நாடு அரசு  முதல்வர் டாக்டர்  கலைஞர் மு. கருணாநிதி அமைத்த ஆய்வுக்குழு எழுதிய புத்தகம் 1975)

திராவிடர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களா அல்லது இங்கேயிருந்த பழங்குடிகளா என இருவேறு கருத்துக்கள் நிலவுவதாக தொல்பழங்காலம் புத்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திபேத்திலிருந்து வந்ததாக  The Tamils of 1800 years  என்பதில் வி திரு கனகசபை தெரிவிக்கிறார். அவர்கள் இங்கிருந்த நாகர்களை வென்று அவர்களுடன் கலந்த மங்கோலியர்கள் எனக் கருதுகிறார்.

 அவர்கள் மாறர் என பாண்டிநாட்டில், திரையர் என சோழநாட்டில், வானவர் என சேரநாட்டில், கோசர் என கொங்குநாட்டை வசமாக்கியவர்கள் என்பது கனகசபை அவர்களின் முடிவாகும்.

எலியட் ஸ்மித் என்பார் கிமு 1800யை அடுத்து எகிப்திலிருந்து வந்து முற்பட்ட பழங்குடிகளுடன் கலந்தவர் திராவிடர் என்கிறார். ஜே டி கார்னீலியஸ் என்பாரும் எகிப்தின் துனீசியா பகுதியிலிருந்து புடைபெயர்ந்தவர்கள் திராவிடர் என்கிறார். நடுநிலக்கடல் மக்கள் உலகம் எங்கும் பரவியதாக அவர் தெரிவிக்கிறார். அவர்கள் மேற்காசியாவில் தோன்றி வந்தவர்கள் என்கிற கருத்து பலராலும் போற்றப்பட்டுவருகிறது..

 கென்னடி என்பாரின் ஆய்வும் இந்த நடுக்கடல் பகுதியிலிருந்து வந்தவர் என்பதை ஏற்கிறது. எஃப் ஜே ரிச்சர்ட்ஸ் இந்த நடுக்கடல் பகுதியிலிருந்து என்பது சரிதான் என்கிறார். இந்திய நாகரீகத்தில் திராவிடப் பண்பு எழுதிய சிலேட்டர் என்பாரும் நடுக்கடல் பகுதி மக்களுடன் தலையோட்டு வடிவம், மயிர் அமைதிப்பண்பு, நிறம், கண் நிறம், உடலமைதிகள் ஆகியவற்றில் திராவிடர் ஒற்றுமை உடைய்வர்கள் என்கிறார். மொழியியல் வல்லுநர் எஸ் கே சாட்டர்ஜியும் இதை ஏற்கிறார். நடுக்கடல் மக்களின் கிளையினர் தங்கள் பழங்குடி மரபின் பட்டப்பெயர் தர்மிலாய்- திர்மிலாய்- திரிம்மிலி- திரமிழ எனத் திரிந்து தென்னாட்டின் மொழியான தமிழ்  பெயராக கிமு 1000த்தின் இடைப்பகுதியில் மாற்றமுற்றிருக்கலாம் என்கிறார் சாட்டர்ஜி.

 1952ல் வியன்னாவில் நடைபெற்ற மானுடவியல்- மரபியல் மாநாட்டில் பியூரர் ஹெய்மெண்டார்ப்பு திராவிடர் பற்றி பேசினார். வட இந்தியாவில் காணப்படாத - தென்னிந்தியாவில் காணப்பட்ட பெருங்கல் இரும்புக்கருவிக்கால பண்பாடு வெளியிலிருந்து திராவிடர்களால் புகுத்தப்பட்டிருக்கலாம். அவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார். இந்த நடுக்கடல் பிரிவினர் கிமு முதலாயிரத்தின் இடைப்பகுதியில் வந்திருக்கலாம். ஈரானிலிருந்து பலூசிஸ்தானம்  வழியாக  மைசூர் நிலத்தை வந்தடைந்திருக்கலாம் என்கிறார் ஹெய்மெண்டார்ப் . இவரின் கருத்திற்கு பலரிடம் ஏற்பு இருக்கிறது. எதிர்ப்பும் இருக்கிறது.

