Skip to main content

விடுதலைப் போராட்டத்தில் நேரு



விடுதலைப் போராட்டத்தில் நேரு
-ஆர்.பட்டாபிராமன்



அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும். சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார். சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும். 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம்.
போயர் யுத்தம், ருஷ்யா-ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும், ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது. ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார். தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார். கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார்.
தனது 15 வயதில் 1905ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார். லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி. லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனாக அன்சாரி இருந்தார். அன்சாரி தனிமையை உணர்ந்ததாக நேரு சொல்கிறார். அவரின் அறிவுத்திறன் அபாரமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். நேரு ஹாரோ பல்கலையில் சேர்ந்தார். அவர் அங்கு படித்த புத்தகங்கள் பெரும்பாலும் அரசியல் சார்ந்தவையாகவே இருந்தன. நேருவுடன் கபூர்த்தலா சமஸ்தான ராஜாவின் மகன் பரம்ஜித் சிங் ஹாரோவில் இருந்தார். ஆனால் சமஸ்தானத்து மன்னர் பாரம்பரியத்தை கடைப்பிடித்து அவர் தனித்தே இருந்ததாகவும் , அவ்வாறு இருப்பது ராஜ்ய உறவுகளுக்கு உகந்ததாக இருக்காது என இளம் நேரு சொல்லிவந்தார்.
 அவ்வப்போது பத்திரிகைகள் தரும் செய்திகள் மூலம் இந்தியாவில் நடப்பதை நேரு அறிந்தார். திலகர் - லாலாஜி   கைது, சர்தார் அஜித்சிங் செய்திகள் அறிய அறிய அவரிடம் கிளர்ச்சி உணர்வுகள் எழத்துவங்கின. எவரிடம் அங்கு விவாதிப்பது?
 அடுத்து அவர் டிரினிட்டி கேம்பிரிட்ஜ் சென்றார். அங்கு இயற்கை அறிவியலை - கெமிஸ்ட்ரி- ஜியாலஜி- பாட்டனி தேர்ந்தெடுத்தார். அங்கு சூழலோ அரசியல் வரலாறு சார்ந்து இயங்கியது. நேருவிற்கு ஆரம்பத்தில் குழப்பமே மிஞ்சியது. கேம்பிரிட்ஜில் அவருக்கு மிகப்பெரிய ஈர்ப்பை  Meredith Townsend  எழுதிய Asia and Europe  தந்தது. திலரின் ஆவேசம் அவரை ஈர்த்தது.
சுற்றியிருப்பவர்களிடம் நேரு வெளிப்படையாக எதையும் விவாதிப்பவராக இருக்கவில்லை. கல்லூரி விவாத கிளப்பில் கூட பேசாமல் அவர் தண்டத்தொகை கட்டுபவராக இருந்துள்ளார். பிற்காலத்தில் நேரு வேடிக்கையான முரண்பாட்டை சுட்டிக்காட்டிய பதிவு ஒன்றை தந்தார். கல்லூரி காலத்தில் பெரும் அனல்கக்கும் பேச்சுக்களை தந்த பலர் இந்தியாவிற்கு வந்து ICS,  வக்கீல்- நீதிமான்களாக மாறினார்களே தவிர, விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்களிப்பையும் செய்ததாக தெரியவில்லை.
சென்குப்தா, கிச்சலு போன்ற சிலர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்றனர். கல்லூரிக்கு பிபின் சந்திரபால், லாலாஜி, கோகலே போன்றவர் வந்தனர். பிபினுக்கு லாலாஜி பரவாயில்லை என நேருவிடம் எண்ணம் ஏற்பட்டது. நேரு லண்டனில் ஹர்தயாளை சந்தித்தார். Indian Sociologist  பத்திரிகையின் ஆசிரியர் சியாமாஜி கிருஷ்ணவர்மாவை அவர் ஜெனிவாவில் சந்தித்தார். அவரின் இந்திய இல்லம் மாணவர்களை ஈர்க்கும் கூடமாக இருந்தது.


