67 ஆண்டுகள் கவனப்படுத்துக கோபாலகிருஷ்ண காந்தி ( தமிழில் ஹேமலதா பட்டாபிராமன்) அன்புக்குரிய பிரதமர் அவர்களுக்கு குடியரசுதின நல்வாழ்த்துகள் ! இந்தியகுடியரசு ஆன அதே ஆண்டில் தங்கள் பிறப்பும் நிகழ்ந்திருக்கிறது . குடியரசாகி 67 ஆண்டுகள் . அதேபோல் தங்களுக்கும் 67 ஆண்டுகள் . பிறப்பால் அரசியல் அமைப்புடன் பின்னிப்பிணைந்த உங்களுக்கு இன்னொரு உறவும் இருக்கிறது .. பிரதமராக பதவியேற்கும்பொழுது இறைவனின் பெயரால் - அரசியல் அமைப்பிற்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பதற்கான உறுதிமொழி எடுத்துள்ளீர்கள். அந்த உயர்ந்த நிலையிலிருந்து அரசியல் அமைப்பு சட்டத்தை புனித புத்தகம் என கூறியுள்ளீர்கள். பிறப்பாலும், உறுதிமொழியாலும் இருவகையிலும் அரசியல் அமைப்பிற்கானவராகவே இருக்கிறீர்கள். உறுதிமொழி ஏற்று இரண்டரை வருடங்களுக்குப் பிறகு இந்நாளில் அந்தப் பிணைப்பிற்கான உங்கள் வினையை எப்படி எதிர்கொள்கிறீர்கள். இந்திய மக்களை கேளுங்கள்- நான் உண்மையானவனாக இருந்திருக்கிறேனா இல்லையா என்பதை அவர்கள் சொல்லுவார்கள் எனக்கூட தாங்கள் பதிலளிக்கலாம்.