Skip to main content

தமிழும் பிராகிருதமும்

 

                               தமிழும் பிராகிருதமும்

தமிழும் பிராகிருதமும் என்ற ஒப்பியற் சொற்பொழிவென்றை அறிஞர் மு.கு ஜகந்நாதராஜா 1990 டிசம்பரில் நிகழ்த்தினார். பின்னர் அது நூல்வடிவம் பெற்றது. மு. அறக்கட்டளை சார்பில் இந்த சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டிருந்தது.

மு. வந்தடைந்த புள்ளிகள் : ”மக்களின் மொழியாக வளர்ந்த பிராகிருத மொழிகளில் வடமொழிக் கூறு தவிர திராவிடக் கூறுகளும் இருந்தன.

திராவிட மொழிகளின் செல்வாக்கால் ஆரியர் மொழியில் மாறுதல் ஏற்பட்டன. பாலியும் வடமொழியும் திராவிட மொழியும் கலந்தது  பழங்கால மக்கள் பேசிய பேச்சாகும்.”

 பாலி பவுத்த மத சிந்தனையின் உறைவிடம் என்றால் பிராகிருதம் சமண சிந்தனையின் உறைவிடமாகும். மனிதன் பேசிய மூலமொழி எது என்று யாரும் கூறிவிடமுடியாது என்பதை ஜகந்நாத ராஜா தெளிவுபடுத்திவிடுகிறார். அதற்கான கால இடங்களையும் கணிக்கமுடியாதென்கிறார். அதேநேரத்தில் மொழிநூலார் ஏற்றுக்கொண்ட சில பொது அம்சங்களையும் அவர் சொல்வார். மூலமொழி ஒன்றிலிருந்து காலங்கடந்த பிறகு பல்வேறு கிளை மொழிகள் உருவாகியிருக்கலாம். வளர்ச்சி நிலையில் மொழிகள் திரிந்து புதுமொழிகள் உருவாகின்றன. ஒலிகள் திரிந்தும், நெகிழ்ந்தும், உறழ்ந்தும், பிறழ்ந்தும், நலிந்தும், மெலிந்தும் உருமாறுகின்றன.  சமஸ்கிருத சொற்கள் பிராகிருதமாகத் திரியும் நிலையைக் கவனிக்க வேண்டுமென்கிறார்.



மொழிக்குடும்பங்களை அவர் மூன்று பெரும் பிரிவுகளாகச் சொல்கிறார். ஆரிய மொழிக் குடும்பம்- இதில் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், ஹிந்தி, வங்காளம், மராட்டி, ஒரியா,  குஜராத்தி, சிந்தி  போன்றவற்றையும், கிரேக்க இலத்தின் குடும்பவகையையும் சொல்கிறார். அடுத்தது செமிடிக் குடும்பம்- இதில் சமாரியன், சிரியன், ஹீப்ரு, அரபி, அபிசீனியா போன்ற ஆரமேயி, ஹைப்ரேயி, அரபி மொழிகள் இருப்பதைக் காட்டுகிறார். துரானிய மொழிக்குடும்பத்தில்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு போன்ற திராவிடக் குடும்பத்தை வைக்கிறார். இந்த துரானிய குடும்பத்தில் மங்கோலியம், திபேத், சீனா, மலாய், பூடான், பர்மா, நாகா, துருக்கி , சைபீரியன், அஜெர்பைய்ஜான் போன்றவற்றையும் அடக்குகிறார்.

 ஆரிய மொழிக்குடும்பம் அய்ரோப்பா, ஆசியாவின் மேற்குப்பகுதி, இந்தியாவில் பேசப்பட்டதெனில் செமிடிக் எகிப்து, ஆப்ரிக்கா வடக்கு மேற்கு, அரேபியாவில் பேசப்பட்டன. துரானியகுடும்பம் ருஷ்யாவின் கீழ்ப்பகுதி, சீனம், இந்தியாவின் தென்பகுதியில் பேசப்பட்டதாக ராஜா தெரிவிப்பார்.