 நேருவிற்கு சட்டப்படிப்பா- அய் சி எஸ் நிர்வாகத்துறையா என்ற கேள்வி வந்து அப்பாவின் சட்டப்பகுதிக்கே செல்வது என முடிவானது. அவர் பார் அட் லா பெற இன்னர் டெம்பிளில் சேர்ந்தார். 1910 அயர்லாந்து சென்ற நேருவிற்கு சின்பீன் இயக்கம் அறிமுகமானது. லண்டனில் பாபியன் சோசலிஸ்ட்களிடம் ஈர்ப்பு இருந்தது.
1907 சூரத் காங்கிரஸ் பிளவை சந்தித்தது. அதில் மோதிலால் பங்கேற்றார். பொதுவாக மாடரேட் என அவர் பார்க்கப்பட்டார். நேரு 1912ல் இந்தியா திரும்புகிறார்.  இந்தியாவில் அரசியல் வேறுபட்டுக்கிடந்தது. திலகர் சிறையில் இருந்தார். மிதவாதிகள் மிண்டோ- மார்லி சீர்திருத்தம் என அதைச்சுற்றி இருந்தனர். 1912 கிறிஸ்துமஸ் காலத்தில் பங்கிபூர் காங்கிரசிற்கு நேரு சார்பாளராக சென்றார். பெரும்பாலும் உரையாடல்கள் ஆங்கிலத்தில் நடந்தன. மேல்தட்டுக்காரர்களின் அமைப்பாக நேரு அதனை உணர்ந்தார். கோகலே சற்று உயர்ந்து அவருக்கு  தென்பட்டார்.
 காங்கிரசில் இணைந்த நேரு உடனடியாக பெரும் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கவில்லை. கோகலேவின்சர்வண்ட்ஸ் ஆப் சொசைட்டி மீது மரியாதை இருந்தது. ஆனால் அவர்களிடம் அரசியல் தீவிரம் இல்லை என்பதும் அவர் உணர்வாக இருந்தது. சட்டப்படியான விதிகளை மாணவர்கள் மதித்து முறையாக நடந்து கொள்ளவேண்டும் என சீனிவாச சாஸ்திரி  பேசியது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்படி நல்வகைப்பட்ட பேச்சு விடுதலையை தருமா என்கிற கேள்வியும் அவரிடம் எழுந்தது.
முதல் உலகப்போர் காலத்தில் இந்திய பாதுகாப்பு சட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் எழுச்சிகள் ஏதுமில்லை. இங்கிருந்த தலைவர்களுக்கு பிரிட்டிஷ் மீது பரிவில்லை. ஜெர்மனி மீது பரிவு இருந்தது. நேருவிற்கு பிரான்ஸ் மீது இருந்தது. அரசியல் உணர்வுகள் மீண்டும் துளிர்விட திலகரின் விடுதலை உதவியது. திலகர், அன்னிபெசண்ட் ஹோம்ரூல் இயக்கங்கள் எழுந்தன. நேரு இரண்டிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். சீனிவாச சாஸ்திரியிடம் எதிர்பார்ப்புகளை கொண்ட நேருவிற்கு ஏமாற்றம் மிஞ்சியது. அவர் நெருக்கடிகளில் கூட ஏன் செயல்படவில்லை என்கிற கேள்வி ஏற்பட்டது.
பிரிட்டிஷ் இந்தியா பாதுகாப்பு படை என்கிற சிவில் காவலர் பிரிவு ஒன்றை அறிவித்தது. அங்கு இந்தியர்களுக்கு மரியாதை இல்லை என்ற விமர்சனம் இருந்தது. பின்னர் சேரலாம் என நிலை எடுக்கப்பட்டபோது நேருவும் விண்ணப்பித்தார். ஆனால் அன்னிபெசண்ட் சிறைத்தள்ளப்பட்டார் என்கிற செய்தி நேருவிற்கு கோபத்தை உருவாக்கியது. அலகாபாதில் மோதிலால், தேஜ்பகதூர் சாப்ரு, சிந்தாமணி , நேரு கூடி ’ Defence Force’  உடன் ஒத்துழைப்பதில்லை என முடிவெடுத்தனர்.
நேருவிற்கு மேடைபேச்சு குறித்து அய்யம் இருந்தது. இந்துஸ்தானி வருமா என சந்தேகம் இருந்தது. மேடை வாய்ப்பு அலகாபதில் 1915ல் அவரைத்தேடிவந்தது. பேசி முடித்தவுடன் மேடையிலேயே சாப்ரூ முத்தமிட்டார். நேருவிற்கு பொதுச்சேவைக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுவிட்ட உணர்வு உருவானது. அன்றாட நடைமுறை அரசியலில் ஈடுபட இயலும் என்கிற நம்பிக்கை பிறந்தது.
மகனின் வளர்ச்சியால் மோதிலால் முகம் பிரகாசமானது. அதேநேரத்தில் வங்கத்தின் தீவிர சிந்தனைகள் வழியே நேரு செல்கிறாரே என்கிற கவலையும் மோதிலாலுக்கு ஏற்பட்டது. மோசமான நிலைமைகளை பார்த்து அதற்கு பணிந்துபோகக்கூடாது என்பதை எடுத்துக்கொள்வதில் எத்தவறும் இல்லை என  நேரு பேசலானார். அந்நிய ஆட்சி எதிர்த்த தீவிர போராட்டங்கள் கட்டப்படவேண்டும் என்றார்.
 காந்தியுடன் நேருவிற்கான சந்திப்பு 1916 கிறிஸ்துமஸ் காலத்தில் லக்னோ மாநாட்டில் நிகழ்ந்தது. தென்னாப்பிரிக்காவில் காந்தியின் போராட்டங்களை நேரு அறிந்தவராக இருந்தார். காந்தி வித்தியாசமாக சற்றுத்தள்ளி நிற்பவராக நேருவிற்கு தோன்றியது. ஆனால் இந்தியாவிற்காக காந்தி நிற்கிறார்- வெற்றிப்பாதையை அவர் சொல்கிறார் என முதலில் உணர்ந்த சில இளைஞர்களில் நேருவும் ஒருவராக இருந்தார். சரோஜினி நாயுடு அவர்களும் நேருவை ஈர்த்தார்.
1916ல் நேருவிற்கு கமலாவுடன் திருமணம் டெல்லியில் நடந்தது. அவர்கள் காஷ்மீர், லடாக் பகுதியில் மகிழ்ந்து இருந்தனர்.
 ரெளலட் சட்டக்காலத்தில் காந்தியின் ஒவ்வொரு அசைவும் நேருவிற்கு பெரும் வியப்பையும் நம்பிக்கையும் உருவாக்கின. அவர் பிறரை எப்படி ஏற்கவைக்கிறார் என்பதை அருகில் கண்டதால் தனக்கு கூடுதல் நம்பிக்கை உருவானதாக நேரு சொல்கிறார். அமிர்தசரஸ் காங்கிரசிற்கு மோதிலால் தலைமை ஏற்றார். திலகரும் இருந்தார். காங்கிரஸ் காந்தியிடம் அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தது. காந்திக்கு ஜே- மகாத்மாவிற்கு ஜே முழக்கங்கள் அதிகம் இருந்தன.
 1920ல் சற்று கடினமான பணிகளில் நேரு இறங்கினார்.  உத்தரபிரதேச கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்தார். குறைகளை நேரில் கேட்டு அறிந்துகொண்டார். தனது கூச்ச சுபாவத்தை விவசாயிகள்தான் போக்கியதாக நேரு சொல்கிறார். தனது இந்துஸ்தானியை வைத்துக்கொண்டு அவர்களிடம் செல்லமுடியுமா என்ற தயக்கமும் அவருக்கு உடையத்துவங்கியது. அவருக்கு பேச்சுக்கலை வசப்படவில்லை.. ஆனால் ஒவ்வொரு தனிமனிதரிடமும் நேர்த்தியான உரையாடல் செய்யும் கலையில் அவர் தேர்ந்தார். காந்தியின் சீடன் எனும் தகுதி அவரிடம் நிறையத்துவங்கியது.
அவரது உடையில்கூட மேற்கிலிருந்து மாற்றம் வந்தது. கார் தவிர்த்து பல கிராமங்களுக்கு நடந்தே சென்றார். சில விவசாயிகளின் வீடுகளில் அவர்கள் தரும் உணவையும் அவர் எடுத்துக்கொண்டார். மண்குடிசைவீடுகளில் தங்கினார்.
 காந்தி ஒத்துழையாமை என 1920ல் சொன்னபோது ஓராண்டில் சுத்ந்திரம் என நம்பிக்கையூட்டினார். அகிம்சைவழிப்பட்ட ஒத்துழையாமை இந்திய நிலைமைகளுக்கு மிகப்பொருத்தமானதாக  நேருவும் கருதினார்.   அதன் நன்னெறி சார்ந்த பக்கத்தை அவர் வியந்து சொன்னார். அதே நேரத்தில் எப்போதும் அகிம்சை என கோட்பாடாக அதை தான் ஏற்கவில்லை- அகிம்சை நமக்கு சரியான கொள்கை என தன்நிலையை நேரு தெளிவுபடுத்தினார்.
“ What I admired was moral and ethical side of our movement and of satyagraha. I did not give an absolute allegiance to the doctrine of non violence or accept it for ever, but it attaracted me more and more, and the belief grow upon me...it was the right policy for us.”
’Spiritualisation of politics’  என்பதில் கூட மதச்சார்பு அடிப்படையில் பார்க்காமால் இருந்தால் மிக உயர்ந்த ஒன்றாகவே நேரு உணர்ந்தார். சரியான முடிவுகள் போலவே சரியான உகந்த வழிகள் என்பதும் ஏற்புடைய ஒன்றே என நேருவும் கருதினார்.
 காந்தியை நேரு கண்மூடித்தனமாக பின்பற்றினார் என எவராவது கருதினால் அது தவறு என்பதை நேருவின் இச்சிந்தனை நமக்கு உணர்த்தும். அதேபோல் காந்தியும் எவரும் தன்னை கண்மூடி பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்லாமல்தான் உறவுகளை கொண்டிருந்தார்.
வெகுஜனங்களுடன் வாழ்வது என்கிற உளவியல்- அவர்களின் இயல்பு நேருவிற்கு புலப்படத்துவங்கியது. சிலநேரங்களில் கூட்டங்களில் அவர் நுழையும்போது ஏற்படும் தள்ளுமுள்ளுகள்- ஒழுங்கு மீறல்கள் அவருக்கு எரிச்சலைத்தரும். காந்திக்கு நெறி ஒழுங்கு மட்டுமே முக்கியம். நேருவோ மனநெறி- உடல்நெறி இரு ஒழுங்குகளும் அவசியம் எனக் கருதினார். நேருவால் வெகுஜனத்திரளுடன் இருக்கவும் முடிந்தது. விமர்சன பார்வையுடன் சில நேரம் விலகி நிற்கவும் முடிந்தது. கடுமையாக பேசியிருந்த நேரங்களிலும், பழக்க வழக்கங்களை தாக்கிப்பேசியபோதும் கூட அவர்கள் தங்கள் அன்பை குறையாமலே தந்தார்கள் என்பதை நேரு சொல்கிறார்.
 மேடை கிடைத்தால் எப்படி பல தலைவர்கள் சம்பந்தமில்லாமல் விஷயமேயில்லாமல் பேசுகிறார்கள் என்பதை நேரு கவனிப்பார். ஒத்த கருத்துக்கொண்டவர்களுடன் நகைச்சுவையாக அதுபற்றி விவாதம் இருக்கும். அதே நேரத்தில் தான் பேசுவது குறித்தும் இப்படிப்பட்ட கமெண்ட்களை எவராவது சொல்லிக்கொண்டிருக்கலாம் என்கிற விழிப்புணர்வும் அவரிடம் இருந்தது.
 1921ல் வேல்ஸ் இளவரசர் வருகையை புறக்கணிப்பது என்ற முடிவை இரு நேருக்களும் அமுல்படுத்தினர். இருவரும் கைதாகினர். இவ்வியக்கத்தில் 30 ஆயிரம் இந்தியர்கள் சிறையில் தள்ளப்பட்டிருப்பார்கள். 1922 பிப்ரவரியில் சிவில் ஒத்துழையாமையை காந்தி செளரி செளராவால் விலக்கிக்கொண்டதாக அறிவித்தார். இளம் நேருவிற்கு இதில் வருத்தம் ஏற்பட்டது. எங்களுக்கு கடுங்கோபம் ஏற்பட்டது. சிறையில் இருக்கும் எங்களால் ஏதும் செய்யவில்லை என நேருவின் பதிவு சொல்கிறது. இயக்கம் வலுப்பெற்றுவரும்போது திரும்பப்பெற்றதை அவரால் ஏற்கமுடியவில்லை. காந்தியடிகளும் கைதானார்.  சிறிய தூரகிராமம் ஒன்றில் சிலர் உணர்ச்சிவயப்பட்டு திசைமாறி சென்றால் அதற்கு தேசவிடுதலைப் போராட்டத்தை முடித்துக்கொள்ளவேண்டுமா என நேரு கேள்வி எழுப்பினார். இப்படித்தான் என்றால் நமது அகிம்சை போராட்ட முறையிலேயே ஏதோ குறை இருக்கிறது. முப்பது கோடி மக்களையும் அகிம்சை கொள்கை நடைமுறை பயிற்சி கொடுத்தப் பின்னர்தான் முன்னேறி செல்லவேண்டுமா போன்ற கடுமையான கேள்விகளை அவர் எழுப்பினார்.
சத்தியாகிரகம் என்ற போராட்ட முறையை தனிநபர்கள் வேண்டுமானல் மாற்றவே முடியாத கொள்கையாக வைத்திருக்கலாம். ஆனால் அரசியல் இயக்கம் அப்படி ஒரு  creed  வைத்துக்கொள்ளமுடியாது எனக் கருத்து தெரிவித்தார்.
 அடுத்த அவரது சிறைவாசம் அந்நியத்துணிகள் பகிஷ்கரிப்பு இயக்கத்தால் நேர்ந்தது. நேரு வெளியில் வந்தநேரம் காந்தி சிறையில் இருந்தார். வெளி அரசியல் வைஸ்ராய் கவுன்சில் நுழைவு எனும்  ’Changers’  மாற்றம் விரும்பிகள்  கூடாது எனும் ’No Changers’ வேறுபாடுகளுடன் நகர்ந்துகொண்டிருந்தது. இரண்டாவது பகுதியினர் காந்தியின் ஆதரவாளர்கள். மோதிலால் சுயராஜ்ய கட்சியில் இருந்தார். மோதிலால்  தன் மகன்  ஜவஹர் அவரது விருப்பப்படி இயங்கலாம் என தெரிவித்துவிட்டார்.
மோதிலால், தாஸ், ஜின்னா போன்றவர்கள்  சட்டமன்ற நடவடிக்கைகள் மட்டுமே வாய்ப்பு எனும் சூழலை புரிந்துகொள்ளவேண்டும் என்றனர். ஆனால் ராஜாஜி, பிரசாத், படேல் ஆகியோர் கயா மாநாட்டில் இவர்களை தோற்கடித்தனர். மோதிலால், சி ஆர் தாஸ் சுயராஜ்ய கட்சி துவங்கினர்.
