https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, January 11, 2017

Madhu Limaye

மது லிமாயி (MATHU LIMAYE)
மது லிமாயி பூனாவில் மே 1, 1922ல் பிறந்தவர். தனது பெர்குசான் கல்லூரி காலத்தில் சோசலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். புகழ்வாய்ந்த தலைவர்கள் எஸ் எம் ஜோஷி ( தொழிற்சங்கத்தலைவர்), என் ஜி கோரே, பாண்டுரங்க சேன் குருஜி போன்றவர்கள் செல்வாக்கில்  அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. பூனாவில்  காங்கிரஸ் சோசலிஸ்ட்களுடன் தனது 17ஆம் வயதில் இணைந்து செயல்பட்டவர் லிமாயி. இரண்டாம் உலகப்போர் காலத்தில் போர் எதிர்ப்பு போரட்டங்களால் கைதாகி சிறை வைக்கப்பட்டார். விடுதலைக்கு பின்னர்  காங்கிரசிலிருந்து முற்றிலுமாக  வெளியேறி சோசலிஸ்ட்கள் கட்சி துவங்கியபோது  ஜெயபிரகாஷ், லோகியா, அச்சுத்பட்வர்தன் ஆகியோருடன் லிமாயி முன்னோடியாக இருந்தார். அக்கட்சியின் செயலர் பொறுப்பிற்கு உயர்ந்தார்கோவா விடுதலை போராட்டத்தில் முன்நின்ற அவரை போர்த்துகீசிய சர்க்கார் 12 ஆண்டு சிறை என தண்டனை விதித்தது. ஏறத்தாழ 20 மாதங்கள் போர்த்துக்கீசிய சிறைகட்டுக்குள் அவர் அவதிக்கு உள்ளானார்ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடன் தொழிற்சங்க   இயக்கங்களை கட்டினார்சோசலிசத்தை வறட்டு கோட்பாடாக மாற்றுவதை அவர் ஏற்க மறுத்தார். அது வாழ்வியல் முறை என்ற புரிதல் தேவை என்றார். சம்யுக்த சோசலிஸ்ட் சார்பில் 1967ல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றார். சோவியத் புரட்சியின் 50ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் மாஸ்கோவில் தோழர் ஜோஷியுடன் லிமாயி பங்கேற்றார்.

பல்வேறுநாடுகளுக்கு லோகியாவுடன் பயணப்பட்டதும் ஹரால்ட் லாஸ்கி போன்ற புகழ்வாய்ந்தவர்களுடான உரையாடலும் அவரின் சோசலிச சிந்தனையை வளப்படுத்தின. மதசார்பற்ற தேசியம் என்பதை அவர் உயர்த்தி பிடித்தார். எமர்ஜென்சி காலத்தில் ஜே பி இயக்கத்தில் முன் நின்றதால் அவர் மிசா கைதியாக இருஆண்டுகள் அவதிக்கு உள்ளானார். 1977ல் ஜனதா கட்சியின் பொதுச் செயலர் ஆனார்.  RSS Dual Membership பிரச்சனையால் மொரார்ஜியை விமர்சித்து  சரண்சிங் பக்கம் நின்றார். லிமாயி எழுத்துலகிலும் தொடர்ந்து இயங்கிவந்தவர். சுமார் 1000 கட்டுரைகள் எழுதினார் , பல கட்டுரைகள் 100 புத்தகங்களாக வடிவம்  பெற்றதாக அவரை போற்றும் சோசலிச தலைவர்கள் அவரை புகழ்ந்துள்ளனர். ஸ்டாலின்- டிட்டோ, இந்தியாவில் கம்யூனிசம், சோசலிஸ்ட்கள், இந்தியாவும் உலகமும், விடுதலைக்கு பின்னால் அரசியல், ஜனதா அனுபவங்கள், மனு-காந்தி-அம்பேத்கார், சோசலிச இயக்கத்தின் கட்டங்கள் போன்றவை அவரது சில புத்தகங்கள். 1995 ஜனவரி 8ல் அவர் மறைந்தார்.

