https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, January 13, 2017

Com DANGE டாங்கே

தோழர் டாங்கே DANGE
காந்தியும் லெனினும் என்ற புத்தகத்தை அதற்கு முன்னர் எவரும் சிந்தித்திடாத முறையில் மாணவராக இருந்த டாங்கே 1921 மார்ச்சில் எழுதி ஏப்ரலில் வெளியிடுகிறார். வெளி உலகிற்கு இதன் மூலம் டாங்கே தெரிய வருகிறார். மார்க்ஸ்- லெனின் குறித்து ஓரளவிற்கு அறியத் துவங்கிய புரட்சிகர எண்ணம் கொண்ட இளைஞன் ஒருவன் எழுதிய முதல் ஆக்கம் என பின்னாட்களில் டாக்டர் அதிகாரி பதிவு செய்கிறார்.
திலகரின் மறைவிற்கு பின்னர் காங்கிரசில் காந்தியின் பாத்திரம் முன்னுக்கு வருகிறது. கொண்டாடப்படும் தலைவராக தனது செயலால் அவர் பரிணமிக்க துவங்குகிறார். திலகரிடம்  நெருக்கமாக பழகி வந்த டாங்கே போன்றவர்களுக்கு திலகரா காந்தியா என புதிய சிக்கல் எழுகிறது.. டாங்கேவிற்கு சோவியத், லெனின் குறித்த செய்திகள் கிடைக்கப் பெற்றமையால் காந்தியா லெனினா கருத்தாக்கம் குறித்து சிந்தித்து அப்புத்தகத்தை அவர் வெளிக்கொணர்கிறார்.
டாங்கேவின்  தந்தை அம்ரித் ரகுநாத்டாங்கே. .டாங்கேவின் பெயர் ஸ்ரீபாட் அம்ரித் டாங்கே. அக்டோபர் 10, 1899ல் பிறக்கிறார். 1991ல் அவர் மறைகிறார். 70 ஆண்டுகளுக்கான பொதுவாழ்வை அந்த அந்த காலங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் அடந்ததை இழக்கிறோமே என்ற கவலை ஏதுமின்றி தான் நினத்தவைகளுக்காக ஏற்கப்பட்டபோதும், ஏற்கப்படாத நிலையிலும் கருத்துப் போராட்டம் நடத்தி நிறைவாக வாழ்ந்து மறைந்தவர் டாங்கே.
பஞ்சபூமியாக இருந்த அகமதுநகர்  தாயின் மாவட்டம். . செவிலித்தாய்,  காய்கறி வியாபாரம் செய்துவந்த தாயின் சகோதரி வளர்ப்பில்  நாசிக்கில் பள்ளிப்படிப்பை காண்கிறார். அங்கு ரயில்வே தொழிலாளர் சூழல் மனதில் படிகிறது. தாயின் சகோதரியுடன் பிரிட்டிஷ் ராணுவ பகுதிகளுக்கு  செல்ல வாய்ப்பு நேரும். அவர்களின் மிடுக்கு ஒழுங்கை கண்ணுறும் வாய்ப்பு கிடைக்கிறது. நாசிக் திலகர், சாவர்க்கர், துப்பாக்கி என தகவல்களால் நிறையும் நகராக இருந்தது. கேசரி பத்திரிக்கை செய்திகள் மாணவர்களையும் எட்டின. பின்னர் பம்பாய் பெயர்ந்து படிப்பை தொடர்கிறார்.1917 என்கிற வரலாற்றின் திருப்புமுனை ஆண்டில் வில்சன் கல்லூரியில் நுழைகிறார். ஆர் எஸ் நிப்ம்கர் தோழனாகிறார். The young collegiate பத்ரிக்கையை துவங்குகிறார்கள். கட்டாய பைபிள் எதிர்த்து போராடுகிறார்கள். ஆங்கில இலக்கிய கழகம் போலவே மராத்தி இலக்கிய கழகம் என்பதற்காக கல்லூரி புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது. கல்லூரி நிர்வாகம் டாங்கே உள்ளிட்டவர்களை நீக்குகிறது.