 மாக்ஸ்முல்லர் சம்ஸ்கிருதம்- சிரீக், லத்தின் தொடர்பை ஆய்ந்தார். வடமொழியின் தத்துவ இலக்கியத்தன்மையை அவர் வெளிக்கொணர்ந்தார்.

 ஹீப்ரு மூல மொழி, தமிழே மூலமொழி, சம்ஸ்கிருதமே மூலம் என பலர் பிரிந்து பேசிக்கொண்டிருந்தாலும் ஜகந்நாதராஜாவைப் பொறுத்தவரை உலகின் மூலமொழியை பெயரிட்டு அழைக்க முடியாதென்றே கருதினார்.  அதேபோல் பத்தாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டே ஆரியர்- திராவிடர் கலப்பு நிகழ்ந்ததாகவும் அவர் கருதினார். ஆர்ய மொழி கடுமையும் பல ஒற்றுக்கள் இணைந்தும் இருந்தால் திராவிடம் மென்மையும்  உயிர் எழுத்தொலிகள் மிக்கும் பின் ஒட்டுச் சொற்களைக் கொண்டதாக இருக்கிறது. சிங்களம் ஆர்யமொழிக் குடும்பம் சார்ந்ததென்கிறார் ராஜா.

 எந்த மொழியிலும் பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கும். வேத, பவுத்த, சமண செல்வாக்கு தென்னாட்டில் வந்த நிலையில் சம்ஸ்கிருத, பாலி, பிராகிருத சொற்கள் நிறைய கலந்து போனதாக அவர் சொல்கிறார்.

இஸ்லாமியர் காலத்தில் பார்சி, உருது சொற்கள் கலந்தால், கிருஷ்ணதேவராயர், நாயக்க மன்னர் காலத்தில்  தெலுங்குச் சொற்கள் தமிழில் கலந்தன. ஆங்கிலேயர் வரவால் ஆங்கிலச் சொற்கள் மிகுதியாகக் கலந்தன. இதைத் தவிர்க்கமுடியாதவை என்கிற பார்வையை ஜகந்நாத ராஜா வெளிப்படுத்துகிறார்.

 அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான வடமொழி இலக்கியங்கள் கிடைத்தது போன்ற பழமையானவை தமிழில் கிடைக்காவிடினும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள் கிடைத்துள்ளன. மூல திராவிடமே தமிழ்தான் என்பதை ஏற்பதற்கில்லை என்ற கருத்தை ஜகந்நாத ராஜா கொண்டிருந்தார். ’கரமா ’ - கரமா எது மூலம்- எது திரிபு எனக் கேள்வி எழுப்பி கன்னடம் , தெலுங்கு, தமிழ் சொற்களில் இதை தெளிவாக்க முடியவில்லை என்பார் ராஜா. தமிழில் கிளி மூலம் என்றால் ( தெலுங்கில் சிலுக), கிவி கன்னடத்தில் ( செவி தமிழில், செவ்வி தெலுங்கில்) என ககரம் காட்டி எது மூலம் எனக் கேட்பார் ராஜா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இவை எல்லாவற்றிற்கும் மூல திராவிட மொழி ஒன்று இருந்திருக்கவேண்டும்- அதிலிருந்து கிளைத்தவை இவை என அவரது ஆய்வு செல்லும்.

