67 ஆண்டுகள் கவனப்படுத்துக
கோபாலகிருஷ்ண
காந்தி
(தமிழில் ஹேமலதா பட்டாபிராமன்)
அன்புக்குரிய பிரதமர் அவர்களுக்கு
குடியரசுதின நல்வாழ்த்துகள்! இந்தியகுடியரசு ஆன
அதே ஆண்டில் தங்கள் பிறப்பும் நிகழ்ந்திருக்கிறது. குடியரசாகி 67 ஆண்டுகள். அதேபோல் தங்களுக்கும் 67 ஆண்டுகள். பிறப்பால் அரசியல் அமைப்புடன் பின்னிப்பிணைந்த உங்களுக்கு இன்னொரு உறவும் இருக்கிறது.. பிரதமராக பதவியேற்கும்பொழுது இறைவனின் பெயரால்- அரசியல் அமைப்பிற்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பதற்கான உறுதிமொழி எடுத்துள்ளீர்கள். அந்த உயர்ந்த நிலையிலிருந்து அரசியல் அமைப்பு
சட்டத்தை புனித புத்தகம் என கூறியுள்ளீர்கள். பிறப்பாலும், உறுதிமொழியாலும் இருவகையிலும்
அரசியல் அமைப்பிற்கானவராகவே இருக்கிறீர்கள்.
உறுதிமொழி ஏற்று இரண்டரை வருடங்களுக்குப் பிறகு இந்நாளில்
அந்தப் பிணைப்பிற்கான உங்கள் வினையை எப்படி எதிர்கொள்கிறீர்கள். இந்திய மக்களை கேளுங்கள்-
நான் உண்மையானவனாக இருந்திருக்கிறேனா இல்லையா என்பதை அவர்கள் சொல்லுவார்கள் எனக்கூட
தாங்கள் பதிலளிக்கலாம். நான் அவ்வாறு செய்யும்போது தங்களுக்கு பாராட்டுகள் பொழியக்கூடும்.
உங்களை புகழ்பவர்களிடமிருந்து மட்டுமல்லாது, தங்களை நடுநிலையுடன் விமர்சிப்பவர்களிடமிருந்தும்
கூட அவ்வாறு வரலாம்.
தங்களின் வசிகரிக்கும் சக்தி 2014-17 ஆண்டுகளில் அதிகரித்துக்கொண்டிருப்பதை
யாரும் மறுக்கமுடியாது. மூன்று காரணங்களுக்காக அவை வளர்ந்து கொண்டே இருக்கின்றன. முதலாவது
ஒரு முடிவெடுத்து அதை செயலாற்றுபவராக நீங்கள் உணரப்படுகிறீர்கள். இரண்டாவது ஊழலை ஒழிக்கும்
நடவடிக்கைகளில் நீங்கள் இருப்பதாக அறியப்படுகிறீர்கள். மூன்றாவது தங்கள் முன்னோடிகளைவிட
பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் கடுமையான போக்கை கொண்டுள்ளீர்கள். நான்காவதாக ஒன்றையும்
பாராட்டாக இல்லாவிட்டாலும்கூட சொல்லவேண்டியுள்ளது. மிகவும் புத்திசாலியாகவும் உழைப்பாளியாகவும்
நம்பப்படுகிறீர்கள். பணமதிப்பு பற்றிய அறிக்கையை ’இன்று இரவிலிருந்து’ என நீங்கள் அறிவித்தபோது
மறுநாள் காலைமுதல் ஏ டி எம் வரிசையில் நின்றவர்களால் இத்தேசத்திற்கு பெரும் நன்மை செய்பவராகவே
பேசப்பட்ட்டீர்கள்
முக்கிய கேள்வி
மூன்றிலும் அதாவது உறுதியான முடிவு , ஊழல் மற்றும் பயங்கரவாத
எதிர்ப்பில் கடுமை என்பனவற்றில் தாங்கள் ஏற்ற அரசியல் அமைப்பு உறுதிமொழியின்படி சாதிக்க
முடிந்ததா? இன்று குடியரசு தினத்தில் இக்கேள்வியை எதிரொலிப்பது அவசியமானதாக உள்ளது
பிரதமர் இந்திரா அம்மையார் உறுதியான முடிவை எடுத்தவர். மற்ற
காலங்களைவிட 1975-77 காலத்தில் அவரின் வழக்கமாக எடுக்கும் முடிவுகளையும் தாண்டி மிகவும்
கடுமையான முடிவுகளை எடுத்தார். அவரால் குற்றவாளிகளாக கருப்புபணமுதலைகளாக பதுக்கல்காரர்களாக
ஊழல்வாதிகளாக சித்தரிக்கப்பட்டவர்களை அவசர சட்டக் காலத்தில் இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்.
