https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, January 17, 2017

M N Roy

விடுதலைக்கு முன்னர் எம் என் ராய்
                              -ஆர்.பட்டாபிராமன்
வங்கத்தின் அர்பலியா கிராமத்தில் 24 பர்கானா மாவட்டத்தில் மார்ச் 21 1887ல் பிறந்தவர் எம் என் ராய். தந்தை தீனபந்து பட்டாசார்யா- தாய் வசந்திகுமாரிதேவி. மாணவர் பருவத்தில் விவேகானந்தா எழுத்துக்களால் ராய் ஈர்க்கப்படுகிறார்பின்னர் இரகசிய புரட்சிகர நடவடிக்கைகளில் இருந்த பிரம்பந்த உபாத்யாய், வங்கப்பிரிவினை இயக்கம், அனுசீலன் சமிதி பர்ன் கோஷ் போன்றவர்களின் தொடர்பு  அவரை புரட்சிகர இயக்கம் நோக்கி அழைத்து சென்றது.. அனுசீலன் சமிதியில் அரவிந்த கோஷ் உடன் நட்பு ஏற்பட்டது.
1906ல் ஜதின்முகர்ஜியுடன் தொடர்பு ஏற்பட்டு அவரை தனது அரசியல் குருவாக ராய் ஏற்கிறார். புரட்சியாளர்களுக்கு ஆயுதம் பெறுவதற்கும் குண்டு தயாரிப்பதற்கும் நிதி பெரும் பிரச்ச்னையாக இருந்ததால் அவர்கள் கஜானா கொள்ளை என்பதில் ஈடுபட்டனர். நனேரந்திரநாத்தாக இருந்த ராய்  1907 டிசம்பரில் முதல் அரசியல் நிதி கொள்ளையில் சங்கிரிபோடா எனும் இடத்தில் ஈடுபட்டார்அப்போது  அவர் தேசிய கல்லுரி மாணவர். கைது செய்யப்பட்டாலும்  விடுவிக்கப்பட்டார்.1908-09ல் ஜதினால் உருவாக்கப்பட்ட ஜுகாந்தர் குழுவில் அவர் முக்கிய இடத்தைப் பெற்றார். 1910-15 ஆண்டுகளில் தொடர்ந்த அரசியல் கொள்ளைகளில் ஈடுபட்டார். 1915ல் பெலியகட்டா கொள்ளையில் கைதாகி பிணையில் இருந்தபோது தலைமறைவானார்.

