தோழர்
தா.பா வின் ’பொதுவுடைமையரின் வருங்காலம்? ’
ஒரு வாசிப்பு
ஆர்.பட்டாபிராமன்
பொதுவுடைமையரின் வருங்காலம்? என்கிற ஆக்கம் தோழர் தா.பாண்டியன் அவர்களின் சிந்தனை தெறிப்புகள் நிறைந்த புத்தகம். முகநூலில் தோழர் வெள்ளிங்கிரி அவர்கள் பலமுறை மேற்காள் காட்டி அவசியம் படிக்கச் சொல்லிய புத்தகம். 2017ல் என்சிபிஎச் வெளியிட்டபதிப்பு. கோவைத் தொழிற்சங்கத்தலைவர் தோழர் எஸ்.எஸ் கோபாலகிருஷ்ணன் (SSG) ஜூன் 24ல் சென்னை வந்து சந்தித்தபோது இந்த புத்தகத்தை கொடுத்துப் போனார். அவருக்கு மிக்க நன்றி. ஜூன் 25, ஜூன் 26 என இரு நாட்களில் இரு அமர்வுகளில் அதை படித்தேன். 308 பக்கங்கள் கொண்ட புத்தகம். நான் மிக விரைந்து படித்த
சில புத்தகங்களில் தா.பாவின் ‘பொ.வ?’ புத்தகமும் ஒன்றாகியுள்ளது.
6 ஆண்டுகளுக்குள்தான்- சரியாக ஆண்டு நினைவில் இல்லை- கடலூர் பகுதி ஒன்றில் தொலைத்தொடர்பு தொழிலாளர் சந்திப்பில் தோழர் தா.பா பிரபுல்
பித்வாயின் Phoenix Moment, அமர்த்யா சென்- ஜான் ட்ரீஸ் எழுதிய uncertain Glory ஆகியவற்றை குறித்த செய்திகளை விளக்கிக்கொண்டிருந்தார். இரு புத்தகங்களையும் படித்திருந்தேன். தோழர் SSGயும் பிரபுல் புத்தகம் வாங்கி படித்துகொண்டிருந்த நிலையில் இருவரும் அது குறித்து விவாதித்தவர்களாக இருந்தோம்.
பொதுவுடைமையரின் வருங்காலம்? நூலுக்கு தோழர் ந. முத்துமோகன் அணிந்துரை எழுதியுள்ளார். ந.மு அதில் முன்வைத்தவை :
தா.பா பேசுவது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் பற்றியவை. தோற்றக்காலத்திலிருந்தே ஓர் இடதுசாரி தீவிரவாதம் இருந்து வந்திருக்கிறது. காங்கிரஸ், சோசலிஸ்ட்கள், அம்பேத்கர், பெரியார் திராவிட இயக்கங்களை அந்நியப்படுத்தி தனிமைப்பட்ட நிலை- சகபாடிகளை கண்டுணர்ந்து நெகிழ்வாக செயல்படவேண்டியதேவை, இந்திய சூழல்களை புரிந்து அதற்கு முன்னுரிமை கொடுத்து சிந்திக்க செயலாற்ற வேண்டிய பழக்கம், உட்கட்சி ஜனநாயகம் ரஷ்யா பாணியில் ஏன் - சொந்த சூழலை கணக்கில் கொண்ட அமைப்பு விதிகள் ஆகியன குறித்தவை .
ந.மு இந்த நூலுக்கு ஒரு பதிப்பாசிரியர் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தா.பா மீதான மரியாதையால் அதை விட்டிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். அதை உள்ளீடாக புரிந்து கொள்ளலாம். கடந்தும் சென்றுவிடலாம்.
தா.பா இந்நூலை 5 பகுதிகளாக பிரித்து விவாதித்துள்ளார் . முடிவுரை என்பதை மூன்று பக்கத்திற்குள் முடித்துக்கொண்டுள்ளார்
II
முதல் பகுதியை 41 கேள்விகளை முன்வைத்து
தனது பிரதியின் உரையாடலை தா.பா நகர்த்திச் செல்கிறார்.
விருப்பு வெறுப்பின்றி முன்வைக்கப்படும்
கேள்விகளுக்கு செவி மடுத்து வாழ்வின் அனுபவங்களுடன் அவற்றை இணைத்துப் பார்த்து பதில்
சொல்லும் பொறுப்பு கடமை இருப்பதை தா.பா சுட்டிக்காட்டுகிறார்.
முதலாளித்துவத்துவத்திற்கு என்ன
மாற்று- அது ஏன் சிறந்தது- அந்த பதிலை இடம் பொருள் காலமறிந்து மார்க்சியவாதிகள் கூறவேண்டும்.
விடுதலையடைந்தவுடன் 1948ல் கூடிய கட்சி ’முதலாளித்துவம்
வளர்ந்துவிட்டதாக- தொழிலாளர் புரட்சிக்கு தயாராகிவிட்டதாக’ சமர்பித்த
அறிக்கையை சார்பாளர் ஏற்றதைச் சொல்லி இடதுசாரி வாய்ச் சவடாலுக்கு பலியானதை தா.பா குறிப்பிடுகிறார்.
