https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, June 25, 2022

ஆச்சார்யா கிருபளானி

 

ஆச்சார்யா கிருபளானி

                       

நவீன இந்தியாவின் அரசியல் விவாத களத்தில் கிருபளானி குறிப்பிடத்தகுந்த பங்காற்றியவர் . ஆழமான அறிவு மற்றும் அனுபவங்களின்பாற்பட்டு கருத்துக்களை ஒளிவு மறைவின்றி எடுத்துவைத்தவர். பல சோசலிஸ்ட் தலைவர்கள் போலவே மார்க்சியம்- காந்தியம் குறித்த உரையாடல்களில் ஆழத்தோய்ந்தவர்.

விடுதலை இந்தியாவில் எதிர்கட்சி தலைவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் ஆச்சார்யா கிருபளானி . காங்கிரசில் இருந்தபோதும், பிரஜா சோசலிஸ்ட் தலைமையில் ஆனாலும் கட்சியின் கொள்கைகளை அப்படியே பிசகின்றி பின்பற்றும் மனோபாவம் கொண்டவராக கிருபளானி தன் அரசியலை அமைத்துக்கொள்ளவில்லை. தவறு என்று தான் உணரும் ஒன்றுடன் சேர்ந்து உழைப்பதில்லை என்கிற காந்திய மனோபாவம் அவரிடம் இருந்தது.

ஜீவத்ராம் பகத்ராம் கிருபளானி இன்றுள்ள பாகிஸ்தானின் அய்தராபாத்தில் 1888ல் பிறந்தார். அவரது ஜாதகம் தொலைந்துபோனதால் அவரால் தனது பிறந்த மாதம் தேதியை சரியாக சொல்லமுடியவில்லை. அவரைப்பற்றி எழுதக்கூடியவர்கள் அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாளில் அவர் பிறந்ததாக அறிந்து நவம்பர் 11, 1888யை குறிப்பிட்டு வருகின்றனர்.



கிருபளானி தந்தையார் தாசில்தாராக இருந்தவர்.  அக்குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் ஆறாவதாக பிறந்தவர் கிருபளானி.. தந்தை வைஷ்ணவ பற்றாளர். குடும்பத்தில் இரு மகன்கள் இஸ்லாமிற்கு மாறினர். கிலாபத் இயக்கம், துருக்கியை காப்பாற்றுதல் என சென்று மறைந்தனர். பம்பாயில்  கிருபளானியின் மாணவர் பருவம் கடந்தது. அவரது அறை முழுவதும் ஆங்கில கவிதை நூல்கள் இருந்தன. வங்கப்பிரிவினையின்போது மாணவர்கள் கிளர்ச்சியில் கிருபளானி ஈடுபட்டதால் கல்லூரிகள் அவரை சேர்க்க மறுத்தன. பின்னர் புனே பெர்குசான் கல்லூரியில் 1907ல் சேர வாய்ப்பு கிடைத்தது.

சிந்து மாகாணத்தில் தனது வரலாறு, பொருளாதார  முதுகலைப்படிப்பை அவர் முடித்தார். முசபர்பூர் கல்லூரியில் 1912ல் வரலாற்று பேராசிரியர் பணியில் சேர்ந்தார். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் காந்தியுடன் நேரடி தொடர்புகொண்டவராக கிருபளானி மாறினார். பெரோஷ்மேத்தா, கோகலே, பானர்ஜி என மிதவாதிகளுக்கும் திலகர், பிபன் சந்திரபால், அரவிந்தர் போன்ற தீவிரவாதிகள் என அறியப்பட்டவர்களுக்கும் இடையேயான மோதல் களமாக காங்கிரஸ் இருந்தது. கிருபளானி இளைஞர்கள் பலரைப்போல தீவிரவாதிகள் பக்கம் ஈர்க்கப்பட்டார். காந்தி தன்னை கோகலேவின் சீடர் என அறிவித்திருந்தாலும் அவரின் மனோதைரியம் கிருபளானியை கவர்ந்தது.  பேச்சில் தீவிரவாதமும் நடைமுறையில் அதை காட்டாமல் இருப்பவர்கள் மத்தியில் காந்தியின் தைரியமான அணுகுமுறை மேலானது என கருத துவங்கினார் கிருபளானி.

பேராசிரியர் ஊதியத்தில் மிக சிக்கனமாக செலவை செய்துவிட்டு பணத்தை வங்கப் போராளிகளுக்கு அனுப்பிவந்தார் கிருபளானி. காந்தியுடன் தொடர்ந்து 10 ஆண்டுகள் பழகி விவாதித்து பின்னர் அவரின் கருத்துக்களுடன் ஒத்துப்போகும்  நிலையை கிருபளானி மேற்கொள்கிறார். காந்தியை முசாபர்பூர் அழைத்துவந்து தன்னுடன் தங்க வைக்கிறார். கல்லூரிமுதல்வரிடம் கிருபளானி குறித்து அரசாங்கம் விளக்கம் கேட்டது. கிருபளானியை காப்பாற்றும் வகையில் பதிலை முதல்வர் தந்துகொண்டிருந்தார்.  ஆனாலும் காந்தி வந்துபோன 15 ஆம் நாள் கிருபளானி கல்லூரி ஆசிரியர் பதவியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.

1917 முசபர்பூர் பகுதி சார்ந்த சம்பரான் போராட்டத்தில் அரசாங்கத்தை எதிர்த்து காந்தி நின்றவிதம் அவர் பெயர் நாடுமுழுவதும் பிரபலமாக உதவியது. இந்நிகழ்வு கிருபளானியை நெகிழவைத்தது, டாக்டர் ராஜேந்திரபிரசாத்துடனும் தோழமை கிட்டியது. பெரும்பாலான நேரத்தை காந்தியுடன் செலவழிப்பதையே கிருபளானி விரும்பினார். சில மாதங்கள் பண்டிட் மதன் மோகன் மாளவியாவிற்கு தனிச் செயலராக இருந்தார்.  18 மாதங்கள் பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் ஆசிரியராக இருந்தார்.  பின்னர் காந்தியுடன் அவரது நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

பிரிட்டிஷாரின் ரெளலட் சட்டம், ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் காந்தியின் அகிம்சை முறைப்போராட்டங்கள் மீதான சந்தேகத்தை கிருபளானி அவர்களுக்கு தராமல் இல்லை. 1922 ஒத்துழையாமையை செளரி செளராவை காண்பித்து அவர் விலக்கிக்கொண்டது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அந்நேரத்தில் காந்தியின் பக்கம் கிருபளானி மிகுந்த நம்பிக்கைவைத்து நின்றார். அதேபோல் சுயராஜ்யவாதிகள் சட்டமன்றங்களுக்கு செல்லவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தபோது காந்தி அதை ஏற்கவில்லை. காந்தி பக்கம் கிருபளானி அப்போதும் நின்றார்.

1920 பனாரஸில் பேராசிரியராக இருந்தபோதுகாந்தி ஆசிரம்’ என ஒன்றை அங்கு அமைத்தார் கிருபளானி.  இளம் டாக்டர்கள், வக்கீல்களுடன் சேர்ந்து சத்தியாக்கிரக போராட்டத்தை தீவிரப்படுத்தினார். கைது செய்யப்பட்டார்.  காசி வித்யாபீடம், வல்லபாய் பட்டேல் முயற்சியால் நிறுவப்பட்ட குஜராத் வித்யா பீடம் என இரண்டிற்கும் சென்று ஏராள இளைஞர்களுக்கு தேசப்போராட்ட உத்வேகத்தை கிருபளானி ஏற்படுத்தினார். காந்திக்கு விருப்பமாக இருந்த குஜராத் வித்யா பீடத்தில் 5 ஆண்டுகள்   பணி செய்துகொண்டிருந்தபோதுதான் அவர் ஆச்சார்யா என அழைக்கப்படலானார்.

