https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, August 24, 2022

சொற்களின் சரிதம்

 

 

                                  சொற்களின் சரிதம்

சொற்களின் சரிதம் அளவில் சிறிய புத்தகம்தான். பல நூல்களை  தந்திட்ட வையாபுரிப்பிள்ளை அவர்கள் எழுதிய நூல். அவரின் மறைவையடுத்து டிசம்பர் 1956ல் வெளியான நூல். அவரின் சில கட்டுரைகளை தொகுத்து தந்துள்ளனர்.



முதல் கட்டுரைகழகம் எனும் சொல் குறித்த ஆய்வு. திருக்குறள், சிந்தாமணி, கலித்தொகை என பல நூல்களில் இச்சொல் இடம் பெற்றுள்ளது. ஆரம்பத்தில்சூதாடுமிடும் என்பது இதற்கு பொருளாக இருந்துள்ளது. காலகதியில் வேறு பொருள் தரும் சொல்லானது என வையாபுரி அவர்கள் குறிப்பிடுகிறார்.

திருவாய்மொழியில்திரள் என்கிற பொருளில் இடம்பெற்றதை அவர் சொல்கிறார்.    இராமயணத்தில் இதன் பொருள்கல்வி பயிலுமிடமென வருவதாக வையாபுரி வகைப்படுத்துகிறார். சொற்பொருள் வரலாற்றில் இழிவு பொருண்மை ( degradation)   உயர்வுப் பொருண்மையில் (elevation) வருதல் பற்றி வையாபுரி விளக்குவார்.

Nice  என்ற ஆங்கிலச் சொல் ஆதியில் அறியாமை- மடமை என்ற பொருளில்தான் வழங்கப்பட்டது. இப்பொழுது அது நேர்த்தி- சீர்மை என பொருள் தருகிறது. இப்படிகழகம் என்பதும் உயர்வுப் பொருண்மை நெறிக்கு உள்ளான சொல் என்பார் வையாபுரி.

 களம் என்ற சொல் நெற்கதிரடிக்கும் இடத்திற்கான பொருளில் இன்று பொதுவாக வழங்குகிறோம். இது பழமையான பொருள்தான். புறநானூற்றில் விதை விதைக்கும் இடம் களமாக இருந்துள்ளது. போர்க்களம் என்பதும் பண்டைய நூற்களில் உள்ளது. ஏர்க்களம்- நெற்களம் என்பதிலிருந்து போர்க்களம் வந்திருக்கலாம் என வையாபுரி பிள்ளை கருதுவார். அதிலிருந்துகளமர்- களவன் என்ற சொற்கள் வருவதையும் அவர் சொல்வார்.

பூசாரிக்கு வேலன் என்பது முற்காலத்து பெயர். பூசாரி ஆடி நோய் தணியும் முறையைவெறியாட்டு என்றனர். அதன் நிகழ் இடம்வெறியயர் களம் எனப்பட்டதாம்.

வையாபுரியாருக்கு இந்தகளம்’ என்பதும் வடமொழியினின்று பெறப்பட்ட ஒன்றே என்ற கருத்து இருக்கிறது. இப்படி ஆரம்பித்து அவர் தமிழ்- வடமொழி, தமிழர்-ஆரியர் நாகரீகத் தொடர்புவரை கேள்விகளை உருவாக்கிச் செல்வார். விடை எளிதானதல்ல என்பதை ஏற்றே வினாக்களை அவர் முன்வைத்துள்ளார்.

 அடுத்து அவர்பொழுது’ என்ற சொல்லை எடுத்து விவரிப்பார்.போழ்து என அழுத்தம் பெற்றதை, கன்னடத்தில் பொழ்து என, தெலுங்கில் பொர்து என பேசப்படுவதைச் சொல்வார்.

