இலங்கை
நெருக்கடி- சில குறிப்புகள்- நல்விழைவுகள்
மக்கள் எப்போதும் எவரையும் பெருமையாக
கொண்டாடிக்கொண்டிருப்பார்கள் என எடுத்துக்கொள்ளவே முடியாது. இதை இலங்கை மக்கள் உலகிற்கு
காட்டியுள்ளனர். 2020ல் பெரும் வெற்றியாளர்கள். ஆனால் இன்று இருக்குமிடம்? ராஜபக்ஷ
வெளியேற்றம் பல அரசியல் ஜனநாயக எதேச்சாதிகாரிகளின் கண்களை திறக்க வேண்டும். மீடியாக்கள் சொல்வதைத் தாண்டி அங்கு என்னதான் நடக்கிறது
என துருவிப் பார்க்க சில மணி செலவழித்ததன்
விளைவாக இக்கட்டுரை எழுதிபார்க்கப்படுகிறது.
முன்னாள் நிதி அமைச்சர் பாசில்
ராஜபக்ஷ வைத்த 2022 பட்ஜெட் அறிக்கை, அவருக்கு அடுத்து ஏப்ரலில் வந்த நிதி அமைச்சர்
அலி சாப்ரி மே 4 அன்று வைத்த ’நெருக்கடி – மீளல்’ அறிக்கை, போராடிக்கொண்டிருப்பவர்களில்
தலையாய முனையில் இருக்ககூடிய ஜேவிபி ஆவணம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முன்னிலை
சோசலிச கட்சியின் அறிக்கைகள், இலங்கை ஆங்கில பத்திரிகை செய்திகள் இக்கட்டுரைக்கு ஆதாரமாக
எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
வெகுமக்களை வறுமைக்கோட்டுக்கு தள்ளிய பெரும் சரிவைக் கண்டு இலங்கை திணறி வருகிறது. இறக்குமதிகளை நம்பி வாழும் நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு நிதி கோரரூபங்களை அதற்கு உருவாக்கிவிட்டது. ராஜபக்சே குடும்பத்தினரின் வரி குறைப்பு எனும் வான்மழை அறிவிப்புகளால் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டது. problematic Chinese loans - china debt trap policy என்பது குறித்து இந்திய மற்றும் மேற்கு பத்திரிகைகள் விமர்சன ஆய்வுகளை தருகின்றன. மேற்கும் இந்தியாவும் நடத்தும் அரசியல் நாடகம் என பதில் தாக்குதலை சீனா தந்துள்ளது.
’ஐ எம் எஃப் ஏ காப்பாற்று’ எனக் குரல்கள் அங்குள்ள அரசியல்வாதிகள் சிலரிடமிருந்து வந்துகொண்டிருக்கின்றன. ஏழை எளியவர்களின் உணவு பஞ்சம் போக்கக்கூட வெளிநாட்டு உதவி தேவை என வெளிப்படையாக இலங்கை விவசாய இலாக செயலர் அறிவித்துவிட்டார்.
தேசிய வருமானம் முன்னேறாமை - செலவு உயர்ந்துகொண்டே போனமை குறித்து 2019லேயே பலர் சுட்டிக்காட்டினர். வர்த்தக பொருட்கள்- சேவையின் உற்பத்தி போதுமானதாக இல்லாத நாடு நெருக்கடிக்குள் நுழையும் என்ற எச்சரிக்கையும் ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்படாமல் இல்லை. தேர்தல் வெற்றியை மய்யமாக வைத்து மயக்கும் வாக்குறுதிகளால் - குறிப்பாக வரி வீழ்ச்சியால் நெருக்கடி சற்று கூடுதலானதாக இந்திய பத்திரிகைகள் நமக்கு செய்தி தருகின்றன. இந்தப் பத்திரிகைகள் இந்திய தேர்தல்களும் இப்படித்தானே நடக்கின்றன என்ற ஒப்பீட்டை சில மாநிலங்களை வைத்தாவது செய்திருந்தால் நமது சங்கதியும் சேர்ந்தே புரிந்திருக்கும். உரம் குறித்த கொள்கை நிலை தடுமாற்றங்கள் விவசாய நெருக்கடியைக் கொண்டு சேர்த்துள்ளன.