1934ல் காங்கிரசில் செயலர் பொறுப்பு அவருக்கு தரப்பட்டது. பணிநிமித்தம் நாடு சுற்றமுடிந்தது. வறட்டுத்தனங்களுக்கு இடம் கொடுக்கவிரும்பாத, தனது சொந்த அனுபவங்கள் அடிப்படியில் பக்குவமாக அவர் வளரத்துவங்கினார்.  தலைமை பண்புகளுக்குரிய கட்டுமானங்கள் அமைந்த  மனிதராக கிருபளானி உயரத்துவங்கினார். அவர் இயல்பிலேயே சற்று கூச்ச சுபாவம் உடையவராக இருந்தார், விளம்பரம் தேடிகொள்ளாதவராகவும், எளிமையாக இருக்கவும் கற்றார்.

 அவர் கூட்டங்களில் ஏறி நின்று உஷ்ணம் கிளப்பும் பேச்சாளர் அல்லர். பொறுப்புடன் பாதை காண வேண்டும் என்கிற தவிப்புள்ளராக இருந்தார். சகமனிதர்களுடன் கருத்து வேறுபடும்போது தனிப்பட்ட தாக்குதல்கள் கூடாது என நினைத்தார். ஆனால் அனல் பறக்கும் விவாதங்களை அவர் நடத்தாமல் விட்டதில்லை. நாடாளுமன்ற உரைக்காக பிறந்தவர் போல் அவரது உரைகள் அமைந்ததாக அவரைப் பற்றி எழுதிய பார்கவா தெரிவிக்கிறார். குறிப்புகள் எடுத்துக்கொண்டுபோனாலும் அவர் வேகமான சிந்தனை ஆற்றல் தெறிக்க பேசுவதுபோல் இருக்கும் என்கிறார் பார்கவா.

அக்சாய் குன்றுகள் சீனா கைப்பற்றியது குறித்த விவாதத்தில் அவர் நேருவை பதில் சொல்லமுடியாத அளவு கடுமையாக விமர்சித்தார். தொலைநோக்கில் கனவுலகில் கிருபளானி அவர்கள் எப்போதும் இருக்கிறார் என நேரு விமர்சித்தார். அதற்கு பதிலாக ஆம் நமது தொலைநோக்கும் கனவும் பலித்தன. இனியும் பலிக்க வேண்டுமென்றார் கிருபளானி.

1946வரை அவர்  காங்கிரசின் செயலராக இருந்தார். சுபாஷ் தலைவராக இருந்தபோது அவருடன் கிருபளானிக்கு ஒத்துப்போகவில்லை. ஜவஹர் தலைவராக இருந்தபோதும் அவ்வளவாக உடன்பட்டிருக்கவில்லை. 1946 இறுதியில் காங்கிரஸ் தலைவராக கிருபளானி இருக்கவேண்டும் என காந்தி விரும்பினார். எதிர்ப்பு கிளம்பியது. அனைத்தையும் மீறி காந்தி உறுதியாக இருந்ததால் அக்டோபர் 1946ல் கிருபளானி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் பதவி விலகவேண்டியிருந்தது.

1950ல் ஜவஹர்லால் மீண்டும் கிருபளானி காங்கிரஸ் தலைவராக வரவேண்டும் என விழைந்தார். புருஷோத்தம்தாஸ் அவர்களை பட்டேல் மற்றும் வலது பிரிவினர் நிறுத்தினர். புருஷோத்தம் தாஸ் டாண்டன் 1306, கிருபளானி 1092 வாக்குகள் வாங்கினர். நேரு தான் தோற்றதாகவே எடுத்துக்கொண்டார். நேரு கிருபளானிக்கு நேரிடையாக இறங்கி பணியாற்றவில்லை. ஆனால் பட்டேல் டாண்டனுக்காக பணியாற்றினார். பட்டேல் அவ்வாண்டே மறைந்தார். கிருபளானியை மத்திய கமிட்டியில் இணைக்க நேரு கோரியபோது டாண்டன் ஏற்க மறுத்தார்.  தனக்கு இனி காங்கிரசில் இடமில்லை, வகுப்புவாதிகளை உள்ளிருந்து போராடமுடியவில்லை என்கிற உணர்வு கிருபளானிக்கு உருவானது. அவர் 1951ல் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி என்பதை உருவாக்கினார்

II

காந்தி கிருபளானியை பேராசிரியர் (’Professor’) என்றுதான் அன்புடன் அழைத்துவந்தார். விடுதலைக்காலநேரு சர்க்கார்’  தான் காங்கிரஸ் பொறுப்பில் இருந்தபோது கொள்கை அமுலாக்கம் குறித்து தன்னுடன் கலந்து பேசவில்லை என்கிற வருத்தம் கிருபளானிக்கு இருந்தது. நாடுபிரிவினை குறித்த சிம்லா மாநாட்டிற்கு ஜின்னா எதிர்க்கிறார் என்கிற பெயரில் காங்கிரஸ் தலைவராக இருந்த கிருபளானி அழைக்கப்படவில்லை. நேருவை ஒப்பிடுகையில் கிருபளானி பட்டேலிடம் தள்ளியே இருந்தார். மதசார்பின்மை பிரச்சனையில் நேரு போல அவ்வளவு உறுதிப்பாட்டுடன் பட்டேல் இல்லை என்பதை தலைமைபண்புக்குரிய அழகல்ல என்று கிருபளானி கருதினார்.

அப்போதுதான் நாடு விடுதலை அடைந்துள்ளது என்பதாலும் நேரு மீதான கவர்ச்சி உச்ச அளவில் இருந்ததாலும் கிருபளானியின் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி (கே எம் பி பி) போன்ற எதிர்கட்சிகள் மக்களிடம் போய் சேரமுடியவில்லை. 1952 பொதுத்தேர்தலை அக்கட்சி பிறந்தவுடனேயே சந்திக்க நேர்ந்தது. கிருபளானி உட்பட கட்சியினர் தோற்றனர். காங்கிரசிற்கு மாற்றாக ஜனநாயக சக்திகள் இணைவதை- சோசலிஸ்ட்களுடன் இணைவதை அவர் விரும்பினார். ஆனால் சோசலிசம் என்பதை வறட்டு கோட்பாடாக பேசுவதை ஏற்கமுடியாது என்றார். சமுக நீதி என்பதே இப்போது சரியான முழக்கம் என்றார். சோசலிசமா சமுகநீதியா என்கிற கட்டுரை ஒன்றைக்கூட அவரது தொண்டர்கள் விளக்கத்திற்காக எழுதினார்.

1954 பிரஜா சோசலிஸ்ட் கட்சியின்(PSP) நாக்பூர் மாநாட்டிற்கு அவர் தலைமை வகித்தார். அங்கு கோஷ்டி சண்டைகளும் தனிநபர் தகராறுகளும் இருப்பதை கண்ணுற்று தான் ஏமாற்றம் அடைந்ததாக கருதினார். இடைத்தேர்தல் ஒன்றில் காங்கிரஸ் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவில்லை, கிருபளானி நாடாளுமன்றம் சென்றார். 1957லும் அவர் வெற்றி பெற்றார். ஆனால் 1962ல் அவர் கிருஷ்ணமேனனிடம் தோற்றார். பிறகு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது துணவியார் சுசேதா கிருபளானி உத்தரபிரதேசத்தில் காங்கிரசை வழிநடத்திக்கொண்டிருந்தார். துணைவியாரின் அரசியலை முன்வைத்து கிருபளானி மீது சில விமர்சனங்கள் எழுந்தன. சுசேதா தன் கணவரின் காந்திய கொள்கைகளை ஏற்காத நபரல்ல என்கிற விளக்கம் தரநேர்ந்தது.