தொடங்கியது சரிவு என்று மதிப்பிடுகிறார்.
காலமாற்றம், அறிவியல் ஏற்படுத்தும்
மாற்றங்கள் ஆகியவற்றை சரிவர மதிப்பிடமுடியாமல்
சிந்திக்கவும் செயலை மாற்றவும் இடதுசாரிகள் மறுப்பதே சரிவிற்கான காரணம் என்ற
மதிப்பீட்டிற்கும் தா.பா வருகிறார்.
இடதுசாரி இயக்கம் என்ற வகையில்
அம்பேத்கர் இறக்கும்வரை எந்த உறவும் தொடர்பும் கொள்ளாதது ஏன்? முதல் கட்சி மாநாட்டில்
தலைமை தாங்கிய சிங்காரவேலருடன் கட்சி தொடர்பற்று இருந்ததேன் என்கிற கேள்விகளை தா.பா
எழுப்புகிறார்.
குபர் புத்தகம், டாங்கே, சர்தேசாய்
கட்டுரைகள் மூலம் அம்பேத்கர் புரிதல்களை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கு முன்னரே முயற்சிகள்
நடந்தன. அம்பேத்கரின் அடிப்படையான கம்யூனிசம் மார்க்சிய பார்வைகள் குறித்து விவாதங்களை
மூடிவிடவேண்டுமா என்பது கேள்விக்குரியதே .
அம்பேத்கர் எழுத்துக்களும் விவாதத்திற்கு அப்பாற்பட்டவையாக எண்ண வேண்டியதில்லை என்ற
புரிதலும் கூடவே தேவைப்படும்.
அதேபோல் பெரியார்- சிங்காரவேலர்
விவாதங்களை மூடிவிட்டு கடந்து போகவேண்டுமா என்பதும் கேள்விக்குரியதுதான். காந்தி- பெரியார்-
அம்பேத்கர்- நேரு- சோசலிஸ்ட்கள் என எவரையும் கம்யூனிஸ்ட்கள் காலத்தில் கற்றிருக்க முடியும்.
தா.பா சொல்வது போல் அந்தக் கற்றல் இந்தியத்தேவைகளை அடிப்படையாக வைத்தும் உலக மானுடன் என்பதை நோக்கி நம்மை நகர்த்துவதாகவும்
இருந்திருக்க முடியும் . இதை என் அனுபவத்தில் உணர்ந்தே சொல்கிறேன். இன்னும் வலதுசாரிகளையும்
அவர்களது வாதங்களையும் ஆழ வாசிக்காமலேயே வாயடிப்பதை குறித்தும் உள் உணர்வு பரிசீலனை தேவைப்படும் நிலையிருக்கிறது.
III
தொழிலாளர் இயக்கங்கள் குறித்து
ஆங்காங்கே தா.பா விவாதித்துச் செல்கிறார். அரசுப்பணியாளர் ஊதியம், பென்சன், பொதுத்துறையில்
ஊதியம் பிற சலுகைகள் ஆகியவை போராடி பெறப்பட்டுள்ளன. மேலும் பெற அவர்கள் போராடியும்
வருகின்றனர். கோடானுகோடி பிற தொழிலாளர்களுக்கு இந்த உரிமைகள் ஏதுமில்லை. அரசின் வருமானம்
குறிப்பிட்ட பகுதியினருக்கே செல்கிறதே- நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்கிருந்து பிற
பகுதிகளை முன்னேற்ற பாடுபடுவீர்கள் என்ற கேள்வி எதிர்கொள்ளப்படவேண்டிய ஒன்றே என்கிறார்
தா.பா. இதைப் பரிசீலித்தால் இடதுசாரிகள் மக்களிடமிருந்து ஒதுக்கப்பட்டதை புரிந்துகொள்ளலாம்
என்கிற மதிப்பீட்டிற்கு வருகிறார்.
இலஞ்சம் பெறுபவர்களாக பணியாளர்-
அதிகாரிகள் இருந்தால் அவர்களின் கடமைகளை உணர்த்த முடியாத இடதுசாரிகளாக நாம் பார்க்கப்படுகிறோம்.
உரிமைகளுக்கு போராடும்போது மக்களின் ஆதரவு கிடைக்காமல் போகிறது.
அதேபோல் போராட்டமுறைகள் என்றால்
வழக்கமான கண்டன முழக்கம், உண்ணாவிரதம், மறியல் என்றாகிறது. போராட்ட முறைகளை நம் உணர்விற்கேற்ப
திணிக்கவும் கூடாது. தலைவர்கள் இருக்கிறார்கள்- தலைமைத்துவம் இல்லை என்கிறார் தா.பா.