இந்தியாவிற்கு சுய ஆட்சி தராத நிலையில் போருக்கு ஆட்களை எடுக்காதே என திலகர் போராடி வந்தார். ரயில்வே, அஞ்சல் ஊழியர் போராட்டங்களுக்கு ஆதரவு நல்கி எழுதி வந்தார். அக்டோபர் புரட்சியை வரவேற்றும் எழுதினார். திலகர் தனது மாண்டலே சிறைவாசத்தின்போது எழுதிய கீதாரகஸ்யம் அப்போது பிரபலமாக இருந்தது. இளைஞர்களை கவ்வி பிடித்தது.  பகத்சிங் போன்றவர்கள் கூட தனது குடும்பத்தார்க்கு எழுதி எடுத்துவர சொன்ன புத்தகத்தில் கீதா ரகஸ்யமும் ஒன்று. அப்புத்தகம் தேசிய எழுச்சிக்கு அன்று துணை நிற்பதாக கருதப்பட்ட ஒன்று. சன்யாசம் என்கிற துறவை விமர்சித்து கர்மயோகம் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. டாங்கே போன்ற மாணவர்கள் திலகர் பால் ஈர்க்கப்படுவது  புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றே. திலகரின் மறைவிற்கு பின்னர் நடந்த  நாக்பூர் 1920 டிசம்பர் காங்கிரஸ் மாநாட்டில் டாங்கே சக மாணவர்களுடன் கலந்துகொள்கிறார்.
லாலாஜியை வரவேற்க திலகர் தலைமையில் பிப்ரவரி 1920ல் பொதுக்கூட்டம் ஒன்றை டாங்கே குழாம் ஏற்பாடு செய்கிறது. டாங்கே வரவேற்புரை ஆற்றி பலரின் கவனத்தை பெறுகிறார். திலகர் டாங்கேவிடம் பம்பாய் தொழிலாளர் மத்தியில் பணிபுரிய அறிவுறுத்தினார். 1920 அக்டோபரில் AITUC உதயமாகிறது. திலகர் மறைவால் லாலாஜி தலைமை ஏற்கிறார். டாங்கே போன்றவர்கள் இதற்கு துணை நின்கின்றனர். காந்தியின் சுயராஜ்ய கருத்துக்கள் போதாது என்ற எண்ணம் டாங்கே உள்ளிட்டவர்களுக்கு உருவாகிறது. விதல்பாய் படேல் போன்றவர்கள் காந்தியின் திட்டங்களை புகழ்ந்து பேசிய போது படேல் கருத்தை ஏற்கமுடியாது என மறுத்து பேசிய டாங்கே வெளியேற்றப்பட்டார்.  ஆனால் திலகர் அவரை விதல்பாய் படேலுக்கு காரியதரிசி ( செயலர்) ஆக்கினார்.
பம்பாய் பகுதி காங்கிரசில் தொழிலாளர் பிரிவில் டாங்கே பணியாற்ற துவங்கினார். கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட டாங்கே தேசிய தலைவர்கள் துவக்கிய தேசிய கல்லூரியில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் விரிவுரையாளரானார். தனிப்பட்ட முறையில் பாடம் எடுத்து ஜீவனத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டார். திலகரின் நண்பர் லோட்வாலா என்பாரின் தொடர்பால்  மார்க்சிய நூல்கள், ஆவணங்கள் அவருக்கு கிடைக்கப்பெற்றன. இந்துபிரகாஷ் எனும் மராத்தி இதழில் பணியில் சேர்ந்தார். பின்னர் ஆங்கிலத்தில் மார்க்சிய எழுத்திற்காக பத்ரிக்கை தேவை எனக் கருதி சோசலிஸ்ட் வார இதழை ஆகட் 5, 1922ல் கொணர்ந்தார். அவைகள் சில தொகுக்கப்பட்டு டாங்கே நூல்வரிசையாக அவரது புதல்வியால் கொணரப்பட்டுள்ளது. செப்டம்பர் இதழில் இந்திய  சோசலிச உழைப்பாளர் கட்சி என பேசினார். அகிலம், சோசலிச கருத்துக்கள் தாங்கிய இதழாக அது வந்து கொண்டிருந்தது. அவர் சிறையிலிருந்தபோதும்  ஜோக்லேகர்,ஜோஷி, பர்வதே போன்றவர்கள் தொடர்ந்து சில காலம் கொணர்ந்தனர். பிப்ரவரி 20 1924 இதழில் பம்பாயில் கடும் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகி வேலைபார்த்துவந்த  227 டெலிகாம் பெண்கள் தனியார் கம்பெனியால் நீக்கப்பட்டதை முன்வைத்து முதலாளித்துவத்தின் கோர சுரண்டல் எவ்வாறு உழைப்பவர் வாழ்வை சூறையாடுகிறது என்ற கட்டுரையை சோசலிஸ்ட் வெளியிட்டிருந்தது.