1920களில் சுசேதா (Sucheta) இளம்பெண்ணாக கிருபளானி உறவினர் வீட்டில் தங்கி தனது மேல்கலை (MA) டெல்லியில் படித்துக்கொண்டிருந்தார்.. நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் பீகார் நிலநடுக்கத்தின்போது களப்பணியாற்றினர். சுசேதா பனாரஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பணியில் சேர்ந்தார். காந்திஜி சிறையில் இருந்ததால் அவர் ஒப்புதலை பெற்று மணமுடிக்கலாம் என இருவரும் மூன்று ஆண்டுகள் காத்திருந்தனர். காந்திக்கு திறமையான கிருபளானியை இழந்துவிடக்கூடாதே என்கிற தயக்கம் இருந்தது. நாங்கள் இருவரும் காங்கிரசில் பணிபுரிவோம் என சுசேதா உறுதியளித்தார். ஆனால் காந்தி வேறு ஒருவரை பார்த்து மணந்துகொள் என்றே அறிவுறுத்தினார். சுசேதா காந்தியுடன் விவாதம் செய்து பிடிவாதமாக கிருபளானியைத்தான் மணப்பேன் என்றார்.. காந்தியும் தனது ஏற்பை நல்கினார். கிருபளானி பொதுவாக உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவராக இருப்பார். காந்தி இறந்தபோது கூட அவர் அழவில்லை. அப்படியே உள் உறைந்துபோனார்.

கால இடைவெளிகளில் அரசாங்கங்களை மாற்றுவதுதான் ஜனநாயகம். எவ்வளவு சிறந்த அரசாங்கமாக இருந்தாலும் அதை தொடர்ந்து நீடிக்கவிட்டால் அது மக்களிடம் பாராமுகம் கொள்ளும். லஞ்ச ஊழலுக்கு உள்ளாகும் என்பதை அழுத்தமாக பேசிவந்தார் கிருபளானி. அரசாங்கம் தன்னை அமைத்துக்கொள்வதில் அன்றாட நடவடிகைகளில் சிக்கனமாக இருக்கவேண்டும் என விரும்பினார். அவசியமற்ற செலவுகளை ஆடம்பரங்களை தவிர்க்கவேண்டும் என்கிற விமர்சனப்பார்வையை வெளியிட்டுவந்தார். நிர்வாக நேர்மை இல்லையெனில் எதையும் சாதிக்கமுடியாது. மாநிலத்திலும், மத்தியிலும் மிருகபலம் இருக்கிறது என்பதாலேயே ஆரோக்கியமான விமர்சனங்களைக்கூட ஆட்சியில் உள்ளோர் பொருட்படுத்தாவிட்டால் ஜனநாயகத்திற்கு ஆபத்து  நேரும் என்றார்.

கலாச்சாரம் என்பதை மொழியுடன் சமப்படுத்தி பார்க்ககூடாது என்பது அவரது கருத்து. பலமொழி இருந்தாலும் நமக்கு அடிப்படையான கலாச்சாரம் இருக்கிறது. வேதம், உபநிடதம் ராமாயணம், மகாபாரதம் என மொழியைத்தாண்டி பொதுவாக புரிந்து கொண்டுள்ளோம். கீதை என்பதை குஜராத் கீதை, தமிழ் கீதை என்றெல்லாம் பிரித்து பேசமுடியுமா என அவர் வினவினார். புத்தரையும், மகாவீரரையும் பிரதேச கடவுளாக்கிவிடமுடியுமா என்றார்.. இஸ்லாம் மற்றும் அய்ரோப்பியர் கொடைகளையும் நாம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும் என்றார். குருநானக், கபீர், துக்காராம் போன்றவர்களையும், ராஜாரம்மோகன்ராய், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர், திலகர், காந்தி உள்ளிட்டவர்களை இந்தியாவின் மகத்தான மனிதர்களாகவேவட்டாரங்களுக்கு’ அப்பாற்பட்டு புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.

இந்து மேதைமை என்பது தீவிர மறுமலர்ச்சியை ஏற்காது  என்கிற  கணிப்பு 50 ஆண்டுகளுக்கு முன்னர் அவரிடம் இருந்தது. ஆனால் அக்கணிப்பு இன்று பொய்த்துபோய்விட்டதே என்கிற கவலையை கொள்ளாமல் இருக்கமுடியாது

விவசாயம் மட்டுமே நாட்டை முன்னேற்றிவிடாது. தொழில்வளர்ச்சி தேவைதான். முதலாளித்துவ முறையிலான தொழில்வளர்ச்சி, கம்யூனிஸ்ட் நாடுகளில் உள்ள அரசு முதலாளித்துவ வளர்ச்சி என்கிற இரு அனுபவம் இருக்கிறது. இரண்டிலும் மக்கள் பாதிக்கப்பட்டே உள்ளனர். காந்தி பேசிய கிராம வளர்ச்சி, தன்னிறைவு கிராமங்கள் என்பது வெறும் விவசாயம் சார்ந்தது மட்டுமல்ல. அங்குள்ள தொழில் சார்ந்ததும்கூட என்றார் கிருபளானி. மையப்படுத்தப்பட்ட முறையில்தான் தொழில் வளர்ச்சி என்கிற மேற்கு கருத்து நம்மிடம் வலுவாக அமர்ந்துவிட்டதால், பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சி (decentralised industrial growth) என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம் என்றார்...

காந்தியின் கழிப்பறையை சுத்தம் செய்யும் தொண்டர் வேலைத்துவங்கி காங்கிரசின் உயர்வேலைகள்வரை 1917-47 ஏறக்குறைய 30 ஆண்டுகள் காந்தியுடனேயே இருந்து பார்த்தவர் கிருபளானி. மீரத் காங்கிரஸ் அமர்வில் (1946) அவர் அதன் தலைவராக இருந்து மிக முக்கிய உரை ஒன்றை தந்தார்  . இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு அழுத்தம் கொடுத்தார் காந்தியிடமிருந்து பெற்றுக்கொண்ட அகிம்சையால் நாடு தன்னை உயர்த்திக்கொள்ளும் என்றார். எவர் வாளை நேசிப்பாரோ அவர் அதனாலேயே மடிவர். காந்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு வழிமுறையின் தூய்மை என்பதிலேயே உள்ளது என்றார். குறுகிய வழிகளால் உயர்நோக்கத்தை அடையமுடியாது என்கிற காந்தியம் உலகிற்கு புதியது. உலகம் என்று அதை ஏற்குமோ தெரியாது என்றார்.

மீரத் அமர்வில் அரசியல் அமைப்பு சட்ட அசெம்பிளிக்கு ஜின்னா வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அகிம்சையும் சர்வாதிகாரமும் முரண்படுபவை . நமது அரசியல் ஜனநாயகம் எந்த ஒரு வர்க்கத்தின் , சாதியின் ஆட்சியாக இருக்காது என்றார். அது மக்களால் மக்களுக்கானதாக  அமையவேண்டும் . தனிநபருக்கு சுதந்திர செயல்வெளியை மறுத்தால் அரசியல் ஜனநாயகம் கூட சர்வாதிகாரமாக மாறிவிடும் என்கிற எச்சரிக்கையை அவர் தந்தார்.

