வாக்காள பெருமக்கள்
தேர்தலில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்களா- எந்தப் பகுதி மக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது என்ற கேள்விகள் தேர்தல் குறித்த ஆய்வாளர்களிடம் விடையை தேடவைக்கும். ஜனநாயகத்தால் பெருமளவு மக்கள்
பெற்றதென்ன என்பது போராளிகளின் கேள்வியாக இருக்கும்.
1952 முதல் தேர்தலிலேயே இந்தியா வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பதை உறுதியாக சோதித்தது. அன்றிருந்த விடுதலை தலைமையும்- அரசியல்நிர்ணய சபையின் பொது ஞானமும் இதற்கு வழிகோலியது. அந்த தேர்தலில் 46 சத மக்கள் வெளிவந்து ( turnout) வாக்களித்தனர். கடந்த 2019 தேர்தலில் வாக்களித்தோர்
( turnout) 67 சதமானதைக் காண்கிறோம்.
1984ல் இந்திராவின் படுகொலைக்கு பின்னர் நடந்த தேர்தலில் 64 சதம்
வாக்களிக்க சென்றனர். 1989 தேர்தல் துவங்கி 2019வரையிலான தேர்தல்களின் வாக்களிப்பு சராசரியை (வெளிவந்த விவரங்களின்படி) மாநிலவாரியாக பார்க்கமுடிகிறது. தமிழ்நாட்டில் சராசரி 66.22 சதம் என்றால் உ.பி வாக்களிப்பு 52.82 சத சராசரியை தந்துள்ளது. வடகிழக்கு நாகலாந்து 80.57 சதம், மே.வ 79.88, கேரளா 79.51, மகராஷ்ட்ரா 56.5 சதம் காட்டுகிறது. அனைத்திந்திய சராசரி இந்த 20 ஆண்டுகளின் தேர்தலில் 61.4 சதமாக உள்ளது. மத்தியதர வர்க்கம் மனது வைத்தால் இந்த சதம் கூடப் போக வாய்ப்புண்டு.
சட்டமன்ற தேர்தல் என்றால் தமிழ்நாட்டில் இந்த சராசரி 69.91 சதமென உயர்வதைக் காண்கிறோம். கேரளாவில் நாடாளுமன்ற
சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் பங்கேற்பில் பெரிய மாற்றமில்லை. மத்தியபிரதேசத்தில் சட்டமன்றம்
எனில் 10 சதம்,ராஜஸ்தானில் 12 சதம், உ.பி யில் 2 சதம், மே.வ 2 சதம், ஜம்மு காஷ்மீரில்
16 சதம் கூடுவதைக் காண்கிறோம். ஜம்மு காஷ்மீர் நாடாளுமன்ற சராசரி 40.85 சதமெனில் சட்டமன்ற
சராசரி 56.88 சதமென மாறுவதைக் காண்கிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் 2009-2019ல் அர்பன் வாக்காளர்
51.5 % லிருந்து 60.95 சதமாக உயர்வதையும், செமி அர்பனில் 61.2 லிருந்து 68.85 என்றும்,
ஊரக வாக்காளர்கள் 58.5 லிருந்து 68.09 சதமாகவும்
உயர்ந்துள்ளது. வாக்களிக்கவேண்டும் என்ற உணர்வு வளர்ந்துள்ளதை இந்த டேட்டாக்கள்
செய்தியாக சொல்வதைக் காண்கிறோம்.
மாநில சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க
வருவதை பொதுவாக உணரமுடிகிறது. ஒன்று அருகாமை உணர்வு. அறிந்த தலைமைகளின் செல்வாக்கு
ஈர்ப்பு, கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் செல்வாக்கு, தலமட்ட கேடர்கள் கிரியா ஊக்கியாக
நின்று வாக்களர்களை சாவடிக்கு எப்படியாவது அழைத்து செல்ல விழையும் திறன் போன்றவைகளை
நாம் காரணிகளாக பார்க்கலாம்.
மண்டல் அமுலாக்கத்திற்கு பின்னரான நாடு முழுதுமான
BC க்களின் அரசியல் திரட்சியும் இதில் முக்கிய காரணியாக தொழிற்படுவதைக்காணலாம். தலித்
பகுதி வாக்களர் மத்தியிலும் turnout உயர்ந்து
வருகிறது. இஸ்லாமியர் மத்தியில் ஏற்பட்டுள்ள சோர்வு, ஒருவகை நம்பிக்கையின்மையை அவர்களது
turnout - வருகை குறைவில் 2014, 2019 தேர்தல்களின்
ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
1962 முதல் 2019 வரை கிடைக்கும் விவரம் ஒன்றில் இஸ்லாமிய
பெண்கள் ஆண்களைப்போலவே இணையாக வாக்கு சாவடிக்கு செல்வதில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதைக்
காண்கிறோம். 1962ல் இஸ்லாமிய ஆண்கள் 59.31 சதம், பெண்கள் 46.68 சதம் சென்றிருந்தால்,
2019 தேர்தலில் ஆண்கள் 66.89 சதமும், பெண்கள் 66.79 சதமும் வாக்களிக்க சென்றிருக்கிறார்கள்.