 லகோவரி எனும் ருமேனிய ஆய்வாளர் நடுக்கடல் பகுதியில் மெசபடோமியாவிலிருந்து திராவிடர்களின் மூதாதையர் வெளியேறி பையப்பைய இந்தியா சென்றிருக்கலாம் என்கிறார்.

 திராவிட மொழியும், பண்பாடும் அர்மினாய்ட் உடற்கூற்று அமைப்புடைய மக்களின் வாழ்நிலமான அனதோலியா, அர்மீனியா, ஈரான் நிலப்பகுதிகளுக்கு நம்மை அழைத்துச் செல்வதாக  கே நீலகண்ட சாஸ்திரியார் கருதுகிறார்.

மேற்கூறிய கருத்துக்களை மறுத்து திராவிடர் இங்கிருந்து அந்நாடுகளுக்கு ஏன் சென்றிருக்கக்கூடதெனக் கேட்கின்றவர்களும் உளர். டாக்டர் ஹால் சுமேரியர் திராவிட இனம் சார்ந்தவர் என்கிறார். அதேபோல் டாக்டர் மக்லீன் சிந்துவெளி மக்களான திராவிடர் கிழக்கு பாபிலோனியா சென்றனர் என்கிறார். சுமேரியர் ஆப்ரிக்கா- அய்ரோப்பாவிற்கும் திராவிட நாகரீகத்தை எடுத்துச் சென்றனர் என்பது அவரது கருத்து.

 அசோகர் கல்வெட்டுக்கள் கிமு 3 ஆம் நூற்றாண்டில் சேர சோழ பாண்டியரை பேசுகிறது. எனவே அதற்கு முன்னரே  தமிழர் நாகரீகம் வளர்ந்திருக்கவேண்டும். மகாபாரதம்,  மனு திராவிட குறிப்புகளை பேசுகின்றன. மொகஞ்சதாரோ- ஹாரப்பா பகுதியில் நாகரீக நிலையில் வாழ்ந்த ஒரு பகுதியினர் திராவிடர்களாக இருக்கவேண்டும். ஆரியருக்கு முன்பே வடவிந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் திராவிடர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என டி சி சர்க்கார் சொல்கிறார்.

 டாக்டர் எமனோ மொழியியல் ஆய்வில் வட இந்தியாவிலும் நடு இந்தியாவிலும் 14 திராவிட மொழிகள் பெருவழக்காக இருந்துள்ளன என்கிறார். எலியட் ஸ்காட் ஆப்ரிக்கா ஆஸ்திரேலியா விந்தியம் என பரந்த நிலப்பரப்பை லெமூர்- லெமூரியா என்கிறார். மனித இனம் அங்கு தோன்றியிருக்கலாம். ஜான் எவான்ஸ் என்பாரும் லெமூரியாவை பேசி தென்னிந்தியாதான் மனித இனத்தின் மூலத் தாயகம் என்கிறார்.

திராவிடர் தமிழகத்தின் தெற்கே இருந்த நிலப்பரப்பில் தோன்றியவர். பெரு வெள்ளம் காரணமாக கடலில்  மூழ்கிய காரணத்தால் வடக்கில் குடியேறினர். அப்பகுதி இன்றுள்ள தமிழகத்தின் தெற்குப்பகுதியாகும்.

 எல்லா கருத்துக்களையும் கோவைப்படுத்தி பார்த்தால்  குமரிக்கண்டம்- லெமூரியா திராவிடர் மூலத்தாயகமாகும். கடல்வாய்ப்பட்ட அப்பகுதி லெமூரியாவில் இருந்தது. அங்கு அரும்பிய நாகரீகமே சிந்துவெளி நாகரீகமாக மலர்ந்தது. மொகஞ்சதாரோ திராவிடரின் நாகரீகமே நடுநிலக் கடலை அடுத்த எகிப்திய நாகரீகம் தோன்றக் காரணமாக இருந்திருக்குமென்று தோன்றுகிறது.

இச்செய்திகள் பக் 96-118 ல் காணப்படுகின்றன

No comments:

Post a Comment