 இஸ்லாமியர் இந்த நாட்டிற்கு வருபோது இங்குள்ள லட்சக்கணக்கான இந்துக்களைப்பார்த்து அஞ்சவில்லை. ஆனால் நாடு விடுதலைப்பெற்று ஒரே நாடாக இருவரும் வாழலாம் என்றால் ஏன் அச்சப்படவேண்டும் என்கிற வினாவை அவர் தனது தலைமை உரையில் எழுப்பினார். இன்றுள்ள பிரதேச மாநிலங்கள்படி 7 மாநிலங்களில் இந்துக்கள் பெரும்பான்மை என்றால், 5 மாநில பிரதேசங்களில் இஸ்லாமியர்தான் பெரும்பான்மை. இதில் அரசியல் சிறுபான்மை என்கிற எண்ணம் தேவையில்லையே என்றார். இஸ்லாமியர்களை அந்நியர் என பார்க்கும் இந்துமனம் தனது சொந்த மதத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் சேர்த்தே கேடு விளவிக்கிறது என்றார். மதத்தின் பெயர் சொல்லி நடக்கும் அரசியல் தவறுகளை அவர் சுட்டிக்காட்ட விமர்சிக்க தயங்கவில்லை.

III

கிருபளானி சுயராஜ்யா, சர்வோதயா, இல்லஸ்ட்ரேடட் வீக்லி, விஸ்வபாரதி போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிவந்தார்.  புத்தகங்கள் எழுதியுள்ளார். ’சர்கா அரசியல்’ என்கிற கட்டுரையை அவர் எழுதினார். சர்வதேச வர்த்தகம், தேசத்தின் தொழில் வளர்ச்சி, கிராமப்புற குடிசைத்தொழில் வளர்ச்சி குறித்து அதில் விவாதித்தார். வலுத்தவனுக்கும் பலவீனமானவனுக்கும் இடையே உள்ள வர்த்தகம் ஒருபோதும் சமத்துவத்தை உருவாக்காது என்றார். நமக்கு குடிசைத்தொழில் சார்ந்த பொருளாதாரம்தான் வேலையின்மையை போக்கும். வறுமையை குறைக்கும். விவசாயிக்கு அனுசரணையான தொழிலாகவும் இருக்கும் என அவர் எழுதினார். காந்திய பொருளாதார கொள்கைகளை முன்னெடுக்கவேண்டிய அவசியத்தை எப்போதும் அவர் வலியுறுத்துபவராக இருந்தார்.

வளர்ச்சி என்பது அமைப்பாவதுதான். அறிவுஜீவிகள்கூட எண்ணங்களின் அமைப்பாளர்கள்தான். இலக்கியவாதிகளும், கலைஞர்களும் கூட அமைப்பாளர்கள்தான். குறைந்த செலவில், சிலமணிநேரத்தில் மக்களை திரட்டும் நடவடிக்கை எதுவோ அதுதான் பயனளிக்கும். நமக்குள்ள பலவீனமே நம்மால் திரளமுடியாமையே. மக்களை ஈடுபடுத்தும் குணம் நமக்கு கைவரவேண்டும் என்றார் கிருபளானி.

 மையப்படுத்தப்பட்ட பெருந்தொழில் கலாச்சாரம் மேலிருந்து எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும். ஆனால் நமது குடிசைத்தொழில் கலாச்சாரம்  சுய ஆர்வம், பங்களிப்பை மற்றும் ஜனநாயகத்தையும் கூட்டும் என்றார். கிராமத்தில் கிடைத்த வருமானத்தைவிட மில் தொழிலாளி கூடப்பெற்றாலும் அவன் மன உளைச்சலுக்கு ஆளாகிறான். அவனின் இழப்பு கணக்கிடமுடியாத ஒன்று  என எழுதும்போது அவர் மார்க்சிய பார்வையான அந்நியமாதல் சிந்தனைக்கு நெருங்கி வருகிறார். கூலி அடிமை (Wage slave) என்கிற மார்க்சிய சொல்லாட்சியையும் அவர் பயன்படுத்துகிறார்.

சர்கா- காதி என காந்தி பேசும்போது அதனை கேலியாக பார்ப்பது சரியானதல்ல என்றார் கிருபளானி. குடிசைத்தொழில் என்பது இயல்பில் சோசலிசத்தன்மையுடைத்தது என எழுதினார். மார்க்ஸ்- எங்கெல்ஸ் பேசிய உபரிமதிப்பு கோட்பாட்டை சுட்டிக்காட்டி ’காட்டேஜ் தொழில்’ மற்ற முதலாளிகள் எடுத்து செல்வது போன்ற உபரிமதிப்பை உருவாக்காது என்று பேசினார் கிருபளானி. கிராமத்தொழிலுக்கு தேவைப்படும்  கருவிகளை சுலப தவணைகளில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். புரட்சி என்றாலே வர்க்க வெறுப்பு, போராட்டம் என்பதில்தான் உருவாகும்- அமைதியான ஒத்துழைப்பு முறைகளில் வராது என்கிற கருத்தை தான் ஏற்கவில்லை என்றார் கிருபளானி.  பரிணாம வளர்ச்சியின் கடைசி அடியாக புரட்சி இருக்கிறது  என அவர் புரட்சி குறித்து விளக்கினார். கொடிய வறுமையும், பட்டினியும் எப்போதுமே புரட்சிக்கான  நல்ல கருவிகளாகும் என்பது  அனுபவத்தில் சரியாக இருக்கவில்லை என்று எழுதினார் கிருபளானி.

பழமையான ஒன்று என்பதாலேயே புரட்சிக்கு ஒத்துவராது என குடிசைத் தொழில் பற்றி சொல்லப்படுகிறது. அப்போது வன்முறை என்பது காலம் காலமாக இருக்கின்ற பழமையான ஒன்றுதானே என  எதிர்கேள்வியை அவர் வைத்தார். சமூக சீர்திருத்தம் மற்றும் புரட்சிகர நடவடிக்கைக்குரிய வேறுபாடுகள் கையாளப்படும் நடவடிக்கைளில்  இல்லை. அவை வழிமுறைகளிலும், எந்த நோக்கத்திற்காக அவை நடத்தப்படுகிறது என்பதிலும்தான் இருக்கிறது என விளக்கமளித்து காந்தியின் செயல்களில் புரட்சிகர தனமைகள் இருப்பதாக தனது வாதங்களை அவர் அடுக்கினார். தீண்டாமை குறித்த காந்தியின் போராட்டத்தை ’பெருமாட்டியின் போராட்டம்’ என கேலி செய்வது சரியல்ல, அது புரட்சிகரபோராட்டம் என எழுதினார் கிருபளானி.

மார்க்சிய பொருள்முதல்வாதம் என்பதிலிருந்து அவர் மாறுபட்டு பேசினார். மார்க்சிய பொருள்முதல்வாதம் அறிவியல் அடிப்படையில் என உரிமை கோரினாலும் அங்கு நெறிகளுக்கு இடமிருப்பதில்லை. வழிமுறைகள் பற்றி அது கவலைகொள்வதில்லை.  வழிகளை குறித்து எந்த நெறிகோட்பாடுகளையும் வைத்துக்கொள்ளவில்லை என்றார். சோவியத்தில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் பற்றி தனது கடும் விமர்சனங்களை கிருபளானி முன்வைத்தார். லெனினை புதிய கடவுள் ஆக்குகிறார்கள் என்றார். அவர் உடல் பாதுகாக்கப்பட்டு வந்ததை பற்றி விமர்சித்தார். எழுந்துவரும் தேசிய விடுதலை இயக்கங்களையெல்லாம் பூர்ஷ்வா இயக்கம் என்று முத்திரையிடுவதும் தலைவர்களை விமர்சிக்கும் முறையையும் அவர் ஏற்கவில்லை. ருஷ்யாவை கண்டனம் செய்வதற்காக தான் எதிர்வினையாற்றவில்லை என்றும் அதன் கொள்கை குறித்த விமர்சனபார்வையே அவை என்றும் எழுதியிருந்தார்

வெற்றி அனைத்தையும் தீர்மானிக்கும் என்பதையும் வலிமை என்கிற முரட்டுத்தனத்தால் சாதித்துவிடலாம் என்பதிலும் அவர் உடன்படவில்லை. அப்படியொரு பார்வை நோக்கி நகரும் மானுட நடத்தை குறித்து தனது கவலையை வெளியிட்டவர் கிருபளானி.