 1923 தேர்தலில்  மத்திய சட்டமன்றத்தில் 48 இடங்களைப் பெற்று பெரும்கட்சியாக வந்தது. புதிய சுயராஜ்ய கட்சி வேட்பாளர்களால் பெருந்தலையான சுரேந்திரநாத் பானர்ஜி உட்பட பலர் தோற்கடிக்கப்பட்டனர். ஜின்னா உட்பட சில சுயேட்சைகள் சுயராஜ்ய கட்சியினருடன் அணிசேர்ந்தனர். சட்டமன்றம் உதவாது என உள்ளிருந்து நிரூபிப்பது அவர்கள் தங்களுக்கு வகுத்துக்கொண்ட வேலை. சுயேட்சைகள் அவசியமான அம்சங்களை மட்டும்தான் எதிர்ப்போம் என்ற நிலைக்கு வந்தனர். சி ஆர் தாஸ் 1925 பரித்பூர் மாநாட்டில் பிரிட்டிஷாருடன் ஒத்துழைப்பு என பேசத்துவங்கினார். நேரு இரு பக்கமும் சாராமல் தனித்திருந்தார்.
காங்கிரஸ் மே 25, 1923 அமர்வில் புருஷோத்தம்தாஸ் டாண்டன் தேர்தலுக்கு எதிரான பிரச்சாரம் கூடாது என நேரு ஆதரவுடன் தீர்மானம் கொணர்ந்தார். No-Changers பிரிவினர் இதை எதிர்த்தனர். முகமது அலியும் ஆசாத்தும் சமரசம் ஏற்படுத்தினர்.
1923ல் நேரு  அலகாபாத் முனிசிபல் சேர்மனாகிறார். அவருக்கு அங்கு மோசமான அனுபவங்கள் கிடைத்தாலும் நிர்வாகம் என்பதின் கிடைத்தது எனலாம். அலகாபாத் முனிசபல் சேர்மன் ஆக நேரு இருந்தபோது அரசு எவ்வளவு மெத்தனமாக காரியம் ஆற்றிவருகிறது. அரசியல் ஒடுக்குமுறை என்றால் தாவிப்பாயும் அரசாங்கம் தலமட்ட நிர்வாகத்தில் தூங்கிவழிகிறது என்பதை நேரு கண்டார். ஆங்கிலேயர் வாழும்பகுதிக்கு அதிகமான நிதிச்செலவு ஆவதையும் கண்டறிந்தார். நேருவின் மொழியில் கேட்டால் :
 ”Local bodies are just inefficient. Their weak point is nepotism- perspectives are all wrong- no sense of responsibility- all pervading authoritarianism"
 1924ல் காங்கிரசில் முழுநேர ஊழியர்க்கு குறிப்பாக செயலர்களாக இருப்பவர்களுக்கு இயக்கம் அலவன்ஸ் தரவேண்டும் என்பது விவாதமானது. நேருவும் செயலர்களில் ஒருவர். அவர் தரவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். மோதிலால் தன் மகன் இவ்வாறு பொதுநிதியிலிருந்து அலவன்ஸ் பெறுவதை விரும்பவில்லை. வேறு சில செயலர்களும் பணத்தின் தேவை இருந்தும் வாங்குவது தனிமனித மாண்பிற்கு இழுக்கு என நினைத்தனர். எனக்கு இதில் மாண்பு இழுக்கு என்பதெல்லாம் இல்லை- ஊதியம் பெறலாம் அது இல்லாமலும் இயங்கலாம்  என நேரு தன் நிலையை தெளிவுபடுத்தினார்.  கட்சி முழுநேரப்பணியை எவரிடமாவது நாம் எதிர்பார்த்தால் அவருக்கு நிதி பாதுகாப்பை தரவேண்டியது அவசியம் என நேரு கருதினார்.
 அடுத்து அவரது கைது சீக்கியர் ஒத்துழையாமை ஒன்றை பார்வையிட சென்றபோது நிகழ்ந்தது. நேரு கையில் விலங்கிடப்பட்டு தெருக்களில் அழைத்து செல்லப்பட்டார். நாயை இழுத்து செல்வது போலத்தான் இருந்தது என நேரு சொல்கிறார். அப்பகுதி மாஜிஸ்ட்ரேட் அரைகுறை விவரம் கொண்டவர். அவர்களை கிரிமினல் போல் நடத்தி சுகாதாரமற்ற செல் ஒன்றில் அடைத்தனர் .
மெளலானா முகமது அலி 1923ல்தலைவராக இருந்தபோது நேரு செயலராக அமர்த்தப்பட்டார். இருவருக்கும் கடவுள் குறித்த சர்ச்சை அடிக்கடி நடைபெறும்.  அலி தீர்மான வாசகங்களில் கூட இறை வாசகங்களை கொணர முயற்சிப்பார். இறைவனுக்கு நன்றி தெரிவித்து பேசுவார். நேரு எதிர்ப்பார். அலி கடுமையாக நேருவை கடிந்துகொள்வார். பின்னர் சிறுதுநேரம் கழித்து நேருவிடம் நீங்கள் அடிப்படையில் மனிதாபிமானி என சரிகட்டுவார். நேருவிற்கு இறை நம்பிக்கை இல்லாவிடினும் அவரால் காந்தியுடன் செல்ல முடிந்தது. தெளிவு, ஒற்றுமைப்பாதை, தீர்க்கதரிசனம் போன்றவைதான் ராஜ்ய நிர்வாகத்திற்கு உகந்த மதம் என்கிற பார்வை சரி எனில் அவை நேருவிற்கு பொருத்தமானதாக இருக்கும்.
 அலி அவர்களுடன் நேருவிற்கு வேறு பிரச்சனை ஒன்றும் வந்தது. காங்கிரசில் தலைவர்களை விளிப்பதில் மகாத்மா, மெளலானா, முன்ஷி, பண்டிட் என்றெல்லாம் சொல்லவேண்டியதில்லை என்று செயல்பட்டார் நேரு. அலி அவ்வாறு செய்யக்கூடாது- மகாத்மாவை அவ்வாறே அழைக்கவேண்டும் என நேருவிற்கு தந்தி அனுப்பினார்.
 1924ல் ஜுஹூ கடற்கரை பகுதியில் காந்தி இருந்தபோது, இரு நேருக்களும் அவரை சந்தித்தனர். காந்தியை சந்தித்து திரும்பிய நேருவிற்கு ஏமாற்றம் ஏற்பட்டது. அவர் ஏன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேச மறுக்கிறார்-  நீண்டகால நடவடிக்கை இல்லை  என்கிறார் என கேள்விகள் பிறந்தன. காந்தியோ மக்கள் சேவை என்பது பொறுமையாக செய்யப்படவேண்டிய ஒன்று என்றார். காங்கிரசின் சமூக திட்டங்களிலும் நேருவை கவனம் செலுத்த அறிவுறுத்தினார். அதேபோல் காங்கிரஸ் உறுப்பினர் எனில் தக்களி நூல்நூற்பு அவசியம் என காந்தி கூறியதையும் நேருவால் ஏற்கமுடியவில்லை. நூல்நூற்பு எனும் உழைப்பை தகுதியாக வைக்கவேண்டும் எனில் அதை மட்டும் ஏன் வைக்கவேண்டும் என்பது அவரது கேள்வியாக இருந்தது.
 1926ல் கமலா உடல்நிலை பாதிப்பை அடுத்து நேரு அய்ரோப்பா செல்ல நேர்ந்தது. பிரஸ்ஸல்ஸ் பகுதியில் நடந்த ஒடுக்கப்பட்டோர் சர்வதேச மாநாடு ஒன்றில் அவர் பிப்ரவரி 1927ல் கலந்துகொண்டார். ஏகாதிபத்திய எதிர்ப்பு லீக் அமைக்கப்பட்டது. சன்யாட் சென், ரொமெயின் ரோலந்த் உடன் நேருவும் உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.
மேற்கு நாடுகளின் தொழிலாளர் இயக்கம் பற்றி பிரஸ்ஸல்ஸ் எனக்கு புரிதலை தந்தது. என்னை கம்யூனிசம் நோக்கி நகர்த்தியது. அதன் குறைகள் எப்படியிருந்தாலும் அது ஏகாதிபத்தியமாக இருக்காது என நேரு தான் உணர்ந்தவைப் பற்றி எழுதினார்.
 நேரு குடும்பத்தார் நவம்பர் 1927ல் மாஸ்கோ சென்று அக்டோபர் புரட்சியின் 10 ஆண்டுகள் கொண்டாட்டத்தில் விருந்தினர்களாக பங்கேற்றனர்.  சோவியத் மற்றும் சோசலிசம் குறித்து ஏப்ரல்- ஜூலை 1928 மாதங்களில் இந்து, யங் இந்தியாவில் நேரு கட்டுரைகள் எழுதினார். பின்னர் சோவியத் ரஷ்யா என்ற பெயரில் அவை வெளியிடப்பட்டன.
டிசம்பர் 1927ல் இந்தியா திரும்பிய நேரு மதராஸ் காங்கிரஸ் அமர்வில் பங்கேற்றார். விடுதலை தீர்மானம் புரிந்துகொள்ளப்பட்டது குறித்து நேரு சொல்கிறார். அதை காந்தி எவ்வாறு பார்த்தார் என்பது பற்றியும் அவர் சொல்கிறார். அவற்றை காந்தி விரும்பவில்லை என்கிறார். இந்திய சமூகம் பணக்காரர்கள்- படித்த வர்க்கத்தினர் இல்லாத சமூகமாக மாறுவதற்கான தருணம் இன்னும் வரவில்லை என காந்தி கருதினார். நேருவோ விடுதலை இயக்கம் முழுவிடுதலை மற்றும் சோசலிச நோக்கங்களுக்காக நிற்கவேண்டும் என நினைத்தார்.
1928 நேரு ஜாரியாவின் AITUC  மாநாட்டில் முதல் இருநாட்கள் பங்கேற்றார். அவர் இல்லாத நிலையில் அமைப்பின் தலைவராக அம்மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1919 சட்டப்படி 10 ஆண்டுகள் கழித்து 1929ல் அமையவேண்டிய ராயல் கமிஷன் 1927ல் ஜான் சைமன் தலைமையில் அமைக்கப்பட்டது. சைமன் கமிஷனில் இந்தியர் எவரும் இல்லாமையால் எதிர்ப்பு கிளம்பியது. பகிஷ்கரிப்பு இயக்கம் தீவிரமானது. சட்டமன்றத்திலும் எதிர்ப்பு தீர்மானம் கொடுத்தனர். லாலாஜி கொணர்ந்த தீர்மானம் விவாதிக்கப்பட்டு பிப்ரவரி 16 1928ல் ஏற்கப்பட்டது.
"The Assembly recommends to the Governor-General-in-Council to inform His Majesty's Government that the present constitution and scheme of the Statutory Commission are wholly unacceptable to this House and that this House will therefore have nothing to do with the Commission at any stage and in any form."
மே 17, 1927ல்பம்பாய் காங்கிரஸ் அமர்வில் சுயராஜ்ய அரசியல் அமைப்பு சட்டம் ஒன்றை எழுத மோதிலால் தீர்மானம் கொணர்ந்தார். இதை நேரு மதராஸ் அமர்வில் வலியுறுத்தி மே 1928ல் இதற்காக அனைத்துகட்சி கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தனர். அரசியல் அமைப்பு சட்ட அடிப்படைகளை எழுத மோதிலால் தலைமையில் கமிட்டி அமைத்தனர். இக்கமிட்டியும் நேரு கமிட்டி என அழைக்கப்படலானது. அக்கமிட்டி தன் அறிக்கையை ஆகஸ்ட் 10, 1928ல் கொடுத்தது. இந்தியர்கள் தங்களுக்கு தாங்களே அரசியல் அமைப்பு சட்டம் எழுதிக்கொள்ளமுடியும் என முதலில் நிரூபித்த கமிட்டியாக இது பார்க்கப்பட்டது.
டிசம்பர் 1928 கல்கத்தா காங்கிரஸ் அமர்வில் டொமீனியன் அந்தஸ்து- பரிபூர்ண விடுதலை விவாதம் சூடாக நடந்தது. தேஜ்பகதூர், மோதிலால், மங்கல் சிங், பிரதான் போன்ற மூத்தவர்கள் டொமீனியன் அந்தஸ்திற்காக நின்றனர். நேரு, சுபாஷ் போன்ற இளம் தலைவர்கள் முழுவிடுதலை என்றனர்.
 1929 லாகூர் மாநாட்டில் காந்தி தலைவராக இருக்க வற்புறுத்தப்பட்டது. ஆனால் நேரு இருக்கலாம் என காந்தி தெரிவித்தார். மோதிலால் தனது மகன் நேரு தலைவராக  இருக்கட்டும் என மகாத்மாவிடம் தெரிவித்த தகவலும் இருக்கிறது. நேரு இது குறித்த பதிவில் தனது வருத்தத்தை தெரிவித்தார். சாதாரணமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன் என்றார்.
ஜவஹர் அப்பொறுப்பை ஏற்க முழுமையான தகுதி பெற்றவர். அவரது திறமை, உழைப்பு ஆகியவற்றை அறிவோம். அவர் தொழிலாளர், விவசாயிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்- அய்ரோப்பாவின் அரசியல் அறிந்தவர் என்கிற வகையிலும் அவர் நமக்கு சொத்து என காந்தி நேருவின் தேர்வை பாராட்டியிருந்தார். அவர் நிதானமாகவும் நடைமுறை சார்ந்து செயல்படுவார். அவரின் கரங்களில் நாடு பாதுகாப்பாக இருக்கும் எனவும் காந்தி எழுதினார்.
1929 லாகூர் காங்கிரஸ் வரிகொடா இயக்கம் மற்றும் ஒத்துழையாமை என்பதை ஏற்றது. காந்தி தனது உப்புவரி நீக்கம் உள்ளிட்ட 11 அம்சங்களை வெளியிட்டார். அவர் தனது தண்டி யாத்திரையை மார்ச் 12, 1930ல் துவங்கினார். 79 பேர்களுடன் 241 மைல்கள், 24 நாட்கள் யாத்திரையது. சாதாரண மக்களை தட்டி எழுப்பி விடுதலை உத்வேகத்தை மூட்டிய பயணமது.
இந்நாட்டு மக்கள் மீதுகொண்டுள்ள அன்பாலும் தீர்விற்கான தணலும் கொண்டு  இந்த யாத்திரை புறப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் பெரிதும் காந்தியால் ஈர்க்கப்பட்டுள்ளனர் என நேரு   வர்ணித்திருந்தார்.
காங்கிரஸ் தலைவர் என்கிற வகையில் நேரு பல்வேறு பகுதிகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வந்தார். உப்பு சட்டப்படி நேரு கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனை பெறுகிறார்..  ஒராண்டில் 60000 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைத்தள்ளப்பட்டனர். 29 இடங்களில் துப்பாக்கி சூட்டால் 103 உயிர்கள் பலியாகின.
 1931ல் காந்தி இர்வின் உடன்படிக்கை ஏற்பட்டது.அதன் காரணமாக போராட்டம் நிறுத்தப்பட்டது. நேரு உடன்பாட்டில் திருப்தி கொள்ளவில்லை. இந்திய விடுதலை எனும் நோக்கத்தை அது கலங்கவைத்துவிட்டதாக நேரு கருதினார்.
