https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, January 13, 2018

Dinamani.com தினமணி இணைய தளத்தில் ஜனவரி12 வெளியான கட்டுரை

               போக்குவரத்து தொழிலாளர் போராட்டம்
       -ஆர்.பட்டாபிராமன்
ஊதிய மாற்ற பிரச்சினையில் அரசின்  செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த பெரும்பான்மை சக்தி வாய்ந்த தொழிற்சங்கங்கள் ஜனவரி 4 முதல் வேலைநிறுத்தத்தில் இறங்கின. பேச்சுவார்த்தையின் போது தாங்கள் எக்கோரிக்கைகளை எழுப்பினோம், அரசாங்கம் பதில்  முற்றிலும் நியாயமாக இல்லை என்பதை தெளிவுபடுத்தி ஜனவரி 4 அன்று   LPF CITU  AITUC HMS  உள்ளிட்ட சங்கங்கள் அறிக்கை கொடுத்தன. மீடியாக்களில் வேலைநிறுத்தம் பெரும் விவாதமாக மாறியது. வழக்கம்போல் ஆதரவும் எதிர்ப்புமான குரல்கள் எழுந்தன. தொழிலாளர்பாற் அரசின் அலட்சியம்- பாரபட்சம், பொதுமக்கள் இடையூறு குறித்த அரசின்கவலையின்மையை தொழிலாளர் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். அரசியல் காரணமான போராட்டம், பொதுசேவையை சீர்குலைக்கின்றனர் என்ற பதில் விமர்சனத்தை அரசாங்கம் வைத்தது. ஓய்வூதிய பலன்கள் நிலுவை பல ஆண்டுகளாக உள்ள பிரச்சினை என்பதையும் சொல்லி தப்பிக்க நினைத்தது.
போக்குவரத்து பகுதியில் தொழில் தகராறு சட்டம் 1947 12(3) அடிப்படையில் ஊதிய மாற்ற உடன்பாடு 1977 முதல் நடந்து வருகிறது. 10வது உடன்பாடு பிப்ரவரி 2008ல் கையெழுத்தாகி செப்டம்பர் 2007 முதல் அமுலுக்கு வந்தது. அப்போது அரசிற்கு ஆண்டுதோறும் கூடுதல் செலவு 205 கோடி என தெரிவிக்கப்பட்டது  11வது ஒப்பந்த காலத்தில் வழக்கு ஏற்பட்டு சென்னை உயர்நீதிமன்ற அறிவுரைப்படி  தொமுச வுடன் ஜனவரி 2011ல் உடன்பாடு ஏற்பட்டது. அதன் காலம் 3ஆண்டுகள் என்பதால் 12வது ஒப்பந்தம் 1-9-13 முதல் ஏற்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதுதொ மு உடன்பாட்டை எதிர்த்து அண்ணா பேரவை உச்சநீதிமன்றம் சென்றிருந்தது. அந்த வழக்கு இருந்ததால் 12வது ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு மற்றவர்களை அழைப்பது குறித்த பிரச்சினை உருவானது.
தொ மு டிசம்பர் 2014ல் பிற சங்கங்களை அழைப்பதில் ஆட்சேபனை இல்லை என்றதால் மாநில அரசாங்கம் ஜனவரி 2015ல் 12வது பேச்சுவர்த்தைக்குரிய நிர்வாகத்தரப்பை அறிவித்து பேச்சுவார்த்தை துவங்கியது. அந்த உடன்பாடு ஏப்ரல் 2015ல் ஏற்பட்டு பலன்கள் 1-9-13 முதல் தரப்பட்டன. அடிப்படை ஊதியத்தில் 5.5 சத உயர்வு ஏற்கப்பட்டு அதில் குறைந்த பட்ச உயர்வு ரூ 1350 லிருந்து அதிகபட்சம் அடிப்படையில் உயர்வு ரூ5941 என சொல்லப்பட்டது. அப்போது ஒரு லட்சத்து 15 ஆயிரம் தொழிலாளர் பலனைப் பெற்றனர். அரசு தரப்பில் இதற்காக ஆண்டிற்கு ரூ 295 கோடி அதிக செலவு என கணக்கு கொடுக்கப்பட்டது.