கான்பூர் சதிவழக்கில் டாங்கே, முசாபர், உஸ்மானி ஆகியோர்  சிறைபிடிக்கப்பட்டனர். டாங்கேவிற்கு  4 ஆண்டுகள்  தண்டனை என்றனர். தனது வாதமாக டாங்கே வைத்த முழுவிவரம் சோசலிஸ்ட் 1924 ஜூலை இதழில் வெளியிடப்பட்டது. அதில் எம் என் ராய்  வேறுபாடு உள்ளிட்டவை பதிவாகியுள்ளன. தான் எந்த சதியிலும் ஈடுபடவில்லை- சோசலிஸ்ட் பத்திரிகை ஆசிரியன் என்ற வகையில் அரசியல் கருத்துக்களை வெளியிட்டு வருபவன் என தன் தற்காப்பை டாங்கே முன்வைத்தார்.

மீரத் சதி வழக்கின்போது நீதிமன்றத்தில் தனது வாதத்தை டாங்கே அக் 26 1931  அன்று வைத்தார். அதன் முழுவடிவமும் அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் இரண்டில் 500 பக்க அளவில் அவரது மகள் தோழர் ரோசா தேஷ்பாண்டேவால் வெளியிடப்பட்டது..  தனக்கு சாதி ஏதுமில்லை 31 வயதாகிறது என நீதிபதி முன் நீண்ட மார்க்சிய சித்தாந்த உரையை தனது தற்காப்பு உரையாக பல மணி நேரம் முன்வைத்தார் டாங்கே.    தனது போராட்ட வாழ்க்கையில் 13 ஆண்டுகளுக்கு மேல் சிறைக்கொடுமைகளை அனுபவித்தவர் அவர். ஹெல் பவுண்ட்(Hell Bound)  என்ற சிறைக்கொடுமைகள் சூழல் குறித்து புத்தகம் ஒன்றையும் அவர் எழுதினார். 1929-35 ஆண்டுகளில் மீரத் வழக்கால் அவர் சிறையில் வாடுகிறார். விடுதலைக்கு பின்னர் ஆந்திரா சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் சிலரை கம்யூனிஸ்ட்கட்சிக்கு கொணர்கிறார்.
1920 ஏஅய் டி யு சி, 1925 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவக்கம், கிரினி காம்கார் சங்கம் போன்றவற்றில் முக்கிய பங்களிபை செய்தார்கட்சியின் மத்திய கமிட்டிக்கு 1943ல் அவர் தேர்ந்த்டுக்கப்படுகிறார். அக் 1944ல் பிரிட்டிஷ் கட்சி மாநாட்டில் பங்கேற்கிறார். 1946ல் அவர் பம்பாய் சட்டமன்ற உறுப்பினராகிறார். டெக்ஸ்டைல் தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு  தியோலி சிறையில் வைக்கபடுகிறார். அங்கு அரசியல் கைதிகளை திரட்டி அவர்கள் நலனுக்காக போராடுகிறார். 1945 உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் துவக்க தலைவர்களுல் ஒருவராக அதனை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றினார்.  AITUCல் 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர் முக்கிய பொறுப்புகளை வகித்து வழிகாட்டி வந்தார். அதன் பொதுச்செயலராக அவர் எழுதிய அறிக்கைகள் தொழிற்சங்க கல்வியாகவே அமைந்திருந்தன.  அதன் தலைவராக இருந்தும் வழிநடத்தினார்.
விடுதலை தினத்தன்று அவர் மாஸ்கோவில் இருந்ததாக சில தகவல்கள் கிடைக்கின்றன. ஆகஸ்ட் 16, 1947ல் அவர் ஜடானோவ், சுஸ்லோவுடன் முக்கிய விவாதங்களில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. யுத்த காலத்தில் காங்கிரசின் பிரிட்டிஷ் எதிர்ப்பு அவ்வியக்கததை பலப்படுத்தியதாகவும், கம்யூனிஸ்ட்கள் நிலைப்பாடு தங்களை பலவீனப்படுத்தியதையும் அவர் மாஸ்கோ சந்திப்பில் சுயவிமர்சனம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது. நேரு, ஜின்னா குறித்த சோவியத் தலைவர்கள் கேள்விக்கு இருவரும் பூர்ஷ்வாக்கள், முதலீடுகள் செய்யும் அளவிற்கு வசதி படைத்தவர்கள் என டாங்கே கூறியதாக தெரிகிறது.
கட்சியில் பி சி ஜோஷி நீக்கப்பட்டு ரணதிவே பொதுச்செயலராகிறார். 1948ல் அவர் எடுத்த அதிதீவிர இடதுசாரி கொள்கைகளால் பெரும் சரிவு ஏற்படுகிறது. ராஜேஸ்வரராவ் போன்றவர்கள் சீனப்பாதை என்பது முன் வருகிறதுபின்னர் டாங்கே, அஜாய், காட்டே மூவரின் புகழ்வாய்ந்த 3பி ஆவணம் முன்வைக்கப்படுகிரது. கட்சிக்குள் நிலவும் பல்வேறு கொள்கை மோதல்களை முறைப்படுத்த மாஸ்கோவிற்கு டாங்கே அஜாய், ராஜேஸ்வர்ராவ், பசவபுன்னயா குழு ஸ்டாலின் சந்திப்பிற்கு செல்கிறது. அச்சந்திப்பு குறித்த முழு மினிட்ஸ் ரெவல்யூஷனரி டெமாக்ரசி போன்ற பத்த்ரிக்கைகளில் ருஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. பிரண்ட்லைன் பிற்காலத்தில் அச்சந்திப்பு குறித்த பசவ்புன்னையா பேட்டியை வெளியிட்டது. அதில் ஸ்டாலின் எவ்வாறு நடந்துகொண்டார். எவ்வளவு பேசினார். என்ன அறிவுறுத்தினார் போன்றவைகள் சொல்லப்பட்டிருந்தன.