ஒரு தமிழ்ச் சொல் பிற திராவிட மொழிகள் எதிலும் இல்லாவிட்டால் அது தமிழ்ச் சொல் ஆகும். அச்சொல் பிற திராவிட மொழிகளாகிய தெலுங்கு, கன்னடம், துளுவில் இருந்தால் அது திராவிடச் சொல் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

நீர் என்பதை திராவிடச் சொல்லாகவும் புனல் என்பதை தமிழ்ச் சொல்லாகவும் ராஜா பகுக்கிறார். பூ, அலர் திராவிடச் சொற்கள் எனவும் மலர், போது, தார், இணர், துணர் தமிழ்ச் சொற்கள் என்கிறார். மீன் திராவிடச் சொல் எனில் கயல் தமிழ் என்கிறார். அகராதியையே திராவிடச் சொற்கள், தமிழ் சொற்கள் என தனியே தொகுக்கக் கோருவார்.

 அசோகரது கல்வெட்டு எழுத்துக்களே தொன்மையானது- அதை பிராமி என்கிறோம். அது  பிராகிருத- பாலி மொழியில் அமைந்து இந்திய எழுத்துக்களுக்கு மூலமாக அமைகின்றன. தமிழில் 30 எழுத்துக்கள் என்றால் தெலுங்கு ஆரம்பத்தில் 36உடனும் இப்போது வடமொழி எழுத்துக்களை சேர்த்துக்கொண்டு 52 ஆக இருக்கிறது. அடிப்படையான உடல் உறுப்புக்களை குறிக்கும் சொற்கள் தமிழ் சம்ஸ்கிருதத்தில் முற்றிலும் மாறுபடுகின்றன.

செய்என்பதை எடுத்துக்கொண்டு ராஜா விரிவாக விளக்குவார். ’டுக்ருஞ்கரணேபாணினீய தாது. அதில்டுக்ருஞ் ஆரியவேர்ச்சொல்- இதில் சம்ஸ்கிருதம்க்ரு ஏற்கும். ’டு என்பது ஆரிய பிற மொழிகளான கிரேக்கம் லத்தீன் ஆங்கிலத்தில் செய் எனும் பொருளில் இருக்கும். மூல வேர்ச்சொல் பிளவுண்டு எப்படி பலமொழிகளில் செல்கிறது என்பதை ராஜா விளக்குவார்.  அதேபோல்வரு எனும் திராவிட வேர்ச்சொல்லின்வா தமிழில், ’ரா தெலுங்கில், மலையாளத்தில் அப்படியேவரு என பயன்படுத்தப்படுகிறது.

 ருக்வேதமொழிக்கும் ஈரான் பாரசீகஜெண்ட் அவஸ்தா மொழிக்கும் தொடர்புண்டாம். தொன்மை மொழியான சம்ஸ்கிருதம் பிராகிருதமாக உருமாற்றம் அடைந்தது.  அதேபோல் திராவிடத்தின் தொன்மையான மொழி தமிழ். தமிழ் மலையாளமாக திரிந்தாலும் தெலுங்கோ, கன்னடமோ மூல திராவிடமொழியினின்று தோன்றின என்பது ஜகந்நாத ராஜாவின் வாதம்.

சம்ஸ்கிருதத்திலிருந்து அல்லாமல் மூல வேதமொழியிலிருந்துதான் பிராகிருதம் என பேசுவாரும் உளர். கிமு 1000த்திலிருந்து கிமு 100 வரையிருந்த கால மொழியை பாலி என்கிறார் ராஜா. இந்த மொழி புத்தர்கால மொழி. அசோகரின் திரிபிடகங்கள் பிராகிருதத்தின்  வகைதான். அதை பாலி என்றனர். பள்ளிகளில் பேசும் மொழி பாலி. மகாவீரர் அதற்கு முன்னர்  இருந்த அக்கால மொழியும் பிராகிருதமே. அதைஅர்த்த மாகாதி மொழி என்கின்றனர்.

பாலிக்கும் சம்ஸ்கிருத தொடர்பு இருக்கிறது. அதன் சிதைவாக பாலி இருக்கிறது. மகாயான பெளத்தம் சம்ஸ்கிருதத்தை எடுத்துக்கொண்டது. நாகர்ஜூனரும், வசுபந்து, அசகரும் சம்ஸ்கிருத  நூல்களை யாத்தனர்.

