https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, May 28, 2020

நேருவின் மரபு உள்ளடக்கம்


நேருவின் மரபு
உள்ளடக்கம்


1.   விடுதலைப் போராட்டத்தில் நேரு
2.   காந்தி நேரு விவாதம்
3.   நேருவும் நாடாளுமன்றமும்
4.   நேருவின் நிர்வாகம்
5.   நேருவின் சோசலிசம்
6.   நேருவின் மதசார்பின்மை
7.   நேருவும் மொழிப்பிரச்சனையும்


நேருவின் மரபு

முன்னீடு

நேருஜி அவர்களை என் குழந்தைப்பருவத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் காட்டியதாக என் பெற்றோர்கள் கூறியுள்ளனர். நேரு குறித்து மிகக் குறைவான புரிதலே என்னிடம் இருந்து வந்தது. எனது தாய்வழி பாட்டனார் நேரு குறித்து அவ்வப்போது ஏதேனும் பெருமையாக சொல்லிக்கொண்டிருப்பார். பள்ளிக்கூட நாட்களில் நேரு தன் மகளான இந்திராவிற்கு எழுதிய கடிதங்களை படித்ததாக நினைவு. ஓ வி அளகேசன் மொழிபெயர்ப்பு புத்தகம் உலக சரித்திரம் ஒன்றையும் படித்த நினைவு. எதுவும் உள்போகவில்லை. புரிந்துகொள்ளும் ஆற்றலோ பொறுமையோ பொறுப்போ அவ்வயதில் இருக்கவில்லை.
நேரு மறைந்தார் என்கிற செய்தி வானொலியில் மதியம் கேட்டவுடன் என் பாட்டனார் மூர்ச்சையானதும் குடும்பத்தார் கவலையடைந்ததும் நினைவில் நிற்கிறது. அப்போது எனக்கு 8 வயதிருக்கலாம். காங்கிரசை கொண்டாடிய அதற்கு தேர்தலில் வேலை செய்த, கக்கன் போன்றவர்கள் வீட்டிற்கு வந்த குடும்ப சூழல் இருந்தாலும் என்னிடம் பள்ளி கல்லூரி நாட்களில் நேரு உள் நுழையவில்லை. சிறு வயதில் அமெரிக்கன் ரிபோர்ட்டர், சுதேசமித்திரன் வந்தன. பின்னர் இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துவில் ஜி கே ரெட்டி என வாசிப்பு இருந்தது. மிரர் கிடைத்தது.
சலபதிராவின் நேரு கூட பெரிதாக உள்நுழையவில்லை. வேலைக்கு வந்தவுடன் தோழர் கே எஸ் கே (கே எஸ் கிருஷ்ணமூர்த்தி) மார்க்சிய புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். 40 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்ஸ் உடன்தான் புரிதலுடனும்- புரிதல் அற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சொன்னவை எழுதியவைகளுடனும் அதற்கு அப்பாற்பட்டும் நீண்ட பயணம்.
தோழர் ஜெகன் அவ்வப்போது பாரதியுடன் நேரு- காந்தி பற்றி உரையில் தொட்டுச் செல்வார். ஒலிக்கதிரில் எழுதுவார். அப்போதும் நேரு பெரிதாக வரவில்லை. திரு வி க கல்லூரி நூலகத்தை பேராசிரியர் ராமசாமி எனக்கு திறந்துவிடச் செய்தார். ஏராள ஆக்ஸ்போர்ட் வெளியீடுகள், கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்று ஆவண தொகுப்புகள் கிடைக்கப்பெற்றன. திருவாரூர் வ சோ ஆண்கள் பள்ளி நூலகத்தை புலவர் அ பா பாலையன் திறந்து விட்டார்.
திருவாரூர் மாவட்ட நூலகத்தின் முதல் 7 patronsகளில் பேராசிரியர் பிறையுடன் நானும் இருந்தேன். ரூ 1000 செலுத்தியதால் இந்த மரியாதை. அங்கு ரெபரன்ஸ் நூல்களையும் தந்து உதவினர். சி பி எம் மாவட்ட அலுவலக நூலகம் எனக்கு எப்போதும் திறந்தே இருந்தது. தஞ்சையில் சி பி அய் நூலகத்தில் ஏராள நூல்கள் – ஆனால் பராமரிப்பின்றி இருந்தன. அங்கும் எனக்கு சில வாரங்கள் வந்து நூல்களை எடுத்துச் செல்ல அனுமதி இருந்தது.  பக்கத்தில் இருந்த வங்கித்தலைவர் ரகுபதியால் இலக்கிய வாசனை கிடைத்தது. நேரு அப்போதும் வரவில்லை. திராவிட கழக வெளியீடுகள், அம்பேத்கார் எழுத்துக்கள்  பழக்கமாயின.
இந்திய வரலாறு குறித்து சோவியத் அறிஞர்கள் , நேருவிற்கு யூடின் பதில் ஆகியவை மூலம் நேருவின் சோசலிசம் அசலல்ல என்கிற புரிதலே இருந்து வந்தது. சோசலிஸ்ட்கள், எம் என் ராய் எழுத்துக்கள் சென்ற அளவு கூட நேரு வரவில்லை. 40 ஆண்டுகள் இடைவெளியில் தொடர்ந்தும் அவ்வப்போதும் வாங்கிய ஏராள பத்திரிகைகள் வழியே கூட நேரு பெரிதாக என்னிடம் வரவில்லை.
பா ஜ கவின் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அதிக தொழிற்சங்கப் பணிகளால் புத்தகப்படிப்பே கூட நிறைவாக இருக்கவில்லை. மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் காந்தி- நேரு- தாகூர்- சோசலிஸ்ட்கள், எனது மார்க்சிய பழக்கத்துடன் கூடுதலாக தேவைப்படுவதை உணரமுடிந்தது. நேரமும் அதற்கான வகையில் கிடைக்கப்பெற்றது.