எல்லா மாநிலங்களிலும் கட்சியின்
தலையாய கடமைகளில் ஒன்றாக கல்விக்கூடங்கள் நடத்துவது, இரவுப்பள்ளிகள் நடத்துவது, வாசகசாலை
அமைப்பது மருத்துவ உதவிகளைச் செய்வது என்பதைவிட தொழிற்சங்கம் உரிமைப் போராட்டங்களில்
மட்டும் கவனம் செலுத்தியது ஏன் என்கிற கேள்வியால் தா.பா சில நிர்மாணத்திட்ட தூண்டலைச்
செய்கிறார் என எடுத்துக்கொள்ளலாம்.
IV
தா.பா மார்க்சிய தத்துவத்தில்
குறைபாடில்லை என்பதை பல இடங்களில் ஏற்றே தன் விவாத பரப்பை அமைத்துக்கொண்டுள்ளார். மார்க்சியம்
வென்று நிற்கிறது என்றே பல இடங்களில் எழுதுகிறார்.
இது குறித்த விவாதங்கள் ஏதும் அவரிடம் செல்வாக்கு செலுத்தவில்லை.
சோவியத் வீழ்ந்தது குறித்து ஒருங்கிணந்த
விவாதம் போதுமான அளவில் இல்லாத குறை- சோவியத் போய்வந்த பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் கண்களில்
அங்கு நிலவிய குறைகள் தென்படாமல் போனது- அது குறித்து பேசாத குறை, இரண்டாம் உலகப்போர்
ஓய்ந்தபோது சோவியத்- ஸ்டாலின் புகழ் உச்சத்தில் இருந்த நேரத்திலாவது அங்கு ஜனநாயக மாற்றங்களை
துவக்காத குறை போன்றவற்றை தா.பா சொல்கிறார். டிட்டோ போன்றவர் நடத்திய புதிய சோதனைகளைப்
பார்க்காமல் முத்திரை குத்தியதும் குறையானதே என்கிறார்.
எந்த தேர்தலாலோ- அல்லது அமெரிக்க
அட்டகாசத்தாலோ சோவியத் விழவில்லை. கட்சிக்குள்ளே குழி பறிக்கிற கும்பல் வளர்ந்து கொழுக்க
வழிவிட்டதால்தான் வீழ்ந்தது. கட்சிக்குள் தவறான பேர்வழிகள் தலைமைக்கு வர எது வழி வகுத்ததோ
அதைக் கண்டறிந்து தடுக்க வேண்டும். கட்சியின் கட்டமைப்பு விதிகளை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
தவறானவர் கண்டறிய என்ன டிடெக்டர் இருக்க முடியும். சில மாற்றங்கள் செய்ய ஆலோசனைத் தருகிறார். இருந்தபோதிலும் இதைச் செய்ய
என்ன திருத்தங்கள் வேண்டும்- எவ்வாறு இயங்க வேண்டும் என ஒரு தனி மனிதன் எழுதுவது பயன்
தராது என்ற அளவில் நிறுத்திக்கொள்கிறார்.
நடுநிலையில் எவராவது முன்வைக்கும்
விவரங்களை உடனே ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆய்விற்கு எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் தீர்ப்பு
கூறலாம் என தா.பா எழுதியிருப்பது கருத்துக்
கூற முயற்சிக்கும் தனி மனிதர் பின்பற்ற வேண்டிய ஒன்றாகவே படுகிறது. தீர்ப்பை முன்கூட்டியே
வைத்துக்கொண்டு கருத்துக்கூறல் சிந்தித்தல் என்கிற பழக்கம் வெகுவாக ஏற்பட்டுள்ள சூழலில்
இந்த அறிவுரை பொருட்படுத்த வேண்டிய ஒன்றாகும்.
சில நாடுகளில் கொடுங்கோலர்கள்
இடதுசாரி பெயரில் வந்து மக்களை வாட்டியது, சோவியத் உட்பட சமத்துவம் என்ற பெயரில் தனித்திறமைக்
கண்டு அங்கீகரிக்காமை போன்ற அம்சங்களையும் சொல்கிறார்.
சீனப்பாதை, வியத்நாம், கியுபா
என நாடுகள் பல வழிகளில் பாதையைக் கண்டடைந்ததுபோல நமக்கான பாதை என்ன எனத்தெளிந்து கொள்ளாமல்
இருந்ததால் தனிமைப்பட்டோமா என்கிற கேள்வி அவரிடமிருந்து எழும்பியிருக்கிறது.
சிறைவாசத்தில் ராஜாஜி அபேதவாதம்
குறித்து எடுத்த வகுப்பை தா.பா ராஜாஜியின் சிறப்பான புரிதலாக ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில்
பதிவு செய்திருப்பார். ராஜாஜியின் அபேதவாதத்தை அறிமுகப்படுத்தி கட்டுரை ஒன்றை முகநூலில்
எழுதியிருந்தேன். வாய்ப்புள்ளவர் பார்க்கலாம்.