கராச்சி காங்கிரஸ் அமர்வில், பகத்சிங் தூக்கு பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது . நேரு  பகத்சிங்கிற்கு புகழஞ்சலி செய்தார். 'The corpse of Bhagat Singh shall stand between us and England.' என்ற கருத்தையும் வெளியிட்டார்.
எம் என் ராய் உடன் நேரு சந்தித்துபேசிய பின்னர் மத சுதந்திரம், பேச்சு மற்றும் எழுத்துரிமை, சாதி, பாலினம், கொள்கை எதனையும் தாண்டி சட்டத்தின் முன் அனைவரும் சமம், மாநில மொழிகளுக்கு பாதுகாப்பு, தொழிலாளர்களுக்கு வாழ்க்கை ஊதியம், வயது கால உதவி, வேலையின்மைக்கு எதிராக பாதுகாப்பு அம்சங்கள் போன்ற கருத்துக்களுக்கு நேரு காங்கிரஸ் தீர்மானங்களில் அழுத்தம் கொடுத்தார் என நேருவின் வாழ்க்கை குறிப்புகளைத் தரக்கூடியவர் கருத்தாக இருக்கிறது.
வட்டமேஜை முதல் மாநாட்டில் நவம்பர் 1930ல் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. அடுத்த மாநாட்டின் முடிவில் தனி வாக்காளர் தொகுதி அவார்ட் எதிர்த்து எரவாடாவில் காந்தியடிகள் உண்ணாநோன்பு, அம்பேத்கருடன் உடன்பாடு போன்ற நிகழ்வுகள் நடந்தேறின.
பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிற்கான அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பாக 1933ல் வெள்ளையறிக்கை ஒன்றை கொடுத்தது. முதல்முறையாக idea of a federation சொல்லப்பட்டது. ஜவஹர் முதலில் அரசியல் அமைப்பு சட்ட அசெம்பிளி- அங்கு விவாதித்து சட்டம் என சொன்னார். இக்கருத்திலும் அவருக்கு எம் என் ராய் செல்வாக்கு இருந்ததாக கருதுபவர்கள் உண்டு. அவர் அமெரிக்காவின் அரசியல் அமைப்பு, பிரஞ்சு புரட்சியின் தாக்கத்தில் இதை தெரிவித்ததாக சொல்பவர்களும் உண்டு. நேரு 1946 டிசம்பர் 13 அன்று அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் நோக்கத்தீர்மானம் பற்றி பேசியபோது அமெரிக்க அரசியல் அமைப்பு சட்டம் பற்றி கூறினார் என மேற்கோள் காட்டுபவர்களும் உண்டு.
பிர்ட்டிஷ் 1935 இந்திய அரசாங்க சட்டம் கொணர்ந்தது. இதை காங்கிரசின் பல தலைவர்களும் விமர்சித்தனர். மிக முக்கிய அதிகாரங்களான இராணுவம், நிதி, வெளிநாட்டு உறவு ஆகியவை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலேயே என்று 1935 சட்டம் பேசியதை நேரு விமர்சித்தார். மாநில அரசுகள் கவர்னர் விரும்புகிறவரைதான் என இச்சட்டப்படி இருக்கமுடியும் என ஆசாத் விமர்சித்தார். இச்சட்ட ஷரத்துக்கள் ஜனநாயக எல்லையை விரிவடைய செய்கிறோம் என்கிற பெயரில் பிரிட்டிஷ் அதிகாரம் குவிக்கப்படவே உதவுவதாக பொது விமர்சனம் எழுந்தது. சர்ச்சில் இச்சட்டம் இந்திய வைஸ்ராய்க்கு இத்தாலி முசோலினி பெற்ற அதிகாரத்தையும் விஞ்சும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
அரசியல் சட்ட வல்லுனர் காஷ்யப் "The Federal part of the 1935 Act, however, never came into operation" என எழுதியுள்ளார். மாநில அரசுக்கு சில அதிகாரங்கள் என்பதில் தான் இச்சட்டம் 1919 சட்டத்திலிருந்து வேறுபடுகிறது என்கிற விமர்சனமும் வந்தது. நேரு பிற்போக்கு அம்சங்கள் கொண்ட சட்டம் என்றே காங்கிரஸ் அமர்வில் தெரிவித்தார்.  சமரமின்றி எதிர்க்கவேண்டிய ஒன்று- தேசத்தின் விருப்பத்தை இச்சட்டம் பிரதிபலிக்கவில்லை என்றே உரையாற்றினார். இந்திய பிரதிநிதிகள் கூடி அரசியல் சட்ட அசெம்பிளியில் உருவாக்கும் ’constitution’ அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கம் 1937ல் மாநில தேர்தலுக்கான அறிவிப்பைக் கொடுத்தது. மாநில அரசாங்க நுழைவு ஏகாதிபத்திய போராட்டத்தை வலுவிழக்க செய்துவிடும் என நேரு அஞ்சினார் (acceptance would mean in practice, 'a surrender' before imperialism).காந்தி இம்மாதிரியான அரசாங்க அதிகாரத்தை முள்கிரீடமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இப்பொறுப்புக்கள் மூலம் இலக்கு நோக்கி நகர முயற்சிக்கவேண்டும் என ஹரிஜன் இதழ் ஆகஸ்ட் 7 1937ல் எழுதினார். பிரசாத் போன்றவர்களும் சோதிப்பதில் தவறில்லை என்ற நிலைப்பட்டை எடுக்கத்துவங்கினர்.
நேரு தலைமையிலான  லக்னோ மற்றும் பைஸ்பூர் அமர்வுகளில் காங்கிரஸ்  தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவிற்கு வந்தது. அமர்வில் கீழ்கண்ட தீர்மானம் ஏற்கப்பட்டது. அசெம்பிளியை பயன்படுத்திக்கொண்டு வயதுவந்தோர் வாக்குரிமை- சுயநிர்ணய உரிமை போன்றவற்றை நாம் வற்புறுத்துவோம் என்றனர். இதில் காணப்படும் சில சொற்றொடர்களில் நேருவின் தாக்கத்தை நம்மால் உணரமுடியும்.
நேரு பரபரப்பான தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அய்ந்து மாதங்களில் அவர் 80 ஆயிரம் கிலோமீட்டர்  பயணித்தார். ஒருகோடி இந்திய மக்களை சந்தித்திருப்பார். காங்கிரஸ் பெரும் வெற்றியை மாநிலங்களில் பெற்றது.
காங்கிரஸ் அமைச்சரவைகளின் செயல்பாட்டில் காந்தி, நேருவிற்கும் விமர்சனம் இருந்தது. காந்திக்கு ஏப்ரல் 28 1938ல் நேரு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் செய்திடும் தவறுகளை, லஞ்ச ஊழல் அமசங்களை, திறமையற்ற நிர்வாகம் குறித்த கவலையை பகிர்ந்துகொண்டார். பல ஆண்டுகளின் உழைப்பிற்கு பலனில்லாமல் போய்விடுமா என நேரு அஞ்சினார். மிக உயர்ந்த குறிக்கோளுக்காக நிற்பவர்கள் என்பதிலிருந்து மிக சராசரியான அரசியல்வாதிகளாக நம்மவர்கள் மாறிக்கொண்டிருப்பது வேதனையானது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
காங்கிரஸ் அரசாங்கங்களின் செயல்பாட்டில் அதிருப்தி கொண்ட நேரு நேதாஜியுடன் திட்டக்குழு ஒன்றை அமைத்து அதில் கவனம் செலுத்தலானார். போஸ் அவர்கள் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது (1938ல்) தேசிய தொழில்மய வளர்ச்சிக்கு திட்டமிடுதல் என்பதற்காக கமிட்டியை அமைத்தார். காந்தியின் ஆதரவாளர்கள் இதில் மாறுபட்டு நின்றனர். அவர்கள் கிராம மேம்பாட்டு திட்டம் மூலம் அனைவருக்கும் வேலை உத்தரவாதம், குடிசைத்தொழில்கள் மேம்பாடு குறித்து பேசினர்.
நேரு தலைமையிலான அக்கமிட்டிக்கு கீழ்கண்ட நோக்கங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அ. விவசாய உற்பத்தியை பெருக்குதல்
ஆ. தொழில் உற்பத்தி பெருக்கம்
இ. வேலையின்மையை போக்குதல்
ஈ. தனிநபர் வருவாயை உயர்த்துதல்
உ. கல்வியறிவின்மையை நீக்குதல்
ஊ. பொது மக்கள் பயன்பாட்டிற்கான சேவைகளை அதிகரித்தல்
எ. மக்களின் வாழும் ஆண்டுகளை அதிகரித்தல்
ஏ. குறைந்தபட்சம் 1000 மக்கள்தொகைக்குரிய மருத்துவ வசதிகளை உருவாக்கி மேம்படுத்தல்
இரண்டாம் உலகப்போரில் இந்தியா சுயேட்சையான முடிவெடுக்கும் வகையில் அதிகாரம் மாற்றப்படவேண்டும் என காங்கிரஸ் கோரியது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய தலைவர்களின் கருத்துக்களை புறக்கணித்து இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் பங்கேற்பு குறித்து முடிவெடுத்தது. 1939 அக்டோபரில் கூடிய  காங்கிரஸ் வைஸ்ராயின் முடிவை எதிர்த்து தீர்மானம் இயற்றியது.
வைஸ்ராய்  நிலவும் சூழல்களைக் கணக்கில் கொண்டு அனைத்து கட்சியினரையும் கொண்ட consultative group அமைப்பதாக அறிவித்தார். வார்தாவில் கூடிய காங்கிரஸ் அக்டோபர் 22, 1939ல் வைஸ்ராயின் பிரித்தாளும் சூழ்ச்சியை கண்டித்தது. காங்கிரஸ் அமைச்சரவைகள் அக்டோபர்- நவம்பரில் ராஜினாமா செய்தன.
அபுல்கலாம் ஆசாத் தலைவராக இருந்த காங்கிரஸ் அமர்வு 1940ல் மீண்டும் தனது நிலைப்பாட்டை உறுதியாக அரசிற்கு தெரிவித்தது.. பிரிட்டன் தனது ஏகாதிபத்திய நலன்களை ஒட்டியே போரை நடத்திவருகிறது. காங்கிரசால் ஒத்துழைக்க இயலாது என்பது தீர்மானமானது. வைஸ்ராய் லின்லித்கவ் தனது கவுன்சிலில் இந்தியர்களை வைத்துக்கொள்ள இயலுமே தவிர அதிகார மாற்றம் இல்லை என உறுதியாக அறிவித்தார்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட கிரிப்ஸ் தூதுக்குழுவும் இந்தியாவில் வரவேற்பை பெறமுடியவில்லை. கிரிப்ஸ் குழு மார்ச் 1942ல் வந்தது. டொமீனியன் அந்தஸ்து, மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவோரைகொண்ட அரசியல் நிர்ணய சபை, விரும்பாத பகுதிகளுக்கு தனி அரசியல் சட்டம்,  அரசியல் நிர்ணய சபையுடன் பிரிட்டிஷ் அரசாங்கம் விவாதித்து பின் அதிகார மாற்றம்- மைனாரிட்டிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் என அக்குழு சில ஆலோசனைககளை தந்தது. நேரு தனது விமர்சனத்தை வைத்தார். இந்தியாவை உடைக்கும் ஆலோசனைகள் என்பது அவரது விமர்சனமாக இருந்தது.
பம்பாயில் 1942 ஆகஸ்ட் 8ல் கூடிய காங்கிரஸ் பிரிட்டிஷ் வெளியேறு- "Quit India” தீர்மானத்தை நிறைவேற்றியது. காந்தியும் செய் அல்லது செத்துமடி என அழுத்தமான உரையை தந்தார். சற்று இளகலான விவாதத்திற்கு காந்தி ஏன் தயாராகவில்லை என்கிற கருத்து நேருவிடம் இருந்தது. ஆனால் எதற்கும் நேரமில்லாமல் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படுகின்றனர். புனே ஆகாகான் இல்லத்தில் காந்தி காவலில் வைக்கப்படுகிறார். நேரு அகமது நகரில் சிறை வைக்கப்படுகிறார்.
இரண்டாம் உலகபோர் முடிவடையக்கூடிய தருணத்தில் பிரிட்டனில் தேர்தல் நடந்து ஜூலை 26, 1945ல் அட்லி தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வருகிறது. இந்தியாவில் வைஸ்ராயாக அப்போதிருந்த வேவல் சிம்லா மாநாடு ஒன்றிற்கு அழைப்பு விடுக்கிறார். வைஸ்ராய் கவுன்சிலை விரிவுபடுத்துவது- இந்து மற்றும் முஸ்லீம்களுக்கு சம வாய்ப்புக்களை தருவது என அவர் முன்மொழிந்தார். முஸ்லீம்லீக் மட்டுமே முஸ்லீம் பிரதிநிதிகள் எவர் என்பதை முடிவு செய்யும் என்பதில் ஜின்னா பிடிவாதமாக இருந்தார். இதனால் சிம்லா அமர்வில் தீர்வு எட்டப்படமுடியாமல் போனது.
வைஸ்ராய் முதலில் மாநில, மத்திய சட்டமன்றத்தேர்தல் என வற்புறுத்தினார். வாக்குரிமையில் உடனடியாக மாற்றம் சாத்தியமில்லை என தெளிவுபடுத்தினார். செப்டம்பர் 19 1945ல் அரசியல் அமைப்பு சட்ட அவை ஒன்றை அமைக்க தேர்தல்- அதன் மூலம் இந்திய மக்களின் விருப்பத்தை அரசாங்கம் உணரமுடியும் என வேவல் அறிவித்தார். முஸ்லீம் லீக் தேர்தல் பாகிஸ்தான் கோரிக்கைக்கான வாக்கெடுப்பே என அறிவித்தது. முஸ்லீம் லீக் தனது வலுவான பகுதிகளில் முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் செல்வாக்கை நிரூபித்தது. காங்கிரஸ் கணிசமான வெற்றியைப்பெற்று செல்வாக்கை நிரூபித்தது. அஸ்ஸாம் மற்றும் வடமேற்கு எல்லைபுற மாகாணத்திலும் காங்கிரஸ் செல்வாக்கை காட்டியது. ஜின்னா உரிமைபாராட்டியதை நிருபிக்க முடியாமல் போனது.