உண்மை என்பது கடைபிடிக்கப்படவில்லையெனில் பின் அன்போ, விசுவாம் என்பதற்கு அர்த்தம் இருக்காது. இறைவனின் பெயரால் வெளிப்பட்ட மதவெறித்தனமோ, பாட்டாளிகளின் பெயரால் கம்யூனிச வெறித்தனமோ எதிர்விளைவுகளை உருவாக்கும். பாசிசம்கூட இப்படிப்பட்ட எதிர்விளவுதான் என அவர் பேசினார். சோதனைகளுக்காக அறிவியல் கூடத்தில் அனுசரிக்கப்படும் உகந்த சூழல் என்பது சமூக கூடத்தில் கிடைக்காது. எனவே விஞ்ஞான விதிகள் போன்ற அறுதியிட்டு சொல்லப்படும் விதிகள் சமூக விஞ்ஞானம் என்பதற்கு இருப்பதில்லை என சமுக விஞ்ஞானம் குறித்த தனது பார்வையை கிருபளானி முன்வைத்தார். சமுக மனித நடத்தை பரிசோதனைகள் அறிவியல்கூட பரிசோதனைகளை ஒத்ததல்ல என்றார்.

புரட்சிக்காக நின்ற பல தலைவர்கள் சோவியத்தில் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு ஒழிக்கப்பட்டுவந்ததை அவர் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.. ருஷ்யாவில் பொருளாதார சோசலிசம் வந்திருக்கலாம். ஆனால் அரசியல் ஜனநாயகத்தை மிதித்து அது வெளித்தெரிகிறது. அரசு உதிர்ந்துவிடும் என்று மார்க்சியம் பேசும்போது  ’சுய ஒழுங்கு கொண்ட உயர் வளர்ச்சியடைந்த தனிநபர்களின் சமுக இருப்பு’ என்பதையே குறிப்பாக தருகிறது. ஆனால் நடைமுறையிலோ சோவியத் மிகு அதிகாரம் கொண்ட அரசைத்தான்  கட்டிவருகிறது என விமர்சித்தார் கிருபளானி. பொருளாதார பலன்கள் என்கிற பெயரில் அரசியல், கலாச்சார, ஆன்மீக பின்னடைவுகளை கம்யூனிசம் தருகிறது என்ற கடுமையான தாக்குதலையும் அவர் சோவியத் அனுபவத்திலிருந்து முன்வைத்தார்.

சுரண்டல், அநீதி, லாபவேட்டை கொண்டுள்ளதால் முதலாளித்துவத்தை நாம் விமர்சிக்கிறோம். அகற்றப்படவேண்டும் என கருதுகிறோம். காந்தியை பொறுத்தவரை அவர் எந்த கொள்கைக்கும் (தான் பேசுவது உட்பட) தன்னை அடிமையாக்கிக்கொள்ளவில்லை. அரசிற்கு அதிக அதிகாரம் என்பதை கண்டு அவர் அஞ்சினார். அதிகாரம் குவிந்த அரசு எந்திரம் ஆன்மா இல்லாதது என காந்தி சுட்டிக்காட்டினார். காந்தி எந்திரங்களை எதிர்க்கிறார் என்கிற விமர்சனத்திற்கு கிருபளானி விளக்கம் தந்தார்.. காந்திஜி எந்திரங்கள் மீதான கவர்ச்சியை விமர்சித்தார். உயிருள்ள மனித உழைப்பிற்கு எதிராக உள்ளுறைந்த செத்த ஒழிப்பின் வடிவமாக நிற்கும் எந்திரங்களை வைப்பதைத்தான் காந்தி விமர்சித்தார் என்றார் .

அரசு ஜனநாயகரீதியாக செயல்படவேண்டுமெனில் பன்மைத்துவ தன்மை கொண்டிருக்கவேண்டும் என விழைந்தார் கிருபளானி . அவர் சொல்லும் அரசில் முதலாளிகளும் தொழிலாளர்களும் எப்படிப்பட்ட பன்முகத்தன்மையை வெளிப்படுத்தமுடியும் என அவர் விளக்கவில்லை.

மையப்படுத்தப்பட்ட அதிகாரமும் ஜனநாயகமும் ஒத்துப்போகாது என்றார் கிருபளானி. குவிஅதிகாரம் எனில் ஜனநாயகமில்லை (More of Centralism means less of democaracy). என்றார்.    ஜனநாயக மத்தியத்துவம் (democaratic centralism) என்பதையும் அவர் சரி என ஏற்கவில்லை - வார்த்தை விளையாட்டே என்றார். பொருளாதார  பரவலாக்கம் (decentralization) இல்லாமல் அரசியல் பரவலாக்கம் இருக்காது என்றார்.

IV

வர்க்க சங்கார்ஷ் (varga sangarsh) என்கிற வர்க்கப்போராட்டம் பற்றி பிரஜா சோசலிஸ்ட் தொண்டர்களுக்கு விளக்கம் அளிக்க கிருபளானி தனி கட்டுரை ஒன்றை  எழுதினார். மார்க்சிய முழக்கங்கள் குறித்து அதில் அவர் விவாதித்தார். மார்க்சிய தத்துவம் புரிந்து கொள்ளப்படுவதை சுருக்கமாக  அவர் 9  அம்சங்களில் எடுத்து சொல்கிறார்..

1. சமுகவியலும் வரலாறும் பிற விஞ்ஞானங்களைப்போலவே தவிர்க்கமுடியாத விதிகளை கொண்டவை

2.வரலாற்றிலும், சமுகத்திலும் அடிப்படை இயங்குவிதி பொருளாதாரம்

3. மனித வரலாறே பொருதிக்கொள்ளும் இருவேறு வர்க்கங்களின் போராட்டமே. தற்போது முதலாளித்துவ- தொழிலாளி வர்க்கப் போராட்ட கட்டம்.

4. பல தொழில்மய நாடுகளில் இருதுருவ வளர்ச்சி வந்துவிட்டது. பிற நாடுகள் அதை நோக்கி போகின்றன.

5. திரளான தொழிலாளர்களின் மோசமடைந்துவரும் வாழ்க்கை நெருக்கடிகள் வர்க்கப்போராட்டம் நோக்கி நகர்த்துகின்றன.

6. திரட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பாட்டாளிகளுக்கு சாதகமாக இப்போராட்டம் முடியவேண்டும்.

7. இந்த வன்முறை போராட்ட நிகழ்ச்சிப்போக்கில் போராட்ட வெற்றியை உறுதிப்படுத்திட, புதிய வகைப்பட்ட வர்க்கமற்ற சமுகம் அமைந்திட பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் அவசியம்

8. இவ்வழி அமைந்த பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் வர்க்கங்களே இல்லாத சமுகத்தை மட்டுமல்லாமல் அரசே உதிர்ந்துபோகும் நிலையை உருவாக்கும்

9. எந்த நாட்டில் புரட்சி வெற்றி பெற்றாலும் அதற்கு உலகளாவிய முக்கியத்துவம் விரிவு இருக்கிறது. உலகம் முழுதும் மூலதன நலன்கள் ஒன்றாகவே இருக்கிறது. அதேபோல் பாட்டாளிகளின் நலன்களும் உலக அளவில் ஒன்றாகவே இருக்கிறது.