சோவியத்- ஸ்டாலின் தன் நாடு, தன்
அதிகாரம், தன் கட்சி நலன் என்றே முடிவெடுத்தார். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாஸ்கோ
முடிவே தங்கள் முடிவென்று சொன்ன புரிதல் குறையை தா.பா சுட்டிக்காட்டுகிறார்.
அதேபோல் சுபாஷ் போசை ஹிட்லரின்
கைக்கூலியாக சித்தரித்த குறையைச் சொல்கிறார். 1942 போராட்டத்தில் தேசிய உணர்விற்கு
மாறாக எடுத்த நிலையையும் சொல்கிறார். 1947ல் பெறப்பட்டது விடுதலையா என்கிற பார்வை இருந்ததை
சுட்டிக்காட்டுகிறார். 1948- 1950க்குள் மூன்று அரசியல் நிலைகள் மாற்றப்பட்டன. சுதந்திரப்
போராட்டம் வர்க்கங்களைச் சேர்ந்து போராடவைக்கும் நிலையில்தான் நடக்கும். ஏகாதிபத்திய
எதிர்ப்பு முனை என்று அதை நேசமாக வைத்திருந்திருக்கவேண்டும் என்ற புரிதல் இல்லாமல்
போனதைக் காட்டுகிறார்.
கம்யூனிஸ்ட் நாடு ஆக்கிரமிக்காது
என இ எம் எஸ் போன்றவர்கள் பேசிவந்ததை ’சூத்திரம்
வகை’ புரிதல்
என தா.பா சொல்லி விளங்க வைக்கிறார். ஹங்கேரி, செக், ஆஃப்கானுக்கு படைகள் சென்றது சரியா
என வினவுகிறார்.
தனிமனிதர்களை பிறப்பை வைத்து அல்லாமல்
கொண்ட கொள்கை, செயலை வைத்து மதிப்பிட தலைமைக்கு வருவோர் கற்க வேண்டும். அது முதல் பாடம்
என்கிறார் தா.பா.
கம்யூனிஸ்ட் கட்சியில் செயலர்களாக
வருபவர்கள் கூறுவதே மார்க்சியம் என்பது தவறான நம்பிக்கை- கட்சியைக் காப்பாற்றாது. மார்க்சிய
மெய்ப்பொருள் காண்பது அறிவு. கட்சி உறுப்பினர் (பக்தர்) என்கிற உரிமச் சீட்டு பெற்றுவிட்டதால்
எவரையும் இழித்துப் பழித்துப் அவதூறு செய்வது இயக்கத்திற்கு இழிவை ஏற்படுத்தும் என
எழுதுகிறார் தா.பா.
மனிதர்களைக் கொண்டதே கம்யூனிஸ்ட்
கட்சி. எனவே மனித பலவீனம் சில சமயங்களில் கட்சியின் வளர்ச்சியைக் கெடுத்தது உண்டு..கட்சிக்குள்
கொள்கை, போர்த்தந்திரங்கள், தேர்தல் உறவுகள் வரும்போதெல்லாம் முன்னோடித் தலைவர்கள்
மீது அவதூறு பொழிவது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவது வாடிக்கை ஆகிவிட்டது.
அதற்கு புரட்சிகர முழக்கம் எனப்பெயர் என தா.பா விமர்சனம் சொடுக்குகிறார்.
குறிப்பிட்ட முக்கிய 1942,
1948, 1962, 1964 பிளவு கட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் அரசியலை பாதித்த முக்கிய திருப்பங்கள். 1957 தேர்தல்
மூலம் முதன் முறையாக கேரளத்தில் இ எம் எஸ் தலையில் ஆட்சிக்கு வரமுடிந்தது. கல்வி நிறுவனங்களை
நெறிப்படுத்தியது பிரச்னையாகி போராட்டங்கள்- தடியடி நடந்தது. வலதுசாரிகளின் ஆபத்தை
உணரப்பெற்ற பாடம் என்கிறார் தா.பா.
தொடக்க காலம் முதலே இ.க.க இந்திய
மண்ணில் காலூன்றி, இந்திய சமுதாய அமைப்பையும் சரியாக மதிப்பிட்டு , சுயமாக, சுதந்திரமாக
முடிவெடுத்து அதற்கேற்ப அந்தக் கட்டத்தில், அந்தக் கடமைகளை நிறைவேற்ற நேச சக்தி எது-
முதல் எதிரி சக்தி எது என இந்தியக் கம்யூனிஸ்ட்கள் முடிவு எடுப்பவர்களாக இருந்திருக்க
வேண்டும். மாறாக சர்வதேசியம் கோட்பாட்டை யாந்திரிகமாக நடைமுறைப்படுத்த, வழிகாட்டலுக்கு
ஆட்பட்டுவிட்டதே முதற்கோணல்- முற்றிலும் கோணல் எனத் தவறாக அடி எடுக்க வைத்துவிட்டது
என தா.பா எழுதுகிறார். இது அன்றைய இளம் குருத்துகளான
கம்யூனிஸ்ட்கள் மீதான தா.பாவின் அதீத எதிர்பார்ப்பாகவே தோன்றுகிறது.