லிமாயி எழுதிய பல்வேறு கட்டுரைகள் The Age Of Hope- Phases of Socialist Movement என்ற புத்தகமாக 1986ல் வெளிவந்தது. அதில் இடம் பெற்ற முதல் கட்டுரை அவர் 1949ல் எழுதியது.  தனித்த சோசலிஸ்ட் கட்சி என்ற முடிவிற்கு ஏற்ப தங்களுக்கான கட்சி அமைப்புவிதிகளை ஜெயபிரகாஷ் உதவியுடன் லிமாயி தொகுத்தார். அதற்கு அவர்  Why A Mass Party என்ற ஒரு முன்னுரை  எழுதியிருந்தார். அதன் சாரம் இங்கு தரப்பட்டுள்ளது.
                         வெகுஜன கட்சி ஏன்?
விழிப்படைந்த தீவிர உறுப்பினர்கள் சிலரை தேர்ந்தெடுத்து முழுநேர புரட்சியாளர்கள் என்ற கருத்தில் நாம் கட்சியை வைத்திருந்தோம். நாம் இப்போது மக்கள்திரள்  கட்சியாக, தொழிற்சங்கங்ககளையும் , கிசான் சபாக்களையும், கைவினைஞர்களையும், பிற மக்கள் அமைப்புகளையும் உறுப்பினராக்கி கொள்வது என்ற முடிவை எடுத்து வெகுஜன கட்சியாக இயங்குவோம்.
இனி நமக்கு காங்கிரஸ் என்ற முன்னொட்டு தேவையில்லை. அன்று உடனடி கடமை தேச விடுதலை, சோசலிசமல்ல என்பதில் முன்னுரிமை இருந்தது. லாகூரில் 1938க்கு பின்னர் பிப்ரவரி 1947ல் கூடினோம். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் உலக சோசலிச இயக்கத்திலும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. ருஷ்யாவின் ‘Totalitarian Communism’ என்ற நடைமுறையை ஏற்பதற்கில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டோம்.  ஆயுத புரட்சியா வெகுஜன வழியா என்ற விவாதத்தில் ஜனநாயக வழிமுறைகள் மூலம் சோசலிச மாறுதல் கட்டங்களை எட்ட வாய்ப்புள்ளது என புரிந்து கொண்டுள்ளோம்.
நாம் 14 வருட காங்கிரஸ் தொடர்பை விடுகிறோம். தொழிலாளர், விவசாயிகள், கைவினைஞர்கள் பகுதியை உறுப்பினர்கள் ஆக்கிட முன்னுரிமை கொடுப்போம். நாம் 12 மணி நேரம் விவாதித்து 75 சத பிரதிநிதிகள் ஆதரவுடன்தான் புதிய அமைப்பு விதிகளுக்கு நுழைகிறோம். ஆயுதம் தாங்கிய புரட்சி குறித்த விவாதம் நம்மிடம் இல்லாமல் இல்லை. ஆனால் வெகுசிலர் மட்டுமே அக்கருத்தைக் கொண்டுள்ளனர். இன்றுள்ள காங்கிரஸ் அரசாங்கம் அதாரிட்டேரியன் குணங்களை கொண்டிருக்கலாமே தவிர பாசிச சர்க்கார் என வரையறுப்பது தவறு என ஜே பி தெளிவுபடுத்திவிட்டார். ஜனநாயக சோசலிசத்திற்கு ஜனநாயக சூழல் மிக அவசியமானது. நாம் சொல்லக்கூடிய