இவற்றை கிருபளானி மனோதத்துவகைப்பட்ட ஊகங்கள்  (metaphysical speculations) என்றே சொல்லமுடியும் என்றார். மார்க்சிற்கு முன்பே பல அறிஞர்கள் முதலாளித்துவ கொடுமைகளை பேசியுள்ளனர். மார்க்ஸ்  விவரங்களை எடுத்துக்கொண்ட ராயல் கமிஷன் பல கொடுமைகளை சித்தரித்தது. ஆனால் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று சொல்லவில்லை. முதலாளித்துவ உற்பத்திமுறை தந்த பொதுவான அனுபவங்களை அது பேசியது.

விஞ்ஞானத்திற்கும் சமுக விஞ்ஞானத்திற்குமான வேறுபாடுகளை அவர் விளக்கினார். சமூக ஆய்வுகளில் விஞ்ஞான ஆய்வைப்போன்று நியூட்ரல் ஆக ஒருவர் செயல்படமுடிவதில்லை. ஆய்வாளர் செயற்பாட்டாளராகவும் இருக்கிறார். விருப்பு வெறுப்புகளை புறம் தள்ளிய ஆய்வுமுறைக்கு அங்கு வாய்ப்பில்லை. சமுக விஞ்ஞானம் மனிதகுலத்தின் காலம்காலமான நினவுகளுடன் ஊடாடவேண்டியுள்ளது. பழக்க வழக்கம், மூடநம்பிக்கைகள், நினைவிற்கு அப்பாற்பட்ட தொடரும் நம்பிக்கைகள் என.. இவற்றை விஞ்ஞான முறைகளால் அளந்துவிடமுடியாது. பெளதீக, உயிரியல், அரசியல், பொருளாதாரம், மதம் என மனித வாழ்க்கையை ஒற்றை காரணத்திற்குள் சுருக்கிவிடமுடியாது. பின்னர் அது பொருளாயத உள்ளுணர்வு (Material mysticism) என்றாகிவிடும். அந்த இறுதி காரணத்தை தேடுவதாக அமைந்துவிடும் என்று தனது விளக்கமாக கிருபளானி எழுதினார்.

மார்க்சின் உழைப்பு மதிப்பு கோட்பாடு (Labour Theory of Value) குறித்து கிருபளானி விவாதிக்கிறார். பெளதிகம், கணிதம் போல் பொருளாதாரத்தை விஞ்ஞானமாக கார்ல் மார்க்ஸ் பார்த்ததாக சொல்கிறார். ரிகார்டோதான் மதிப்பின் விதி ( foot rule of value ) பற்றி சொல்கிறார். உற்பத்திக்கு ஈடுபடும் பயன் உழைப்பின் நேரம் பொறுத்து பண்டம் அளவிடப்படுகிறது ( An article is measured by the hours of useful labour needed in its production- socially useful labour) என ரிக்கார்டோ கூறினார். இது இறுதியில் சந்தை விலையில் தொழிலாளரை பெறுவது என்றானது. அது நிரந்தர விலைக்குரியதாகவோ, முற்று முழுதான ஒன்றாகவோ இருக்காது. சரக்குகளின் விலையைப்போல தொழிலாளர் விலையும் போட்டிக்குரியதாக இருக்கிறது என்றார் கிருபளானி

போட்டி சூழலில் ’பிழைப்பு ஊதியத்திற்கு’ தங்களுக்கு மலிவாக தொழிலாளர்கள் வேண்டும் என ’மதிப்பு விதியின்படி’ முதலாளித்துவம் நினைக்கிறது. ஆனால் மார்க்சின் கொள்கைப்படி தொழிலாளி தான் பெறும் பிழைப்பு ஊதியத்திற்கு மட்டும் உழைக்கவில்லை. உபரி உழைப்பை தருகிறார். அதை வைத்துதான் பிற செலவுகளை முதலாளி செய்யமுடிகிறது. அவரிடம் கருவிகள் இருப்பதால்- நிலம்- எந்திரம் மற்றும் ஆலை உடைமையாக இருப்பதால் உபரியை அவரால் அபகரிக்கமுடிகிறது. பாட்டாளிகளின் உழைப்பினால்தான் முதலாளிகளுக்கு இலாபம் உபரி மதிப்பு கிடைக்கிறது. இந்த பொருளாதாரமுறை முரண்பாடுகளை உருவாக்கி வர்க்க மோதலுக்கு இட்டு செல்லும் என்றார் மார்க்ஸ். முதலாளிகள் தாங்களாக விட்டுத் தரமாட்டார்கள்-  புரட்சியை சட்டரீதியாக அமைதியான வழிகளில் கொணரமுடியாது என்பது மார்க்சின் கருத்தாக இருந்தது.

மார்க்சிடமிருந்து தான் மாறுபடுவதை கிருபளானி விளக்குகிறார். மூலதனம் வளர்ச்சிக்கு தேவை, தொழிலாளர் அனைத்தையும் சம்பளமாக பெற்று செல்லமுடியாது. சேமிப்பு என்பதை புதிய  உற்பத்திக்கு எடுத்து சென்றிடவேண்டும். முதலாளிகள் கூட அத்தனை உபரியையும் எடுத்து செல்லமுடியாது உற்பத்திக்கு முதலிட்டாக வேண்டும் என்றார் கிருபளானி. எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய பொதுவிதிகள் என வகைப்படுத்துவது ஆபத்தானது என தாம் கருதுவதாக எதிர்வினையை கிருபளானி தந்தார்.

கிருபளானியை பொறுத்தவரை தொழிற்சங்கத்தின் அடிப்படியான நோக்கம் பொருளாதரா பலன்களை மேம்படுத்துவது என்பதுதான் . நேரடி அரசியல் புரட்சிக்கானதல்ல தொழிற்சங்கம் என்பதில் அவர் உறுதியாக நின்றார்.. உறுப்பினர்களை திரட்டி தனது கூட்டுபேரவலிமையை தொழிற்சங்கம் நிறுவவேண்டும். அங்கு மூலதனமும் உழைப்பும் பகைமை பாராட்டிக்கொள்ளாமல் அமைதி இயக்கமாக இருக்கவேண்டும் என்றார்.. அவர் காந்திய பார்வையைத்தான் இங்கும் முன்வைக்கிறார். ஜனநாயக  நடைமுறையும் தொழிலாளர் இயக்கம் வளர உதவியுள்ளது. அவர்களின் பலமான வாக்குரிமை முக்கிய காரணியாகியுள்ளது என்றார் கிருபளானி. தொழிற்சங்க வாதமும் ஜனநாயகமும் (Trade Unionism and Democracy) என்கிற பெரும் வளர்ச்சி மார்க்ஸ் காலத்திற்கு பின் நாம் காண்பது என்கிறார் கிருபளானி.