Public debt had risen to unsustainable levels and foreign
exchange reserves were insufficient for near term debt payments என தனது ஐ எம் எஃப் அறிக்கை தந்துள்ளது. ஆரம்பத்தில் ராஜபக்ச அரசும் ஸ்ரீலங்கா மத்திய வங்கியும் ஐ எம் எஃப் கடனா வேண்டாம் என்ற நிலையையே எடுத்தனர். ஏப்ரலில்தான் வேறுவழியில்லை. அதன் கதவை தட்டுவது என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்திய உதவி ’டீசல் ஷிப்மெண்ட் ’ credit line for importing
essentials என்று செய்யப்பட்டால் சீனாவும் கடன் தவிர அத்தியாவசிய பொருட்கள்
உதவி என்பதை செய்துவருகிறது.
10 மணிநேர மின்வெட்டு என்பதை மக்கள் பழகிக்கொள்ளும் நிலை உருவானது. ஆட்சியிலிருந்து வெளியேறியுள்ள பிரதமர் ராஜபக்ச
ஆட்சியை
தக்க வைத்துக்கொள்ள ”The current crisis is a result of several
economic factors and global developments. As on e of the leading democratic
countries in Asia solutions should be found within a democratic frame work
" எனப் பேசியதை மக்கள் ஏற்கவில்லை. எங்கும் மக்கள் போராட்ட எழுச்சி என்கிற வெப்பம் ஆட்சியாளர்களை தாக்கத்துவங்கியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட 2022 பட்ஜெட் 2021 நவம்பர்- டிசம்பரில் விவாதிக்கப்பட்டு வாக்களிப்பிற்கு பின்னர் ஏற்கப்பட்டது. இந்த 2022 பட்ஜெட்டிற்கு ஆதரவாக ராஜபக்ஷ அரசாங்கம் 157 வாக்குகளையும் 64 எதிர்ப்பையும் பெற்று அவ்வறிக்கையை நிறைவேற்றியது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா
இடங்கள் 145, சமகி ஜன பலவேகய 54 இடங்கள், இலங்கை தமிழ் அரசு கட்சி 10 இடங்கள் மூன்று பெரிய கட்சிகளுடன்
10க்கும் மேற்பட்ட கட்சிகள் ஓரிரண்டு இடங்களையும் கொண்டுள்ளன. ராஜபக்ஷா உடன் கோத்தபயா பதவி
விலகினால் தான் ஆட்சி பொறுப்பை ஏற்பதாக சஜித் பிரேமதாசா எஸ் ஜே பி சொல்லி வருகிறார்.
தெருவெங்கும் ஆயுதம் ஏங்கிய இராணுவத்தினர்
காட்சிகளை பார்க்கிறோம்.
பசில் ராஜபக்ஷா நிதி அமைச்சராக 2021 நவம்பரில் தாக்கல் செய்த பட்ஜெட் அது. அந்த பட்ஜெட் அறிக்கை நெருக்கடிகளை
சுட்டிக்காட்டியதென்றாலும் அதீத தன் குடும்ப நம்பிக்கையை பேசியது. ராஜபக்ஷ குடும்ப பாரம்பரியம் விதந்து பேசப்பட்டதைக்காணலாம். 90 ஆண்டுகள் இலங்கை அரசியல் பாரம்பரிய குடும்பம் என்கிற உரைமைகோரல் அதில் இருந்தது.
தேசப்பாதுகாப்பு, அபிவிருத்தி, சமூக நலன்புரி தங்களின் மைய முழக்கம் என்றனர். இந்தக் கடமைகளை நிறைவேற்றிய உலகத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்ற பூத்தூவல் பட்ஜெட்டில் இருந்தது. கோட்டாபாய ராஜபக்ஷ 2019 சனாபதி தேர்தல் வெற்றி, 2020ல் நாடாளுமன்ற வெற்றி எதிர்கட்சிகளை நடுங்கச் செய்யுமளவு மக்கள் வழங்கிய பதிலடி என்றனர்.