பெர்லின் புரட்சிகர குழு மூலமாக இந்திய புரட்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்க ஜெர்மனி ஏற்பாடு செய்யும் என்ற செய்தி பரவுகிறது. நரேன் ஏப்ரல் 1915ல் ஜாவா செல்கிறார். அங்கு தன்னை சி மார்டின் என பெயரிட்டு கொள்கிறார். அங்கிருந்து இரண்டே மாதங்களில் பயன் ஏதுமில்லாததால் இந்தியா திரும்பிவிடுகிறார். பிறகு ஜப்பான் சென்று ராஷ்பிஹாரி போஸை சந்திக்கிறார். அந்த சந்திப்பும் தனக்கு பயனளிக்கவில்லை என்ற நிலையில் டோக்கியோவில் சன்யாட்சனை சந்திக்க முயற்சிக்கிறார். ஜெர்மன் தூதுவர் மூலம் பீகிங்கில் நிதியை ஒப்படைக்க முடிந்தால் ஆயுதங்கள் தரமுடியும் என சன்யாட்சென் தெரிவித்தார்.
1915 செப்டம்பரில் பலாசோர் பகுதியில் போலீசார் மோதலில் ஜதின் கொல்லப்படுகிறார் என்பதை ராய் அறிகிறார். அவரது ஆயுத பரிமாற்றப் பயணமும் வெற்றி பெறாத நிலையில் அவர் மார்டின் என்ற மத ஆய்வாளர் வேடத்தில் 1916ல் சான்பிராசிஸ்கோ செல்கிறார். அங்கிருந்து கலிபோர்னியா செல்கிறார். அங்கு ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் தனது ஜூகாந்தர் குழு தோழரின் சகோதரர் தனகோபால் முகர்ஜியை சந்திக்கிறார்.. அங்குதான் தனகோபால் அவருக்கு  மனபேந்திரநாத் ராய்(எம் என் ராய்) என நாமகரணம் சூட்டுகிறார். அப்பெயர் வரலாற்றில் நிலைத்தது. பின்னாட்களில் தனது துணவியாக வரப்போகிற அப்போது மாணவியாக படித்துவந்த எவ்லின் ட்ரெண்ட் அறிமுகமாகிறார். இருவரும் நியுயார்க் செல்கின்றனர். மணம் புரிகின்றனர், 1926வரை சேர்ந்து செயல்படுகின்றனர்.
நியுயார்க்கில் சோசலிஸ்ட்கள் கூட்டம் ஒன்றில் லாலாலஜ்பத்ராய் பேசுகிறார் என்பதை தெரிந்து எம் என் ராய் அக்கூட்டத்தில் பங்கேற்கிறார். லாலாலஜ்பத் உரை ராய்க்கு நிறைவைத் தரவில்லை. ஆனாலும் உறவுகளை வளர்த்துக் கொண்டார். நியுயார்க் பொது நூலகத்தில் மார்க்ஸ் புத்த்கங்களை படிக்க துவங்கினார். அமெரிக்க அதிபர் வில்சனுக்கு ராய் எழுதிய பகிரங்க கடிதம்  அவருக்கு பாராட்டை தந்தது. போரின் பொருளாதார விளைவுகள் குறித்து ராய் பேசியிருந்தார். கொலம்பியா பல்கலைகழக வளாகத்தில் ராய் கைதாகும் நிலை ஏற்படுகிறது.  அவர் தப்பி மெக்சிகோ செல்கிறார்.
மெக்சிகோ அரசியல் சூழல்களை பார்த்து பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதினார். மார்க்சிய செல்வாக்கு முழுமையாக அவரிடம் பற்றாத சூழலில்  ஸ்பானிஷ் மொழியில் இந்தியா குறித்த பிரசுரங்கங்களை 1918-19களில் கொணர்ந்தார். பின்னர் அங்கிருந்த இடதுசாரிகளுடன் இணைந்து எல் சோசலிஸ்டா என்கிற பத்திரிக்கை துவங்கப்படுகிறது. மெக்சிகோ அரசாங்கத்திடம் ஏற்பட்ட நல்லுறவு அவரை அப்போது மெக்சிகோ அதிபராக இருந்த கரான்சா நட்பு வட்டத்திற்கு அழைத்துச் சென்றது. எல் ஹெரால்டொ எனும் பத்திரிக்கையின் ஆங்கில பதிப்பில் அவரது கட்டுரைகள் வெளியாயின. அவர் மெக்சிகோ சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகிறார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரதிநிதியாக 1919ல் மெக்சிகோ வந்த மிஷேல் பரோடின் ராயின் நண்பராகிரார். ஹெகலிய தத்துவங்களை பரோடின் ராயிற்கு அறிமுகப்படுத்துகிறார்.  கம்யூனிஸ்ட் அகிலம் (மூன்றாவது அகிலம்)  துவக்க மாநாட்டின் முடிவுப்படி சோசலிஸ்ட்கள் கட்சிப்பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என மாற்றி செயல்படுவது என்பதை ஏற்று மெக்சிகன் கட்சியும் மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சியாகிறது. ராய் அதை அகிலத்துடன் இணைக்கிறார்

