https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, June 1, 2022

தமிழ் இசுலாமிய மரபுகள்

 

தமிழ் இசுலாமிய மரபுகள்

தமிழ் இசுலாமிய மரபுகள் குறித்த ஆய்வு நூல் 122 பக்கங்களே கொண்ட ஆனால் அடர்த்தியான கருத்துக்களைக் கொண்ட ஆக்கம் . 2014ல் வெளிவந்த புத்தகம். முனைவர் ஏகாம்பரம் அவர்கள் நூலாசிரியர். அவரின் சொந்த வாழ்வியல் சூழலுடன் கற்றுக்கொண்ட அம்சங்களையும் உள்வாங்கி எழுதப்பட்ட நூல் எனலாம். இஸ்லாம் என்பதை ஆசிரியர் இசுலாம் எனப் பயன்படுத்தியுள்ளார்.கிபி 10 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு உள்ள காப்பியங்களில் சைவம், வைணவம், இசுலாமியம் மற்றும் கிறித்துவத்தின் சமயத் தாக்கங்களைப் பார்க்கலாம். கிபி 7 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த இசுலாம் தன் மார்க்கம்- நபிகள் பின்பற்றிய வலிமார்களுடைய வாழக்கை முறையை தமிழில் காப்பியமாக தந்துள்ளது. இசுலாமிய இலக்கியத்திலும் சமயமே முதலிடம் என்றாலும் தமிழ்ப்பண்பாடும் உயர்வாக போற்றப்பட்டுள்ளது. ’இசுலாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி; இலக்கியம் எங்கள் விழிஎன்கிற பார்வையிலிருந்து இதை உணரமுடியும்.

 இசுலாமிய மரபுகள் எனும்போது தமிழில் இணைந்துவிட்ட இசுலாமிய அடையாளங்கள் அல்லது மரபுகள் எனலாம்.

 தமிழகத்தில் வியாபாரம் காரணமான குடியேற்றம், சமயம் பரப்ப குடியேற்றம் என இருவகையில் முசுலீம்கள் தமிழகத்தில் வந்தமர்ந்தனர். முசுலீம்கள் என்பதில் அரபியரும் அவர்தம் வழிவந்தோரும்  மதமாறியவரும் அடங்குவர். பட்டாணிய மங்கோலிய துருக்கிய இன முசுலீம்களும் இவர்களது வழிவந்தோர் மதம் மாறிய வடபுல மக்களுமாவர்.. தமிழக கடற்கரைப் பட்டினங்களில் மரக்கல ஆயர்- மரக்கலம் ஊர்ந்து வந்தவர் மரக்காயர் என அறிகிறோம்

வடபுலத்தில் ஆட்சி செய்த முசுலீம்களுக்கு பல மொழிச் சூழலில் மக்களுடன் தொடர்பேற்படுத்திக்கொள்ள பொதுமொழியாக உருது எனும் கலப்புமொழி தேவையாகி உருவானது. இந்தக் கலப்பு 10 ஆம் நூற்றாண்டில் கடிபோலி ஷோர்ஷீனி மொழிகளுடன் அரபி, பாரசீகம், துருக்கி கலந்து உருதுவாக உருவாகியதென்கிறார் ஆசிரியர். ஆரம்பத்தில் ஹிந்தி, ஹிந்துஸ்தானி, தக்கன், தக்னீ, ரீக்தா என்று இருந்தவை உருதாக  உருப்பெற்றதென்கிறார் ஏகாம்பரம். உருது எனில் படை எனப் பொருளாம். 13ஆம் நூற்றாண்டின் அலாவுதின் கில்ஜி, 14 ஆம் நூற்றாண்டின் துக்ளக் ஆட்சி நடவடிக்கைகள் தெளலாபத் இடப்பெயர்வால் அங்கு வசிக்கத்துவங்கியவர் தக்கன் பேசியுள்ளனர் என்கிற செய்தியும் கிடைக்கிறது.

 தமிழர்- அரபியர் இடையிலான கடல் வாணிபம் முன்பே இருந்துள்ளது. தமிழ் திராவிடக் குடும்பம் சார்ந்தது எனில் அரபு செமிட்டிக் மொழிக் குடும்பம் சார்ந்தது. யவனர் என்ற சொல் இவர்களை குறிக்க மொழியப்பட்டுள்ளது என்கிறார் ஆசிரியர். யவனர் கிரேக்க உரோமரையா அரபியரையா என்கிற வினா இருக்கிறது. இந்த ஆசிரியர் அரபியரை குறிப்பதே சரி என தன் நிலைப்பாட்டை முன்வைக்கிறார். யவனர் என்பதை சோனகர் என்றும் துருக்கர் என்றும் வெவ்வேறு ஆதாரங்களை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். கடலோரப் பகுதி  முசுலீம்களை சோனகர் என அழைக்கப்படுவதையும் சொல்கிறார்.