பெரும் சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதாரத்தினை முகாமை செய்திடமுடியும் என்றார் பசில். தங்கள் பலமாக அவர் காட்டியதில் ஒன்று துணிவுமிக்க தலைமைத்துவம்- அரசியல் ஸ்திரத்தனமை- ஊழல், மோசடி, வீண்விரயம் தடுக்கும் நேர்மையான ஜனாதிபதி.
சவால்களில் முக்கியமாக கோடிட்டு காட்டப்பட்டவை சர்வதேச போதைப்பொருள் மாபியாவின் இருப்பு பற்றியதானது. இந்த
மாபியாவின் ஆபத்தான முயற்சிகளில் இலங்கை இளைஞர்கள் சிக்கியுள்ளனர். இது பெருந்துயராக வர்ணிக்கப்பட்டது. அடுத்து பெருமளவு பெருகிவரும் மோசடியான வியாபார தொழிற்பாடுகள்- சட்டத்திற்கு புறம்பான இலாபங்கள்- பதுக்கல்- செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்குதல், உயர் விலைகள்- கறுப்பு சந்தையாகும். இவர்களை எதிர்த்த போராட்டம் முற்றுப்பெறாத நிலையில் நெருக்கடிகள் அதிகமாகின்றன. சுதந்திர சந்தை உறுதிப்பாட்டை உருவாக்கி இதை சரியாக்கவேண்டும்.
வெளிநாட்டு சக்திகளின் முகவர்கள் மக்கள்சார் அரசாங்கத்தை கவிழ்த்துவிடமுடியுமென தோற்றம் பெற்றுள்ள ஆபத்தும் வந்துள்ளது. விழிப்பிற்கான அழைப்பு தேவைப்படுகிறது என பட்ஜெட் எச்சரித்தது. நாம்
இங்கு இந்தியாவில் சொல்லிக்கொண்டிருப்பது போல் சீனா எனவோ அல்லது வேறு நாடு எனவோ அவர்கள்
வெளிப்படையாக சொல்லவில்லை. அது டிப்ளமசியாகாது.
நுகர்வு மாற்றங்கள், உற்பத்தி விளைவு வீழ்ச்சி, நவீன தொழில்நுட்ப போதாமை, போக்குவரத்து- களஞ்சியப்படுத்தல் பிரச்னைகள், இடைத்தரகர்கள் , உற்பத்தி சங்கிலித்தொடரில் செம்மையான தரவுகள் பரவாமை போன்றவை விலைவாசியை ஏற்றுகின்றன என பட்ஜெட் காரணப்படுத்தியது.
இறக்குமதியை நம்பியிருப்பது - உற்பத்தியாளர் ஊக்கம் பெறாமை- ரூபாய் மதிப்பிழத்தல் போன்றவையும் சவாலாயின. ’சுபீட்சத்தின் நோக்கு’ என்கிற கொள்கைத்திட்டம் , சேவைத்துறை சார்பினை மட்டும் நம்பியிராமல் வர்த்தகப் பொருளாதாரமாக நாட்டை மாற்ற நோக்கம் கொண்டுள்ளதை பட்ஜெட் மீண்டும்
நினைவூட்டியது.
சுற்றுலாத்துறை முடங்கி பெரும் வர்த்தக நட்டம் ஏற்பட்டது. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வீழத்துவங்கியது. உள்நாட்டு வருமானம் ஈட்டும் வழிகள் வீழ்ச்சி. வெளிநாட்டு செலவாணி சம்பாதித்ய நெருக்கடி - அரசுபடு கடன் கூடுதலாகிக்கொண்டே போய் மீளமுடியாத முட்டுச்சந்தில் இருக்கும் நிலைகளை
பட்ஜெட் அறிவிக்காமல் இல்லை.