 தற்போது 13வது ஊதிய மாற்றக்காலத்தில் தொழிலாளர்தரப்பு பெருக்கு காரணி 3 மடங்கு, குறைந்தபட்ச ஊதியம் 19500, 7000 கோடி நிலுவையாக மாறியுள்ள ஓய்வுபெற்றவர் பணப்பலன் , தொழிலாளர்க்கு சேரவேண்டிய நிதியை உடன் வழங்குதல், இனி வருங்காலத்தில் பிடித்தங்களை உடனுக்குடன் பி ஏஃப் கிராஜுடி கணக்குகளில் வைத்து பராமரித்தல் போன்றவற்றை வலியுறுத்தினர். அரசாங்கம் 4 வருடம் ஒப்பந்த காலம் எனில்  காரணி 2.4 என்றது. தொழிற்சங்கங்கள் 2.87 , 2.57 என கீழ்  இறங்கி வந்தன. அரசு 2.44 க்கு மேல் முடியாது என்கிற நிலையை எடுத்ததால் வேலை நிறுத்தம் உருவானது. அரசு அறிவிப்பின் படி குறைந்தபட்சம் ரூ 2684  அதிகபட்ச உயர்வாக ரூ11361 கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
 நீதிமன்றம் தலையிட்டு ஓய்வூதிய பலன்கள் நிலுவையை அரசு தீர்த்திட அறிவுறுத்தியது. அதேபோல் வேலைநிறுத்தம் கைவிடப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தியது. அரசாலும் அறிவுரையை உடனே நிறைவேற்ற முடியவில்லை. தொழிற்சங்கங்களும் போராட்டத்தை விலக்கிக் கொள்ளவில்லை. இறுதியாக நீதிமன்றம்  ஜனவரி 11 அன்று செய்த பஞ்சாயத்தால் நிலைமை சீரடைய துவங்கியுள்ளது.
பிரச்சினைக்கு தீர்வு காண, மத்தியஸ்தரை நியமிக்க வேண்டும் என்கிற தொழிலாளர் தரப்பு கோரிக்கை ஏற்கப்பட்டு ஊதிய உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண, ஓய்வுபெற்ற நீதிபதி, பத்மநாபன், மத்தியஸ்தராக கோர்ட்டால் நியமிக்கப்பட்டுள்ளார். ஊதிய உயர்வு வேறுபாடான, 0.13 மடங்கு குறித்து, அவர் முடிவெடுக்க வேண்டும். ஊதிய உயர்வை, எப்போது அமல்படுத்த வேண்டும் என்பதையும், அவரே தீர்மானிப்பார் என நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் அடங்கிய, பெஞ்ச்  உத்தரவு கொடுத்துள்ளது..மத்தியஸ்தரை நியமித்து, அரசு உத்தரவு பிறப்பிக்கும் தேதியில் இருந்து, ஒரு மாதத்தில், அறிக்கை அளிக்க வேண்டும்என்ன வருகிறது- 2.57 ஏற்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதில் வெற்றி தோல்வி என்கிற விவாதத்தைவிட போக்குவரத்துதுறை எனும் தமிழக பொதுத்துறை அதன் நிதி  ஆரோக்கியம் வளமை குறித்த விவாதங்கள் கவனப்படுத்தப்ப்பட வேண்டியவைகளாக உள்ளன.
கடந்த மார்ச் 2017ன் கணக்கீட்டின்படி மாற்றுப்பேருந்துகள் உள்ளிட்டு 22533 பேருந்துகள்  தமிழக அரசு போக்குவரத்து துறையில் உள்ளன. நாட்டிலேயே பெரும் அரசு போக்குவரத்து துறையாக   தமிழகம் இருக்கிறது. தினக்கூலி பதிலி தொழிலாளர்களையும் சேர்த்தால் 1.43 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் பெரும் அரசு வேலைவாய்ப்பு நிறுவனம். ஊழியர்களில் மேலாளர் 596, ஓட்டுனர் 58220, நடத்துனர் 59196,டெக்னிகல் பிரிவில் 19692 , நிர்வாக பிரிவில் 5491 என அரசாங்கம் பட்டியல் இடுகிறது. இறந்த ஊழியர் வாரிசுக்கு வேலை என்பது அதிக அளவில் அங்கு நடைபெறுவதாக தெரியவில்லை.. 16-17ல் 467 பேர் பணிபெற்றதாக அரசாங்க குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் தின சம்பள தொழிலாளர் 38000 பேருக்கு நிரந்தரம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
  ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்தவுடன்  நவம்பர் 2011ல் ஏற்றப்பட்ட பேருந்து கட்டண உயர்விற்கு பின்னரும்  கேரளா, கர்நாடகா, ஆந்திரம் விட குறைவான கட்டணமும்  தமிழ்நாட்டில் இன்றுவரை இருக்கிறதுகிமீக்கு 42 பைசா முதல் ஏசி பேருந்து எனில் 90 பைசா, வோல்வா எனில் 110 பைசா என்பது பல மாநிலங்களைவிட குறைவாகவே வைக்கப்பட்டுள்ளது.