பயங்கரவாதம் என நாம் இன்று அறிவது அக்கட்டத்தில் இல்லாமல் போனது .ஆனால் இந்திரா அம்மையார்
தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு உண்மையாக இருந்தாரா? தாங்கள் அப்போது 25 வயதில் இருந்தீர்கள். அவர் அரசியல்
அமைப்பு சட்டத்திலிருந்து விலகி, ஏற்ற உறுதிமொழிக்கு துரோகம் செய்தபோது எவ்வாறு பதவியிலிருந்து துடைத்தெறியப்பட்டார் என்பது
தங்கள் நினவில் இருக்கும்.
இந்திரா இந்தியாவல்ல. எந்த பிரதமரும் இந்தியாவாக முடியாது.
இந்தியா மட்டுமே இந்தியாவாகும்.
இந்தியாவாக நீங்கள்
பார்க்கப்படவேண்டும் என பதிவுகள் நிலவுகிறது . அதாவது உங்கள் மீதான விமர்சனங்கள் இந்தியா மீதான விமர்சனங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டு
தேசத்துரோகமாக கருதப்படும். பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் தங்களது கருப்புபண ஒழிப்பு
, பயங்கரவாதம் குறித்த மென்மை, தங்களின் எதிர்பார்ப்புகள் குறித்த கேள்விகள் தேசத்துரோகமாகின்றன.
தங்கள் கருத்துக்களில் தவறேதும் செய்யாதவராக, பரிசுத்தவானாக நினைக்கப்படுகிறீர்கள்.
இதனால் கேள்விக்கு அப்பாற்பட்ட ஒளிவட்டம் உருவாகிறது.
நாடாளுமன்றத்திற்கு கட்டுப்பட்ட மக்களின் பிரதிநிதி எவரும்
சர்வாதிகாரியாக, மேலாதிக்கவாதியாக இருக்கமுடியாது. மேலாதிக்காவாதியானவர் குறிப்பிட்ட
இனம், கலாச்சாரம் போன்றவற்றில் தனது ஆதிக்கத்தை நிலநாட்டுபவர். பிரதமர் அவர்களே இந்தியாவிற்கான பார்வையில் நீங்கள் மேலாதிக்கவாதியாக இருக்கிறீர்கள்.
நீங்கள் பிரதமராக உள்ள இந்தியாவில் தங்கள் நடவடிக்கைகள் இதுவரை நடந்திராத, தனித்துவமான,
இணையற்றதென கொண்டாடப்படவேண்டும் என நினைக்கிறீர்கள். செவ்வாய் கிரகம் தாண்டிய, நிலவில்
கால் பதித்த இந்தியாவை தாங்கள் விரும்புகிறீர்கள். தங்கள் முன்னோடிகளைவிட, அவர்தம்
கனவுகளைவிட அதிகமான ஏவுகணைகளை நீல்வானத்தில்
செலுத்தவும், நீர்முழ்கி கப்பலகளை சத்தமின்றி ஆழ்கடலில் உட்செலுத்தவும் விரும்புகிறீர்கள்.
தன்நாட்டின் மக்களின் முன்னேற்றம் பற்றி அதிகுறிக்கோளுடன் பெரிதினும் பெரிது விழைபவராக
பிரதமர் ஒருவர் இருப்பது இயல்பே. தன்னை பற்றிய மிகைமதிப்பீடுகள் கொண்டிராமல் அவ்வாறு
இருக்கும் நாட்டின் தலைவர் போற்றுதலுக்குரியவரே.
சர்தார் பட்டேல் அப்படிப்பட்ட மேலாதிக்கவாதியல்ல. ஆக உயர்ந்த
யதார்த்தவாதி.