நேரு வயதுவந்தோர் வாக்குரிமை அடிப்படையில் அரசியல் நிர்ணய சபை என தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால் அன்றிருந்த நிலையில் இந்திய மக்களில் 12 சத பகுதியினருக்குக்கூட வாக்குரிமை இல்லை. 25 கோடி மக்களில் 3 கோடிபேர் வாக்குரிமை பெற்றிருந்தனர்.
பிரிட்டிஷ் அரசாங்கம் காபினட் தூதுக்குழு ஒன்றை பிப்ரவரி 1946ல் அறிவித்தது. இதில் பெதிக் லாரன்ஸ், கிரிப்ஸ், அலெக்சாண்டர் ஆகியோர் இருந்தனர். இந்தியாவிற்கு அதிகார மாற்றம் எப்படி என்பதற்கான ஆலோசனைகளை தூதுக்குழு தெரிவித்தது. மே 16, 1946 அன்று வைஸ்ராயும் தூதுக்குழுவும் தங்களது திட்டத்தை வெளியிட்டனர். ஒன்பது பக்கங்களில் 24 அம்சங்களை கொண்ட திட்டமாக வந்தது. அதன் முக்கிய நோக்கங்கள் என கீழ்கண்டவற்றை சொல்லலாம்

அ. இந்திய தலைவர்கள் ஒப்புதலுடன் இந்தியாவிற்கான அரசியல் அமைப்பு சட்டம் வரைதல்
ஆ. அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்க  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவை
இ. இந்திய அரசியல் கட்சிகளின் உதவியுடன் வைஸ்ராய் கவுன்சில்
ஈ. provinces, provincial groupings and the centre என்கிற மூன்று அடுக்குமுறை
அரசாங்கதரப்பில் சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பை தரவேண்டும்- அதேநேரத்தில் இரத்து அதிகாரம் இருக்கமுடியாது என்கிற கருத்தும் சொல்லப்பட்டது.

