ஆர் எஸ் எஸ் நகர்வு கட்டங்கள் (சில தொடுபுள்ளிகளை முன்வைத்து) இக்கட்டுரை ஆர் எஸ் எஸ் குறித்த வரலாறல்ல. அவர்கள் வீச்சுடன் வளரத்துவங்கிய காலத்தின் சில புள்ளிகளைக் காண்பது. தாங்கள் விழையும் பிம்பத்தை இந்தியாவில் கட்ட எப்படி அவர்கள் தங்களை தக அமைத்துக் கொண்டு வருகிறார்கள் என்பதை தொட்டுக் காட்டுவது என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம். ஆர் எஸ் எஸ் அடிமட்ட வேர்க்கால் வேலைகளை ஷாகா எனும் கிளைஅமைப்புகள் மூலம் நடத்தி வருகிறது. 2016 ல் கிடைத்த தகவல்படி ஷாகா - கிளைகள் 57000 தினசரி நடைபெற்று வருகின்றன . வாரக்கூட்டங்கள் 14000, மாதம் 7000 issue based ஆக நடைபெறுகிறதாம் . இதில் சற்றேறக்குறைய 20 லட்சம்பேர் பங்கேற்றுள்ளனர் . இப்போது இது மேலும் கூடியிருக்கலாம் . 36000 வெவ்வேறு இடங்களில் இக்கூட்டங்கள் நடந்துள்ளன . பன்முகத் தன்மைகொண்ட இந்தியாவை ஓர்முனையில் ஒன்றுபடுத்துவதற்கான பயிற்சியை ’ பிரச்சாரக்’ என நியமிக்கப்படுபவர்கள் பெற்று அதை போகுமிடங்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள் . ஹெக்டேவரும் கோல்வால்கரும் character building என்பதை மய்யமாக வை...