https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, July 21, 2019

தோழர் இந்திரஜித் குப்தா நூற்றாண்டு


தோழர் இந்திரஜித் குப்தா நூற்றாண்டு
-ஆர். பட்டாபிராமன்

இந்திய நாடாளுமன்றத்தின் மிக உயர்ந்த மனிதராக கருதப்பட்டவர்களில் இந்திரஜித் குப்தாவும் ஒருவர். நாவன்மை, மக்கள் பிரச்சனைகளின்பாற் தெளிவு என்பதை நாடாளுமன்றத்தில் பலமுறை நிரூபித்தவர். 1960 துவங்கி 77-80 என்கிற காலம் தவிர 2001வரை நாடாளுமன்றம் அவரது குரலை கருத்தைக் கேட்டுக்கொண்டேயிருந்தது. அவர் நாடாளுமன்றத்திற்கு 11 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை  ’ Father of the House’  என்று பலரும் அழைத்தனர். 1991, 96, 98, 99 ஆண்டுகளில் அவரது சீனியாரிட்டி காரணமாகபுரோடேர்ம் ஸ்பீக்கராக இருந்து சபாநாயகர் தேர்வை நடத்திக்கொடுத்தவர். பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் அவர் சேர்மனாக இருப்பது பெருமைக்குரியதாக கருதப்பட்டது..

அவர் நாடாளுமன்ற விவாதங்களில் பேச எழுந்தாலே அவை உன்னிப்பாக கவனிக்கத்துவங்கிவிடும். தனது பேச்சாற்றலால் உழைப்பாளர்கள், தெருவோர மனிதர்கள், கவனிக்கப்படவேண்டியவர்கள் குறித்து அரசின் நடவடிக்கைகளை அவரால் வலிவுடன் கோரமுடிந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 5வது சம்பளக்கமிஷனில் கணிசமான உயர்வு பெற அமைச்சரவையில் போராடி பெற்றுத்தந்தவர் இந்திரஜித் குப்தா. தனது சமகால தோழர்கள் மத்தியில் அவர் கம்பீரமாக உயர்ந்து நின்றவர். அவரது உரைக்குப் பின்னர் நாடாளுமன்ற வளாகம்அதுதான் இந்திரஜித் குப்தா எபக்ட்என பேசிக்கொள்ளும். அவருக்கு 1992ல் கோவிந்த் வல்லப பந்த் பெயரிலான சிறந்த நாடாளுமன்றவாதி விருது வழங்கப்பட்டது.
 இந்திரஜித் மார்ச் 18, 1919ல் பிறந்தவர். இந்திரஜித் அவர்களின் குடும்பம் மத்தியதர சிவில் சர்வண்ட்ஸ் குடும்பம். அவரது சகோதரர் ரஞ்சித் குப்தா டாக்டர் பி சி ராயிடம் தலைமை செயலராக இருந்தவர். அவரது தந்தை சதிஷ் சந்திரகுப்தா வசதியான குடும்பத்தை சார்ந்தவர். அக்கவுண்டட் ஜெனரலாக இருந்தவர். தாத்தா பிகாரிலால் குப்தா  ICS பரோடா திவானாக இருந்தவர். மெயின்ஸ்டீரிம் ஆசிரியர் நிகில் சக்கர்வர்த்தி இயல்பில் இந்திரஜித் கூச்ச சுபாவம் நிறைந்தவர் என்றார். இந்திரஜித்    தான் விரும்பிய சுரய்யாவை  40 ஆண்டுகள் காத்திருந்து ஜூன் 7, 1981ல்  மணம் புரிந்துகொண்டார்.
இந்திரஜித் சிம்லாவில் பள்ளிக்கல்வி, 1937ல்டெல்லியில் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி, கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியில் பொருளாதாரப் பட்டம் பெற்று 1940ல் இந்தியா திரும்பினார். திரும்பியபோதே கம்யூனிஸ்ட் இயக்கத் தொடர்புகளுடன்  வந்தார். ஜோதிபாசு போன்றவர்களுடன் 1940ல் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக சேர்ந்தவர் இந்திரஜித்.
லண்டனில் இத்தோழர்கள் மாணவப் பருவத்தில் கிருஷ்ணமேனனின் இந்தியாலீக் பிரச்சாரங்களில் தங்களை ஈடுபடுத்திகொண்டவர்கள். இந்திரஜித், என் கே கிருஷ்ணன், ஜோதிபாசு, புபேஷ் குப்தா, மோகன் குமாரமங்கலம், பார்வதி, ரேணு சக்கரவர்த்தி, நிகில் என மார்க்சியத்தின்பாற், கம்யூனிச கொள்கைகளின்பாற் ஈர்க்கப்பட்ட பெரும் மாணவர் பட்டாளமே இருந்தது. அவர் லண்டனில் இருந்தபோது ரஜினிபாமிதத் செல்வாக்கால் லேபர் மன்த்லி தொடர்பை உருவாக்கிக்கொண்டார்..
 கட்சியால் 1942ல் அவர் கல்கத்தா தொழிற்சங்க அரங்கிற்கு அனுப்பப்பட்டார். துறைமுகத் தொழிலாளர் மத்தியில் அவர் தனது தொழிற்சங்கப் பணியினை சிறப்பாக நிரூபித்தார் . நிலவிய அரசியல் சூழலால் தலைமறைவு வாழ்க்கையில் இருக்கவேண்டி நேர்ந்தது. தலைமறைவு காலத்தில் அவரின் முக்கிய வேலை கூரியர் சர்வீசாக இருந்தது. . லக்னோ பகுதியில்தான் அவருக்கு இந்தப்பணி.. பின்னர் அவர் பி சி ஜோஷிக்கு  உதவியாக பம்பாய் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டார்..  Joshi's Glamour Boys  என்கிற பட்டியலில் அவர் இருந்தார்.
 சிறை வாழ்க்கை அனுபவம் 1953, 1959, 1969களில் அவருக்கு கிட்டியது. 1968ல் அவர் தேசிய கவுன்சிலின் செயலர் ஆனார். 1988ல் கட்சியின் துணைப் பொதுச்செயலர் ஆனார். 1990-96 ஆண்டுகளில் பொதுச் செயலர் பொறுப்பை ஏற்றார் . இந்தியதன்மையை புரிந்துகொள்ளும் கட்சி செயற்பாடுகள், ஆக்கபூர்வ செயல்பாடுகள் என்பதில் அவர் பொதுச்செயலராக இருந்தபோது கவனம் செலுத்தினார். அதை சக தோழர்களிடமும் எடுத்துச் சொல்லி வந்தார்.
இருபது ஆண்டுகள் அவர் AITUC பொதுச்செயலராக பணியாற்றியவர்.. அவர் உலகத் தொழிற்சங்க சம்மேளத்தின் தலைமை பொறுப்புகளுக்கு உயர்ந்தவர். அதன் தலைவராகவும் பணியாற்ற வாய்ப்பு பெற்றவர்.1980ல் அவர் AITUCன் பொதுச் செயலரானார்.. 1998ல் அவர் WFTU வின் தலைவர் ஆனார். தோழர் டாங்கேவிற்குப் பின்னர் தொழிற்சங்க அரங்கிலிருந்து அனைவராலும் மிக உயர்வாக மதிக்கப்பட்ட அரசியல் தலைவராக இந்திரஜித் உயர்ந்தார்.
1960-67 ஆண்டுகளில் அவர் கல்கத்தா தென்மேற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1967-77 ஆண்டுகளில் அலிப்பூர் மற்றும் 1980-89 களில் மித்னாபூர் சார்பிலும் வெற்றி பெற்றிருந்தார். அவரது நாடாளுமன்ற உரைகளில் உழைப்பவர் நலன்,இந்திய விவசாயம், பொருளாதார மேம்பாடு, தொழில்வளம், சமூக பிரச்சனைகள், மதசார்பின்மை, தேர்தல் சீர்திருத்தம், நாட்டின் பாதுகாப்பு, சர்வதேச நாடுகள் மத்தியிலான உறவுகள் பளிச்சிட்டன. குறைந்தபட்ச ஊதியம், சணல் ஆலைத்தொழிலாளர்- புகையிலை தொழிலாளர், விவசாயத்தொழிலாளர் நலன், உணவுப்பற்றாக்குறை,  மக்கள் ஆரோக்கியம், கல்வி பிரச்சனைகள் குறித்து அவர் பலமுறை உரையாற்றியுள்ளார்.
பொதுத்துறைகளின் மேம்பாடு குறித்தும் சிறந்த உரைகளை அவர் நல்கியுள்ளார். பொதுத்துறைகள் குறித்த விவாதம் ஒன்றில் திருந்தா ஜென்மங்களுக்காக இந்திரஜித் நின்று  Brain wash  செய்கிறார் என்கிற விமர்சனம் எழுந்தபோது ஆமாம் நிற்கிறேன். நல்லவேளை மூளையை சுத்தம் செய்துகொள்ளாதவர்கள் பக்கம் நான் நிற்கவில்லை என சுவையாக பதிலடி தந்தார். பொதுத்துறை காப்பது என்பது கோட்பாடு- செண்டிமெண்ட் விஷயம் அல்ல. பொதுத்துறைகள் இந்திய எதார்த்தத்தின் பிரதிபலிப்பு என்றார். அதன் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் வேறு- அதை இல்லாமல் செய்வது வேறு என்கிற புரிதலை அவர் வலியுறுத்தினார்.
 பெண்களின் நலன் குறித்து அதிகம் பேசிய உறுப்பினரில் இந்திரஜித் ஒருவர். 1975லேயே அவர் பெண்களுக்கு குறைந்தபட்சம் 15 % ஒதுக்கீடு எனும் கோரிக்கையை முன்வைத்தவர்.
அவர் நாடாளுமன்றத்தில் புகழ்வாய்ந்த ஹிரன்முகர்ஜி, புபேஷ், லோகியா, மதுலிமாயி, மது தந்தவதே வரிசையில் பார்க்கப்பட்டவர்.  நாடாளுமன்ற வாழ்க்கையில் இந்திரஜித் அளவிற்கான வாய்ப்புக்களை பெற்ற சிலரில் பி ஆர் பகத்தும் ஒருவர். அவரின் நினைவின்படி நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னரே நூலகத்திற்கு இந்திரஜித் வந்துவிடுவார். தேவையானவற்றை பார்த்து படிப்பார். பாராளுமன்ற நேரம் முடிந்தபின்னும் அவசியமெனில் இருந்து பத்திரிகையாளர்களை சந்தித்து செல்வார். அய்ம்பது ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவன் என்கிற வகையில் நாங்கள் பாராளுமன்ற ஜனநாயகமே உகந்தது என கருதுகிறோம் என அவர் தயங்காமல் குறிப்பிடுவார்.
அத்வானி ரதயாத்ரா வகுப்புக்கலவரங்களை உருவாக்கும் என்ற கருத்து வலுப்பெற்றபோது தயங்காமல் பிரதமர் வி பி சிங்கிடம் அதை தடுக்கவேண்டும் என இந்திரஜித் வலியுறுத்தினார்..
 அவர் 1996-98 காலத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும்  இருந்தார்.  அமைச்சராக இருந்தபோது கூட தன் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டிலேயே இருந்தாரே தவிர உள்துறை அமைச்சர் என்கிற பெருமித உணர்வில் பங்களாக்களை நாடவில்லை. அரசியல் என்பது சம்பாதித்யமல்ல-உயர் இலட்சிய நெறி என்பதற்கான அடையாளங்களுடன் வாழ்ந்தவர். .
 மத்திய அரசில் உள்துறை அமைச்சர் பொறுப்பிற்கு வந்த முதல் கம்யூனிஸ்ட் தலைவர் அவர். அரசியல் அமைப்பு சட்டப்படி Inter state Council  என்பதை அவர் அமைச்சராக இருந்த காலத்தில் முறைப்படுத்தினார். வடகிழக்கு மாநில முன்னேற்றம் என்பதில் சிறப்பு கவனம் கொடுத்தார். போலீஸ் சீர்திருத்தம், தேர்தல் சீர்திருத்தம், நிர்வாக சீரமைப்பு என்பதில் அவர் முழுக் கவனம் செலுத்தினார்.
சக அமைச்சர்களால்  IPS- IFS  Forest Officer Parity பிரச்சனையை தீர்க்க முடியாமல் இருந்தபோது இந்திரஜித் காடுகளில் சிறப்பாக செயல்படும் அந்த உயர் அதிகாரிகளுக்கும் IPSக்கு இணையான ஊதியம்- அங்கீகாரம் என்பதை நிலைநாட்டினார். அமைச்சரவை கூட்டங்களில் நேர்மையாக தனது கருத்துக்களை அவர் எடுத்து வைப்பார் என அவருடன் சக அமைச்சராக இருந்த சைபுதீன் சோஸ் தெரிவிக்கிறார்.
1996 பி தேர்தலில் இழுபறி ஏற்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி நீடிப்பு என சொல்லப்பட்டபோது அதை சரியல்ல என சொன்னவர் இந்திரஜித். அதேபோல் லல்லு பிரசாத் தீவன ஊழல் பிரச்சனை வந்தபோது அவர் பதவி விலகவேண்டும் என்றார். அப்போது பி ஜே பி 356யை பயன்படுத்தக்கோரியது. ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கை வந்தபோது ராஜிவ் கொலை  சதி குறித்த சந்தேகத்திற்கு இடமான அறிக்கையோ என்ற கருத்து வந்தது. அவர் குழு ஒன்றை அமைத்து அதை பரீசீலிக்க சொன்னார். காங்கிரஸ் தரப்பிலிருந்து அவர் மீது விமர்சனம் எழுந்தது. தேவ கெளடா பிரதமராக இருந்தபோது ஆளுனர்கள் தேர்வில் இந்திரஜித் அவர்களை கலப்பதில்லை என்கிற கேள்வி வந்தபோது கூட ஆட்சி மீதான பொறுப்புணர்வில் அவர் அரசாங்கத்தை விட்டுக்கொடுக்காமல் பதில் அளித்து வந்தார்.
அவர் அமைச்சராக இருந்தபோது தேர்தல் அரசு செலவு குறித்த அமசங்களை விவாதிக்க அனைத்து அரசியல் குழு ஒன்றை அமைத்தார். பெருமுதலாளிகளிடம் நன்கொடை பெறுவதை அவர் விமர்சித்தார். பகத் ராஜஸ்தான் ஆளுநர் ஆக இருந்தபோது நண்பர் என்கிற வகையில் இந்திரஜித் அவரிடம் நான் Khwaja Moinuddin Chisti- Ajmer  வரவிரும்புதாக குறிப்பிட்டார். ஆச்சரியமாக வினவிய பகத்திடம் அவர் வேடிக்கையாக குறிப்பிட்டார்  I am the Home Minister of India but I have also a Home Minister at Home  என தன் துணைவியார் சுரைய்யாவின் விருப்பத்தை அவர் தெரிவித்தார். தனது கொள்கைநிலை என்பதையும் தாண்டி அடுத்தவர் உணர்விற்கு மதிப்பளிப்பது என்பதற்கான சான்றாக இதை புரிந்துகொள்ளலாம்.
அமைச்சர் பொறுப்பு எவ்வாறு உள்ளது எனக் கேட்டபோது 
“I don't mind the job I am doing except for the long hours spent thro files mostly dealing with petty matters. My intellectual inputs are getting blunted by this kind of routine and bureacratic job. I am not a free bird anymore. I can't do what I like.. I feel cagedஎன்றார்.
கட்சியின் உறுதிப்பாடுகள் என்பதை அமைச்சராக அமுல்படுத்த முடிகிறதா எனக் கேள்வி வந்தது. கட்சி பணித்ததால் அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளேன். சிலர் கட்சிப்பணிகளில் செயலாற்றி வருகின்றனர். என் போன்றவர்கள் அரசாங்கத்தின் பகுதியாக செயல்பட்டுவருகிறோம். எனவே இரண்டு கடமைகளும் எல்லா நேரங்களிலும் ஒத்தாற்போல் இருப்பதில்லை என பதில் தந்தார் இந்திரஜித். அப்போது கட்சி நிலைப்பாடுகளை ஏற்க முடியாமல் போகுமா? என்கிற கேள்வி வந்தபோது அவர் நான் கட்சியியை விட்டு விலகி அமைச்சர் பொறுப்பில் இல்லையே. வேறுபாடுகள் இருந்தால் பொதுவெளியில் நான் விமர்சிக்க முடியாது. அவ்வாறு செய்வதும் இல்லை என்றார். வேறுபாடுகளை பிரஸ் முன்னிலையில் விவாதிக்க முடியுமா- கட்சிக்குள்தான் விவாதிப்போம் என்றார்.
  Capital and Labour in the Jute Industry, Self Reliance in National Defence  என்கிற இரு புத்த்கங்களை அவர் எழுதியுள்ளார்.முதல் புத்தகம் அவர் எழுதிய தருணத்தில் சணல் ஆலைத்தொழிலாளர் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றது. எங்கள் பைபிள் என அதைக் கொண்டாடினர் அப்பகுதி தொழிலாளர்.
 இந்திரஜித் தனது 82 ஆம் வயதில் பிப்ரவரி 20, 2001ல் தனது கல்கத்தா இல்லத்தில் மறைந்தார். அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார் 
 Towering Personality- His life was like an open book- a seasoned parliamentarian and contributed for evolving consensus in the time of crisis- He had always a deep sense of concern for the problems of the country and  the lot of the downtrodden and exploited  என புகழ்ந்து அஞ்சலி செய்தார்.
பாராளுமன்றத்தில் டிசம்பர் 5, 2006ல் அவரது சிலை அன்றிருந்த துணை குடியரசுத்தலைவர் பைரன்சிங் செகாவத் அவர்களால் திறக்கப்பட்டது. சபாநாயகர் சோமநாத் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்..
கேள்வி ஒன்றிற்கு in life everything cannot be solved  என்கிற பதிலை அவர் தந்தார். சோவியத் அரசாங்கம் மாறுதலுக்கு ஏற்ப இணக்கமான அசைவுகளை காட்டியிருந்தால் நீடித்திருக்கலாம். அது தூய மார்க்சியமாக கூட இல்லாமல் இருந்திருக்கலாம். நடைமுறை சார்ந்த அம்சமாக அது இருந்திருக்க வேண்டும் என மற்றொரு கேள்விக்கு அமைச்சராக இருந்தபோது பதில் தந்தார்.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணையவேண்டும் என்பதை வெளிப்படையாக சொல்லிவந்தவர்களில் இந்திரஜித்தும் ஒருவர். நாடாளுமன்ற கண்ணியம் , ஒழுக்கம் என்பதில் அவர் முன்மாதிரியாக இருந்தவர். அவரின் தேர்தல் சீர்திருத்த அறிக்கை இந்திரஜித் குப்தா அறிக்கை என்றே விவாதிக்கப்பட்டது.
இந்திரஜித் குப்தாவின் நூற்றாண்டு அவரைப்போலவே மென்மையாக சத்தம் அதிகம் ஏதும் எழுப்பாமல் மெல்ல இந்திய அரசியல் களத்தில் நகர்ந்து சென்றுள்ளது.