 பாலி மேலும் திரிந்துஅபப்பிரம்சம்- கீழான வீழ்ச்சியுறுதல் பொருளில்- தூயநிலை வீழ்ந்து கிபி 100- 800 காலத்தில்  மாறத்துவங்கியது. பிராகிருதம் என்று அறியப்பட்ட இந்த அபப்பிரம்சம் 15 ஆம் நூற்றாண்டுவரை இருந்ததாக ராஜா சொல்கிறார்.

இந்தஅபப்பிரம்சமே இஸ்லாமியர் ஆட்சிக்கால கலப்புகளால் மராட்டி, குஜராத்தி, சிந்தி, காஷ்மீரி, பஞ்சாபி, இந்தி, உருது, வங்காளம், அஸ்ஸாமி, ஒரியா மொழிகளாக உருப்பெற்றதாகவும் ஜகந்நாதராஜா சொல்கிறார்.

 சம்ஸ்கிருதருணம் பாலி-பிராகிருதத்தில்  இணம் ஆகி கடன் எனும் பொருளுக்குரியதாக அமைந்தன. ’விம்சதிவீசதி ஆனது. இருபது எனப் பொருள். சூர்ண என்பது சுண்ணோ ஆகி சுண்ணம் எனப்பொருளானது. கர்ம கம்ம வினையானது. ப்ரேத என்பது பேத ஆகி பிணம் என நாம் சொல்கிறோம். நர: என்பது ணரோவாகி மனிதன் எனப் பொருள் கொள்கிறோம். ந்யாய நியாய நியாயம் ஆனது. த்வரிதம்  என்பது ‘துரிஅம்ஆனது.  விரைவு  எனப் பொருள்..

 தமிழறிஞர் வடமொழி என்று சம்ஸ்கிருதம், பிராகிருதம் இரண்டையும் குறித்தனர். வேதமொழி சம்ஸ்கிருதம் எனில் மக்களின் பேச்சில் திரிந்தது பிராகிருதம் எனலாம்.

 பிராகிருத இலக்கண ஆசிரியர் பெயர் வரருசி. அவர் மகாராஷ்ட்ரி, மாகாதி, ஸெளரசேனி, பைசாசி என நான்கை சொல்கிறார். மார்க்கண்டேயர் எனும் ஆசிரியர்  மகாராஷ்ட்ரி, செளரசேனி, ப்ராச்யா, அவந்தி, மாகதீ எனும் மொழிகள் ஐந்தைச் சொல்கிறார். 7 ஆம் நூற்றாண்டின் தண்டி சம்ஸ்கிருதம், பிராகிருதம், அபப்பிரம்சம் எனும் மூன்றைச் சொல்கிறார். பிராகிருத பிரிவாக அவர் கெளபி, லாடி என கூடுதலானவற்றைச் சொல்கிறார்.

 தமிழ்  சொற்கள் பிராகிருதத்தில் இடம்பெற்றதைப்பற்றி ராஜா விளக்குகிறார். அத்தை அத்தாவாக, பிள்ளை  என்பது பீலுஆ  என்று, பருத்திபலஹீஎன்று, தீர்தல்திரஏஎன, உள்ளே உலே என்று வருவதை எடுத்துக்காட்டுகிறார். அதேபோல் தெலுங்கின் பொட்ட போட்டம் என்றும் ( வயிறு) , கன்னடத்தின்  துப்பதுப்பவென்றே ( நெய்) பிராகிருதத்தில் இருப்பதைச் சொல்கிறார்.

 வடமொழியில் இல்லாத தமிழ் எழுத்துக்கள் என்றால் பாலி- பிராகிருதத்தில் வருவதை ராஜா சொல்வார். பிராகிருதத்தில்ரு ரூ லு லூ இல்லையாம். அங்கு ஏஒ உயிர்  இருக்கிறது. ’ ஒளஇல்லை. ஆனால் அவை சம்ஸ்கிருதத்தில் உள்ளன. பிராகிருதத்தில்ஞ ங இல்லை.