"We are mindful of the rights of the minorities and the minorities should be able to live free from fear. On the other hand, we can not allow a minority to place their veto on the advance of the majority."


 காங்கிரஸ் செயற்குழு ஜூன் 25, 1946ல் கூடி காபினட் தூதுக்குழுவை ஏற்பது என்ற முடிவிற்கு வந்தது.  முஸ்லீல் லீக் ஜூலை 27ல் கூடி காபினட் தூதுக்குழு முடிவுகளிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. ஆகஸ்ட் 16 அன்று நேரடி நடவடிக்கை தினம் என்கிற அறிவிப்பையும் செய்தது. வகுப்புக்கலவரம் கல்கத்தாவில் வெடித்தது. பின்னர் நவகாளி, பீகாரில் வெடித்து பரவியது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். காந்தி நவகாளி யாத்திரை மேற்கொண்டார். அப்பகுதியில் வகுப்பு நல்லிணக்கத்திற்காக அவர் மேற்கொண்ட அன்றாட நடவடிக்கைகள் பற்றிய பதிவுகள் ஏராளம் வந்துள்ளன.


 வைஸ்ராய் ஜூலை 31, 1946ல் காங்கிரசை இடைக்கால அரசாங்கம் அமைக்க அழைப்பது நல்லது. மோசமான சக்திகளை ஒடுக்கவும், கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரசின் இடது சக்திகளை சரிப்படுத்தவும் இந்நடவடிக்கை அவசியமாகிறது என பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதினார்.

"If Congress will take the responsibility, they will realize that firm control of unruly elements is necessary and they may put down the Communists and try to curb their own Left Wing. Also I should hope to keep them so busy with
administration that they would have much less time for politics."