மார்க்சியம் கற்று, கட்சி உறுப்பினர்
ஆனோரும்- தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையும், சமுதாய மாற்றக் கடமையை புறந்தள்ளி, பதவி அரசியல்
பாதையில் தடம் புரண்டதால், வர்க்கப்பார்வை என்பது சுயவெறுப்பு பார்வை hate
politics ஆகவும், வர்க்கப்போர் அக்கப்போராகவும்
நோய்வாய்ப்பட்டிருப்பதால், தன்னைத் தானே பலவீனப்படுத்தி வருகிறது என்ற மதிப்பீட்டை
தா.பா பொதுவாக சொல்லி நகர்கிறார். அவரின் இந்த
மதிப்பீட்டிற்கான காலத்தை- எவர் செய்தாரோ அவரை- அல்லது அந்த குறிப்பிட்ட கமிட்டியை
சொல்லி விளக்கியிருந்தால் கூடுதல் பொறுப்புடன் அவர் பேசியுள்ளார் என புரிந்துகொண்டிருந்திருக்க
முடியும். போகிற போக்கிலான பேச்சாக முக்கிய விமர்சனங்கள் இருந்துவிடக்கூடாது என்கிற
தன்மை அவசியம்.
ருஷ்ய கட்சி விதிகளின்படி தான்
இந்தியாவின் அமைப்பு விதிகளும் அமைந்ததை தா.பா சொல்கிறார். உலக முழுதும் அப்படித்தான்
லெனினிய கட்சி- நியு டைப் பார்ட்டி என்றே கட்டப்பட்டது. ருஷ்யாவின் தட்பவெப்பம் இந்தியாவில்
இல்லை என்பது சரிதான். கால மாற்றத்தில் பொருத்தமானவற்றை 1958 அமிர்தசரஸ் சிறப்பு மாநாட்டில்
கட்சி செய்ய முயற்சிக்காமல் இல்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனும் பார்வை இ.க.க
வில் இன்று இல்லை. ஆனால் சி பி எம் இன்றும் அமைப்பு விதியில் வைத்துக்கொண்டுள்ளது.
இந்திய வரலாற்றின், மரபின் வெளிச்சத்தில் மா- லெ என்பதை சிபிஅய் சேர்த்துக்கொண்டது.
ஆனால் எது மரபு, வரலாறு என்ன என்பது குறித்த விவாதங்கள் செழுமையாக்கப்படவேண்டிய நிலையுள்ளது.
Democratic Centralism – மய்யப்படுத்தப்பட்ட
ஜனநாயகம் என்கிற கோட்பாடு கடைசியில் அதிகாரம் ஒரு சிலர் கையில் என்றாகி, இறுதியில்
ஒரே ஒருவர் தீர்மானிக்கிறபடி என்றாகிவிட்டது என்கிற சோவியத் அனுபவத்தை தா.பா சொல்கிறார்.
மூன்றுபேரோ நான்கு பேரோ எடுத்த
முடிவால் ஜோதிபாசு பிரதமர் ஆகமுடியாமல் போனதை சுட்டிக்காட்டி தா.பா இதை கட்சி உறுப்பினர்களிடம்
எடுத்துப் போய் இருந்தால் அவர்கள் முடிவு குப்பைத்தொட்டிக்கு போய் இருக்கும் என்கிறார்.
கட்சிக்குள் ஜனநாயகம் எனும்போது முக்கிய பிரச்னைகளில்
ஒருவகை பொதுவாக்கெடுப்பு எனும் பிளபிசைட் முறையை அவர் சொல்வது போல் உள்ளது. தவறு எனச்
சொல்லவில்லை. கட்சிக்குள் பாட்டாளிவர்க்க உணர்வு ஓர்படித்தானதல்ல என்பதைக் கணக்கில்
கொள்ளவேண்டியதில்லையா- பிரதிநிதித்துவ ஜனநாயகம்
என்பது நடைமுறையில் என்னவாகும் என்கிற கேள்வி எழுகிறது.
கட்சிக்கு சோதனை வரும்போது உறுதியை
சுறுசுறுப்பை காட்டுகிறவர்களுக்கு கட்சியில் பொறுப்புகள் தரப்படவேண்டும் என்ற மொழிதலை
தா.பா செய்கிறார். இதில் முன்மாதிரியாக செயல்பட்டவர்களை அவர்கள் காலத்தை- செயல்படாமல்
போயிருந்தால் அதைச் சொல்லி விளங்க வைத்திருக்கலாம். பெயரைக் குறிப்பிடாமலே மெஜாரிட்டி-
மைனாரிட்டி- அல்லது தனிப்பட்ட ஒருவரிடம் இருந்த wisdom எது சரியானதாக இருந்தது என்பதை
சொல்லி புரிய வைத்திருக்கலாம்.
கேரளா மாடல் என்பதை கவனிக்க வேண்டுகிறார்.