300 பொதுத்துறைஅரசு தொழில் முயற்சிகளில் போடப்பட்ட நிதி முதலீடுகளுக்கு வருவாய் திரும்ப வருவதில்லை.பராமரிப்பு செலவு கூடிக்கொண்டே போகிறது. அரசாங்க செலவினத்தை முகாமை செய்யத்தவறியது முக்கிய காரணமாகவும் அங்கு சொல்லப்படுகிறது.
”அரசாங்க செலவினத்தை அரசியல்மயமாக்கல்”- உற்பத்தி திறனற்ற அரசாங்க செலவினங்கள் நிதி முகாமைத்துவம் வீழக் காரணங்களாயின. நிதியியற் ஒழுக்கம்- சேமிப்பு கலாச்சாரம்- தனியார் நிர்மாண நடவடிக்கை ஆதரவு, தேசிய பொருளாதாரத்திற்கு சுமையை சேர்க்கின்ற தொடர் நட்ட அரசுத்துறைகளைப் பற்றி உபாயகர திட்டம், அவற்றின் சொத்துக்களை பயன்படுத்த திட்டம் பட்ஜெட்டில் பேசப்பட்டன. சில நடவடிக்கைகளையும் அவர்கள்
அறிவித்தனர்
நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் பெற தொடர்ச்சியான 5 ஆண்டுகள் என்பது இனி 10 ஆண்டுகளாக உயர்த்தப்படும். சனாதிபதி உட்பட எவருக்கும் இது பொருந்தும். அரசாங்க அலுவலகம் மக்களின் நேசசக்தியாக இருக்கும்வகையில் கண்டிப்பாக ’வாக்குப்பத்திரம்’ அளிக்கவேண்டும்.. ’சேவை செயலாற்றுகை’ குறிகாட்டி திட்டம்- அரசாங்க வினை திறன், உற்பத்தி திறன் அதிகரிப்பு திட்டம், அரசாங்க சேவைகளுக்கு புதிய சம்பள கட்டமைப்பு- சம்பள நிர்வாக முறைகளை எளிமைபடுத்துவது, ஓய்வுபெறும் வயது 65ஆக்குவது ஆகியவை அறிவிக்கப்பட்டன.
காப்புறுதி சட்ட திருத்தம், இலங்கை சுங்கத் தீர்வைகளில் மாற்றம்- அனுமதி செயன்முறை இலகு வசதிகள் சொல்லப்பட்டன. (வரி நிலுவை மட்டுமே நாட்டின் ஜி டி பியில் 1.5 சதம்.)
வரி ஏய்ப்பை தடுக்க சட்டரீதியான கூடுதல் ஏற்பாடுகள், சிரேஷ்ட பிரஜைகள் சமூக பாதுகாப்பு பங்களிப்பு ஓய்வூதியம், பெண்கள்- இளைஞர்களுக்கு பயிரிடப்படாத காணிகள் வழங்கி புதிய விவசாய தொழில் முயற்சியாளர் ஆக்குதல், தனியார் துறையுடன் சேர்ந்து கல்வி சுகாதார மாவட்ட வேறுபாடுகளை குறைப்பது ஆகியவை பேசப்பட்டது. 6 சத மக்களுக்குத்தான் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. அனைவருக்கும் நீர் எனும் இலக்கை துரிதப்படுத்தல் அவசர காரியமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த நாட்டிலும் நம் நாடு போல ஆள்வோர் மொழியில் திட்டப்பெயர்கள் வைக்கப்படுகிறது. ’கமசமக் பிலி சந்தர ’ என்பது கிராம அபிவிருத்தி திட்டம்- கிராம சேவையாளர் பிரிவுருவாக்கம். விகார் மதகுரு, கோயில், தேவாலய பூசகர்கள், சமூகத்தலைவர்கள், கிராமவாசிகள் உள்ளடக்கிய திட்டம்.
மொத்த தேசிய உற்பத்தியில் தேசிய வருமானம்
என்கிற அளவு கோலில் சீனா
25.3 சதம், பிரேசில் 29.4 சதம், இந்தியா 18.3, சிங்கப்பூர் 17.6, மலேசியா 20.2, தாய்லாந்த் 20.6 என்றால் இலங்கை 16.3 சதமாக இருந்து சில ஆண்டுகளில் இலங்கை அரசாங்க வருமான வீழ்ச்சி ஜிடிபியில் 9.2 சதமாக ஆகியது.. வரி திறனின்மை இதற்கு முக்கிய காரணியாகும் என சொல்லப்பட்டது.