ஆகஸ்ட் 12, 1946 அன்று இடைக்கால அரசாங்கம் அமைக்க அழைப்பும் கொடுக்கப்பட்டது. ஜின்னாவை கலந்து பேசி அமைக்கலாம் என்கிற ஆலோசனையும் தரப்பட்டது. நேரு ஜின்னாவை ஏற்கவைக்க முயற்சித்தார். முயற்சியில் அவரால் வெற்றிபெறமுடியவில்லை. அமைச்சரவையில் 6 காங்கிரஸ், 5 முஸ்லீம்கள், சீக்கியர், பார்சி, கிறிஸ்துவர் தலா ஒன்று என்கிற அடிப்படை பேசப்பட்டது.

அரசாங்கம் கீழ்கண்ட அறிவிப்பை ஆகஸ்ட் 24 1946ல் வெளியிட்டது.
மாட்சிமைதாங்கிய மன்னர் கவர்னர் ஜெனரலில் கவுன்சில் உறுப்பினர்களின் ராஜினாமை ஏற்கிறது. பண்டிட் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திரபிரசாத், ஆசப் அலி, ராஜகோபாலாச்சாரி, சரத் சந்திர போஸ், டாக்டர் ஜான் மதாய், சர்தார் பல்தேவ் சிங், சபாத் அகமது கான், ஜெகஜீவன்ராம், சையத் அலி ஜாகீர், சி எ ச் பாபாஆகியோரைக்கொண்ட இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கிறது. இவர்கள் செப்டம்பர் 2, 1946ல் பதவி ஏற்பர்.

படேலுக்கு கட்சியில் பெரும் செல்வாக்கு இருந்தது. பிரதமர் ஆகமுடியும் என்கிற வாய்ப்பும் இருந்ததாகவே கருதப்பட்டது. பிரிட்டிஷாருடன் பேச்சுவார்த்தை நடத்த கேம்பிரிட்ஜ் நேருவே சரியாக இருப்பார்- அவர் தனது கொள்கைகளை அமுல்படுத்தக்கூடும் என்கிற நம்பிக்கையை காந்தி வெளிப்படுத்தினார். காந்தியின் தலையீட்டால் நேரு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று அதன் வகையில் பிரதமராக பதவியேற்கவும் வழிவகையானது.

அரசியல் அமைப்பு சட்ட நிர்ணய சபைக்கு பல்வேறு கருத்தோட்டம் கொண்டவர்களும் செல்லவேண்டும். ஒத்துழைப்புடன் ஒருங்கிணந்து செயல்பட வாரீர் என நேரு அழைப்புவிடுத்தார். வேறுபடுபவர்களும் வாருங்கள்- ஒத்துழைப்புடன் செயல்படவோம். அரசியல் சட்ட அசெம்பிளியில் சம மரியாதையுடன் விவாதிக்கலாம் என அழைப்பு விடப்பட்டது.

 முஸ்லீம் லீகின் பிடிவாதத்தை தளர்த்தி அமைச்சரவையில் இடம்பெறச் செய்தார் வைஸ்ராய். லீகின் சார்பில் லியாகத் அலி கான், அப்துல் ரப் நிஷ்தார், இப்ரகிம் இஸ்மாயில் சுந்திரிகர் மற்றும் எஸ்சி எஸ் டிகளின் பிரதிநிதி என ஜோகேந்திர நாத் மண்டல் ஆகியோர் இடம் பெற்றனர். பங்கேற்ற அமைச்சர்கள் அனைத்து விஷயங்களிலும் நேருவிற்கு எதிராகவே பேசிவந்தனர். ஜின்னாவை பொறுத்தவரை நேருவின் தலைமையிலான அரசாங்கம் இந்து அரசாங்கமே என சொல்லிவந்தார். பொறுமையிழந்த காங்கிரஸ் தலைமை லீக் அமைச்சர்கள் பதவி விலக வற்புறுத்தியது.
பிரதமர் அட்லி இந்தியத்தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். லண்டனில் டிசம்பர் 2 1946ல் பேச்சுவார்த்தை துவங்கியது. முன்னேற்றம் ஏதும் வரவில்லை. லீக் தனி பாகிஸ்தான்  கோரிக்கையை விட்டுத்தர முடியாது என்பதில் உறுதியாக இருந்தது. அரசியல் நிர்ணய அவையின் முதல் அமர்வு டிசம்பர் 9 1946 என முடிவெடுக்கப்பட்டது. லீக் பங்கேற்க இயலாது என நிலை எடுத்தது.
அரசியல் நிர்ணய சபையில் நோக்கத்தீர்மானத்தை டிசம்பர் 13, 1946ல் நேரு முன்மொழிந்தார். அதன் சாரம்சம் பொதுவாக ஏற்கப்பட்டு அரசியல் அமைப்பு சட்டம் உருப்பெற்றது. நேரு பல முக்கிய கமிட்டிகளில் செயல்பட்டுவந்தார். எந்த ஒரு குழுவிற்காகவும் இல்லாமல் அனைவருக்காகவும் இங்கு நாம் விவாதித்து முடிவெடுக்க இருக்கிறோம் என்கிற நம்பிக்கையை அவர் உருவாக்க விழைந்தார். இந்தியாவை முழுமையாக 40 கோடி ஜனங்களின் நன்மைக்கான செயல்பாட்டை உருவாக்குவோம் என்றும் சொல்லப்பட்டது.


 முஸ்லீம் லீக்  மற்றும் காங்கிரசால் ஏற்புடைய கருத்தொற்றுமையை உருவாக்க முடியாத சூழல் நீடித்தது.  அட்லி அரசாங்கம் பிப்ரவரி 20 1947ல் அறிவிப்பு ஒன்றை செய்தது. மாட்சிமை மன்னர் அரசாங்கம் ஜூம் 1948க்குள் அதிகார மாற்றம் செய்ய சித்தமாகவுள்ளது என்பது அறிவிப்பாக இருந்தது.
 " His Majesty's Government wish to make it clear that it is their definite intention to take necessary steps to effect the transference of power to responsible Indian hands by a date not later than June 1948”
இந்தியத்தலைவர்களால் ஒன்றுபட்டு ஒரே அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் ஆட்சி அதிகாரத்தை எப்படி எவரிடம் முடிவெடுப்பது என்பதை பிரிட்டனே இறுதி செய்யும் என்கிற அதிரடி அறிவிப்பும் கூடவே வந்தது.
His Majesty's Government will have to consider to whom the powers of the Central Government in British India should be handed over, on the due date, whether as a whole to some form of Central Government for British India, or in some areas to the existing Provincial Governments, or in such other way as may seem most reasonable and in the best interests of the Indian people."
அதிகார மாற்றத்தை விரைவில் முடித்திடும் வகையில் வேவல் திரும்ப அழைக்கப்பட்டு வைஸ்ராயாக மெளண்ட்பேட்டன் நியமிக்கப்பட்டார். அவர் மார்ச் 1947ல் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஏப்ரல் 1947ல் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்ற நேரு லீகிற்கு மீண்டும் அழைப்பு ஒன்றை தந்தார். லீக் ஒத்துழைக்காமல் போனாலும் அரசியல் அமைப்பு நிர்ணயசபை நடவடிக்கைகள் தொடரும் என அவர் அறிவித்தது மேலும் சிக்கலை அதிகமாக்கியது. பிரிவினைத்தவிர வேறு வழியில்லை என்ற  சிந்தனை காங்கிரஸ் தலைமையிடத்தும் வந்தது. காந்தி பிரிவினை வேண்டாம் என தொடர்ந்து சொல்லிவந்தார். ஜின்னாவை பிரதமராக்கி அவர் ஒன்றுபட்ட இந்தியாவிற்கு அமைச்சரவை  அமைக்கட்டும் எனக்கூட மெளண்ட்பாட்டனிடம் விவாதித்தார்.
அனைத்துக் கட்சியினருடனும் விவாதித்த மெளண்ட்பேட்டன் தனது ஜூன் 3 முன்மொழிவுகளை வைக்கிறார். முஸ்லீம்கள் அதிகமான பகுதி பாகிஸ்தான் என பிரிக்கப்படும். நாடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு பகுதிகளாக பிரிக்கப்படும். உடனடியாக டொமீனியன் அந்தஸ்து. இரு நாடுகளும் தங்களுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை நிறைவேற்றி இறையாண்மை நாடுகளாகலாம். சமஸ்தானங்கள் எங்கு சேர விழைகிறார்களோ அங்கு சேரலாம் என்பது ஜூன் 3 திட்டத்தின் சாரம்.
சுதந்திரத்திற்கான விலை பிரிவினை என்றால் ஏற்பதைத்தவிர வழியில்லை என காங்கிரஸ் ஜூன் 3 திட்டத்தை ஏற்றது. மனதில் வேதனை இருந்தாலும் இதுதான் வழி என மக்களிடம் நேரு உரையாற்றினார். எவரையும் கட்டாயப்படுத்திவைப்பது சாத்தியமாக இருக்காது என அவர் கருதினார். சுதந்திர போராட்டத்தின் உழைப்பு என்பது விரும்பாத பகுதி ஒன்றை வலுக்கட்டாயமாக வைத்திருப்பதாக இருக்கவேண்டியதில்லை எனவும் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கருதினர். பிரிவினையை ஏற்ற காங்கிரஸ் மீது விமர்சனமே வரவில்லை என சொல்லமுடியாது. படேல் கூட நேரு யாரையாவது சார்ந்துதான் செயல்படும் பழக்கம் உடையவர்- இம்முறை அவர் மெளண்ட்பாட்டன் சார்ந்து செயல்படுகிறார் என்கிற கருத்தை வைத்திருந்தார்.
பஞ்சாப் பற்றி எரிகிறது. தினம் கொலைகளின் சத்தம் கேட்கிறது. இந்நிலையில் பிரிவினை வழி ஒன்றை தருவதால் அதை தவிர்க்கமுடியாமல் ஏற்கவேண்டியதானது என்று நேரு தனது விளக்கத்தை தந்தார்.  காங்கிரசில் கோவிந்த வல்லப் பந்த் தீர்மானமும் இதைத்தவிர வேறுவழியில்லை என்பதை சுட்டிக்காட்டியது. ஜூன் 3 ஏற்பதா அல்லது தற்கொலை செய்துகொள்வதா என பந்த் கேட்டார்.
இந்திய விடுதலை சட்டம் 1947 அறிவிக்கப்பட்டு இரு நாடுகள் இந்தியா பாகிஸ்தான் உருவாயின. சிந்தி, மேற்கு பஞ்சாப், வடமேற்கு மாநிலம், கிழக்கு வங்கம், பலுசிஸ்தான் பகுதிகள் பாகிஸ்தானாக  உருமாறின. ஆகஸ்ட் 7ல் ஜின்னா கராச்சி சென்றார். ஆகஸ்ட் 15ல் அவர் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றார். லியாகத் அலிகான் பிரதமரானார்.
 இந்தியாவில் மெளண்ட்பாட்டன் கவர்னல் ஜெனரலாக இருக்க வேண்டப்பட்டு அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். நேரு பிரதமராக பொறுப்பேற்றார். ஆகஸ்ட் 14 இரவில் அனைவரும் கூடி நேருவின் புகழ்வாய்ந்த Tryst with Destiny  உரையை கேட்டனர். உலகம் உறங்கும்போது இந்தியா உயிர்ப்புடன் விடுதலைப் பெறுகிறது என்கிற அவரது உரை அனைவரையும் ஈர்ப்பதாக அமைந்தது. காந்தியர்கள் கிராம பஞ்சாயத்துகள் முன்னேற்றம்- அதிகார பரவலாக்கம் பற்றி  ஏதுமில்லை என வருத்தப்பட்டனர். காந்தி ஆகஸ்ட் 15 அன்று கல்கத்தாவில் வகுப்பு கலவர பகுதிகளில் அமைதி ஏற்படுத்தி ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார்.
நமது மகத்தான மனிதரின் கனவான எந்த ஒரு மனிதரின் கண்களிலிருந்து வழியும் சொட்டு நீரையும் துடைப்பது எனும் மகத்தான கடமைக்கு- அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் அக்கடமைக்கு நம்மை வருத்திக்கொள்வோம் என காந்தியை நினைவுப்படுத்தி நேரு பேசினார்.
அடிப்படை உரிமைகள், சொத்துரிமை,  மத சுதந்திரம்- செக்யூலரிசம், நீதிமன்றங்கள், நாடாளுமன்றம்,  அமைச்சரவை உறவுகள், தேசியக்கொடி என முக்கிய  அனைத்து விவாதங்களிலும் அரசியல் அமைப்பு சட்ட நிர்ணய அவையில் நேரு தனது பங்களிப்பை செய்தார். ஜனவரி 24 1950 அன்று ராஜேந்திர பிரசாத் தேசியகீதம் குறித்த முடிவை வெளியிட்டார்
அரசியல் அமைப்பு சட்டம் நவம்பர் 26 1949ல் இறுதி செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள், 11மாதங்கள், 17 நாட்கள் அதன் பணி நடந்து முடிந்தது. 1949 நவம்பரில் இறுதி செய்யப்பட்டு ஏற்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் கையெழுத்து பிரதியாக ஆங்கிலம் மற்றும் இந்தியில்  ஜனவரி 24 1950ல் வைக்கப்பட்டு அவை உறுப்பினர் அனைவரின் கையொப்பம் பெறப்பட்டது. ஆங்கிலத்தில் பிரிண்ட் ஆன நகல் ஒன்றும் கொணரப்பட்டிருந்தது. சுதந்திரம் அடைந்த இந்தியா ஜனவரி 26, 1950 முதல் தனது குடியரசு பயணத்தை மேற்கொண்டது.