கேரளா சமாளித்து வெற்றிகண்ட பாடங்கள் இந்தியா முழுமைக்கும் தேவை என்கிறார். தொழிலாளர்க்கும்
கட்சிக்குமான உயிர்த் தொடர்பு அங்கு ஏற்பட்டதைச் சொல்கிறார்.
1925லிருந்து காங்கிரஸ் எதிர்ப்பு
என்பதிலேயே இடதுசாரிகளின் அதிக சக்தி செலவாகியுள்ளதை கவனப்படுத்துகிறார் தா.பா. அந்தக்
கட்சிதான் சகல அரசியல் போக்குகளுக்கும் தன் விரிவான பதாகையின் கீழ் இயங்க இடம் கொடுத்தது
என்ற வரலாற்று உண்மையையும் தா.பா பதிவு செய்துள்ளார் . காந்தி சமரசவாதி என இன்றும்
சிலர் கட்சியில் கூறி வருதலையும் அவர் சொல்கிறார்.
காங்கிரஸ் முதலாளித்துவ கட்சி எனப் பேசுவதைக் குறித்து
கேட்கின்ற அவர் அதை எப்படி வர்க்க பார்வைகொண்ட மார்க்சியர் புரிந்துகொள்வது
என சொல்லாமல் போகிறார். பல வர்க்க பல சாதி பல மதத்தினர் கட்சி என சொல்வதா- மக்கள் இயக்கம்/கட்சி
என்பதா? மார்க்சியம்- லெனினியம் என சொல்லிவிட்டு
அத்துடன் எப்படி அந்த கட்சி குறித்த வரையறையை சொல்வது. உழைப்பாளர் கட்சி என கம்யூனிஸ்ட்
கட்சி தன் காரக்டரை சொல்வது போல் சொல்ல முடியுமா? விவாதிக்க வேண்டிய ஒன்றாகவுள்ளது.
நேரு குறித்த மதிப்பீடுகளை இறுதி
காலத்தில் ரணதிவே, ஜோதிபாசு போன்ற தலைவர்கள் மாற்றிக்கொண்டதை தா.பா வரவேற்கிறார்.
இந்து மகாசபைக்கும், முஸ்லீம்
லீகிற்கும் இந்திய மண்ணில் ஆழமான வேர் பதிந்து விழுதுகள் பரவியிருக்கும் என்பதை மார்க்சியவாதிகள் பாராது போகமுடியாதென்கிற
முக்கிய பார்வையை வைக்கிறார்..
கம்யூனிஸ்ட்கள் தங்கள் சொந்த பலத்தால்
இந்தியாவில் எங்கும் வெற்றி பெறுவது சாத்தியமல்ல என்பது உண்மை நிலவரம். இல்லாத பலத்தை
மிகைப்படுத்திக் காட்டுவதும், வகுப்புவாத சக்திகளை துரும்பு போலக் கருதுவதும் சேதத்தை
ஏற்படுத்தி வருகிறது என்கிறார் தா.பா.
V
இந்நூலில் நான் பார்த்தவகையில் factually incorrect – சரிபார்த்துக் கொள்ள வேண்டியவை
இருக்கின்றன.
பக்கம் 53ல் ’சோசலிஸ்ட்
புரட்சிக்கட்சியை சேர்ந்த ரூவன் எனும் பெண் லெனினை துப்பாக்கியால் சுட்டார்’ எனத்
தரப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் Fanny Efimovna Kaplan கப்ளான் என சுருக்கமாக சொல்வர். அவரின் உண்மையான
பெயர் Feiga Haimovna Roytblat..
பக்கம்
54ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உதய ’மாநாட்டிற்கு முயற்சி எடுத்தவர் பெயர் சத்ய பக்ஷ்’ என எழுதப்பட்டுள்ளது.
கட்சியின் ஆவணங்களில் சத்ய பக்தா என்ற பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தி தேவநாகரியிலும்
அவ்வாறே எழுதப்படுகிறது. அவருக்கு சக்கன் லால்
என்ற பெயரும் உண்டு என்பர். ஆனால் ஆவணங்களில் இருப்பது சத்ய பக்தா என்பதே.
பாசிசம் குறித்து தா.பா தொட்டுக்காட்டுவார்.
ஹிட்லர் எதிர்த்த போராட்டம் பற்றி பேசி வரும்போது டிமிட்ராவ் பொய் வழக்கு சித்திரவதை
பற்றிச் சொல்வார். பக்கம் 56ல் ”அதைக் கண்டித்து டிமிட்ராவை விடுவிக்கக்கோரி காந்தியடிகள்
ஹிட்லருக்கு நேராகவே கடிதம் எழுதினார். அச்செய்தியும் பலநாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்தது”
என எழுதப்பட்டுள்ளது.
காந்தியடிகள் ஹிட்லருக்கு எழுதியதாக ஆவணங்களின்படி நமக்கு கிடைப்பது இரு கடிதங்கள்தான்.