போல்ஷ்விக் புரட்சிக்குப் பின்னர் அமையப்பெற்ற முதல் கம்யூனிஸ்ட் கட்சியாக மெக்சிகோ கட்சி வரலாற்றில் இடம் பெற்றது. மெக்சிகோவில் சோசலிஸ்ட் குழுக்கள் மத்தியில் கடும் கருத்து வேறுபாடுகள் நிலவின. ராய் 1919 நவம்பரில் எவ்லினுடன் ஸ்பெயின் சென்றார். மாஸ்கோவில் கோமிண்டர்ண் எனப்படுகின்ற அகிலத்தின் 2வது காங்கிரசில் மெக்சிகன் பிரதிந்தியாக ராய் பங்கேற்றார். பெர்லினில் ராய் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் அகஸ்ட் தால்ஹைமரை சந்திக்கிறார். விடுதலைக்கு போராடும் மக்களுக்கு அகிலம் உதவுவதற்கு ராய் முன்முயற்சி எடுக்க வேண்டும் என தோழர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்ற்னர்.  ஜெர்மனியில் தங்கியிருந்த மாதங்களில் அவர் எட்வ்ர்ட் பெர்ன்ஸ்டெயின், கார்ல் காட்ஸ்கி, ஹில்பெர்டிங் போன்ற புகழ் வாய்ந்த மார்க்சியர்களை சந்திக்கிறார். எர்னஸ்ட் மேயர், தால்ஹைமர், கிளரா ஜெட்கின், பால் லெவி போன்றவர்களுடன் தோழமை கொள்கிறார்.
ரோசா லக்ஸம்பர்க் ஆதரவாளர்கள் ஜெர்மன் டச்சு கம்யூனிஸ்ட்கள் சிலரின் பழக்கம் அவரை மார்க்சியத்தில் உறுதிப்படுத்தியது. தேசியவாதம் சுயநிர்ணய உரிமை போன்றவற்றில் நம்பிக்கையின்மையை அவர்கள் வெளிப்படுத்தி வந்தனர். ரோசா-லெனின் வேறுபாடுகளையும் அவர்கள் தெரிவித்து வந்தனர்.  ராய்- லெனின் விவாதம் வந்தபோது ராய்தான்  கம்யூனிஸ்ட்- லெனின் தேசியவாதி என்றெல்லாம்  அவர்கள் ராயை ஆதரித்து ஏற்றிப் பேசினர். 
முதன்முதலாக இந்திய நிலைமைகள் குறித்து ராய் தான் புரிந்துகொண்ட மார்க்சிய அடிப்படையில் அறிக்கை ஒன்றை தயாரித்திருந்தார். காங்கிரஸின் அணுகுமுறை முதலாளித்துவ ஜனநாயகத்திற்கானது  ஆனால் புரட்சிகரவாதிகள் உழைக்கும் மக்களின் பொருளாதார விடுதலைக்காக போராடுகிறோம் என ராய் எழுதினார். அவருக்கு இந்தியாவுடன் நேரிடையான களத்தொடர்பு ஏதுமில்லை. கோமிண்டர்ண் இரண்டாவது மாநாடு 1920 ஜூலை-ஆகஸ்டில் நடந்தது. அதில் தேசிய காலனிய பிரச்சனை குறித்த லெனின் ஆய்வறிக்கையுடன்  ராயின் அறிக்கையும் விவாதத்திற்கு வைக்கப்பட்டது. ஆசிய மையப்படுத்த அறிக்கையை லெனின் ஏற்கவில்லை. அய்ரோப்பிய புரட்சிகளின் வெற்றிக்கே கூட ஆசிய புரட்சிகளின் அவசியம் குறித்து ராய் பேசினார். காலனிய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் பலவீன நிலைதனையும் முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமை பாத்திரத்தையும் லெனின் குறிப்பிட்டார். ராய் மிக அதிக தூரம் சென்றுவிட்டார் என லெனின் மதிப்பிட்டார். காலனி நாடுகளின் பூர்ஷ்வா தலைமையுடன் முழுமையாக அய்க்கியமாகிவிடாமல் அவர்களுடன் இணைந்த போராட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினார் லெனின். ராய் தொழிலாளர் விவசாயி வர்க்க அணியை கட்டுவதற்கு இந்நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளை உடன் அமைக்க வேண்டும்- அதற்கு கோமிண்டர்ன் உதவவேண்டும் என வாதிட்டார்.
முதலாளித்துவ என்ற கட்டத்தை எட்டாமலேயே சோவியத் முறைக்கு பின்னடைந்த நாடுகள் வளர்ந்த நாடுகளின் பாட்டாளிவர்க்க துணையுடன் போகமுடியும் என லெனின் ராய் அறிக்கைகளை அகிலம் சமரசப்படுத்திக்கொண்டது. லெனின் ஆய்வறிக்கைக்கு துணை செய்பவையாக சீன, இந்திய பிரதிநிதிகளின் அறிக்கைகள் இருந்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டார். காலனி நாடுகளில்  தொழிலாளர் விவாசாயிகளை திரட்டும் நமது முயற்சிகளுக்கு அங்குள்ள பூர்ஷ்வா வர்க்கம் தடை ஏற்படுத்தாத சூழலில் அவர்களுடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும் என்றார் லெனின். அவ்வாறு இல்லாத சூழல் எனில் எதிர்த்து போராடவேண்டும் எனவும் லெனின் தனது நிலையை தெளிவுபடுத்தி வந்தார். 
.
ராய் இந்திய நிலைகளில் தொழிலாளர்- விவசாயி வர்க்க உணர்வை மிகையாக மதிப்பிட்டிருந்தாலும், அவர்களை வர்க்க உணர்வுடன் திரட்டும் கருவி சொந்த நாட்டில் தேவை என்று மதிப்பிட்டது வரவேற்க தகுந்த ஆய்வாக அகிலத்தில் இருந்தது. மக்களை திரட்டி போராடும் காந்தியை லெனின் புரட்சிகரவாதி என மதிப்பிட்டதை ராய் ஏற்கவில்லை. காந்தி அரசியல்ரீதியாக புரட்சிகரமானவராகவும்- சமுக அம்சங்களில் பிற்போக்களாராகவும்  இருக்கிறார் என ராய் மதிப்பிட்டார். இதில் ராய் பிளக்கானோவின் கருத்தாக்கத்தை எடுத்துக்கொண்டார். லெனின் பூர்ஷ்வாக்கள் உள்ளிட்ட தொழிலாளர், விவசாயி, குட்டிமுதலாளித்துவ வர்க்க சேர்க்கை குறித்து பேசினார். ராய் முதலாளித்துவாதிகள் நீங்கலான வர்க்க சேர்க்கை என பேசினார்.
தாஷ்கண்டில் நூற்றுக்கணக்கான முஹாஜிர்களுக்கு இராணுவ மார்க்சிய பயிற்சிப்பள்ளி ஒன்றில் ராய் சில மாதங்கள் கவனம் செலுத்தினார். இச்சமயத்தில் தாஷ்கண்டில் அக்டோபர் 17, 1920ல் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி நிறுவப்பட்டதாக அறிவித்தனர். கட்சியை ராய், எவ்லின், அபானி, ரோசாபிடின், மொகமது அலி, சாபிக் சித்திக், ஆச்சார்யா துவங்கினர். பின்னாட்களில் வெளிநாட்டில் இப்படி கட்சி ஆரம்பித்ததால் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை என குறிப்பிடுகிறார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் எதிர்ப்பால் இப்பள்ளியை மூடவேண்டியதானது. பின்னர் ஆசிய புரட்சியாளர்களுக்கு பயிற்சி தரும் வகையில் கீழைதேய கம்யூனிஸ்ட் பல்கலைகழகம் ஒன்று மாஸ்கோவில் நிறுவப்பட்டது. 1921 மத்தியில் ராய் இதற்கான முயற்சி எடுத்தார்.