இந்த விவரம் அவர்களிடம் சோர்வு இருக்கிறதா- அவநம்பிக்கை அதிகமாகியிருக்கிறதா என்ற கேள்விக்கு
எதிர்மறை பதிலைத் தருவதைக் காண்கிறோம்.
பொதுவாக ஆண், பெண் வாக்காளர் பங்கேற்பில் பாலின வேறுபாடு
உணரமுடிகிறதா என்ற கேள்வியையும் கேட்டு நாம் பதில் தேடவேண்டியிருக்கிறது. 1950-60களில்
இந்த வேறுபாட்டு இடைவெளி 15 சதமளவு இருந்துள்ளது. 1990-2004ல் 10 சதமாக இந்த இடைவெளி
குறைந்தது. 2009ல் 4.4 சதமாகவும், 2014ல் 1.46 சதமாக, 2019ல் 1 சதமாக இடைவெளி குறைந்துள்ளது.
பெண்களின் வாக்களிக்கும் உணர்வில்
பெரும் மாற்றம், விழிப்புணர்வு வந்துள்ளதைக் காண்கிறோம். பஞ்சாயத்து தேர்தல்- பெண்களுக்கான
ஒதுக்கீடு ஆகியவை தந்த விழிப்புணர்வாக இதை எடுத்துக்கொள்ளலாம். குடும்பத்தின் ஆண் அல்லது
பிற உறுப்பினர் சொல்படிதான் வாக்களிப்பு என்பதிலும் பெரிய மாற்றத்தைக் காண்கிறோம். Independent decision of women voters -
81 சதம் என்று வந்திருப்பது ஜனநாயகத்தில் ஆரோக்கிய
வளர்ச்சி. பெண்களின் கல்வி அறிவு மேம்பாடு, பொருளாதார தன்னம்பிக்கை ஆகியவை காரணிகளாக
இருக்கலாம்.
அரசியல் விழிப்புணர்வு வளர்ச்சியை பொறுத்தும் எவருக்கு வாக்கு என்பதில் வாக்காளர் திடமாக இருப்பதையும் காண்கிறோம். வேட்பாளர் மத்தியில் வெற்றிக்கான இடைவெளியை அதிகப்படுத்தி வெற்றியைத்தரவும் செய்கின்றனர். அது குறித்த பெருமிதங்களையும் பல கட்சிகள் வெளிப்படுத்தும். குறிப்பிட்ட வேட்பாளர்க்கு 50 சதத்திற்கும் மேல் வாக்களித்த தொகுதிகளாக 340 தொகுதிகள் 2019ல் இருந்ததைக் கண்டோம். சட்டமன்ற தேர்தலில் இந்த
decisive vote pattern கூடுதலாவதும் நடைபெறும்.
வாக்களிப்பு ஜனநாயகத்தில் கடந்த 75 ஆண்டுகளாக மக்கள் தங்கள் கடமையை பொதுவாக செவ்வனே ஆற்றியிருப்பதாகவே மக்களின் தேர்தல் பங்கேற்பை பார்க்கும்போது உணரமுடிகிறது. அப்படி நம்பி வாக்களித்தவர்களுக்கு பெருவாரியான மக்களுக்கு தேவைப்படுகிற உணவு- உடை- இருப்பிடம்- கல்வி- கெளரவ வேலை- ஆரோக்கியம் என்பதை ஆட்சிக்கு வந்தவர்களால் செய்ய முடிந்துள்ளதா என்பதே வாக்காள பெருமக்களின் கேள்வியாக எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஜனநாயகம்
one man/woman- one vote- one value என்பதை அரசியலில் நிலைநாட்டினாலும் பொருளாதார சமூக வேறுபாடுகளில் வாக்காள பெருமக்களின் சமதை- சமதையான வாய்ப்புகள் எட்டமுடியாத தூரத்தில் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறதே.. அதை நேராக்கி இந்திய ஜனநாயகத்தை எம் மக்கள் நடத்தவே செய்வர் என்ற நம்பிக்கையை அவர்கள் மீது வைப்போம்..
15-8-2022 சுதந்திர தினம்
( டேட்டா விவரம் உதவி இந்திய செமினார் பத்திரிகை ஆகஸ்ட் 2022)
Comments
Post a Comment