எனவே அரசாங்க வருவாய் 18 சதம் உயரவேண்டும்- நிதி பற்றாக்குறை பட்ஜெட் தேசிய வருமான மட்டத்தில் 10 சதம் என்பதை 1.5 சதமாக குறைக்க வேண்டும். அதேபோல் தேசிய வருமானத்தின் 16 சத அளவிலான செலவினை 13 சதமாக குறைக்கவேண்டும். ’அரசாங்க படுகடன்’ தேசிய உற்பத்தியைவிடக் கூடுதலானதை குறைக்கவேண்டும். குறைந்தது அதை 74 சதமாக மட்டுப்படுத்த வேண்டும் போன்றவை பேசப்பட்டன.
மக்கள் இவர்கள் பேசியவற்றை ஏற்கவில்லை.
அக்குடும்ப அரசியல் மீது பெருங்கோபத்துடன் களம் இறங்கி பெரும் கிளர்ச்சிகளை செய்துவருவதைக்
காண்கிறோம்.
இலங்கை இடதுசாரி இயக்கங்கள் வெளித்தெரியும் அளவிலான வரலாறு 90 ஆண்டுகளுக்கு மேலானது. இலங்கை சமத்துவ சமூக கட்சியிலிருந்துதான் கம்யூனிஸ்ட்கள் பிரிந்து 1943ல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அமைத்தனர். சீன- சோவியத் வேறுபாடுகளால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தது போல் அங்கும் பீகிங் ஆதரவு தனிக் கட்சி உதயமானது. இவை எல்லாவற்றையும் மறுத்து உருவான ஜேவிபி என்கிற மக்கள் விடுதலை முன்னணி தனது 60 ஆம் ஆண்டை நோக்கிய பயணத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.
இக்கட்சியின் தலைமையை சி அய் ஏ ஏஜென்டுகள் என கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டாமல் இல்லை. இப்போது ஆளும் கட்சி அத்தாக்குதலை
இவர்கள் மீது தீவிரப்படுத்தியுள்ளது.
போராட்டக் களத்தில் அதிகம் பேசக்கூடிய கட்சியாக FSP Frontline Socialist Party என்கிற ’முன்னிலை சோசலிச கட்சி’ இடதுசாரி இயக்கம் வளர்ந்துவருகிறது. மக்கள் போராட்ட இயக்கத்தை முன்னெடுத்துள்ளது. A true Hope- A people's Movement என ஏராள மாணவர் இயக்கங்களுடன் போரட்டத்தை அக்கட்சி முன்னெடுத்தது. ஜேவிபியும் எஃப் எஸ் பியும் சேர்ந்தால் வழி பிறக்கும் என சில பத்திரிகைகள் பேசத்துவங்கியுள்ளன.
இந்த ஜேவிபி கட்சி நெருக்கடி முற்றிவந்த கடந்த டிசம்பர் 2021ல்
rapid response to overcome current challenges என்ற ஆவணத்தை வெளியிட்டது. அதை தன் மாற்று திட்டமாகவும் மக்கள்
முன் கொண்டு சென்றது. அதில் கவனம் பெறும் சில
அம்சங்கள் :
மன்றாடுகின்ற பொருளாதாரத்திற்கு பதிலாக ஈட்டுகின்ற பொருளாதாரம்
1977 திறந்த பொருளாதார கொள்கைதான் இன்றைய அழிவை உருவாக்கியது.
உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் இல்லாத நிதிச்சந்தை, அரசு நலனோம்புகை குறைத்தல், மான்ய வெட்டு, சந்தை ஏகபோகம், பங்கு விற்றல் போன்றவை இன்றைய அழிவை உருவாக்கியுள்ளன.