 தொடர்ந்து ஆட்சிக்கு வந்த தமிழக திமுக, அண்ணா திமுக தேர்தல் அறிக்கை சலுகைகளால் மாணவர் பாஸ், முதியோர், நோயாளிகள் என்பதுடன்  எம் எல் ஏ, எம் பி, பத்திரிக்கையாளர் போலீசார் சலுகை போன்றவைகளும் தரப்பட்டு போக்குவரத்தின் வருவாயில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது. அரசாங்கம் இதற்கு அவ்வப்போது மான்யம் தருவதாக சொன்னாலும்  முழுமையான ஈட்டை தருவதில்லை. அரசின் கொள்கை சார்ந்து வரும் நட்டங்களை பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்து கழகங்கள் ஏன் சுமக்க  வேண்டும் என்பது பொதுவெளியில் போதுமான அளவு விவாதமாக்கப்படவில்லை. 2011-17 ஆண்டுகளில்  போக்குவரத்து துறைக்கு அரசாங்கம் மான்யமாக 7912 கோடி கொடுத்துள்ளதாக சொல்கிறது. ஆனால் எவ்வளவு வருவாய் இழப்பிற்கு இந்த ஈடு என தெரிவிப்பதில்லை.
நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 93 லட்சம் கிமீ அளவிற்கு 2 கோடி மக்களை ஏற்றிக்கொண்டு அரும்பணியை போக்குவரத்து ஊழியர்கள் செய்து வருகின்றனர். பஸ் ஒன்றுக்கு ஊழியர் எண்ணிக்கை தற்போது 6 ஆக குறைந்துவிட்டதுஎரிபொருள் சிக்கனம் என்கிற நிர்ப்பந்தங்களுக்கும் காலத்தில் பயணிகளை உரிய இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற அன்றாட உளைச்சலில் அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு வருவாயாக சுமார் 25 கோடி ஈட்டித்தருகின்றனர்..
  ஈட்டப்படும் வருவாயில் செலவினங்களின் வகையை அரசாங்கம் பட்டியலிடுகிறது. 2016-17ன் படி  சம்பளம் வகையில் அதன் செலவு 51.4 சதம், டீசல் செலவு 28.7 சதம், பழுது பராமரிப்பு செல்வாக 3.3 சதம், நிதி நிறுவனங்களில் அது பெறும் கடனுக்கு வட்டி மற்றும் வரி செலவாக 7.7 சதம், சுங்கம், விபத்து ஈடு என இதர செலவாக 6.1 சதம் என பிரித்து காட்டுகிறது. இதுவே 13-14ல் 44 சதம், 36 சதம் 4 சதம் 7 சதம், 5 சதம் என சொல்லப்பட்டிருந்தது.  இரண்டே ஆண்டுகளில் டீசல் செலவு 8 சதம் கட்டுப்படுத்தப்பட்டமைக்கு தொழிலாளர்களை பெருமளவு பாராட்டவேண்டும்..