நேருவின் சிறை வாழ்க்கை

விடுதலை போராட்டக்காலத்தில் நேருவின் சிறைவாழ்க்கை பற்றிய  அனுபவங்கள் சிறு குறிப்பளவிலாவது இளம் தலைமுறையினருக்கு செல்லவேண்டும் என்ற நோக்கில் இங்கு தரப்படுகிறது.
நேரு ஒன்பதுமுறை சிறை சென்றவர். அவரின் சிறைவாசம் 9 ஆண்டுகள்  (3259 நாட்கள்) என நேரு மெமோரியல் மியூசியம் தகவல் தருகிறது.
நேருவின் முதல் அனுபவம் லக்னோ மாவட்ட சிறையில் துவங்கியது. 88 நாட்கள் டிசம்பர் 6, 1921 முதல் மார்ச் 3 1922 அங்கு சிறைவாழ்க்கை அமைந்தது.
இளவரசர் வேல்ஸ் நவம்பர் 1921 வருகை புறக்கணிப்பு என்பதை வைஸ்ராய் லார்டு ரீடிங்  கடுமையாக பார்த்தார். நடவடிக்கைகளில் இறங்கினார். கிலாபத்- காங்கிரஸ் தொண்டர்கள் கைதாகினர். டிசம்பர் 6 1921 ஆனந்தபவனை வட்டமடித்த போலீசார் நேரு, மோதிலாலை கைது செய்தனர். ’மகாத்மா உத்தரவுஎன்கிற வெளியீட்டை விநியோகித்தார் நேரு என்பது குற்றச்சாட்டு. அவர் அன்று இரவே லக்னோ அழைத்து செல்லப்பட்டார். வழக்கு டிசம்பர் 15ல் ஆரம்பித்து டிசம்பர் 17ல் 6 மாத சிறை என தீர்ப்பிட்டனர். அப்போது ரூ 100 அபராதம் என்பது அதிகத்தொகைதான். அபராதம் கட்ட மறுத்துவிட்டார் நேரு.
அலகாபாத் மக்களுக்கு  கீழ்கண்ட செய்தியை நேரு விடுத்தார். சிறைக்கு மிக்க மகிழ்ச்சியுடனேயே செல்கிறேன். உறுதிப்பாட்டுடன் செல்கிறேன். போராட்டக்காலத்தில் அமைதியையும் அகிம்சையையும் கடைபிடியுங்கள். அலகாபாதின் கெளரவம் உங்கள் கரங்களில் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்- போராட்ட முனையில் நின்று வரலாற்றின் பக்கங்களில் நமது நகரின் பெயரை பொறியுங்கள் என்பது அவரால் விடுக்கப்பட்ட செய்தி.
நேரு முன்கூட்டியே மார்ச் 3 1922ல் விடுதலை செய்யப்பட்டார்- 87 நாட்கள்.  ஏன் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டேன் எனத் தெரியவில்லை. எனது தந்தை ஆஸ்த்மா தொல்லையுடன் சிறையில் இருக்கிறார். நூற்றுக்கணக்கான என் தோழர்கள் சிறையில் அவதிப்படுகின்றனர். தொடர்ந்து போராடுவொம் என்று மட்டுமே சொல்லத்தோன்றுகிறது என நேருவின் பதிவு செல்கிறது.
விடுதலைக்குப் பின்னர் நேரு அந்நிய துணி பகிஷ்கரிப்பு இயக்கத்தில் கவனம் செலுத்தினார். இதற்காக அலகபாத் மக்களை திரட்டினார். நேரு ரகுநாத் பிரசாத் மற்றும் பிஷம்பர் நாத் ஆகியோருடன் இணைந்து சிறு பிரசுரம் ஒன்றைக்கொணர்ந்தார். இதை போலீசார் மே 2 1922ல் பறிமுதல் செய்தனர்.. லக்னோ மாவட்ட சிறையிலிருந்த தந்தை மோதிலாலை ஜவஹர்லால்  மே 11 1922ல் பார்க்கச் செல்கிறார். அங்கேயே அவர் பி சி செக்ஷன்கள் படி கைது செய்யப்படுகிறார். துணி வியாபாரிகளை மிரட்டியதாக வழக்கு போடப்பட்டது. மாவட்ட நீதிபதியிடம் தன் தரப்பை நேரு முன்வைத்தார்.
அமைதிவழியில் போராடியது குற்றம் எனில் நான் குற்றவாளிதான். எங்களை இப்படி குற்றவாளி என முத்திரைகுத்தி ஒடுக்குவதன் மூலம் எவராவது வெற்றிபெறமுடியுமா? எங்களின் சக்திக்கு மக்கள் பின்புலமே காரணம் என்பதை உலகமே அறியும். நாங்கள் கடந்தகால ஆயுதங்களை  பயன்படுத்தவில்லையே- எங்கள் தலைவரின் அன்பு, சுயத்தியாகம் என்கிற கருவிகளை அல்லவா பயன்படுத்துகிறோம். சுயவதைகளின் வழியே எதிரிக்கும் மனமாற்றம் ஏற்படுத்த முயற்சிக்கிறோம்.
மே 19 அன்று தீர்ப்பு சொல்லப்படுகிறது. அவருக்கு 18 மாத கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுகிறது. இம்முறை அவர் 260 நாட்கள் சிறையிலிருக்கிறார். ஜனவரி 31 1923ல் விடுதலை செய்யப்படுகிறார்.
பஞ்சாபில் நபா பகுதியில் சமஸ்தான மன்னரை நீக்கி பிரிட்டிஷ் நிர்வாகம் பொறுப்பேற்றது பிரச்சனையானது. நேரு தனது காங்கிரஸ் தோழர்கள் சந்தானம், ஜித்வானி ஆகியோருடன் செப்டம்பர் 19 1923 நபா செல்கிறார். செப்டம்பர் 20 அன்று பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். உடனடியாக வெளியேறவேண்டும் என போலீஸ் அதிகாரி சொன்னதை அவர்களால் ஏற்கமுடியவில்லை. நேருவின் வலது கரமும் சந்தானத்தின் இடதுகரமும் சேர்த்து பிணைக்கப்பட்டு விலங்கிட்டு அழைத்து செல்லப்படுகின்றனர். தொடர்ந்து 20 மணிநேரம் இருவரும் விலங்கிடப்படிருந்தனர். விசாரணையில் நேரு முன்வைத்த வாதம்:
சீக்கியர்கள் முன்வைத்து நின்ற காரணத்திற்காக கைதானது குறித்து மகிழ்ச்சியே. அகாலிகளின் வீரம் வியக்கவைத்துள்ளது. அவர்களின் உயர் மரபில் நானும் நின்றேன் என்கிற வாய்ப்பு கிட்டியுள்ளது.அவர்கள் சேவையில் நின்றேன் என்பது மதிப்புக்குரியதே
நபாவிற்கு வெளியே இருந்து வக்கீல் அழைத்துவர அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வருத்தம் தெரிவித்து வெளியேற சம்மதித்தால் வழக்கை வாபஸ் பெறுவதாக சூப்பிரடெண்டட் சொன்னார். மூவரும் வருத்தம் தெரிவிக்க இயலாது என மறுத்துவிட்டனர்.
"There was nothing to express regret about, so far as we were concerned; it was for the administrator to apologies to us." என பதில் தந்தனர்.
அவர்களுக்கு 24 மாத தண்டனை தரப்பட்டாலும் 12 நாட்களில் அக்டோபர் 4 1923ல் விடுவிக்கப்பட்டனர். இனி வருவதாக இருந்தால் அனுமதி பெற்றே வரவேண்டும்  என்கிற நிபந்தனையுடன் வழக்கு முடிந்தது.
கல்கத்தா காங்கிரஸ் அமர்வு (டிசம்பர் 1928)  ஓராண்டில் விடுதலை- இல்லையெனில் அகிம்சைவழி ஒத்துழையாமை என தீர்மானித்தது. லாகூர் டிசம்பர் 1929 அமர்வு சட்டமன்றங்களை- பிரிட்டிஷ் கமிட்டிகளை புறக்கணிப்போம் என்றது. போராட்ட திட்டம் பற்றி காந்தி அறிவிக்கலாம் என அனுமதித்தது. பிப்ரவரி 1930ல் வரிகொடா இயக்கம் துவங்கியது. மார்ச் 12 1930ல் புகழ்வாய்ந்த தண்டியாத்திரையை காந்தி துவங்கினார்.. வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேராதரவு தந்தனர்.
நேரு இந்தி மாநாடு ஒன்றிற்காக ராய்ப்பூர் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு நைனி  அலகாபாத் சிறைக்கு அனுப்பப்படுகிறார். இரண்டுமணிநேரத்தில் உடனடி விசாரணை நடந்தது. 1882 சால்ட் சட்டப்படி அவர்  குற்றவாளி ஆக்கப்பட்டார். ஆறுமாதம் தண்டனை தரப்பட்டது. காந்திக்கு நேரு செய்தி அனுப்பினார். "I have stolen a march over you". இம்முறை அவர் 175 நாட்கள் சிறை வாழ்க்கையை முடித்து அக்டோபர் 11 1930ல் வெளிவருகிறார்.
சிறையிலிருந்து வந்த மறுநாளே அலகாபாதில் வரிகொடா இயக்க கூட்டம் ஒன்றில் நேரு உரையாற்றுகிறார். அகிம்சைவழியில் நம்பிகை இருப்பதால்தான் இப்போராட்டமுறையை நாம் மேற்கொள்கிறோம் என்பதை அழுத்தமாக அவரது உரையில் பதிவு செய்கிறார். விவசாயிகளிடம் வரிகொடா இயக்கத்தை துண்டிவிடுகிறார் என மீண்டும் அவர் அக்டோபர் 19 1930ல் கைது செய்யப்படுகிறார்.  அக்டோபர் 24 1930ல் விசாரணை வருகிறது. நேரு தன் உருக்கமான வாதத்தை முன்வைத்தார்
அடிமைத்தனத்திற்கும் சுதந்திரத்திற்கும் இடையே எந்தவித சமரசமும் இருக்கமுடியாது. சுதந்திரத்தின் விலை எங்கள் நாட்டவரின் இரத்தம்- வதை என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். அதை முழுமையாக நாங்கள் தருவோம்
இம்முறை அவருக்கு இரு சட்டங்களின் படி ( Salt act, Ordinance 1930) இரண்டு ஆண்டுகள்  கடுங்காவல் தண்டனையும் ரூ 600 அபராதமும் விதிக்கப்படுகிறது. நைனி சிறையில் அவர் 97 நாட்கள் இருந்தார். ஜனவரி 26 1931ல் விடுவிக்கப்படுகிறார். அங்கிருந்து இந்திராவிற்கு எழுதிய கடிதங்கள்  பின்னர் 1934ல்  Glimpses of world History  என வெளியானது.
அலகாபாதில் குத்தகைதாரர்கள் கூட்டம் ஒன்றில் அக்டோபர் 23 1931ல் நேரு உரை ஆற்றுகிறார். பி அரசாங்கம் அவசர சட்டம் ஒன்றைப் போடுகிறது. நேருவிற்கு டிசம்பர் 26 1931ல் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்காக பம்பாய் கிளம்புகிறார். அலகாபாத் முனிசிபல் எல்லை தாண்டக்கூடாது என அவர் கைது செய்யப்படுகிறார். இம்முறை இரு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ 500 அபராதம் விதிக்கப்பட்டது. அவரது மோட்டார் கார் ஏலம் விடப்பட்டு  அபராதத்தொகை எடுத்துக்கொள்ளப்படுகிறது.
முதலில் அவர் நைனி சிறையில் பிப்ரவரி 5 1932 வரை வைக்கப்படுகிறார். பின்னர் பரேலி, டேராடூன் சிறைக்கு ஆகஸ்ட் 23, 1933 வரை மாற்றப்படுகிறார். மறுபடியும் நைனி சிறைக்குள் வைக்கப்பட்ட நேரு  610 நாட்கள் சிறைத்தண்டனை முடிந்து ஆகஸ்ட் 30 1933ல் வெளியே விடப்படுகிறார்.
 ஜனவரி 1934ல் அவர் கல்கத்தாவில் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார். பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டித்தும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளை சாடியும் அவரது உரை அமைந்தது. அரசாங்கத்தை விமர்சித்து பேசியதால் ராஜத்துரோக வழக்கு போடப்பட்டது. அவர் பிப்ரவரி 12, 1934ல் கைது செய்யப்படுகிறார்.  பிப்ரவரி 15 விசாரணை செய்யப்படுகிறது. விசாரணையின்போது விடுதலைக்காகப் போராடுவது ராஜத்துரோகம் எனில் அதை முன்பும் செய்துள்ளேன் - இனியும் செய்வேன். அந்நிய ஆட்சி சுவடுகள் இருக்கும்வரை போராடுவேன் என தன் தரப்பை முன்வைத்தார் .
எம்மக்களை சுரண்டுகிற, எங்கள் வளங்களை எடுத்துச் செல்கிற ஆட்சியை முற்றிலுமாக துடைத்தெறிய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்பதை அழுத்தமாக நேரு தன் வாதத்தில் மிகத்தைரியமாக முன்வைத்தார்.
அவர் அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்படுகிறார். இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை. அங்கிருந்து டேராடூன் சிறைக்கு மாற்றப்படுகிறார். கமலா உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பரோலில் ஆகஸ்ட் 12-23 1934ல் விடப்படுகிறார்.  நைனி சிறைக்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கிருந்து அல்மோரா சிறையில் அடைக்கப்படுகிறார். இம்முறை அவர் 565 நாட்கள் தண்டனையுடன்  செப்டம்பர் 3, 1935ல் விடுவிக்கப்படுகிறார்.
கமலா உடல்நில கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் ஜெர்மனி செல்வதற்கு ஏதுவாக நேரு முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார். கமலா அவர்கள் பிப்ரவரி 28, 1936ல் மறைகிறார்.
இரண்டாம் உலகப்போரை ஒட்டி இந்தியா சுதந்திரமாக போர் குறித்த  தன்நிலையை முடிவெடுக்கவேண்டும் என்பதை சாரப்படுத்தும் தீர்மானத்தை காங்கிரஸ் வார்தாவில் செப்டம்பர்- அக்டோபர் 1939ல் நிறைவேற்றியது. நேரு, படேல், ஆசாத் யுத்தக்கமிட்டி ஒன்றும் நிலைமைகளை கண்காணித்து முடிவெடுக்க அமைக்கப்பட்டது.
 வைஸ்ராய் லின்லித்கோ உடன் பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் தனிநபர் சத்தியாகிரகம் துவங்கப்படுகிறது. வினோபாபாவே முதலில் அக்டோபர் 21 1940ல் கைதாகிறார். நேரு தான் நவம்பர் 7 1940ல் - சோவியத் புரட்சி தினத்தன்று- சத்தியாகிரகம் என அறிவிக்கிறார். ஆனால் அக்டோபர் 31, 1940ல் முன்கூட்டியே அவர் கைது செய்யப்படுகிறார்.
 இம்முறை அவர் கோரக்பூர் மாவட்ட கூட்டங்களில் அக்டோபர் 6,7 நாட்களில் பேசிய உரைகளுக்காக கைது செய்யப்பட்டதாக அறிவிக்கின்றனர். கோரக்பூர் சிறைச்சாலையில் அவர்  நவம்பர் 3, 1940ல் விசாரிக்கப்படுகிறார். தனது தரப்பாக நேரு முன்வைத்த வாதம்:
இந்தியாவில் கடந்த ஓராண்டாக யுத்த அரசாங்கம் ந்டந்துவருகிரது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட அரசாங்கம் இல்லை. அவர்களின் விருப்பங்கள் அலட்சியப்படுத்தப்டுகின்றன. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னர் இருவித தேர்வுகள் உள்ளன. ஏகாதிபத்திய அரசாக தொடர்வது- அல்லது சுதந்திர வேட்கைக்கு மதிப்பளித்து அம்மக்களின் தலைவனாக உலக அரங்கில் நிற்பது- உலகின் புரட்சிகர மாற்றங்களுக்கு துணையாக நிற்பது என்பதை நேரு சுட்டிக்காட்டினார்.
இம்முறை கோரக்பூர், டேராடூன், லக்னோ என அவர் 397 நாட்களை சிறையில் வாழவேண்டியிருந்தது. டிசம்பர் 3 1941ல் அவர் வெளியே வந்தார். இது அவரது எட்டாவது சிறைவாசமாக  அமைந்தது.
1942 ஆகஸ்டில் கூடிய காங்கிரஸ் புகழ்வாய்ந்த பிரிட்டிஷ் வெளியேறு தீர்மானத்தை நிறைவேற்றினர்.  நேரு தனது விளக்கமாக தீர்மானம் எவரையும் பயமுறுத்த அல்ல - நமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே என்றார். சுதந்திர இந்தியாவாக பிரிட்டனுடன் ஒத்துழைப்பதற்கான எண்ணமது என விளக்கம் தந்தார்.
காங்கிரஸ் தலைவர்கள் பலர் அறிவிக்கப்படாத இடங்களில் சிறைவைக்கப்பட்டனர். நேரு  ஆகஸ்ட் 9, 1942ல் அகமதுநகர்  சிறைக்கு அனுப்பப்பட்டார். அகமதுநகர், பரேலி, அல்மோரா என அவர் மாற்றப்பட்டு 1030 நாட்களை கடந்து ஜூன் 15, 1945ல் விடுதலையாகிறார். அகமதுநகர் சிறைக்காலத்தில் The Discovery of India  எழுதினார். அவ்வாக்கம் 1946ல் வெளியிடப்பட்டது.
நேருவின் 9 ஆண்டுகள் ஒன்பது முறை சிறைவாசம் அவருக்கு மட்டுமல்லாது வரலாற்று செய்திகளையும், அவரது அழியா படைப்புக்களையும் சேர்த்தே கொடுத்துள்ளது .




Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு