மதசார்பின்மை காந்தியின் புரிதல் -ஆர்.பட்டாபிராமன் காந்தியடிகளின் மதம் குறித்த பார்வை பன்முகத்தன்மையிலானது. சர்வமதங்களின் அடிப்படை உண்மை என்பதில் அவருக்கு நம்பிக்கையிருந்தது. எந்தவொருமதத்தின் போதனைகளையும் அதனை நம்புவோர் படித்தறியும் வகையில் நாம் புரிந்து கொள்ளத் துவங்கினால் சமயங்களின் ஊடே காணப்படும் இணக்கமொழியை உய்த்துணரமுடியும் என அவர் கருதினார். உண்மையைத் தேடுவதில் பொதுவிவகாரம், தனிவிவகாரம் என பிரித்து பார்க்க அவர் விரும்பியதில்லை. மதம் குறித்தும் அவருக்கு அப்படிப்பட்ட பார்வை இருந்தது. உண்மை தான் இறுதியானது. என்ன விலையானாலும் சரியானதை செய்யும் தைரியம் என்பதுதான் வழிகாட்டும் நெறி. எவ்வளவு பேசினாலும் நம்மை நாம் ஆள்வதற்கு அப்பேச்சுக்கள் மட்டுமே நம்மை தகுதிப்படுத்திவிடாது. செயல் மூலம் நாம் நடந்துகொள்வதில்தான் ஆள்வதற்கு பொருத்தமானவர்களாக ஆகமுடியும். இறையை நம்பி அவருக்கு மட்டும் பயந்து நடந்தால் நாம் மகாராஜாக்களுக்கு, நம்மை இரகசியமாய் மோப்பம் பிடிப்பவர்களுக்கு, வைஸ்ராய்களுக்கு அஞ்சவேண்டியதிருக்காது. இதுதான் தன்னைப் பொறுத்தவரை கோல்டன் ரூல் என்றார் காந்தி.