 திமுக ஆட்சியில் இருந்த அந்த நிதி ஆண்டான 2010ல் தொழிலாளருக்கு சேரவேண்டிய பி எஃப் கிராஜுடி இதர அம்சங்கள் கொடுக்கப்படாமல் 1134.23 கோடி நிற்கிறது என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல 2009-10ன் நட்டம் 699.48 கோடி என்பதும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பின்வந்த அண்ணா திமுக ஆட்சியில் அரசாங்கம் வெளிப்படையாக தொழிலாளருக்குரிய சட்டரீதியான நிலுவை பற்றி ஏதும் தெரிவிக்காமலேயே இருந்தது. இச்செயல் கேள்விக்கு ஏன் பெருமளவு உட்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகவில்லை. 2011-17 ஆண்டுகளில் மட்டும் 16186 ஊழியர் ஓய்வு பெற்றுள்ளனர். மொத்த ஓய்வூதியர்கள் 66000 இருக்கலாம். அதிமுக ஆட்சியில் ஏப்ரல் 2015ல் 2010க்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு 15 சத பென்ஷன் உயர்வை வழங்கினர். இம்முறை ஏதாவது வழங்குவார்களா என்பதை பார்க்கவேண்டும்..
போக்குவரத்து கட்டணங்கள் டிசம்பர் 2001ல் உயர்த்தப்பட்டன. அப்போதும் கூட தமிழ்நாட்டில் இருந்த குறைந்தபட்ச கட்டணமான  கிமீருக்கு 28 பைசா என்பது பிற மாநிலங்களைவிட குறைவாகவே வைக்கப்பட்டது. முன்னதாக மார்ச் 2001ல் தொடர்ந்த நட்டக் கணக்கை கூட்டினால் 2035 கோடி என தெரிவித்திருந்தனர். 1991ல் 164 கோடியில் நட்டம் துவங்கியது. 1991ல் நிறுவன செலவு 388 கோடி என்பது 2001ல் 1388 கோடியாகிவிட்டது எனவும் தெரிவித்திருந்தனர்.
1991ல் ஒரு லட்சம் ஊழியர்கள் இருந்தனர். சராசரி ஊழியர் செலவு ரூ 3215 எனப்பட்டது. 2001ல் 1.27 லட்சம் தொழிலாளர்களுக்கு சராசரி செலவு ரூ 8630 என்றனர். 1991ல் வருவாய் 991 கோடியாக இருந்தது .வருவாய் 2001ல் 3048 கோடியாக உயர்ந்ததுஅப்போது காலாவதியான பேருந்துகள் 40 சதம் இருந்தும் அதையும் திறமையாக ஓட்டியே இந்த முன்னேற்றத்தை தொழிலாளர் உழைப்பால் உருவாக்கியிருந்தனர். 2001லேயே தொழிலாளர்  சட்டரீதியான பணம் உரிய இடங்களுக்கு போய் சேராத நிலை ஏற்பட்டது . அவ்வாண்டில் மட்டும் இந்த நிலுவை 142 கோடியாக இருந்தது. இது வளர்ந்து 2010 ல் 1100 கோடியாகவும், இப்போது  7000 கோடியாக பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
 டிசம்பர் 2000ல்  அரசாங்கம் அப்போது நடந்த வேலைநிறுத்தக்காலத்தை விடுப்பில் கழித்துக்கொள்ள சம்மதித்தது. இப்போதும் வேலைநிறுத்த நாட்களுக்கு ஊதிய வெட்டோ தண்டனைகளோ இல்லாமல் சுமூக நிலையை  கொண்டுவர வேண்டிய அறிவுறுத்தல்களை அரசாங்கம் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தந்திட வேண்டும்.

நட்டமடையும் நிறுவனம் என்றாலும் தொழிலாளர்கள் தங்கள் வலிமையான கூட்டுபேர சக்தியால் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் பெற்று வந்தனர். இப்போதும் பெறுகின்றனர். பேச்சுவார்த்தை காலதாமதமானாலும் பெற்று வருகின்றனர்.  மத்திய அரசு பொதுத்துறைகளில் நட்டம் என்பதால் ஊதிய மாற்றம் பெறாத தொழிலாளர் பகுதி ஒன்று 25 ஆண்டுகளாக இருக்கிறது என்பதும் கசப்பான அப்பகுதி உண்மை. இச்சூழலில் போக்குவரத்து துறையை நட்டத்திலிருந்து மீட்பதற்கும் அதன் நிதிஸ்திரத்தன்மைக்கும் தொழிற்சங்கங்கள் உரிய ஆலோசனைகளை பொதுவெளியில் வைத்து உரையாடலை மேம்படுத்துவது அவசர அவசியமாகியுள்ளது.

No comments:

Post a Comment