அரசாங்க கடனெடுத்தல் அதிகரிப்பு- மட்டற்ற ஊழல்கள்- அந்நிய செலவாணியின்றி நாடு கடன் விஷ சக்கரத்தில் சிக்கி தவித்தல்-
எனவே மாற்று பொருளாதார சிந்தனைகளை அமுலாக்க வேண்டும். அவையாவன:
·
குறுங்கால மத்திய கால நீண்டகால பொருளாதார அபிவிருத்தி நோக்கி, அரசு தனியார் உற்பத்தி
·
உணவு உற்பத்தி கவனம் - உள்நாட்டு உற்பத்தி உற்சாகப்படுத்தல்- திறன் மேம்பாட்டிற்கான தொழில்நுட்பம்
·
அந்நிய செலவாணியை பிறப்பிக்கக்கூடிய பண்ட உற்பத்தி
·
பாரம்பரிய மீன்பிடித்தொழில், விவசாயம் நவினமயப்படுத்தல்
·
கடன் மீளச்செலுத்துதலை மறுசீரமைத்தல்
·
சந்தை தனியுரிமை, தன்னலக்குழு தனியுரிமை தடுத்தல்
·
படிப்படியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு, சுகாதாரத்திற்கு 5 %.
·
மக்கள் போக்குவரத்திற்கான ஏற்பாட்டில் 80 % பொதுப்போக்குவரத்து சேவை மூலம்.
·
பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பங்கேற்பு வகிபாகம். ஆண் பெண் கற்பிதங்களை மாற்றி புதிய கருத்தியல்களை கட்டியெழுப்புதல்
·
அரசு சனநாயகப்படுத்தப்படாமை என்பது பெரும்பிரச்னை- தனி ஆளொருவரிடம் அதிகாரம் குவிக்கப்பட்ட சனாதிபதி முறைக்குப் பதிலாக பாராளுமன்ற பொறுப்புகொண்ட அமைச்சரவை
·
பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்படுகிற சனாதிபதி
·
சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை சமநிலை கோட்பாட்டினை அடிப்டையாகக்கொண்டு
பிரதமரை முதன்மையாகக் கொண்ட அமைச்சரவை
·
மக்கள் பிரதிநிதிகளை மீள அழைக்கும் அதிகாரம்
·
பல் இன கலாச்சாரம் பேணல்- பன்வகைமையின் மத்தியில் சகவாழ்வு வளர்த்தல்
·
வெளியுறவில் எந்தவொரு அதிகாரப் பாசறைக்கும் முற்சாய்வற்ற கொள்கை- தேசப்பாதுகாப்பு- சைபர் பாதுகாப்பு தொழில்நுட்பவசதி
·
நீதித்துறைகளில் அரசியல் தலையீட்டை தடுத்தல், அடிப்படை உரிமைகளை காக்கும் இடமாக மாற்றுதல்
ஜேவிபி முன்வைக்கும் திட்டத்தை
மக்கள் ஏற்பார்களா- தெரியவில்லை.
இந்த
நெருக்கடி சூழந்த காலத்தில் கொழும்புவில் ( பிப்ரவரி 2022ல்) CPSL இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 22 வது காங்கிரஸ்
நடந்தது. அதில் வைக்கப்பட்ட ஆவணத்தை ’நெட்’ வழியாக பெறமுடியவில்லை. அதன் பொதுச்செயலர்
வீரசிங்கே பத்திரிகை பேட்டி ஒன்றை அந்நேரத்தில் அளித்திருந்தார். அதன் சாரம்:
தங்கள் இலட்சியம் இலங்கையில் சோசலிசம்
என்ற இலக்குத்தான். எங்களைப் பற்றிய சுயவிமர்சன அறிக்கை ஒன்றை வைத்துள்ளோம். கடந்த
5 ஆண்டுகளின் சர்வதேச போக்குகள் குறித்தும், இலங்கையின் உள்நாட்டு அரசியல் குறித்தும்
நாங்கள் விவாதிப்போம். சீனா, ருஷ்யா வளர்ச்சியால் உலகம் மீண்டும் unipolar
நிலையிலிருந்து multipolar ஆக மாற்றப்பட்டுவருகிறது.