சோனகர் எனும் இலங்கை முசுலீம்கள் அரபியரின் வழித்தோன்றலாக தங்களைக் கருதுகின்றனர். தமிழக் கல்வெட்டுகளில் சோனகர் பற்றிய பதிவுகள் உள்ளதை ஆசிரியர் உரைக்கிறார். புரவி என்ற சொல்லையும் அவர் சான்றாக்குகிறார். முசுலீம் குதிரைவீரர்கள் இராவுத்தர் என அழைக்கப்படுகின்றனர். அரபு மொழியில் ரா-இத் என்பதற்கு குதிரைவீரன் எனும் பொருளாம். அருணகிரிநாதர் மாமயிலேறும் ராவுத்தனே எனப் பாடியிருப்பதைக் காட்டுகிரார் ஏகாம்பரம்.

 தமிழகத்து முசுலீம்கள் தனி உடையுடன் இருப்பதை சுட்டும் திருவாசகப்பாடல் ஒன்றை அவர் மேற்கோள் காட்டுகிறார். அவ்வரியில்  வெள்ளைக் கலிங்கத்தார் வெந்திரு முண்டத்தார் பள்ளிக்குப்பாயத்தார் என்பது முசுலீம்களின் வெள்ளை நிற குப்பாயம் பற்றியது என்கிறார் ஏகாம்பரம்.

மாணிக்கவாசகர் பாண்டிய மன்னனுக்காக குதிரை வாங்க அரபி வணிகரிடம் சென்றார். அவரது காலம் கிபி 9 ஆம் நூற்றாண்டு. மார்க்கோபோலோ சொல்லியபடி குதிரைகள் முதலில் வந்திறங்கிய இடம் காயல்பட்டினம். சோழர் காலத்தில் குதிரைக்கான வரியை சோனகர் வரி என்று சொல்லியுள்ளனர். ஆண்டுதோறும் 1600 குதிரைகள் அராபியத் துறைமுகத்திலிருந்து வந்ததாக நீலகண்ட சாஸ்திரி சொல்கிறார். இந்தப் பின்னணியில் அரபியர்களுடன் குதிரை வியாபாரம் என்பதை ஆசிரியர் உறுதிசெய்கிறார்.

 ஆசிரியர் சுருக்கமாக நபிகள் நாயகம் வரலாற்றை சொல்கிறார். நபிகள் மக்களுக்கு அறிவித்த செய்தியாக சிலவற்றை சுட்டிக்காட்டுகிறார். என்றுமே ரிபா - வட்டி வாங்கக் கூடாது. பழிக்குப்பழி வாங்கி உயிர்போக்கும் வழக்கம் கூடாது. பெண்களிடம் அன்புடன் நடக்கவேண்டும். முசுலீம்கள் உடன்பிறந்தார் போன்றவர்கள். சரிநிகர் சமானமானவர்கள் . ஒரே மாதிரியான உரிமைகளையும் கடமைகளையும் கொண்டவர்கள். இந்த மண்ணில் சாத்தான் அதிகாரம் போய்விட்டது. உங்கள் ஈமான் ஓரிறை நம்பிக்கையில் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.  இவ்வாறு மக்களை நன்னெறிப்படுத்த மொழியப்பட்ட இறையறிவிப்பு வாசகங்களே குர் ஆன். ஆகும்.

 சுலாம் எனும் அரபிச்சொல்லிற்கு கீழ்ப்படிதல், சாந்தி சமாதானம் எனும் பொருள்கள் உண்டு.  அசுலாம் அலைக்கும் என்றால் உங்களுக்கு சாந்தியுண்டாகட்டும் என்பது பொருளாகும். பதிலாகஅலைக்கும் அசுலாம் எனச் சொல்வதைக் காணலாம். உணவு உண்ணத் துவங்கும்போதுபிசுமில் ஓதி உண்பது மரபு. உண்டு முடித்ததும்அல்ஹம் துலில்லாஹ் இறைவனுக்கே எல்லாப் புகழும் என்று கூறுவதும் மரபு.

 நபிகள் எனக் குறிப்பிடும்போது நபியை ( ஸல்) எனக் குறிப்பிடுவர். அதாவது இறைவனின் சாந்தியும் சமாதானமும் சொரியக் கடவது எனும்சல்லல் லாஹீ அலைஹீ வஸல்லாம்’ என்ற வாழ்த்தது. இதைச் சுருக்கிசல் என்கின்றனர்.

ஈமான் ஓரிறை நம்பிக்கை அடிப்படையானது. தொழுகை, நோன்பு, ஏழைவரி, மக்கா புனிதப் பயனம் அந்த நம்பிக்கையின் உட்கூறுகள் என்கிறார் ஏகாம்பரம். இனவெறி சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான கோட்பாடுகளைக் கொண்டு பிறப்பில் ஏற்றத்தாழ்வு எனில் அது படைப்பவனை நீதியற்றவனாக ஆக்கிவிடும் எனும் பார்வை அங்குண்டு. அங்கு சகோதரத்துவம் சமத்துவம் என்பது பாலபாடமாகிறது. மூலக்கொள்கை சமத்துவம். அன்பே அதன் போதனை என விவேகானந்தர் கூறியதை இந்த ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

அரபுமொழியில் இச்சமயம் பரப்பப்பட்டாலும் சென்ற நாட்டின் பண்பாடுகளுடன் தன்னை மாற்றிக்கொண்டு அதேநேரம் அடிப்படைக் கொள்கை நிலை பிறழாமல் வைத்துக்கொள்ளவும் கற்கிறது. தமிழக முசுலீம்கள் அனைவரும் மக்கா- மதினாவிலிருந்து வரவில்லை. இசுலாம் சம்யம் தழுவி அதை தன் மொழி பண்பாட்டு வழியில் வெளிப்படுத்துகிறார்கள்.

இலங்கை முசுலீம்கள் பற்றி 1886ல் சித்திலெப்பை குறிப்பிட்டதையும், பின்னர் நுஹ்மான் விளக்கியதையும் ஆசிரியர் தருகிறார்.அவர்கள் சமயம் என்பதற்காக அரபி, தாய்மொழி என்பதற்காக தமிழ், வேலைவாய்ப்புகளுக்காக ஆங்கிலம், நான்காவதாக சிங்களம் என நான்கு மொழிச்சூழல் தெரிவு தேவைப்படுகிறது.

 அரபு ஒலிகளைத் தமிழுக்குக் கொண்டு வரும்போது ஏற்படும் சிக்கல் காரணமாக அரபுத் தமிழ் என்ற மொழிநடை வந்ததாக ஏகாம்பரம் குறிப்பிடுகிறார். மசலா, கிஸ்ஸா, நாமா, முனா ஜத்து, படைப்போர், நொண்டி நாடகம் என தமிழுக்கு அறிமுகமில்லாத புதிய இலக்கிய வடிவங்கள் வந்தன என்கிறார். பெரும்பாலும் சிற்றிலக்கியங்கள். சீறாப்புராணம் பேரிலக்கியம். சிற்றிலக்கியங்களுக்கு பல்சந்த் மாலை அடித்தளமிட்டதாகவும் ஏகாம்பரம் தன் ஆய்வில் சொல்கிறார். இந்நூல் 12-13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். அதில் இடம்பெறும் வள்ளல் மலிக் அஃஜம் தகியுத்தின் சுந்தரபாண்டியன் அமைச்சர் என்கிறார்.

 முகமது ஹீசைன் நயினார்- மு.இராகவயங்கார் உரையாடல் ஒன்றையும் இந்நூல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அய்யங்கார் நயினாரிடம் உங்கள் சமய நூல்கள் பல செல்லரித்துப் போகின்றன. சீதக்காதி, சீறாப்புராணம், நொண்டிநாடகம் சுவையானது எனக் கூறினார். இந்த உந்துதல் 1939ல் சீதக்காதி நொண்டிநாடகம் வெளியிட உதவியது என நயினார் சொல்லியுள்ளார்.

 சீறாப்புராணம் இயற்றப்பட்டு 140 ஆண்டுகள் சென்ற பின்னரே அது அச்சில் ஏற்றப்பட்டது. சீறாப்புராணத்தின் முதற்பதிப்பு 1842 ல் செய்கு அப்துல் காதி நெய்னார் லெப்பை ஆலிம் அவர்களால் கொணரப்பட்டதை அறிகிறோம்.

சீறாப்புராணத்தையடுத்து, சேகாதி நயினார் திருமணக் காட்சி 1710ல், பனீ அகமது மரைக்காயர் சின்னச் சீறா 1732ல், சேகுனாப் புலவரின் குத்பு நாயகம் 1807ல், திருக்காரணப் புராணம் 1812ல், திருமணிமாலை 1816ல், புதுகுஷ்ஷாம் 1821ல் வந்துள்ளன. வண்ணக் களஞ்சியப் புலவரின் இராஜநாயகம் 1807ல், தீன் விளக்கம் 1821ல் வந்துள்ளன. இராஜநாயகம் குறித்து மு மு இஸ்மாயில் பெரும் சொற்பொழிவை ஆற்றி அதுவும் பெரிய புத்தகமாக வந்துள்ளது.

 கா. அப்பாத்துரை அவர்கள் பாரதிமரபு, பாரதிதாசன் மரபு ஆகியவற்றிற்கு முன்பே கம்பர் மரபுண்டு என்பார். அடுத்து அம்மரபின் புதுமலர்ச்சி சீறாப்புராணம் கண்ட உமறுப்புலவர் வருகிறார் என சொல்லியிருக்கிறார்.

 இசுலாமிய இலக்கியத்தில் கடவுள் வாழ்த்து பெரும் சிக்கலுக்கானது. அங்கு உருவ வழிபாடு கிடையாது. நம்மைப் படைத்த இறைவனை நாம் படைக்கமுடியாது என்பது அங்கு ஆழமானது. அல்லாஹ் ஒருவர். அவர் யாரையும் பெறவுமில்லை. அவரை யாரும் பெறவுமில்லை. அவருக்கு இணையாருமில்லை என்பது அங்கு நிலவும் உயர் கருத்தாகும். இறைவனை கருத்தன் எனும் சுட்டும் மரபு சீறாப்புராணம் துவங்கி வந்துள்ளதாக ஏகாம்பரம் ஆய்வு சொல்லித்தருகிறது.

 1876ல் முகம்மது சாஹிப் பதிப்பிட்ட நூறு மசாலா வில் கடவுள் வாழ்த்துப் பாடலொன்றை ஆசிரியர் காட்டுகிறார். அப்பாட்டு

கண்ணுமின்றி செவியுமின்றி நலவாயுமின்றி மூச்சுமின்றி

பெண்ணுமின்றி ஆணுமின்றி ஒரு பேச்சுமின்றி மூச்சுமின்றி

ஊணுமின்றி உறக்கமுமின்றி நலவுயிர்க்குயிரா யிருப்பவனே

 காணவொன்னா முதல்வனே யாவும் காத்தருளும் ரஹ்மானே

 மருதவளம், மதுவின் தீமை, ஈகைக்குணம், தூய்மை, சேர்ந்த வழிபாடு, பெண்ணின் பெருமை- வர்ணனை எனில் அதி விண்ணக மகளிர் என்று காட்டுவது என பாடுபொருள் மரபுகளை ஏகாம்பரம் காட்டுகிறார். ஹீறுல் என்பது தூய்மை, அழகு, உண்மை குறிக்குமாம். கண்ணழகி எனவும் பொருள் கொள்ளலாம். சில நேரங்களில் இஸ்லாமை தழுவதற்கு முன்னிருந்த நிலைப் பெண்ணின் வர்ணனையாக அது அமைவதும் உண்டு என்கிறார்.

 இசுலாமியத் திருமண மரபில் மணமகன் உலா என்பது மரபு. தமிழர் மணமுறையில் மணக்கவிருக்கும் பெண்ணுக்கு மணப்பொருள் கொடுத்து உறுதி செய்தல்- பரிசம் போடுதல் முறையாகவுள்ளது. இசுலாமியத்தில் மணப்பெண்ணுக்கு மஹர் கொடுப்பதும், மணக்க இருப்பவரை மணப்பெண் பார்க்கக்கூடாதென்ற மரபும் உள்ளது- கோஷா ஆடை முறையுள்ளது. சில பாடல்கள் பெதும்பைஎனில் வர்ணனை கொண்டுள்ளன- ஆனால் பெண் என்று வரும்போது வர்ணனை வருமா எனத்தெரியவில்லை. அதேபோல் பேரிளம்பெண் ஆசை  உளக்கிடக்கை பேசப்படுகிறது.

 இயற்கை வர்ணனையில் இசுலாமிய இலக்கியம் வெகுநாட்டம் கொண்டதை ஆசிரியர் இராஜநாயக சோலை வர்ணனையிலிருந்து காட்டுகிறார்.

 தலைவன் தலைவி பிரிவு குறித்து குவாலீர்க் கலம் என்பதிலிருந்து பாடலைக் காட்டுகிறார். மக்காக் கலம்பகத்தில் மாலைப்பொழுதினைக் கண்டு இரங்குவது, திருமதீனக் கலம்பகத்தில் பரவையை நோக்கி இரங்கிக்கூறுவதை தமிழ் மரபுடன் இணைத்துப் பார்க்க வேண்டுமென்கிறார்.

 முக்கிய 8 வடிவங்களாக தமிழ் இசுலாமிய மரபு செல்வதாக அறிகிறோம். முனாஜத்து எனில் இறைவணக்கம், மச அலா  எனில் வினாவிடை, கிஸ்ஸா எனில் கதைசொல்லுதல், நாமா எனில் சரிதை இவை தவிர படைப்போர், நொண்டி, நாடகம், திருமண வாழ்த்து, அரபுத்தமிழ்  என அவை வரிசையாகின்றன.

 மசாலா அமைப்பான பாடல் ஒன்று இவ்வாறு அமைந்துள்ளது. விடுகதை வடிவம்- கேள்வி பதில் முறை என்கிறார் ஏகாம்பரம்.

மண் தரைக்குள் ஏறாது வானிருந்து ஓடாது அங்கு

 அந்தரத்தில் ஓராறுண்டது எமக்கு கூறுமென

சுந்தரத்தோள் இபுனு சலாம் சுருதி வழியே கேட்க  என அப்பாடல் விடுகதை விடுவதைக் காட்டுகிறார்.

வேறு ஒரு பாடல் இவ்வாறு விடை ஒன்றை கேள்விக்கு தருகிறது.

சொல்லுகின்ற வருஷமொன்றே அதைச் சூந்த கொப்பு பன்னீருமாதம்

கொல்லுமில்லை முப்பதுநாள் அதைச் சூந்த கறுப்போடு வெள்ளை

நல்லிரவு பகலுமது நீதான் நாடிச் சொன்ன பூவைந்துகேள்

தானவை ஐந்தாம் என மொழிந்தான்.

இங்கு ஓராண்டு- பன்னிருமாதம்- முப்பது நாட்கள்- இரவுபகல்- ஐந்து தொழுகை என அமைந்துள்ளதை ஏகாம்பரம் சொல்கிறார்.

 அரபுச் சொற்கள் மிகுந்து வருவதால் வாசிப்பில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க தமிழ் ஒலிக்கேற்ப ஒலிமாற்றம் செய்து வழங்கலாம் என்பது ஆசிரியர் தரும் ஆலோசனை.

இந்நூலின் மற்றுமொரு சிறப்பு பின் இணைப்பில் சில அரபு சொற்களுக்கு தமிழர் அறியும் சொல்லை கொடுத்துள்ளது எனலாம். அஹது எனில் ஒருவன், அத்தர்- வாசனை, அவ்வியா- இறைநேயர், அவ்வல்- ஆதி, அமல்- செயல், அன்சார்- உதவியாளர், அஹமத்தர்- புகழப் பெறுபவர், ஆயத்- திருவாக்கியம், ஆலம்- உலகம், ஆலிம்- அறிஞர், இபாதத்- வணக்கம், இலத்தீப்- பெருங்கொடையாளி, உம்மி நபி- எழுதப்படிக்க தெரியாதவர், ஒலிமார்- இறைநேயர், கஃஃபா- இறை இல்லம். கதுநா- அதிசயம், கமர்- சந்திரன், கப்பா- இரைவனது பெயர் விளி, கய்யும்- நிலையான இறைவன், கல்பு- உள்ளம், கலிபா- பிரதிநிதி, கலிமா- இறைவன் ஒருவன் அவனின் தூதர் நபிகள், கிபுலா- தொழும்திசை, கியாமத்- உலக முடிபு நாள், குத்துபு- உயர்ந்தவர், சதாதத்- உயிர்த்தியாகி, சித்திக்- உண்மையாளர், சையத்- மேன்மையானவர், தவஹீது- ஏகத்துவம், தீந் சன்மார்க்க நெறி, துத்துவு- தலைமை உயர்வு, துவா- பிரார்த்தனை, நூர்- ஒளி,  ஜன்னத்- சொர்க்கம், ஹீதா நேர்வழி.

இந்நூல் இஸ்லாம் தமிழ் இலக்கிய உலகை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை- தூண்டுதலைத் தந்த நூலாக எனக்கு அமைந்தது.

31-5-2022

No comments:

Post a Comment