கம்யூனிஸ்ட்கள் தொழிற்சங்கங்களை அவை பொருளாதார மேம்பாடு என்பதுடன் சுருக்கிக்கொண்டால் விமர்சிக்கிறார்கள். பொருளாதாரவாதம்-புரட்சிகரமானதல்ல என கருதுகிறார்கள். வர்க்கப்போராட்டத்தை அது ஒத்தி வைப்பதாக கருதுகிறார்கள். தொழிற்சங்கம் என்பது முதலாளித்துவம் வீழ்த்தப்படுவதற்கான புரட்சிகர கருவியாக வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பொருதிக்கொள்ளும் இரு படைப்பிரிவுகளாக மூலதனம், உழைப்பாளர்களை அவர்கள் பார்க்கிறார்கள். அங்கு ஒத்துழைப்பு, சமரசம், புரிந்து இசைதல் என்பதெல்லாம் மோசமானது எனவும் கருதுகிறார்கள். இறுதி புரட்சிகர யுத்தத்திற்கு தொழிற்சங்கம் பயிற்சிக்கூடம் என்பது அவர்கள் பார்வை என கிருபளானி தொண்டர்களுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

மார்க்சியத்தின் பெயரால் நிறுவப்பட்டுள்ள போல்ஷ்விக் ஆட்சி நடைமுறையில் பல்வேறு சமரசங்களை செய்யவேண்டியிருந்தது. பூர்ஷ்வா நிறுவன முறைகள் பலவற்றை ஏற்றது. சமாதான சகவாழ்வு என பேசவேண்டியதானது. உலக புரட்சி என்பதை அது கைவிட்டதாகவே தெரிகிறது. கட்டளைகள் மூலம் புரட்சி சாத்தியமல்ல என்றும் பேசவேண்டியதாயிற்று. அதே நேரத்தில் உலகின் பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அது ஊக்கம் தராமல் இல்லை என சோவியத் அதன் நடைமுறைகள் உணர்த்திய அனுபவத்தை கிருபளானி முன்வைத்தார்.

சத்யாகிரகி என்பவருக்கு தனிநபர், சமுக மேம்பாடு என்கிற அம்சத்தில் வெறுப்பு, வன்முறை வழியாக இருப்பதில்லை. அப்படியொன்றும் மேம்படுத்தவே முடியாத வர்க்கம், தனிநபர் என சத்யாகிரகி எந்த வர்க்கத்தையும் எவரையும் கருதவில்லை  என்கிற காந்திய பார்வையை கிருபளானி முன்வைத்தார்.

அய்ரோப்பா நாடுகளின் முக்கிய சில புரட்சிகள் பற்றி கிருபளானி பேசினார். தொழிற்புரட்சிக்கு முன்னர் மார்க்சிய  பொருளில் வர்க்கம் என்பதை எவரும் அறியவில்லை. இங்கிலாந்து, அமெரிக்க பிரஞ்சு புரட்சிகள் சட்டத்தின்படியான ஆட்சி என்பதற்கு நின்றன.

ருஷ்ய புரட்சி எப்படிப்பட்டது. ஜாரின் கொடுமை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் கிளர்ச்சியது. அங்கு முதலாளித்துவ வர்க்கம் நேரிடையாக வறுமைக்கும் துன்பத்திற்கும் காரணமாகும் அளவு வலுவாகிடவில்லை. யுத்தக்களைப்பும் அதனால் தொடர்ந்த துன்பங்களும் மக்களை வாட்டின. ஜார் குடும்பம் படுகொலைக்கு உள்ளானது. ஆட்சிக்கு வந்த கெரன்ஸ்கி சர்க்கார் என்பது பாட்டாளிவர்க்க சர்வாதிகார ஆட்சியல்ல. தாராளவாத ஜனநாயக ஆட்சி. டூமா மூலம் அரசியல் அமைப்பு சட்டம் கொணர அந்த ஆட்சி முயற்சித்தது. மிக பலவீனமான அரசாக இருந்தது. போர் நிறுத்தம் உள்ளிட்டு  மக்கள் பாதிப்புகளை அகற்ற முடியாத அரசாக இருந்தது. போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் அரசியல் இராணுவகலகம் மூலம் அந்த அரசு அகற்றப்பட்டது. வர்க்கப்போராட்டம் என்பதன் மூலமல்ல என்பதே தன் புரிதல் என்றார் கிருபளானி.

லெனின் தலைமையில் பாட்டாளிகள் பெயரில் போல்ஷ்விக் கட்சியின் சர்வாதிகாரம் நிறுவப்பட்டது. ஸ்டாலின் லெனினைப்போலவே திறமையாக அதைத்தொடர்ந்தார். அவர்கள்  இராணுவக்கலை அறிந்தவர்கள். அங்கு சொல்லப்பட்ட சோசலிச ஆட்சி, கம்யூனிச ஆட்சி, மக்கள் ஜனநாயக ஆட்சி என்பதெல்லாம் வார்த்தைகள்தான். தனியார் முதலாளித்துவம் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டு அவ்விடத்தில் அரசு முதலாளித்துவம்  நிறுவப்பட்டது. உண்மையில்  ஒருவகை ராணுவ ஆட்சிதான் அங்கு நடந்தது. ஸ்டாலின் மறைவிற்கு பின்னர் ஏக சர்வாதிகாரம் முடிவுற்று குழு சர்வாதிகாரம் ஏற்பட்டது என சோவியத்புரட்சி- அதிகாரம் பற்றிய தனது விமர்சன பார்வையை கிருபளானி முன்வைத்தார்.

ஜனநாயகம் மூலம் அரசாங்கம் என்கிற நம்பிக்கையை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தினார். பரவலான மக்கள் கருத்தை உருவாக்கி ஜனநாயகம் மூலம் ’அரசாங்கத்தின் குணத்தை’ தீவிரமாக மாற்ற இயலும் என நம்பினர் கிருபளானி. வாக்குகள் பெற்று  ஆட்சிக்கு வருவதை நாம் புரட்சி என ஏற்பதில்லை. வாக்கு மூலம் நம்மால் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் தீவிர மாற்றத்தை உருவாக்க முடிந்தால் அதுவும் புரட்சிதான் என்றார் கிருபளானி. ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து செயல்படும் அரசியல் கட்சிகள் தங்களுக்கு எவ்வளவு அசெளகரியம் நேர்ந்தாலும் ’வகுப்புவாதம் - சாதியம் - வட்டாரவாதம்’ எதிர்த்து தொடர்ந்து போரிட்டு அவற்றின் தீவிரத்தை குறைத்தால்  மாற்றங்களை கண்டு நாடு உயரும் என நம்பினார் கிருபளானி.

சொத்து என்றால் என்ன என ஒரு கட்டுரையை அவர் எழுதியிருந்தார். அனைத்து உற்பத்தியும் சமூக வய்ப்பட்டது. அந்த இணைப்பு சங்கலியில் தனிநபர் இடம் பெறுகிறார். உற்பத்தி விநியோகம் என்பவை சமூகத்தன்மை கொண்டவை என்கிற புரிதல் இல்லாவிட்டால் இரத்தக்களறிக்கான வழி ஏற்படும்.. கிருபளானியை பொறுத்தவரை புரட்சி என்பது அடிப்படியில் ஆன்ம இயக்கம் . அது சமுக சக்திகளால், பொருளாயத சக்திகளால் கொணரப்பட்டிருக்கலாம்.

எளிமை, சிக்கனம் என்பது அரசியல்வாதிகளுக்கு இருக்கவேண்டிய அவசிய குணங்களாக கிருபளானி தொடர்ந்து பேசிவந்தார். கோடிக்கணக்கான மக்கள் ஏழ்மையில் இருக்கும்போது இக்குணங்களை கடைப்பிடிக்கவேண்டியது அவசியம் எனக் கருதினார். நமது குடியரசு தலைவரும், கவர்னர்களும் எளிய ஆடைகள் அணிவதுதான் உகந்தது - வெளிப்பகட்டு அவசியமில்லை என்றார். கண்ணியம் என்பது வெளித்தெரிவதில் இருப்பதில்லை. அது உள்ளொளி பண்பாட்டின் வெளிப்பாடே  (Dignity is the result more of inner culture) என்றார் கிருபளானி. காந்தியிடம் நாம் கற்றுக்கொண்ட எளிமையை  விடலாகாது என்பது அவரது வாதமாக இருந்தது.