டாங்கே 1957, 1967 ஆண்டுகளில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நேரு, இந்திரா உட்பட அவர் பேசுவதை உன்னிப்பாக கவனித்தார்கள். சீனா யுத்தத்தின்போதும், சீன கட்சி- சோவியத் கட்சி சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்தியில் பிளவு வந்தபோதும் டாங்கே அவ்விவாதங்களில் முக்கிய பங்காற்றினார். பீகிங் அவரை ரிவிஷனிஸ்ட் என கடுமையாக தாக்கியது. இந்தியாவிலும் கட்சிக்குள் பெரும் சர்ச்சைகள் மூண்டு கட்சி உடைவிற்கு உள்ளானது. உடைவிற்கு முன் அஜாய் இறக்கும் தருணத்தில் நம்பூதிரி பொதுச்செயலர், டாங்கே சேர்மன் என்ற ஏற்பாடும் கட்சி உடைவை தடுக்க உதவவில்லை. 1964 ஏப்ரலில் CPM கட்சி உருவாக்கப்பட்டது. தொடர்ந்து டாங்கே நேரு- இந்திரா ஆதரவாளர், தேசியவாதியாக சுருங்கிவிட்டார், எதிர்புரட்சிவாதி என கடுமையான விமர்சங்களுக்கு உள்ளானார். கட்சி எமெர்ஜென்சியை ஆதரித்தது என்ற விமர்சனத்திற்கு உள்ளானது. 1977 படிண்டாவில் கூடி கட்சி கடுமையாக சுயவிமர்சனம் செய்துகொண்டது. டாங்கே முதல்முறையாக தான் மைனாரிட்டியாக உணரவேண்டிய நிலை ஏற்பட்டது. டாங்கேலைன் என ஒன்று இன்றளவிலும் அவ்வப்போது இடதுசாரி வட்டங்களில்  மெயின்ஸ்டீரிம் பத்ரிக்கைகளில் பேசப்படுகிற கோட்பாடாக இருந்து வருகிறது.
CPI தனது அனுபவத்தில் பதிந்தாவிலும் ,1978 ல் CPM ஜனதா அனுபவத்தின் அடிப்படையில் ஜலந்தரிலும்  இடதுசாரி ஜனநாயக மாற்று என்ற ஒத்த நிலைப்பாட்டுக்கு வந்தன. இடதுசாரி ஒற்றுமை என்ற பாதையில் பயணிக்க துவங்கின. கட்சி ஒற்றுமை என்பது அவ்வப்போது சிபி அய்யால் பேசப்பட்ட்டாலும் சிபிஎம் திட்டம்  வேறுபாடுகள் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லி வருகிறது.
மத்தியதர தொழிற்சங்க இயக்கங்களில் 1950-70களில் டாங்கே நிகரற்ற தலைவராக வழிகாட்டினார். வேலைநிறுத்தங்கள் துவங்குவது- தீர்வுடன் காலத்தே முடிப்பது, பேச்சுவார்த்தை எனும் கலையில் பயிற்சி பெறுவது என்பதில் அவரின் பங்கு போற்றத்தக்கதாக இருந்தது. Two Pillar Policy, Hold the Bull by Horn போன்றவை அவரிடமிருந்து பெறப்பட்டவைதான்.  தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, வங்கி இயக்கத் தலைவர்கள் பலர் அவரால் ஈர்க்கப்பட்டனர். P&T தொழிற்சங்கமான NFPTE அமைப்பின் உருவாக்கத்தின்போது அப்படிபட்ட அமைப்பை ஏற்பதா என்பதற்கு மிக நல்ல ஆலோசனை தந்த தொழிற்சஙகத் தலைவராக டாங்கே இருந்தார்.  ஒ பி குப்தா, ஞானையா, ஜெகன், பிரபாத்கர், பர்வானா, இன்சூரன்ஸ் தலைவர் நாச்னே, படீல்  போன்றவர்களுக்கு முன்னோடி தலைவராக இருந்தவர் டாங்கே.. தோழர் குப்தாவை தபால் தந்தி இயக்கத்திற்கு அனுப்பியதில் ரணதிவே, டாங்கே பங்கு முக்கியமானது.
டாங்கே இந்திய வரலாற்றில் மிக முக்கிய பங்காற்றிய நாயகர்கள் குறித்து குறிப்பிட தகுந்த கட்டுரைகளை வழங்கியவர். மிக சிறந்த சொற்பொழிவுகளை தந்தவர். சில கட்டுரைகள் Problems of  Indian Renaissance என்ற பெயரில் தொகுக்கப்பட்டு வெளியாகின. சிவாஜி, லாலாலஜ்பத், மகாத்மா காந்தி, நேருவிடத்தில் இருந்த காந்தி செல்வாக்கு, மராத்திய இலக்கியங்கள் போன்ற கட்டுரைகளை தனது அவ்வப்போதைய அரசியல் கட்டுரைகளை தவிர அவர் எழுதினார். அம்பேத்கார் மறைந்த தருணத்தில் மிக நேர்மறையாக புத்தமதம், அம்பேத்கார் பங்களிப்புகள் குறித்து சொற்பொழிவுகள் தந்தார். AITUCன்  வரலாற்றை இரத்தின சுருக்கமாக தந்தவர் டாங்கே. அவரது புகழ் வாய்ந்த ஆய்வு நூல் பண்டைய இந்தியா. வரலாற்று பொருள்முதல்வாதத்தை மிக யாந்திரிகமாக டாங்கே கையாண்டுள்ளார் என்ற விமர்சனம் இந்நூல் மீது இருக்கிறது.