ஒன்று ஜூலை 23, 1939 மற்றொன்று டிசம்பர் 24, 1940க்கானது. அவற்றில் டிமிட்ராவ் பெயர்
குறிப்பிட்ட செய்தி ஏதுமில்லை. எந்த நாளில் எப்பத்திரிகைகள் காந்தி டிமிட்ராவை விடுவிக்க
ஹிட்லருக்கு எழுதியதாக பதிவிட்டிருந்தன என
ஏதும் தெரிவிக்கப்படாமலேயே இந்த நூலில் இந்த செய்தி சொல்லப்பட்டு போகிறது.
பக்கம்
67ல் சக்ளத்வாலா பற்றி எழுதுகிறார். ஜே.என் டாட்டாவின் தம்பி மகன் என எழுதப்பட்டுள்ளது.
அவர் ஜே.என் டாட்டாவின் தங்கை மகன். டோரப்ஜி- ஜெர்பாய்க்கு பிறந்தவர். ஜெர்பாய் ஜே.என்
டாட்டாவின் சகோதரி. சிபிஎம் மார்க்சிஸ்ட் ஆங்கில காலாண்டு இதழ் ஜன- மார்ச் 1996 சக்ளத்வாலா
குறித்த தோழர் சுர்ஜித் கட்டுரையிலும் டாட்டாவின் தங்கை மகன் என்பது பதிவாகியிருக்கும்.
பக்கம்
82ல் இ எம் எஸ் 1957 ஆட்சி பற்றி எழுதுகையில்
தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான கேரள மந்திரிசபை
1958 இறுதியில் நீக்கப்பட்டது என எழுதப்பட்டிருக்கிறது. அந்த ஆட்சி 5 ஏப்ரல் 1957 முதல் ஜூலை 31, 1959 வரையிருந்து
கலைக்கப்பட்டது.
பக்
83ல் அஜாய்கோஷ் மறைவால் 1962ல் அடுத்த செயலர் குறித்து ஒருமித்த கருத்து ஏற்படவில்லை
எனச் சொல்லும்போது – ’தோழர் டாங்கே தலைவராகவும் (அதுவரை கம்யூனிஸ்ட் கட்சிக்கு
தலைவர் பதவி கிடையாது) இ எம் எஸ் பொறுப்புச் செயலராகவும் தேர்ந்தெடுத்து முடித்தனர்’
என எழுதியுள்ளதைக் காண்கிறோம்.
சமீபத்தில் முகநூலில் ’கால
மாற்றத்தில் அமைப்பு விதிகள்- கம்யூனிஸ்ட் கட்சியை முன்வைத்து’
எனும் எனது கட்டுரையில் 1925 துவக்க அமைப்பு விதி தலைவர்- ஆண்டு மாநாடு- அவ்வாண்டு
முழுதும் அவரே தலைவராக இருப்பார்- மாநில கமிட்டிகளையும் கலந்துகொண்டு தலைவர் எவர் என்பது
தீர்மானமாகும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை படிப்பவரால் தெரிந்துகொள்ள முடியும். ஆரம்பத்தில் தலைவர் என்பதுதான் இருந்தது.
பக்கம்
183ல் சோசலிஸ்ட்கள் கட்சியாக காங்கிரசிற்குள் இருந்து செயல்பட்டு வந்ததை தா.பா பேசுகிறார்.
‘ 1920 முதல்1950 வரை அக்கட்சி காங்கிரசுக்கு உள்ளேயே இயங்கினாலும்… 1952 தேர்தலில்
காங்கிரசிற்கு அடுத்து பெரிய கட்சியாக வரும் என பத்திரிகைகள் எழுதின’ என எழுதப்பட்டிருக்கிறது. தா.பா காங்கிரஸ் சோசலிஸ்ட்
கட்சியைத்தான் இப்படி சொல்கிறார். ஆனால் அக்கட்சி 1934ல் தான் உதயமாகிறது- 1920ல் அல்ல.
விடுதலைக்குப்பின்னர் 1948ல் வெளியேறி காங்கிரஸ் பெயரை நீக்கிக்கொண்டு சோசலிஸ்ட் கட்சியாக
இயங்க ஆரம்பிக்கிறது.
VI
மக்கள்
நம்மிடமிருந்து பிரிந்து விட்டனரா- நாம் தனிமைப்படுத்திக் கொண்டோமா என்கிற கேள்வியை
மய்யமான விவாதப் பொருளாக்குகிறார் தா.பா. பல தொழிற்சங்கத் தலைவர்கள் முதலீடு செய்யாத
முதலாளிகள் ஆனதைச் சொல்கிறார். சாதிக்கு என கட்சி , தொழிற்சங்கம் ஏற்பட்ட சூழலில் உள்ள
பணி கடினமானதை சுட்டுகிறார்.
இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி ’கட்சி அமைப்பை’ மாற்ற வேண்டும்.