இந்துத்துவாவிலிருந்து மாறுபட்ட  இந்து  அரசியல் தலைவர்கள் பலரை படிக்க முடிந்தது. இந்துத்துவா எழுத்துக்களையும் படிக்க நேர்ந்தது. சில தலைவர்கள் குறித்து நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள் என்பதில் எழுதிப் பார்க்கவும் முடிந்தது. காந்தி முழுநேர வாசிப்புக்குரியவரானார். அவர் குறித்தும் காந்தியைக் கண்டுணர்தல் என்பதில் எழுதிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.  இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- எம் என் ராய் உட்பட சிலர் குறித்து எழுத முடிந்தது. பகத்சிங்- ராஜ்குரு குறித்தும் சிறுவெளியீடுகள் வெளியிட நேரம் உதவியது. ஹெகல், பகுனின், மார்க்ஸ், எங்கெல்ஸ் குறித்து தமிழ்வாசகர்களுக்கு சில தகவல்களை கொண்டு சேர்க்க முடிந்தது.
 நேரு மட்டும் என்னுடன் மெதுவாகவே உரையாடிக்கொண்டிருக்கிறார். இ எம் எஸ் மற்றும் ஹிரன்முகர்ஜி எழுதிய நேரு கூட  எனக்கு மெதுவாகவே நகர்ந்தது . நேரு புறக்கணிப்பு அரசியலை இந்துத்துவா அரசியல் பெரிதாகிக் கொண்டிருக்கும் சூழலில் நேரு குறித்த கற்றல்கள் மெதுவாகவே எனக்கு இருந்து வருவது குற்றவுணர்வுக்குரிய ஒன்றே.
அறிந்தவற்றை கொஞ்சமாவது எழுதி வைக்கவேண்டும் என்கிற வகையிலேயே எனது எழுத்துக்கள் எனலாம். படித்தவுடன் அவை பரவசப்படுத்தாது. தகவல்கள் கிடைக்கும். வாயடித்தல்- ஜம்ப பேச்சுக்களில் நம்பிக்கையில்லை. ஒரே புனிதர் – அவரே இவர் என எவரையும் சுட்டுவதாக எனது எழுத்துக்களை அமைத்துக்கொள்வதில்லை. இருக்கிற புரிதலை மேம்படுத்த உதவுகிறதா- உண்மைக்கு அருகாமையில் மனநேர்மைக்கு உதவுகிறதா என்ற வகையில் அமைவதாக சொல்லலாம்.
இங்கு நேருவின்  மரபு அய்ந்து கட்டுரைகளில் சொல்லப்படுகிறது. நேருவின் நாடாளுமன்ற ஜனநாயக மாண்புகள்- முன்மாதிரிகள் பேசப்படுகின்றன. அடுத்து நேருவின் நிர்வாக முறையில் எதையெல்லாம் நடைமுறையாக்க விழைந்தார்- யாருக்கான நிர்வாகம் என்பதில் அழுத்தம் தந்தார் என்பதை பார்க்க முடியும். நேருவின் சோசலிசம் குறித்த கட்டுரையில் விடுதலைக்கு முன்னரான அவரது பேச்சு, விடுதலை இந்தியாவில் பிரதமரான பின்னர் அவரின் பொருளாதார நடைமுறைகள் பேசப்படுகிறது. அடுத்து இன்று இந்தியாவின் அரசியல் கருப்பொருள்- நடைமுறை கலவர பிரச்சனையாகியுள்ள மதம் குறித்த- செக்யூலரிசம் குறித்த நேருவின் அணுகுமுறை பேசப்பட்டுள்ளது. நேருவின் மொழிக்கொள்கை கட்டுரை இன்றுவரை இந்தி பேசாத மாநிலங்களுக்கு அரணாக உள்ளதைப் பேசுகிறது.
நேருவின் நூல்தொகைகள் காந்தியைபோன்றோ, அம்பேத்கார் போன்றோ பெரிதாக விவாதவெளியில் அலசப்படவில்லை என்கிற குறையிருக்கிறது. ஆங்கில நூல்களை அதிகம் படிக்க வாய்ப்பில்லாத தமிழ்  வாசகர்களுக்கு எளிய இக்கட்டுரைகள்  இந்தியாவின் நேர்மையான அரசியல் ஆட்சியாளர் தலைமை என்ற வகையில் நேரு குறித்து  அறிமுகம் செய்யலாம்.

29-2-2020                                      ஆர்.பட்டாபிராமன்


பின்னீடு:

மேற்கூறிய அய்ந்து கட்டுரைகளை எழுதிய பின்னர் நேருவின்  விடுதலைப் போராட்ட பங்களிப்பை சிறிய அளவாவது சொல்லவேண்டும் என்ற விழைவில் முதல்கட்டுரை  after thought ல் எழுதப்பட்டது. அதில் நேருவின் சிறை வாழ்க்கையும் தனியே தொகுத்து சொல்லப்பட்டுள்ளது.
நேருவின் விடுதலைக்கால வாழ்க்கையை பேசும்போது காந்தியுடன் அவருக்கிருந்த விவாத உறவுகளையும் சற்றாவது சொல்லவேண்டும் என்கிற விழைவில் இரண்டாவது கட்டுரை எழுதப்பட்டது. நேரு குறித்த முழு மதிப்பீடல்ல இப்புத்தகம். ஏழு கட்டுரைகளின் ஊடாக நேருவின் மரபு இப்புத்தகத்தில் ஓரளவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என சொல்லலாம்.

18-5-2020                                  ஆர்.பட்டாபிராமன்

No comments:

Post a Comment