தனிமையாகிப்போன அதிகாரம்
மேலாதிக்கவாதிகள் தங்களின் கூட்டத்தால் விரும்பப்படுவராகவும்,
கூட்டத்தை விரும்புவராகவும் இருந்தாலும் அவர்கள் தனிமைவாதியாகவும் உள்ளனர். இந்த தனிமை
என்பது இரகசியம், தன்னிச்சைத்தன்மை என்கிற இரு நண்பர்களை காண்கிறது. சோதிக்கப்படாத
மூட்டம் மேலாதிக்கவாதிகளின் முடிவுகளை சூழ்கிறது. முடிவுகள் மனஉந்துதலில் திடிர்திடிரென
எடுக்கப்படுகின்றன. சிலநேரங்களில் அவை ஈர்க்கின்றன. பெரும்பாலான தருணங்களில் பிரச்சனைகளை
தீர்ப்பதற்கு பதில் அழிவையும் புதிய சிக்கல்களையும் உருவாக்குகின்றன. தனிப்பட்ட அதிகாரம் கலந்தாய்வுகளிலிருந்தும் சக கூட்டாளிகளிடமிருந்தும்
தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதால் பலன்களை இழக்கிறது. ரிபப்ளிக்கன் பங்குத்துவம் என்கிற
போனஸ் பலனையும் அது இழக்கிறது. தன்குரலை, தன் உரையை மட்டும் இரசிக்க நினைக்கிறது. பிறரை
கேட்பதாக நினைக்கும் சமயங்களில் கூட மேலாதிக்கவாதி தன்வினையாக தன்குரலை மட்டுமே கேட்கிறார்.
அவரது பாட்டை அவரே பாடுபவராகவும் கேட்பராகவும் இருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரின்
சுயமைய்யத்தன்மை ஜனநாயகத்தில் முரண். குடியரசில்
முறைகேடு. 1975-77 காலத்தில் பயமுறுத்தியதும் இதுவே. நமது அரசியல் கலாச்சாரத்தில் இதையோ,
இதன் வேறுவடிவங்களையோ திரும்ப அனுமதிக்ககூடாது.
திட்டக்கமிஷனை முடிவிற்கு கொண்டுவந்தது, தன்னாட்சி கல்வி
நிறுவமன பொறுப்பாளர் நியமனத்தில் சார்புதன்மை, நீதிபதிகள் பணிநியமனத்தை நிறுத்துவது,
இராணுவ ஜெனரல் பதவிஉயர்வுகளில் பணிமூப்புவிதிகளை மீறுவது, ராஜதந்திரிகள் அதிகாரிகள்
பதவி உயர்த்தல், லோக்பால், தகவல் உரிமை சட்ட முக்கியத்துவம் குறைப்பு, தன்னார்வ தொண்டு
நிறுவனங்களை குறிவைத்தல், பணமதிப்பு நீக்கம் இவை அனைத்து முடிவுகளும் நான்தான், நானே
சிந்துவும் கங்கையும் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்டவை. பிரதமர் அவர்கள் சில மேலாதிக்கவாதிகளுடன்
தன்னுடைய ரசம்பூசப்பட்ட ரதத்தில் தெரியாதவை நோக்கி காப்புறுதியற்ற பயணத்தில் இருக்கிறார்.
அரசியல் தலைவர் ’தான் என்ற நிலையிலும்’ தனது சொந்த நாடு குறித்து
சிறந்த அறிவுடன் இருப்பார், தனது அதிகாரிகளை காட்டிலும் கூட.. சர்வதேச உறவுகள் குறித்த
விஷயத்தில் எந்த ராஜங்க தூதரும் ஜவஹர்லாலுக்கு இணையாக முடியாது. அரசியல் உளவியலில்
நிர்வாக, போலீஸ் உயர் அதிகாரிகள் எவரும் பட்டேலுக்கு இணையாக முடியாது. ஊரக அரசியலை
முதல்வராக இருந்த பந்தை, கிராம நகர்ப்புற பொருளாதாரா நுணுக்கங்களில் முதல்வர் நம்பூதிரிபாட்டை, தமிழக சிக்கலான அரசியலில் முதல்வர் காமராஜரின்
தேர்ச்சியை எவராலும் இணை செய்யமுடியாது. சில
அம்சங்களில் தன்னார்வநிறுவனங்கள், விற்பன்னர்கள் அதிகாரிகள் அரசியல்வாதிகளை விடவும்
கூடுதலான அறிவுடன் இருப்பர். நிதி திட்டங்கள்,
பன்னாட்டு உறவுகள், பாதுகாப்பு உத்திகள், அறிவியல் சுற்று சூழல் , மற்றும் அன்றாட வாழ்வுக்குரிய
அலுவல் அலுவல்சாரா அம்சங்களில் பணமிரட்டல்,
பணிபாதுகாப்பின்மை, மருத்துவ வசதி இல்லாமை , காப்பீடூ-ஓய்வூதியமின்மை போன்றவற்றை உதாரணப்படுத்தலாம்.
