https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, June 5, 2022

வ.ரா 3 வ.ரா பதிவிட்ட ஜார்ஜ் ஜோசப்

 

வ.ரா 3

                          வ.ரா பதிவிட்ட ஜார்ஜ் ஜோசப்

வ.ரா ஜ்யார்ஜ் ஜோஸப் என எழுதுவார். இதென்ன தனித்தமிழ் நெடுங்கணக்கும், தனித்தமிழ் ஒலிக்கும் கட்டுப்படாத அந்நிய நாட்டுபெயரில் - அவர் தமிழரா என உறும வேண்டாம் என்பார் வ.ரா. ராமசாமி நாயக்கர் கன்னடியர். நாயுடு தெலுங்கர். ராஜகோபாலாச்சாரி ரத்தம் ஆரியம் கலப்பு. முதலியார் வேண்டுமானல் தப்பித்துக்கொள்ளலாம். ஜோஸப் தலைச் சிறந்தவர்களுள் முன்னணியில் நிற்பவர். ஆனால் மதுரைவாசிகள் சரியாக அவர் பெயரை உச்சரிக்கமுடியாமல் அல்லது அன்பின் மிகுதியால் அவரை ரோஜாப்புதுரையாக்கிவிட்டார்கள் என வ.ரா எழுதுவார். ஆமாம் ரோஜாவிம் மலரும் முள்ளும் என்கிற இரண்டு குணங்களும் ஜோசப்பிற்குண்டு. ஜோஸப் திருவிதாங்கூர் செங்கனச்சேரி ஸிரிய கிருஸ்துவர். ஸ்காட்லாந்தில் எம்.ஏ- பின் பாரிஸ்டர். ஜோஸப்பின் நோய் அபரிதமான மூளையாகும்; அதன் கட்டுங்கடங்காத கொதிப்பாகும் என்பார் வ.ரா.

 பெஸண்டு அம்மையாரின் ஹோம்ரூலில் தீவிரமாக ஜோஸப் இருந்தார். ஜிப்ரால்டரில் பிரிட்டிஷ் ஹோம்ரூல்காரர்களுக்கு போட்டதடையால் சஞ்சலமும் மிருகப்பிராயமும் வந்தன என ஜோசப் விவரிப்பார்.

 ஊர் திரும்பியவுடன் ராஜாஜி, கொடியாலம் ரங்கஸ்வாமி சந்திப்பு ஜோஸப்பிற்கு நிகழ்ந்தது. சனியன் பிடித்தது என்பார் வ.ரா. அடுத்த 15 ஆண்டுகள் ராஜாஜியும் ஜோஸப்பும் வைத்திருந்த நட்பு மூக்கின் மேல் விரல் வைத்து திகைக்க வேண்டிய சங்கதியானதென்பார். ராஜாஜிக்கு ’தர்க்க மூளை. ஜோசப்போ ’தாக்கு மூளை. இரண்டும் உறவாடின. பிரகாசத்துடன் ஜொலித்தனர்.

 ஜஸ்டிஸ் இயக்கம் பிறந்தது பற்றிய கருத்தை வ.ரா எழுதுவார்.

சென்னை மாகாணத்தில் ஜஸ்டிஸ் இயக்கம் தோன்றிற்று. தமிழர்களை வகுப்புகளாக பிரிப்பது பாபம்- தர்மமல்ல- ராஜதந்திரமல்ல என மூவர் அழுத்தமாக பேசினர். திவான்பகதூர் கேசபிள்ளை, நாயுடு, ஜோஸப்.  மூவரிலும் ஜோஸப்பே தன் உணர்ச்சியைத் திருத்தமாகவும் தீவிரமாகவும் காண்பித்தவர். ஜஸ்டிஸ் கட்சியினருடன் உறவாட சிறிதும் மனங்கொள்ளவில்லை. அவர் மீது தந்தைக்கு வருத்தம் இருந்தது. எப்போதும் உடன் நின்றவர்கள் கடவுளும் அவரது மனைவியும்தான் என்கிறார் வ.ரா.

 நாயுடு வழக்கு மதுரையில் நடந்தபோது பலரின் வாசம் ரோஜாப்பூ துரை வீட்டில்தான். இரவேயானாலும் அனைவருக்கும் உபசரிப்பை செய்துகொண்டேயிருந்தவர் ஜோசப்பின் துணைவியாரான அந்த உத்தமி என எழுதியுள்ளார் வ.ரா. அந்த அம்மாளுக்கு இருந்த உற்சாகமே ஜோஸப்பின் உற்சாகம். ஸ்ரீமதி ஜோஸப் பெருமையை வ.ரா இந்நிகழ்வின் மூலம் விளக்குவார்.

 1919ல் காந்தி ரெளலட் எதிர்த்த பிரயாணத்திட்டம் உருவானது. மதுரையில் எங்கு தங்குவது? ஜோஸப் பங்களா என முடிவானது. ஜோஸப் அப்போது சிறைச் செல்ல தயாராகவில்லை. காந்தி பங்களா வந்தபோது ஜோஸப்பிற்கு கச்சேரி வேலை. மதியம்தான் வருகிறார். வந்தவுடன் காந்தி சொல்கிறார் ஜோஸப் உமது வீட்டை வெடிகுண்டு வத்து தகர்க்க எத்தனிக்கிறேன் புரியவில்லை ஜோஸப்பிற்கு. ஸ்ரீமதி ஜோசப்பிடம் விவாதித்து சிறைக்குச் செல்ல தயார் என கையெழுத்து பெற்றதைத்தான் காந்தி இப்படி சொன்னார். உடனே சிறைச் செல்ல தயார் என கையெழுத்திட்டார் ஜோஸப்.