 திருக்குறள், நான்மணிக்கடிகை, நாலடியார் போன்றவற்றை காட்டி விவரிப்பார். ’போது எனத் தமிழில், ’போழ் என மலையாளத்தில் சொல்லப்படுவதையும் அவர் காட்டுவார். அப்போது, இப்போது, எப்போழ்து என்பன அப்போ, இப்போ, எப்போ என பேசப்படுவதையும் அவர் எடுத்துக்காட்டுவார்.

தோடுஎன்கிற சொல் குறித்து வையாபுரி தேடிச் செல்கிறார். இன்று காதில் அணியும் ஆபரணம் என்ற பொது புரிதல் இருக்கிறது. திவாகர் நிகண்டு தொகுதி, பனையிதழ், பூ இதழ் என்கிற பொருளில்தோடு என்பதை பார்த்தது.

 சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், குமரகுருபரர்தோடு என்பதை பெண்களின் ஆபரணமாக காட்டியுள்ளதை வையாபுரி சொல்கிறார். இதற்கெல்லாம் முன்பே நாவுக்கரசர், ஞான சம்பந்தர், சுந்தரர், ஆண்டாள் எடுத்தாண்டுள்ளனர்.

. இப்படி தேடிச் சென்ற வையாபுரி பிள்ளை அவர்கள் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் காதோலை- காதணி என்ற பொருளில் வழங்கப்படவில்லை என்ற முடிவிற்கு வருகிறார். முன்னர் அது பனம்பூ- பனையோலையை குறித்து நின்றதாம். பனையோலை காதில் மாட்டியிருந்தவர்களைபெண்ணை என்றும் குறித்துள்ளதாக அவர் சொல்கிறார். சங்க இலக்கியங்களிலேதோடு காணப்படுவதில்லை- குழை பேசப்படுவதாகவும் வையாபுரியார் சொல்கிறார்.

சங்க காலத்திற்கும் தேவார காலத்திற்கும் இடைப்பட்ட 4-5ஆம் நூற்றாண்டளவில் காதில் தோடணியும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். பொற்றோடு அணியும் பழக்கம் கிபி 6 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டிருக்க வாய்ப்பில்லை என வையாபுரி கண்டடைகிறார்.

 தோடு என்பதையும் அவர் வடமொழி சொல்லுடன் ஒப்பிடுவார். தாடங்கம் என்பதற்கு பனையோலை அணி எனப் பொருள். அப்போதுதாட என்பதற்கும்தோடு என்பதற்கும் தொடர்புண்டா என அவரது ஆராய்ச்சி நீளும். காதோலை பழக்கம் முதலில் தென்னாட்டிலே அல்லது வடநாட்டிலா என்ற கேள்வியுடன் அவர் விடையை தேடவேண்டும் எனச் சொல்லி நிறுத்துவார்.

விருந்து எனும் சொல்லை எடுத்து ஆய்வு செய்வார் வையாபுரி. விருந்து என்பதை தொல்காப்பியம் பேசியுள்ளதிலிருந்து அது பழங்கணக்கில் வருவது என்பார். வருகின்ற விருந்தாளிகளை உபசரித்தல் என்ற பொருளில் பண்டைய இலக்கியங்கள் பேசியுள்ளன.

 ஆனால் புறநானுற்றுக்கு பிந்தியதாகக் கருதப்படும் திவாகர் சூத்திரம் இதற்கு புதுமை எனப் பொருள் கொண்டுள்ளது. அது ஆகுபெயராகி புதிதாய் வந்தார் மேல் நின்றது எனவும் பரிமேலழகர் உரை செல்வதாக வையாபுரி விளக்குவார். விருந்தோம்புதல் வேள்வியாகவே பல இலக்கியங்களில் பேசப்படுவதாகவும் அவர் சொல்வார்.

 உத்தமர்களாகிய பெரியோர்களை விருந்து உபசரித்தல் என்பது முக்கியமாக பார்க்கப்பட்டுள்ளது. இதற்கென அரண்மனைகளில்விருந்துக்கோயில் என தனி இடம் கூட இருந்ததாம்.

 வடமொழியிலும் அதிதி- ஆதித்தியம் சிறப்பாக பேசப்படுகிறதென்பார் வையாபுரி. ’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் எனத் தமிழ் பேசினால்அன்னம் பிராணக என பெளதாயணம் பேசுவதாக வையாபுரி ஒப்பிடுவார்.

 பஞ்சம் என்ற சொல்லை ஆய்வு செய்த வையாபுரியார் அச்சொல் 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நூல்களில் ஏறத்துவங்கியதாக சொல்கிறார். மலையாளத்திலும் இச்சொல் தமிழிலிருந்து போயிருக்கலாம்.

கன்னடத்தில் மலடி எனப் பொருள்தர பஞ்ஜெ என்பதைச்சொல்கிறார்கள். தமிழில் கூட பூமி வறங்கூர்ந்ததை நிலம் மலடானது என மலட்டு தன்மையை பஞ்சம் எனும் பொருளில் வழங்கியதாக சொல்கிறார்.

வையாபுரி வேறு பல சொற்கள் குறித்தும் இதில் பேசியுள்ளார். என் பார்வைக்கு எளிதாக உணர்ந்தவை குறித்தே இங்கே சொல்லியுள்ளேன். ஆர்வம் உள்ளோர் அவர் நூலை படிக்கலாம்.

22-8-2022

Sunday, August 21, 2022

தமிழும் சமஸ்கிருதமும் (ம பொ சி பார்வையில்)

 

 

தமிழும் சமஸ்கிருதமும்

(ம பொ சி பார்வையில்)

பொ சி அவர்கள் எழுதிய தமிழும் சமஸ்கிருதமும் மிகச் சிறிய புத்தகம்தான். 1983ல் செங்கோல் பத்திரிகையில் வெளியானதை திரட்டி நூலாக தந்துள்ளனர்.

 தமிழுக்கு அடுத்தபடியாக அது பேச்சுமொழியில்லாவிட்டாலும் சமஸ்கிருதத்தை நேசிக்கிறேன் என பொ சி இதில் சொல்லியிருப்பார்.. தமிழ் தாய்மொழி- வாழ்க்கை மொழி என்றால் இந்தியன் இந்து என்ற வகையில் சமஸ்கிருதம் எனது கலாச்சார மொழி எனவும் பொ சி கருதினார்.



சமஸ்கிருதத்தை பயிலக்கூடாது என்ற எண்ணம் ஏதும் அவரிடத்தில் இருந்ததில்லை. தனது குடும்பச் சூழலில் கல்வி பெறவே வாய்ப்பில்லா நிலையில் தமிழ் கற்கைக்கே 35 வயதை தாண்டவேண்டியிருந்தது . ஆங்கிலத்தில் புலமை பெறாமல் போனதற்கு கூட வருந்தவில்லை- ஆனால் சமஸ்கிருதம் அறியாமல் போனதற்கு வருந்துவதாகவும் பொ சி சொல்லியிருப்பார். தமிழ்மொழி தொண்டை இப்பொழுதைவிட கூடுதலாக திறமையாக சமஸ்கிருத மொழி அறிவு இருந்திருந்தால் செய்திருக்கமுடியும் எனவும் அவர் பேசியுள்ளார்.

 தமிழ்மொழியில் பெயர்க்கப்பட்ட வால்மீகி இராமாயணம், வியாச பாரதம், அர்த்த சாஸ்திரம், ஆர்யசமாஜிகள் வேதம் குறித்து வெளியிட்ட நூல்களை  மபொசி கற்றதாக சொல்வார். பகவத்கீதை குறித்து காந்திஜி, பாரதியார், ராஜாஜி, வினோபாஜி எழுதியதையும், திலகரின் கீதா ரகஸ்யத்தை அமராவதி சிறை வாழ்க்கையின்போது ஆங்கில வழி படித்தததையும் அவர் நினைவு கூர்வார். மகாகவி காளிதாசரின் ரகுவம்சம், சாகுந்தலம், மேகதூதம், மாளவிகாக்கினி சூத்திரம் படிக்க அவருக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

மகாராஷ்ட்ரா அமராவதி சிறையில் மபொசி சத்தியமூர்த்தி, சித்தூர் அனந்தசயனம் ஆகியவர்களுடன் மபொசி இருந்தார். அங்கு அனந்தசயனம் வியாசர் பாரதம், வால்மீகி ராமாயணம் தினம் சொல்லித்தந்தார். சத்தியமூர்த்தி காளிதாசரின் ரகுவம்சத்தை நடத்தினார். வால்மீகியை சொல்லி கம்பன் இதற்கு என்ன சொல்லியிருக்கிறார் என சத்தியமூர்த்தி என்னிடம் கேட்பார் என மபொசி நினைவுகளைத் தருகிறார். மபொசியின் கம்பன் வகுப்புகளுக்கு சத்தியமூர்த்தி வரலானார்.

 விடுதலையடைந்தவுடன் கடற்கரை குழுவினர் சந்திப்பில் மபொசி இடம்பெற்றார். வி எஸ் சீனிவாச சாஸ்திரியார், டி ஆர் வெங்கட்ராம சாஸ்திரியார், ஜி நடேசன், ராஜாஜி ஆகியவர்களுடன் மபொசியும் சந்திப்பில் இருந்தார். அங்கும் வால்மீகி- கம்பன் ஒப்பீடு உரையாடல் இருந்தது. சாஸ்திரியார் வால்மீகி ராமாயண சொற்பொழிவை ஆங்கிலத்தில் நடத்தி அது தமிழில் புத்தகமாக வந்ததையும் மபொசி குறிப்பிட்டுள்ளார். அதேபோல் சிறிய அளவு சமஸ்கிருத பயிற்சி பெறமுடிந்தமைக்கு சேங்காலிபுர அனந்தராம தீட்சிதர் உதவியதாகவும்,அவரது ராமாயண- மகாபாரத சொற்பொழிவுகள் குறித்தும் மபொசி சொல்வார்.

 திருமூலரும், மெய்கண்டாரும் திருமந்திரத்தையும், சிவஞானபோதத்தையும் சிறக்க தருவதற்கு அவர்களின் தமிழ் புலமையுடன் சமஸ்கிருத அறிவும் பயன்பட்டுள்ளது. அருணகிரியார், தாயுமானவர், இராமலிங்க சுவாமிகளுக்கும் சமஸ்கிருத புலமை இருந்தது என பொ சி சொல்கிறார். மறைமலையடிகள் காளிதாசனின் சாகுந்தலத்தை மொழியாக்கம் செய்ததையும்  மபொ சி குறிப்பிடுவார். சைவ மட கடலூர் ஞானியார் சுவாமிகளும் சமஸ்கிருத புலமை பெற்றிருந்தார்.  கேரளா நாராயண குரு சமஸ்கிருத புலமை பெற்றதுடன் அங்கு ஒதுக்கப்பட்ட மக்களுக்கும் அதை கற்பிக்கலானார்.

தமிழர்களுக்கு தங்களின் சமுதாய வாழ்க்கைக்கு சமஸ்கிருதம்  தேவைப்படாது. சங்க இலக்கியங்களே- காதலும் வீரமும் கொண்ட வாழ்க்கையே போதும். ஆனால் தமிழர் சிலருக்காவது சமஸ்கிருத பயிற்சி தத்துவ உரையாடல்களுக்கு தேவைப்படுவதாக பொ சி  நினைக்கிறார்.

 சமஸ்கிருதத்தை செத்தமொழி எனச் சொல்வது கொச்சை என்றால் அதை பேச்சு வழக்கிலிருந்து பேசத் தகுதியற்றதாகிவிட்டது எனச்சொல்வதையும் மபொசி ஏற்கவில்லை. அது எப்போதுமே பேச்சுமொழியாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவிற்கே பொ சி வருவார்.

மெய்ஞ்ஞான தத்துவங்கள், விஞ்ஞான சிந்தனைகள் பிரதேச மொழிகளில் இருந்திருக்கலாம். அதில் பிரதானமானது தமிழ். வேதங்கள், உபநிடதங்கள் செவிவழியில் எழுதாக் கிளவி என இருந்திருக்கலாம். திரட்டி தர அவர்கள் பொதுமொழியொன்றை - சமஸ்கிருதம் எனும் கலாச்சாரமொழி ஒன்றை அவர்கள் ஏற்படுத்தியிருக்கலாம் என மபொ சி ஊகம் செல்கிறது.

 சுந்தரம் பிள்ளைக்கு வடமொழி காழ்ப்பு இருந்தது என்பதை பொசி ஏற்கமாட்டார். தமிழை வடமொழியைவிட தாழ்ச்சிப்படுத்தி சொன்னவர்களை கண்டித்து மறுமொழி கூறியதாக பொ சி எழுதுவார். தென்மொழி தமிழை வலக்கண்ணாக, சமஸ்கிருதத்தை இடக்கண்ணாக மனோன்மணிய ஆசிரியர் ஏற்பார் என பொ சி சொல்வார். ஆரியம்போல் உலக வழக்கு அழிந்தொழிந்து என்பதில் பேச்சு வழக்கற்றுப் போனதையே சுந்தரனார் குறிப்பிடுவார் என்பது பொ சியின் வாதம்.

சங்கரர், ராமானுஜர் வடபுலத்தில் பண்டிதர்களுடன் சமஸ்கிருதத்தில் தர்க்கம் புரிந்தனர் என்பதை வைத்து அவர்கள் கால மக்கள் சமஸ்கிருதம் பேசினர் என சொல்ல இயலாது. இந்நாளில் ஆங்கிலத்தில் படித்தவர் உரையாடுகின்றனர் என்பதால் ஆங்கிலம் நம் மக்களின் பேச்சுமொழி என்றா சொல்கிறோம் என பொ சி எதிர் வினா தொடுத்து தன் விவாதத்தை நகர்த்துவார்.

இங்கு நம்மிடையே ஆங்கிலம் பேசுபவர்களும் தாங்கள் ஆங்கிலத்தை பேச்சுமொழியில் பேசுவதாக கொள்வது ஒருவகை மயக்கம் என்பார் மபொசி.

 சமஸ்கிருதம் கலாச்சாரப் பொதுமொழி என்கிற புரிதல் மபொசியிடம் வலுவாக இருப்பதைக் காண்கிறோம். சாமான்ய மக்களின் பேச்சுவழக்கில் இல்லாததால் அதன் பெருமை குறைந்துவிடாது என அவர் கருதியதையும் காண்கிறோம்.

மபொசி எழுதியதாவது

இஸ்லாமியருக்கு அரபுமொழியிடம் பற்று இருப்பது போல, கிறித்தவர் பைபிள் காரணமாக லத்தீன் மீது பற்றுக் கொண்டிருப்பது போல, இந்துவும் வேதத்தை தந்தது சமஸ்கிருதம் என்பதால், அதனிடத்துப் பற்று வைப்பது அவசியமாகிறது. மத நம்பிக்கையற்றவர்களை விட்டுவிடுவோம்

அனைத்து வகையிலும் சமஸ்கிருதத்திற்கு நிகரான மொழி தமிழ். அதிலும் இறையருளில் கலக்க வைக்கும் பக்தி உண்டு. எனவே சமஸ்கிருதம் தெய்வமொழி எனில் தமிழும் தெய்வமொழிதான். கம்பர் சமஸ்கிருதத்தை தேவபாடை எனச் சொன்னால் தமிழை சுடர்க் கடவுள் தந்த தமிழ் எனப்பாடுவார். பாரதியும் உயர் ஆரியத்திற்கு நிகர் என்பார். எனவே சமஸ்கிருத பற்றால் தாய்த் தமிழை தாழ்த்திப் பேசுவோரை கண்டிப்பார் மபொசி.

தமிழில் வடமொழி கலந்து இருப்பதால் சமஸ்கிருதம் இல்லாமல் தமிழ் இல்லை என்பதை மபொசி ஏற்கமாட்டார். பக்தி இலக்கியம் பாடியவர் சமஸ்கிருதச் சொற்களை கையாண்டிருந்தால் அது சமயத்தின் பொருட்டு என்பதாகவே இருக்கிறதே தவிர மொழியின் பொருட்டல்ல என்பார் மபொசி.

 தமிழகத்தை நவாபுகள் ஆண்டபோது அரபு/ உருது சொற்கள் மக்கள் பேச்சிலே கலந்துவிட்டன. கிஸ்தி, ரஜா எல்லாம் அப்படி வந்தவையே.

 தாய்மொழி பற்று அவசியம். அதேபோல் பிறமொழி துவேஷம் அவசியமற்றது. சமஸ்கிருதத்தை அனைவரும் பயிலவேண்டும் என்பது அவசியமில்லாத ஒன்று. இலக்கிய பரிவர்த்தனை செய்ய விரும்புவோர், ஆய்வாளர் கற்பதில் தவறில்லை. ஆங்கிலம் கூட அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். ஆனாலும் அது இன்று வாழ்க்கைமொழியாக்கப்பட்டுவிட்டது.

 சமஸ்கிருதம் பிராமணர்மொழி, இந்துக்கள் மொழி என குறுக்கப்படாமல், பல்வேறு ஆர்வமுள்ள உலக அறிஞர்கள் கற்கும் மொழியாக உள்ளது எனப்புரிந்துகொள்ளவேண்டும்.  இந்து மத நூல்கள் பண்டிதர்களின் சொத்தாக உள்ளது. குரான், பைபிள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பல வீடுகளுக்குசென்றதைபோல வேதநூல்கள் செல்லவில்லை என்பது குறையே என மபொசி சொல்கிறார்.

தெலுங்கும் கன்னடமும் தமிழிலிருந்து வந்தவை எனச் சொல்வதைவிட அவை சமஸ்கிருதத்திலிருந்து வந்தவை எனச் சொல்வதில் அவர்கள் பெருமைகொள்கின்றனர். தமிழை சகோதரி எனப் பார்க்கும் பார்வையும் இருக்கிறது. தாய் எனக் கொள்வதில் தயக்கம் கொள்கின்றனர்.

 வட இந்தியாவில் சமஸ்கிருத இடத்தை இந்தி எடுத்துக்கொண்டு தன்னை இணைப்புமொழியாக்கிக்கொண்டது. தென்புலத்தில் தமிழ் அப்படி இணைப்புமொழியாகவில்லை. திராவிடநாடு என்ற இயக்கம் இங்கு செயல்பட்டும் இணைப்புமொழி என்ற முயற்சி கைகூடவில்லை என மபொசி சுட்டிக்காட்டுகிறார்.

சமஸ்கிருத படிப்பும் அறிவும் எவ்வளவு மோசமாக பிராமணர்களிடத்து போய்விட்டதென்பதை 1963 செப்டம்பரில் காமகோடி சங்கராச்சாரியார் அவர்கள் சுட்டிக்காட்டியதை மபொசி தருவார்

பிராமணர்கள் தமிழிலாவது புலமை பெற்றிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. சூன்யம். பெரியபுராணம் தெரிந்த பிராமணர் எத்தனை பேர்? கோயிலில் வேதம் ஓதும் குருக்களுக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை. தமிழிலிலே எழுதி கிளிப்பிள்ளை போல ஒப்புவிக்கிறார்கள். மேல் நாட்டிலிருந்து பலர் வந்து சமஸ்கிருத நூல்களை மகிழ்ச்சியுடன் கற்று வருகின்றனர். நாமோ புறக்கணித்துவிட்டோம்

புரோகிதம் வேண்டும் என்றால்கூட அதை தமிழில் வைத்துக்கொள்வதை பொ சி ஆதரிப்பார். சமஸ்கிருதத்தை பிழையுடன் சொல்வதைவிட இது மேலானது என்ற எண்ணம் வலுப்பெறவேண்டும் எனவும் அவர் விழைவார். தன் மகன் திருநாவுக்கரசு திருமணம் தமிழ் படி நடக்கும் என ராஜாஜியிடம் அவர் சொன்னபோது, ஏன் சமஸ்கிருதம் பிடிக்காதா என ராஜாஜி வினவினார். நன்றாக சமஸ்கிருதம் தெரிந்தவர் இருக்கிறார்களா என மபொசி கேட்டபோதுஎங்கே என ராஜாஜி சிரித்தார் என பொசி சொல்கிறார்.

 தமிழ் அலுவலக ஆட்சிமொழியாக, நீதிமன்ற நிர்வாக மொழியாக, கல்லூரிகளில் போதனைமொழியாக இருக்கவேண்டும். அதேபோல் அந்த அந்த மாநில மொழிகளும் இருக்கவேண்டும் என்பதற்கு பொ சி குரல் கொடுத்தார். ஆங்கிலம் போல சமஸ்கிருதம் விருப்பபாடமாக இருப்பதில் தவறில்லை என்ற நிலைப்பாட்டை பொ சி மேற்கொண்டார்.

 இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என எவருக்கும் பொதுவழிபாட்டில் தமிழ் இருந்தால் நல்லது. பிரதான மந்திரம் என ஏதேனும் சிறப்பாக இருந்தால் அது சமஸ்கிருதம், அரபி, லத்தீனில் இருக்கலாம் என்பார் பொசி.

கிறித்துவுக்கு பிற்பட்ட காலத்தில் சமண பெளத்தம் மூலம் வடமொழிகள் தமிழிலே செல்வாக்கு பெற்றன. சிலப்பதிகாரம் இதை உணர்த்தும். இதனுடன் போட்டிபோடும் வகையில் இந்து மதவாதிகளும் தமிழ்- சமஸ்கிருதக் கலப்பை செய்ததாக பொ சி முடிவிற்கு வருகிறார். இதன் மூலம் ஏதோவொருவகையில் தமிழால் சமஸ்கிருதம் வாழ்வு பெற்றது என பொ சி கருதுவார். இஸ்லாமியர் ஆட்சி காலத்தில் வடபுலத்திலேயே சமஸ்கிருதத்திற்கான ஆதரவு அரிதானது. வடமொழி புலவர்கள் கொம்பையிழந்த கொடிபோலாயினர் என்கிறார் பொ சி.

 சமஸ்கிருதம், பாலி வடபுலத்து மொழிகளை ஒட்டி தமிழிலே வழிநூல் படைத்தவர் இந்து மதத்தினர் அல்லர். சமண- பெளத்தரே. மணிமேகலை, சீவகசிந்தாமணி சான்றாகின்றன என்பார் பொ சி.  சமஸ்கிருத காப்பியத்திற்கு வழிநூலை தமிழிலே படைத்து பண்பாட்டை காத்தவர் கம்பர்.

 சமஸ்கிருதம் அறிவதால் சமுதாய சீர்திருத்தத்திற்கு ஒருவர் எதிராக நிற்பார் என்பதை வள்ளலார் வாழ்வு காட்டவில்லை என மபொசி உதாரணம் காட்டினார். ஜெர்மன், பிரஞ்சு படிக்க வாய்ப்புண்டு என்றால் சமஸ்கிருத மொழியைப் படிக்க அனுமதிப்பதில் நியாயக்குறைவு எப்படி ஏற்படும் ? இந்து மதத்தை ஏற்கும்போது சமஸ்கிருதத்தை வெறுக்கவேண்டியதில்லை என்பதே பொ சி இந்நூல்வழி தரும் செய்தியாக இருக்கிறது.

20-8-2022