ஜனநாயக கட்சியாக இயங்க வேண்டும். தலைமைக் குழுக்கள் தனியாகக் கூடி விவாதிக்கலாம். மாநாடுகள்
மக்கள் அறியத்தக்க வகையில் பகிரங்கமாக நடத்தப்படவேண்டும் . இரகசிய கூட்டங்கள் கட்சி
அமைப்பை பற்றியதாக இருக்கலாம் என அவர் ஆலோசனையைத்
தருகிறார். சமீபத்தில் முடிந்த சிபிஎம் காங்கிரஸ் தற்போது அரசியல் தீர்மானத்தை
மட்டுமே பொதுவெளியில் வைத்துள்ளது, இதற்கு முன்னர் அமைப்பு குறித்தும் வெளிப்படையாகவே
வைத்திருந்தது.
இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி உண்மையான ஒரு ஜனநாயக அரசியல் கட்சி என்பதை மக்களால் நம்பப்பட்டும் ஏற்கப்படும் வகையில்
துணிந்து திருத்தியமைக்கவேண்டும் என்கிறார் தா.பா. இன்றும் டெல்லியில் இருப்பதுதான்
ஜனநாயக மத்தியத் தலைமை என்கிற கோட்பாடு கடைப்பிடிக்கப்படுவதால் உருவாகும் சில விளைவுகளைச்
சொல்கிறார். ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு கட்சியைக் கட்டி வளர்த்த சிற்பிகளை அவமானத்தப்படுத்தவே பயன்பட்டுள்ளது. எனவே
அதை மாற்றி அமைப்பதில் துவங்க வேண்டும் என்பதை இந்நூலில் தா.பா அழுத்தமாக முன் வைக்கிறார்.
தேசிய
அமைப்பிற்கு மாநிலங்களிலிருந்து 4 அல்லது 5 என தேர்ந்தெடுத்து அனுப்பலாம். அவர்கள்
கூடி தலைமைக் குழுக்களை தேர்ந்தெடுக்கலாம் என ஒருவகை பெடரலிசத்தை முன் வைக்கிறார்.
சமதர்மம் கோரும் கட்சி சமதர்ம வழியில் நடப்பதை இது உறுதி செய்யும் என்கிறார். நன்றும்
தீதும் பிற தரா வாரா என்கிறார். செய்க செய்க- இயங்கு இயக்கு என்கிறார். கற்க- நிற்க
அதற்குத் தக என அறிவுறுத்தி நூலை முடிக்கிறார்.
தோழர் தா.பா 50 ஆண்டுகளுக்கு மேலான கட்சி வாழ்க்கையை அனுசரித்தவர்.
விரிவான வாசிப்பனுவம் கொண்டவர். அழுத்தமாக கருத்துக்களை சொன்னவர். எந்த வாசிப்பும்
இறுதியானதோ முற்று முடிவானதோ இல்லை. எந்த வாசிபிலும் போதாமைகள் இல்லாமல் இடைவெளிகள்
இல்லாமல் இருக்காது. வாசிப்பும் அனுபவமும் இல்லாமல் கருத்து கூறுவதைவிட இரண்டும் நிறைந்தவர்கள்
கூறுவது பொருட்படுத்த வேண்டியவைகளாக அமைகிறது.
சோவியத் எழுத்துக்களில் பயிற்சி நிறைந்த கம்யூனிஸ்ட்கள்
இந்திய வரலாறு, இந்தியவிடுதலைப் போராட்டத்தின் பல பக்கங்கள், காந்தி- நேரு- சுபாஷ்-
அம்பேத்கர்- பெரியார்- ஜெயப்பிரகாஷ்- லோகியா- கிருபளானி- நரேந்திரதேவா- விவேகானந்தர்-
தாகூர்- ராஜாஜி- இந்திய கம்யூனிஸ்ட் இயக்க ஆவணங்கள்- எழுத்துக்கள் என இன்னும் எந்த
அளவு முடியுமோ அவற்றையெல்லாம் கற்க வேண்டியது அவசியமானதாகும். விரிவான கற்றல் நமது ego வை சற்று மட்டுப்படுத்த உதவலாம். அகந்தை அழிப்பது
குறித்து மாவோவும் பேசியிருக்கிறார். சொந்த அனுபவத்தில் விரிவாக செல்வது நம் குறித்த
எல்லைகளை limitationயை
ஓரளவு சரியாக
புரிந்துகொள்ள உதவுவதை உணரமுடிந்தது. அவசரப்பட்டு
அரைகுறையாக அள்ளித்தெளிக்காமல் நிதானப்படுத்த உதவுகிறது. எவரையும் முத்திரை குத்தி
அதில் சுயரசனை கொள்வதிலிருந்து காப்பாற்றுகிறது.
இந்த
அளவில் தா.பா வின் இந்த புத்தகம் பொருட்படுத்தி வாசிக்க வேண்டிய புரிந்து கொள்ளவேண்டிய
தேவையை நல்கியுள்ளது.
26-6-2022
Comments
Post a Comment