லத்தீன் அமெரிக்க சோசலிச கட்டுமான அனுபவத்தை நாங்கள் கவனிக்கிறோம்.
இலங்கையில் 1977ல் துவங்கிய தாரளமய உலகமயம் இன்றும்
கொள்கையாக இருக்கிறது. எஸ் எல் பி பி கட்சி சில முன்னேற்றங்களையாவது செய்தது. ஆனால்
இன்றுள்ள அரசாங்கம் அனைவரையும் அழைத்து செல்வதில் தவறுகிறது. சனாபதி நினைப்பதையெல்லாம்
செய்யவேண்டும் என்பது நடவாது. வரிவிலக்கு அளித்ததன் மூலம் அரசாங்கம் தனது வருவாயில்
25 சத வீழ்ச்சியை தானே ஏற்படுத்திகொண்டது. டாலரில் ரூபாய் வீழந்தது.
ஏன் ஜேவிபி உட்பட இடதுசாரிகளால் மக்களிடம் 5 சத வாக்கைகூட
பெறமுடியவில்லை என்ற கேள்வி பொதுச்செயலரிடம் எழுப்பப்பட்டது. ஆமாம். இடதுசாரிகள் ஒரே
கருத்தோட்டத்துடன் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என மக்கள் உணர்ந்தால் வருவார்கள். கருத்துவேறுபாடு
இருக்கிறதே. இடதுசாரி ஜனநாயக மாற்று என்பதை நாங்கள் சொல்லி வருகிறோம் என அவர் பதில்
தந்தார்.
அரிசி சந்தையை சில தனிநபர்கள்
மட்டும் ஏன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அரசாங்கம் இதில் 30 சத கவனம் செலுத்தினால்
போதும் மக்களுக்கு ஓரளவு கட்டுப்படியான விலையில் கிடைக்கும் என்ற ஆலோசனை ஏற்கப்படாததை
அவர் விமர்சித்தார்.
நீடித்த விவசாயம், நீல நீர் பொருளாதாரம், தொழில்கள்
குறித்த மாற்றை வைத்துள்ளோம். எங்களது இடதுசாரி ஜனநாயக மாற்று குறித்தும், நெருக்கடி
குறித்தும் கட்சி காங்கிரஸ் விவாதித்து முடிவெடுக்கும் என்றார் வீரசிங்கே.
’கோத்தபய வெளியேறு’ இயக்கம் வெளிநாட்டு
சதி என ஆளும் கட்சியினர் வர்ணித்து வருகின்றனர். மேற்கின் கை எனவும் பேசுகின்றனர்.
இதில் குறிப்பாக ஜேவிபி இணைக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வர்க்க போராட்டம்
பேசுவோர் இன்னும் கடந்த காலத்திலேயே உள்ளனர். உலகம் வெகுவாக மாறிவிட்டது என இடதுசாரி
போராட்டங்களை சில பத்திரிகைகள் விமர்சித்தும் வருகின்றன.
மக்கள் போராட்டம் வலுவடைந்ததை தணிக்கலாம் என்ற நோக்கில்
தனது குடும்பம் சார்ந்த பசில் ராஜபக்ஷாவை நீக்கி அலி சாப்ரியை நிதி அமைச்சராக்கினர்.
அவர் கடுமையான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியவரானார். அலி மே 4 அன்று நிதிநெருக்கடி குறித்த
அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் தந்தார். நெருக்கடியை தேட பல பத்தாண்டுகளின் கொள்கைகளை
பார்க்கவேண்டும் என்றார். ’விதைத்தவைதான் வினையாக’ வந்துள்ளன என்றார். இதை ஆண்ட அனைத்துக்
கட்சிகள் மீதான பொதுவான விமர்சனமாகவே அவர் முன் வைத்தார்.
அரசாங்க வரவு வீழ்ச்சி, தாறுமாறான
கட்டுக்குள் நிற்காத செலவுமுறை என்பதே நெருக்கடியானது என அலி சொல்கிறார்.
At present, the Sri Lankan
economy is in an extremely challenging situation and this has triggered social
turbulence and political instability. This may lead to catastrophic
consequences if the fundamental issues are not addressed immediately.
எனவே இதை மாற்றிட அவர் முன்வைத்த
திட்டம்.
An economic path underpinned
by fiscal and monetary discipline, a focus on enhancement of productivity, and
ensuring equitable outcomes by protecting the most vulnerable sections of our
society.
வரி சீர்திருத்தம் உடனடி கடமை
- செலவுகளை சீரமைத்தல்- ஏற்றுமதி சார்ந்த பொருளாதார முன்னேற்றம்
ஐஎம் எஃப் உதவி உடனடியாக பெறுதல்.
அதற்கு ஏராள சீர்திருத்தங்களை ஏற்கவேண்டியிருக்கும். அதே நேரத்தில் இலங்கை ’ஓனர்சிப்’
என்பதை விட்டுவிடாத பொருளாதார திட்டத்தைதான் நாம் ஐ எம் எஃப் முன் வைப்போம்.
ஐஎம் எஃப் சந்திப்புகள் நடக்கத்துவங்கியுள்ளன.
அவர்கள் நிபந்தனையை ஏற்று மக்கள் தலையில் மேலும் நெருக்கடிகள் சுமத்தப்படலாம். போராட்டங்கள்
கூடுதலாக எழலாம். இன்று இலங்கைக்கு நிதி வழங்குவோர் யார்? அதற்கான நிபந்தனைகள் என்ன?
அரச சொத்துகள் எவ்வாறெல்லாம் கைமாறுகின்றன போன்ற வினாக்கள் பதிலற்றுக் கிடக்கின்றன.
ஏனெனில், நாட்டை நடத்துவதற்கு எவ்வாறேனும் நிதியிருந்தால் போதும் என்ற மனநிலை பொதுமையாக்கப்பட்டுள்ளது
என்ற கேள்விகளை தீவிர போராட்டக்காரர்கள் எழுப்புகின்றனர். ஐ எம் எஃப் புதிய ஆட்சி அமையட்டும் பார்க்கலாம்
என பேசத்துவங்கியுள்ளது.
தமிழர் கட்சிகள் பெரும்பாலும்
சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுடனான தீர்வு என்பதை முன்வைத்தே தங்கள் நிலைப்பாட்டை
எடுத்து வருகின்றனர். இந்தியா மூலம் ராஜிவ்
காலத்தில் ஏற்கப்பட்ட 13வது சட்டதிருத்த - மாகாண கவுன்சில் அதிகாரங்கள் என்பதை அவை
முன்னெடுக்கின்றன.புகழும் பழமையும் வாய்ந்த
இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது அமைப்புவிதியிலேயே அய்க்கிய இலங்கை இணைப்பாட்சியின்
அங்கமாக சுயநிர்ணய உரிமைப்படி சுயாட்சி தமிழரசு- சுயாட்சி முஸ்லீம் அரசு நிறுவி இலங்கை தமிழ் பேசும் மக்களுடைய அரசியல், பொருளாதார, கலாச்சார
விடுதலையைக் காண்பது நோக்கம் எனத் தெரிவிக்கிறது. சோசலிச பொருளாதார முறை எனவும் பேசுகிறது.
வன்முறை சொத்து நாசம் மீட்சியை
கொண்டுவந்துவிடுமா எனத் தெரியவில்லை. பொறுப்பானவர்கள் கூடி நிலைமைகளை மீட்க முன்வரவேண்டும்
என விழைதல் நலம். இடதுசாரிகள் ஆதரவுடன் அனைத்து இன நல்லிணக்கதுடன் ஜனநாயக மக்கள் நலன் காக்கும் அரசாங்கம் இன்றைய தேவை. கலவரங்கள்
அடங்கி நல் அரசியல் நோக்கி நாடு நடைபோடுவது விழைவாகட்டும். இலங்கை மீண்டு வரவேண்டும்
என்பதே அனைவரின் விழைவு.
11-5-2022
Comments
Post a Comment