பெர்லின் புரட்சிகர கமிட்டிக்கும் ராய் குழுவிற்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. பெர்லின் குழுவில் சட்டோபாத்யாயுடன், அவரது துணைவியார் அக்னெஸ் ஸ்மெட்லி,  பி என் தத்தா, நளினிகுப்தா, லுகானி கான்கோஜ் இருந்தனர். லெனின் உட்பட  சோவியத் தலைவர்களுடன் ராய்க்கு இருந்த நெருக்கம் பெர்லின் புரட்சியாளர்களுக்கு கோபத்தை மூட்டியது. அகிலத்தின் மூன்றாவது மாநாட்டில் இந்தியா குறித்து பேசுவதற்கான அதிகார பிரதிநிதிகள் தாங்கள்தான் என கோரினர். ராய்-அபர்னி முகர்ஜியை ஒற்றர்கள் என பெர்லின் விரேந்திரநாத் சட்டோபத்யாய் குழுவினரும், ஜெர்மன் ஏஜண்ட்கள் என ராய் குழுவினரும் விமர்சித்துக் கொண்டனர். சட்டோபத்யாய குழுவினர் தாஷ்கண்டில் உருவாக்கப்பட்டதாக சொல்லும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கலைக்கப்படவேண்டும் என்றனர்.  புது கமிட்டி ஒன்றில் பணியாற்ற தயார் எனவும், கட்சியை கலைப்பதாக தான் ஏற்றுக்கொண்டாலும் தன்னோடு உருவாக்கியவர்கள் ஏற்பார்களா எனத் தெரியாது என ராய் வாதாடினார். இந்தியாவிலுள்ள, வெளிநாடுகளிலுள்ள புரட்சியாளர்களுக்கு உதவி செய்து ஏகாதிபத்தியத்தை தூக்கி எறிவதுதான் முதல் கடமையாக இருக்க வேண்டும்- பின்னர்தான் கம்யூனிசம் உருவாக்குதல் என சாட்டோ வாதடினார். கோமிண்டார்ன் கம்யூனிஸ்ட் கட்சிகளை நிறுவுதல் வளர்வதற்கு உதவி செய்தல் தங்கள் கடமை என முடிவெடுத்ததால் பெர்லின் குழுவினர் வெளியேறினர்.

No comments:

Post a Comment