 வட ஆரிய மொழிக்கும் தென் தமிழ் மொழிக்கும் இடையே தெலுங்கு இருப்பதால் ஈரினக் கலப்பின் விளவு அதிகம் இருக்கலாம் என்பதை ராஜா ஏற்கிறார். பிராகிருத தெலுங்கு நெருக்கம் என்கிறார்.

 சமண நூல்கள் பிராகிருத இலக்கியங்களாக இருக்கின்றன. அதைஅர்த்தமாகதிஎன்கின்றனர். திரிபிடகங்களை மாகதி- பாலி என அழைத்தனர்.  ஒரு பிராகிருத வரியைச் சொல்லி தமிழில் அதை ராஜா அர்த்தமாக்குவார்.

தஏ ணம் கேஸீகுமாரஸமணே பஏஸிம் ராயம் ஏவம் வயாஸி- இளம் துறவியாகிய கேசி மன்னன் பிரதேசியிடம் கூறினார் என்பது இதன் பொருளாம். உத்தராத்யன சூத்திரம் ஹெர்னன் ஜாகோபியால் ஆங்கிலத்தில் வந்துள்ளதை ராஜா சொல்கிறார். அதன் உபதேசங்களில் ஒன்று:

   புல்நுனியிலுள்ள பனித்துளி போன்றதே உலக இன்பம். ஆயுளும் அதுபோன்று நிலையற்றது. அப்படியிருக்க ஏன் நிலையான நன்மைதரும் நெறியில் புக முயற்சிக்கக்கூடாது”-  பல சிறந்த தத்துவ தெறிப்புகள் அதில் இருப்பதாக ராஜா சொல்கிறார்.

 பிராகிருதத்தில் கதை நூல்களாகதரங்கவதீகதா, பாதலிய்த சூரி இருக்கின்றதாம். தரங்கலோலா என்பதை லாய்மன் ஜெர்மனி மொழிக்கு எடுத்துச் சென்றுள்ளார். ’வசுதேவ ஹிண்டி புகழ்வாய்ந்த நூலாம். வசுதேவரின் கதையாம். ஹரிபத்ர சூரி என்பார்சம்ராதித்தன் கதை எழுதியுள்ளாராம். பஞ்சபூதம் தவிர்த்து தனியான ஜீவாத்மா என ஏதும் இல்லை என இது பேசுகிறதாம். பிங்ககன்  விஜயசிம்மன் உரையாடல் எனும் பகுதி தத்துவ தெறிப்புகள் நிறைந்தவையாம். காலிகா சார்ய, நர்மதா சுந்தரி கதை போன்ற பல படைப்புகளை பிராகிருத படைப்புகளாக ஜகந்நாத ராஜா காட்டுகிறார்.

11ஆம் நூற்றாண்டு பிராகிருத மொழிப் பாடல்  ஒன்று :

ஜம் கல்லே காயவ்வம்

அஜ்ஜம் சிய தம் கரேஹ துரமாணர்

பஹூவிக்கோ முஹூத்தோ

மா அவரண்ஹம் படிகே

அதாவது நாளை செய்ய வேண்டியதை இன்றே விரைந்து செய்து விடுக. ஒவ்வொரு நாழிகையும் பல்வேறு தடைகளுடன் கூடியுள்ளது. ஆகையால் பிற்பகல் செய்யலாம் என்று எதிர்பார்க்காதே.” காலத்தில் கூட்ட வேண்டிய கூடவேண்டிய செயலை தயங்காமல் செய்து முடி எனும் அற்புத அறிவுரையாக இப்பாடல் போவதைக் காணலாம்.