ஜனநாயக நெறிமுறைகள் வெறும் அரசியல் சட்டவடிவ குறுக்கங்களே என்ற விமர்சனம் வருகிறது. நமது ஜனநாயக நடவடிக்கைகள் பாராளுமன்றத்துடன் முடிவடைவதில்லை. நாடாளுமன்றத்திற்கு வெளியேயான போராட்ட முறைகளும் சேர்ந்தவைதான். வெகுஜனங்களை பயிற்றுவித்தல், திரட்டி போராடுதல், வேலைநிறுத்தம், சிவில் ஒத்துழையாமை என அனைத்தும் நமது ஜனநாயக நெறிமுறைகளாக உத்திகளாக பார்க்கிறோம்.  ஆயுதம் ஏந்திய Insurrection- Coup de tat  ஆட்சி கவிழ்ப்பு கலகங்களை நாம் ஏற்கவில்லை. மார்க்ஸ் கூறிய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை இம்முறைகளால் நிறுவமுடியாது என கருதுகிறோம்.
மக்கள்திரள் கட்சி என்றாலே சீர்திருத்தவாதம் என்கிற விமர்சனத்தை நாம் ஏற்கவில்லை. பிஸ்மார்க் போராட்டத்தில் ஜெர்மன் ஜனநாயக கட்சி மக்கள்திரள் கட்சியாக நின்று ஆற்றிய பணிதனை குறைத்து மதிப்பிட முடியாது. மார்க்ஸ் கூட மக்கள்திரள் என்பதை விமர்சிக்கவில்லை. புரட்சிகர முழுநேர போராளிகள் என அமைப்பை சுருக்குவது மார்க்சியமாகாது. பாட்டாளிகளின் சுய உணர்வை வளர்தெடுத்து திரட்டுவது மூலம்தான் சமுக மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதுதான் மார்க்ஸ் பேசியது. ருஷ்யா ஜனநாயக கட்சியிலும் கூட மார்க்ஸிற்கு நெருக்கமாக லெனினைவிட மார்டோவ் தான் நின்றார். ருஷ்யாவிற்கு தேவைப்பட்ட ரகசிய நடவடிக்கைகள் எல்லாம் இன்றுள்ள இந்திய சூழலில் நமக்கு  தேவைப்படவில்லை என புரிந்து கொள்ளவேண்டும். மக்களிடம் வெளிப்படையாக இருந்து விவாதித்து அவர்களை திரட்டுவது என்பதுதான் ஜனநாயக கோட்பாடாகும்.
தேர்தல் பங்கேற்பால் கட்சி நீர்த்துப்போகும் என்ற விமர்சனமும் வருகிறது. அனைவருக்கும் வாக்குரிமை என்ற சூழலில் நாம் தேர்தலில் நிற்க தயக்கம் எதற்கு?  ஏன் தேர்தல் நடவடிக்கைகளில் நாம் ஒதுங்கவேண்டும்? தேர்தல் முறைகள் குறைகளற்ற ஒன்று என நாம் வாதாடவில்லை. நமது சத்தியாக்கிரக போராட்ட ஆயுதத்தை கைவிடாதவரை நாம் நீர்த்துபோக மாட்டோம். தேர்தல் பங்கேற்பு இயக்க வளர்ச்சிக்கு உதவும் என கருதுகிறோம்.