நட்பு மேற்கொள்வது என்பதற்கு ராஜாஜி தந்த விளக்கத்தை கிருபளானி மேற்கோளாக தந்தார். சிரித்து மகிழ்வது மட்டுமல்ல நட்பு. அவ்வப்போது மேற்கொள்ளும் ஆக்கபூர்வ விமர்சனமும் நட்பின் வெளிப்பாடாக இருக்கவேண்டும் என்பது ராஜாஜி அவர்களின் புரிதல். தங்களை ஆள்பவர்கள் மீது நம்பிக்கை இருக்கும்வரைத்தான் தாங்களே முன்வந்து மக்கள் ஒத்துழைப்பை நல்குவர். சந்தேகம் வந்துவிட்டால், ஆள்பவர்கள் தங்கள் நம்பிக்கையை பொய்த்துவிட்டார்கள் என்பது வலுப்பெற்றால் அவர்களால் மனம் விரும்பிய ஒத்துழைப்பை தர இயலாமல் போகும் என்றார் கிருபளானி.

அதிகாரம் என்பதற்கான குறைகளை  அதன் எதிர்மறை குணங்களை காந்தி அறிந்தவர். ஆனால் அரசியல் என்பதிலிருந்து விலகவும் முடியாது என்பதால் தனது அரசியல் என்பதை அவர் வழிமுறையாக, விடுதலைக்கும், மனிதர்களின் சமதையான வாழ்க்கை முறைக்குமான  வழியாக கொண்டார். அவர் காலத்து அரசியல் என்பது தியாகமும் சித்திரவதைகளை அனுபவிப்பதுமாக இருந்தது. அதிலும் அவர் மிக கவனமாக உண்மை- அகிம்சை முறைகளை கைக்கொண்டார். இன்று எங்கு திரும்பினும் அரசாங்கம் நிற்கிறது. மக்களின் பிரச்சனையை காங்கிரஸ் தீர்த்தால் அது அதிகாரத்தில் நிலைக்கும். இல்லையெனில் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட்கள் என வந்து தீர்த்தால் அவர்கள் அதிகாரத்தில் இருப்பர். காந்தி மனித இயல்பின்மீது அவநம்பிக்கை கொண்டவராக இல்லை. அவர்கள் செய்திறன் மீது அவர் வரையறைகளை நிர்ணயிக்கவில்லை. அளப்பரியது என்கிற உளவியல் அவரிடம் செயல்பட்டது என்கிறார் கிருபளானி.

ஜனநாயகம் என்பதை பெரும்பான்மை என்பதுடன் மட்டும் அவர் நிறுத்தவில்லை. அதற்கு காரணகாரிய செயல் என்கிற மதிப்பை கிருபளானி கூட்டினார். பெரும்பான்மை மக்களின் விருப்பம் என்பதுகூட அறியாமையுடன் இருந்துவிடக்கூடாது. அதற்கு சிறந்த நேர்மையான வழிகாட்டல் தேவைப்படலாம் என்பதை (Some of us conceive democarcy to be the will of the majority and this will needs no guidance. Is the will of the majority always well informed? Does the majority need no guidance from wise, well informed and united leadership) அவர் வலியுறுத்தி வந்தார்.  பெரும்பான்மை விருப்பம் என்பதுடன் நிற்காமல் சிறந்த கருத்துக்களின் துணையுடன் பெரும்பான்மை என்பதை அவர் இணக்கப்படுத்தி ஜனநாயகத்தை மேம்படுத்திட விழைந்தார்.

இதற்கு உதாரணமாக இன்று பெரும் அரசியல் சர்ச்சையாக மாறி நிற்கும் பசுகொலை தடை என்பதைப்பற்றி அவர் பேசுகிறார். காந்தி இதை தவறான கோரிக்கை என விளக்கியதை கிருபளானி அதில் எடுத்து உரைத்தார். பசுகாப்பு என்பதை எதிர்மறையாக அணுகுகிறார்கள் என்ற கவலை காந்திக்கு இருந்தது என்றார் கிருபளானி. பெரும்பான்மை உறுதி விருப்பம் என்பதுடன் சரியான காரணம் கொண்ட விருப்பம் என்பதாகவே ஜனநாயகத்தை புரிந்துகொள்ள வேண்டும் (Democarcy is not only will of majority but with right reason) என்கிற  நல்ல வரையறையை கிருபளானி தனது அனுபவத்திலிருந்து நாட்டிற்கு தந்தார்.

இந்து திருமண சட்டம், மொழிக்கொள்கை, மாணவர்களும் அரசியலும், அரசியல் கட்சிகள். நான் ஏன் காங்கிரசிலிருந்து வெளியேறினேன், அரசியலில் மறைபொருள்வாதம், விமர்சன பயம், நாட்டுப்பிரிவினைக்கு பலியானவர்கள் போன்ற பல கட்டுரைகளை கிருபளானி எழுதினார். காந்தி குறித்த ஏராளமாக எழுதியவர் கிருபளானி

1951  கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி (KMP)  துவங்கி பின்னர் பிரஜா சோசலிஸ்ட்களுடன் இணைந்தார். பின்னர் அதிலிருந்தும் 1954ல் வெளியேறினார். நாடாளுமன்றத்தில் தனது ஆழமான உரைகளால் விவாதங்களை வளப்படுத்தினார். இந்திரா அம்மையார் கால எமர்ஜென்சியின் போது அதனை எதிர்த்து காந்தி ஜெயந்தி அன்று போராடியதால் கைது செய்யப்பட்டார். ஜேபியின் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தார். அவரது துணைவியார் சுசேதா கிருபாளனி இந்தியாவில் உத்தர பிரதேச முதல் பெண் முதலமைச்சராக 1963ல் இருந்தவர். அவர் தன் அளவில் பெருமைக்குரிய வரலாற்று பின்னணி கொண்டிருந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்ட நாயகிகளுள் சுசேதா ஒருவர்.   ஆகஸ்ட் 1947 விடுதலை பிரகடன நள்ளிரவில் நேருவின் உரையை உலகம் கேட்டதுபோல் அன்று வந்தேமாதரம், ஜாரே ஜகான்சே அச்சா, ஜனகனமன பாடல்களை சுசேதா பாடிட உலகம் கேட்டது.

ஆச்சார்யா கிருபளானி அவர்கள் தனது 93ஆம் வயதில் அகமாதாபதில் இயற்கை எய்தினார். தனது வாழ்க்கை அனுபவங்களை ’எனது காலம்’ என அவர் பதிவு செய்திருக்கிறார். மனிதர்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறுவேறுபாடுகளை மாபெரும் கொள்கை பூசல் அளவிற்கு உயர்த்தாமல் இருப்போம்.  தனிப்பட்ட தொடர்புகள் தேவை. எப்போதுமே மனிதர்கள் கொள்கைகளைவிட சிறந்தவர்கள், தேவைப்படுபவர்கள். சமுக உறவுகளில் நம் இவற்றை புரிந்து கொள்ளமுடியும் என்றார் அவர். அருகில் அமர்ந்து விவாதிப்பவர்களுடன் அவர் நகைச்சுவை ததும்ப பேசுவார். தன்னை கேலி செய்துகொள்வார். தன் சிறுமண்டையை மறைக்கத்தான் நீண்ட முடி வளர்ந்துள்ளது என்பார். காந்திய சிந்தனைகள் குறித்து ஓயாமல் எழுதி வந்தவர் அவர்.

Ref:

Acharya Kripalani -    GS Bhargava

Kripalani and His Ideas   - J S Bright

J B Kripalanai- His vision and Ideas-     Verinder Grover

ஜுன் 2017

No comments:

Post a Comment