இந்தப்பதிவில் வ.ரா அந்த அம்மையாரின் பெயரை சொல்லவில்லை. சூசன்னா என அறியவேண்டியுள்ளது. இதைவிட வேறொன்றும் காந்தியிருக்கும்போது அங்கே நடந்தது. ஜோஸப் தோட்டத்தை பராமரித்த ஹரிஜன சிறுவன் காந்தி காலை கட்டிக்கொண்டு அம்மா- அய்யா போனால் நானும் சிறைக்கு வருவேன் என்கிறார். காந்தி முதலில் மறுத்துவிட்டார். காந்தியுடன் துரத்திக்கொண்டே இறுதியில் இரயில்வே ஸ்டேஷனில் தன் கையெழுத்தை அந்த சிறுவன் காந்தி பெறும்படி செய்துவிட்டார். சிறைக்கு போவதற்கு முன்பே  இறந்தார் என அறியும்போது அந்த பெயர் தெரியாத அன்றைய சிறுவன் குறித்து நீர் ததும்ப பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

ஜோஸப் அலகாபாதில் இன்டிபென்டண்ட் பத்திரிகையில் எழுதலானார். நியு இந்தியாவில் பெஸண்ட் சத்தியாகிரகத்தை தாக்கி எழுதினால் அவரின் மாஜி பக்தரான ஜோஸப் தனது (மோதிலால்) பத்திரிகையில்  பதிலடி தந்தார்.. நாம் காரியத்தில் கண்ணாயிருப்போம்- கிழவிக்கு பதில் வேண்டாம் என காந்தி சொன்ன பின்னர்தான் ஜோசப் நிறுத்தினார்.

 வைக்கம் கொடுமை என அறிந்தவுடன் தான் கிருஸ்துவன் என அவரால் வாளாயிருக்கமுடியவில்லை. காந்தி இல்லாதபோது ஜோஸப் குறைவின்றி யங் இந்தியாவை பேணிக் காத்தார்.  காந்தி பற்றி தவறாக எழுதி இந்தியன் ஸோஷல் ரிபார்மர் நடராஜன் ஜோஸப்பிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார் என பழைய செய்திகளையெல்லாம் வ.ரா அப்படியே போகிற போக்கில் தெளித்து போவார். ஜோஸப்பின் எழுத்து திறன் பற்றி வ.ரா சொல்கிறார். அழகாக, சொல் வலிவுடன் ,அர்த்த புஷ்டி குறையாமல் நவீன கருத்துக்கள் குலுங்க இங்கிலீஷ் எழுதக்கூடியவர் ஜோஸப்.

 ஜோஸப் அனுபவம் கூடிய மேதாவி. மேதையை ஒட்டி அனுபவமும், அனுபவத்தை ஒட்டி அறிவும் மாறத்தான் செய்யும். ஜோஸப் மட்டும் எப்படி மாறாமல் இருக்க முடியும்? ஜோஸப் பார்வைக்கு பல போர்க்களங்களிலே தோற்றவர். ஆனால் நெஞ்சம் தளராதவர். தேசப்பற்று பித்து கொண்டவர். மனச் சஞ்சலமடைந்தவர்களுக்கு கத்தோலிக்க கிருஸ்துவ மார்க்கம் அமைதி கொடுக்கும். எனவே அவர் மாறினார். அதில் எனக்கு வியப்பில்லை என எழுதினார் வ.ரா. ஆனால் வ.ரா வின் மதிப்பீட்டில் ஜோஸப் எரிமலை.

 மனிதனை பணத்தைக்கொண்டு மதிப்பிடுபவர் அற்பர். வெற்றியைக்கொண்டு மதிப்பிடுபவர் சிறியோர். பெரியார்களை அவர்களுடைய மகத்தான முயற்சிசிகளையும் தோல்விகளையும் கொண்டுதான் மதிப்பிட முடியும். ஜோஸப் ஜஸ்டிஸ் கட்சியிலும் சேர்ந்தார். அதற்கு திட்டம் கொடுக்க முயன்றார். அந்தக் கட்சிக்காரர்கள் அவருக்கு இடம் கொடுக்கவில்லை. ஜோஸப் அதில் படுதோல்வி அடைந்தார். அதனாலென்ன? உண்மையானவர்களின் கடமை முயற்சி செய்தல் தான் என வ.ரா இதற்கான சமாதானம் எழுதுவதைக் காணலாம்.

 ஹிந்து ஜனசமூக ஊழல்களில் தலையிட கிருஸ்துவர் ஜோஸப்பிற்கு உரிமையில்லை என சில மதுரை வம்புக்கார காங்கிரஸ்காரர்கள் மனப்புண் உண்டாக்கி அவரை காங்கிரசிலிருந்து விலக வைத்தனர். ஜோசப் மறைந்துவிட்டார். அவரிடம் குற்றம் கண்டு தூற்றுவது அற்பத்தனம் என தன் பதிவை முடிப்பார் வ.ரா.

 

No comments:

Post a Comment