நாசிசத்தை ஜெர்மன் சோசலிச ஜனநாயகத்தால் தடுக்க முடியவில்லை என்கிற விமர்சனம் வருகிறது. மக்கள்திரள் எனும் கட்சி முறையால்தான் தடுக்கமுடியவில்லை என்கிற வாதத்தை நாம் ஏற்கவில்லை. அப்படியெனில் முழுநேர புரட்சிகர கம்யூனிஸ்ட்களால் ஏன் தடுக்க முடியவில்லை? அங்கு சோசலிச கட்சி தனது நாடாளுமன்ற பாதையுடன் சுருக்கி கொண்டது. நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டங்களை கட்டவில்லை. அங்குள்ள கம்யூனிஸ்ட்கள் நிலைப்பாட்டால் தொழிலாளிவர்க்க இயக்கங்கள் சீர்குலைந்தன. பிரான்ஸ், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை மக்கள்திரள் கட்சியாக விஸ்தரிக்கவேண்டுமென பேசத்துவங்கியுள்ளன. இத்தாலி 25 லட்சம் உறுப்பினர்கள் என தெரிவிக்கிறது. அனைவரும் முழுநேர புரட்சிகரவாதிகளாக இருக்கமுடியுமா? டோக்லியாட்டி மக்கள் வருவதற்கு கட்சியின் கதவை திறந்து வைத்துள்ளார். நமது நாட்டின் சூழல் மக்கள் திரள் அமைப்புக்களை உருவாக்க ஏதுவாக  ஜனநாயக வாய்ப்புக்களை நல்கும்போது நாம் நம்மை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளவேண்டும்.
பல தொழிற்சங்கங்கள் நம்மை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். நமது நோக்கம் நிறைவேற தொழிலாளிவர்க்கத்தின் பெரும்பான்மை ஆதரவை நாம் பெறவேண்டும். அதேநேரத்தில் வெகுஜன தொழிற்சங்க அமைப்புகள் உடைந்து போக நாம் அவசரப்படக்கூடாது.  விழிப்புணர்வுடன் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். மக்கள் திரள் என்பதில் நாம் வேர்விடவேண்டும். தொழிலாளருக்கும் விவசாயிகளுக்கும் அதில் முன்னணி பாத்திரம் இருக்கவேண்டும். வர்க்க உணர்வு அடிப்படையானது. சோசலிச உணர்வு என்பது அதன் மேம்பட்ட உணர்வாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்று. நம்மிடம் சேரவரும் தனிநபர்கள் வர்க்க அமைப்பு ஒன்றில் உறுப்பினராகி பணியாற்றிடலாம்  ஆனால் திரட்டப்படாத தொழிலாளர்கள், சிறுகடை உரிமையாளர்கள், மாணவர்கள், வக்கீல்களுக்கு இது பொருந்தாது.
அனைத்து மட்டங்களுக்கும் கட்சி அமைப்புகளில் நேரடி தேர்தல் சாத்தியமற்ற ஒன்று. நமது முழு சக்தியும் அதில் போய்விடும். தாலுகா, தொகுதிவாரி கமிட்டிகளுக்கு நேரடி தேர்தல் என வைக்கலாம். மாவட்ட , மாநில கவுன்சில்களை நாம் பிரதிநித்துவ அடிப்படையில்தான் அமைக்கமுடியும். ஆனால் நிர்வாக கமிட்டிகளுக்கு வரவேண்டும் எனில் குறைந்தது 14 மணிநேர பொதுப்பணி ஆற்றுபவராக இருக்க வேண்டும்.

       ஜனநாயகமும் கட்சிமுறையும் (Democracy and Party System)

1953ஆம் ஆண்டில் மேற்குறித்த விவாதம் ஒன்றை சோசலிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் அசோக்மேத்தா, ஜெயபிரகாஷ் நாரயண் ஆகியோரை விமர்சித்து மதுலிமாயி எழுதினார். அதன் சுருக்கப்பட்ட வடிவம் இங்கே தரப்படுகிறது.
இன்றுள்ள கட்சி முறைக்கு மாற்றாக என்ன என்பது எனக்கு தெரியவில்லை. கட்சிமுறையில் தவறு இருக்கிறது என்பதை மட்டும் உணரமுடிகிறது. நாடு தன்னை இன்றுள்ள கட்சி முறையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாதவரை, புதிய அரசியல் அமைப்பு சட்டம் அதற்கேற்ப உருவாக்கப்படாதவரை, கட்சிகள் தங்களை தாங்களே கலைத்துக் கொள்ளாதவரை புதிய வழி ஏதும் சாத்தியமில்லை. என ஜே பி பேசி வருகிறார். அவர் வினோபாவே சிந்தனைக்கு நெருக்கமாகி வருகிறார். ஒரு கட்சியோ, இருகட்சியோ, பலகட்சி முறையோ எதுவாயினும் கட்சி முறை ஒன்றிற்கு எதிராக பேசுவது என்பது அரசு ஒன்றிற்கு எதிராக பேசுவது என்பதே ஆகும்.
அசோக்மேத்தா  ஆளுங்கட்சி- எதிர்கட்சி வகைப்பட்ட நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த விமர்சனங்களை வைத்து வருகிறார். அவர் பரந்து விரிந்த அரசாங்கம் என்ற கருத்தை முன்வைக்கிறார். அரசாங்கம் குறித்த விவாதங்கள் இருக்கலாம் ஆனால் எதிர்த்த போராட்டங்கள் கூடாது என்கிறார். பொருளாதரத்தில் பின்னடைந்த நாடுகள் வளர்ச்சிக்கு போராட்டங்கள் உதவாது. மேலும் பின்னடைவுகளை உருவாக்கும் என்கிறார். அவர் கருத்துப்படி பார்த்தால் இரு கட்சிகள் கூட தேவையில்லை. குறைந்தபட்ச பொருளாதார திட்டங்கள் அடிப்படையில் கட்சிகள் இணைக்கப்பட்டு அரசாங்கம் அமைந்து அதனை நிறைவேற்றுவது என்பதாக இருக்கிறது. அரசாங்கத்தில் பல சச்சரவுகளை தவிர்க்கும் என்பது அவர் கருத்து.
வினோபாவா பேசிவருவது நமக்கு தெரியும். தேச கட்டுமானத்திற்கு அனைத்து சக்திகளும் ஒருமுகப்பட்டு துணைபுரியவேண்டும். அதாவது நடைமுறையில் கட்சிகள் வேண்டாம்- அரசாங்கத்தை இற்றுபோக செய்தல் என்ற புரிதல் அவருக்கு. வினோபாவாவின் கருத்துக்கள் கற்பனாவாதம் சார்ந்தவையாக உள்ளன. நடைமுறைக்கு சாத்தியமானதல்ல.
அரசாங்க நடவடிக்கைகளுக்காக மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற மக்கள் பிரதிநிதிகள் நிறுவனமான கட்சிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுதல் என்பது வரலாற்றின் நிகழ்வாகும். மக்களின் கருத்தை சுமக்கும் வாகனங்கள்தான் கட்சிகள். கட்சிகளில் சுயநலம் சார்ந்த நடவடிக்கைகள் இல்லை என மறுக்கவில்லை. மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்திட பிரதிநித்துவ அரசாங்கம், கட்சி அமைப்புகள்தான் ஆக உயர்ந்த ஒரே வடிவம் என ஏற்க வேண்டியதில்லை. மையப்படுத்தப்பட்ட அதிகாரம், அதிகார பரவல் இல்லாமை, ஓரிடத்தில் அதிகார குவிப்பு என்பதெல்லாம் கவலைக்குரிய அம்சங்கள்தான் எனினும் சர்வாதிகாரத்திற்கு மாற்றாக தேர்தல் ஜனநாயகம், கட்சிகள் என்பதை தாண்டிய ஒன்றை மனிதகுலம் கண்டறியாமல் இருக்கிறது என்பதையும் நாம் உணரவேண்டும்...
அய்ந்தாண்டு திட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை தோல்வியடைந்து விட்டது என்றால் திட்டத்தில் கோளாறு என புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக நாம் புலம்பி பயனில்லை. நம் மத்தியில் எழும் சோர்வால் பலனடையப்போவது கம்யூனிஸ்ட்கள்தான். நம் கட்சி திட்டம் குறித்து முன்னோடி தலைவர்களே நம்பிக்கையற்று கருத்து தெரிவித்து வந்தால் நாம் எவ்வாறு முன்னேற முடியும்.மக்களின் நம்பிக்கையை பெற பொறுமையாக தொடர்ந்து போராடித்தான் ஆகவேண்டும்.

Erudition is a virtue to be cultivated, no doubt. But when it is not guided by steadfastness of purpose it is likely to lead one astray. பல நாடுகளின் உதாரணங்கள் இதை காட்டுகின்றன. யுகோஸ்லோவியா டிட்டோ பார்முலாவை நேரு தலைமையில் ஏன் செய்யக்கூடாது என்கிறார்கள். யுகோ நிலைமை இந்தியாவிற்கு பொருந்தாது. காங்கிரஸ் கட்சியினர் பிரிட்டிஷார் போன்றே கன்சர்வேடிவ் தன்மையினர். ஸ்டேடஸ்கோயிஸ்ட்களாக இருக்கின்றனர். நேருவை ஆக உயர்ந்த அரசியல்வாதி என நாம் ஏற்கவில்லை. புரட்சிக்கு குறுக்குவழி ஏதுமில்லை என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

No comments:

Post a Comment