நேருவின் நிர்வாகம் - ஆர்.பட்டாபிராமன் நேரு உலக அரசியல் நிகழ்வுகள்- போக்குகள், இந்திய விடுதலைப்போராட்டம் குறித்த ஞானம் மிகுந்தவராக இருந்தார். அலகாபாத முனிசிபல் நிர்வாகம் என்கிற நிர்வாக அனுபவம் மட்டுமே கொண்ட நேரு 1946ல் இடைக்கால சர்க்காரின் தலைமை பொறுப்பை ஏற்கிறார். பிரிட்டிஷ் வைத்துவிட்டுப் போகும் நிர்வாக எந்திரத்தை மக்களுக்கு நெருக்கமாக ஜனநாயகப்படுத்தவேண்டிய பெரும் பொறுப்பு விடுதலைக்குப் பின்னர் காத்திருந்தது. நாடு பிரிவினையின் துயர்களை அனுபவித்துக்கொண்டிருந்தது. அகதிகள் பிரச்சனை, சமஸ்தானங்களின் பிரச்சனைகள், மகாத்மா படுகொலை என தொடர் துயரங்களின் ஊடே விடுதலை அரசாங்கம் குறித்த நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டிய பெரும் பொறுப்பு நேரு தலைமையில் அன்றிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவருக்கும் இருந்தது. பல்வேறு சிந்தனை ஓட்டங்களில் இருந்த காங்கிரஸ் தலைவர்களை கொண்டு உடனடியாக தீவிரமான மாற்றங்களை செய்ய இயலாது என்கிற எதார்த்த நிலையும் நேருவால் உணரப்பட்டிருந்தது. மய்யம்- பரவலான அதிகாரமுறை ( Centralisation- Decentralisation) என்கிற பிரச...