டாங்கேவின் புதல்வி  AICP 1980ல் துவங்குகிறார். கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட டாங்கே  அதன் பொதுச்செயலராகிறார். பின்னர் மொகித்சென் போன்றவர்கள் UCPI துவங்குகிறார்கள் . Left word, NewThinking Communist போன்ற பத்ரிக்கைகள் டாங்கே, மொகித் கருத்துக்களை தாங்கி வெளிவந்துகொண்டிருந்தன. தமிழ்நாட்டில் ஜீவாமுழக்கம் என்ற பத்ரிக்கை வந்ததுடாங்கே மே 22 1991ல் நோய்வாய்பட்ட நிலையில் மரணித்தார். மீரத் சதிவழக்கில் சிறையில் இருந்தபோது தண்டி யாத்திரைக்கு ஆதரவான கருத்துக்கள் காரணமாக டாங்கே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பலமுறை கட்சியில் தான் சென்சூர் பெற்றதாக அவர் பதிவு செய்துள்ளார். அவரின் எழுத்துக்கள் அவரது நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு அவரது புதல்வியால் வெளியிடப்பட்டன. இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றிலும் , நாட்டின் விடுதலை வளர்ச்சி நடவடிக்கைகளிலும், தொழிற்சங்க  வரலாற்றிலும் தனக்கான இடத்தை டாங்கே பிடித்தேயுள்ளார்.

(ஆதாரம்: விசார் பாரதி பிரக்காஷன் வெளியீடுகள்- டாங்கே படைப்புகள்)

No comments:

Post a Comment