தேர்ச்சியின்மையிலிருந்து அனுபவம் நோக்கிய பணிவு தலைவர் ஒருவரை உருவாக்குகிறது
முன்னோக்கும் பாதை
ரொக்கப் பரிவர்த்தனையை குறைத்திட அறிவுறுத்துகிறீர்கள். நீர்சிக்கனம் குறித்து எங்களுக்கு
அறிவுறுத்துகிறீர்களா? ஏ டி எம் களில் பணிமில்லையெனில் பிளாஸ்டிக் அட்டைகளை பயன்படுத்த
சொல்கிறீர்கள். எங்கள் நீர்நிலைகள் வற்றுவது
பற்றி என்ன? மின்நீர் மூலம் வாழமுடியுமா? காலநிலை மாற்றத்தின் ஆபத்துக்கள், மின்சாரம்
எரிபொருள் நெருக்கடி, சுழலும் காற்று-நீர்-
வெப்ப நோய்கள் பற்றியெல்லாம் நாட்டிற்கு எச்சரிக்கைசெய்யவில்லை. சுத்தம், தூய்மை பற்றி
சொல்கிறீர்கள். அசுத்தத்தின் காரணியான பிளாஸ்டிக் குழுமம் பற்றி என்ன சொல்வது? யோகாவின்
சிறப்புகளை சொல்கிறீர்கள். தீங்கிழைக்கும் புகையிலை, குட்கா குழுமத்தின் ஊற்றுக்கண்களை
அடைக்கவில்லை. நிலம், சுரங்கம், காடுகளை கட்டுக்குள் வைத்திருக்கும் மாபியாகும்பல்,
தரகர்களுக்கு சவால் ஏதுமில்லை .
பிறகு காஷ்மீர் பிரச்சனை. யஷ்வந்த் சின்ஹா தலைமையில்,வஜாகத் அபிபுல்லா ஊக்கத்தில்
காஷ்மீர் சென்ற குழு தனது கண்டறிந்த உண்மைகளையும்
பரிந்துரைகளையும் தந்துள்ளது. பிரதமர் அவர்களே அவர்களின் தெளிவான குரலை கேளுங்கள்.
1960ல் ஜெயபிரகாஷ் நாரயணன் தந்திருந்த எச்சரிக்கைகளையும்,
வழிகாட்டல்களையும் கேட்டிருந்தால் இப்போது உணரப்படும் வலிகள் இல்லாமல் இருந்திருக்கும்.
நாட்டின் ஒருபகுதி இடைவிடாத இரத்தம் சிந்துதலுக்காக நமது அரசியல் திட்டம் எழுதப்படவில்லை.
நமது நாட்டின் மிக அழகான ஒருபகுதி அமைதி பெறுவதற்கு தைரியமான, புது முயற்சிகளை மேற்கொள்ள
வரலாறு மற்றுமொரு வாய்ப்பை நல்கியிருக்கிறது.
முன்பே குறிப்பிட்டது போல தங்களின் வசீகரிப்பு அதிகரித்திருக்கிறது
அதே போல் மாறாக நிராகரிப்பும். பிறப்பாலோ உறுதிமொழியாலோ அரசியல் அமைப்புடன் இல்லாவிட்டாலும்
மாற்றுக்கருத்து கொண்டவர்களை சகிக்காத, விமர்சனங்களை திரித்து தேசத்துரோகமாக பார்ப்பதால்
அரசியல் சட்டத்தையும் அதன் மேன்மைகளை நம்பும் அனைவரும் அவதியுறுகிறார்கள்- கிலியடைகிறார்கள்.
கிர்னாரில் நீங்கள் பார்த்திருக்கலாம். அசோகரின் கல்வெட்டு
சாசனம் ஆறு ’எனது செயல் விழிப்புணர்வில் அல்லது நிறைவேற்றத்தில் முழு திருப்தி அடைவதில்லை’
என தெரிவிக்கிறது. அசோகர் ’அனுசாயாவில்’ ஒப்புக்கொண்டதை நினைவில் கொள்ளுங்கள். மற்றுமொரு
உயரிய வார்த்தை உங்களது குஜராத்தியில் உள்ள உன்னதமான ’அனுதாபா’. . பரிவும் கருணையும் பலவீனத்தின் எடுப்புகள்
அல்ல. அவை தலைவரின் அடையாளமான மேன்மையை எடுத்துக்கொள்ளும்.
குடியரசின் மீது
பெருமிதமும் அவநம்பிக்கையிலிருந்து நம்பிக்கையை
மீட்கும் அதன் செயல்திறனில் விசுவாசமும் கொண்ட
தங்கள்
சக குடிமகன்
Comments
Post a Comment