13ஆம் நூற்றாண்டை சார்ந்தஜினதத்தாக்யானம்இப்படி ஓர் இடத்தில் பேசுகிறதாம்

கரும்பு விளையும் ஊர், வெண்துகிலாடை, நெய், பால், செந்நெல் உணவு, அன்புள்ள மனைவி இவை இருந்தால் நண்பனே- அரசாட்சியால் என்ன பயன்? என்ன அற்புத புரிதல்.

பஉமசரியஎனும் பத்மசரிதம் இராமயணம் போன்ற காவியமாம். இங்கு இராமன் பெயர் பத்ம என்பதாம். ராமன் தாயாரின் பெயர் அப ராஜிதா என்பதாம்.

 ஜம்பூசரிதம்மனிதனின் பாட்டை அவதியை பேசுகிறது. ’மூங்கில் கழைமேலேறுகிறான், கைகளை மாசுபடுத்துகிறான். புழுதியில் புரள்கிறான். வயிற்றுப்பாட்டுக்காகத் தாழ்ந்த மனிதன் எதுதான் செய்யவில்லைஎன அது வினவுவதை பார்க்கிறோம்.

 அபயதேவ சூரி என்பாரின் பாடல் ஒன்று இவ்வாறு துதி செய்யும் :

 நீயே உடையவன், நீயே தாய், தந்தை! நண்பனும்

குருவும் நீயே! கதியும் மதியும் நீயே!

இரட்சகன் நீயே! நலந்தருபவன் நீயே!

துயர்ச் சுமையால் நலிகின்றேன்.

நிர்பாக்கியவான்களின் அரசன் நான்

ஜினதேவனே!

உன் தாமரை போன்ற இணையடிகளே சரண்!

என்னை நல் வழியில் பாலிப்பாயாக!” என்ன கவித்துவ பாடலது.

 வஜ்ஜாலக்கம்என்பது அறம் பொருள் இன்பம் வீடு குறித்த நல் கவிதை தொகுப்பாம். இதை ஐங்குறுநூறு உடன் ராஜா ஒப்பிட்டு சொல்கிறார். அதில் காணப்படும் ஒரு கவிதை:

ஸவ்யஸ்ஸ ஏஹ பய ,

பியம்மி உப்பாஇஏ பியம்காஉம்

ஸூய ணஸ்ஸ ஏஹ பயஇ

அகஏ வி பிஏ பியம் காஉம்

அதாவது நல்லது செய்தவர்கட்கு நல்லது செய்வது எல்லோருடைய இயல்பாகும். தீயன செய்தார்க்கும் நல்லனவே செய்தல் சான்றோர் இயல்பாகும் என்பது அதன் பொருள் என ஜகந்நாதராஜா சொல்லித் தருகிறார்.

 இப்படி ஒரு பாடல் பொருள் பெறுகிறது. ”கடவுளே என்பால் அருள் இருந்தால்மனித உலகில் பிறவியைத் தராதே! அப்படியே தந்தாலும் காதலைத் தராதே! அப்படியே தந்தாலும் பிரிவினைத் தராதே.”  சிந்தனை ஆற்றல் பிரமிக்க வைக்கிறது.

 அதேபோல்கெளடவதம்எனும் காவியம் உயர் கருத்துக் களஞ்சியமாம். லீலாவதி காதற் காவியமாம்.  தமிழ்நாட்டில் வாழ்ந்த ரகுநாத நாயக்கர் அவை சார்ந்த ராம்பா, மதுரவாணி எனும் பெண் கவிஞர்கள் பிராகிருத அறிஞர்களாம். அதேபோல்தஞ்சை மன்னர் துளஜாஜியின் அமைச்சர் கனஸ்யாமர் 20 நூல்கள் பிராகிருதத்தில் எழுதியுள்ளாராம்.

பிராகிருதம் பற்றிய அறிய இந்த புத்தகம் பயன்படும். ஆர்வம் உள்ளவர் மேலும் தேடிகொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா