https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, August 10, 2022

தமிழில் விடுதலை இலக்கியம்

 

                      தமிழில் விடுதலை இலக்கியம்

தமிழில் விடுதலை இலக்கியம் எனும் புத்தகம் 2003ல் வெளிவந்த ஒன்று. முனைவர் பேரா கா. செல்லப்பன் அவர்கள் நாமக்கல் கவிஞர் அறக்கட்டளை சார்பில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவு. அந்த சொற்பொழிவில் ஆறு தலைப்புகள் அமைந்துள்ளன. பாரதி, பாவேந்தர், நாமக்கல்லார், தமிழ் புதினங்கள், கல்கியின் புதினங்கள் ஆகியவற்றில் தேசியம்- தமிழ்- காந்தியம் எவ்வாறு என்பதை அவர் சொற்பொழிவில் கொணர்ந்தார். அதில் ஒரு சொற்பொழிவின் தலைப்புவிடுதலை இயக்கமும் தேசிய இலக்கியமும்’ என்பதாகும். அதில் பேரா. செல்லப்பன் சொல்ல வந்துள்ளதை சுருக்கமாக இங்கு தந்துள்ளேன்.இந்தியாவில் தேசியம் உருவாகுமுன் தேசிய இலக்கியம் இருந்தது. இந்தியாவை தேசம் எனச் சொல்வதைவிட ஒரு நாகரிகம் எனச் சொல்லலாம். அதாவது அரசியலுக்கு முன்பாகவே பண்பாட்டுரீதியாக ஒன்றுபட்டிருந்தது.

 சங்க இலக்கியத்தில் யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற அகன்ற மனப்பாங்குடன் அய்ந்திணைப் பகுப்பும் இருந்தது. சேர, சோழ, பாண்டிய என தேசிய உணர்வு சிலப்பதிகாரத்தில் முழுமை அடைகிறது.

 கம்பனால் கங்கை- காவிரிச் சங்கமம் ஏற்பட்டது. பின்னர் ஒருவகை நிலப்பிரபுத்துவ பண்பு நிலவியது.

பிரிட்டிஷ் காலத்தில் மீண்டும் மறுமலர்ச்சியைக் காண்கிறோம். ’விடுதலை’ வெளிநாட்டாரை விரட்டுவது மட்டுமின்றி, நம்மை உணரும் அகவிழிப்பாகவும் இருக்கிறது.

 இந்திய நாட்டில் தன்னைத் தேடுதல் இந்திய மொழிகளின் மூலம் நடந்தது.. ஆங்கிலம் அதற்கு துணையாக நின்றது. காந்தி, நேரு இந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். மொழிவழி மாநிலங்கள் புத்தாக்கத்திற்கு குவி புள்ளி என நேரு ஏற்றார். மாநிலத்தில் பொதுமொழி மூலம் மக்கள் இணைத்துக்கொள்வதின் அவசியம் உணரப்பட்டது.

இந்திய மொழிகள் பலவானாலும் அவை இந்திய இலக்கியம் என்ற ஒன்றே என்ற உணர்வில் சாகித்ய அகாதமி நிறுவப்பட்டது.  இந்தியாவில் இந்திய இலக்கியம் புதிய ஒன்றல்ல- ஆனால் இழந்ததின் மீட்பது.

 வங்கம் மறுமலர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை தந்தது. வங்கம் இன்று நினைப்பதை நாளை இந்தியா நினைக்கும் என்றனர். ஈஸ்வர் சந்திர வித்யாசாகரர், ராஜாராம்மோகன்ராய், கவி மதுசூதனர், தீனபந்துமித்திரர், பக்கிம் சந்திரர், கேசவ சந்திரர், தேவேந்திர நாத் தாகூர், பரமஹம்சர்- விவேகானந்தர், நிவேதிதா என அங்கு நீள்வரிசை உருவானது. இலக்கிய மறுமலர்ச்சியின் முழுமையை தாகூர் காட்டினார். பாரதி வங்கத்தை கொண்டு வந்து இங்கு தந்தார்.

தாகூர் தேசத்தை தெய்வமாக உருவகிப்பதை ஏற்கவில்லை. இதை அவரின் வீடும் உலகமும் காட்டுகிறது. அவர் தேசியத்தின் முழுவடிவத்தையும் தன் கோரா வில் வடித்துக் காட்டினார்.

 அரவிந்தரும் சரோஜினியும் கூட தன் எழுத்துக்களால் தேசியம் உணர்த்தினர். இந்தியன் என்று கூட உன்னைக் குறுக்கிக்கொள்ளாதே என்ற விரிந்த பார்வையை சரோஜினிக்கு அவர் தந்தை கொடுத்தார். விண்முட்டும் பெருமைகளுக்கு அகன்ற வெற்றிகளுக்கு எதிர்காலம் பலதிறத்த ஒலிகளுடன் உன்னை அழைக்கிறது என அவர் எழுதினார்.

 தமிழ் நாட்டில் கட்டபொம்மன் காலத்திலேயே சுதந்திர உணர்வு எழுந்தாலும் வள்ளலார் காலத்தில் அது மறுமலர்ச்சி இலக்கியமாக மலர்ந்தது. கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக என்றார் அவர். தியோசபிகல் தலைமையும் அவரை மகாத்மா என்றது.

கோபாலகிருஷ்ண பாரதி நந்தனார் சரித்திர கீர்த்தனைப் பாடினார். சமய வைதிக எதிர்ப்பு அதன் மொழிவாக இருந்தது. மனோன்மணிய சுந்தரம் பிள்ளை தமிழ் தேசியம்  வைத்தார். வே சா சங்க இலக்கிய மீட்சியை தந்தார். இந்திய தேசியம் தமிழியமாக தழைத்தது. பாரதியில் அது முழுமையானது. தேசியம்- தமிழ் என கலந்து அவர் நீங்காப் புகழ்  அடைந்தார்.

தேசியம் தமிழ் மயமான- அது தமிழ் தேசியமாக வெளிப்படுத்திக்கொள்தல்வரை தொட்டுக்காட்டி பேரா செல்லப்பன் இந்த தலைப்பிற்கான உரையை நிறுத்தியுள்ளார்.

சிறிய புத்தகம்தான். வாய்ப்புள்ளவர் படித்துவிடமுடியும்.

10-8-22

No comments:

Post a Comment